Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்!

Featured Replies

சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்! - சிறுகதை

எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

75p1.jpg

``உலகத்துல இருக்கிற பூவுலேயே எதும்மா பெருசு?'' என, அடுப்படிக்குள் நுழைந்த ரம்யா கேட்டாள்.

முகத்தில் வெக்கை வீசக் கடுகைத் தாளித்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலான குரலில் சொன்னாள்... ``தாமரை.''

``இல்லம்மா. `சூரியகாந்திப் பூ'னு கிருஷ்ணவேணி சொல்றா'' என்றாள் ரம்யா.

``அதுக்கு என்னடி இப்போ?'' எனச் சலிப்புடன் கேட்டாள் பார்வதி.

``ஏன்மா, சூரியன் பின்னாடியே சூரியகாந்திப் பூ போய்க்கிட்டே இருக்கு?''

``அது சூரியனோட பொண்டாட்டி. அதான் பின்னாடியே போய்க்கிட்டு இருக்கு, போதுமா?'' என்றபடியே அடுப்பைத் தணித்தாள்.

அம்மாவின் சிடுசிடுத்த பதிலில் வருத்தம் அடைந்தவள்போல ரம்யா சொன்னாள்,

``நீ பொய் சொல்றே!''

``ஏண்டி இம்சை பண்றே, உனக்கு என்ன வேணும்?'' எனக் கோபமாக மகளைத் திரும்பிப் பார்த்தாள் பார்வதி.

``ஒண்ணுமில்லை போ!'' என முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ரம்யா.

ரம்யாவுக்கு வயது ஒன்பது. நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை. ஆள் நறுங்கிப்போயிருக்கிறாள். இரண்டு இட்லிகள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரமாகிறது. கழுத்தில் வெளிறிய பாசிமாலை. கையில் ரப்பர் வளையல். ஒழுங்காக ஜடைகூடப் போடத் தெரியவில்லை. ஆனால், தானாக போட்டுக்கொள்வேன் என்ற பிடிவாதம் மட்டும் குறையவில்லை.

ரம்யாவைச் சமாதானம் செய்யும்விதமாக, தேங்காய் சில்லில் ஒரு துண்டை எடுத்து நீட்டினாள் அம்மா. அவள் வாங்கவில்லை.

``வாங்குடி!'' என அழுத்தமாகச் சொல்லவே, கையை நீட்டி வாங்கிக்கொண்டாள்.

``உன் தங்கச்சி எங்கே?''

``விளையாடப் போயிருக்கா'' என்றபடி தேங்காய் சில்லைக் கடித்த ரம்யா, பிறகு தயங்கித் தயங்கி சொன்னாள், ``நாளைக்கு அய்யா ஊர்ல இருந்து வரும்போது நானும் நிதர்சனாவும் ஆளுக்கு ஒரு சூரியகாந்திப் பூவை வெச்சுக்கிட்டு, வாசல்ல நின்னு வரவேற்கப்போறோம்.''

``அதெல்லாம் ஒண்ணும் வேணாம். என்னடி இது புதுப்பழக்கம்?'' என முறைத்தாள் பார்வதி.

``டிவி-யில பார்த்திருக்கேன். ஃபாரின்ல இருந்து வர்றவங்களுக்குப் பூங்கொத்து குடுப்பாங்க. நாமளும் அப்படிக் குடுத்தா என்னம்மா?'' எனக் கேட்டாள் ரம்யா.

``உங்க அய்யாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவரு ஒரு முசுடு'' என்றபடியே கரைத்துவைத்த புளியை, அடுப்பில் இருந்த சட்டியில் ஊற்றினாள் பார்வதி.

ரம்யா ஆதங்கமாகக் கேட்டாள், ``அய்யா எப்பம்மா வருவாரு?''

``ஃப்ளைட்டு காலையில 4 மணிக்கு திருச்சி வந்துடும். டாக்ஸி பிடிச்சு நம்ம ஊருக்கு வர்றதுக்கு எப்படியும் 9 மணி ஆகிடும்.''

``நாளைக்கு நான் பட்டுப்பாவாடை கட்டிக்கிடவா?'' எனக் கேட்டாள் ரம்யா.

``அதெல்லாம் ஒண்ணும் வேணாம். உனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு. போய்ட்டு, சாயங்காலம் வந்தா போதும். அதுக்குள்ளே உங்கய்யா வந்திருப்பாரு.''

``நாளைக்கு ஒருநாள் மட்டும் லீவு போட்டுக்கிடுறேன்மா. அய்யா நிறைய விளையாட்டுச் சாமான், சாக்லேட், பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு வருவாரு. நான் சாக்லேட் தின்னுக்கிட்டே விளையாடுவேன். அதனால ஸ்கூலுக்குப் போக மாட்டேன்'' என்றாள் ரம்யா.

`சின்னப்பிள்ளைதானே, இத்தனை நாள்களாக அய்யாவைப் பிரிந்த ஏக்கம் இருக்கத்தானே செய்யும்!' என உணர்ந்தவள்போல, ``எப்படியோ போய்த்தொலை!'' என்றாள் பார்வதி.

ஆறு வயதான நிதர்சனா, அடுப்படிக்குள் வந்து ரம்யாவிடம் சொன்னாள், ``சூரியகாந்திப் பூ எங்கே இருக்குனு கண்டுபிடிச்சுட்டேன்.''

``எங்கடி இருக்கு?''

``ரைஸ்மில் பின்னாடி ஒரு கோட்டைச்சுவர் இருக்குல்ல... அங்கே இருக்கு'' என, கையைக் காட்டினாள் நிதர்சனா.

75p2.jpg

``நிஜமாவா?''

``கிட்டபோய்ப் பார்த்துட்டு வந்தேன். நிறைய இருக்கு'' என உற்சாகமாகச் சொன்னாள் நிதர்சனா.

``அங்கே ஒரே முள்ளா கிடக்கும். அதுக்குள்ளே ஏண்டி போனே?'' என, மகளைக் கோபித்துக்கொண்டாள் பார்வதி.

ரம்யா அருகில் போய், நிதர்சனாவின் தோள் மீது கை போட்டபடி ரகசியம் பேசுவதுபோல் சொன்னாள், ``இப்பவே போய், பூவைப் பறிச்சு வெச்சுக்கிடலாமா?''

``வாடிப்போயிட்டா!'' எனக் கேட்டாள் நிதர்சனா.

``அப்போ காலையில எந்திரிச்சவுடனே பறிச்சுக்கிடலாம். இப்போ சும்மா போய்ப் பார்த்துட்டு வருவோமா?''

நிதர்சனா தலையாட்டினாள். இருவரும் வெளியே நடந்தார்கள்.

அம்மாவின் குரல் சத்தமாகக் கேட்டது,

``எங்கடி போறீங்க? கை காலைக் கழுவிட்டு வந்து படிக்க உட்காருங்க.''

அதைக் கேட்டும் கேட்காதவர்கள்போல ஓடத் தொடங்கினார்கள். சூரியன், மேற்கில் சரிந்துகொண்டிருந்தது. அதற்குள் கூடு அடைய, பறவைகள் அரசமரத்துக்கு வந்து சேர்ந்திருந்தன. கிளைகள் எங்கும் ஒரே கீச்சொலி.

இரண்டு சிறுமிகளும் பறவைகளின் குரலை ரசித்தபடி ரைஸ்மில்லை ஒட்டிய இடிந்த கோட்டைச்சுவரை நோக்கி நடந்தார்கள். வேலிப்புதர்களைத் தாண்டினால் எங்கும் தும்பைச் செடிகள். அதைச் சுற்றி அலையும் வண்ணத்துப்பூச்சிகள். காலடியில் உடைந்து சிதறிய பியர் பாட்டில்கள், பிய்ந்துபோன செருப்பு. துணி கிழிந்துபோன பழைய குடை, கோழி ரோமங்கள், காய்ந்த ஓலைக்கொட்டாய்கள், செடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கிழிந்த காகிதங்கள் என ஒரே குப்பையாகக் கிடந்தது. அவற்றைக் கடந்து அவர்கள் சூரியகாந்திப் பூவைத் தேடி நடந்துகொண்டிருந்தார்கள்.

திலா கிணற்றை ஒட்டிய மேட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சூரியகாந்திச் செடிகள் நின்றிருந்தன.

நிதர்சனா ஒவ்வொன்றாக எண்ணி, ``ஒன்பது இருக்கு'' என ரம்யாவிடம் சொன்னாள்.

``நமக்கு ரெண்டு வேணும்'' என்றபடியே எந்த இரண்டு பூக்களைப் பறிக்க வேண்டும் என அடையாளம் காட்டினாள் ரம்யா.

நிதர்சனா தலையசைத்தபடியே சொன்னாள், ``கையிட்டுப் பிக்க முடியாதுக்கா. கத்தி வேணும்.''

``காய் நறுக்கிற கத்தியை எடுத்துட்டு வரலாம்.''

``இந்தப் பூ என்னோடது. அது உன் பூ. சரியா?'' எனக் கேட்டாள் நிதர்சனா.

``உன் இஷ்டம்'' என்றாள் ரம்யா. அப்போது எங்கிருந்தோ கரிச்சான் குருவி கத்தும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

திலா கிணற்றின் மீது நின்றிருக்கும் கரிச்சான் குருவியைப் பார்த்தபடி ரம்யா சொன்னாள், ``நான் நாளைக்கு பட்டுப்பாவாடை கட்டிக்கிடுவேனே!''

``எனக்கு மட்டும் பட்டுப்பாவாடையே கிடையாது'' என ஆதங்கமாகச் சொன்னாள் நிதர்சனா.

``அய்யா வந்தவுடனே கடைக்குப் போயி புதுசா வாங்கிடலாம்'' என, தங்கைக்கு ஆறுதல் சொன்னாள் ரம்யா.

``செவப்பு கலர்தான் வாங்கணும். பொன்னிகூட செவப்பு கலர்தான் வெச்சிருக்கா'' என்றாள் நிதர்சனா.
 
அந்த இரண்டு சிறுமிகளும் சூரியகாந்திப் பூவை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தனர். விரிந்த மஞ்சள் முகத்துடன் சூரியகாந்திப் பூக்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. சூரியன் மேற்கு வானில் மறைந்தவுடன், அந்தப் பூக்கள் தலைகவிழ்ந்துகொண்டன.

`இரவு எப்போது கடந்துபோகும், அய்யா எப்போது வந்து சேருவார்?' என யோசித்தபடி அந்தச் சிறுமிகள் வீடு வந்து சேர்ந்தார்கள்.

அய்யா ஊருக்கு வரும் நாள்களில், அவர்கள் வீட்டில் தினமும் கறிச்சோறுதான். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சினிமாவுக்கு வேறு அய்யா கூட்டிக்கொண்டு போவார். வீட்டில், அம்மா பூரி போடுவாள்; கேசரி செய்வாள். குலசாமிக் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது அய்யா கட்டாயம் ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். இப்படி எவ்வளோ பிடித்தமான விஷயங்கள் அய்யா வந்தால் மட்டுமே கிடைக்கிறது. அய்யா அடிக்கடி வந்தால் என்ன?

அய்யா வெளிநாடு கிளம்பிப் போய்விட்டால், வீடு சுருங்கிப்போய்விடும். கறி எடுக்க மாட்டாள். பரோட்டா வாங்க காசு தர மாட்டாள். இரவில் 8 மணிக்கு மேல் லைட் எரிவதைக்கூட நிறுத்திவிடுவாள் அம்மா. கேட்டால், `கரன்ட் செலவு யாரு குடுக்கிறது?' எனத் திட்டுவாள்.

பார்வதி, சேமியா ஃபாக்டரியில் வேலைக்குப் போய் வந்தாள். அங்கே சாயங்காலம் தின்பதற்காகச் சுண்டலோ, மிக்ஸரோ கொடுப்பார்கள். அதைத் தின்னாமல் அவள் மடித்துக் கொண்டுவந்து பிள்ளைகளுக்குத் தருவாள். ஊரிலிருந்து ஆச்சி, தாத்தா அவர்களைப் பார்க்க வரும்போது கொண்டுவரும் காராச்சேவையும் கருப்பட்டி மிட்டாயையும் இரண்டு வாரங்களுக்கு வைத்துத் தின்பார்கள்.

அரசாங்கம் இலவசமாகக் கொடுத்த டிவி ஒன்றுதான் அவர்கள் வீட்டில் இருந்த ஒரே பொழுதுபோக்கு. அதையும் அம்மா 8 மணிக்குமேல் பார்க்கவிட மாட்டாள். அதற்காக ராணி அக்கா வீட்டில் போய் பெரிய டிவி-யில் சினிமா பார்ப்பார்கள்.

``அடுத்த முறை ஊருக்குத் திரும்பி வரும்போது பெரிய டிவி வாங்கிட்டு வர்றதா அய்யா சொல்லியிருந்தார். ஒருவேளை இந்த முறை வாங்கிட்டு வர்றாரோ என்னவோ!''  நிதர்சனாவும் ரம்யாவும் இப்படித் தங்கள் ஆசைகளைப் பேசியபடியே பாயில் படுத்துக்கிடந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மரக்கட்டில் இருந்தது. ஆனால், அதில் அவர்கள் படுத்து உறங்குவதில்லை. அய்யா வரும் நாள்களில்தான் பயன்படும். மற்ற நாள்களில் அந்தக் கட்டிலில் துவைத்த துணிகளை அள்ளிப் போட்டிருப்பார்கள்.

சுவர் ஓரம் இன்னொரு பாயை விரித்துப் படுத்திருந்தாள் அம்மா.

அந்தச் சிறுமிகள் இருவரும் ``இந்நேரம் அய்யா ஃப்ளைட்ல வந்துகிட்டு இருப்பாரு. இந்நேரம் கடல் மேல பறந்துகிட்டு இருப்பாரு'' எனப் பேசியபடியே உறக்கமற்றுக் கிடந்தார்கள்.

அவர்களின் பேச்சொலி, பார்வதியை எரிச்சல்படுத்தியது.

``வாயை மூடிக்கிட்டு தூங்குங்கடி'' எனத் திட்டினாள்.

அதன் பிறகு அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், கைவிரல்களால் சைகை செய்து கொண்டார்கள். கண்களால் ஜாடை காட்டிக்கொண்டார்கள். திடீரென எதற்கோ நிதர்சனா சிரித்தாள்.

``என்னடி இளிப்பு?'' என, பார்வதி திட்டியதும் அவர்கள் போர்வையை இழுத்து முகத்தில் போட்டுக்கொண்டார்கள்.

விமானப் பணிப்பெண் கொண்டுவந்த வோட்காவை, கையில் வாங்கிக்கொண்டான் பரஞ்ஜோதி. விமானத்தில் அவனால் உறங்க முடியாது. வெளிநாட்டுக்குப் போன பிறகு அவனுக்கு நல்ல தூக்கமே கிடையாது. தன்னை மறந்து தூங்கி வருஷக்கணக்காகிவிட்டது. அடிக்கடி கெட்ட கனவு வரும். அந்தக் கனவில் யாரோ அவனைத் துரத்துகிறார்கள். கோர உருவங்கள், அவன் கை கால்களை வெட்டித் தின்கின்றன. எத்தனையோ நாள்கள் உறக்கத்திலிருந்து அலறியபடி எழுந்திருக்கிறான். தேற்றி உறங்கவைக்க, துணைக்கு யார் இருக்கிறார்கள்? எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருக்கும். எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வான்.

பரஞ்ஜோதி கடைசியாக ஊருக்கு வந்தபோது, சின்ன மகள் நிதர்சனாவுக்கு இரண்டு வயது. பெரியவள் ரம்யாவுக்கு ஐந்து வயது. இப்போது நான்கு வருஷங்கள் ஓடிவிட்டன. லிபியாவின் எண்ணெய் நிறுவனத்தில் வேலைசெய்யும் அவனுக்கு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை முப்பது நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஒருவேளை அந்த விடுமுறை தேவையில்லை என்றால், அதற்கு ஈடாக பணம் வழங்குவார்கள். ஆகவே, நான்கு வருஷங்களாக பரஞ்ஜோதி ஊருக்கு வரவேயில்லை. வீட்டு நிலவரம் பற்றி, பார்வதியோடு மாதம் ஓரிரு முறை போனில் பேசுவது உண்டு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்குப் பணம் அனுப்பிவைப்பான்.

லிபியாவுக்குப் போன புதிதில், மனைவிக்கு அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். இரண்டு குழந்தைகள் ஆன பிறகு, அந்த ஆசை வடிந்துவிட்டது. `ஊருக்குப் போனாலே செலவுதான். கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்பதற்காக எதற்கு ஊருக்குப் போக வேண்டும்?' எனச் சலித்துக்கொள்வான்.

75p3.jpg

சில சமயம் `இப்படி ராப்பகலாக உழைத்து திடீரென ஒருநாள் மாரடைப்பில் செத்துப்போய்விட்டால் என்ன ஆகும்?' எனத் தோன்றும். உடனே பயம் கவ்விக்கொண்டுவிடும். `அய்யோ! பிள்ளைகள் இப்போதுதானே பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து, திருமணமாகி, பேரன்-பேத்தி பார்க்காமல் போய்விட்டால் எவ்வளவு துரதிர்ஷ்டம்!' என வருந்துவான். பிறகு, `ச்சே... சே! நமக்கு அப்படி எதுவும் நடக்காது. சம்பாதிப்பதே வீட்டைக் காப்பாத்தத்தானே' என தனக்குத்தானே நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வான்.

வேலை தேடி அயல்நாட்டில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் இப்படி தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள்தானே. ஆளுக்கு ஒரு கஷ்டம். இதில் யார் யாரைப் பற்றிக் கவலைப்படுவது? ஊருக்குக் கிளம்பும் நாள்களில் அவனது மனம் உற்சாகம்கொள்ளும். நிறைய ஆசைகள், கனவுகளுடன் ஊர் வந்து சேருவான். ஆனால், வீடு வந்து சேர்ந்த மறுநாள் அந்த உற்சாகம் வடிந்துவிடும்.

அவன் இல்லாதபோது நடந்த அத்தனை பிரச்னைகளும் அவனைக் கண்டதும் புத்துயிர் பெற்றுவிடும். அவற்றைக் கேட்காமலோ, தீர்க்காமலோ இருக்கவும் முடியாது. என்ன வாழ்க்கை இது? எவ்வளவு சம்பாதித்தாலும் ஓட்டை வாளிபோல ஒழுகிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க என்னவெல்லாம் அவமானங்களைப் படவேண்டியுள்ளது. ஊரில் இருப்பவர்களுக்கு அதைப் பற்றி என்ன தெரியும்?

வோட்காவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தபடியே ஜன்னலுக்கு வெளியே தெரியும் இருண்ட வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். தொலைவில் ஒளிரும் விளக்குகளின் அடியில் ஏதோ ஒரு நகரம் உறங்கிக்கொண்டிருந்தது.

`என் மனைவி இப்போது உறங்கிக்கொண்டி ருப்பாள். நாளை இரவு இதே நேரம் அவளைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருப்பேன்.' அந்தச் சந்தோஷத்தைவிடவும் அதைப் பற்றி நினைத்துக்கொள்ளும் இந்த விநாடியின் சந்தோஷமே பெரியதாகத் தோன்றியது.

திடீரென கண்களை மூடி, `பார்வதியின் முகம் எப்படி இருக்கும்?' என யோசிக்க முயற்சி செய்தான். அவளின் முகம் நினைவில் வரவேயில்லை. `என்ன இது... முகம் மறந்துபோய்விட்டதா என்ன, பர்ஸில் இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்துவிடலாமா?' என நினைத்தான். `கூடாது. நிச்சயம் மனதில் பதிந்திருக்கும்' என, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டே இருந்தான்.

பார்வதியின் தோள்பட்டை, மெலிந்த கைகள் நினைவுக்கு வந்ததே இன்றி முகம் ஞாபகத்துக்கு வரவில்லை. ஆத்திரத்தில் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்து பர்ஸை வெளியே எடுத்துப் பிரித்தான். குடும்பத்துடன் ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படம். அதில் இருந்த மனைவியின் முகத்தைப் பார்த்தான். `இதிலும் ஏதோ யோசனையோடுதான் இருக்கிறாள். என்னதான் அப்படி யோசிப்பாள்?' அவள் சிரித்து சந்தோஷமாக இருந்ததாக அவனுக்கு நினைவேயில்லை. `சில பெண்கள் வாழ்நாள் முழுவதும் இறுக்கமான முகத்துடனேயே இருந்துவிடுகிறார்களோ!' என்று தோன்றியது.

வீட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வேதனை அதிகமாகிவிடும் என்பதால், தன் இருக்கையின் எதிரில் இருந்த சிறிய திரையைத் தொட்டு ஏதாவது தமிழ்ப்படம் இருக்கிறதா எனத் தேடினான்.

`கும்கி' இருந்தது. பார்த்த படம் என்றாலும், மறுபடியும் அதைப் பார்க்கத் தொடங்கினான்.

ரண்டு சிறுமிகளும் ஆளுக்கு ஒரு சூரியகாந்திப் பூவைக் கையில் வைத்தபடியே வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தார்கள்.

சைக்கிளில் ஜின்னிங் மில்லுக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்த சிலர், சிறுமிகளைப் பார்த்துச் சிரித்தபடியே கடந்தனர். அந்தச் சிறுமிகள் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.

ரம்யாவின் வீட்டிலிருந்து வலதுபக்கம் 100அடி நடந்து திரும்பினால் பஸ் ஸ்டாப். அங்கே டவுன் பஸ்கள் மட்டுமே நிற்கும். ஆனால், கிழக்கே கொஞ்ச தூரம் நடந்து போய் பாலத்தைத் தாண்டி நடந்தால், விலக்கு ரோடு வந்துவிடும். அது தங்க நாற்கரச் சாலை சேரும் இடம். அங்கே எல்லா பேருந்துகளும் நிற்கும்.

``அய்யா டாக்ஸியில் வருவதாக இருந்தால், அந்த வழியாகத்தான் வரவேண்டும். வீட்டின் முன்னால் நிற்பதைவிட, அங்கே போய் நிற்கலாம்'' என்றாள் ரம்யா.

நிதர்சனாவும் தலையை ஆட்டினாள். காலைச் சூரியன், வானில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. நீல நிறப் பட்டுப்பாவாடையைத் தூக்கிச் செருகியிருந்தாள் ரம்யா. அது தரையில் இழுபட்டால் அம்மா திட்டுவாள். இருவரும் கையில் சூரியகாந்திப் பூவை ஏந்தியபடியே நடந்தார்கள்.

ஒரு வீட்டின் வாசலில் உட்கார்ந்து வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த கிழவி அவர்களைப் பார்த்து, ``உங்க அப்பன் வர்றானா?'' எனக் கேட்டாள். நிதர்சனா தலையாட்டினாள்.

அவர்கள் கிழக்கே நடந்தபோது, பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அதில் சிலர் ரம்யாவோடு படிக்கிறவர்கள். கை காட்டியபடியே அவர்கள் ``எங்கடி போற?'' எனக் கேட்டார்கள். அவர்களுக்கு ரம்யா பதில் சொல்லவில்லை. நிதர்சனா ஆர்வமாக ``அய்யா, ஊர்ல இருந்து வர்றாரு...'' எனக் கத்தினாள்.

சைக்கிளில் வந்த பள்ளிச் சிறுவன் ஒருவன் ரம்யாவிடம் இருந்த சூரியகாந்திப் பூவைப் பறிப்பவன்போல கையை அருகில் கொண்டுவந்தான். ரம்யா கோபத்தில் அவனைத் திட்டினாள். அந்தச் சிறுவன் சிரித்தபடி பெல்லை அடித்துக்கொண்டு வேகமாகக் கடந்துபோனான்.

அவர்கள் பாலத்தைத் தாண்டி விலக்கு ரோட்டுக்கு வந்து நின்றபோது வெயில் ஏறி இருந்தது. லாரிகளும் கார்களும் வேன்களும் நாற்கரச் சாலையில் விரைந்துகொண்டிருந்தன. ஆம்னி வேன் ஒன்றில் வந்த கல்யாணக் கூட்டம் அந்தச் சிறுமிகள் கையில் சூரியகாந்திப் பூவுடன் நிற்பதை வியப்போடு பார்த்தபடி கடந்து போனார்கள். சாலையில் டாக்ஸி ஏதாவது வருகிறதா எனப் பார்த்தபடியே இருந்தாள் நிதர்சனா.

ரம்யா, சூரியகாந்திப் பூவை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து ஆட்டினாள்.

``சூரியகாந்திப் பூவுக்கு, தொலைவில் வரும் டாக்ஸி தெரியுமோ... என்னவோ!'' - அவள் செய்வதைக் கண்ட நிதர்சனா, தானும் அதேபோல செய்தாள்.

ஒரு டாக்ஸி, தொலைவில் வந்துகொண்டிருந்தது. அவர்கள் இருவரும் சூரியகாந்திப் பூவுடன் முன்னால் ஓடினார்கள். ஆனால், அந்த டாக்ஸி விலக்கு ரோட்டில் நிற்கவில்லை. அவர்களின் முகம் வாடியது.

நிதர்சனா சொன்னாள், ``தண்ணி தவிக்குதுக்கா.''

``அய்யா வந்தவுடனே வீட்ல போய்க் குடிக்கலாம்.''

நிதர்சனா தலையை ஆட்டிக்கொண்டாள். மினிபஸ் ஒன்று, விலக்கு ரோட்டில் வந்து நின்றது. அதில் இருந்த பயணிகள், சூரியகாந்திப் பூவை ஏந்தி நிற்கும் இரண்டு சிறுமிகளையும் வேடிக்கை பார்த்தனர்.

கண்டக்டர் அவர்களிடம், ``பூ என்ன விலை?'' என்று கேட்டார்.

ரம்யா பதில் சொல்லவில்லை. அவள் பெரியமனுஷிபோல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். நிதர்சனா மட்டும் பொய்யாகச் சிரித்தாள்.

அந்தச் சாலை, வெயிலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. காற்றில் அடித்துக்கொண்டு வரப்பட்ட பாம்புச்சட்டை ஒன்று, பிய்ந்து சிறிய துண்டாகப் பறந்து வந்து விழுந்தது. வழக்கமான நாளாக இருந்தால் ரம்யா ஓடிப்போய் எடுத்திருப்பாள். ஆனால், இன்றைக்கு அவள் கண்டுகொள்ளவேயில்லை.

அருப்புக்கோட்டைக்குச் செல்லும் பேருந்து ஒன்று விலக்கு ரோட்டில் நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு குடும்பம், அந்தச் சிறுமிகளை வேடிக்கை பார்த்தபடியே கடந்துபோனது. தலைக்கு மேல் எரியும் சூரியனை, அந்தச் சிறுமிகள் பொருட்படுத்தவேயில்லை.

`அய்யா ஏன் இன்னும் வந்து சேரலை. ஒருவேளை ஃப்ளைட் வந்து சேர்ந்திருக்காதோ!' என யோசித்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

வெயில் தாங்க முடியாத நிதர்சனா கேட்டாள், ``வீட்டுக்குப் போயி தண்ணி குடிச்சுட்டு வரட்டா?''

``அதெல்லாம் போகக் கூடாது.''

``எனக்கு ஒண்ணுக்கு வருதுக்கா'' எனப் பொய் சொன்னாள் நிதர்சனா.

``அப்போ வீட்டுக்குப் போயிட்டு, உடனே வந்துரணும்.''

``சரி'' என, தன் கையில் வைத்திருந்த சூரியகாந்திப் பூவை ரம்யாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி ஓடினாள் நிதர்சனா.

இரண்டு கைகளிலும் இரண்டு சூரியகாந்திப் பூக்களை ஏந்தியபடி ரம்யா, `அய்யா எப்போது வந்து சேருவார்?' எனக் காத்துக்கொண்டே இருந்தாள். சாலையில் கார்கள் போவதும் வருவதுமாக இருந்தன. அதன் டயர்களின் உராய்வும் வேகமும் அச்சமூட்டுவதாகயிருந்தன. வானில் ஈய நிறத்தில் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. ஊற்றுபோல வெயில் கொப்புளித்துக் கொண்டிருந்தது.

கையை உயர்த்திக்கொண்டே இருப்பது ரம்யாவுக்கு வலித்தது. ஆனாலும் அவள் கையை இறக்கவில்லை. நிதர்சனா வருகிறாளா என அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டாள். `வீட்டுக்குப் போய் வருவதற்கு இவ்வளவு நேரமா?' என அவள் மீது கோபமாக வந்தது. காட்டுக்கோழியை விழுங்கிவிட்டு நகரும் மலைப்பாம்புபோல சூரியன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

நிதர்சனா வந்துகொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு தூக்குவாளி இருந்தது. அதைப் பார்த்த ரம்யா, எரிச்சலில் கேட்டாள், ``என்னடி இது?''

``அய்யாவுக்குப் போட்டு வெச்ச சர்பத். அம்மாதான் குடுத்துவுட்டா.''

``ஒண்ணும் வேணாம்.''

``ரோட்ல நின்னது போதும்னு உன்னைய வீட்டுக்கு வரச் சொன்னா.''

``அதெல்லாம் முடியாது, நான் நிப்பேன்.''

``அப்போ நான் வீட்டுக்குப் போறேன்'' என அவள் தூக்குவாளியை எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

``அதெல்லாம் போகக் கூடாது. இங்கே வந்து நில்லுடி'' என, சூரியகாந்திப் பூவை நீட்டினாள்.

நிதர்சனா தூக்குவாளியைக் கிழே வைத்துவிட்டு, தனது சூரியகாந்திப் பூவை வாங்கிக்கொண்டாள்.

பிறகு, அந்தச் சிறுமிகள் சாலையை நோக்கியபடி நின்றிருந்தார்கள். உச்சிக்குப் பிறகு காற்று மெள்ள ஒடுங்கத் தொடங்கியது. சாலையில் கானல் அலைபாய்ந்துகொண்டிருந்தது. சூரியகாந்திப் பூவின் இதழ்கள் வாடத் தொடங்கின. அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

தபால்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, தபால்காரன் அவர்களைப் பார்த்தான். அருகில் சென்று ``வெயில் உங்களுக்குச் சுடலையா?'' எனக் கேட்டான். அதற்கு ரம்யா எரிச்சலான குரலில், ``குளிருது!'' எனப் பதில் சொன்னாள். தபால்காரன் அவளை முறைத்தபடியே கடந்து போனான்.

`அய்யா ஏன் இன்னும் வரலை?' அந்த ஏமாற்றதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதைக் காட்டிக்கொள்ளாமல் நெடுஞ்சாலையை வெறித்துப் பார்த்தபடியே நின்று இருந்தார்கள்.

வெயிலோடு நடந்து பார்வதி வந்திருந்தாள்.

``ஏண்டி, உனக்குக் கிறுக்குப் பிடிச்சுப்போச்சா. எவ்வளவு நேரத்துக்குடி இப்படியே நிப்பே. உங்கப்பன் என்ன பெரிய கவர்னரா, மாலை மரியாதை செய்ய? வீட்டுக்கு நட'' - ரம்யாவை முறைத்தபடி சொன்னாள் அம்மா.

``நான் வர மாட்டேன், நீ போ!''

``நீயா வர்றியா... இல்லை அடிச்சு இழுத்துக்கிட்டுப் போகட்டுமா?''

திடீரென நெடுஞ்சாலையை நோக்கி ஓடத் தொடங்கினாள் ரம்யா. சாலையில் கார்களும் வேன்களும் சீற்றத்துடன் போய்க்கொண்டிருந்தன.

பார்வதி பயந்துபோய் கத்தினாள், ``நில்லுடி... சொன்னா கேளு!''

ரம்யா ஓடுவதைக் கண்ட நிதர்சனாவும் அவளை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

``உங்கப்பன்தான் என் தாலிய அறுக்கான்னா, நீங்களும் ஏண்டி உசுரை எடுக்குறீங்க?'' என, பார்வதி புலம்பினாள்.

அந்தச் சிறுமிகளுக்கு எதுவும் கேட்கவேயில்லை.

பார்வதி ஏதோ சொல்லி திட்டியபடியே வீட்டை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

அம்மா போய்விட்டாளா எனப் பார்த்துவிட்டு, அந்தச் சிறுமிகள் தங்களது இடத்துக்கு வந்து பழையபடி நின்றுகொண்டார்கள். மதியமும் கடந்து மாலை ஆனது. முடிவற்ற கடல் அலைபோல வாகனங்கள் இரண்டு பக்கங்களும் கடந்துகொண்டே இருந்தன.

அய்யா வரவே இல்லை. வாடிய சூரியகாந்தியின் இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டாள் நிதர்சனா. சூரியகாந்தியைத் தன் முகத்துக்கு நேரே பிடித்தபடி பிடிவாதத்துடன் நின்றிருந்தாள் ரம்யா. பள்ளி முடிந்து செல்லும் சிறுவர்கள் அவர்களைக் கேலிசெய்தபடி கடந்து சென்றனர்.

சூரியன் மேற்கில் மறைந்து, இருள் கவியத் தொடங்கும்போதும் அந்தச் சிறுமிகள் நின்றுகொண்டே இருந்தனர்.

நிதர்சனா சொன்னாள், ``யக்கா... கை வலிக்குதுக்கா!''

``வலிக்கட்டும்'' என்றாள் ரம்யா. அப்படிச் சொல்லும்போது, அவளது குரல் இரக்கமற்றிருந்தது.

விலக்கு ரோட்டின் சோடியம் லைட் வெளிச்சத்தில் அந்தச் சிறுமிகள் தலைகவிழ்ந்து நிற்பது தெரிந்தது. கடந்து செல்லும் வாகனங்களும் மக்களும் அந்தச் சிறுமிகளைக் கண்டுகொள்ளாமல் கடந்தனர். சிறுமிகள், வாடிய சூரியகாந்திப் பூவோடு நின்றுகொண்டே இருந்தனர். இரவு முற்றத் தொடங்கியது. வெயிலைப்போலவே மஞ்சள் வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுமிகள் கால்கடுக்க நின்றிருந்தார்கள்.

காலை 5 மணிக்கு திருச்சியில் வந்து இறங்கிய பரஞ்ஜோதி, தன் நண்பன் கொடுத்து அனுப்பிய பார்சலைக் கொடுப்பதற்காக வாடகை காரில் தில்லை நகர் போய்ச் சேர்ந்தான். நண்பனின் மச்சினன் ரத்னம் தன் வீட்டிலே குளித்துச் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும் என வற்புறுத்தினான். பரஞ்ஜோதியால் அதைத் தட்ட முடியவில்லை.

சாப்பிட்டுக் கிளம்பும்போது ரத்னம் ரகசியமான குரலில் சொன்னான், ``வீட்டுக்குப் போயிட்டா, உன்னாலே சரக்கு போட முடியாதுண்ணே. என்கூட ரெண்டு பெக் போட்டுட்டுக் கிளம்பு. ரூம் போடுறேன்'' என லாட்ஜ் ஒன்றில் அறை புக் செய்தான்.

அவனோடு குடித்து, மதியச் சாப்பாடு சாப்பிட்டு, உறங்கி எழுந்தபோது மணி 4. இதற்குள் ரத்னம் வேறு சில நண்பர்களை அழைத்துவந்துவிட்டான். மீண்டும் அவர்களுடன் கூடிக் குடித்து, கதை பேசி முடிக்கும்போது போதை உச்சத்துக்கு ஏறியிருந்தது. தன்னை அறியாமலே லாட்ஜ் ரூமிலே உறங்கியிருந்தான்.

அன்றைய இரவில் அவனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவனுடைய இரண்டு மகள்களும் கையில் சூரியகாந்திப் பூவை ஏந்திபடியே சாலையில் காத்திருந்தார்கள். அந்தச் சூரியகாந்திப் பூ மெள்ள பெரியதாகிக்கொண்டேவந்து, திடீரென அதில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. திடுக்கிட்டுக் கண்விழித்தபோது எங்கிருந்தோ விசித்திரமான மணம் நாசியில் படுவதாகத் தோன்றியது. `என்ன வாசனை இது, சூரியகாந்திப் பூவின் அடர்ந்த மணமா அல்லது போதையில் நாமாக எதையோ கற்பனை செய்கிறோமா!' - அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

அவன் எழுந்து வாஷ்பேசினில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தபோது, டேபிளில் சாப்பிட வாங்கி வைத்த பிரியாணிப் பொட்டலம் அப்படியே இருப்பது தெரிந்தது. கண்ணாடி அருகே கழற்றி வைத்த வாட்சை எடுத்து மணி பார்த்தான். பின்னிரவு 3:30. வயிறு பசித்தது. பிரியாணியைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான்.

தே நேரம் அவனது வீட்டில் அம்மாவின் அருகில் பாயில் கிடந்த இரண்டு சிறுமிகளும் தங்கள் கைகளில் சூரியகாந்திப் பூவைப் பிடித்தபடியே உறங்கிப்போயிருந்தனர். உறக்கத்திலும் அவர்கள் முகத்தில் வேதனை படர்ந்திருந்தது. அடுப்படியில் அவர்கள் சாப்பிடுவதற்காகச் சுட்டு வைத்திருந்த தோசைகள் சில்வர் தட்டு ஒன்றில் குளிர்ந்துபோய்க் கிடந்தன. பார்வதியும் இரண்டு மகள்களும் அன்று இரவு சாப்பிடவே இல்லை.

உறக்கத்தினூடே ரம்யா பிதற்றுவதுபோல  ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள், ``அய்யா ஏன்மா வரலை, அவரு எதுக்கு நம்மளை விட்டுட்டு ஃபாரின் போனாரு, அய்யா வரவே மாட்டாரா?''

அவள் முணுமுணுப்பை இரவுப்பூச்சிகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. அவையும் வருத்தமடைந்ததுபோல பிறகு மௌனமாகின.

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்யும் பணியாளர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டியது போல் இருக்கு....!

நன்றி நாவின்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.