Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பர்மா ராணி

Featured Replies

பர்மா ராணி

 

சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம்

 

2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம்.

வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக்கிடந்த கடந்த காலத்தின் ரகசியப் பக்கங்கள், இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்துசெல்வதைக் கண்கூடாகப் பார்த்தான். அவன் தேடும் தனியொரு மனிதராக அல்லாமல், ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறியிருந்தார் ஜாவேத். புதிய புதிய சுவாரஸ்யங்களைத் தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத, விநோதமான பாத்திரம் இவன்.

`தமிழ் சினிமா – நேற்றின் நிழல்’ என்னும் பெயரில், சினிமாவின் கடந்த காலத்தைக் கொண்டாடும்விதமாக நடக்கும் நிகழ்வின் அபூர்வமான ஒரு தருணத்தில்தான், ஜாவேதைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டான். ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்த அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரைக் கெளரவிக்கும் விதமாக அழைத்திருந்தனர். விழா மேடையில் வாழ்வில் மறக்க முடியாத படம் குறித்துக் கேட்டபோது, `பர்மா ராணி' என்ற படம் குறித்தும், அதன் கடைசி நாள் படப்பிடிப்பில் நிகழ்ந்த ஓர் அசம்பாவிதத்தையும் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார். துயரங்களையும் இழப்புகளையும் மறந்துபோக மனிதர்களுக்கு இரண்டு ஆயுள்கள் தேவைப்படுகின்றன. தன் காலத்தில், கடந்த காலத்தின் சந்தோஷமான நாட்களில் எல்லாம் துயர்மிக்க நாட்களை மறக்க முடிவது இல்லை. அவருக்கும் அப்படித்தான். படத்தின் மீது இருந்த சுவாரஸ்யத்தைவிடவும் அதன் நாயகனான ஜாவேதைப் பற்றி கேட்டதுதான் வினோத்துக்கு முக்கியமானதாக இருந்தது.

p90b.jpg

இளம்வயதில் லாகூரில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்து, ஸ்டுடியோக்களில் வேலைசெய்து, மொழியைக் கற்றுக்கொண்டு, நடிகராகவும் ஆகியிருக்கிறார். அப்படி நடித்த ஒரேயொரு படமும் வெளியாகவில்லை. அதன் பிறகு அந்த மனிதன் என்ன ஆனான்? இந்த ஒற்றைக் கேள்வியில் இருந்துதான் அவரைத் தேடத் துடித்த இந்த நீண்ட பயணம் தொடங்கியது.

எல்லோரும் மறந்த ஒன்றை நினைவுபடுத்த வேண்டுமாயின், கடந்த காலத்தின் விநோதமான சுழல்களுக்குள் எளிதில் பயணிக்கத் தெரிந்திருப்பதோடு, அசாத்தியமான பொறுமையும் வேண்டும். புத்தகங்கள், ஆய்வாளர்கள்... என அவன் தேடிச்சென்ற எல்லோரும் சில குறிப்புகளை மட்டுமே சேமித்துவைத்திருந்தார்களே ஒழிய, பொக்கிஷங்களை அல்ல. ஒவ்வொரு குறிப்பும் பிறிதொரு குறிப்புக்கான தூண்டுதலாக இருந்தது மட்டும்தான் ஆறுதல். `பர்மா ராணி’ படத்தின் ரீல்கள் இருப்பதைத் தெரிந்து தேடிச் சென்றபோது காலம் மறந்துபோன ஏராளமான காட்சிகள் சிதறல் சிதறல்களாக பழைய குடோன்களில் குவிந்திருப்பதைப் பார்த்தான். ஒவ்வொரு ஃப்ரேமிலும் தேக்கிச் சேமித்த கனவுகள், துருவேறி பயனற்றுக்கிடந்தன. அடுத்த வருட நிகழ்வுக்குள் படத்தின் பிரதியையும் ஜாவேதையும் எப்படியாவது கண்டுபிடித்துவிடுவது என உறுதியோடு இருந்தான்.

`பர்மா ராணி’யோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஜாவேதின் இருப்பு குறித்து சந்தேகம்கொண்டிருந்தனர். எல்லோருக்கும் முன்பாக இறந்துபோவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் உண்டு. விடுதலைக்குப் பின்னர் கொத்துக்கொத்தாகக் கொலைசெய்து இந்த எல்லையில் இருந்து எதிர்ப்பக்கத்துக்கும், எதிர்ப்பக்கத்தில் இருந்து இங்குமாக அனுப்பப்பட்ட பல்லாயிரம் உடல்களில் ஒன்றாக அவரும் போயிருக்கலாம் என்பது சிலரின் அபிப்பிராயம். அப்படியே தப்பிப் பிழைத்தாலும் மூப்பின் காரணமாக தவறிப்போயிருக்கலாம்.

உயிர் வாழ்தலுக்கான சாத்தியங்கள் வெகுகுறைவாகவே உள்ள ஒரு மனிதனை எப்படியும் சந்தித்தே ஆகவேண்டும் என்கிற விநோதமான வைராக்கியம் அவனுக்குள். யாருக்குமே தெரியாமல் ரகசியங்களோடு ஒரு மனிதன் மறைந்துவிட முடியாது. ரகசியங்கள், மனிதர்களின் தேவைகளைத் தக்கவைத்தபடியே இருக்கின்றன. ஹைதராபாத், மங்களூர், கோழிக்கோடு, மும்பை... என அந்த நீண்ட பயணத்துக்குக் கடைசியாக விடை கிடைத்தது, `அவர் டெல்லியில் இருக்கிறார்' என. ஒரு மனிதன் தேடிக் கண்டடைய, சாத்தியம் இல்லாதது என எதுவும் இல்லை. பழைய டெல்லியின் தாஸ் சவோக்கில் அழுக்கடைந்த ஒரு சந்தில் ஜாவேதின் வீட்டைக் கண்டுபிடித்தது பரவசமாக இருந்த போதும், அவரிடம் என்ன பேசுவது எனக் குழப்பம்.

வர்ணம் அடிக்கப்படாமல் சுவர் உதிர்ந்த பழைய வீட்டின் வாசலில், நாடகத்தின் வேஷ அலங்காரங்களுக்காகச் செய்யப்பட்ட உருவங்கள். வாசலைக் கடந்து உள்ளே சென்றவனுக்கு அந்த இடம் முகலாய காலத்தின் மிச்ச வாசனையை நினைவுபடுத்தியது. ‘என்ன சொல்லி அறிமுகப் படுத்திக்கொள்ள... உதவி இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிகையாளன், சினிமா ஆர்வலன்... இவற்றில் எதுவாக இருந்தாலும் அவரைத் தேடிச் சென்றிருப்பதன் பிரதான காரணம்?’

கதவைத் திறந்த பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். பருவத்தின் மொத்த விளைச்சலாகத் தெரிந்தும் மிக சாந்தமாக அவனிடம், ``யார் வேண்டும்?’' எனக் கேட்டாள்.
“ஜாவேத் பாய்.”

p90a.jpg

அவள் சிறிது யோசனைக்குப் பிறகு “சென்னையில இருந்து வர்றீங்களா?” எனக் கேட்டாள்.

`ஆமாம்' என்பதுபோல் தலையசைத்தான்.

“உள்ளே வாங்க.''

வெளிச்சம் மிகக் குறைவாகப் பரவியிருந்த வீட்டுக்குள் அவளைத் தொடர்ந்து சென்றான். வியாபாரத்துக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் ஜிலேபி வாசனை, எங்கிருந்து வருகிறது எனத் தெரியாமல் எல்லா அறைகளிலும் நிரம்பியிருந்தது.

குளிருக்கு இதமாக இருந்தது, அவள் கொடுத்துவிட்டுப்போன தேநீர் கோப்பையின் கதகதப்பு. பல்வேறு யோசனைகளில் இருந்தவன், தனக்கு எதிரில் ஒரு முதியவர் வந்து அமர்வதைக் கண்டுகொள்ள சில நொடிகள் பிடித்தன. நடிகனாக இருந்ததற்கான சாயல்கள் அவ்வளவையும் இழந்திருந்த முகம்.

``என்னைய பார்க்கவா இவ்ளோ தூரம் வந்தீங்க?” - அந்தக் குரலில் வியப்புக்கு பதிலாக ஏமாற்றமே பெருகியிருந்தது!

``ஆமாங்க. என் பேர் வினோத். அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன். சென்னையில ஒவ்வொரு வருஷமும் பழைய சினிமாக் கலைஞர்களைக் கெளரவிக்கிற ஒரு விழா நடத்துறோம். போன வருஷம் வந்த ஒரு கேமராமேன் சொல்லித்தான் உங்களைப் பத்தியும் `பர்மா ராணி’ படம் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த வருஷ விழாவுல உங்களைக் கெளரவிக்கணும்னு தோணுச்சு. அதான் தேடி வந்தேன்.”

நிதானமாகப் பேசிய அந்த இளைஞனைப் பார்க்கும்போது கடைசியாக சென்னையை நீங்கி வந்த தனது முகத்தைப்போல் இருந்தது. “என்னைய கெளரவிக்கப்போறீங்களா... எதுக்குப்பா... எங்கிட்ட பேச என்ன இருக்கு?”

வினோத், தனது முதுகுப் பையில் இருந்து பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். `பர்மா ராணி’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படம். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரிடம் இருந்து அவன் வாங்கி வந்தது. கடைசி நாள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். கதாநாயகனாக தனது கடந்த காலத்தைப் பார்த்த நொடியில், அவருடைய கண்கள் அசைவின்றி அப்படியே நிலைகுத்திக் காணப்பட்டன.

``ஒவ்வொரு மனுஷனுக்கும் அவன் வாழ்க்கையில ஏதாவது ஒரு விஷயம்தான் ஆயுசுக்குமான லட்சியமா இருக்கும். அது தோத்துப்போனதுக்கு அப்புறம் வாழுற ஒவ்வொரு நாளும் நரகம் தம்பி. நான் சாக முடியாம வாழ்ந்துட்டு இருக்கேன்” என்றவர், கையில் இருந்த புகைப்படத்தை மடியில் வைத்துக்கொண்டார்.

“நீங்க ஏன் அதுக்கு அப்புறம் நடிக்கலை?”

“நடிக்க முடியலை. யாரும் கூப்பிடலை. வெளியே போகவே பயமா இருந்தது. அத்தனை வருஷங்களா, `ஜாவேத் லாகூர்ல இருந்து வந்தவன்’கிறது யாருக்கும் தொந்தரவா இல்லை. `முத்தப்பா கையில துப்பாக்கி இருந்த மாதிரி இன்னும் யார் கையில என்ன இருக்குமோ?'னு பயம். அதான் போராடிப் பார்த்துட்டு முடியாம மெட்ராஸைவிட்டுக் கெளம்பி வந்துட்டேன்” தொடர்ந்து பேச முடியாமல் குரல் தழுதழுக்க, தலையைக் குனிந்துகொண்டார்.

இரண்டு மனிதர்களுக்கு நடுவில் நிலவும் கலைக்க முடியாத மெளனம் மூர்க்கமானது. யாரோ ஒருவரைக் காயப்படுத்திவிடுவதற்கான எல்லா சாத்தியங்களையும்கொண்ட அந்தக் கணத்தில் முதலில் வந்துவிழும் சொற்களுக்கு, சற்று நிதானம் தேவை.

“அதுக்கு அப்புறம் இத்தனை வருஷங்களா என்ன செஞ்சீங்க... சொந்த ஊருக்குப் போகலையா?” - வினோத் வெளிச்சம் குறைவாக இருந்த அவர் முகத்தின் உணர்ச்சிகளைத் தெரிந்துகொள்ளத் தவித்தான்.

ஜாவேத், வேறு எங்கோ பார்த்தபடி சிரித்தார். “நாம எங்கே வாழறமோ, எங்கே சந்தோஷமா இருக்கோமோ, அதுதானேப்பா சொந்த ஊர்? என் வாழ்க்கையில் நான் சந்தோஷமா இருந்ததும் துக்கமா இருந்ததும் இங்கேதான். எங்கெங்கேயோ சுத்தினேன். கல்யாணத்துக்கு அப்புறம் டெல்லி வந்துட்டேன்.”

வினோத்துக்கு, ஒவ்வொரு சொல்லுக்கும் நடுவே ஜாவேத் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பிக்கொள்ள முடியாததாக இருந்தது. அவர் மறந்துபோக விரும்பிய ஒன்றை நினைவுபடுத்தி துயரம் கொள்ளச்செய்கிறோமோ என்ற குற்றஉணர்வு.

“எனக்குப் புரியுதுங்க. ஆனா, இப்பிடி ஒரு நடிகன் இருந்தான்கிறதைப் பதிவுபண்ணணுமே! அதுக்காகக் கேட்கிறேன். நீங்க இந்த வருஷம் விழாவுக்கு வரணும். நான் ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடி, `பர்மா ராணி’ படத்தோட ரீல்களைக்கூட எடுத்துவெச்சிருக்கேன். இப்பவே அதெல்லாம் தேஞ்சுபோச்சு. நீங்க ஒருமுறையாச்சும் அந்தப் படத்தைப் பாருங்க…”
ஜாவேதின் கண்களில் அதுவரை இல்லாத பிரகாசம் பரவியது.

“நிஜமாவா சொல்ற தம்பி?”

“ஆமாங்க.''

அவர் மீண்டும் தான் வேஷம் கட்டியிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டார். அந்தக் கனவு இந்த உலகம் மறந்துபோன செய்தி அல்ல. காலம் கடந்துபோனாலும் யாரோ சிலருக்குத் தெரியத்தான்போகிறது. மனம் பூரிப்பு அடைந்ததைக் காட்டிக்கொள்ளாது, “எந்தத் தேதினு சொல்லுப்பா... நான் கண்டிப்பா வர்றேன்” என்றார்.

ஆறு மாதக் காலத் தேடல் வீணாகவில்லை என்கிற உற்சாகம் அவனுக்கு. தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கு இருந்து புறப்பட்டபோது ரகசியத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அவன் பிரித்துப் பார்த்திருந்தான். ஜாவேதின் மடியில் இருந்த புகைப்படத்தில் மறைந்துகிடந்தது வேறு யாருக்கும் தெரியாத அந்த மற்றொரு ரகசியம்.

லாகூர் எக்ஸ்பிரஸ்

ஏதாவது ஒரு வேலைசெய்து பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்து, ஒன்பது வயதில் லாகூரில் இருந்து கிளம்பியபோது உலகம் இத்தனை விசாலமானது என்பதும், குரூரமானது என்பதும் ஜாவேதுக்குத் தெரியவில்லை. இந்துஸ்தானத்தின் தெற்கு எல்லை வரை செல்லக்கூடிய கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸில், ஏலக்காய் வியாபாரத்துக்காக வந்திருந்த மலையாள வியாபாரிகளோடு ஒட்டிக்கொண்ட ஜாவேதும் அவர்களோடு ஒருவனாகப் பயணப்பட்டான்.

மங்களூர், கோழிக்கோடு எனக் கழிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு மதராஸுக்கு வந்தவன் இங்குதான் முதன்முதலாக ‘சீதா கல்யாணம்’ என்ற சினிமா பார்த்தான். கனவை நிஜமாக்குவதின் உச்சபட்சமான சாத்தியங்கள் அவ்வளவையும் அந்தத் திரை நிகழ்த்திக்காட்டியதில் மலைத்துப் போனவன், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். சினிமா, சொல்ல முடியாத ஏதோ ஒரு பரவசத்தைக் கொடுக்க, ஜாவேதுக்கு மதராஸை விட்டுச் செல்ல மனம் இல்லை. சேத்துப்பட்டில் இருந்த ஒரு வியாபாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தவன், தன் செலவுகள்போக மிஞ்சும் பணத்தில் சினிமா பார்ப்பதை வழக்கமாக்கினான். கனவுகளை விதைக்கும் விநோதமான உலகமாக இருந்த அதற்குள் வேகமாகத் தொலைந்துபோயின அவன் கிழமைகள்.

1934-ம் ஆண்டு, சித்திரை மாதம் சேத்துப்பட்டில் உருவான `சவுண்ட் சிட்டி ஸ்டுடியோ’வில் முதலாளியின் மூலமாக வேலைக்குச் சேர்ந்த போது அவனுக்கு முன்னரே அங்கு முத்தப்பாவும் எடுபிடியாக வேலை செய்துகொண்டிருந்தான். இருவருக்கும் நடிப்பதுதான் கனவு என்றாலும், காலம் அவர்களுக்கான கதவை அத்தனை எளிதில் திறந்துவிடவில்லை. முத்தப்பா, சில காலம் இசை நாடகங்களில் நடித்தவன். அதனால் சிறப்பாகப் பாடக்கூடியவன். தனக்கு எந்தத் திறமையும் இல்லையே எனத் தவித்த ஜாவேதுக்கு, தமிழை ஒழுங்காகப் பேசக் கற்றுக்கொடுத்தது முத்தப்பாதான்.

p90c.jpg

`முத்தப்பா... நீ எப்படியும் பெரிய நடிகனா வருவ. அப்படி வரும்போது பழைய சிநேகிதத்தை மறக்காம அந்தப் படத்துல எனக்கு ஒரு சின்ன வேஷம் வாங்கிக் குடுடா…’ - ஜாவேத் தவிப்போடு கேட்பான்.
ஏழு, எட்டு வருடங்கள் அந்த ஸ்டுடியோவில் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து வளர்ந்த அவர்களுக்கு, ஒரு காலத்துக்குப் பிறகு தெரியாத வேலைகளே இல்லை. முதலாளிக்கும் அவர்கள் இருவரின் மீதும் அலாதியான பிரியம்.

“உங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணுதுடா. நான் கொஞ்சம் பணம் தர்றேன், நீங்க தனியா படம் தயாரிக்கிறீங்களா?”

முத்தப்பாவும் ஜாவேதும் அமைதியாக அதை மறுத்தனர்.

“மொதலாளி, நீங்களே படம் தயாரிங்க. நாங்க நடிகனாகணும்னுதான் இத்தனை வருஷங்களாக் காத்திருக்கோம். நீங்கதான் அதுக்கு ஒரு வழி பண்ணணும்.”

அவர்களின் நம்பிக்கையும் உறுதியும் பிடித்துப் போனதால் முதலாளி சம்மதம் சொன்னார்.  படத்துக்கான கதை முடிவானபோதே `முத்தப்பாதான் நாயகனாக நடிப்பான்’ என எல்லோரும் நினைத்தனர். படத்துக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டவர், ஒத்திகைக்காக முத்தப்பாவை நடிக்கச் சொன்னபோதுதான், அவன் குரல் பெண் தன்மையோடு இருப்பதைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தார்.

``மொதலாளி, இது தைரியமான ஒரு ராஜாவோட கதை. இதுல கம்பீரமான குரல் இருக்கிற, வாட்ட சாட்டமான ஆள் நடிச்சாதான் சரியா இருக்கும்’’ என இயக்குநர் சொல்ல, எதிர்பாராதவிதமாக ஜாவேத் தேர்வுசெய்யப்பட்டான். எதிர்பாராத சில திருப்பங்கள், மனிதர்களை அவர்களின் இயல்பில் இருந்து முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. தான் எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட வேதனை முத்தப்பாவுக்கு. அதை வெளிக்காட்டவும் முடியாமல் தவித்தான்.

படம் தொடங்கிய நாளில் இருந்து ஸ்டுடியோவைவிட்டு விலகியே இருந்த முத்தப்பாவை ஆறுதல்படுத்த எவ்வளவு முயன்றும் யாராலும் முடியவில்லை. அவனுக்காக ஒரு கதையைத் தயார்செய்து, அடுத்த படம் எடுக்கலாம் என முதலாளி சொல்லியும் அவன் மனம் ஆறவில்லை. ஆசைக்காக அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தான். அந்த இரவு முழுக்க பல்லாயிரம் முறை தன்னைத்தானே கொலைசெய்துகொள்ள முடிந்தாலும், துயரம் குறைவதாக இல்லை. ஜாவேதுடனான இத்தனை வருட நட்பு இருந்த சுவடே இல்லாமல்போனது. அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.

நகரில் ஆங்காங்கு அந்தப் படத்துக்கான விளம்பரத் தட்டிகளைப் பார்த்தபோது, உள்ளே சுழன்ற வெறுப்பு பன்மடங்கானது. குவாலியரில் இருந்து கடத்திவரப்பட்ட Beretta M1934
semi-automatic pistol in .380 ACP caliber-துப்பாக்கி கிடைப்பதற்கு முன்பு வரையிலும் ஒரு கொலை செய்வதற்கான எந்த உள்ளெழுச்சியும் அவனிடம் இல்லை. வன்மம் ஒரு மனிதனுக்குள் சுயப்படுகொலை செய்துகொண்ட பின்னர் மற்றவர்களைக் கொலைசெய்யத் தூண்டுகிறது. தேவைகள் ஏற்படும்போது மனிதன், தான் செய்யும் எல்லா குற்றங்களுக்குமான நியாயங்களை எளிதில் தேடிக் கண்டடைகிறான். அந்தத் துப்பாக்கியை எப்படி இயக்குவது எனக் கற்றுக்கொண்ட முத்தப்பா, கடைசி நாள் படப்பிடிப்புக்குச் சென்றதை முற்பகல் வரை யாரும் கவனிக்கவில்லை.

1948 இலையுதிர் காலம் – ஜூபிடர் ஸ்டுடியோ – மதராஸ் பாதி விளக்குகள் அணைந்த நிலையில் அடுத்த காட்சிக்கான ஒத்திகையில் இருந்த ஜாவேதின் முகத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பூர்ணத்துவம் நிறைந்த புன்னகை. இந்த உணர்வுக்காகத்தான் சொந்த நிலம் மறந்து வெவ்வேறு ஊர்களில் இத்தனை காலம் நாடோடியாக அலைந்து திரிந்தான். சகிக்க முடியாத இன்னல்கள் துயரங்களைத் தாண்டி முதல்முறையாக அவன் கதாநாயகனாக நடிக்கும் `பர்மா ராணி’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு. எதிர்பட்டுச் செல்லும் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என பரபரத்தது மனம். வேஷமே கட்டவில்லை என்றாலும், தான் ஒரு ராஜா என்கிற கர்வம் கூடியிருக்கும் தருணம் ஒன்றில் எல்லோருக்கும் தலை வணங்கி நிற்கத் தவித்த மனதின் புதிர் அவனாலேயே விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று.

“இந்தாப்பா... வசனத்தை எல்லாம் நல்லா பேசிப் பார்த்துட்டியா... நான் இன்னொரு முறை பேசிக்காட்டவா?” - மூத்த உதவி இயக்குநர் கேட்டார்.

“வன்மத்துக்கு வன்மம்தான் பதில் என்றால், மிஞ்சுவது யாரோ? மனிதர் வாழ்வில் கருணைக்கும் இரக்கத்துக்கும் இல்லாதுபோகும் மனம் என்ன மனம்? தேவியே... நான் செய்த பிழையை மன்னிக்கத்தான் சொல்கிறேன்; மறக்க அல்ல.”

புருவங்கள், நெற்றியின் எல்லை வரை உயர்ந்து இறங்கும் ஆவேசத்துடன் பேசியவனை மலைத்துப்போய்ப் பார்த்த உதவி இயக்குநர், “உன்னயை என்னவோன்னு நினைச்சேன்ய்யா, போதும்... இது போதும். பிரகாசமா வருவே போ…” எனத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார்.

``கேமராமேன்... டேக் போலாமா?’’ - வாயில் புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டுடன் இங்கும் அங்குமாக நடந்த இயக்குநரின் கழுத்தில் இருந்த வியூ ஃபைண்டர் இடது வலதாக ஆடியது.
``எப்பா... யாராச்சும் ஒருத்தர் போய் ஹீரோயினை வரச் சொல்லுங்க…” - களைத்துப் போன குரலுக்கு கொஞ்சம் வலுசேர்த்துக் கத்திய இயக்குநருக்கு, ஓர் ஆள் நாற்காலி போட்டான்.

அவ்வளவு நேரமும் மங்கலாகத் தெரிந்த மலை, வனம், நீர்நிலைகள், செட் விளக்குகளின் வெளிச்சத்தில் வெவ்வேறு நிறத்தைக் காட்டின. ட்ராலியில் வைக்கப்பட்டிருந்த கேமராவை ஒன்றுக்கு இரண்டு முறை நகர்த்தி எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டிருந்தனர். சற்று முன்னர் மீண்டும் ஒழுங்குசெய்த ஒப்பனையோடு வந்த ஆனந்தி, தான் தயார் எனச் சொல்வதுபோல் பொதுவாக இயக்குநரைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டினாள். அருகில் இருந்த அவளின் மேக்கப்மேன் அவளுக்கு விசிறிக்கொண்டு இருந்தார். பர்மா ராணியின் காதலனான வனராஜா, அவளிடம் மண்டியிட்டு மாலையிட காதலுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். யதார்த்தத்தின் விருப்பம் கதைகளாகும்போது அதன் நிஜத்தோடு சம்பந்தப் பட்டவன் கதாபாத்திரமாவது பாக்கியம் அல்லாமல் வேறு என்ன? அந்தக் காட்சியை எடுத்து முடித்துவிடுவதற்கான பரபரப்புடன் எல்லோரும் வேலை செய்துகொண்டிருக்க, ஒருவன் மலைக்காகப் போடப்பட்டிருந்த செட்டில் சற்றே கரைந்திருந்த வர்ணத்தை மேலாகப் பூசி சரிசெய்தான்.

“யோவ்... இவ்ளோ நேரம் என்னய்யா செஞ்சே? அதெல்லாம் வேணாம், விட்டுட்டு வா… கிளாப் இன், கிளாப் இன்” - கத்திய இயக்குநரின் குரல், “சவுண்ட்… கேமரா… ஆக்‌ஷன்...” - அந்தத் தளம் முழுக்க எதிரொலித்த நொடியில் பர்மா ராணியின் முன்பு மண்டியிட்ட வனராஜா, முகம் முழுவதும் வழிந்தோடிய கண்ணீரோடு காதலைச் சொல்லத் தொடங்கினான். ட்ராலியின் இடது பக்கத்தில் இருந்து கேமரா மெதுவாக நகரத் தொடங்கியது.

“வன்மத்துக்கு வன்மம்தான் பதில் என்றால் மிஞ்சுவது யாரோ? மனிதர் வாழ்வில் கருணைக்கும் இரக்கத்துக்கும் இல்லாதுபோகும் மனம் என்ன மனம்?’’ - ராஜா உணர்ச்சி வெள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் நொடியில், அவனை விலக்கி நடக்கவேண்டி கடந்த பர்மா ராணியின் உடல் மீது, அதிர்ந்து வெடித்தது ஒரு துப்பாக்கிக் குண்டின் சத்தம். எந்த ஒத்திகையிலும் வராத அந்தத் திடீர் மாற்றம் இன்னும் நம்ப முடியாத ஒரு நிஜம் என ஆனந்தி தன்னுடலில் இருந்து வழிந்த குருதியைத் தொட்டுப்பார்த்தாள். அதற்குள்ளாக இன்னொரு குண்டும் வெடிக்க, அது ஜாவேதின் வலது கையில் பட்டுத் தெறித்தது. கேமரா இயங்கிக்கொண்டிருப்பதையும் மறந்து எல்லோரும் உறைந்துபோயிருந்தனர்.

படப்பிடிப்புத் தளத்தின் சுவர்கள் எங்கும் எதிரொலித்த ஜாவேதின் அலறல், பர்மா ராணிக்காக அல்ல, ஆனந்திக்காகவும் தனக்காகவும்.

நடந்த விபரீதம் புரியாமல் எல்லோரும் இங்கும் அங்குமாக ஓடியபோது இயக்குநரின் நாற்காலிக்குப் பின்னால் அத்தனை நேரமும் மறைந்திருந்து துப்பாக்கியோடு வெளிப்பட்டிருந்த முத்தப்பா, உடல் அதிர நின்றுகொண்டிருந்தான். அவன் குறிவைத்தது அவளை அல்ல. ஜாவேதைச் சுடவே, அந்தத் துப்பாக்கியை இத்தனை நாட்களாகக் காத்துவந்திருந்தான். ஆனால், இப்போது எல்லாம் பிசகாகிவிட்டது. ஜாவேதைச் சுடுவதற்கு முன்னர் வரையிலும் அவன் மீதான வன்மம் சிறிதும் குறையவில்லை. குண்டு மாறி உடன் நடித்த ஆனந்தியின் மீது பட்டபோது அப்படியே நிறுத்தாமல் இன்னொரு முறை சுட, அந்தக் குண்டு ஜாவேதின் வலது கையில் பட்டது. தனக்கு முன்னால் மனிதர்களின் அலறலைக் கேட்ட பிறகு அவனுக்குள் இருந்த வன்மம் காணாமல்போய் அச்சம் பரவியது. இதை, தான் செய்திருக்கவே கூடாது என மனம் வலிக்க, இனி தான் மன்னிப்புக் கேட்பது என்றாலும் முடியாது என்பது புரிய, அங்கு இருந்து தப்பித்தான்.

ஆனந்தி இறந்துபோனதும், `பர்மா ராணி’ படம் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்வதால் இனி அது வெளியாகப்போவது இல்லை என்பதும் செய்தித்தாள்களின் வழியே அறிந்தான். முத்தப்பா, தனது அடையாளங்கள் எல்லா வற்றையும் மாற்றிக்கொண்டான்.

தமிழ் சினிமா நேற்றின் விழா – ஒரு மழை நாளின் மாலை.

முற்றிலும் மாறிப்போயிருந்த இந்த நகரில் கடந்த காலத்தின் சுவடுகள் எதையும் அவரால் பார்க்க முடியவில்லை. எந்த இடத்திலும் தன்னைப் பொருத்திக்கொள்ள விரும்பாது நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்கு பேத்தியுடன் வந்து சேர்ந்தார். பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த வினோத், அவரைப் பத்திரமாக ஓர் அறையில் அமர வைத்தான். அந்த அறையின் இன்னொரு மூலையில் கண்ணாடிக்கு முன்பாக சிலர் ஒப்பனை செய்துகொண்டிருந்தனர். கலை நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தம். கண்ணாடியையும் அதற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்தபடியே இருந்தவர், மெதுவாக எழுந்துசென்று அவர்களுக்குப் பின்னால் நின்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டார். 

87 வயதின் முதுமை அவ்வளவும் மறைந்து கடைசியாக ஒப்பனை போட்டிருந்த 23 வயது மனிதன், அவருக்குள் தனக்கான வசனங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டான். கை தானாகவே சென்று பிரஷ்ஷை எடுத்து, பேன் கேக்கின் மீது பரவி முகத்தில் ஒப்பனை போடத் தொடங்கியது. ஒப்பனை போட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் ஆச்சர்யமாகப் பார்க்க, அவரை அழைத்துப்போக வந்த வினோத் கண் இமைக்காமல் பார்த்தான்.

ஒப்பனை முடிந்ததும் அவராகவே திரும்பி “போலாமா தம்பி?” எனச் சிரித்தபோது, புதிய மனிதராகத் தெரிந்தார். வினோத்தைத் தொடர்ந்து ஓர் அரங்கத்துக்குள் நுழைந்தார். நிறையப் பேர் அவருக்காகக் காத்திருந் தார்கள். அரங்கத்தின் இரண்டு பக்கங்களிலும் அவரின் பழைய புகைப்படங்கள் ராஜா வேடத்தில் அலங்கரித்து இருந்தன.

மேடையில் அமர்ந்தபோது இந்த நாள் 1948-ம் ஆண்டில் கடந்த ஒரு நாளாக இருந்திருக்கலாமோ என மனம் தவித்தது. மேடையில் பேசிய ஒவ்வொருவரும் அவரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்ததை, தெரியாததை எல்லாம் பேசிய பின்னர், அவரை சில வார்த்தைகள் பேச அழைத்தனர். உடல் முழுக்க முன்னெப் போதும் இல்லாத பரவச உணர்வு. நடையில் இருந்த தளர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மைக்கின் முன்னால் சென்றவருக்கு அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் வார்த்தை எழவில்லை.

“இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் என்னைய ஒரு நடிகன்னு நினைவுபடுத்தி யிருக்கீங்க. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. லாகூரைவிட்டு வரும்போது என்கிட்ட எதுவும் இல்லை. மெட்ராஸ்தான் எல்லாத்தையும் குடுத்தது. குடுத்த வேகத்துலயே எல்லாத்தையும் எடுத்துக் கிச்சு. இப்ப இந்தச் சந்தோஷத்தையும் இந்த ஊருதான் குடுக்குது. உங்க எல்லாருக்குமே நன்றி. உங்களை மாதிரியே நானும் படத்தைப் பார்க்கணும்னுதான் ஆசையா இருக்கேன். வணக்கம்.''

தனது இருக்கையில் சென்று அமரப் போனவருக்கு, மாலை மரியாதை செய்து நினைவுப்பரிசு வழங்கினர். அவர் மனம், படம் பார்க்கக் காத்திருக்கும் ஆவலில் தவித்தது.

விளக்குகள் அணைக்கப்பட்டு, படம் ஓடத் தொடங்கியது. சீனிவாசா சினி டோன் வழங்கும் `பர்மா ராணி’ என டைட்டில் போடப்பட்டபோது அரங்கம் முழுக்க எழுந்த கைதட்டல்களைக் கண்கள் மூடியபடி கேட்டார். அத்தனை வருடத் துயரங்களை, இந்தச் சில நொடிகள் அவரிடம் இருந்து மீட்டுக்கொண்டன. முன்வரிசையில் அமர்ந்து இருந்தவரைத் தேடிவந்த வினோத், குடிக்க தண்ணீர் கொடுத்தான்.

அவன் கைகளைப் பிடித்துக்கொண்டவர் “எனக்காக நிறையச் சிரமப்பட்டுட்டப்பா… உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இனி நான் நிம்மதியா சாவேன்.”

அவரின் கைகள், இயல்பைவிட அதிகமாக நடுங்கின. வினோத் வெறுமனே புன்னகைத்தான். நாம் செய்யும் சில செயல்களுக்கான காரணங்களையோ பிரதிபலன் களையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கத் தொடங்கினான்.

திரையில் படத்தின் முதல் காட்சி ஓடத் தொடங்கியது. அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்த முத்தப்பா, தனது வசனங்களை பெண்மையான குரலில் பேசியதைக் கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். வினோத், திரும்பி திரையைப் பார்த்தான். கண்களில் இருந்து நீர் கசிந்தது. இந்த நிமிடத்துக்காகத்தானே இந்த அலைச்சல், காத்திருப்பு, துயரம். இரண்டு தலைமுறைகளாகக் காத்திருப்பது அந்த ஒரு வார்த்தைக்காகத்தானே! இருளுக்குள், காற்றுக்கும் வலிக்காமல் கையை மெதுவாகக் கொண்டுபோய், முதுகில் இருந்து பழைய துப்பாக்கி ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

மிகப் பழையது. துரோகத்தின் வலியை காலங்காலமாகக் குடித்து, துருவேறியத் துப்பாக்கி. அந்தரங்கமாக ஜாவேதுக்கும் அவனுக்குமான உறவுக்கான அடையாளம். கையில் வாங்கிப் பார்த்தவரின் மனம் படபடக்க, தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் இளைஞனின் முகத்தில் கடந்த காலத்தின் சாயல்களைத் தேடினார்.

p90d.jpg“உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கணும்னு தாத்தா சாகிற வரை சொல்லிட்டிருந்தார். முடியலை. ஒரு கொலை பண்ணிட்டு, எல்லா அடையாளங்களையும் மாத்திக்கிட்டு கடைசிக் காலம் வரைக்கும் ஒளிஞ்சு ஒளிஞ்சுதான் வாழ்ந்தார். நீங்க அதுக்கு அப்புறம் நடிக்கவே இல்லை. தாத்தா கடைசி காலம் வரைக்கும் நாடகத்துல ராஜபார்ட்டாவே நடிச்சார். ஒவ்வொரு நாள் நாடகம் முடிஞ்சு வேஷம் கலைக்கிறப்பவும் உங்ககிட்ட தோத்துப்போன வேதனையோடுதான் வேஷத்தைக் கலைச்சார். மன்னிப்புக் கேட்கிறதுக்காக உங்களைத் தேடினோம். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நான் கண்டுபிடிச்சிட்டேன். மன்னிக்கிறதும் தண்டிக்கிறதும் உங்க விருப்பம்.”

திரையில் முத்தப்பாவின் காட்சி முடிந்துபோனது. ஜாவேத், அவனது கைகளைப் பிடித்துக்கொண்டார். நெற்றியில் முத்தமிட்டார். அவர் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்த வினோத், முகத்தை படம் ஓடிக்கொண்டிருந்த திரையின் பக்கமாகத் திருப்பிக்கொண்டான். அங்கு வனராஜா தன் காதலியைத் தேடி பர்மிய தேசத்துக்குள் நுழைந்துவிட்டான்!

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு நன்றி நவீனன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.