Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்?

Featured Replies

மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்?

image_65d60f61bb.jpg

 

“பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. 

பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம். 

அதிலும், குழந்தை குட்டிகள் இருந்தால், இரவு - பகலாக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையெடுத்ததும், கொஞ்சமாவது ஓய்வு எடுக்கலாம். இப்படித்தான் ஒவ்வொருவருடைய குடும்பச் சக்கரமும் ஓடிக்கொண்டிருக்கின்றது. 

அதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைத்துவிட்டால் ஒரு கொண்டாட்டம்தான். சிலருக்குக் கைகூடும்; பலருக்கு அது கூடவே கூடாது. அதுவும் குறிப்பிட்டதொரு வயதுக்கு மேல், வெளிநாட்டில் வேலை எடுப்பதென்பதும் கடினம்; அது கிடைக்காது. 

இன்னும் சிலர், தங்களுடைய குடும்பத்தையே பணயம் வைத்துவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவர். பெரும்பாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தோர், குறிப்பாக, வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகப் படையெடுக்கின்றனர்.

அங்கு போய் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பல. சிலர், உயிரைக் கொடுத்துவிட்டு, சடலங்களாகத் திரும்புகின்றனர். இன்னும் சிலர், கற்பை பறிகொடுத்துவிட்டு, குழந்தைகளுடன் திரும்புகின்றனர். இன்னும் சிலரோ, உடலுறுப்புகள் இன்றித் திரும்புகின்றனர். 

சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்று, அவ்வாறான இன்னல்களுக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவரே, டபிள்யூ.டபிள்யூ.இந்திராகாந்தி. இலங்கைப் பெண்ணான இவர், தொடர்பான செய்தி, கடந்த திங்கட்கிழமையன்று (22) அநேக பத்திரிகைகளின் முன்பக்கத்தில் இடம்பிடித்திருந்தது. 

தம்புள்ளையைச் சேர்ந்த 36 வயதான டபிள்யூ.டபிள்யூ.இந்திராகாந்தி, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

இராணுவத்தில் சேவை புரியும் இளைஞனைத் திருமணம் முடித்திருந்த அப்பெண், 18, 11 மற்றும் 7 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தாயாவார். கணவர் பிரிந்து சென்றமையால், பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்த நிலையிலேயே, இவர் வெளிநாடு சென்றிருந்தார். 

எனினும், ஒப்பந்தக் காலம் முடிந்து நாடு திரும்பக் காத்திருந்த சந்தர்ப்பத்தில் தனக்கு நேர்ந்துள்ள கொடுமையை, அண்மையில் சமூக வலைத்தளமொன்றில் மிகச் சிறிய காணொளியாக இவர் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியை அவதானித்த தம்புளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், இந்திராகாந்தியின் வீடு தேடிச்சென்று, அவரது நிலையை, இலங்கை ஊடகங்கள் வாயிலாக வெளிக்காட்டினார். 

இந்திராகாந்தி, வேலை பார்த்த வீட்டினது எஜமானியின் சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாம். எனவே, அந்த வீட்டு எஜமானரான பாபா உள்ளிட்ட குழுவினரால், சுகதேசியான தன்னிடமிருந்து சத்திரசிகிச்சை மூலம் சிறுநீரகமொன்றைத் தருமாறு வற்புறுத்தி, அவரைப் பலாத்காரமாகத் தடுத்து வைத்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமையை, எஜமானுக்குத் தெரியாமல், இரகசியமான முறையில், ஸ்கைப் மூலம் வீட்டாரைத் தொடர்புகொண்டு அவர் கூறியுள்ளார். 

தனது ஒப்பந்தக் காலமும் மார்ச் மாதத்துடன் முடிந்த நிலையிலும், இலங்கை திரும்புவதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் எஜமானர் செய்யவில்லையெவும் இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். 

அத்துடன், “எனது 4 மாத சம்பளப் பாக்கியும் தரவில்லை. கடந்த 19ஆம் திகதியிலிருந்து எனக்கு படுக்கக்கூட இடமில்லை. அறையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். நான் இந்நாட்களில் சமையலறையில் மெத்தையொன்றைப் போட்டுப் படுக்கின்றேன். 

“நான் எனது நிலைமை பற்றி எனது அம்மாவிடம் கூறினேன். அவர் இது தொடர்பாக தம்புள்ளையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்துள்ளார். அவர்கள் முறைப்பாட்டை குருநாகலுக்குக் கையளித்துள்ளார்கள். 

“எனக்கு தற்போது சம்பளம் கிடைக்காததால், எனது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் செல்லவும் வழியில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமையிலிருந்து மீள, அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும்” என, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பணி நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, இலங்கையர்கள் அனுபவிக்கும் எத்தனையோ இன்னல்களுக்கு, இதுபோன்று இன்னும் எத்தனையோ எத்தனையோ உதாரணங்களை முன்வைக்கலாம். 

எஜமானியினால் உடல் முழுவதும் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பியிருந்தார் ஒரு பெண். அத்துடன், வேலைக்குச் சென்ற வீட்டுக் குடும்பத்தினரால் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண்ணொருவர் நாடு திரும்பினார். மேலும், வன்புணர்வு, கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் பெண்கள், நாடு திருப்பினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், இலங்கை அரசாங்கத்தின் செலவில், வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகக் கடந்த காலங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று இவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கான முதல் புள்ளிகள், இவர்களது சொந்தக் கிராமங்களிலும் கொழும்பு நகரிலேயும் இடப்பட்டு விடுகின்றன. கிராமங்களில், நலிந்துபோன பொருளாதாரத்தில் உள்ளவர்கள், எப்படியாவது வெளிநாடு சென்று, முன்னேற வேண்டுமென எண்ணுகின்றார்கள். 

இதற்காகத் தமது தகுதியையும் மீறி, பாரியளவில் இவர்கள் கடன்படுகின்றனர். அதிலும், ஒரு சில பேர் மீற்றர்  வட்டிக்குக்கூட (சாதாரண வட்டியிலும் பார்க்க 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கும்) கடன் பெறுகின்றனர். 

பின்னர், வெளிநாடு செல்லும் கனவுகளுடன் கொழும்புக்குப் படையெடுக்கும் இவர்கள், போலியான பல முகவர்களால் ஏமாற்றப்படுவதும் இல்லாமலில்லை. இவ்வாறான சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளமை நாம் அறிந்த விடயமே. 

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் போலி முகவர்களால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்கள் சிலர், வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள், பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மருதானைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். இவ்வாறான சம்பவங்களால் பெருவாரியான பணத்தையும் இவர்கள் இழக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் கடவுச்சீட்டு (பாஸ்போட்) எடுக்கும் பொருட்டு, முதன்முறையாகக் கொழும்புக்கு வரும் அநேகர், குடும்பங்களாகவே வருகின்றனர். விடுதிகளில் (லொஜ்கள்) தங்கும் இவர்கள், அங்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பணத்தையும் வீண்விரயம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

இவ்வாறான லொஜ்கள், பெரும்பாலும் வசதி குறைந்தளவிலேயே காணப்படும். அத்துடன், சுகாதார வசதி அற்றதாகவே இருக்கும். ஓர் அறையில் 9 பேர்கூடத் தங்கவைக்கப்படுவர். 

இவ்வாறாக, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர் இலங்கையிலேயே, இவர்கள் நொந்து நூலாகிவிடுகின்றனர். எனினும், செல்லும் இடத்திலாவது விடிவு கிட்டும் என்று எண்ணினாலும், அங்கும் கார்மேகங்களே, இவர்களைச் சூழ்ந்துகொள்கின்றன. 

இலங்கையின் பொருளாதாரத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம், பாரியளவில் பங்களிப்புச் செய்கின்றது. அதாவது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு, 2015ஆம் ஆண்டில் 338 மில்லியன் ரூபாயும் 2016ஆம் ஆண்டில் 642 மில்லியன் ரூபாயும் இலாபமாகப் பெறப்பட்டதாகவும், இந்த இலாபம், இவ்வருடம், 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

வருமானம் அதிகரித்து விட்டதாக அரசாங்கம் பெருமை கொள்கின்றது. எனினும், சமூகக் கட்டமைப்பில் பாரிய தொய்வு நிலை ஏற்பட்டுக்கொண்டு செல்வதைக் காணக்கூடியதாய் உள்ளது. 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்கள், தமது பிள்ளைகளில் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டே பெரும்பாலும் செல்கின்றனர். எனினும், பொறுப்பற்றவர்களின் பராமரிப்பின் கீழ், தமது குழந்தைகளை இவர்கள் விட்டுச் செல்கின்றனர்.

சில குடும்பங்களில், கணவர் பராமரிப்பில் விடப்படும் குழந்தைகள், குறைந்தது முதல் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு நன்றாகக் கவனித்துக்கொள்ளப்படுகின்றனர். பின்னர், மனைவியின் பணம் அதிகளவில் புழக்கத்தில் வரத் தொடங்கியவுடன், தலைகீழாக நிற்கத்தொடங்கிவிடுவர்.

மனைவி அனுப்பும் பணத்தில், கணவன் உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பார். இதனால், குழந்தைகளைக் கவனிக்காது விடுவார். சில வேளைகளில், வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனமும் நடத்தத் தொடங்கிவிடுவார். 

அதேபோல், கணவன் வெளிநாட்டு வேலைக்குச் சென்று, பிள்ளைகளின் தேவைக்காகப் பணம் அனுப்பும்போது, மனைவி தனது பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தத் தொடங்கி விடுவார். அண்மையில்கூட இவ்வாறானதொரு சம்பவத்தை எமது பத்திரிகையிலேயே வெளியிட்டிருந்தோம். 

அதாவது, ஐந்து மற்றும் மூன்று வயதுகளுடைய பெண் பிள்ளைகள் உள்ள தமது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, 26 வயதான குடும்பத்தலைவன், மத்திய கிழக்கு நாடொன்றுக்குத் தொழிலுக்குச் சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில், 23 வயதான தன்னுடைய மனைவி,  அவருடைய ஆசை நாயகனுடன், கட்டிலில் இருப்பதைக் கண்ட கணவன், அவ்விருவரையும் கையும்மெய்யுமாகப் பிடித்து, இருவரினதும் கரங்களையும் பற்றிப் பிடித்து ஒன்றாக சேர்த்துவைத்ததன் பின்னர், பிள்ளைகளை அவர்களுக்கே சீதனமாகக்  கொடுத்துவிட்டு, அவ்வீட்டிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றிருந்தார். இச்சம்பவம், காலி - மஹியங்கனைப் பகுதியில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. 

சில சந்தர்ப்பங்களில், உறவினர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் சிறு பிள்ளைகளை, அவர்கள் வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதும் நடைபெறாமலில்லை. இன்னும் சில சந்தர்ப்பங்களில், இவ்வாறு வேலைக்குச் செல்லும் கணவனோ அல்லது மனைவியோ பல வருடங்கள் கழிந்தும் வராமலே போய்விடுவார்கள். 

இவ்வாறான மோசமான சம்பவங்களால், பிள்ளைகள் அநாதைகளாக்கப்படுகின்றனர். மேலும், தாத்தா, தந்தை, மாமா மற்றும் தனயன் உள்ளிட்ட பாதுகாவலர்களாலேயே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது.

இவ்வாறு வெளிநாடு சென்ற பலரது குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இவற்றுக்கான தீர்வுகளையும் நாம் தேட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று பல இன்னல்களுக்கு உள்ளாவதைப் பார்க்கிலும், உள்நாட்டிலேயே மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கு முனையலாம்.

குடும்பமாய் ஆவதற்கு முன்னரே ஓரளவுக்குச் சம்பாதித்து, கட்டுக்கோப்பான குடும்பத்தை அமைத்துக்கொண்டால், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 
அரசாங்கமும் இந்த விடயத்தில் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும்.

உள்நாட்டிலேயே பெருவாரியான வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். 

குறிப்பாக பெண்களுக்கு ஏற்றாற்போல், கொஞ்சமாவது வருமானம் கூடியதாய் இருக்கத்தக்க வகையில், ஆடைத் தொழிற்சாலைகளிலேனும் வேலைவாய்ப்புகளை அதிகரித்துக்கொடுக்க வேண்டும். 

மேலும், யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூடுவிழா கண்டுள்ள அல்லது கண்டுகொண்டு வருகின்ற சீமெந்து, செங்கல் மற்றும் கரும்பு போன்ற பல தொழிற்சாலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.  

இலங்கையின் தற்போதைய சட்டத்தின்படி, சிறுபிள்ளைகளைக் கொண்டிருக்கும் தாய்மார்கள், பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 25 வயதுக்குக் குறைந்தவர்களும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முடியாது. 

எனினும், இது எவ்வளவு தூரம் நடைமுறையில் உள்ளது என்பது கேள்விக்குறியே. கிராம சேவகர்கள் மற்றும் முகவர்கள் ஊடாக, வயது தொடர்பில் போலியான தகவல்கள் வழங்கப்பட்ட நிலையிலேயே பலர், பணியாளர்களாகச் சென்று விடுகின்றனர். 

இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டுத்தான், சவூதி அரேபியாவில், போத்தல் மூலம் பால் பருக்கும்போது, குழந்தையொன்று இறந்த விவகாரத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, சவூதி அரேபியா - றியாத்திலுள்ள உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான 17 வயதுடைய றிசானா நபீக். 

முகவர் ஒருவரது மோசடியான செயல் காரணமாக, வயது குறைவான றிசானா நபீக்கை, கூடிய வயதுடையவரென்று, அவரது கடவுச்சீட்டில் காட்டப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்ததாலேயே, அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. 

இந்திராகாந்தியின் சிறுநீரகத்துக்கு 50,000 சவூதி றியால் (2,035,143.46 இலங்கை ரூபாய்) தருவதாக, அடாவடியாக பாபா (எஜமான்) வற்புறுத்தியுள்ளார். “என்னை மிகவும் துன்புறுத்துகின்றார்கள். எனது உயிர் தொர்பாகவும் எனக்கு நம்பிக்கை இல்லை” என இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். 

எனவே, சவூதி அரேபியா, குவைத் மற்றும் யோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது, இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களில் புலப்பட்டு நிற்கின்றது. இவர்களது உயிர்களை யார் காப்பாற்றுவார்?

எனினும், இந்திராகாந்தி கொடுத்து வைத்தவர். இவரது விடியலுக்கான வாசல் தற்போது திறந்துள்ளது. அதாவது, சிறுநீரகங்களைக் கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தம்புள்ளை, கந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.டபிள்யூ.இந்தராகாந்தி என்பவரும் அவருடைய தொழில்தருநரும், றியாத்திலுள்ள டிறியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக, அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் மேற்படி பெண், இலங்கைத் தூதரக அதிகாரிகளால்,  தொழில்தருநரிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், செவ்வாய்க்கிழமை (23) அறிவித்துள்ளது. 

பத்திரிகைகளில் வெளியான செய்திக்கு அமைய, இந்திராகாந்தி குறித்து உடனடியாக ஆராயுமாறு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரல, சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவருக்கு, விடுத்த பணிப்புரைக்கு அமைய, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. 

image_923680ee1a.jpg

எனினும், இலங்கை சென்று, பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வேன் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்திராகாந்தியை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மத்திய-கிழக்கில்-இலங்கையர்களின்-உயிர்கள்-ஊசலாடுகின்றன--காப்பாற்றுபவர்-யார்-/91-197316

  • கருத்துக்கள உறவுகள்

டோகாவுக்கு போற பிளேனில ஏறிப் பாருங்கோ.. தெரியும். ஊரில தட்டிவானில போற மாதிரி இருக்கும். ஆனால்.. டோகாவின் பளபளப்புக்குப் பின்னால்.. இவர்களின்.. வியர்வை உள்ளது என்பதை டோகா எயார்ப் போர்ட்டிலேயே காணலாம். :rolleyes:

அண்மையில் எங்கடை ஒன்று கண்டம்.... படிச்ச  கிரவுட்.. ஊரில இருந்து முருங்கக்காய் கட்டிக் கொண்டு.. வந்திச்சு. அதுவும் டோகாவுக்கால தான். தாங்க முடியல்ல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில் மத்திய கிழக்கில் வீட்டுப்பணி பெண்களாக செல்லும் பெண்கள் அனுபவிக்கும்  துயரங்கள் சொல்லி கொள்ள முடியாது அரபிகளின் உடுப்புகள் அயண் பண்ணும் போது ஒரு மடிப்பு கூட இருக்க கூடாது அப்படி இருந்தால் அதை கசக்கி மீண்டும் கழுவி அயண் பண்ண சொல்லுவார்கள்

எனது அனுபவம் ஒரு நாள் வேலை விட்டு வரும்  போது ஒரு இந்தோனிசியா பெண் ஒருத்தி வழியும்  தெரியாமல் பாஷையும் தெரியாமல் அழுது கொண்டு இருந்தாள்  அரபி வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அவளுக்கு ஒரு வாகனத்தை பிடித்து வழிய காட்டி  எம்பசிக்கு போக சொன்னோம் அந்த இடத்தில் பாஷை புரியவில்லை அவள் உடலின் தோற்றப்பாடுகளை கண்டு கொண்டோம் அவள் பட்டிருக்கும் துன்ப துயரங்களை ( மத்திய கிழக்கில் இருக்கும் போது )

ஆனால் எல்லா அரபிகளும் அப்படி இல்லை ஒரு சிலர் மட்டுமே அரபிகளுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை அவர்களுக்கு கணணி கூட அரபி மொழிய்ல்தான் மாற்றி வைத்திருப்பார்கள் ஆங்கிலம் சிலருக்கு சுட்டு போட்டாலும் வராது  ஆங்கிலம் தெரிந்தவர்கள் படித்தவ்ர்களாகவும் பண்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில முஸ்லிம்களை கண்ணில காட்டமுடியாது ...துட்டுக்கு மட்டும் அரபிகள் தேவை 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

டோகாவுக்கு போற பிளேனில ஏறிப் பாருங்கோ.. தெரியும். ஊரில தட்டிவானில போற மாதிரி இருக்கும். ஆனால்.. டோகாவின் பளபளப்புக்குப் பின்னால்.. இவர்களின்.. வியர்வை உள்ளது என்பதை டோகா எயார்ப் போர்ட்டிலேயே காணலாம். :rolleyes:

அண்மையில் எங்கடை ஒன்று கண்டம்.... படிச்ச  கிரவுட்.. ஊரில இருந்து முருங்கக்காய் கட்டிக் கொண்டு.. வந்திச்சு. அதுவும் டோகாவுக்கால தான். தாங்க முடியல்ல. tw_blush:

ஊரில்... அவரின் காணிக்குள், காய்த்த முருங்கை காயாக இருக்கும். 
ஆசைக்கு.. லண்டனில்,  வைத்து சமைத்து சாப்பிட்டிருக்க கொண்டு வந்திருப்பார். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.