Jump to content

மீண்டும் நாவல் முயற்ச்சியில் - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

MY NOVEL "KALSSUVADU"
”காலச்சுவடு” நாவல்
.
பாதியில் கைவிடப்பட்ட எனது காலச்சுவடு நாவல் பிரதியை நீண்டகாலத்தின் பின்னர் 
மீண்டும் தூசி தட்டி எடுத்து திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அந்த நாவலுக்கு முகவுரையாக நான் எழுதியவற்றை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
.
காலச்சுவடு
வ.ஐ.ச.ஜெயபாலன்
,

காட்டை வகிடு பிரிக்கும்
காலச் சுவடான 
ஒற்றையடிப் பாதை
- இளவேனிலும் உளவனும் 1970
.

நூற்றாண்டுகாலங்களாக நம் மூதாதையர்கள் வழி வழியாகச் சொல்லி வந்த போதைதரும் கதைகளால் என் மனசு நொதிக்கும் செந் திராட்சை மது ஜாடியாக நிரம்பி வழிகிறது. என் முன்னோர்களாலும் சகபாடிகளாலும் பல லட்சம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்தக்கதைகளை என் பங்கிற்கான கற்பனைகளுடன் பல்லாயிரம் தடவைகள் என் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லி இருக்கிறேன். அவர்கள் அந்தக் கதைகளை புத்தகமாக எழுதிவை எனச் சொல்வார்கள். சிலர் எழுது நாங்களே பதிப்பிக்கிறோம் என்று முன்வந்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என் நிலமை. 
.
நான்தான் கதை சொல்கிறேன் என்கிற பெயரில் அன்றாடம் சந்திக்கிற ஆண் பெண்களைக் கூட்டி வைத்துக்கொண்டு கதைகள் பேசிக்களிப்பதே வாழ்வாகக் கொண்டவனாச்சே. நினைவுவாக மீந்த கதைகள் என்கிற என்கிற என் பரம்பரைகளின் மதுச்சாடியைத் திறந்து சுற்றி இருபோருக்கு வார்த்து வார்த்துக் கொடுத்து நானும் அருந்திக் களிக்கிற பேரின்பப் போதைக்கு அடிமையாகி விட்டேனே. அந்த வடிவம் வேறு அல்லவா?.. 
ஊர் ஊராக கதை சொல்கிற எங்களுக்கு தனித்திருந்து எங்கோ இருக்கிற வாசகர்களுக்காக கதை எழுழுதுகிற போதையும் மனோபாவமும் வடிவமும் இலகுவில் வசப்பட்டுவிடாது. நிகழ் காலத்தைவிடுங்கள். நாங்கள் முடிந்துபோனபின்னர் எதிர்காலத்தில் நம்பரம்பரைகளின் கதைகளைத் தேடும் சந்ததிகளுக்காக எனக்கு சொல்லப்பட்டதும் நான் கண்டதுமான கதைகளை எழுதிவைக்கும் வெறியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இருபது நாவல்களாவது பாதியில் கைவிடப்பட்டு குற்றுயிரும் குறை உயிருமாக கிடக்கிறது. காலச்சுவடும் அப்படிக் குற்றுயிராகக் கிடைக்கிற எங்கள் பரம்பரைகளின் கதைகள்தான். 
.
1820பதுகளில் யாழ்பாணத்தில் தீவிரப்பட்ட பெண்கல்விக்கான அமரிக்கன் மிசனறிகளின் போராட்டத்தைப் பற்றிய கதைகளை அக்கதைகள் ஆரம்பித்து சரியாக நூறு வருடங்களின் பின்னர் 
2020ல் என் தோழி ஒருத்தியிடம் சொன்னேன். 1820ல் உருவான படித்த யாழ்பாணத்துப் பெண்களின் கதைகளில்தான் ஆரம்பித்தேன். அந்த தோழியை ஈர்த்துவைத்திருந்த அந்தக் கதைகளை முடித்துவிட மனசு விரும்பவில்லை. அப்படியே முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர்காத்தில் யாழ்ப்பாணப் பெண்களின் கதைகள் அவர்களது மலேசியப் புலப்பெயர்வுக் கதைகள் என பல சந்திப்புகளை கதைகள் வளர்ந்தன. அதன் பின்னான சந்திப்புகளை தமிழர் எழுச்சிப் போராட்டத்தில் பங்காளிகளான பெண்களின் கதைகள் மேற்குலகிற்க்குப் புலபெயர்ந்த பெண்களின் கதைகள் நிறைவு செய்தன. 
,
பலநாட்க்கள் தொடர்ந்த எங்கள் சந்திப்புகளில் 1820பதுகளில் அமரிக்க மிசனைச் சேர்ந்த பெண்கள் போராடி மூட்டிய கல்வி வெளிச்சத்தில் உறைபனி உருகி ஆறாக பெருகியதுபோல மெல்ல மெல்ல அசைக்கபட்ட யாழ்ப்பாணத்துப் பெண்களின் வரலாற்றுக்கதைகள் மகத்தான போராட்டக் கதைகளாகும். அமரிக்க மிசன் பெண்களால் பற்றவைக்கபட்ட இந்த தீ பல சாதிய வர்க்க எல்லைகளைத்தாண்டி முஸ்லிம் பெண்களையும் எட்டிய சொல்லபடவேண்டிய கதைகளுக்கு கணக்கே இல்லை..

ஈழத் தமிழ் பெண்கள் பற்றிய கதைகளில் லியித்துப்போன அந்த தோழியியோ நான் அவற்றை ஒரு நாவலாக தொகுக்க வேண்டுமென வற்புறுத்தினார். கிடைத்த இரண்டு பென்பிள்ளைகளோடு 1824ல் திருமதி கர்ரியத் வின்ஸ்லோ உடுவில் முதலாவது பெண்கள் பாடசாலையை அமைத்தார். அந்த இரண்டு மாண விகளில் ஒருத்தியின் புனைவுக் கதையாக ஆரம்பித்து 2000 ஆண்டுவரைக்கும் ஏழு தலைமுறைகள் தொடரும் ஒரு நாவலை எழுதி முடிப்பதாக நான் வாக்களித்தேன். 
.
அந்த தோழியும் என்னை எப்படியும் எழுத வைத்து விடுகிறதாகக் கங்கணம் கட்டிக்கொண்டு விழுந்து விழுந்து உதவிகள் செய்தார். நிறைந்த தேடல்களோடு எழுத ஆரம்பித்த அந்தக்கதை 400 பக்கங்களோடு நின்று போயிற்று. சிலவருடங்கள் எழுது எழுது என்ற அந்த தோழி “நீ உருப்பட மாட்டாய். 
எதையும் முழுமையாய் எழுதி முடிக்கமாட்டாய்” என நொந்து உதறிவிட்டுப் போய்விட்டார். 
.
நான் எழுத முடியாமல் போனதற்கு மூன்று பெரும் விரக்திகள் காரணமாயிற்று என தோன்றுகிறது. சிறுவயசில் இருந்தே கதை கேட்பதிலும் ஊரைக்கூட்டிவைத்துக் கதை சொல்வதிலும் ஆற்றல் இருந்தது. அந்த வடிவமும் எனக்கு வாய்த்திருந்தது. தனிய ஒரிடத்தில் சிறிது உட்கார்ந்திருந்து முகம் தெரியாத வாசகர்களுக்காக கவிதைகளைக் காலத்தில் எழுத முடிந்தது. அதற்கான பொறுமையும் இருந்தது. . அது எனக்கு இனிப்பாகவும் இருந்தது. ஆனால் நெடுங்காலம் தொடர்ந்து உட்கார்ந்து நாவல் எழுதும் பொறுமை ஒருபோதும் என்னிடம் இருக்கவில்லை. கதைகளை எழுதுவதில் உள்ள போதையும் எனக்குப் பிடிபடவில்லை. இது ஒரு காரணமென்று நினைக்கிறேன். இரண்டாவது முக்கிய காரணம் போராட்டம் மெல்ல மெல்ல தோல்விப்பதையில் வழுக்கிச் சென்றமையாகும். மூன்றாவதாக என்னை முறித்துபோட்ட காரணம் 1970ல் இளவேனிலும் உளவனும் என்ற எனது கவிதைக்காக நான் உருவாக்கிய காலச்சுவடு என்ற படிமம் சிலை திருட்டுப் பாணியில் திருடப்பட்டதுதான். இதனால் காலச்சுவடு என நான் எழுதியபோதெல்லாம் நான் திருடனாக பார்க்கப்பட்டேன். அதுதான் கொடுமை. இதுபற்றி விரிவாக சொல்லவேண்டும்.
.
1983 இனக் கலவரத்துக்கு ஒரு மாதம் முன்னதாக என் ஜப்பானிய தோழியுடன் நாகர்கோவிலில் அந்த எழுத்துலக ஜாம்பவானை சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் இலங்கையில் பிரசுரிக்கப்பட்ட எனது சில கவிதைகளின் பிரதிகளை அவரிடம் கொடுத்தேன். முதல் வாசிப்பிலேயே எனது இளவேனிலும் உளவனும் கவிதை அவருக்கு பிடித்துப்போகிறது. காலச்சுவடு அற்புதமான படிமம் புதிய புனைவு என என்னை வெகுவாகப் பாராட்டிக் கொண்டாடினார். கால் நூற்றாண்டுகளின்பின்னர் எனது கவிதைகளையும் எழுத்துகளையும் காலச்சுவடு என்கிற தலைப்பில் தொகுக்க இருப்பதாக சொன்னேன். பின்னர் நான் இலங்கைக்கு சென்றுவிட்டேன். அதன்பின்னர் போராளி அமைப்புகளோடு சென்னைக்கு வந்தபோது அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போதும் காலசுவடு படிமம் பற்றி பேசினார். இலக்கிய சஞ்சிகைக்கு பொருத்தமான பெயர் என்று சொன்னார். அதற்க்கு நான் “கவிஞர்கள் சொற்களை புனைவது தமிழுக்காகவே. சிலர் தங்கள் பெயரில் பதிவு செய்து தனியுடமை ஆக்குவதற்கல்ல என சொன்னேன். அத்தோடு கால்நூற்றாண்டுகளின் பின்னர் என் கவிதைகளையும் கதைகலையும் கட்டுரைகளையும் காலச்சுவடு என்கிற பெயரில் தொகுக்கவுள்ளதாக சொல்லிவைத்தேன். 1987 அக்டோபரில் புலிகள் இந்திய இரானுவத்துடன் மோதலை ஆரம்பிக்கிற வரைக்கும் இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருந்தது. அதுவரை எனக்கும் சிக்கல் இருக்கவில்லை.

1987 - 1997 காலக்கட்டங்களில் மோதல் தீவிரபட்டு ஈழத் தமிழர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அச்சுறுத்தப்பட்டிருந்த நான் நீதிகேட்க்க முடியாத காலத்தைப் பயன்படுத்தி அவர்கள் ”காலச்சுவடு” என்றபடிமத்தை திருடி தங்கள் பெயரில் தனி உடமையாகப் பதிவுசெய்து வியாபாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். அச்சமான சூழலிலும் அவரது நண்பர்களூடாக என் எதிர்ப்பை தெரிவித்தேன். நீதிமன்றம் செல்லப்போவதாக நான் பேசத் தொடங்கிய காலங்களில் ” உன்னை இந்தியாவில் கால்வைக்க முடியாமல் பண்ணிவிடுவார்கள்.” என வாரிசின் ஆட்களால் எச்சரிக்கப்பட்டேன். 
இலஙகைத் தமிழர் இந்திய உறவு மோசமாக சீர்குலைந்திருந்த அந்த நாட்களில் எனக்கு போர்நிறுத்தத்துகான இராசதந்திரப் பணிகளே முக்கியமாக இருந்தது. அதனால் நான் மவுனமாக நேர்ந்தது. 
.
சில வருடங்களின் பின்னர் அந்த ஜாம்பவானுக்காக சாகித்திய அக்கடமி சென்னை புக் பொயிண்டில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. முன்னரே சேதி சொல்லிவிட்டு அந்த விழாவில் நியாயம் கேட்க்க நான் சென்றேன். நுழையும் என்னைக் கண்டதுமே “காலச்சுவடு இவர் உருவாக்கிய படிமம்” எனக்கூறி சூழலின் நெருப்பை அவர் அணைத்தார். அன்று மாலை தோழி ஒருவர் வீட்டில்வைத்து தன் வாரிசின் தவறு என்று வருத்தம் தெரிவித்து சஞ்சிகையில் என் பேட்டியை வெளியிடுவதோடு நிகழ்ந்த தவறையும் செம்மைப் படுத்துவதாக வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதியும் காப்பாற்றப் படவில்லை. 
.
சோகம் இதுதான். பின்னர் வேறொரு கவிதையில் காலச்சுவடு என எழுதியபோது வாசித்த இளையவர்கள் “என்ன ஜெயபாலன் உங்களுக்குமா சொற்பஞ்சமா வேறொருவரின் படைப்பை ஏன் திருடுகிறீங்க” என கேட்டார்கள்”. இன்றுவரை கோலோச்சும் கயமையை நன்கு அறிந்திருந்தும் அறம் பற்றி உரத்துப்பேசும் தமிழக எழுத்துலக நண்பர்கள் யாரும் இதுவரை எனக்காக வாய்திறந்ததில்லை. 
.
சில வருடங்களின் முன்னம் எனது கவிதை தொகுப்பை ”காலச்சுவடு” என்கிற தலைப்பில் வெளியிட விரும்பினேன். பதிப்பக நண்பர் அது இன்னொருவரின் சொல் எனக்கூறி எனது விருப்பத்தை நிராகரித்தனர். இதனால் வேறு பெயரில் என் தொகுதியை போட நேர்ந்தது. எனக்கு இதுவரைக்கும் மாரடைப்பு வராத குறைதான். இந்த விரக்திதான் என் எழுத்தார்வத்தை முடக்கும் காலக் கொடுமையாய் இருக்கு. 
.
என்னை எழுது எழுது என்ற தோழ தோழியர்கள் எல்லோரும் சலித்து ஒதுங்கியபிறகு இப்ப முடிவுறாத என் நாவல்களில் ஒன்றான கலச் சுவட்டை மீண்டும் தூசிதட்டி எடுத்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். இப்ப எழுதீரரோ எழுதீரோ என்று உக்குவிப்பார் யாருமில்லை. ஆனாலும் 1820ல் யாழ்பாணத்து உடுவிலில் ஆரம்பித்து 2000ம் ஆண்டு கனடாவிம் குடியும் 180 வருடத்து மாறிவரும் பெண்களின் தலைமுறைகளை நான் கேட்ட வாழ்ந்த காலங்களின் சுவடாக மீண்டும் எழுத ஆரம்பிதிருக்கிறேன். எப்படியும் என் காலம் முடியுமுன் காலச்சுவடு எழுதி முடியும். எத்தனை அச்சுறுத்தல்கள் தடைகள் வந்தாலும் எனது நாவல் “காலச்சுவடு” என்னும் தலைப்பில் வெளியாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.