Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துரோகங்கள்

Featured Replies

துரோகங்கள் - சிறுகதை

 

அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

தற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான்.

“சார்... சார்...” என்று அழைத்தான்.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான்.

“இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான்.

“பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.”

நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சிறிது நேரம் பொறுத்து சதாசிவம் வந்தார். அப்போதுதான் குளித்து, திருநீறு அணிந்திருந்தார். நீலகண்டனைப் பார்த்து, “என்னப்பா, ரஞ்சனியைப் பார்க்க வந்தியா? இவ்வளவு நாளாகியும் இன்னும் மல்லையாவுக்குத் தெரியலை. ரஞ்சனி...” என்று குரல்கொடுத்தார்.

p69.jpg

``இல்லை சார். உங்களைத்தான் பார்க்க வந்தேன்.”

“என்னையா? வா, உள்ளே வா. இப்போ மணி எட்டு ஆறது. என்னை அரை மணியிலே விட்டுடுப்பா.''

நீலகண்டன், சதாசிவத்தைப் பின் தொடர்ந்தான். அது வராண்டாவுக்கு அடுத்த ஹால். நிறைய சோபாக்கள் போடப்பட்டிருந்தன.

“உக்காரு.”

இருவரும் உட்கார்ந்தார்கள். “இப்போ சொல்லு.”

“நான் ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.”

“என்ன..!”

“நான், ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.”

சதாசிவம் சிறிது நேரம் நீலகண்டனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மிகுந்த அக்கறையுடன், “நீலகண்டன், நீ தெரிஞ்சுதான் பேசுறியா?”

“ஆமாம் சார். எனக்கு உங்க மேலே இருக்கிற நம்பிக்கையில்தான் சொல்றேன். நான் ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.”

சதாசிவம், மீண்டும் சிறிது நேரம் நீலகண்டனையே பார்த்தவண்ணம் இருந்தார்.

``உனக்கு என்ன வயசு?”

“பதினெட்டு.”

“ரஞ்சனி வயசு தெரியுமா?”

“என்னைவிட ஒரு வயசு பெரியவளா இருப்பா.”

“உன்னைவிடப் பெரியவளையா கல்யாணம் பண்ணிக்க விரும்புறே?”

“எனக்கு அவ சின்னப் பெண்ணாத்தான் தெரியுறா.”

“எங்க ஜாதி தெரியும்ல..?”

“தெரியும் சார். முதலியார்.”

“நீ... சரி, அவகிட்ட கேட்டுட்டியா?”

“முதல்ல உங்ககிட்டயும் ரஞ்சனி அம்மாகிட்டயும் அனுமதி கிடைச்சதுக்கு அப்புறம்தான் அவகிட்ட கேக்கலாம்னு இருக்கேன். முதல்ல உங்க சம்மதம் வேணும். எனக்கு எல்லோருடைய சம்மதம் கிடைச்சப் பிறகுதான் அவகிட்ட பேசப்போறேன்.”
“உங்க அப்பா அம்மாகிட்ட கேட்டுட்டியா?”

“இல்லை சார். உங்க ரெண்டு பேர் சம்மதம் கிடைச்ச அப்புறம்தான் அப்பா-அம்மாகிட்ட கேக்கப்போறேன். இப்பவே கேட்டா, அவங்க குழம்பிடுவாங்க.”

“ரொம்பத்தான் யோசிச்சு வெச்சிருக்கே. மீனாட்சி... மீனாட்சி..!”

சிறிது நேரம் பொறுத்து, ரஞ்சனியின் தம்பிகளில் ஒருவன் வந்தான்.

“என்னன்னு அம்மா கேக்கச் சொல்லிச்சு.”

“முக்கியமான விஷயம்னு சொல்லு. மீனாட்சி..!”

ரஞ்சனியின் அம்மா வந்தாள்.

“என்னங்க?''

“நம்ம நீலகண்டன் ஒரு புது விஷயம் சொல்றான்.”

``என்னது?''

சொல்லுப்பா. அவங்ககிட்டயே நேரா சொல்லு.”

நீலகண்டன் எழுந்து நின்றான்.

“அம்மா...”

“என்ன தம்பி?”

“நான் ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்க, உங்க சம்மதம் வேணும்.”

“என்ன... என்ன?''

``ரஞ்சனியை நான் கல்யாணம் பண்ணிக்கணும்.”

“என்ன பேத்தறே? படிச்சுண்டு இருக்கீங்க, இப்பத்தான் டிகிரி கிளாஸ்ல சேர்ந்திருக்கீங்க. இப்போ கல்யாணம் பண்ணிண்டு என்ன பண்ணுவீங்க? குழந்தை பொறந்தா என்ன பண்ணுவீங்க? நிதானமாத்தான் இருக்கியா? அவ பணக்காரின்னு காதல் வந்துடுத்தா?''

சதாசிவம் குறுக்கிட்டார். “அப்படி எல்லாம் பேசாதே மீனாட்சி. அவன் சொல்லறதை முதல்ல கேளு.”

``அம்மா, இப்போ கல்யாணம்தான் ஆகுமே தவிர, அவ உங்க வீட்லதான் இருப்பா; நான் எங்க வீட்ல இருப்பேன். நாள், கிழமைக்கு அவ எங்க வீட்டுக்கு வருவா; நாங்களும் உங்க வீட்டுக்கு வருவோம். பரீட்சை முடிஞ்சு நாங்க பாஸ் பண்ணி நான் வேலைக்குப் போகணும். எங்க அப்பா, எனக்கு எப்படியும் ரயில்வேயில வேலை வாங்கித் தருவார்.”

“ரயில்வே எதுக்குத் தம்பி? நீ என்னோட சேர்ந்துடலாம்.”

“இதுக்கு எல்லாம் அப்புறம்தான் அவ என் வீட்ல வந்து குடித்தனம் பண்ணுவா.”

சதாசிவத்தின் மனைவி கேட்டாள்...

“ரஞ்சனியைக் கேட்டியா?''

“நீங்க எல்லாரும் `சம்மதம்'னு சொன்ன அப்புறம்தான் அவகிட்ட பேசணும்.”

``இதென்ன புதுசா இருக்கு? புத்தகத்துல படிக்கிற காதல் கதை மாதிரி இல்லையே!”

“அம்மா, உங்க எல்லோருடைய சம்மதத்தோடு தான் இந்தக் கல்யாணம் நடக்கணும். உங்க மனுஷாளுங்க எல்லாரும் வரணும். என் மனுஷாளுங்க ரொம்ப ஐதீகமா இருக்கிறவங்க, வர மாட்டாங்க. நாங்க ஜாதி, குலம், கோத்திரம் எல்லாம் பார்த்துக் கல்யாணம் பண்ணின அக்காவை, அந்த மனுஷன் தள்ளிவெச்சிருக்கான். அதுக்காக நான் சாதிவிட்டு சாதி போறேன்னு இல்லை. உங்க சம்மதம், என் மனுஷாள் எல்லோருடைய சம்மதத்ததோடுதான் எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடக்கணும்.”

“ரஞ்சனி... ரஞ்சனி..!''

ரஞ்சனி வர, சிறிது நேரமாயிற்று. வந்தாள். பாவாடை மேலாக்கு அணிந்து இருந்ததில், அவள் பள்ளி மாணவிபோல் இருந்தாள்.

மீனாட்சி அம்மாள் கேட்டாள், “ஏண்டி, இந்தப் பையனை எவ்வளவு நாளா தெரியும்?”

“நீலகண்டன்மா... என் கிளாஸ்தான். ரெண்டு வருஷங்களா தினமும் பார்க்கிறவன்தான். இப்பதான் ஒரு வாரமாப் பார்க்கலை. காலேஜ் பக்கம் எல்லாம் ஒரே ரயட்ஸ், லட்டி சார்ஜ்னு இருக்கு. அதான் நாங்க யாருமே போகலை. ஆனா, காலேஜுக்கு முன்னாடியேகூட அவன் அக்காவைத் தெரியும்.”

``யார் இவன்? அவன் வீட்டுக்குப் போயிருக்கியா?”

“போயிருக்கேன். ஏன் கேக்கறே?”

“அவன் வீட்டுக்கே போயிருக்கியா?”

“ஆமாம்மா. நீலகண்டனும் நம்ம வீட்டுக்கு நிறைய முறை வந்திருக்கானே? நம்ம பிரின்சிபால் கல்யாணிக்குட்டி அம்மாவை, நம்ம கார்ல அவன்தானே ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போனான்!”

``இதெல்லாம் எனக்குத் தெரியும். ஒழுங்கான பையன்தானா?”

“என்னம்மா திடீர்னு இப்படி எல்லாம் கேக்குறே? அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஹைதராபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பையன், இவனை அவன் வீட்டுக்கு அழைச்சுண்டு போய் அவன் அம்மாகிட்ட எல்லாம் காட்டியிருக்கான்.”

“அவன் இப்ப எதுக்கு வந்திருக்கான் தெரியுமா?”

‘`தெரியாது.”

``உன்னைக் கல்யாணம் கட்டிக்கணுமாம்.”

ரஞ்சனிக்கு சிரிப்பு வந்தது.

“இதென்னம்மா இது... நிஜமாவா?”

“ஆமாம்... கேளு அவனை.”

அவள் நீலகண்டனையே புன்னகையோடு ஒரு நிமிடம் பார்த்தாள்.

“ஏண்டா, நீலகண்டன் நிஜமாவா?”

நீலகண்டன் தலையை மட்டும் அசைத்தான்.

ரஞ்சனிக்குச் சிரிப்பு மீண்டும் பீரிட்டு வந்தது. பெற்றோர் முன்னிலையிலேயே அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளினாள். ``ஏன்டா என்கிட்ட முன்னமே சொல்லலை?” என்றாள்.

அவள் பெற்றோரிடம், “நீங்க `சரி'னா எனக்கும் சரி” என்றாள். மீண்டும் நீலகண்டனைப் பார்த்துப் புன்னகை புரிந்தபடி உள்ளே சென்றாள்.

p69a.jpg

சதாசிவத்தின் முகம் கருத்தது; மீனாட்சி திகைத்து நின்றாள்.

நீலகண்டன், ``நான் சாயந்திரமா வரட்டுமா?'' என்று கேட்டான்.

சதாசிவம், “பத்து நாள்... இல்லை இல்லை, ஒரு மாசம் பொறுத்து வாங்க” என்றார்.

அவர் ஏன் அவனிடம் பன்மையில் பதில் சொன்னார் என அவனுக்குத் தெரியவில்லை. நீலகண்டன், அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுப்பக்கம் சென்றான். ஆரம்பத்தில் இருந்த சுமுகம் இப்போது மாறிவிட்டதுபோல தோன்றியது. ஒன்று நிச்சயம், ரஞ்சனிக்கு அவனைப் பிடித்திருக்கிறது. அது அவளுடைய பெற்றோருக்குப் பிடிக்க வில்லை.

டுத்த வாரம் ஊர் சட்டம்-ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் இருந்தது. அவன் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தான். ரஞ்சனி வரவில்லை.

பற்களைக் கடித்துக்கொண்டு முப்பது நாட்கள் காத்திருந்தான். ஒருநாள்கூட அவள் வீட்டுப்பக்கம் போகவில்லை. ஒரு மாதம் கழித்து அவள் வீட்டுக்குப் போனான். ஜன்னல் எல்லாம் சாத்தி இருந்தன. வேலைக்காரர்கள்போல் இருந்த மூன்று நான்கு பேர் போர்டிகோவில் உட்கார்ந்துகொண்டு ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

``வீட்ல யாரும் இல்லையா?'' என்று நீலகண்டன் கேட்டான்.

``எல்லோரும் மெட்ராஸ் போயிருக்கிறார்கள்'' என்று ஒருவன் சொன்னான்.

“எப்போ திரும்பி வருவாங்க?”

“ `ஒரு மாசத்துல அய்யா வந்திடுவார்'னு சொன்னாங்க.”

“மத்தவங்க?”

“தெரியலை. வந்தா எல்லோரும்தானே வருவாங்க? என்னமோ தெரியாது. அய்யா மட்டும்னுதான் சொன்னாங்க.”

நீலகண்டன், கல்லூரியில் விசாரித்தான். ரஞ்சனி டி.சி வாங்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரிந்தது. அவள் கட்டியிருந்த பணத்தில் பாதியை. அவள் கொடுத்த முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். பணம் திரும்பி வந்துவிட்டது.
 
எத்தனையோ நாட்கள், அவள் வீட்டுக்குப் போயிருக்கிறான்; அவள் அப்பாவுடன் பேசியிருக்கிறான். அவர் என்ன தொழில் செய்கிறார், எங்கு வணிகம் நடத்துகிறார் என்று தெரிந்துவைத்துக்கொள்ளவில்லை. கல்யாணிக்குட்டி அம்மாவிடம் விசாரித்தான். அவளைக் காலிசெய்யச் சொல்லியிருக்கிறார்கள். வீட்டையே விற்கப்போகிறார்கள். அதற்குள் விற்றுவிட்டார்களோ, என்னவோ.

அந்த ஊரில் இரண்டே வங்கிகள். பிறர் கணக்கு விஷயங்களை ஒரு பையன் போய் விசாரித்தால் சொல்லிவிடுவார்களா? அவனுடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலம் விசாரித்தான். சதாசிவம், வீட்டை விற்று அந்தப் பணத்தை ஒரு வங்கியில் போட்டு, அந்தக் கணக்கையே முடித்துவிட்டார். அவர்களும் அவர் மெட்ராஸ் போயிருக்கிறார் என்றுதான் தெரிவித்திருக் கிறார்கள். `ஐயோ, அவர்கள் ஊரில் இருந்தபோது அவர்களுடைய உறவினர்கள் யார் யார் என, பேச்சுவாக்கிலாவது தெரிந்துகொண்டிருக்கலாம். அதைச் செய்யவில்லையே' என வருந்தினான்.

நீலகண்டன், கல்லூரியிலேயே ரஞ்சனிக்கு நெருக்கமாக இருந்ததுபோல் தெரிந்த இந்திரகுமாரியைக் கேட்டான். அவள் வட இந்தியப் பெண். அவளுக்கு, ரஞ்சனி நினைவே இல்லை. அப்புறம் “இந்த வருஷம் பார்க்கவே இல்லையே!” என்றாள்.
“அவள் சொந்த விஷயம், உறவுக்காரர்கள் பற்றி எல்லாம் பேசிக்கொள்ள மாட்டீர்களா?”

“நானும் கேட்டது கிடையாது, அவளும் சொன்னது இல்லை.”

``அப்புறம் என்னதான் பேசிக்கொள்வீர்கள்? நிறையச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொள்வீர்களே!'’

இந்திரகுமாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ``இதெல்லாம் கேட்க நீ யார்? நான் பிரின்சிபாலிடம் உன்னைப் பற்றி ரிப்போர்ட் செய்வேன்.’'

நீலகண்டனுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் இந்திரகுமாரியும் அவனைக் கவனித்திருப்பாள். கல்லூரி விழா ஒன்றில் அவன் ஒரு பாட்டு பாட, அதன் பிறகு அவள் சிதார் வாசித்தாள். கல்லுரிப் பையன்கள் அவளை வாசிக்கவே விடாமல் கிண்டலடித்தார்கள். நீலகண்டன்தான் அவளிடம் சென்று எதையும் லட்சியம் செய்யாமல் வாசிக்கச் சொன்னான். அந்த விழா முடிந்த பிறகு அவளே அவனிடம் வந்து, ``உனக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறாள்.

ரஞ்சனிக்கு உறவுக்காரர்கள் இருக்கக்கூடும் என்ற இடங்களில் விசாரித்தான். பலருக்கு அவன் சொன்ன அடையாளங்கள் புரியவே இல்லை.

அவர்கள் ரஞ்சனியை ரஞ்சனாக்கி, “அப்படி ஒரு பையன் எனக்குத் தெரிஞ்சு இல்லையேப்பா!'’ என்றார்கள்.

அவர்கள் இருந்த ஊரில் பெரிய பங்களாவில் வசித்து, ஊரிலேயே மிகப்பெரிய கார் வைத்திருந்தவர்கள். அடையாளமே இல்லாது மறைந்துவிட்டார்கள். இந்தச் சின்ன ஊரிலேயே தேடிக் கண்டுபிடிக்க முடியாதபோது, மெட்ராஸ் போன்ற மிகப்பெரிய நகரில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

நாட்கள் சென்றுகொண்டே இருந்தன. ஒருநாள் அவன் அப்பா, “என்னோடு கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வா” என்றார்.

அன்று ஹாஸ்பிட்டல் போன அப்பா, உயிரோடு திரும்பி வரவில்லை. நீலகண்டன், அம்மா மற்றும் உடன் பிறந்தோருடன் ஊருக்கு சற்று வெளியே குடிபோனான். வீட்டுக்கு, மின் இணைப்பு கிடையாது. ஆனால், விசேஷமான தண்ணீர்கொண்ட கிணறு. நீலகண்டனுக்கு மூன்று சின்னச்சின்ன உத்தியோகங்கள். மாடு, கன்றுடன் வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்தது. ரஞ்சனியின் நினைவு தூங்கவிடாமல் செய்தது. எவ்வளவு எளிதாக ரஞ்சனியின் பெற்றோர் அவனைத் தோற்கடித்து விட்டார்கள்? இல்லை, அவர்களும் பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவோ ஆண்டுகள் அவர்கள் வாழ்ந்து வந்த ஊரையும் வீட்டையும் துறந்திருக்கிறார்கள்.

ரஞ்சனியும் துடிதுடித்துப் போயிருப்பாள். அவளும் அவனை நினைத்து கண்ணீர் விட்டிருப்பாள். பெற்றோர் எதிரிலேயே ஓர் இளைஞன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டுப் போனவளுக்கு, அவன் மீது எவ்வளவு பாசம் இருந்திருக்க வேண்டும்!

வழக்கம்போல நீலகண்டன் இரவில் ஒரு பெரிய மைதானத் துக்குப் போய், உரக்கக் கத்தி அழுதான். இதற்குள் அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கக்கூடும். அவள் கணவன் அவளைக் `கறுப்பி' என வேதனையூட்டிக் கொண்டிருக்கக்கூடும். அந்த எண்ணம், அவனைப் பித்துபிடிக்கவைப்பதாக இருந்தது. அவன் கை-கால்களை உதறிக்கொண்டு கதறினான். அவள் இன்று மாயமாகிவிட்டாலும் என்றாவது அவன் முன் நிற்பாள் என்ற நம்பிக்கை, அவனை தற்கொலை பற்றி நினைக்கவிடவில்லை.

மூன்று ஆண்டுகள் முழுதாக முடிந்துவிட்டன. ஒருநாள் பளபளவென்ற உறையில் அவனுக்கு மெட்ராஸில் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அவனுக்கு, அவனுடைய அப்பாவின் சிநேகிதர்கள் அனைவரையும் தெரியும்; இந்த மெட்ராஸ் நண்பரையும் தெரியும். அவனுடைய அப்பாவின் மரணத்தைத் தெரிவித்து, அவன் உறவினர், அப்பாவின் நண்பர்கள் என முப்பது பேருக்குத் தபால் அட்டையில் தகவல் தெரிவித்திருந்தான். பலர் நேரில் வந்து அவனையும் அவன் அம்மாவையும் துக்கம் விசாரித்தார்கள். சிலர், அப்பா அவர்களுக்குக் கைமாத்தாகக் கொடுத்தது என்று பத்து இருபது ரூபாயைக் கொடுத்தார்கள். வெளியூர்களில் இருந்தவர்கள், பதில் கடிதம் போட்டார்கள். அவர்கள் தப்புத் தப்பாக முகவரி எழுதிய கடிதங்கள் அனைத்தும் வந்து சேர்ந்தன. ஒருவரிடம் இருந்து மட்டும் தகவல் ஏதும் இல்லை. இப்போது வந்த கடிதம் அவருடையது. விஷயம் இதுதான். `மெட்ராஸுக்கு வா. உனக்கு நான் வேலை தருகிறேன்.'

மெட்ராஸ்! ரஞ்சனி இருக்கக்கூடிய நகரம். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அவளுடைய வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்கள் நடந்திருக்கலாம். கல்யாணம் நடந்து, குழந்தைகள் இருக்கலாம். அவர்களின் பூர்வீகத்தை அவன் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், மெட்ராஸ் மாதிரி நகரங்களுக்குச் சென்றவர்கள் அவர்களாக வேறு இடம் போவார்களா?

அவனுடைய தந்தையுடன் அவன் அநேகமாக வருடம் ஒருமுறை மெட்ராஸ் போயிருக்கி றான். ஒருமுறை அவருடைய நண்பரைப் பார்க்க ஓர் இடம் அழைத்துச் சென்றார். அது சிந்தாதிரிப்பேட்டை. அங்கு வசித்தவர்கள் எல்லோரும் முதலியார்கள். அப்பா பார்க்கச் சென்றதே ஒரு முதலியாரைத்தான். நாட்டு டாக்டர். அந்தத் தெருவுக்கே அவர் பெயரைத்தான் வைத்திருந்தனர். அவர், அவனுடைய அப்பாவை எவ்வளவு வாஞ்சையோடு வரவேற்றார்! மனைவியை விசேஷமாக தோசை செய்ய சொன்னார். அந்த அம்மாள் அப்பாவிடம் சொன்னாள், ``இதில் நிறைய வெந்தயம் போட்டிருக்குங்க. ருசியாவும் இருக்கும்... உடம்புக்கும் நல்லது.''

டாக்டர் நண்பர் அப்பாவிடம் சொன்னார், ``டவுனுக்குப் போனா ஒரு துலாம் புனுகு வாங்கி, தம்பி பருவுக்குத் தடவு.''

நீலகண்டனிடம் கேட்டார், ‘`ஏன் தம்பி, நீ கோவணம் கட்டுவதுண்டா? முதல்ல அரைஞாண்கயிறு கட்டிக்க. அப்புறம் கோவணம். தினமும் குளிக்கிறதுக்கு முன்னாடி, உன் கோவணத்தாலே முகத்தைத் தொடைச்சுக்க. அதுக்கு அப்புறம்தான் கோவணத்தை நனைக்கணும்.''

மெட்ராஸ் போனால் அவரைப் போய்க் கேட்கலாம்...

இரு நாட்களுக்குப் பிறகு நீலகண்டன் மெட்ராஸுக்கு ரயில் ஏறினான்.

அப்பாவின் நண்பர் ஒரு வேகத்தில் கடிதம் எழுதிவிட்டாரே தவிர, நீலகண்டனுக்கு என்ன வேலை தருவது என்ற முடிவுக்கு அவரால் வர முடியவில்லை. அவனிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, “நீ உன் காரியங்கள் எல்லாம் முடிக்கப் பார். நான் ஓரிரு மாதங்களில் தகவல் தருகிறேன்” என்றார்.

அவர் வீட்டில் இருந்து அவனாகத் தட்டுத்தடுமாறி சிந்தாதிரிப்பேட்டை சென்றான். அவன் கடைசியாக மெட்ராஸ் வந்து மூன்று ஆண்டுகள் முடிந்து, நகரில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. ஆனால், சிந்தாதிரிப்பேட்டை பழையபடிதான் இருந்தது. அப்பாவின் நாட்டுவைத்திய நண்பர் இறந்துவிட்டிருந்தார். ஆனால், அவருடைய மனைவி நீலகண்டனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள். அவளிடம் சதாசிவம் பற்றி விசாரித்தான்.

அவள் சொன்னாள்... “நீ சொல்றதைப் பாத்தா, அவங்க வசதிப்பட்டவங்கன்னு தெரியுது. அவங்க இந்த மாதிரி இடத்துக்கு வர மாட்டாங்க. நீ புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம் மாதிரியான இடத்துல விசாரிச்சுப் பாரு. என்ன விஷயம் தம்பி?”
“எனக்கு அந்த வீட்டுல எல்லாரையும் நன்னாத் தெரியும். திடீர்னு எங்கிட்ட சொல்லிக்காம மெட்ராஸ் வந்துட்டா.”

“விசாரிச்சுப் பாரு. நீ சொல்றதைப் பாத்தா இப்ப அவங்களே சரியான மெட்ராஸ்காரங்களா ஆகிருப்பாங்க.”

அவன் ஊர் திரும்பி, மெட்ராஸில் குடிபோக ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தான். இரு மாதங்களில் அப்பாவின் நண்பரிடம் இருந்து கடிதம் வந்தது. பதினைந்து நாட்களில் அவன் சென்னைவாசியாகிவிட்டான்.

முதலில் சென்னையில் இருந்த அவன், உறவினர்களை ஒவ்வொருவராகப் பார்த்தான். பேச்சோடு பேச்சாக `சதாசிவ முதலியார் என்று அவர்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கிறாரா?' என்று விசாரித்தான். ஒருவர் சொன்னார், ``இன்கம்டாக்ஸ் ஆபீஸில் எனக்குத் தெரிந்த ஒரு பையனின் தகப்பனார் பெயர் சதாசிவம். அவர்கள் முதலியாரா என எனக்குத் தெரியாது. அந்த ஆபீஸ் நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் ஒரு அரண்மனையில் இருக்கும். நீ வேண்டுமானால் விசாரித்துப்பார்.”
``உண்மை. ஆனால், அவர் வேறு சதாசிவம்.''

நீலகண்டன், அவனுடைய மூத்த சகோதரியை அழைத்துக்கொண்டு, தண்டையார்பேட்டையில் இருந்த அவளுடைய கணவன் வீட்டில் கொண்டுவிட, அவளுடைய துணிமணிகள் கொண்ட பெட்டியோடு சென்றான். அனுபவம் இன்மையால் ரயிலில் சென்று, அங்கு இருந்து நடத்தி அழைத்துப் போனான்.

அந்த அயோக்கியன், பெட்டியைத் தெருவில் வீசி எறிந்து, அக்கா-தம்பியை வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுக்கொண்டான். வேறு வழியே தெரியாமல் அவனுடைய ஒரு நண்பனின் வக்கீல் தந்தையுடன் வழக்கு போட்டான். மாதம் தவறாமல் ஈரங்கி இருக்கும் அக்காவும் தம்பியுமாக நின்றுகொண்டே இருப்பார்கள். அக்கா பெயர் கூப்பிடும்போது இருவரும் சாட்சிக்கூண்டு அருகே ஓடுவார்கள். ``வக்கீல் வர மாட்டார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. புரசை வாக்கம் டாணா தெருவில் உள்ள டாக்டரிடம் அழைத்துப் போ'' என்றார்கள். டாக்டர், நீலகண்டனிடம் சொன்னார் ``உங்க அம்மாவுக்கு ரெண்டு பெரிய கம்ப்ளைன்ட். ஒண்ணு, தைராய்டு. ரெண்டாவது ஹார்ட். சாதாரணமா நீங்க செய்யக்கூடிய வைத்தியத்திலே ஒரு வருஷம் தாண்டினா பெரிய காரியம். அவ நீ கல்யாணம் பண்ணிக்கணும்றா. பெரிய பிள்ளையா அதை நிறைவேத்தி வை.”

அவன் சென்னைக்கு வந்த பதினோராவது ஆண்டு அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அடுத்த வருடம் அவனுடைய அம்மா காலமானாள். அடுத்த ஆண்டு அவன் வேலையை ராஜினாமா செய்தான். சின்னச்சின்ன வேலைகள். ஒன்றடுத்து ஒன்று. அவனுடைய மகன் அவனாகப் படித்து ஒரு வேலையில் சேர்ந்து நல்ல பெயர் எடுத்தான். அவன் வேலை பார்த்த இடத்திலேயே கார் கொடுத்தார்கள். மகள் பட்டப்படிப்புப் படித்து சி.ஏ-யும் முடித்து விட்டாள். மகன், மகள் இருவருக்கும் கல்யாணம் செய்ய வேண்டும்.

இப்போது எல்லாம் நீலகண்டன், சதாசிவம் பற்றி விசாரிப்பது இல்லை. இந்த 35, 40 ஆண்டுகளில் அவர் இறந்திருப்பார். அவர் மனைவி இருக்கலாம். பெரிய சொத்தை நிர்வகித்துக்கொண்டு நிறையக் குழந்தைகளுடன் ரஞ்சனி ஒரு சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பாள்.p69.jpg

நீலகண்டனுக்கு அறுபது வயது முடிந்ததை, கொண்டாட வேண்டும் என்று மகனும் மகளும் விரும்பினார்கள். நீலகண்டனுக்கு நூறு வயதான களைப்பு. அவனுடைய தம்பி மற்றும் அனைத்து சகோதரிகளும் இறந்துவிட்டார்கள். அவனுக்கு மட்டும் முடிவு வரவில்லை. எப்போதாவது அவன் இளமையில் வாழ்ந்த ஊர்த் தகவல்கள் வரும். அவனுடைய இந்து, முஸ்லிம் நண்பர்கள் பலர் இறந்துவிட்டார்கள். கரும்பாக இனித்த கிணறைத் தூர்த்து அடுக்குமாடி வீடு வந்துவிட்டதாக ஒருவர் சொன்னார். அந்த இடமே பெரும் செல்வந்தர் குடியிருப்பாக மாறிவிட்டது. அவனுடைய பெற்றோர் முகங்கள் கூட மறந்துவிட்டது. அவனுடைய முகத்தையும் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. முகச்சவரம் செய்துகொள்ளும்போது முகம் தெரிவது இல்லை. கண்ணாடியை என்றோ ஒருநாள் தனியாகப் பார்த்துக்கொண்டால் அது வேறு யார் முகம் போல இருக்கும். ஏன் முகம்கூட இல்லாததுபோல் ஆகிவிடுகிறது? எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று யாரோ சொல்லியிருக்கிறார். சிரசு, முகத்தைக்கொண்டது இல்லையோ?

அறுபது ஆண்டு பூர்த்தி விருந்துக்கு வந்த ஒருவர், நீலகண்டனிடம் இறந்த அவன் சகோதரி பெயர் கேட்டார்.

நீலகண்டன், “எதற்கு?” என்று கேட்டான்.

“என் பக்கத்து பங்களாவுல பெரியவங்களும் குழந்தைகளும் கலந்த இருபது பேர் இருக்காங்க. ஒரு அம்மா மட்டும் கொஞ்சம் வயதானவங்க. யாரையாவது பார்த்தா இதைக் கேப்பா. உங்க அக்கா பேர், அவங்க விசாரிக்கிற பேரா இருக்கு.”

இரண்டு நாட்கள் கழித்து அவர், “சார், ஒருநாள் எங்க வீட்டுக்கு வர்றீங்களா? அந்த அம்மாகிட்ட நீங்களே சொல்லிடலாம்” என்றார்.

“பார்க்கலாம்.”

“கட்டாயம் வாங்க சார். அந்த அம்மா பரபரத்துப்போயிட்டாங்க.”

“அப்ப அவங்களே வரலாமே?”

“அவங்களைப் பார்த்தா நீங்க இப்படிச் சொல்ல மாட்டீங்க.”

அடுத்த ஞாயிறு அன்று, அந்த மனிதர் வீட்டை நீலகண்டன் தேடிப் போனான். அந்தச் சாலையில், நாட்டு ஜனாதிபதிகளில் ஒருவரின் மாளிகை இருந்தது. அவர் மெட்ராஸில் இருந்த போது ஒரு பெரிய கோஷ்டியோடு நீலகண்டனே ஒரு மகஜர் கொடுக்கப் போயிருந்தான்.

அவன், தேடிப் போனவர் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான். அது, அந்தச் சாலையில் ஒரு குத்துச்சந்தில் இருந்தது. அவர் தேகப்பயிற்சிக் காகக் கடற்கரைக்குப் போயிருந்தார். நீலகண்டனை நீண்டநேரம் காத்திருக்க வைத்து விட்டார். இந்த வயதில் இவ்வளவு நீண்ட நேர உடற்பயிற்சி!

கடைசியாக, 10 மணிக்கு வந்தார். வந்தவர், “என்ன... காலங்கார்த்தாலேயே வந்திட்டீங்க?” என்றார்.

“நீங்க `கட்டாயம் வாங்க'னு சொன்னது னாலேயே வந்தேன். நான் வந்தப்போ மணி ஒன்பது. நான் வந்தது தப்பு. நான் போறேன்.”

“கோவிச்சுக்காதீங்க சார். இவ்வளவு தூரம் வந்து நீங்க போயிட்டீங்கன்னு அவங்களுக்குத் தெரிஞ்சா, ரொம்ப வருத்தப்படுவாங்க. இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன்.”

அவர் குளித்து, தலைவாரி வேறு ஷர்ட் போட்டுக்கொண்டு வர இன்னும் கால் மணி நேரம் ஆயிற்று.

“வாங்க சார்'' என்று சொல்லி எதிர்வீட்டுக்குப் போனார்.

“ராமலிங்கம்!” என்று கூப்பிட்டார்.

ஒரு பையன் வந்து, “அப்பா, கிளப்புக்குப் போயிருக்கார்” என்றான்.

“அவரைக்கூடப் பார்க்க வேண்டாம். உங்க அத்தைப் பாட்டியைப் பார்க்கணும்.”

அது பெரிய பங்களா. பழங்கால வீடு. மூன்று பக்கங்களில் வாசற்படிகள் இருந்தன. ஒவ்வொரு வாசற்படிக்கும் வராண்டா, போர்ட்டிகோ. தரைக்கு சிவப்பு ஆக்ஸைடு போட்டுப் பளபளவென இருந்தது. உண்மையில் சிறுவனின் அத்தைப் பாட்டி இருந்த இடம்தான் முன்புறம். நேர் எதிரே சாலை.

“பாட்டி!’' என்று பையன் அழைத்தான். வயதான அம்மாள் உள்ளே இருந்து வந்து “வாங்க'' என்றாள்.

பக்கத்து வீட்டுக்காரர், “நான் சொன்னவர் இவர்தான். இவர் அக்கா பெயர் சாந்தியாம்.”

நீலகண்டன் சொன்னான், “என் அக்கா பேர் சாந்தி. ஆனா, அவ போன வருஷம் போயிட்டா.”

``நீங்க சாந்தியக்கா தம்பி.”

“ஆமாம்.’

``நீலகண்டன்.”

“ஆமாம்.”

“நீலகண்டன், என்னை அடையாளம் தெரியலையாடா?” அந்த அம்மாள் அலறினாள்.

“ரஞ்சனி!”

நொடிப்பொழுதில் அந்த அம்மாள் நீலகண்டனைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்... கதறினாள். “என்னை விட்டுட்டு எங்கேடா போயிட்டே? என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டியேடா! உனக்கு எத்தனை கடுதாசி போட்டேன். எல்லாமே திரும்பி வந்துட்டுதேடா. அப்பாவும் அவர் சாகுறதுக்கு முந்தின வருஷம் அங்கே வந்து விசாரிச்சிருக்கார். எங்கெங்கையோ தேடி விசாரிச்சார். நீ மெட்ராஸ் போயிட்டதா சொன்னாங்களாம். ஏண்டா, நீ இவ்வளவு வருஷம் இந்த ஊர்லேதான் இருந்தியா? இவ்வளவு நாள் எங்கே ஒளிஞ்சிண்டு இருந்தேடா?”

``ரஞ்சனி. நான் எங்கேயும் ஒளிஞ்சிண்டு இல்லை. உங்க அப்பா `முப்பது நாள் கழிச்சு வா'னு சொன்னதை நம்பினேன்.”

``அதுக்காக, நடுவுல ஒருநாள் வரக் கூடாதா? நான் அப்பவே உன்கூட வந்திருப்பேனே? எங்க அப்பா நீ வந்து போனதுல பயந்துபோயிட்டார். ஏதோ அர்த்தமே இல்லாத கிலி. அவர் கம்பெனியில் அவர் டைரக்டர். உடனே மெட்ராஸ் டிரான்ஸ்ஃபர் வாங்கிண்டார்.”

“என்ன கம்பெனி?”

“கிரைஸ்லர் இண்டியா. எங்க மூணு பேருக்கும் அவரே போய் டி.சி வாங்கிண்டு வந்தார். வீட்டை வெஸ்லி கில்ட்காரங்க ரொம்ப நாளாவே கேட்டிண்டிருந்தாங்க. அதை வித்திட்டு உடனே இங்கே வாங்கினார்.”

“எல்லாம் நன்னா இருக்கிறபோ, நாம எவ்வளவோ காரியங்களைச் செய்யாம இருந்திடுறோம். எனக்கு, உங்க அப்பா என்ன கம்பெனின்னு தெரியாது; உங்க உறவுக்காரங்க தெரியாது. அங்கே மூணு வருஷம் தேடினேன். அப்புறம் இங்கே வந்து பத்து வருஷம் வீதி வீதியா வீடு வீடாத் தேடினேன். முதலியார்னு பேர் இருந்தா, ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா விசாரித்தேன். முருகேச முதலியார் என்ற ஒருவர் என்னை `ஏன்... எதற்கு?'னு கேட்டார். ஏதோ அவரிடம் சொல்லணும்னு தோணித்து. அவர் சொன்னார், யூ ஆர் அ பார்ன் லூஸர் (You are a born loser.). நிறையப் பேர், அவங்க உங்களுக்கு வீடு பிடிச்சுத் தந்த மாதிரி கீழ்ப்பாக்கம்னாங்க.”

‘`என்ன சாப்பிடுறே நீலகண்டன்? காபி வேண்டாம். சாப்பிட்டுடு. உன்னோட வந்திருந்தவரைக் கவனிக்கவே இல்லை.”

ரஞ்சனி, நீலகண்டனைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தவுடனேயே அவர் நழுவிவிட்டார். சின்னப்பையன் அவன் வீட்டில் சொல்லி, அங்கு இருந்து இரண்டு பேர் வந்துவிட்டார்கள்.

p69a.jpg“என்ன ஆச்சு அத்தை? நீ ஓன்னு அழுதாயாம்!”

“இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். போங்க எல்லாரும்” அவள் கோபத்தைக் கண்டு அவர்கள் பயந்த மாதிரி இருந்தது.

“உம்...”

அவர்கள் போய்விட்டார்கள்.

``நீலகண்டன். இனிமே இதுதான் உன் வீடு. நான் என் கையாலே உனக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சுப்போடுறேன். ஏன் நின்னுண்டே இருக்கே? உக்காரு. இல்லை, வீட்டைப் பார்க்கிறியா? முதல்ல முழு வீட்லயும் நான் இருந்தேன். தம்பிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன உடனே அவங்களைத் தனித்தனியா வெச்சேன். ஏண்டா, நான் செய்தது சரிதானே?’'

“நீ செய்றது சரியாத்தான் இருக்கும் ரஞ்சனி.”

“அப்பாடா, இன்னொரு தரம் என் பேரைச் சொல்லிட்டே. உன்னைக் கொண்டுவந்த மனுஷனை எங்கே பிடிச்சே? நல்ல சுபாவம் இல்லை. இத்தனை வயசாறது, இன்னும் பெண்டாட்டியை அடிக்கிறான். இவனை எங்கே பிடிச்சே?’'

“என் மகன், மகள் ரெண்டு பேரும் எனக்கு அறுபது வருஷக் கல்யாணம் பண்ணினாங்க. இவர் என் பையன் கீழே வேலை பார்க்கிறார்.”

“உனக்கு ஒரு மகன், ஒரு மகளா?”

“ஆமாம். உனக்கு?”

“எனக்கா...” என்று ரஞ்சனி இழுத்தாள்.

“இங்கே ஏகப்பட்ட பையங்க, பெண்களைப் பார்த்தேன்.”

``எனக்கு குழந்தை இல்லை நீலகண்டா.”

``ஏன்... ஏதாவது டாக்டரைப் பார்க்கலையா?”

ரஞ்சனி சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்.

``என்ன, ரஞ்சனி?”

ரஞ்சனி கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வழிந்தது.

``எனக்கு உன்னோட ஆன கல்யாணம்தான்டா.”

``ஐயோ... ஏன்? உன் அப்பா-அம்மா...”

``இல்லைடா. என் அம்மாவாவது அப்பப்போ `அவன் இல்லைன்னா என்னாச்சு? வேறே எவ்வளவோ நல்ல பையங்க இருக்காங்க'னு சொல்வாங்க. நீலகண்டன், நான் உன்னை அன்னிக்கே கல்யாணம் பண்ணிண்டுட்டேனே. மறுபடியும் எப்படிடா வேறே யாரையோ தொட முடியும்? அதை அப்பா புரிஞ்சுண்டுட்டாரு. `துரோகம் பண்ணிட்டேன்டி ரஞ்சனி. உனக்கும் அந்தப் பையனுக்கும் துரோகம் பண்ணிட்டேன்'னு புலம்பிண்டே உயிரைவிட்டார்.

நான் உன் பேரைச் சொல்லி தேடினா, நீ ஏதோ திருடிண்டு போயிட்டேன்னு நினைப்பாங்க. அதான் உங்க அக்கா பேர் சொல்லித் தேடச் சொன்னேன். உக்காருடா. தட்டு போடுறேன். முதல்ல சாப்பிடு. உன்னை எப்படி எல்லாம் தேடினேன் தெரியுமா?  யார் யாரையோ விசாரிச்சேன்! இந்திரகுமாரியைக்கூடக் கேட்டேன்.”

``நானும் அவளைக் கேட்டேன் ரஞ்சனி. அவ `பிரின்சிபால்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவேன்'னு சொன்னா.”

``அவளுக்கு ரொம்ப டிஸ்டர்ப்ட் மைண்ட். அவ புருஷனுக்கு ஏகப்பட்ட கூத்தியாளுங்களாம். அவ ராஜ்புத். ஆனா, நீயும்தான் ஏமாத்தித்தினேடா. நீயும் துரோகம் பண்ணிட்டே. ஏன்டா, நீ நிஜமாவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா? எல்லாம் சாக்குப்போக்குடா. சரி, முதல்ல சாப்பிடு. இது உங்க அம்மா சமையல் இல்லை. நாற்பது வருஷம் உனக்காகவே காத்திண்டிருந்த பைத்தியக்காரி சமையல்.”

நீலகண்டன் சாப்பிட்டான். அது ரஞ்சனி சமையல் அல்ல. ஒரு சமையக்கார அம்மா சமைத்தது. அவனுக்கு சற்றும் பிடிக்காத பூண்டைத் தாராளமாகப் பயன்படுத்தியது. இனி ரஞ்சனியோடு வாழவேண்டும் என்றால், பூண்டைச் சகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். சதாசிவத்தைப் பார்த்த தினமே அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.

ரஞ்சனி, பெருமையோடும் மிகுந்த அன்போடும் ஒவ்வொன்றையும் பரிமாறினாள். அவனுக்கு அடிக்கடி கண்ணீர் வந்தது. அவள் வரை அவன்தான் அவளுடைய கணவன். இந்தக் கணவன்-மனைவி உறவுதான் எவ்வளவு விசித்திரமானது! சீதை ஒரு வருடம் ராமனுக்குக் காத்திருந்தாள்; ரஞ்சனி நாற்பது வருடங்கள் காத்திருக்கிறாள்!

``உன் மகன், மகள் பெரியவங்க. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நீ உன் பெண்டாட்டியை அழைத்துக்கிட்டு இங்கே வந்துடு.”

``ரஞ்சனி, நாம செய்யவேண்டிய எவ்வளவோ விஷயங்களை இந்த `40, 50 வருஷங்கள்ல செய்யலை. நீயும் யோசி. நானும் யோசிக்கிறேன். இப்போ நாம ரெண்டு பேரும் அறுபது வயதுக் கிழவங்க. இப்போ போய்த் தடுமாறக் கூடாது. நீ சொன்னது நிஜம்தான் ரஞ்சனி. நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன். அப்போ தெரியலை, ரொம்பப் பெரிய துரோகம். எனக்கு உன் முன்னாடி நிக்கிறதுக்கு வெட்கமாயிருக்கு.''

ரஞ்சனி மீண்டும் அவனைக் கட்டிக்கொண்டு விம்மினாள். கதவு திறந்து இருந்தது. சலையில் இருந்துகூட அவர்களைப் பார்க்க முடியும். அவளுடைய தம்பிகளின் குடும்பத்தினர் இப்போது ஒட்டுக்கேட்டுக்கொண்டிருப்பார்கள. ஆனால், ரஞ்சனிக்கு எதுவும் ஒரு பொருட்டு அல்ல. அவள் வருஷக்கணக்கில் காத்திருந்தவன் வந்துவிட்டான்!

``ரஞ்சனி, நான் இப்போ போகணும்.”

``உன் அட்ரஸ் எழுதிக் குடுடா. நான் காரை அனுப்புறேன். இன்னிக்கு டிரைவர் லீவு. வேற டிரைவருக்கு ஏற்பாடு பண்றேன்.”

``வேண்டாம் ரஞ்சனி. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். என் அட்ரஸ் இதோ. இது என் மகன் விசிட்டிங் கார்டு. நான் அவனோடுதான் இருக்கேன்.”

``நாளைக்கு நானே வர்றேன்டா. அவங்க எல்லாருக்கும் வேட்டி-சேலை வாங்கிண்டு வர்றேன்.”

நீலகண்டன் சாலைக்கு வந்தான். உச்சி வெயில் சுளீரென அடித்துக்கொண்டிருந்தது. வலதுபுறம் நகரம், அவன் வீடு, அவன் மனைவி, அவன் குடும்பம். இடதுபுறம் எல்லா துரோகங்களையும் கழுவக்கூடிய நீலக்கடல். எவ்வளவு பொருத்தம்... நீலகண்டன், நீலக்கடல். நீலகண்டன் கடற்பக்கம் போனான்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.