“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி தீர்க்கப்படும்” – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
Published By: Digital Desk 1
14 Mar, 2026 | 10:45 AM
மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் எனவும் “நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்க்கப்படும்” எனவும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படுகின்றன.
இந்த மோதல் காரணமாக உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கடல் வழிப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் அபாயம் குறித்து சர்வதேச வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஈரானின் புதிய தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் கடந்த நாள் முதல் தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், ஈரானின் மிக முக்கியமான தீவு நகரமாக விளங்கும் கார்க் தீவு மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், கார்க் தீவில் உள்ள முக்கியமான இராணுவ இலக்குகள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை திட்டமிட்டு அழிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், யாரேனும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதைத் தடுக்க முயன்றால், இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு சக்திவாய்ந்த மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், தாங்கள் குறிவைக்கும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்க்கப்படும்” என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை மேலும் மோசமடையும் அபாயம் நிலவுகிறது.
ஈரானின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் சுமார் 90 சதவீதம் கார்க் தீவு பகுதியிலிருந்தே நடைபெறுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
https://www.virakesari.lk/article/240927
By
ஏராளன் ·