Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உமிக்கருக்கு - சிறுகதை

Featured Replies

உமிக்கருக்கு - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்

 

 

 ணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது.  வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி இருமல் வந்தது. புகையால் அவனது கண்களில் நீர் கசிந்தது. அவனுக்கு இந்த வேலை புதிது.

வணங்காமுடியின் பட்டறை ஓனர் சானாகூணா, தாமரை டாலரின் கல் துவாரங்களை ராவுவதில் மும்முரமாக இருந்தார். பட்டறையின் வாசலைத் தாண்டி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கொக்கு பரமசிவமும், அடுத்ததாக பூனைக் கண்ணும் அமர்ந்திருந்தார்கள். தேவாரம் தாத்தா கடைசியாக அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் யாரும் உட்காரக் கூடாது என்று அவரைத் தனியாக உட்காரவைத்திருந்தனர். அவர்கள் மூவரும் தங்கள் மேஜையின் முன்பாக அமர்ந்து மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். வணங்காமுடியை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

வணங்காமுடிக்கும் கொக்கு பரமசிவத்துக்கும் ஏழாம் பொருத்தம். தினமும் சண்டை. கொக்கு, தன்னை அண்ணன் என அழைக்கவில்லை என்று முதலில் ஓனரிடம் கோள்மூட்டினான். வணங்காமுடியைவிட கொக்கு மூன்று, நான்கு வயது மூத்தவன். பட்டறையில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து அவனுடன் சண்டையாகத்தான் இருந்தது. வணங்காமுடியின் நைனா ஒருதடவை வந்து அவர்களைச் சமாதானம் செய்துவைத்தார். கொக்குவுக்கும் தனது மகனுக்கும் கீரை போண்டாவும் டீயும் வாங்கிக்கொடுத்து ராசியாக்கினார். ஒரு நாள் அவர்கள் முறைக்காமல் இருந்தனர். பிறகு ஆரம்பித்துவிட்டார்கள்... தினமும் சண்டைதான்.

வணங்காமுடி, தனது கையில் இருந்த நீர்க்காவியை இரும்புச் சட்டியில் தட்டிக்கொண்டான். பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்த கொக்கை, ஓரக்கண்ணால் முறைத்துக்கொண்டான். பதிலுக்கு அவனும் ஓரக்கண்ணால்  பார்த்து முறைத்துக்கொண்டான். பட்டறை ஓனர் புருஸ் கட்டையில் மேஜையைத் தட்டிக்கொண்டதும், அவர்கள் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

p74.jpg

தெருவில் பள்ளிக்கூடத்துக்குப் போகிற பிள்ளைகள் வணங்காமுடியை வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். வணங்காமுடிக்கு சங்கோஜமாக இருந்தது. முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான். அவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாஸா ஃபெயிலா என்றுகூட தெரியாது. ரிசல்ட் வருவதற்கு முன்பாக அவனைப் பட்டறையில் சேர்த்துவிட்டார்கள். அவனோடு ஒன்றாகப் படித்த ஒத்தைக்கொட்டுவையும் அவனது நைனா பட்டறையில் சேர்த்துவிட்டார். ஒத்தைக்கொட்டும் வணங்காமுடியும் ஒன்றாக ஐந்தாம் வகுப்பு 'E’ பிரிவில் சுடலைமுத்து வாத்தியாரிடம் படித்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்து வீடு. அவர்களது நைனாமார்கள் இருவரும் 'ஆறாம் வகுப்பு எல்லாம் படிக்கவேணாம். பேசாமல் பட்டறைக்கு வேலைக்குப் போங்க' என்று சொல்லிவிட்டார்கள். அவர்களது நைனாமார்கள் இருவரும் தச்சுவேலைக்குப் போகிறார்கள். தச்சு வேலைக்கு தங்களது பிள்ளைகள் போகக் கூடாது. தங்கம் பொன் வேலை பழகி சீக்கிரமே 'பெரிய ஆளாக’ வரவேண்டும் என நினைத்தார்கள். ஒத்தைக்கொட்டுவை மூனாகானாவிடமும், வணங்காமுடியை சானாகூணாவிடமும் பட்டறை வேலைக்குச் சேர்த்தனர்.

ணங்காமுடி, பட்டறை வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பட்டறையைக் கூட்டி எடுப்பது, தண்ணீர்ச் சட்டியில் இருக்கும் பழைய தண்ணீரை மாற்றி புதுத் தண்ணீர் எடுத்துவைப்பது, மேஜையில் இருக்கும் தூசிகளை புருஸ் கட்டையில் கூட்டிக் குப்பைச் சாக்கில் போடுவது... இவைதான்  அவன் வேலைக்குச் சேர்ந்ததும் பட்டறை ஓனர் சானாகூணா கற்றுத்தந்த வேலைகள்.

முதல் நாளில் தனக்குக் கற்றுத்தந்ததை அப்படியே பசைக்காரத்தில் ஒட்டிக்கொண்டது போல கப்பென்று பிடித்துக்கொண்டான். பட்டறையை விலக்குவதற்கு 10 நாட்களுக்குப் பிறகுதான் சொல்லித் தந்தார். சீனிக் கற்களைப் பட்டறையில் வைத்துத் தட்டி, அழுக்குத் தீரத் தேய்க்க வேண்டும். வணங்காமுடிக்கு, எதுக்கு இப்படிப் பட்டறைக்குச் சீனிக் கல்லை வைத்துத் தேய்க்கிறார்கள் என்று புரியவில்லை.

வணங்காமுடி, கொக்கு பரமசிவத்திடம், 'எதுக்கு இப்படிப் பட்டறையைத் தேய்க்கணும்?' என்று கேட்டான்.

சானாகூணா பட்டறையில் கொக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் முடிந்திருந்தது. கொக்கு தனக்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்த வணங்காமுடியைப் பார்த்து, 'உனக்கு இதுகூடவா தெரியலை? போ... போயி, உங்க நைனாகூட தச்சு வேலைக்குப் போ...' என்று கேலி பேசிச் சிரித்தான். வணங்காமுடிக்குச் சுள்ளென்று கோபம் தலைக்கு ஏறியது.

கொக்கு, மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிருந்த நேரத்தில் தேவாரம் தாத்தாவிடம் கேட்டான் வணங்காமுடி. அதற்கு அவர், 'தினமும் நாம பல்லு விலக்குறோம்ல... அதே மாதிரி பட்டறைக்கும் விலக்கணும்' என்றார். அவனுக்குச் சிரிப்பு வந்தது. இன்னமும் அவனுக்கு உமியோட்டில் இருக்கும் பழைய கருக்கு உமியை மாற்றுவதற்குச் சொல்லித் தரவில்லை. அதுதான் முக்கியமான வேலை என்று கொக்கு சொன்னான்.

தினமும் கொக்கு வந்த பிறகுதான் அந்த வேலை நடக்கும். கொக்கு பெரிய மனுஷன் போல உமியோட்டைத் தொட்டுக் கும்பிட்டு வேலையை ஆரம்பிப்பான். அவன் பெரிய பந்தா பார்ட்டி. முதலில் உமியோட்டில் இருக்கும் உமிக்கருக்கை மேலாக எடுத்து பெரிய செம்புக் கிண்ணத்தில் போட்டுக்கொள்வான். உமியோட்டைச் சுற்றி இருக்கும் பழைய உமியை பள்ளத்தில் தட்டிவிடுவான். உமியோடு உமி இல்லாமல் இப்போது சற்று கீழே இறங்கியிருக்கும். கருக்கை எடுத்த அளவைவிட இரண்டு கை அளவு கூடுதலாகப் புதிய உமியைப் போட்டு கும்மென்று புடைப்பாக வைப்பான். பிறகு உமியோட்டைச் சுற்றி இருக்கும் அழுக்கை ஈரத் துணியை வைத்துத் துடைத்துவிடுவான்.

கொக்கு பரமசிவம் வேலை செய்யும்போது அவன் கேட்பதற்கு முன்பாகவே சாமான்களை எடுத்துத் தர வேண்டும். இல்லையென்றால், அவனுக்குக் கோபம் வந்துவிடும். தனக்கு மட்டும் இந்த வேலையைச் சொல்லிக் கொடுத்துவிட்டால், பிறகு கொக்கை எந்த ஊரு வந்து பாரு என்று ஒரு கை பார்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான் வணங்காமுடி. பட்டறை எடுத்துவைக்கிற வேலைகள் முழுவதும் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டது.

தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனின் பின்னந்தலையில் ஓங்கி அடி விழுந்தது. வலியில் கத்திவிட்டான். வலியோடு திரும்பிப்பார்த்தான். அவனது ஓனர் சானாகூணா நின்றிருந்தார். அவனைப் பார்த்து, 'வேடிக்கை என்னாடா. நீர்காவியைக் குடுறா' என்று அதட்டினார். அவன் இடுக்கியைத் தந்தான். வாங்கிக்கொண்டவர் இரும்புச் சட்டியின் மேலே இருந்த துணிகளை எடுத்துப் பார்த்தார். ஊற்றிய மண்ணெண்ணெய்ச் சட்டியின் மேலாக மட்டும் இஞ்சியிருந்தது. கீழே இறங்கவில்லை. நாக்கைத் துருத்திக்கொண்டவர் 'கீரைமுண்டை’, 'கீரைமுண்டை’ என்று திட்டினார். வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு குத்தவைத்துக்கொண்டார்.

p74a.jpg

பட்டறை ஓனர் சானாகூணா, இரும்புச் சட்டியின் அடியில் இருந்த துணிகளை நீர்காவியால் புரட்டிவிட்டார். புகை கிளம்பியது. பிறகு குப்பென்று தீ பற்றிக்கொண்டது. அவனிடம் நீர்க்காவியைக் கொடுத்து துணிகளை மாறி மாறிப் புரட்டிவிடவேண்டும் என்று பக்குவம் சொல்லிக்கொடுத்தார். வணங்காமுடிக்கு 'சிவுக்’ என்றானது. 'இவ்வளவு தானா... இதுக்குத்தான் இவ்வளவு பந்தாவா?’ என்று மனதில் நினைத்துக்கொண்டான். தீ, அவனது தலை உயரத்துக்கு எழுந்தது. துணிகள் கருகத் தொடங்கின. கங்குகளை அவனால் பார்க்க முடிந்தது. அனல் அவனது முகத்தில் அடித்து வியர்த்தது.

கொக்கு பரமசிவத்தினால் பட்டறையில் உட்கார முடியவில்லை. பட்டறை ஓனர், வணங்காமுடிக்கு மட்டும் ஏதோ புதிதாக வேலை சொல்லித்தருகிறார் என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். வணங்காமுடி, தினுசாகக் கொக்கைப் பார்த்துக் கொண்டான். ஏதோ பெரிய வேலை செய்பவன் போல பாசாங்கு காட்டினான். அழுக்குத் துணிகளும் காகிதங்களும் எரிந்து அடங்கின. சாம்பலானதைக் கண்டதும் சானாகூணா திருப்தியுற்றவராக வேட்டியைக் கீழிறக்கிவிட்டு எழுந்தார்.

பட்டறையில் வேலை செய்பவர்கள் டீ குடிக்கும் நேரம் வந்துவிட்டது. ஓனர், கையைக் கழுவிக்கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்தார். வணங்காமுடிக்கு 11 மணி வேலை வந்துவிட்டது. டீ வாங்க பஜாருக்குப் போக வேண்டும். காலையில் பட்டறை திறக்கும்போது டீ வாங்கும் தூக்குவாளியையும் தம்ளர்களையும் கழுவி வைத்திருந்தான்.

வணங்காமுடி, பஜாருக்குப் போகும்போது வேறு ஏதேனும் வேலை இருந்தால் சொல்ல மாட்டார்கள். மெருகுக் கடைப் பட்டறைக்கு, சாமான்கள் வாங்கும் கடைக்கு, மெஷின் பட்டறைக்கு என்று ஏதாவது வேலை இருக்கும். மறந்துவிடுவார்கள். டீ குடிக்கும்போது அவர்களுக்கு ஞாபகம் வரும். இன்னொரு தடவை பஜாருக்குப் போகவேண்டும். அதிலும் கொக்கு வேண்டுமென்றே அவனை அலைய விடவேண்டும் என்று ஏதாவது ஒரு வேலையை சொல்லி அலையவிடுவான்.

வணங்காமுடி, டீ வாங்க தூக்குவாளியைத் தூக்கிக்கொண்டு பஜாருக்குக் கிளம்பினான். அவன் பட்டறையைவிட்டு கீழே இறங்கியதும் கொக்கு, ஓனர் காதில் ஏதோ பேசினான். அவன் பேசியது வணங்காமுடிக்குக் கேட்கத்தான் செய்தது.

'அண்ணே... உமி தீந்துபோச்சு. ரைஸ்மில்லுக்குப் போயி உமி வாங்கணும்' என்றான்.

வணங்காமுடி, 'இருடீ மாப்ளே... என்னையவா மாட்டிவிடுறே. உன்னை நான் மாட்டிவிடுறேன் பாரு. நீதான்டீ இன்னைக்கு சாக்குப் பையைத் தூக்கிட்டு ரைஸ் மில்லுக்குப் போகப்போறே’ என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

ஜாரில் கூட்டமாக இருந்தது. டீக்கடையில் டோக்கன் வாங்கிக்கொண்டான். டீ மாஸ்டரிடம், 'அண்ணே... சானாகூணாப் பட்டறைக்கு ரெண்டு டீ பார்சல். ஸ்ட்ராங்கா, ஜீனி கூடுதலாப் போட்டுத் தாங்க' என்றான். மாஸ்டர் அவனை முறைத்துக்கொண்டே புதிய டீத்தூள் மாற்றினார்.

வணங்காமுடி, கடையில் இருந்த மிட்டாய்களும் பிஸ்கட்டுகளும் இருந்த கண்ணாடிப் பாட்டில்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு நின்றான்.

ஒத்தைக்கொட்டு தூக்குவாளியை ஆட்டிக்கொண்டு நடந்து வருவதை வணங்காமுடி பார்த்தான். அவனும் டீக்கடைக்கு வந்தான். அவனது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. ஒத்தைக்கொட்டு, தூக்குவாளியை டீ மாஸ்டரின் முன்பாக 'டொம்’ என்று வைத்தான். 'அண்ணே... மூனாகானா பட்டறைக்கு ரெண்டு டீ பார்சல்' என்று கத்திச் சொன்னான். டீ மாஸ்டர் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு ஸ்டவ்வின் உஷ்ணத்தை உயர்த்தினார். ஒத்தைக்கொட்டும் வணங்காமுடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

p74b.jpg'டேய் வணங்காமுடி... இன்னைக்கு அந்த மூனாகானா பொடனியிலேயே ஓங்கி அடிச்சிட்டான்டா. வலி உசுரு போயிருச்சுடா' என்று கண் கலங்கியபடி சொன்னான்.

'எதுக்குடா அடிச்சாரு உங்க ஓனரு?'

' 'காலையிலே பட்டறைக்கு வர்றப்போ ரைஸ்மில்லுக்குப் போய் நாலு பெட்டி உமி வாங்கிட்டு வாடா...’னு சொல்லி நேத்து ராத்திரியே காசு குடுத்துவிட்டாருடா. நான் வாங்கிட்டு வர மறந்துட்டேன். காலையிலே ரைஸ் மில்லுக்குப் போய் வாங்கிட்டு வந்தேன்' என்றான். ஒத்தைக்கொட்டு சொல்லியதைக் கேட்டதும் வணங்காமுடிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கொக்கு, ஓனரிடம் சொல்லியதை இப்போது நினைத்துக்கொண்டான். கொக்குவின் பேச்சைக்கேட்டு தன்னை உமி வாங்க ரைஸ்மில்லுக்கு அனுப்பிவிடுவார்களோ என்று பயந்தான்.

'உனக்கும் அடி... எனக்கும் அடி. எனக்கு கீரைமுண்டைனு வசவு வேறே!'

'உனக்கு எதுக்குடா அடி?'

'பழைய துணியை வேகவைக்கச் சொன்னாங்க. நல்லா வேகலைனு அடிக்கிறாங்கடா.'

டீ மாஸ்டர் டீயைப் போட்டுவிட்டு, 'டேய்... தூக்குவாளியைத் தூக்குங்கடா' என்றார். அவரவர் தூக்குவாளியை எடுத்துக்கொண்டு,  இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

'டேய்... இந்த வாரம் எந்த சினிமாவுக்குடா போகலாம்?' - ஒத்தைக்கொட்டு ஆசையாக வணங்காமுடியிடம் கேட்டான்.

'இன்னும் மூணு, நாலு நாள் இருக்குல்ல' என்று வணங்காமுடி சொன்னான்.

'சரிடா... டீ ஆறிப்போறதுக்குள்ளே சீக்கிரமாப் பட்டறைக்குப் போகணும்' என்று ஒத்தைக்கொட்டு அவனது பட்டறைக்குப் போகும் பாதையில் வேகமாக நடந்து சென்றான்.

வணங்காமுடிக்குப் பயம் வந்துவிட்டது. பட்டறைக்குப் போனதும் கொக்கு தன்னைத்தான் உமி வாங்க ரைஸ் மில்லுக்கு அனுப்பப்போகிறான் என்று நினைத்துக்கொண்டான்.

ணங்காமுடி, பட்டறைக்கு வந்த புதிதில் முதன்முதலாக ரைஸ்மில்லுக்குச் சென்றான். கொக்கு அவனை அழைத்துச்சென்று ரைஸ் மில்காரரிடம் 'அண்ணே... இனிமே இவன்தான் உமி வாங்க வருவான். எங்க ஓனரு சொல்லிவிட்டாரு' என்று அறிமுகம் செய்து வைத்தான்.

ஒரு பெட்டி இரண்டு ரூபாய். இரண்டு பெட்டி வாங்கினால், 10 நாட்கள் வரும். கொக்கு, உமி அடங்கிய சாக்கு மூடையை வாங்கி வணங்காமுடியின் தலை மேல் வைத்துவிட்டு, 'ம்... தூக்கிட்டு வாடா' என்று முன்னால் நடந்தான். அதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு கொக்கின் மேல் கோபம் வரும். உமி உதிர்ந்து வியர்வையில் உடம்பு முழுக்க ஒட்டிக்கொண்டு அரிப்பு எடுத்தது.

ணங்காமுடி, வீட்டுக்கு வந்து அவனது அம்மாவிடம் சொன்னான். அவனது அம்மா சுடு தண்ணி காயவைத்து மேல்கால் எல்லாம் நீவி நீவி ஊற்றிக் கழுவிவிட்டாள். அப்படியிருந்தும் இரண்டு நாட்கள் அரிப்பு எடுத்துக்கொண்டிருந்தது.

தற்குப் பிறகு, வணங்காமுடியே ஒரு தடவை ரைஸ் மில்லுக்கு உமி வாங்கிக்கொண்டு வந்தான். பட்டறை ஓனர், சாக்கு மூடையைப் பிரித்து உமியைப் பார்த்தார். உமியில் அரிசியும், குருணையும், நெல்லும் கலந்து இருந்தன. ஒரு கை உமியை எடுத்து உமியோட்டு நெருப்பில் போட்டார். நெருப்பில் இருந்து புகையும் சிடுசிடுவெனச் சத்தமும் டுப்டுப் என்று தீ வெடித்துத் தீப்பொறி பறந்தது. அரிசி நெருப்பில் கருகும் வாசமும் நெல்லின் கருகலும் போக சிறிது நேரமானது. பட்டறையில் இருந்தவர்கள் தும்மவும் இருமவும் செய்தார்கள். தேவாரம் தாத்தா, 'ஏறா கொடுகா... பார்த்து வாங்க வேணாமா?' என்று மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக்கொண்டார். அவருக்கு, கண்களில் இருந்து நீர் வடிந்தது.

சானாகூணாவுக்குக் கோபம் இந்த அளவு இல்லை. மேஜையில் இருந்த புருஸ் கட்டையைத் தூக்கி வணங்காமுடியின் மேல் எறிந்தார். வணங்காமுடி சைஸாக ஒதுங்கிக்கொண்டான். புருஸ் கட்டை பட்டறையைவிட்டு வெளியே போய் சாக்கடையில் விழுந்தது. அதன் பிறகு கொக்கு ரைஸ் மில்லுக்குப் போய் உமியை மாற்றிக் கொண்டுவந்தான். அவன் வாங்கிக்கொண்டு வந்த உமி சைஸாக மாவு போல் இருந்தது. பெருவிரலிலும், ஆள்காட்டி விரலிலும் சிட்டிகை அளவு எடுத்து உமியோட்டு தீயில் தூவிவிட்டார். உமி, தீயில் பொசுங்கி தீயோடு தீயானது. சானாகூணா, 'பாரு கீரைமுண்டை பாரு. இப்படி வாங்கணும்' என்று அவனது காதைப் பிடித்துத் திருகினார். வணங்காமுடிக்கு காது இப்போதும் சிறிது வலிக்கத்தான் செய்தது. நல்லெண்ணெயைக் காய்ச்சி அவனது அம்மா தடவிவிட்டாள். இரண்டு நாள் வலி இல்லாமல் இருந்தது. திரும்பவும் காது லேசாக வலித்தது. அதைப் பொறுத்துக்கொண்டு சானாகூணா பட்டறையில் வேலைக்கு இருந்தான்.

ஒத்தைக்கொட்டு அவனிடம், 'எங்க பட்டறையிலே பனைமரம் கோவாலு தீபாவளி போனஸு வாங்கிக்கிட்டு வேற பட்டறைக்குப் போயிடுவாருடா. அப்போ எங்க ஓனர் மூனாகானாக்கிட்டே சொல்லி உன்னையை எங்க பட்டறையிலே சேத்துருறேன்' என்று சத்தியம் செய்துகொடுத்திருந்தான். அந்தச் சத்தியத் துக்குக் கட்டுப்பட்டுப் பொறுமையாக இருந்தான். மூனாகானா பட்டறையில் சேருவதற்குள் உமியோட்டுக்கு உமி மாற்றிப் பழகிவிட்டால் போதும் என்று நினைத்தான்.

p74c.jpgணங்காமுடி, நினைத்ததுபோலவே நடந்தது. கொக்கு, உமி வாங்குகிற சாக்குப் பையை எடுத்துத் தயாராக வைத்திருந்தான். சாக்குப் பையைப் பார்த்ததும் அவனுக்கு காதுக்குள் மெஷின் ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. வணங்காமுடி பட்டறைக்குள் நுழைந்ததும் தூக்குவாளியைப் பிடுங்காத குறையாக கொக்கு வாங்கிக்கொண்டான். கழுவிவைத்திருந்த தம்ளரில் ஊற்றினான். கொக்கை, ஓரக்கண்ணால் அவன் பார்த்தான். கொக்கு சிரிப்பது தெரிந்தது. நான்கு தம்ளர்களில் மட்டும்தான் டீ ஊற்றினான். தம்ளர்களின் கழுத்து நிறைய ஊற்றிவைத்திருந்தான். தன்னையும் சேர்த்து பட்டறையில் மொத்தம் ஐந்து பேர். எதுக்காக கொக்கு நான்கு தம்ளர்கள் மட்டும் டீயை ஊற்றுகிறான் என்று நினைத்தவன் பட்டறைக்குள் நுழைந்தான்.

பட்டறை ஓனர் அவனைப் பார்த்து, 'டேய் இவனே... நீ போயி ரைஸ் மில்லுலே உமி வாங்கிக்கிட்டு வாடா' என்று சொன்னார். வணங்காமுடி உம்மென்று நின்றிருந்தான். அவனுக்கு முகம் வாடிப்போய்விட்டது. ஓனர் பேச்சைக் கேட்காதவன் போல நின்றிருந்தான். சானாகூணா கோபமாக அவனைப் பார்த்தார். 'டேய் இவனே... சொல்றது காதுல விழுதா?' என்று சத்தம் போட்டார். உலுக்கி விழுந்தவன் பயந்துபோய் அவனை அறியாமல் சாக்குப் பையை எடுத்துக்கொண்டான். பட்டறையைவிட்டு கீழே இறங்கினான்.

சானாகூணா, 'காசு வாங்கிட்டுப் போ. காசு இல்லாம ரைஸ் மில்லுக்காரன் சும்மாவாத் தருவான்?' என்று மேஜையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தார்.

வணங்காமுடி வாங்கிக்கொண்டு நடந்தான். அவன் பட்டறையைவிட்டுக் கீழே இறங்கும் போது கொக்கு சத்தமாக, 'இந்தாங்க அண்ணே டீ' என்று ஓனருக்கு தம்ளரைத் தந்தான். வணங்காமுடிக்கு அழுகை வந்துவிடுவது போல் இருந்தது. 'இருடீ கொக்கா, இன்னும் கொஞ்ச நாளையிலே பனைமரம் கோவாலு பட்டறையைவிட்டு விலகிப்போயிருவான். நான் அங்கே போய் சேர்ந்துருவேன். அப்புறம் நீதான்டீ சாக்குமூடையைத் தூக்கிக்கிட்டு அலையணும்’ என்று நினைத்துக்கொண்டான்.

சாக்குப் பையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு வெறுப்பாக நடந்தான். ரைஸ் மில் இரண்டு தெருவைத் தாண்டி இருக்கிறது. உமியை வாங்கிக்கொண்டு சாக்குமூடையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு வரவேண்டும் என்பதை நினைக்கும்போது அவனது உடம்பு எல்லாம் அரிப்பெடுக்க ஆரம்பித்தது. மூடையில் இருந்து உமி உதிர்ந்து தலையில் விழுந்து தோள்பட்டை, முதுகு என்று வியர்வையில் உமி ஒட்டிக்கொண்டு அரிப்பெடுக்கும். இரண்டு, மூன்று தடவையாவது குளித்தால்தான் அரிப்புப் போகும்.

தெருவில் இரண்டு நாய்கள், ஒன்றையன்று துரத்திக்கொண்டு வேகமாக ஓடி வந்தது. வணங்காமுடி, ராண்டா கம்பிக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டான். நாய்கள் இரண்டும் அவனைக் கடந்து சென்ற பிறகு நடந்தான்.

ரைஸ் மில்லுக்குப் போகும் பாதையில் சினிமா படத்தின் போஸ்டர்கள் ஏதாவது ஒட்டியிருக்கிறார்களா என்று வேடிக்கை பார்த்தான். சென்ட்ரல் தியேட்டரில் 'மலைக்கள்ளன்’ தினசரி மூன்று காட்சிகள். பொன்னு தியேட்டரில் 'வசந்தமாளிகை’ தினசரி மூன்று காட்சிகள். மீனாட்சி தியேட்டரில் 'பார் மகளே பார்’ தினசரி மூன்று காட்சிகள். ராஜு தியேட்டரில் 'தங்கமகன்’ தினசரி நான்கு காட்சிகள். வரிசையாக போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். 'தங்கமகன்’ படத்தை போன வாரம் கூட்டத்தில் நின்றுகொண்டு ஒத்தைக்கொட்டும் அவனும் பார்த்தார்கள். இந்த வாரம் புதிதாகப் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தங்கமகனைத்தான் இந்த வாரமும் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

ரைஸ்மில்லில் இரண்டு, மூன்று பேர்கள் இருந்தனர். கிழவி ஒருத்தி கேப்பையை அரைக்க மெஷின் அருகில் நின்றிருந்தாள். அவளது கையில் சாணி மெழுகியக் கூடை ஒன்று இருந்தது. மெஷின் ஓடுகிற சத்தத்தில் அவளது மண்டை அவளை அறியாமல் ஆடிக்கொண்டு இருந்தது.

வணங்காமுடி, முதலாளி அமர்ந்திருக்கும் கல்லாப்பெட்டியின் அருகே சென்று, 'ரெண்டு பெட்டி உமி கொடுங்கண்ணே' என்று காசை மேஜையின் மீது வைத்தான்.

ரைஸ் மில் முதலாளி, காசை வாங்கி கல்லாப்பெட்டியில் போட்டுக்கொண்டார்.

'அண்ணே... சீக்கிரமாக் கொடுங்க. அவசர வேலை' என்று சொன்னான்.

'பொறுடா... ஆசாரிப்பயக பூராவும் சுடுதண்ணியைக் கால்ல ஊத்திட்டு வருவீங்க' என்று சலித்துக்கொண்டார். ரைஸ் மில்லுக்குப் பின்னாடி இருக்கும் அறையில் பெரிய குழி போல பள்ளம் இருக்கும். அதில்தான் உமியைக் கொட்டிவைத்திருப்பார்கள். குழியில் இறங்குவதற்கு அதிலேயே ஏணி இருக்கும். அதன் வழியாக இறங்கி பெட்டியில் உமியை அள்ளி சாக்குப் பையில் போட்டுக்கொடுப்பார்கள். வணங்காமுடி, உமியை அள்ளித் தரும் ஆளைத் தேடினான்.

ரைஸ் மில்லுக்குப் பின்னாடி இருந்து பனைமரம் கோவாலு, சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். அவனது தலையில் உமியும் புழுதியும் அப்பியிருந்தன. வணங்காமுடி, அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.

'அண்ணே... நீங்க ரைஸ் மில்லுக்கு வந்திருக்கிங்க! ஒத்தைக்கொட்டு வரலியா?' என்று கேட்டான்.

'ஒத்தைக்கொட்டுப் பய கீழே விழுந்துட்டான்டா.'

'எப்போண்ணே?'

'டீ வாங்கிட்டு வர்றப்போ நாய் துரத்தியிருக்கு. லூஸுப்பய நின்னு வரவேண்டியதுதானே. ஓடியிருக்கான். கால் தடுக்கிக் கீழே விழுந்து முழங்கால் சிராச்சிருச்சுடா. அழுதுட்டே வீட்டுக்குப் போயிருக்கான்' என்றான்.

வணங்காமுடிக்கு என்னமோ போல் ஒருந்தது. அப்படியே நின்றுகொண்டான். ரைஸ் மில்காரர், 'போடா போ. போயி... உமியை வாங்கிக்கோ' என்றார். அவனும் சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு நடந்தான். நடந்தவன் திரும்பிவந்து பனைமரம் கோவாலுவிடம், 'அண்ணே... நீங்க தீபாவளி முடிஞ்சதும் பட்டறையைவிட்டு விலகப்போறீங்களாண்ணே?' என்று கேட்டான்.

பனைமரம் கோவாலு ஒன்றும் பேசவில்லை. சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு ரைஸ் மில் வாசலை நோக்கி நடந்தான். அவன் பின்னால் சென்றவன், 'அண்ணே... தீபாவளி முடிஞ்சதும் விலகப்போறீங்களா?' என்று திரும்பவும் கேட்டான்.

'இல்லைடா. எங்க ஓனரு போக வேணாம்னு சொல்லிட்டாரு' என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்தான்.

வணங்காமுடி அவனைப் பார்த்தபடி நின்றிருந்தான். கேப்பை மாவை அரைத்துக்கொண்டு கூடையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிழவி அவனைக் கடந்துபோனாள்.

'டேய்... உமியை வாங்கிட்டு பட்டறைக்குப் போடா' என்று ரைஸ்மில்காரர் அவனைத் திட்டினார். வணங்காமுடிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கொக்கு, அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோல அவனுக்குக் கேட்டது. மெஷின் ஓடும் சத்தத்தையும் மீறி அவன் சிரிக்கும் சத்தம் கேட்டது. சிரிக்கிறதைக் கேட்கக் கூடாது என்று வேகவேகமாக ரைஸ்மில் பின்பக்கத்துக்குச் சென்றான். அவனை அறியாதபடி அவனது கண்களில் நீர்த் துளிகள் திரண்டு வந்து நின்றிருந்தன!.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.