Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓலைக் கிளி

Featured Replies

ஓலைக் கிளி

 

எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம்

 

p142.jpg

 

பார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான்,

 ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக் கேட்டா, சொல்ல மாட்டேங்கிறான். உங்களை நல்லாத் தெரியும். ஒரு தடவை பாத்துட்டுப் போயிடுறேன்னு சொல்றான். ஆளைப் பாத்தா கிரிமினல் மாதிரி இருக்கு. துரத்திவிட்ரவா?''

யாராக இருக்கும் எனத் தெரியவில்லை. நான் மருத்துவர் என்பதால், நோயாளிகள் யாராவது தேடி வந்திருப்பார்களோ என்று யோசனையாக இருந்தது. ஒருவேளை ஊரில் இருந்து யாராவது தெரிந்தவர்கள் வந்திருந்தால், இப்படிக் காத்திருக்க மாட்டார்கள். அரை நிமிஷ யோசனைக்குப் பிறகு சொன்னேன், ''வேணாம், நானே வந்து பாக்குறேன்!''

படிகளில் இறங்கி முன்கேட்டை நோக்கிப் போனபோது பிங்க் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண் தூக்கம் படிந்த முகத்துடன் பைக் ஒன்றின் மீது சாய்ந்து நின்றுகொண்டு இருந்தாள். அவள் கையில் சாயம் போன ஒரு லெதர் பை வைத்திருந்தாள். பைக்கை ஒட்டி கிழவன் சிவப்பு நிறக் கதர் துண்டு ஒன்றைத் தோளில் போட்டபடியே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நான் வருவதைக் கவனித்தவனைப் போலப் பதற்றத்துடன் எழுந்துகொண்டான். இரண்டு கைகளையும் குவித்துப் பணிவாக வணக்கம் சொல்லியபடியே, ''எம்மான்... நல்லா இருக்கீங்களா?'' எனக் கேட்டான்.

p142a.jpg

அது சவட்டி! ஒரு காலத்தில் எங்க ஊரையே கதிகலங்க அடித்துக்கொண்டு இருந்த பெரிய ரௌடி அவன். இப்போது ஆள் ஒடுங்கிப்போய், கன்னக் கதுப்பு எலும்புகள் புடைத்துக்கொள்ள, குழிவிழுந்த கண்களும், நரைத்த தலையும், நீண்டு மெலிந்த கைகளுடன் அடையாளமே தெரியாமல் இருந்தான். அவனது குரல் மட்டும் அதே கனத்துடன் அப்படியே இருந்தது.

இடது காலைச் சவட்டிச் சவட்டி நடந்துபோவான் என்பதால், அவனைச் சவட்டி என்று கூப்பிடுவார்கள். உண்மையான பெயர் பரமன். இள வயதில் உலர்ந்த தேங்காய் நார் போன்ற அடர்ந்த கோரை முடியும், சிவப்பேறிய கண்களும், மீசையை ஏற்றி முறுக்கிவிட்டிருந்த இறுக்கமான முகமும்கொண்டிருந்தது அப்படியே என் நினைவில் இருந்தது. இவன் எப்படி இந்த நகரில், அதுவும் அதிகாலையில் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு என்று நினைத்தபடியே, ''நல்லா இருக்கேன் பரமா... நீ சௌக்கியமா இருக்கியா?'' எனக் கேட்டேன்

அவன் வியப்போடு, ''எம்மான்... என் பேரை எல்லாம் ஞாபகம் வெச்சிருக்கீங்க. அந்தப் பேரு எனக்கே மறந்துபோச்சி. சும்மா சவட்டின்னே கூப்பிடுங்க. அப்படித்தானே எல்லாரும் கூப்பிடு றாங்க. இது என் மக. திரவியம். இது விஷயமா உங்களைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.''

''வீட்டுக்கு வா'' என்று அழைத்தேன். அவன் தன் மகளிடம் சொன்னான், ''அந்தப் பையை அய்யாகிட்ட குடு.''

அவள் கொய்யாப் பழங்கள் நிரம்பிய ஒரு மஞ்சள் பையை நீட்டினாள்.

''சீனிக் கொய்யா. நல்லா இருக்கும். கிருஷ்ணன் கோயில் கொய்யாவுக்கு ருசியே தனி. அதான் வாங்கிட்டு வந்தேன்'' என்றான் பரமன்.

வீட்டுக்குள் வந்த அவர்கள் இருவரும் சோபாவில் உட்காராமல் ஷோகேஸை ஒட்டிய தரையில் உட்கார்ந்துகொண்டார்கள். உறக்கம் கலைந்து எழுந்து வந்த என் மனைவி, ''யார் அவர்கள்?'' எனக் கேட்டாள். எப்படி அவர்களை அறிமுகப்படுத்துவது எனத் தெரியவில்லை. அருகில் போய் தணிவான குரலில் ''ஊர்க்காரங்க'' என்றேன்.

''வெளியிலயே பேசி முடிச்சி அனுப்பிவெச்சிர வேண்டியதுதானே. எதுக்கு உள்ளே கூப்பிட்டு வர்றீங்க. பாக்கவே சகிக்கலை!'' என்றபடி சமையல் அறைக்குள் போனாள்.

''அவங்களுக்குக் காபி கொடு!'' என்றபடியே பரமன் அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்.

பரமன் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். அவன் கண்கள் கிறங்கியிருந்தன. நரைத்த மீசையைக் கைகளால் தடவிவிட்டுக்கொண்டு இருந்தான். மகள் ஷோகேஸில் இருந்த அலங்காரப் பொம்மைகளைப் பார்த்தபடியே இருந்தாள். கண்ணாடியினுள் ஒரு நாய்க் குட்டி பொம்மை இருந்தது. அதை பரமனின் மகள் கையில் எடுத்துப் பார்த் தாள்.

''அதை வெச்சிரு தாயி'' என்று சற்று கடிந்த குரலில் மகளிடம் சொல்லிய பரமன், என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். பிறகு, தழுதழுத்த குரலில் சொன்னான், ''எம்மான்... எனக்கொரு உதவி செய்யணும். நான் ஒருத்தருக்கும் பிரயோசனம் இல்லாம வாழ்ந்து வீணாப்போயிட்டேன். என் மக நல்லா படிச்சி மார்க் வாங்கியிருக்கா. இன்ஜினீயரிங் காலேஜ்ல சீட்டு கிடைச்சிருச்சி. ஆனா, பணம் கட்ட முடியலை. அதான் தெரிஞ்சவங்க, பழகினவங்க ஆளுக்கு ரெண்டாயிரம் குடுத்தா, எப்படியாவது அவளைப் படிக்கவெச்சிருவேன். அவ வேலைக்குப் போனதும் அந்தப் பணத்தை வட்டியோட திருப்பித் தந்துர்றேன். இல்லேன்னு சொல்லாம இந்த ஏழைக்கு உதவி செய்யணும்.''

''எந்த காலேஜ்ல சேக்கப்போறே?''

''திருமங்கலம் எஸ்.கே.டி. காலேஜ்ல. தினம் பஸ்ல போயிட்டு வந்து படிக்கிறேங்கிறா!''

என் மனைவி காபி கொண்டுவந்து தந்தாள். பரமன் அவளையும் கையெடுத்துக் கும்பிட்டபடியே, ''நல்லா இருக்கீங்களா தாயி... புள்ளைக சொகமா?'' என்று வாஞ்சையோடு கேட்டான். அவள் பதில் சொல்லாமல் படுக்கை அறைக்குள் போய்விட்டாள். அவளைப் பார்த்தபடியே சவட்டி என்னிடம் சொன்னான்,

''உங்க அம்மா மாதிரி ஒரு குண வதியை இந்த உலகத்துல பாக்க முடியாது. ஒரு நாள் உங்க தோட்டத் துல புகுந்து வாழைக் குலையைத் திருடிக்கிட்டு இருக்கேன். உங்கம்மா வந்துட்டாங்க. கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டிரலாம்னு நினைச்சேன். ஆனா, அவங்க சிரிச்சிக்கிட்டே, 'ஏன்டா... ஒத்த ஆள் இவ்வளவு பெரிய வாழைக் குலையை எப்படித் தூக்கிட்டுப் போவே? கூட யாராவது ஆள் கூட்டிக்கிட்டு வர்றது தானே’னு கேட்டாங்க. எனக்கு மனசு திக்னு ஆகிப்போச்சி. 'நீ செஞ்ச வேலைக்கு கைம்மாறா தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சிப் போட்டுட்டுப் போ’னு சொன்னாங்க.

நானும் மரத்துல ஏறி தேங்காய் பறிச்சிப் போட்டேன். உங்கம்மா சிரிச்சிக்கிட்டே, 'இப்போ இந்த வாழைக் குலை எல்லாம் உனக்கு நான் கொடுத்த கூலியா நினைச்சிக்கோ. வயித்துப் பிழைப்புக்குத் திருடுற உன்னைக் கோவிச்சிக்கிட்டு என்னடா ஆகப்போகுது. எல்லாத்தையும் வித்துப்போடாம, வீட்டுக்குக் கொண்டுபோயி உங்க அம்மாவுக்கும் தங்கச்சிகளுக்கும் குடு’னு சொன்னாங்க. எப்பேர்ப்பட்ட மனசு. அந்த பூதேவி எல்லாம் செத்து மண்ணாப் போயிட்டாங்க. என்னை மாதிரி உருப்படாத களவாணிப் பயக உயிரோட இருந்து பூமிக்குப் பாரமா இருக்கோம். எம்மான்... அவங்க போட்டா வெச்சிருந்தா காட்டுங்க. தொட்டுக் கும்பிட்டுக்கிடுறேன்!''

எனக்கே அதைக் கேட்கையில் சிலிர்ப்பாக இருந்தது. நான் அறைக்குள் போய்ப் பணம் எடுத்துக்கொண்டு வரும்போது பரமனையும் அவன் மகளையும் காணவில்லை. கதவு பாதி திறந்திருந்தது. வெளியே வந்து பார்த்தபோது, வாசலில் உள்ள செருப்பு ஸ்டாண்டில் இருந்து ஒவ்வொரு செருப்பாக எடுத்து அவர்கள் இருவரும் துடைத்துக்கொண்டு இருந்தார்கள்.

p142b.jpg''பரமா... எதுக்கு இதெல்லாம்? வெச்சிருப்பா... வேலைக்காரி துடைப்பா!''

''இருக்கட்டும்... வீட்டுக்குள்ளே வரும்போதே பார்த்தேன். செருப்பு எல்லாம் ஒரே அழுக்கா இருந்துச்சி. உடம்புல சிரசும் பாதமும் சுத்தமா இருக்கணும். பாதத்துல கிடக்கிற செருப்பு அழுக்கா இருந்தா மனசும் அழுக்கடைய ஆரம்பிச்சிரும். அதான் துடைச்சி வைக்கலாம்னு'' என்றபடியே தனது துண்டால் ஒவ்வொரு செருப்பாகத் துடைத்துக்கொண்டு இருந்தான். அவனது மகள் துடைத்த ஷூக்களை ஸ்டாண்டில் அடுக்கி வைத்துக்கொண்டு இருந் தாள்.

இப்படி பரமனைப் பார்ப்பது எனக்கே கஷ்டமாக இருந்தது. ஒரு காலத்தில் ஊரே பார்த்துப் பயந்த மனிதன் அவன். 'வசந்தமாளிகை’ படம் வெளியான அன்று டிக்கெட் எடுக்கப் போனபோது ஏற்பட்ட வாய்த் தகராறில், தியேட்டர் மேனேஜர் வெங்கட்ராமனின் வலது கையைப் பரமன் வெட்டி எடுத்துவிட்டதைப் பற்றி ஊரே பேசியது.

அந்த மேனேஜர் ஒற்றைக் கையுடன் தியேட்டரில் வேலை பார்த்தபோது நான் படத்துக்குப் போயிருக்கிறேன். கை வெட்டுப்பட்ட சம்பவத்தின் பிறகு, வெங்கட்ராமன் வெளியாட்கள் யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேசுவதே இல்லை என்றார்கள்.

பின்பு ஒரு முறை திலகர் திடல் அருகே வயர்மேன் துரைசிங்கத்தை பரமன் வெட்டிப் போட்டுவிட்டான் என்று ஒரே கூட்டமாக இருந்தது. காய்கறி வாங்கிவிட்டு சைக்கிளில் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்த துரைசிங்கத்தை நடுரோட்டில் வைத்து வெட்டியிருக்கிறான். செத்துக்கிடந்தவனைப் பார்ப்பதற்குத் தள்ளுமுள்ளாக இருந்தது. நானும் அருகில் போய்ப் பார்த்தேன். குடல் சரிந்துகிடக்க, வாயைப் பிளந்தபடியே துரைசிங்கம் செத்துக்கிடந்தான். சாலையில் ரத்தம் வடிந்துபோயிருந்தது. துரைசிங்கத்தின் காய்கறிப் பை சிதறி கத்தரிக்காய்களும், வாழைக்காய்களும், முருங்கைக்காயும் ரோட்டில்கிடந்தன.

வயர்மேனை எதற்காக சவட்டி குத்திக் கொன்றான் என ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சவட்டியின் அம்மாவை 'வேசி முண்ட’ என்று வயர்மேன் திட்டிவிட்டதற்காகத்தான் கொலை செய்தான் என்றார்கள். இந்தக் கொலைக்காக சவட்டியை போலீஸ் படை தேடுவ தாக பேப்பரில்கூடப் போட்டு இருந்தார்கள். அதில் மாட்டி இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்துவிட்டு வெளியே வந்துவிட்டான். அதன் பிறகு, அவனது தோற்றமே மாறிப்போனது.

பச்சைக் கரை வேட்டி யும், சந்தனக் கலர் சட்டையுமாக அவன் புல்லட்டில் வரத் துவங்கினான். கான்ட்ராக்டர் சொக்குவிடம் இருந்து அதைப் பிடுங்கிக்கொண்டான் என்றார்கள். கிராமத்தின் வீதிகளில் பலத்த சத்தத்தோடு சவட்டி புல்லட் ஓட்டிக்கொண்டு வருவான். சவட்டியின்கூடவே அவனது கையாள் லிங்கம் பின்னாடி உட்கார்ந்து வருவான். புல்லட் சத்தம் கேட்டால் போதும். டீக்கடையில் உட்கார்ந்து பேப்பர் படிப்பவர்கள் எழுந்து போய்விடுவார்கள். காரணம், பைக்கை நிறுத்தி சவட்டி உலக விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிடுவான். அவன் பேசி முடிக்கும் வரை எதிரே இருக்கிற ஒரு ஆள் வீட்டுக்குப் போக முடியாது. அத்துடன் அவன் கேட்கிற சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது.

சவட்டியிடம் சில விசித்திரமான பழக்கங்கள் இருந்தன. ஊரில் நடக்கின்ற கபடிப் போட்டிக்கான மொத்தச் செலவையும் அவன் ஒருவனே ஏற்றுக்கொள்வதோடு, கபடி விளையாடும் பையன்களுக்கு வாரம் ஒரு கிலோ கறி கொடுக்கும்படியாக கறிக்கடையில் சொல்லியிருந்தான். இன்னொரு நாள், சென்ட் விற்க வந்த ஒருவனை அடித்துத் துரத்திவிட்டு, வீட்டுக்கு ஒரு சென்ட் பாட்டில் ஓசியாகக் கொடுத் ததும் நடந்தேறியது. அவனைப் பார்த்துப் பள்ளிப் பிள்ளைகள் எவரும் பயந்தது கிடையாது. காரணம், எங்கே பள்ளிப் பிள்ளை களைக் கண்டாலும் அழைத்துப் போய் ஐஸ் விற்பவனிடம் வேண்டு மான அளவு சேமியா ஐஸ் வாங்கிக் கொள்ளச் சொல்வான். சில சமயம், மொத்த ஐஸ் பாக்ஸையும் வாங்கி உயர் நிலைப் பள்ளி மாணவர் களுக்கே கொடுத்துவிடுவதும் உண்டு.

p142c.jpgஒரு நாள் சவட்டியிடம் ஹோட்டலில் எச்சி இலை எடுத்துப் போடும் ஐயப் பன், தான் இதுவரை ஒரு முறைகூடப் பட்டுவேட்டி கட்டியதே இல்லை என்று ஆதங்கப்பட்டதைக் கண்டு, தன் சொந்தச் செலவில் ஐயப்பனுக்குப் பட்டுவேட்டி எடுத்துக்கொடுத்து, செலவுக்குப் பணம் தந்து ஊருக்கு அனுப்பிவைத்தவன் சவட்டி. இந்த குணத்துக்கு நேர் எதிராக ஒரு பானை நிறைய நாய் பீயை அள்ளிப்போட்டு மூடி, அதை ரெவின்யூ இன்ஸ் பெக்டர் வீட்டுக்குள் சவட்டி வீசி எறிந்த சம்பவமும் நடந்தேறியிருக்கிறது.

சவட்டியோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது, அப்பாவின் சைக்கிள் காணமல் போனபோதுதான். அப்பா அரிசி மாவு அரைக்க மில்லுக்குப் போயிருந்தபோது அவரது சைக்கிளை யாரோ திருடிப் போய்விட்டார்கள். சைக்கிளைக் கண்டுபிடித்துத் தரும்படியாக அப்பா சவட்டியிடம் கேட்டிருந்தார். அதற்காக சவட்டி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். அந்த நாள் அப்படியே நினைவில் பசுமையாக இருக்கிறது.

அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி, அதில் ஒரு காலைத் தூக்கி வைத்தபடியே சவட்டி சொன்னான்,

''எம்மான்... சைக்கிளை எடுத்தது எட்டூர்க் காரப் பய. சைக்கிள் இருக்கிற இடம் தெரிஞ்சிபோச்சி. ஏதோ வயித்துப்பாட்டுக்கு இல்லாமத் திருடியிருக்கான். முப்பது ரூபா கொடுத்தா, சைக்கிளை மீட்டுக் கொண்டுவந்துர்றேன்!’

அப்பா மறுபேச்சு பேசாமல் முப்பது ரூபாயை அவனிடம் நீட்டினார். அதுதான் ஊர் வழக்கம். ஆடு, மாடு, மோட்டார் பம்புசெட், சைக்கிள் எது திருட்டுப்போனா லும் அதற்கான துப்புக் கூலி கொடுத்துவிட்டால், பொருளை மீட்டுவிட லாம். பணத்தைத் தனது அகலமான மஞ்சள் நிற பெல்ட்டில் சொருகிக்கொண்டபடியே சவட்டி சொன்னான், ''தம்பியை நாளைக்குக் காலைல வீரபெருமாள் கோயிலுக்கு அனுப்பிவையுங்க. சைக்கிளைக் கொடுத்துவிடுறேன்!''

மறுநாள் சைக்கிளை வாங்குவதற்காக நான் வீரபெருமாள் கோயிலுக்  குப் போனபோது, சவட்டி நாலு பேருடன் சீட்டு ஆடிக்கொண்டு இருந்தான். தயக்கத்துடன் நின்ற என்னை அருகில் அழைத்து காதில் ரகசியம்போல, ''கருவேலங்காட்டுக்குள்ள போயி விசில் அடி. ஆள் வந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போயிருவான்!'' என்றான்.

கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து இருந்தன. அதற்குள் போவதற்குப் பயமாக இருக்கும். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கரை ஓரமாக நடந்து மேல்மடை பக்கமாகப் போய் விசில் அடித்தேன். மாடு மேய்க்கிற சிறுவன்போல ஒருவன் கண்மாய்க்குள் இருந்து வெளியே வந்து என்னைப் பார்த்துக் கேட்டான், ''சவட்டி சொன்ன ஆள்தானே?''

நான் தலையாட்டினேன். இருவரும் கருவேலங்காட்டுக்குள் நடந்தோம். வழி எல்லாம் ஆட்டுப்புழுக்கைகள் உலர்ந்துகிடந்தன. காட்டின் உட்புறத்துக்குச் சென்றபோது ஒரு கயிற்றில் சைக்கிள் மரத்தோடு தூக்கிக் கட்டிவைக்கப் பட்டு இருப்பது தெரிந்தது. ஒன்று இரண்டல்ல, பதினைந்து சைக்கிள்களுக்கும் மேலாக இருக்கும். மரத்துக்கு ஒன்றாக உயரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தன. அந்தப் பையன் சைக்கிள்களைக் காட்டி, ''இதுல எது உங்க சைக்கிள்?'' என்று கேட்டான்.

''செயின் கவர்ல எங்க அப்பா பேரு எழுதிஇருக்கும்!'' என்றேன்.

''எனக்குப் படிக்கத் தெரியாது. நீயே பாரு'' என்றான் அந்தச் சிறுவன்.

நான் சைக்கிளைஅடை யாளம் காட்டியபோது அவன் மரத்தில் ஏறி கயிற்றை விடுவித்துக் கீழே இறக்கினான். பிறகு, தனது டவுசர் பாக்கெட்டில் சொருகிவைக்கப்பட்டு இருந்த பழைய துணி ஒன்றை வெளியே எடுத்து சைக்கிளை நன்றாகத் துடைத்தான்.

''கரை வரைக்கும் சைக்கிளை உருட்டிட்டுப் போயி, அந்தப் பக்கம் போயி ஏறிக்கோ. இங்கே திருட்டு சைக்கிள் இருக்குனு யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சொன்னே... சங்கை அறுத்துருவேன்!'' என்று சொல்லி நாக்கைத் துருத்திக் காட்டினான்.

என் வயதே உள்ள சிறுவனுக்கு எப்படி அவ்வளவு தைரியம் உள்ளது என்று ஆச்சர்யப்பட்டபடியே சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தேன். அந்த சைக்கிள் மீட்புக்குப் பிறகு அப்பாவோடு சவட்டி நெருக்கமாக ஆகிவிட்டான். சில நாட்களில் அவனது கையாள் யாராவது வந்து கடனாக ஐந்து, பத்து வேண்டும் என்று வாங்கிப்போவார்கள்.

ஒரு நாள் அம்மாவுக்குக் காய்ச்சல் என்று டவுனுக்கு மருந்து வாங்கப் போயிருந்த அப்பா, கணபதி விலாஸில் நாலு இட்லி வாங்கி சூடு ஆறுவதற்குள் உடனே வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்று சவட்டியிடம் கொடுத்து அனுப்பிவைத்தார். இரவில் அப்பா வீடு வந்து சேரும் வரை சவட்டி இட்லியைக் கொண்டுவரவே இல்லை. அம்மா அதற்காக அப்பாவைத் திட்டினாள்.

''இட்லி வாங்கி யார்கிட்ட குடுத்துவிடுறதுனு ஒரு விவஸ்தை வேணாம். அவன் எங்கயாவது குடிச்சிட்டு இட்லியைச் சாப்பிட்டுப் போயிருப்பான்.''

அப்படித்தான் நடந்தது. சவட்டி அந்த இட்லியைச் சாப்பிட்டுவிட்டு திண்டுக்கல்லில் இருந்த கோர்ட் வாய்தாவுக்குப் போய்விட்டான்.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலை சவட்டி என் வீட்டு வாசலில் நின்றிருந்தான். அவனைப் பார்த்த மாத்திரம் எனது தங்கை கேலியான குரலில், ''யம்மா... சவட்டி வந்துருக்கான்'' என்றாள்.

அம்மா வாசலுக்கு வந்தபோது சவட்டி ஒரு இட்லிப் பொட்டலத்தை நீட்டியபடியே சொன் னான், ''அய்யா வாங்கிக் குடுத்தாப்ல, கணபதி விலாஸ் இட்லி, கெட்டிச் சட்னி இருக்கு பாத்துக்கோங்க!''

அம்மா அதைக் கையில் வாங்காமல் சொன்னாள், ''அது என்னைக்கு வாங்கிக் கொடுத்தது? நீ இப்போ வந்து நிக்குறே!''

''அதுவா தாயி... அன்னைக்குப் பசியில

சாப்பிட்டேன். ஆனா, மனசு கேட்கலை. அதான் கைக்காசைப் போட்டு நாலு இட்லி வாங்கிட்டு வந்தேன். கோவிச்சிக்கிடாம இதை வாங்கிக்கிடணும்!''

அம்மா சிரித்தபடியே ''இதையும் நீயே சாப்பிட்டிரு'' என்றாள்.

''சரி தாயி...'' என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அதைச் சாப்பிட்டுத் தண்ணி குடித்துவிட்டுப் போனான். அந்தச் சம்பவத்தை அப்பா கேட்டுவிட்டுச் சிரித்தபடியே சொன்னார், ''நல்ல மனசுக்காரன்தான். ஆனா, வீணாப் போயிட்டான். ரௌடிப் பயகளுக்கு ஆயுள் கம்மி. எந்நேரம் எவன் வெட்டிக் கொல்வான்னு தெரியாது!''

அப்பாவுக்கு தூத்துக்குடிப் பக்கம் உப்போடை ஸ்கூலுக்கு மாற்றல் ஆகியதால், நாங்கள் ஊரைவிட்டு வெளியேறினோம். அதுவரை சவட்டி திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தப் பெண்ணின் அம்மாவை அதற்குப் பின்னால் திருமணம் செய்துகொண்டு இருக்கக் கூடும்.

செருப்பைச் சுத்தமாகத் துடைத்துவைத்துவிட்டு, மகள் கையில் பணத்தைத் தரும்படியாகச் சொன்னான். ''எம்மான்... செஞ்ச உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். உங்க பழைய செருப்புல ஒண்ணு குடுத்தா, போட்டுக்கிட்டு நடப்பேன். கால்ல ஆணி இருக்கு. வெறுங்காலோடு நடக்க முடியலை.''

ஒரு ஜோடி செருப்பை எடுத்து நீட்டினேன். அது வேண்டாம் என்று வேறு ஒன்றைக் கையைக் காட்டினான். எடுத்துக்கொள்ளச் சொன்னேன். செருப்பைப் போட்டுக்கொண்டு சத்தம் வர நடந்துபோனான்.

அவர்கள் போவதை ஜன்னல் வழியாகப் பார்த்த என் மகள் கேட்டாள், ''யாரு டாட் அவங்க?''

சவட்டி ஒரு பெரிய ரௌடி என்பதைப் பற்றிச் சொன்னேன். அவள் நம்பவே இல்லை. இந்த ஆளா அப்படி இருந்தான் என்று வியந்து கேட்டுக்கொண்டு இருந்தாள். என் மனைவி மட்டும் சொன்னாள், ''உங்களை நல்லா ஏமாத்திக் காசு வாங்கிட்டுப் போயிட்டாங்க. அந்த ஆளையும் அந்தப் பொண்ணையும் பாத்தா ஒட்டவேயில்லை. உங்க அம்மாவைப் பத்திச் சொன்னா போதுமே, காசைத் தூக்கிக் குடுத்துருவீங்களே!''

''ஏமாத்துற ஆள் செருப்பைத் துடைச்சி வேலை செய்வானா?'' எனக் கேட்டேன்.

ஆனால், அவள் சொன்னதுபோலத்தான் நடந்திருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு, எனது கிளினிக்குக்கு வந்திருந்த எங்கள் ஊரைச் சேர்ந்த ராமநாதன், தன் வீட்டுக்கும் சவட்டி அவனது மகளைக் கூட்டி வந்திருந்தான் என்றும் தானும் பணம் கொடுத்து ஏமாந்துபோனதாகவும், ஊருக்கு போன் பண்ணி விசாரித்தபோது சவட்டிக்குக் கல்யாணமே ஆகவில்லை. இப்போது சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் காசு வசூல் பண்ணுகிற வேலை செய்து வாழ்கிறான். குடிப்பதற்குப் பணம் வேண்டி வெளியூரில் உள்ள நமது ஊர்க்காரர்களைத் தேடிப் போய் ஏமாற்றிப் பிழைப்பது அவன் வேலை. படிச்ச நம்ம எல்லோரையும் அவன் முட்டாள் ஆக்கிட்டுப் போயிட்டான் என்றான் ராமநாதன்.

அதை நிஜம் என்று என்னால் நம்பவே முடியவில்லை. வீட்டுக்கு வந்து சொல்லியபோது, என் மனைவி குத்தலாகச் சொன்னாள், ''எந்த சைஸ் செருப்பு சரியா இருக்கும்னு பாக்கத்தான் செருப்பை நோண்டி இருக்கான். அதைப் பெரிய சேவைனு நினைச்சிக்கிட்டீங்க. திருட்டுப் புத்தி ஒரு நாளும் போகாது. நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போலீஸ்ல புகார் கொடுத்து உள்ளே பிடிச்சிப் போடுங்க.''

சவட்டியை நான் அப்படி நினைக்கவே இல்லை. ஆனால், அவன் என்னிடம் கேட்டு இருந்தாலே பணத்தைத் தந்திருப்பேன். எதற் காக ஏமாற்றினான் என்றுதான் தோன்றியது. சவட்டி அப்படி நடந்துகொண்ட காரணத் தால், அதன் பிறகு ஊரில் இருந்து எந்த உதவி கேட்டு, யார் தேடி வந்தாலும் திருட்டுப்பயலாக இருக்கும் என்று மனைவி துரத்திவிடத் துவங்கினாள்.

பல நாட்களுக்கு வயதாகி ஒடுங்கிய சவட்டியின் முகம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதைவிடவும் அவனோடு கூடவந்த பெண் யாராக இருக்கும் என்ற யோசனை புதிராகவே இருந்தது.

ஆறு மாசத்துக்குப் பிறகு ஒரு நாள் கூரியரில் எனக்கொரு பார்சல் வந்திருந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது அதன் உள்ளே ஒரு ஓலைக்கிளி இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்குச் சாத்துவதற்கு வெற்றிலையை ஓலையோடு மடக்கி தினமும் புதிதாக பச்சைக்கிளி செய்வார்கள். எளிதில் கிடைக்காத பொருள் அது. கிளியோடு கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தேன்

சவட்டி யாரிடமோ சொல்லிக் கடிதம் எழுதி வாங்கியிருக்கிறான். பெண் எழுதியது போல வளைவான கையெழுத்தாக இருந் தது.

'எம்மானுக்கு என் மேல கோபமாக இருக்கும். உங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்க எனக்குத் தெரியாது. ஆனா, என்னால் மத்தவங்களை எளிதாகக் கோபப்படுத்திவிட முடியும். ஒரு மனிதன் என்னை நினைவுவைத்துக்கொள்ள இதுவும் ஒரு வழிதானே. கூட இருப்பவர்களை நாம் லேசாக மறந்துவிடுவோம். ஆனா, பிடிக்காதவங்களை ஒரு போதும் மறப்பதேயில்லை. அதுதான் மனுஷ குணம்.

நான் உங்கள் வீட்டுக் குக் கூட்டிக்கொண்டு வந்த பெண், பூக்கட்டுகிற பண்டாரத்தின் பேத்தி. ரெண்டு பவுன் நகையும் பத்தாயிரம் பணமும் இருந்தால் அவளை ரோடு போடுகிற தொழிலாளி ஒருவனுக்குக் கட்டிக் கொடுத்துவிடலாம் என்று பண்டாரம் என்னிடம் வருத்தப்பட்டு அழுதார்.

கொலை கேஸுக்காக போலீஸ் என்னைத் தேடிய நாளில் அந்தப் பண்டாரம் வீட்டில் ஒரு நாள் ஒளிந்து இருந்தேன். பண்டாரம் மனைவி எனக்காகச் சுடுசோறு ஆக்கிப்போட்டாள். அந்த விசுவாசத் துக்காகத்தான் உங்கள் அத்தனை பேரையும் தேடி வந்து, பொய் சொல்லிப் பணத்தை வாங்கினேன். உண்மையைச் சொல்லிக் கேட்டிருந்தால் யாரும் பத்து ரூபாய்கூடத் தந்திருக்க மாட்டீர்கள்.

அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தன்று அவள் என் காலில் விழுந்து திருநீறு பூசச் சொல்லிய நிமிஷம், எனக்கு அந்த அருகதை இல்லை என்று தோன்றியது. அவள் கலங்கிய கண்களுடன் 'இது நீங்க கொடுத்த வாழ்க்கை’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.  என் வாழ்க்கை யில் அன்றைக்குத்தான் முதன்முறையாக அழுதேன்.

ஒரு காலத்தில் ஊரே பார்த்து மிரளும் ரௌடியாக இருந்த என்னை ஊர்க்காரர்கள் இப்போது மறந்துவிட்டார்கள். உங்கள் அத்தனை பேரையும் தேடி வந்து ஏமாற்றியதன் வழியாக என்னைப் பற்றிய நினைவை உங்க ளிடம் புதுப்பித்துக்கொண்டது சந்தோஷமாக இருக்கிறது. இனி, என்னைப் பற்றி புகார் பேசிக்கொண்டு இருப்பீர்கள்.

யாரிடமாவது என்னைப் பற்றி எச்சரிக்கை செய்வீர்கள். ஒரு துளி பயமாக உங்களுக்குள் உறைந்துபோயிருக்கவே நான் ஆசைப்படுகிறேன். ஒருவேளை நான் செத்துப்போய்விட்டாலும் என்னைப் பற்றிய கதை கள் செத்துப்போகாது.

உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோதும் அம்மா கையால காபி குடிச்சேன். அந்த நன்றிக்கடனுக்காக இந்த ஓலைக்கிளியை அம்மாவுக்குக் கொடுக்கவும். பிள்ளைகளுக்கு ஆண்டவன் எல்லா நலனையும் அருளட்டும்.

இப்படிக்கு  சவட்டி.’

ஆழமான பெருமூச் சுடன் கையில் இருந்த கடித்தத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சமையல் அறையில் இருந்து வெளியே வந்த என் மனைவி கையில் இருந்த ஓலைக்கிளியைப் பார்த்து வியப்போடு கேட்டாள், ''ஏதுங்க ஆண்டாள் கோயில் கிளி? இதை யாரு அனுப்பிவெச்சது?''

p142d.jpg''ஊர்ல இருந்து ஒரு ஃப்ரெண்ட்'' என்றேன்.

''இப்படிக்கூட நல்ல ஃப்ரெண்ட் ஊர்ல இருக் காங்களா?'' என வியப்போடு கேட்டாள்.

''ஆமாம்'' எனத் தலையாட்டினேன்.

''இதெல்லாம் லேசுல கிடைக்காது. வெற்றிலையை மடக்கி என்ன அழகா செஞ்சிருக்காங்க? காசு கொடுத்தாலும் கடையில கிடைக்காது'' என்றபடியே கிளியை மாறிமாறிப் பார்த்துக்கொண்டு இருந்தாள். பிறகு, உற்சாகமான குரலில் கேட்டாள், ''உங்க ஃப்ரெண்டு என்ன பண்றார்?''

''பப்ளிக் சர்வீஸ்'' என்று சொன்னேன்.

அவள் ஓலைக்கிளியைத் தடவியபடியே பூஜை அறையில் வைப்பதற்காகப் போய்க்கொண்டு இருந்தாள்.

எனக்கு பரமனை மறுபடி பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.