Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்?

Featured Replies

சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்?

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைREUTERS

சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை.

போர் தொடங்கியது எப்படி?

போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை அதிபர் அல்-அசாத்தின் ஆட்சியில் உள்ளது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்தனர். தந்தை ஹஃபீஸிற்கு பிறகு, 2000ஆம் ஆண்டில், அதிபரானார் அல்-அசாத்.

டெர்ரா நகரின் தெற்குப்பகுதியில், 2011ஆம் ஆண்டின் மார்ச் மாதம், அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்ட, ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒரு கண்டன போராட்டம் நடைபெற்றது. இத்தகைய போராட்டங்களை செய்வோரை நசுக்க, அரசு தனது படைகளை பயன்படுத்த, அதிபர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கியன.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைREUTERS

அமைதியின்மை தொடரத் தொடர, போராட்டங்கள் வெடித்தன. முதலில் தற்காப்பிற்காகவும், பிறகு தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை விரட்டி அடிக்கவும், எதிரணியை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். `அந்நிய சக்தியின் உதவிகளை பெற்றுள்ள பயங்கரவாதிகளை` முழுமையாக நசுக்கி நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருவேன் என்று அதிபர் உறுதிமொழி அளித்தார்.

இந்த வன்முறைகள் மிக விரைவிலேயே அடுத்த நிலைக்கு சென்று உள்நாட்டு போராக மாறியது. அரசின் படைகளை எதிர்கொள்வதற்காக, நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்தனர்.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?

போர் ஏன் பலகாலங்களுக்கு நீடித்தது?

சுருக்கமாக சொல்லப்போனால், அதிபரின் ஆதரவுப் படைகளுக்கும், எதிரானவர்களுக்கு இடையிலான போர் என்ற வடிவத்தை இந்த போர் தாண்டியிருந்தது.

அமெரிக்கா, சௌதி அரேபியா, ரஷ்யா மற்றும் இரான் போன்ற உலக சக்திகளின் தலையீடு இதில் முக்கிய விடயங்களாக அமைந்தன. அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகள் இப்போர் தீவிரமடையவும், தொடரவும் வழிவகுத்தன.

இது பிற்காலத்தில், சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியது.

நாட்டில் பெரும்பான்மையில் உள்ள சுன்னி பிரிவு இஸ்லாமியர்களை அதிபரின் ஷியா அலாவித் பிரிவுக்கு எதிராக தூண்டிவிட்டு, பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக வெளிநாட்டு சக்திகள்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இந்த பிரிவு இருதரப்பிலிருந்தும் அத்துமீறல்கள் நடக்க ஊக்கமளித்தது. இதனால் உயிர்ச்சேதம் மட்டுமில்லாமல், அமைப்புகள் பிளவுபட்டன, சூழல் மிகவும் கடினமானது, அரசியல் தீர்வுகாண்பதற்கான நம்பிக்கை என்பது குறைந்தது.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைREUTERS

இந்த பிரிவுகளில் ஜிகாதிக்குழுக்களும் இணைந்து கொண்டன. அவை மேலும், இந்தப் போரில் பல பகுதிகளை உருவாக்கின. அந்நாட்டின் வட-மேற்கு பகுதியின் பல பகுதிகளை ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற குழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தஹ்ரிர் அல்-ஷாம் என்பது, அல்-கய்தா மற்றும் அல்-நுஸ்ராவின் கூட்டணியில் உருவான குழுவாகும்.

இதற்கிடையில் சிரியாவின் வட-கிழக்கு பகுதிகளின் பல பகுதிகளை இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழு கைபற்றியது.

ஆனால் தற்போது, ரஷ்யாவின் ஆதரவு கொண்ட அரச படையினர், குர்துக்களின் ஆதரவுகொண்ட கிளர்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்காவின் ஆதரவைக்கொண்ட குர்திய ராணுவ ஒப்பந்தக்குழு ஆகியோரின் தாக்குதலால், நகர்புறத்தில் தனக்கு இருந்த வலிமையான இடங்களை கைவிட்டுச் சென்ற ஐ.எஸ் குழு, ஒரு சில சிறிய இடங்களை மட்டும் தன் கைக்குள் வைத்துள்ளது.

ஷியா பிரிவினரின் புனித தலங்களை பாதுகாப்பதற்காக, லெபனான், இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பல ஷியா கிளர்ச்சியாளர்கள் சிரியா அரசு ராணுவத்துடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைAFP

ஏன் பல வெளிநாட்டு சக்திகள் இதில் சம்மந்தப்பட்டுள்ளன?

அதிபருக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்ய அரசு, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சிரியா அரசை `நிலையாக` வைப்பதற்காக விமான தாக்குதலுக்கான பிரசாரத்தை தொடங்கியது.

`பயங்கரவாதிகள்` மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்தபோதிலும், அதன் தொடர் தாக்குதல் என்பது, மேற்கத்தியர்களின் ஆதரவை பெற்றிருந்த கிளர்ச்சியாளர்கள் மீதும், பொதுமக்கள் வசித்த இடங்களிலும் நடந்ததாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யாவின் இந்த தலையீடு என்பது, போரின் திசையை அதிபருக்கு ஆதரவாக மாற்றியது. 2016ஆம் ஆண்டின் பின்னாட்களில், கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு அலெப்போவில் ரஷ்ய விமானப்படையின் தாக்குதல் அதிகமாக இருந்தது.

பிறகு 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ரஷ்யாவின் சிறப்பு படையினர் மற்றும் பிற குழுக்களின் இணைந்த தொடர் தாக்குதல், டேர் அல்-சோர் நகரில் இருந்த ஐ.எஸ் குழுவின் உறுதியான கட்டுப்பாட்டை உடைத்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய படைகளின் சில பிரிவை பின்வாங்கிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஆனால், சிரியா முழுவதும் அவர்கள் தொடர்ந்து விமானப்படை மூலம் தாக்குதல்கள் நடத்தினர்.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஷியா பிரிவின் ஆட்சியில் உள்ள இரான் அரசு, ஒரு ஆண்டில், பல பில்லியன் டாலர்களை அலாவித் ஆதரவு அரசை எதிர்ப்பதற்காக அளிப்பதாக நம்பப்படுகிறது. இதன்மூலம், அவர்களுக்கு அரசியல் ஆலோசனை, மானிய விலையில் ஆயுதங்கள், எண்ணெய் பரிமாற்றங்கள் ஆகியவை செய்வதாக நம்பப்படுகிறது.

மேலும், நூற்றுக்கணக்கான வீரர்களையும் சிரியாவிற்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அரபு நாடுகளில் இரானின் மிகவும் நெருங்கிய கூட்டாளியாக அதிபர் அசாத் உள்ளார். இரானின் ஆயுத தளவாடங்களை ஷியா இஸ்லாமிய அமைப்பான ஹெஸ்புல்லாஹ்விற்கு அனுப்பும் முக்கிய புள்ளியாக சிரியா உள்ளது. இந்த அமைப்பும், அரசின் வீரர்களுக்கு உதவ ஆயிரக்கணக்கான வீர்ரகளை அனுப்பியுள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பினர் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பெற்றுள்ளது குறித்து அதிகம் கவலை அடைந்துள்ள இஸ்ரேல், `சிரியாவிற்காக` என்ற பெயரில், டஜன் கணக்கான வான்வழி தாக்குதல்களை நடத்தி அக்குழுவை நாசம் செய்ய முயன்றுள்ளது.

அதிபர் அசாத் தான் அனைத்து அத்துமீறல்களுக்கும் காரணம் என்று கூறும் அமெரிக்கா, எதிரணியினருக்கு ஆதரவளிக்கிறது. ஒரு காலத்தில், `மிதமான` கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ உதவிகளும் செய்துள்ளது.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், ஐ.எஸ் படைகள் மீது வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்கா, சில சூழல்களில் அரசுக்கு ஆதரவான படைகளை மட்டுமே குறி வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைAFP

ஹான் ஷேஹூன் நகரில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு பின்னணியாக இருந்தது என்று கூறப்பட்ட ஒரு விமான தளத்தின்மீது தாக்குதல் நடத்துமாறு 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக சிரியாவின் உள்ளே இருக்கும் குழுதான் எஸ்.டி.எஃப் எனப்படும், சிரியா ஜனநாயகப்படை. இது குர்து மற்றும் அரபு கிளர்ச்சியாளர்களின் கூட்டுக்குழு ஆகும். கடந்த 2015ஆம் ஆண்டு முதல், சிரியாவில் பல இடங்களை கைப்பற்றியிருந்த ஐ.எஸ் குழுவை அங்கிருந்து வெளியேற்றிய குழு இதுவாகும்.

கடந்த ஜனவரி மாதம், பாதுகாப்பு, இரானிய படைகளின் ஊடுருவலை சமாளித்தல், உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர உதவுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக எஸ்.டி.எஃப் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், அமெரிக்க படைகள் இருக்கும் என்று அந்நாடு அறிவித்தது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் அடுத்த நாடு துருக்கி. எஸ்.டி.எஃப் குழுவின் பெரும்பான்மை வகிக்கும் ஒய்.பி.ஜி என குறிப்பிடப்படும் குழுவை கட்டுப்படுத்த இந்த சூழலை துருக்கி பயன்படுத்திக்கொண்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், ஜராபுளூஸ் மற்றும் அல்-பாப் ஆகிய இடங்களில் குர்துக்களால் கட்டுப்படுத்தப்படாத எல்லைப்பகுதிகளுக்கு ஐ.எஸ் குழுவை தள்ளுவதற்கான சண்டையில் துருக்கி குழுவும் பங்கெடுத்தது.

சுன்னி பிரிவு இஸ்லாமியர்களின் ஆட்சியில் உள்ள சௌதி அரேபியாவும், இரானின் ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்க முயன்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்நாடும் பெரிய விநியோகம் செய்துவருகிறது.

போரின் தாக்கம் என்ன?

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைREUTERS

குறைந்தபட்சம் 2.5லட்சம் மக்கள் இறந்திருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது. எனினும், 2015ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் முதல் தனது கணக்கெடுப்பை நிறுத்திக்கொண்டது ஐ.நா.

ஐக்கிய ராஜ்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கண்காணிப்பு குழுவான, மனித உரிமைகளுக்கான சிரியாவின் ஆய்வகம், கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் 3,46,600 பேர் இறந்துள்ளதை ஆவணப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் 1,03,000 பேர் பொதுமக்கள். இந்த கணக்கெடுப்பில், காணாமல் போயிருக்கலாம், இறந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்ட 56,900 பேர் சேர்க்கப்படவில்லை என்பதையும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த விவகாரத்தால் 4.7லட்சம் மக்கள் இறந்துள்ளதாக ஒரு குழு (think-tank) கணக்கிட்டது.

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைREUTERS

ஐ.நாவின் கணக்கின்படி 5.6 மில்லியன் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். சமீபகால வரலாற்றிலேயே இல்லாத அளவிலான இந்த புலம்பெயர்தலை சமாளிக்க, அருகாமை நாடுகளான லெபனான், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகியவை திணறின.

சிரியா அகதிகளில் 10சதவிகிதம் பேர் பாதுகாப்பான முறையில் ஐரோப்பாவில் தஞ்சம் சேர்ந்தனர். மேலும் 6.1 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டினுள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

2018இல், சிரியாவினுள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் 13.1மில்லியன் மக்களுக்கு உதவ 3.5பில்லியன் தொகை தேவைப்படும் என ஐ.நா கணக்கிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 70% மக்கள் மிகவும் கொடுமையான வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். விலைவாசி மற்றும் உணவுத்தட்டுபாட்டால் ஆறு மில்லியன் மக்கள் உணவில்லாமல் தவிக்கின்றனர். சில பகுதிகளில் உள்ள மக்கள் தங்களில் 15 முதல் 20 சதவிகித வருவாயை குடிநீரிற்காக செலவிடுகிறார்கள்.

மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் சென்று சேர முடியாத நிலையை போரில் ஈடுபட்டுள்ள குழுக்கள் உருவாக்கியுள்ளன. சுமார் 2.98 மில்லியன் மக்கள் உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் உள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைAFP

இருதரப்பினராலும், ஒருவரை ஒருவர் தோற்றனர் என்று பழி சுமத்துவது என்பது முடியாது என்பதால், அரசியல் ரீதியான முடிவு மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும் என்று சர்வதேச சமூகம் பல காலங்களுக்கு முன்பு முடிவு செய்தது.

ஐநாவின் பாதுகாப்புக்குழு, 2012 ஜெனிவா குழுவை (2012 Geneva Communique) அமலாக்க அழைப்பு விடுத்தது. இந்த குழுவானது `இருதரப்பின் கவனத்துடன் உருவாக்கப்பட்ட`, நிர்வாகக் குழுவாகும்.

2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஜெனிவா 2 என்ற அமைதி பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக ஐ.நா செயல்பட்டது. ஒன்பது குழுக்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் கடைசி சுற்று கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

அரசியலமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டுவரவும், சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்தவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறிய அளவிலான முன்னேற்றமும் ஏற்பட்டது.

போர்க்களத்தில் பல இடங்களில் பின்வாங்கியபோதும், பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தொடர்ந்து அதிபர் பதவி விலக வேண்டும் என்று கேட்கப்பட்டு வந்ததால், இந்த பேச்சுவார்த்தைகளின் மீது ஆர்வமில்லாதவராக இருந்தார் அதிபர் அசாத்.

மேற்கத்திய சக்திகள், இந்த பணிகளுக்கு இடையே, ரகசிய முறையில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனது கூட்டாளி அணிகள் தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்று இந்த நடவடிக்கைகளில் அது ஈடுபட்டதாக கூறுகின்றன.

கடந்த ஜனவரியில் ரஷ்யாவில் சர்வதேச பேச்சுவார்த்தைக்கான மாநாடு நடந்தபோதிலும், பெரும்பாலான அரசியல் எதிர்கட்சிகளும், ஆயுதமேந்திய குழுக்களும் அதில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

அஸ்தானாவில் ரஷ்யா, இரான் மற்றும் துருக்கிக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாகவே இந்த மாநாடு அமைக்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், இந்த நாடுகள், சிரியாவில் நான்கு விரிவாக்க இடங்களை அமைக்க ஒப்புக்கொண்டன. ஆரம்பத்தில் தாக்குதல் குறைந்திருந்தாலும், மே மாதத்திற்கு பிறகு அதில் இரண்டு இடங்களில் அரசு தாக்குதல் நடத்த தொடங்கியது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் மீதமுள்ள இடங்கள் எவை?

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமைAFP

சிரியாவின் பெரிய நகரங்களை அரசு தன்வசப்படுத்தினாலும், பெரும்பான்மையான இடங்கள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இட்லிப் மாகாணத்தின் வடமேற்கு பகுதியே, இன்னும் எதிர் அணியினரின் திடமான பகுதியாக உள்ளது. அவ்விடத்தில், 2.65 மில்லியன் மக்கள் உள்ளனர். இதில் 1.2மில்லியன் மக்கள் வேறு பக்கங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்.

விரிவாக்க மண்டலங்களில் ஒன்றாக இருந்தாலும் இட்லிப் தற்போது அரசின் முக்கிய தாக்குதல் இடமாக உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் ஜிகாதிகளை குறிவைப்பதாக அரசு தெரிவிக்கிறது.

கிழக்கு கூட்டாவில், கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள கடைசி பெரிய பகுதியும், மற்றொரு விரிவாக்க மண்டலத்தை நோக்கி அரசின் தாக்குதல்கள் உள்ளன. கடந்த 2013 முதல், இந்த இடத்தில் 3.93லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

தொடர் தாக்குதல்களை சந்தித்துவரும் இந்த மக்கள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

அலெப்போவின் வடக்கு மாகாணங்கள், ஹாம்ஸின் மத்திய மாகாணம், டேரா மற்றும் குனேட்ரா பகுதிகளின் தென் மாகாணங்கள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் வசமுள்ளன.

http://www.bbc.com/tamil/global-43260111

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிரியா எனும் நரகம்!

 

04CHVCM-EDIT2-MIDEAST-CRISISSYRIA-GHOUTA
04CHVCM-EDIT2-MIDEAST-CRISISSYRIA-GHOUTA
04CHVCM-EDIT2-MIDEAST-CRISISSYRIA-GHOUTA
04CHVCM-EDIT2-MIDEAST-CRISISSYRIA-GHOUTA
04CHVCM-EDIT2-MIDEAST-CRISISSYRIA-GHOUTA
04CHVCM-EDIT2-MIDEAST-CRISISSYRIA-GHOUTA

பதறவைக்கின்றன சிரியாவிலிருந்து வரும் புகைப்படங்கள். பச்சிளங் குழந்தைகளின் உடல்கள் கிடத்தப்பட்டிருக்கும் காட்சிகளும், ரத்தக் காயங்களுடன் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரின் படங்களும், உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்களும் நரகத்தை நினைவுபடுத்துகின்றன. கடந்த 11 நாட்களில் மட்டும் 602 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 185 பேர் குழந்தைகள், 109 பேர் பெண்கள். தலைநகர் டமாஸ்கஸுக்குக் கிழக்கில் உள்ள கிழக்கு கூட்டா நகரில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது சிரிய ராணுவம், ரஷ்ய விமானப் படைகளின் உதவியுடன் கடும் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளை விடவும் அப்பாவிப் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகைப் பதறவைத்திருக்கும் சிரியா மரணங்களுக்குக் காரணம் என்ன?

 

எழுச்சியும் அடக்குமுறையும்

கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போர்தான் இதற்கு முக்கியக் காரணம். 2011-ல் பல்வேறு அரபு நாடுகளில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே திரண்டு தாங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை 'அரபு வசந்தம்' என்றனர். இதனால் துனீசியா, எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சியாளர்கள் பதவி இழந்தனர். பஹ்ரைன், சிரியாவில் மக்கள் எழுச்சி வலுவாக இருந்தது. அல்ஜீரியா, இராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, ஓமானில் பெரிய போராட்டங்கள் நடந்தன. லெபனான், மௌரிடானியா, சூடான், சவுதி அரேபியா, மேற்கு சகாரா நாடுகளில் மக்கள் போராட்டம் வலுவில்லாமல் வெறும் அடையாளமாக நிகழ்ந்தது.

சிரியாவைப் பொறுத்தவரை இந்தப் போராட்டங்களை அடக்குமுறையுடன் எதிர்கொண்டது அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் தலைமையிலான அரசு. ராணுவத்தின் மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது பின்னர் அலையலையாகப் பரவி பெரிய போராட்டமாக மாறியது. இதற்கிடையே அதிபரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படை ஒருபுறம், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒருபுறம், அமெரிக்க ஆதரவிலான குர்துகள் ஒருபுறம் என்று எல்லாத் தரப்பிலிருந்தும் கடும் தாக்குதல்கள் நடக்கின்றன. அதிபரை எதிர்ப்பவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்பதுடன் நோக்கங்களும் வெவ்வேறானவையாக இருப்பதால் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்ட அதிபர் ராணுவத்தின் விசுவாசத்தாலும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் உதவியாலும் பதவியில் தொடர்வதாலும் போர் ஓய்வதாக இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற அதிபர் தவறியதால் அந் நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. போரிடும் குழுக்களை ஆதரிக்கும் நாடுகளும் எண்ணெய் வளத்தைக் குறிவைத்தும், சிரியாவில் அமைதி வந்துவிடக்கூடாது என்று திட்டமிட்டும் காய்களை நகர்த்துகின்றன. இவற்றுக்கு நடுவில் ஏதுமறியா அப்பாவிகள் பலியாவதுதான் கொடுமை.

 

சிக்கல்களின் பின்னணி

மேற்காசியாவில் முக்கியமான நாடு சிரியா. சிரிய அரபுக்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், அசிரியர்கள், குர்துகள், சர்காசியன்கள், மண்டியாக்கள் சேர்ந்து வாழ்கின்றனர். மதங்களும் பலதரப்பட்டவை. சன்னிகள், ஷியாக்கள், சலாஃபியர்கள், இஸ்மாயீல்கள், அலாவைட்டுகள், ட்ரூஸ்கள், மண்டியாக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், யாஜிதிக்கள் என்று பலர்.

இந்நாட்டுக்கு மேற்கில் லெபனான், மத்தியத் தரைக்கடல், வடக்கில் துருக்கி, கிழக்கில் இராக், தெற்கில் ஜோர்டான், தென்மேற்கில் இஸ்ரேல் உள்ளன. 1967-ல் நடந்த மத்திய கிழக்குப் போரில் சிரியாவின் கோலான் குன்றுப் பகுதிகளில் மூன்றில் இரண்டு மடங்கைக் கைப்பற்றிய இஸ்ரேல், 1981-ல் தனது நாட்டு எல்லையுடன் அதைச் சேர்த்துக்கொண்டுவிட்டது. வளமான சமவெளி, உயர்ந்த மலைகள், எண்ணெய் வளம் மிக்க பாலைவனம் கொண்டது சிரியா. யூப்ரடிஸ் நதி பாயும் பள்ளத்தாக்கு செழிப்பானது. எண்ணெய் ஏற்றுமதி, சுற்றுலா, விவசாயம் ஆகியவை நாட்டுக்கு வளம் சேர்த்தன.

நாட்டின் வருமானத்தில் 40% எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்தது. வேளாண்மை மூலம் ஜிடிபியில் 20% கிடைத்தது. சுற்றுலாத் துறை 20% வருவாயைப் பெற்றுத் தந்தது. இப்போது உள்நாட்டுப் போர் காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கி சமாளிக்கிறது சிரிய அரசு. எண்ணெய் ஏற்றுமதி மட்டும் மூன்றில் இரண்டு மடங்கு வீழ்ச்சியடைந்தது. அதனால் வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.

2010-ல் 12 பில்லியன் டாலர்களாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2012-ல் 4 பில்லியன் டாலர்களாகச் சரிந்துவிட்டது. ஜிடிபி யில் மட்டும் 2011-ல் ஏற்பட்ட 3% சரிவு, 2012-ல் 20% ஆகக் குறைந்திருப்பது சரிவின் வேகத்தைக் காட்டுகிறது. 1995-ல் ஒரு நாளைக்கு 6 லட்சம் பீப்பாய்கள் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுத்த சிரியா, 2012-ல் 1,82,500 பீப்பாய்களைத்தான் எடுக்க முடிந்தது. இப்போது இதுவும் குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் எண்ணெயின் தரமும் குறைந்துவிட்டது. புதிய வயலில் எண்ணெய் இருப்பு அடையாளம் காணப்பட்டாலும் எடுத்து விற்க முடியவில்லை. உள்நாட்டுப் போரால் நாட்டு மக்களில் 30% வறியவர்களாகிவிட்டனர். 11.4% பேர் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். குழந்தைகள் விளையாட்டு, படிப்பு என்று ஏதுமில்லாமல் அன்றாடம் போர்ச் சூழலிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். ஏழெட்டு வயது குழந்தைகள்கூட துப்பாக்கிகளுடன் பெரியவர்களுக்குத் துணையாகக் களத்தில் நிற்கின்றனர்.

இதற்கிடையே நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய ஐ.எஸ். சிரியாவின் எண்ணெய் வயல்களிலும் பெரும் பகுதியைக் கைப்பற்றி, எண்ணெயை விற்று தனது எதேச்சாதிகார அரசை வலுப்படுத்திக்கொண்டிருந்தது. ஆயுதங்களுக்குப் பெரும் பகுதியைச் செலவிட்டது. 2013-ல் மட்டும் உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அவர்களில் 11,000 பேர் குழந்தைகள். இரண்டாவது உலகப் போர்கூட இத்தனை ஆண்டுகள் நடந்ததில்லை. சிரியாவின் நரக நாட்கள் அத்தனை நீண்டவை!

 

ஐநா தீர்மானம்

போரை ஒரு மாதத்துக்கு நிறுத்துங்கள் என்று ஐநா சபை கடந்த பிப்ரவரி 24-ல் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் சிரிய அரசு இந்தப் போர் நிறுத்தத்தை பகலில் அதுவும் சில மணி நேரங்களுக்கு மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்கிறது.

அரசை எதிர்க்கும் படைகளிடம் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதால் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது என்கிறது. அரசை எதிர்ப்போர் ஆயுதங்களுடன் சரண் அடைந்தால்தான் இது சாத்தியம் என்கிறது. அத்துடன் முற்றுகைக்குள்ளான பகுதியில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை 40 லாரிகளில் டமாஸ்கஸில் தயாராக இருக்கின்றன. அரசுப் படைகள் அனுமதி தராததால் அவை காத்துக்கிடக்கின்றன.

சிரியாவே நாசமானாலும் பரவாயில்லை, எதிரிக்கு அடங்கிவிடக் கூடாது என்பதே எல்லோருடைய முடிவாகவும் இருக்கிறது. சிரிய அரசுக்கு இப்போது ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் படைகளுக்கு அமெரிக்கா துணையாக இருக்கிறது. 30,000 பேரைக் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது சிரிய அரசுக்கு மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிரிய அரசுப் படைகள், சிரிய ஜனநாயக ஆதரவுப் படைகள், சிரிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படைகள், ஐஎஸ் படைகள், தாஹிர் அல் ஷாம் என்ற படை என்று களத்தில் ஐந்து வெவ்வேறு அணிகள் இருக்கின்றன.

ஐநா சபை மட்டும் முயற்சி எடுத்தால் போதாது, அரபு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் தீவிர முயற்சி மேற்கொண்டால்தான் இந்த அர்த்தமற்ற போர் ஓய்ந்து இருப்பவர்களாவது நிம்மதியாக வாழ முடியும். போர் ஓய்ந்தாலும் சிரியாவைச் சீரமைத்து பழைய நிலைக்குக் கொண்டுவர குறைந்தது இருபது முதல் ஐம்பது ஆண்டுகள் தேவைப்படும். வெகு விரைவில் உள்நாட்டுப் போர் ஓய்ந்து சிரியாவில் அமைதி நிலவ வேண்டும். அதுதான் மனிதம் மிச்சமிருக்கும் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பிரார்த்தனை!

- வ.ரங்காசாரி,

http://tamil.thehindu.com/opinion/columns/article22923420.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

 

அடப் போங்கடா, நீங்களும் உங்கள் செய்திகளும்..! vil-bah.gif

பல ஆயிரக்கனக்கான மைல்களுக்கு அப்பால், உங்களுக்கு சம்மந்தமே இல்லாத இனத்தையும் அவர்களின் உயிரையும் பற்றி மாய்ந்து, மாய்ந்து எழுதித் தள்ளும் நீங்கள், உங்கள் கை அருகே 18 மைல் தொலைவில், உங்கள் இரத்த உறவுகள், 30 வருடங்களாக கத்தினார்களே, கதறினார்களே, ஒருத்தனாவது இப்படி வரிந்து எழுதினீர்களாடா..விளக்கெண்ணைகளா...?

ஏனோ தெரியவில்லை, இந்த செய்திகளை படித்து துளியும் மனம் பதறவில்லை..!  stopnon.gif

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.