Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

வெள்ளொளி துக்கம் அனுஷ்டிக்கிறது! - கவிதை

 

 

p85_1516187205.jpg

ழு வண்ணச் சட்டை போட்ட
வெள்ளை ஒளியை
ஒற்றை வண்ணமாய்ப் பார்த்த தவற்றை
நீயும் செய்தாய்
வண்ணங்கள் என்றால்
கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்று
வாதம் பேசினாய்
நான் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும்
வெள்ளை ஒளி
ஏழு வண்ணச் சட்டைகளையும்
கழற்றிக் காட்ட மறுத்தது
நான் அழுது கொண்டே
நீ சொன்னதையே திருப்பிச் சொன்னேன்
வண்ணங்கள் என்றால்
கண்ணுக்குத் தெரிய வேண்டும்.
கண்ணுக்குப் புலப்படாத
காதலை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்
வெடிச்சிரிப்பு
முட்டித் தள்ளிக்கொண்டு
செவிகளில் நுழையத் துவங்கியது
ஏழு வண்ணச் சட்டைகளையும்
மிக்ஸியில் போட்டு அடித்து
கறுப்புச் சட்டையாக்கி
அணிந்துகொண்டு
துக்கம் அனுஷ்டிக்க ஆரம்பித்தது
வெள்ளை ஒளி.

https://www.vikatan.com

  • Replies 212
  • Views 55.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிரிய டைரிகளின் குறிப்புகள்

தாள்கள் மிச்சம் இருக்கின்றன
நினைவுகள் நிறைய இருக்கின்றன
மை தீர்ந்துவிடவில்லை
எழுதுவதற்கான வலு இல்லை என்பதால்
டைரிகள் பட்டினி கிடக்கின்றன
பால் கணக்கோ
மளிகைக் கணக்கோ எழுதி
அதை ஆசுவாசப்படுத்த வேண்டும்
மேலும் கடன் கணக்கை எழுதி
வாய் பிளக்க வைத்துவிடக் கூடாது
கால ஓட்டத்தில்
காலாவதியாகிப்போன டைரியில்
வீட்டுப்பாடல் எழுதிச் செல்லும்
பிள்ளைகளை ரசிக்கும் ஆசிரியர்கள்
பாக்கியவான்கள்
சித்திரகுப்தனின் ஏடென
குழந்தைகளின் சித்திரங்களாய் நிறைந்த
டைரி கிடைத்தால் மட்டும்
என்னைக் கண்டுபிடித்து
என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்

- விகடபாரதி

p76a_1516704024.jpg

குயில்

பறவைகளின்
கீச்சொலி கேட்டறியா
நகரத்துப் பேரனின் செவியை
சிறகொன்றால்
சுத்தம் செய்கின்றாள்
கிராமத்துப்  பாட்டி.
பரவசம் கொள்கின்றான்  செவிக்குள் குயிலொன்று கூவுவதாய்க் கூறி.

- தமிழ் தென்றல்

பனி

இங்கே பண்ணையார்கள்
இல்லாத போதும்
கைகளைக் கட்டிக்கொள்கிறேன்

நான் பாரதி
இல்லாத போதும்
முண்டாசு கட்டிக்கொள்கிறேன்

பதற்றமான சூழல் எதுவும்
இல்லாத போதும்
உதடுகள் துடிக்கின்றன

சிக்கிமுக்கியின் பாதையில்
பயணிக்கின்றன 
உள்ளங்கைகள்

இது பனிவிழும் நாளிதழ்களின்
பரபரப்பில்லா 
தலைப்புச்செய்திகள்
 
- ரா.பிரசன்னா

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

பரவசமான கவிதைகள், பரவசப்படுத்தும் கவிதைகள்.......பகிருங்கள் மீண்டும் பரவசமடைய.....! tw_blush:

  • தொடங்கியவர்

ஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு - வேல் கண்ணன்

 

p105a_1514540172.jpg

ரவு உதிர்ந்துகொண்டிருந்தது.
நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த
இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்
நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன
அதில் எண் வரிசையைப் பதித்துக்கொண்டிருந்தார்
XXX இலச்சினை தரித்த அதிகாரி
அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை
நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாடக் கட்டளையிட்டு இருந்தார்
ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள்
பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டுப் பாடத் தொடங்கிவிட்டார்கள்
நிலவற்ற பறவைகள் மறையத் தொடங்கின
அவரால் ஒரு நாளும் முழு இரவைச் சேகரிக்க முடியவில்லை
பகல் கரையத் தொடங்குகிறது
செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்
குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
வெயிலை அள்ளிக்கொண்டிருந்தார்கள்
பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக்கொண்டிருந்தார்
XXY இலச்சினை தரித்த அதிகாரி,
அனைவருக்குமான நிலத்தைச் சுருட்டிக்கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை
இலை உதிர்த்த மரங்கள்
அணுக்கழிவால் கரையொதுங்கிய
மீனின் கண்களாய் வெறித்துக்கொண்டிருந்தன.
அவரால் எந்நாளும் ஒரு பகலைச் சேகரிக்க முடியவில்லை.

புத்தனின் விரல்நுனிக் கதிரொளியால் மினுக்குகிறது
மண்டிக்கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு

ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்துகொண்டிருக்கிறார்
அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்
ஒப்புக்கொடுத்துவிட்டு கடலலைகள் திருப்பிச் செல்கின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சொல்வனம்

 
 

படம்: ராஜ்குமார் ஸ்தபதி

 

விரும்பிய இந்த வாழ்வு!

உலவும் பத்துப் பாம்புகளில்
ஒன்றை விரும்பத்தான் வேண்டும்
விஷமில்லாத பாம்பாகப் பார்த்து
விரும்புவது உங்கள் சாமர்த்தியம்
விஷமுள்ள பாம்பும் வீரியமாகக்
கொத்திவிடாது என்றாலும்
கொத்திவிடுவதுபோலக் காட்டும் போக்கில்
கனவிலும் கற்பனையிலும் அச்சத்திலும்
நூறு முறை கொத்தப்பட்டுவிடுவீர்கள்
பாம்புகளோடு வாழப் பிடிக்கவில்லையென்றால்
தேள்களோடு வாழப் பழகுங்கள்
பழகிய பாம்புகளே பரவாயில்லை என்று
முடிவெடுப்பது பற்றி மறுபடியும் சொல்வதானால்
அது உங்கள் சாமர்த்தியம்
உங்களுக்குப் பிடிக்காத ஜந்துவோடு
பிடித்ததுபோல வாழப் பழகிக் கொள்வதைத் தவிர
அநேகமாக உங்களுக்கு வேறு மார்க்கமில்லை
நட்டுவாக்காலிகளையும் ஒருமுறை பாருங்கள்
ஒருவேளை உங்களுக்குப் பிடித்துப் போகலாம்
பிடிக்காமல் போனாலென்ன
பாம்புகள் இருக்கின்றன.

- விகடபாரதி

தவிப்பு!

இரை தேடிப்போன பறவை இருட்டிய பிறகும்
கூடு திரும்பாததால்
தூக்கமின்றித் தவிக்கிறது மரம்!

- ரவிகிருஷ்

p94a_1517389557.jpg

கனத்தைத் திறக்கும் கருவி!

கண்டெடுத்த சாவிக்குள் தெரிகிறது
பூட்டின் அவதி.
தொலைத்த கைகளின் பதைபதைப்பு
மெல்லத் தொற்றுகிறது என்னை.
அதன்
தேய்ந்துபோன காதுகளும்
துருவேறிய பற்களும்
நெடுங்கால
வாழ்வியல் அனுபவங்களைக் கண்முன் திறக்கிறது.
தொலைத்ததைத் தொலைத்த இடத்தில்
தேட வருபவருக்காய் 
இதை நானும் தொலைக்க விரும்பவில்லை
சாவியில்லாத பூட்டைத் திறப்பதென்பது
வளர்ப்பு நாயை
வாள்கொண்டு வெட்டத் துணிவதற்குச் சமம் 
என்பதை நான் அறிவேன்.
அதைப்போன்றே 
மௌனக்கடலைக் கடக்கவைக்கும் நாவாய்போல
இந்தச் சாவிகள்தாம் எவ்வளவு இலகுவானவை.
எப்போதும்
இலகுவானவைதாம்
கனத்தைத் திறக்கும் கருவிகள்.
அவ்வகையில்
உரியவர்களிடத்தில் இதைச் சேர்க்க எண்ணி 
மெல்ல இலகுவாகிக்கொண்டிருக்கிறேன்
நானும்.

- மகிவனி

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

தவிப்பு!

இரை தேடிப்போன பறவை இருட்டிய பிறகும்
கூடு திரும்பாததால்
தூக்கமின்றித் தவிக்கிறது மரம்!

 

அருமையான கவிதை..... குஞ்சுகள் தவிக்கின்றன என்று எழுதியிருந்தால் இயல்பாக கடந்து போய்விட  முடியும். இங்கு மரம் தவிக்கின்றது என்பது அற்புதம்.... .!  tw_blush:

  • தொடங்கியவர்

கையசைப்பு

கவிதை: கண்ணன்

 

p71a_1517383296.jpg

ப்போதும்
வயல்களின் ஊடாக
தடதடக்கும் சத்தத்தோடு
போய்க்கொண்டுதான் இருக்கின்றன
தொடர்வண்டிகள்...
விடுமுறை நாளில்
பெற்றோர்க்கு உதவ வந்து
வயல் நடுவே நின்றுகொண்டு
வரிசையாய்ப் பெட்டிகளை எண்ணியபடி கையசைக்கும்
கிராமத்துச் சிறுவர்கள் இன்றி.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான சிந்தனைகளைத் தரும் அற்புதமான கவிதைகள். படித்துச் சுவைக்க இணைத்து பதிவிடும் நவீனனக்கு நன்றி.

  • தொடங்கியவர்

சித்திரமேழி

கவிதை: ஆதிரன், படம்: ஏ.ஒய்.அசோக்

 

தோ ஒன்று மக்கிப்போய்.
மக்குவது நல்லது
இல்லையா…
அது ஒருவேளை உரமாகக்கூடும்
ஆனால் இது வேறுவகையில் மக்குதல்
கலவையான நிறங்களில் எதிர்மறையாக
கருகல் எனவும் சொல்லலாம்
ஒரு வகையான வரலாற்றுக் கருகல்
அல்லது ஒரு கருகிய வரலாறு
அதன் வாசம் பூர்வத்தில் அழுகிய வேம்பு.

மண்ணாய்ப் போய்விட்டது
எவ்வளவு பெரிய பேறு
மண்ணாய்ப் போவதென்பது
ஆனால் இந்த வரலாறு
வேறு வகையில் மண்ணாகிவிட்டது
புளியம்பூ நிறத்தில் மேற்பூச்சு பூசப்பட்டு
பழங்காலக் கோயிலின் மறு சீரமைப்புபோல
அலங்கோலமாய்

ஆனால் அந்தப் புளியம்பூவின் வண்ணத்தை
நம்மால் சிந்திக்க முடிகிறதா
நமக்கான மூளையில் அந்தத் திறன் இருக்கிறதா
போலவே அந்த வேம்பின் வாசனையை
நம்மால் சிந்திக்க முடிகிறதா

p76a_1517387672.jpg

இருப்பதெல்லாம் ஒரு எதிர்மறையான மக்குதல்
இருப்பதெல்லாம் ஒரு எதிர்மறையான கருகல்

எங்கோ சில லிபிகள் வெட்டாகிறது பாறையில்;
தேறல் வழியும் கிழத்தியின் கழுத்தை நாவால்…
அதற்குப் பின்னான வரிகள் சிதைந்திருந்தன
வரலாறு போலவே.

வரலாறு ஒரு தூர்த்த மரம்
மண்ணைப் பிளக்கும் கலப்பையின் ஒலி
அதில் மறைந்திருக்கிறது
மேலும் அது ஒரு கலப்பைக்கான கச்சா
அது மிகவும் அமைதியாக இருக்கிறது.

ஆனால் காலமோ கூவுகிறது
அவிந்து போன உழவர்களே அவர்களின் உமிழ்மரகத பெண்களே
நமத்துப் போன தச்சர்களே அவர்களின் தண்தனம் குழைந்த பெண்களே
பாருங்க அந்த மரத்தை, அந்தப் பரிதாபகரமான வரலாற்றை
ஒரு கலப்பைக்காகக் கிளை விரிக்கும் ஆதி வேம்பை
நமக்குக் கிடைக்க வேண்டிய மேழியை அதிலிருந்து செதுக்குங்கள்
களிமண்ணின் சித்திரத்தை அதன்மீது பொறியுங்கள்

அது ஒரு குழந்தை மேழி
மிக அழகானது. முழுமையானது
அது மனிதர்களை ஒரு போதும் செயலற்று இருக்கவிடாது

பிறகு நாம் ஒருபோதும் எதிமறையாய் மக்கிப் போகமாட்டோம்
பிறகு நாம் ஒருபோதும் எதிர்மறையாய்க் கருகிவிட மாட்டோம்
காணாமல்போன கல்வெட்டு வரிகளை நாமே எழுதுவோம்
பிறகு காகிதத்தை அழிக்கும் இயந்திரம் செய்யும் தொழிற்சாலைகளை
தானியக் கிடங்கிகளாய் மாற்றிவிடலாம்
பாலை நிலமெங்கும் மேழித் தொழிற்சாலைகள்…

ஐந்து நிலங்களிலும் சித்திரமேழிகளை சுமந்தலையும் விருமான்களைப் பற்றி பாடித்திரியும் பாணர்களைப் பெற்றெடுக்கும்
அந்த வரலாறு.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மழை போல் நனைக்கிறது

கவிதை: உமாதேவி

 

னிமையே காதலின்
அழகிய மாளிகை 
வெயில் கூரையிட்டு
ஆங்காங்கே வியாபித்திருக்கும் தனிமையில் 
உன்னையும் என்னையும் ஒளித்துக்கொள்வதிலேயே வளர்ந்தது நம் காதல்

அந்தத் தனிமைகளில்
ஆள் வரும்போதெல்லாம்
அடிக்கடி திடுக்கிடும் நெஞ்சம்
அஞ்சி அஞ்சியே வயிரம் ஏறியது காதல்

யாருமற்ற இருவர் பொழுதுகளில்
ஏதுமற்ற மொழிகளின் உரையாடலில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம் 
பிரிதல் பேயாகி
அருகினில் நோயாகி
சாகா மருந்தில் நேரும்
சின்ன சின்ன சாவு காதல்

எந்த ஒப்பனையும் இல்லாத உன்னைப்
பேரழகாகக் காட்டும் கண்ணை
காதலல்லவா தந்தது
ஒருவரைக் கடந்து ஒருவர்
நகரும் காலில்
ஒருவர் உயிரை ஒருவர் காணும் அதிசயம் அரங்கேறும்

p94a_1517995309.jpg

தெரியாமலும் தெரிந்தும் நிகழும்
அணுவண்ணத் தீண்டல்கள்
காதலின் இலாபமாகும்
யாருமறியா இடைவெளியில் விதைக்கும்
அவசர முத்தங்களில்
கோடி பணம் கொள்ளைபோனதாய்
நீ செல்லமாய்க் கோபிப்பதும்
கொள்ளையடித்த சந்தோஷத்தில்
நான் வெட்கமாய் பாவிப்பதும்

வருகைப்பதிவின்போது
அழைக்கும் உனது பெயருக்குத்
திரும்பிப்பார்க்கும் உரிமையை
நம் காதல் தந்தது
சந்திக்கச்சொல்லி அனுப்பிய
சின்ன சின்ன துருப்புகளும்
பொக்கிஷங்களாய் மெருகேறும் 
நமது காதல் குறித்த கிண்டல்கள்
நினைவுகள் குத்திக்கொள்ளும்
பதக்கங்கள்
காதல் விருட்சத்தின் வேரில் ஊறும் ஊற்று

விரும்பி விரும்பி நிரம்பிய
காதல் பெருவெள்ளத்தில்
அடித்துச்செல்லப்பட்ட உன்னை
என்னிடம் தேடுகிறேன்
என்னை உன்னிடம் தேடு

பொழுதுகளில் நிலங்களில்
பூக்களில் நீர்நிலைகளில்
பெயரெழுதி அழிக்கப்பட்ட சுவர்களில்
தழும்பாகிப்போன உடல்களில்
நந்தா விளக்காய் எரிகிறது நம் காதல்

தழும்புகளையும் மச்சங்களையும்
கணக்குப் பார்க்கும்
உனக்கும் எனக்கும்
சாதி ஒரு பொருட்டே இல்லை 

போர்க்களத்தில் காயப்பட்டு
வீழ்ந்தவர் புண்ணை
தொட்டுத்தொட்டுப் பார்ப்பதுபோல் விளையாடுகின்றன
காதல் நினைவுகள்.

https://www.vikatan.com/

 

  • தொடங்கியவர்

ஒரு காதலின் முதல் சந்திப்பு

கவிதை: மனுஷ்ய புத்திரன்

 

முதல் சந்திப்பிற்கான நெடும்பயணத்தில்
நீ நிலக்காட்சிகளைக் காணவில்லை
ஊர்களின் பெயர்களைப் படிக்கவில்லை
ஒரு முகமே உன் வழித்தடங்களானது
ஒரு பெயரே நீ கடக்கும் ஊர்ப் பெயர்களானது

முதல் சந்திப்புகள்
ஒரு சிசுவாகப் பிறந்துவருவதுபோல
அவ்வளவு நிராதரவாய்
அவ்வளவு தாகத்துடன்
வெதுவெதுப்புடன் ஒரு கரம் எடுத்துக்கொள்ள
அவ்வளவு பரிதவிப்புகள்

சந்திப்பின் முதல்கணத்தில்
எல்லா ஒத்திகைககளும்
உன்னைக் கைவிட்டுவிட்டன
நீ பேச விரும்பிய எல்லா முதல் சொற்களும்
உனக்கு மறந்துவிட்டன

கண்ணீருடன் இறுக அணைத்து
அனைவரும் காண முத்தமிடு
அல்லது
நாணத்துடன் ஒரு சுவரின் பின்னே
மறைந்துகொள்

p34a_1517900155.jpg

நீச்சல் பழகச் சென்ற நாளில்போல
உன் முதல் தண்ணீரில் நீ
குதிப்பதற்குமுன் கண்களை இறுக மூடி
நடுக்கத்துடன் நின்றிருந்ததுபோல
இப்போது நிற்கிறாய்

தயங்காதே
உன்னை அபகரித்துக்கொள்வதென முடிவுசெய்ய
ஒரு கணம் எனக்குப்போதுமானதாக இருந்தது
உன் உடலின் ஒரு துளி நறுமணம்
என்வாழ்வைப் பணயம்வைக்க
எனக்குப் போதுமானதாக இருந்தது
என் நீர்மைக்குள் இக்கணம்
நிபந்தனையற்றுக் குதித்துவிடு
உன்னை அவ்வளவு குளுமையுடன்
எடுத்துக்கொள்கிறேன்
உன்னை அவ்வளவு எடையற்றவளாக
நீந்தச் செய்கிறேன்

முதல் சந்திப்பின் கதைகளே
வாழ்நாளெல்லாம்
இனி நாம் பேசும் கதைகளாகும் இல்லையா?

முதல் சந்திப்புக்குப் பிறகு
நாம் அத்தனை பரிசுத்தமாய்
அதற்குப்பிறகு சந்திக்கவே போவதில்லை
ஒரு சந்திப்பின் அத்தனை இன்பத்தையும்
இனியொருமுறை பருகப்போவதுமில்லை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தெரியாமல் விழுந்த நிலவு

 

அனைவரையும் ஈர்க்கும்
வனப்புடன் உள்ள‌
வணிக வளாகம் அது
மையமாய் கட்டிடம்
எழும்பிய பின்
போக்குவரத்து 
மூச்சுத் திணறியது
வளாகத்தில்
எங்கெங்கும்
செல்பி 
எடுப்பதைக் காணலாம்
அதை ஏதோ
நேர்த்திக்கடன் போல்
எல்லோரும்
செய்து கொண்டிருந்தனர்
அந்த இளம்
காதலர்களுக்கு
அது வேடிக்கையாகத்
தோன்றியது
அப்போது ஏதோ தோன்ற‌
எடுத்துக்கொண்டனர்
முதன் முதலாய்
ஒரு செல்பி
அவன் பார்த்துச்
சொன்னான்
நம்மோடு மூன்றாவதாக
விழுந்திருக்கும் ஜீவன்
அழகின்
தூய்மையாகத் தெரிகிறாள்
அவள் சுத்தம் செய்வது
நுட்பமாய்
பதிவாகி இருந்தது
அந்தப் பெண்ணோடு
ஒரு படம்
எடுத்துக்கொள்ள
முடிவு செய்தனர்
திரும்பிப் பார்க்க
அவள் இல்லை
புதிர் ஆட்டம்
போலானது
தேடினர்
அவள் எங்கிருக்கிறாள்
தெரியவில்லை
வளாகம் எல்லோர்
செல்லிலும்
பதிவாகிக்
கொண்டிருந்தது
மூன்றாவது தளத்தில்
அவளைக்
கண்டுபிடித்தனர்
அவள் வேலையை
ரசிப்பது போல்
ஜிமிக்கி ஆடியது
இருவரும்
வந்த விஷயத்தைச்
சொல்ல சிரித்தாள்
வெட்கம் தூவிய சிரிப்பு
என்கூட படம்
எடுக்கணுமா
வேணாம் சார்
வேல நேரம்
சூப்ரவைசர்
பாத்தார்னா
சத்தம் போடுவாரு
நாலு வயுத்துக்காக
இங்க குப்ப
கொட்றேன், போங்க‌
சூப்பர்வைசர் சத்தம்
நெருங்கியது
என்ன ஆமைய
முழுங்குன மாதிரி
வேல பாக்கற‌
5.jpg
வேகமா செய்
இவர்களைப் பார்த்து
முறைத்தபடியே
போய் விட்டார்
அவள் பதற்றம்
மறைத்து
வியர்வையைத்
துடைத்தாள்
கண்களால்
விடை பெறுதல்
நிகழ்ந்தது
அவள் தூரிகை
போல அசைந்து
அந்த இடத்தை
சித்திரமாக்கத்
தொடங்கினாள்
ஓரமாய் நின்று
மறுபடியும் செல்பியில்
அவளைப் பார்த்து
மேலும் அருகில்
கொண்டு வந்து
சொன்னான்
தெரியாமல்
விழுந்த நிலவு.

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காதலின் கடைசி நொடிகள்

கவிதை: அறிவுமதி

 

வசரம் எனில்
நீ
புறப்படு

நிழலை
அப்புறம்
அனுப்பிவைக்கிறேன்

வெயில்
தாழ

நான் கிழிக்கும்
தேதித்
தாள்
நாமாகவும்
இருக்கலாம்

நின்று கொள்கிறேன்
வெகுநேரம்
கழித்து நீ
திரும்பிப் பார்க்கையில்

p24a_1517897087.jpg

உன்
பார்வையில் படாமல்
காட்டாற்றில்
உதிரும்
ஒரு
மருத இலையாய்

வெகுநேர விசும்பலுக்குப் பிறகு
தூங்கிவிட்டது

இது நீ
புறப்படுகிற
நேரம்

கேட்டுக்கொண்டிருக்கிறேன்
சொல்லிக்
கொண்டிருக்கிறாய்
கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
சொல்லிக்
கொண்டிருக்கிறேன்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ப்ரியங்களின் பெருவெடிப்பு...

 
 

கவிதை: யுகபாரதி

 

p28a_1517899090.jpg

பார்வைக்கு அப்பாலுள்ளதைப்
பார்க்கவே காதலெனில்
அந்தக் காதலேன் இன்னமும்
பார்க்கப்படுவதில்லை கண்களாக

p28b_1517899106.jpg

 

காதலைப் பார்க்கும்வரை
அழகாயிருந்த நிலவு
தொடர்ந்தே வருகிறது
மேடு பள்ளங்களை
ஒளியால் ஊடுருவ
மழைபார்க்க
ஜன்னலைத் திறக்கிறார்கள்
கொக்கியாயிருக்கும் காதலை
கொஞ்சமும் நெகிழ்த்தாமல்

p28b_1517899106.jpg

 

பழம் சுவைத்த பறவைகளே
காடுகளை உருவாக்கின
பதுங்க இடம்தேடும் அவை
தங்கிக்கொள்வதோ காதலில்

p28b_1517899106.jpg

 

ஊரறியக் காதலிக்க முடியாதவரை
சொர்க்கத்தில் மட்டுமே நிச்சயிக்கப்படும்
எவருடைய திருமணமும்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விருப்பப் பாடல்

முன் எப்போதோ
தன் பிரியத்துக்குரியவளின் பெயரைச்
செதுக்கிய மரம்
பின் எப்போதோ
வேரோடு முறிந்து விழுந்து
விறகாகி எரிந்துபோனதை அறியாமல்
மனதின் கிளைகளில்
இரு கிளிகளை அமரவைத்து
திரும்பத் திரும்பக்
கேட்டுக்கொண்டிருக்கிறான் ஒருவன்
‘காதலின் தீபம் ஒன்று...’ பாடலை.

p32a_1517899937.jpg

வாடாத குறிஞ்சி

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
ஓர் நாள் ஆயுளுடன்
குறிஞ்சி நிலத்தின் முகட்டில்
நானொரு பூவாய் மலர்ந்திருந்தேன்.

பரிசில் தேடிச்சென்ற
பாணன் ஒருவன்
வெறுங்கையுடன் திரும்புகையில்
என்னைப் பறித்துக்கொண்டான்.

கடந்துசென்ற
மேகத்தில்
யார் சாயலைக் கண்டானோ
வழியெல்லாம்
பாடிக்கொண்டே நடந்தான்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பொன்நிற ஒளி!

கவிதை: பழனிபாரதி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

நாம் இருந்த இடத்தில்
காலம் உறைந்திருக்கிறது

சந்திப்பின் வேர்களிலிருந்து
பூக்களாகப் பிரிந்தவர்கள் நாம்

அன்று
உன் கண்களின் வழியாக வந்த
அந்தக் காற்றில்
என் மென்துகில் படபடத்து விலகியது

கொஞ்சம் கொஞ்சமாக
காதலின் பொன்நிற ஒளியில்
என் பழைய உடலின் தூசிகள்
பறந்துகொண்டிருந்தன

p68a_1517982496.jpg

என் திறந்த மார்பில்
நீ வரைந்த பறவை
இன்னமும்
அங்கேயேதான்
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது

உரைநடையிலிருந்து
அன்னை
கவிதைக்கு அழைத்துச் செல்கின்றன
உன் கண்கள்

முற்றுப்புள்ளிகளற்ற
உன் உடலின் விரிவில்
நிற்க முடியாத வார்த்தையாக
நகர்ந்துகொண்டே இருக்கிறது
நான்

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்!

தோ மறுபடியும்
ஏமாற்றம் பிறந்திருக்கிறது
ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்
அடுத்த முறை நம்பிக்கை பிறக்கும்
அதற்காக இப்போது பிறந்திருக்கும்
ஏமாற்றத்தைக் கொண்டாடாமல் விடுவதா
நம்பிக்கை பொய்க்கும்
ஏமாற்றம் பொய்க்குமா?
நம்பிக்கையைப்போல
ஏமாற்றம் எப்போதும் துரோகம் பண்ணாது
அதற்காகவேனும் ஏமாற்றத்தைக் கொண்டாடுங்கள்
மிக மோசமான பரிசைக்
கொடுக்க நினைத்தவன் ஏமாந்து நிற்கட்டும்
அவனுக்கும் சேர்த்து ஏமாற்றத்தைக் கொண்டாடுவோம்

- விகடபாரதி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

கோவையைக் கடக்கும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்

ழைய நகருக்கு வரும்போதெல்லாம்
பழைய வாசனைகள்
என்னைத் துரத்த ஆரம்பித்துவிடுகின்றன
பழைய முகத்தைத் துடைத்தெடுத்து
தற்போதைய முகத்தின்மேல்
மாட்டிக்கொள்ளும் மனசு
பழைய வாசனைகளை உறிஞ்ச ஆரம்பிக்கிறது

புதிதாய் மாறியிருக்கும் வீதிகள்
புதிதாய் மாறியிருக்கும் வீடுகள்
புதிதாய் மாறியிருக்கும் கட்டமைப்பு
எல்லாமே பழையதாய் மாறுகிறது

இந்நகரை விட்டுப் பெயர்ந்துபோன நண்பர்களும் மெள்ளத் திரும்புகிறார்கள்
அப்போதைய மொட்டைமாடி இணைப்புறாக்கள்
பழைய நீலச்சுவரின் மேலமர்ந்து
முத்தமிட்டுக்கொள்ள ஆரம்பிக்கின்றன

ஊருக்குப் போய்விட்டதாய்ச் சொல்லப்பட்ட
டீ மாஸ்டர்
அதே வழக்கமான புன்னகையோடு
எங்களுக்கான தேநீர் தயாரிக்கிறார்

அந்த விளையாட்டு மைதானத்தில்
இரண்டு சிக்ஸர்கள் பறக்கின்றன என்னிடமிருந்து
கைதட்டல்கள் காது நிறைகின்றன

அம்மன் கோயில் பிராகாரத்தில்
பழைய சலங்கையொலி சமீபிக்கிறது
ஜீவனை மீட்டும் கண்கள்
பழைய தீபத்தில் புதிய சுடரைப்
பற்றவைக்கின்றது

நடந்த சாலைகளில் மிதக்கத்துவங்குகின்றன
பழைய காலடித்தடங்கள்

கன்னத்தில் படிந்திருப்பது
கண்ணீரா வியர்வையா
வித்தியாசப்படுத்தத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறேன்

கோவையைக் கடந்துகொண்டிருக்கிறது
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்

-சௌவி


p78_1519216796.jpg

காக்கைகளின் சமூகம்

டைமரங்களிலிருந்து பிரிந்து செல்லும் காகம்
இருட்டைத் தலையில் தூக்கிக்கொண்டு திரும்புகிறது
செழித்து வளர்ந்திருக்கும் துவரை
செங்காட்டில் மேயும் ஆட்டு மந்தை
இடையனின் தூக்கு வாளியில் கண்கள் பதித்துக்
கடக்கும் காக்கையொன்று
நெல் வயலில் மருந்து உணவருந்திச்
செத்த எலியின் ஊன் துண்டத்துக்காகப் பறந்தலைந்தது
ஒள்ளியப் பெண்டிர்கள் துணங்கை யாடி
சென்ற ஒற்றையடிப்பாதை ஊருள் நுழையும்
காகத்துக்குக் கூடு உள்ளதா
உணவு நீர் பாதுகாப்பு இன்னும் தேவை குறித்து
நகரத்தில் நினைக்க நேரமில்லை
பஞ்சு இருக்கைகளே அழுத்திக் காயமாகும் அபாயத்தில் அவர்கள் கவலை
காக்கைக் கதைகூட வழக்கொழிந்துபோனது
எனக்கொரு காக்கைக் கதை தெரியும்
அக்கதையில் அலகில் அணுகுண்டைத் தூக்கிப் பறந்தது.

- பூர்ணா ஏசுதாஸ்


மழைவில்

வா
னம் வரைய
ஆசைப்பட்ட மகளுக்கு
வண்ணங்கள் தொட்டெழுத
வானவில்லைத் தருகிறது
பகல் மழை.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காளி புன்னகைக்க விரும்புகிறாள்! - கவிதை

தாயுமானவன் மதிக்குமார்

 

காளிக்குக் காளியாய்
இருக்கப் பிடிப்பதில்லை.
குடல் வீச்சமும் ரத்த வாடையும்
குமட்டிக் கொண்டுவருகிறது.
கருமுகம் களைந்து செல்ல
கோல்டன் டைமண்ட் ஃபேசியலென
மாதாமாதம் மாற்றிப்பார்க்கிறாள்.
கபாலச்சங்கிலியை விட
கம்பெனி ஐடி நாடா
லேசாக்குகிறது அவளை.
லெக்கின்ஸின் ஸ்பரிசங்களில்
புலித்தோலை மறக்கிறாள்.
பெற்றவர்களுக்கொன்றும்
கூடப்பிறந்தவர்களுக்கொன்றும் போக மீதிக்கரங்களை
வருங்காலக்குடிலுக்கெனப் பத்திரப்படுத்துகிறாள்.

 p24_1519200198.jpg

விறைக்கும் உரையாடல்களையும்
தசைதடவும் கண்களையும்
சலிக்காது விழுங்கிக் கடக்கும் காளி
பேரைக்கூட கொஞ்சம் மறந்திருக்க
எத்தனிக்கையில்தான்
துப்பட்டாக்கள் பூக்கும்
நெடுஞ்சாலைப் புதரொன்றின்
மறைவில்
திரண்ட முழிகளோடும்
தள்ளிய நாவோடும் கோரமாய்க்
கிடக்கிறாள்.
காளிக்குக் காளியாய்
இருக்கப் பிடிப்பதில்லை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அந்தக் குரல்! - கவிதை

பவித்ரா, படம்: மஹி தங்கம்

 

p44_1519209900.jpg

ன்னை நொறுக்கிப்போடும்
சிலவற்றிடம்
மாட்டிக்கொள்கிறேன்

நான் வீடு திரும்பவில்லை
என்னை மரணத்திடம்
ஒப்படைக்கிறேன்

நான் வீடு திரும்பவில்லை
என்னைக் கொலை செய்ய அந்தக்
குரலை அனுமதிக்கிறேன்

நான் வீடு திரும்பவில்லை
இதயத்தின் மேல் பாறாங்கல்லை
உருளவிடுகிறேன்

நான் வீடு திரும்பவில்லை
இப்படியே உங்களோடு
பேசிக்கொண்டே வீடு செல்வதைத்
தவிர்க்கிறேன்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சீக்கிரம் வீடு திரும்பு!

 
sris

தண்டவாளத்தை

முடிவில்லாததாக

விட்டுச்செல்கிறது

தூரத்தே மறையும்

கடைசி ரயில் பெட்டி

மழை

வகிடு பிரித்த தலையுடன்

அமர்ந்திருக்கிறாய்

யாரையும் குற்றம் சொல்வதற்கு

ஏதுமற்று

சீக்கிரம் வீடு திரும்பு

நீயறியாத கண்ணீர்த் துளிகளின்

துக்கத்தை

இந்த ரயில் நிலையத்தில்

ஒரு கை காட்டியாய்

விட்டுவிட்டு

சீக்கிரம் வீடு திரும்பு

யாருமற்ற உன் வீட்டில்

யாருமற்ற உன் நாய்க்குட்டி

சீக்கிரம் வீடு திரும்பு

- ஆசை

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

கமல் எப்போதோ எழுதிய கவிதை!

 
kamal%20sarika%20sruthijpeg

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று பெயரிட்டு கட்சியைத் தொடங்கியுள்ளார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே ‘மய்யம்’ என்று பத்திரிகை நடத்தியவர் கமல். பல பத்திரிகைகளில், சிறுகதை, தொடர்கதை, கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதிய கமல்ஹாசன், மய்யம் பத்திரிகையில், அடிக்கடி கவிதைகள் எழுதிவந்தார்.

தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது, ஓர் கவிதை எழுதி, மய்யம் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார் கமல். இந்தக் கவிதையை கமல் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரசிகர்கள், இதை நினைவில் வைத்திருப்பார்களா... தெரியவில்லை. ஆனால், இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, சுஜாதா உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

அந்தக் கவிதை இதுதான்...

ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த

என் மழலையின் மறுகுழைவு

மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு

தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில்.

பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம்

தவறாமல் நான் செய்வேன் உன்னிடம்

கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க

உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்

என் அப்பனைப் போல்.

அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும்

கவிதைகளை இன்றே எழுதிவிட்டால்

உன்னுடன் பேசலாம்

எழுதிவிட்டேன் வா பேச!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

 

p78a_1519744639.jpg

இசை மழை

வெட்டவெளியில் கிடத்தப்பட்டிருக்கும்
பியானோவின் மீது
மழை பெய்யத் துவங்குகிறது.
முதல் துளியின் தழுவலில்
உன் பெயரை இசைக்கிறது
அடுத்த துளியின் தழுவலில்
என் பெயரை உச்சரிக்கிறது
மழை வலுத்துத் தொடர்கிறது 
உன் பெயரும் என் பெயரும்
இசைப்பது மழையா பியானோவா
தெரியவில்லை
நாம் இப்போது
நனைத்துக்கொண்டிருக்கிறோம்
பியானோவையும் மழையையும்..

- சௌவி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

p78b_1519744655.jpg

செவலை

முள்பிடுங்கக் கால் தூக்கிக் காட்டுகையில்
கிடைமாட்டு சிறுவனின் கீதாரி பாதங்களில்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பெரும் பரதேச கரடுமுரடு வயக்காடுகள்தான்

ஏதோவொரு தரிசில்
அச்சிறுவன் தனியாளாய் நின்று
பிரசவம் பார்த்துப் பிறந்ததுதான் செவலை

செல்லங்கொஞ்சி வளர்த்த செவலையை
அடிமாட்டுக்கு அனுப்புகையில்
அதன் கண்களில் வடிந்த கண்ணீர் இன்றும்
என் எச்சிலெங்கும் கரிக்கிறது

கூரைத் தாழ்வாரத்தில் செருகிய
மூக்கணாங்கயிற்றில் வீசும்
ஊரத்தண்ணீர் சாணி வாசம்
வீடெங்கும் சீறியும்
கொஞ்சியும்
செருமியும் கிடக்கிறது

நகரில் காகிதங்கள் தின்று
தனித்தலையும் பசுக்களின்
பிரசவகால இளங்கொடியின்
வீச்சத்தில் செவலையின்
வாசமடிக்கிறது...!

- முத்துராசா குமார்

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

p78c_1519744678.jpg

புன்னகை

மோனலிசா ஓவியத்தை
வரைந்திருக்கிறேன்
பாருங்கள் என்றாள்
எங்கள் வீட்டு
மோனிகா குட்டி.

அவள் வரைந்திருந்தது
மோனலிசா மாதிரி
இல்லாவிட்டாலும்
அது அச்சு அசலாக
மோனலிசா மாதிரியே
இருப்பதாக
சொல்லிவைத்தேன்.

மோனிகா உதட்டில்
ஒரு மோனலிசா புன்னகை
வெளிப்பட்டது.

 - பர்வீன் யூனுஸ்

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.