Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுலாப் இன்டர்நேஷனல் - சிறுகதை

Featured Replies

சுலாப் இன்டர்நேஷனல் -

 

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: செந்தில்

 

சின்னாரு, தன் அடிவயிறு கனத்திருந்ததை உணர்ந்தாலும், தூக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் புரண்டு படுத்தான். ஆனாலும், அடிவயிற்றின் அலப்பறை தூக்கத்தைக் கலைத்துப்போட்டது. இனியும் தாமதித்தால், டவுசரிலேயே பேர்வாதி முடிந்துவிடும் அபாயத்தை உணர்ந்தவனாக ஓட்டம் பிடித்தான். விவரம் தெரிந்ததில் இருந்து சின்னாருக்கு எப்போது எல்லாம் அடிவயிறு கனத்துவிடுகிறதோ, அப்போது எல்லாம் இப்படித்தான் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கும் சுலாப் இன்டர்நேஷனலுக்கும் டவுசரைப் பிடித்தபடி ஓடுவான்.

இப்போதும் அப்படித்தான். வீட்டில் இருந்து இருநூறு அடி தூரத்தில் பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. தன் ஜோட்டுக்காரன்களின் வீட்டில் எல்லோரும், தனி கக்கூஸ் கட்டிவிட்டதால், இவனோடு போன வாரம் வரை டவுசரைப் பிடித்துக்கொண்டு ஓடிவந்த ஆறுமுகமும் இல்லாமல், தன்னந்தனியாக விடப்பட்டதில் சின்னாருக்கு ஏக வருத்தம்தான். இதன் நிமித்தமாக அம்மாவோடு நிறையச் சண்டைகள் போட்டுப்பார்த்தான். சில வேளை சாப்பிடாமலும் அடம்பிடித்தான்.

70p3.jpg

“சின்னாரு, கொஞ்சம் பொறுத்துக்கடா. இன்னும் மூணு சீட்டுத்தான். உனக்குப் புடிச்ச டிசைன்ல கக்கூஸ் கட்டிடலாம்டா” என அவனுக்கு ஒரு கவளத்தை ஊட்டினாள் அம்மா. இனியும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற காரணத்தால், வேண்டாவெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு அம்மாவின் கைப்பிடிச் சோற்றை வாயில் போட்டுக்கொண்டான்.

அம்மாவும் அக்காவும் மம்மது மாமா வீட்டில் கடன்களை முடிக்க அனுமதி உண்டு. சின்னாருக்கும் மாமா வீட்டில் உரிமை இருக்கிறதுதான். ஆனால், அவன் போக மாட்டான். யார் வீட்டிலும் கடன்களை முடிப்பது இல்லை என்ற தீர்மானத்தில் இருந்தான். கக்கூஸ் போனால் அது தனது சொந்த வீட்டு கக்கூஸாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதுவரை சுலாப் இன்டர்நேஷனலே போதும் என்பது அவனது எண்ணம்.

டல் சிலிர்த்து, மயிர்கள் கூச்செரிந்து, சின்னாரு சுலாப்பை நெருங்கியபோது பென்சிலையா மாவாவை வாயில் போட்டபடி அவனிடம், “உள்ள வெயிட்டிங் பத்து பேரு… நூவு பதகொண்டு” எனச் சிரித்தார்.
சின்னாருக்கு வந்த கோபத்தில் ஓர் எத்து விடலாம் என்றால், கால் வழியாக ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ற பயம். பென்சிலையாவை முறைத்தபடியே கழிவறைக்குள் நுழைந்தான். குமார் அண்ணாச்சி, கையில் சொக்கலால் பீடியை வைத்துக்கொண்டு பற்றவைக்காமல், ஏதோ போருக்குப் போவதைப்போல மூடியிருந்த கதவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சின்னாருவைப் பார்த்ததும், “ஏல சின்னாரு… உங்க அம்மா அரிசி பாக்கி 25 ரூபாய் குடுக்கணும். வீட்டுக்குப் போனதும் ஞாபகப்படுத்துவியா?’’ எனக் கேட்க, சின்னாருக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு என்ன சொல்வது எனத் தெரியாமல், அண்ணாச்சியை மலங்க மலங்கப் பார்த்தான். விடாமல் அண்ணாச்சி, “ஏல... நா சொல்றது விளங்குதா?” என முறைத்தார். பக்கத்தில் நின்ற ஒருவன் டமார் என டவுசர் கிழிந்து பட்டாசு கிளப்ப, சின்னாரு, அண்ணாச்சியைப் பார்த்துச் சிரித்துவிட்டான்.

அண்ணாச்சிக்கான கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து ஒருவன் அவ்வளவு புத்துணர்ச்சியாக இந்த உலகத்துக்குள் வந்தான். அண்ணாச்சி உள்ளே போனதும் அவர்  இடத்தை  சின்னாரு கைப்பற்றிவிட்டான். அண்ணாச்சியின் அலப்பறை, கதவின் இடுக்கில் வெளியேறி பென்சிலையா வரை போய்விட்டதுபோல.

“ஏய் கொடுக்குகளா… நீலு பொய்யண்டிரா. கப்பு தாங்கல” எனக் குரல்கொடுத்தார். சின்னாருக்கு உடம்பு சிலிர்த்து, கண்களில் இருந்து நீர் கசிய ஆரம்பித்தது. அவனது சிந்தனையில் இந்த உலகமே ஒரு பெரிய கழிவறையாக மாறிவிட்டதாகவும், அதில் எப்போது வேண்டுமானாலும் மிகவும் சுதந்திரமாக, கதவு தட்டல்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியாக இந்தச் சரீரத்தின் ஆதாரக் கடன்களை முடிப்பதாக ஒரு நினைப்பு வந்துபோனது. அண்ணாச்சி, ஜலக்கிரீடைக்கு வந்திருப்பது உள்ளிருந்து வந்த சத்தத்தில் உறுதியானது.

70p1.jpg

சின்னாருக்கான கதவு திறந்தது. இப்போது அண்ணாச்சி, அவன் கண்களுக்கு கடவுளாகக் காட்சி தந்தார். அண்ணாச்சி, புத்துணர்வு பெற்றவராக சின்னாருவைப் பார்த்து, “ஏல... அந்தப் பாக்கி. மறந்துடாதல!” என டவுசர் தெரியும்படி போனார். இப்போது அவரைப் பார்த்த சின்னாருக்கு, கோபம் வரவில்லை. கதவைத் திறந்த கடவுள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதாகச் சிரித்துக்கொண்டே உள்நுழைந்து தாழிட்டுக்கொண்டான்.

உட்காரும் இடத்தைத் தவிர, நைந்துபோன பெயின்ட் டப்பா வைக்கும் அளவுக்கான ஒரு சிறிய இடம். ஒருதடவை பென்சிலையாவிடம் இதுபற்றி கேட்டபோது, ``உள்ள போயி குடும்பமா நடத்தப்போற? `அது’க்கு அவ்ளோ இடம் போதும்டா!'’ என அவன் வாயை அடைத்துவிட்டார்.

உட்கார்ந்தவன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். மனிதர்களின் பாலியல் வறுமைக்கோட்டுச் சித்திரங்கள் அவனை உற்றுப்பார்த்தன. பார்க்காததுபோல தலையைக் கவிழ்த்துக்கொண்டான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உட்கார்ந்து சரியாக மூச்சுகூட விடவில்லை, அதற்குள் கதவைத் தட்டினால் சின்னாரு என்னதான் செய்வான். தலையில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பதுபோல அவனுக்குக் கேட்டது. ஆனாலும் இன்னொரு வனுக்குக் கதவைத் திறந்து, தான் கடவுள் ஆகும் சமயம் வந்துவிட்டது என அமைதிகொண்டான்.

வெளியே வந்த சின்னாரு, பென்சிலையாவைப் பார்த்தான். அவர் இரண்டு லோட்டாக்களில் தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தார்.

“ஏய் கொடுக்கு... டீ தீஸ்கோரா!” என ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்.

சின்னாரு, தேநீரை எடுத்துக்கொண்டு ஒரு மடக்கு குடித்தான்.

“உன் தோஸ்த் ஆறுமுகம் எக்கட்ரா? ஆளையே காணோம்!” என்றார் பென்சிலையா.

சின்னாரு சோகமாக, “அவன் இனிமே வர மாட்டான் பென்சிலு” என்று தேநீரைக் குடித்தான்.

“ஏன்டா, ஒல்லுக்கு கில்லுக்கு ஏதாவது நோவா?” - முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல பென்சிலு. அவங்க சொந்தமா ஒரு கக்கூஸ் கட்டிட்டாங்க. அதான்…” என்றான்.

“ஓ… அதி சங்கதியா? அவங்கோ அம்மா வெவரங்கொடுக்குடா சின்னாரு. ஆமா... நீங்கோ எப்போ கக்கூஸ் கட்டப்போறீங்கோ?” - இப்படி பென்சிலையா கேட்டதும், சின்னாருவுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல், தேநீர் லோட்டாவை அப்படியே வைத்துவிட்டுக் கிளம்பினான். பென்சிலையாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏய் சின்னாரு… சின்னாரு… ஆகுரா…” எனக் கத்திப்பார்த்தார். சின்னாரு, திரும்பாமல் விர்ரென நடந்து சென்றுவிட்டான்.

பென்சிலையா கேட்டது, சின்னாருக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது. இனி `சுலாப்’ என்ற பட்டப்பெயர் தனக்கு மட்டும்தான் என நினைத்தபோதே, அவனுக்குக் கொலைவெறி வந்தது.

குழாயடியில் இவன் ஜோட்டுப்பயல்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான். ஆறுமுகம் நின்றிருந்தான். இப்போது எல்லாம் ஆறுமுகத்தின் முகத்தில் ஏதோ ஒரு கௌரவம் ஒட்டிக்கொண்டிருப்பது சின்னாருக்குப் பிடிக்கவில்லை. கண்டுகொள்ளாமல் அவர்களைக் கடந்தான்.

“இன்னா சுலாபு… காத்தாலயே பொங்கல் வெச்சுட்டு வர்றபோலகுது...” எனக் கலாய்த்தான் மாறன்.

எல்லோரும் சிரித்தார்கள். ஆறுமுகமும் சிரித்தான். இப்படி எப்போதும் அவர்கள் கிண்டலடித்துக்கொள்வது வழக்கம்தான். ஆனால், இப்போது இவர்கள் இப்படிச் சொல்லிச் சிரித்தது, தன்னை முற்றிலும் நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் நிற்கவைப்பதுபோல் உணர்ந்தான் சின்னாரு. அதுவும் ஆறுமுகம் சிரித்ததை, அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. நேராகச் சென்று ஆறுமுகத்தின் தாவாவில் ஒரு குத்து விட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத மாறனும் நேருவும் நிலைகுலைந்து நின்றார்கள். குத்து வாங்கி விழுந்த ஆறுமுகம், வீறுகொண்டு எழுந்து சின்னாருவை ஓர் எத்து விட்டான். மாறனும் நேருவும் இருவரையும் மடக்க முயற்சித்தார்கள். பேட்டையில் சில பெருசுகள் வந்து, மடக்கி அனுப்பும் அளவுக்கு சண்டை நிற்கவில்லை. ஆறுமுகத்தை மாறனும் நேருவும் கூட்டிச்சென்றார்கள். சின்னாரு, ஆறுமுகத்தை முறைத்தபடியே திரும்பி நடந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், சின்னாரு கலைந்த கேசத்தைச் சரிசெய்துகொண்டான். அம்மா, சங்கரா மீனை ஆய்ந்துகொண்டிருந்தாள்.

“ஏய் சின்னாரு… அக்கா கக்கூஸ் போவுணுமா. தண்ணி வாளியை எடுத்துக்கினு போயி மாமா வீட்டுல வையி…” எனச் சொன்ன அம்மா, சின்னாருவுக்கு மீனின் சினை பிடிக்கும் என தனியாக ஒரு சட்டியில் போட்டுவைத்தாள்.

“அதெல்லாம் எடுத்து வைக்க முடியாது. அதுக்கு கை இல்ல? எடுத்துக்கினு போ சொல்லு. இல்ல நீ எடுத்துக்கினு போ. என்னாண்டலாம் சொல்லாத!” என்றவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

மீன் ஆய்வதை நிறுத்திவிட்டுக் கோபம் வந்தவளாக, “பெரிய கலெக்டரு. தண்ணி எடுத்துக்கினு போய் வைக்க மாட்டாரு… பொட்டப்புள்ள தண்ணி வாளியை வெளிய  எடுத்துக்கினு போனா கூச்சமா இருக்காது? ஒழுங்கு மரியாதையா எடுத்துக்கினு போயி வை. இல்ல... மத்தியானம் சோத்துக்கு வீட்டுப் பக்கம் வந்துராத” எனச் சொன்ன அம்மா, முதல் அலசலில் இருந்த மீனை இரண்டாவது அலசலுக்கு மாற்றினாள்.

“ஏன்... எனக்குக்கூடத்தான் டவுசரைப் புடிச்சிக்கினு, காலங்காத்தால ஓடுறது கூச்சமா இருக்கு” - முகத்தில் ஆறுமுகம் கொடுத்த நகக் கீறலுக்கு, தேங்காய் எண்ணெய்யைத் தொட்டு வைத்துக்கொண்டான்.

“அடி செருப்பால, இம்புட்டுக்கானும் இருந்துகினு, கூச்சம் வந்துடுச்சோ! எங்கே இருந்து கத்துக்கினு வர்ற? ஆங்…” - கையில் கிடைத்த ஈயச் சட்டியைத் தூக்கி அடித்தாள் அம்மா.

70p2.jpg

அக்காவின் முகத்தில் சிலிர்த்த ரேகைகள் படரத் தொடங்கின. தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு மம்மது மாமா வீட்டுக்குப் போவது என முடிவு எடுத்தாள்.

“அம்மா... சும்மா கத்திக்கினு இருக்காத. நானே தூக்கினு போறேன்” என, தண்ணீர் வாளியைத் தூக்கினாள்.

சின்னாருவுக்கு என்னவோ மனசு கேட்கவில்லை. விருட்டென வந்தவன், தண்ணீர் வாளியைப் பிடுங்கினான்.

அக்காவைப் பார்த்து, “வாளியை வெச்சுட்டு வந்து சொல்றேன். அப்புறமா போ” என, தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு போனான்.

அம்மா, சின்னதாகச் சிரித்தபடி சின்னாருக்குப் பிடிக்கும் என மீனின் தலையை, மீன் சினை வைத்த சட்டியில் வைத்தாள்.

ன்று வெள்ளிக்கிழமை என்பதால், `ஒலியும் ஒளியும்’ பார்ப்பதற்காக அக்கா பிரத்யேகமாகத் தயாராகிக்கொண்டிருந்தாள். மம்மது மாமா வீட்டில் நாலணா கொடுத்துப் பார்க்க அனுமதி உண்டு. ஆனால், சின்னாருக்குக் கட்டணம் கிடையாது. அவன் மாமாவின் செல்லப்பிள்ளை. இரவு 8 மணி ஆனதும் ஒரு ஜமாவாக எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். மாமா நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார்.

‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...’ எனத் தலைவர் பாட ஆரம்பித்தார். அதற்கு அந்தக் கதாநாயகி ‘சந்தித்தால்’ எனக் கொஞ்சலாக உருகினார். அக்காவும் ‘சந்தித்தால்’ எனப் பாவனைகொண்டதை சின்னாரு பார்த்தான். தண்ணீர் வாளிக்காக அக்காவை மிகவும் புண்படுத்தியதாக நினைத்துக்கொண்டான். ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...’ நடிகர் திலகம் பாட ஆரம்பித்ததும்,  மாமா உற்சாகம் கொண்டார். அந்தப் பாடல் முடியும் வரை அவர் ஒரு டி.எம்.எஸ்-ஸாகவே மாறியிருந்தார்.

விடிந்தது. சின்னாரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பேட்டையே பரபரப்பானது. `மம்மது மாமா இறந்துவிட்டார்!' என்ற செய்தியை சின்னாருவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மாமா கிடத்தப் பட்டிருந்தார். சில பெரியவர்கள் பக்கத்தில் அமர்ந்தபடி குர்ஆன் ஓதினார்கள். அமைதியாகப் படுத்திருக்கும் மாமாவைப் பார்த்தவன், வீட்டுக்கு வந்தான். மாமா இறந்துபோனதைவிட வேறு ஒரு சிந்தனை அவனை வெகுவாக ஆட்கொண்டுவிட்டது. `இனி அம்மாவும் அக்காவும் எங்கே கக்கூஸ் போவார்கள்?’ எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

அவன் நினைத்ததுபோலவே சில நாட்களில் பீவி மாமியும், தனது சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லி அம்மாவிடம் விடைபெற்றார். அம்மாவும் மாமியும் கட்டிப்பிடித்து அழுதார்கள்.

சின்னாரு, புத்தகப் பையை ஆணியில் மாட்டிவிட்டு, அடுக்களையில் இருக்கும் சோற்றுப்பானையில் இருந்த சோற்றைப் போட்டு, மீன் குழம்பை ஊற்றிக்கொண்டான். ஒரு கவளத்தை வாயில் போட்டவன் அம்மாவின் ஞாபகம் வர, “அம்மா எங்கே போயிருக்குது?” என அக்காவிடம் கேட்டான்.

“பக்கத்துலதான் போயிருக்குது. இப்ப வந்துரும்” - அக்கா எழுதுவதில் மூழ்கினாள்.

அம்மா வந்தாள், கூடவே இரண்டு நபர்கள் சில பொருட்களைச் சுமந்துகொண்டு வந்தார்கள். ஒரு மீன்பாடி வண்டியில் செங்கற்களும் சிமென்ட் மூட்டைகளும் வந்து இறங்கின. சின்னாருக்கு ஒன்றுமே புரியவில்லை. அம்மாவிடம் கேட்டபோது, “நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டப்போறோம்டா” எனச் சொல்லி விட்டு மேஸ்திரியிடம் ஏதோ பேசினார். சின்னாருவுக்கு தலைகால் புரியவில்லை.

“அம்மா நெசமாவா சொல்ற?” எனக் கேட்டான்.

“உன் மேல சத்தியமா!” என்று அம்மா சின்னாருவின் தலையில் கை வைத்தாள்.

அவனுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. நேராக பென்சிலையாவிடம் ஓடினான். பென்சிலையா, உள்ளே இருந்து வருபவரிடம் காசு வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டிருந்தார்.

“ஏமிரா கொடுக்கு... வயிறு கலக்கிருச்சா, உள்ள போ… ஃப்ரீயாத்தான் இருக்குது” என்றார்.

சின்னாரு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து “பென்சிலே... எங்க வீட்டுல கக்கூஸ் கட்டுறாங்கோ. அதான் உன்னாண்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றவனுக்கு, சந்தோஷத்தில் முகம் பூரித்தது.

“ம்… ஆறுமுகம் மாதிரி இனிமே நீயும் இக்கட வர மாட்டல சின்னாரு?”

“ஆமாமாம்... இனிமே வர மாட்டேன். ஆனா, உன்னைப் பார்க்க வருவேன். வரட்டா பென்சிலு.”

பென்சிலையா சிரித்துக்கொண்டார்.

வீட்டுக்கு நடந்தவன், வழியில் மாறனைப் பார்த்தான்.

“டேய் மாறா… இனிமே நானும் சொந்த வீட்டு கக்கூஸ்காரன்தான். யாராவது சுலாபு கிலாபுனு கூப்பிட்டிங்கோ... மவனே பேஜாராய்டுவீங்கோ!” எனக் கித்தாப்புடன் மாறனைக் கடந்து சென்றான்.

வெள்ளை நிற கக்கூஸ் பேசனையும் கால் வைக்கும் பீங்கானையும், பதிப்பதற்காக மேஸ்திரி வெளியே எடுத்துவைத்தார். சின்னாரு அந்தப் பீங்கானை மிகுந்த வாஞ்சையோடு தடவிப்பார்த்தான். அவனுக்குக் கண்ணீர் வந்தது.

இரவு படுக்கும் முன் அம்மா சொன்னாள், “இனிமே என் புள்ளீங்க எங்கேயும் வவுத்தைப் புடிச்சிக்கினு நிக்க வேணாம். சின்னாரு... காத்தால நீதான் பஸ்ட் போகணும்... சரியா?” என்றபோது சின்னாருவின் அப்பா பெருமையாகப் பீடியை இழுத்துக்கொண்டார்.

எப்படிப் புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை சின்னாருவுக்கு. கண்களை விழித்துப் பார்த்தான். தான் அசந்து தூங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தான். அம்மா கக்கூஸின் வாயிலில் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி சின்னாருவைப் பார்த்து, “ஏய் சின்னாரு... தண்ணி எடுத்து வெச்சுட்டேன் போ” என நகர்ந்தாள்.

சின்னாரு, தனது சொந்த வீட்டு கக்கூஸில் நுழைந்தான். கதவைத் தாழிட்டான். விசாலமாக இருந்தது. சிமென்ட் ஜன்னல் வைத்து காற்றோட்டமாகக் கட்டப்பட்டிருந்தது. அம்மா ஏற்றிவைத்த ஊதுபத்தியின் புகை கதவு இடுக்கில் சன்னமாக நுழைந்து, வாசனை மிகுந்த கழிவறையாக மாறியது. வாழ்வில் முதல்முறையாக தனது சொந்த கக்கூஸில் சின்னாரு உட்கார்ந்தான். எந்தக் கதவுத் தட்டல்களும் இல்லை. சுவர் சித்திரங்களின் வன்மம் இல்லை. பீடி புகையோ, நாராசங்களோ இல்லாத அவனுக்கான கழிவறையில் நெடுநேரம் உட்கார்ந்தும், எதுவும் நடக்காததுதான் ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை!

http://www.vikatan.com/anandavikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.