Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலையுதிர் காலம்

Featured Replies

இலையுதிர் காலம் - சிறுகதை

 
 

சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p46a_1524031829.jpg

லையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டான். என்றைக்காவது லோடு வரும் நாள்கள் இப்படிக் கடையிலேயே தங்குவதுண்டு.

வாசல் முன் விரவியிருந்த சருகுகளைப் பெருக்க முனைந்தான். இரவின் பனியினால் சருகுகள் நமத்துப்போயிருந்தன. இதுவே மாலையாக இருந்தால் பகல் வெயிலால் காய்ந்த சருகுகள் மொறுமொறுவென இருக்கும். அதன் மீது அங்குமிங்கும் சரக் சரக்கென்று நடப்பான். இலைகள் நொறுங்கும் சப்தம் அவனுக்கு ஒரு வெற்றிக் களிப்பைத் தரும். இந்த ஈர இலைகள் மீது நாட்டமில்லை. அவற்றை ஓரிடத்தில் ஒதுக்க முற்பட்டான்.

பறவைகள் க்ரீச்சிடும் ஓசைகள். அதிகாலையிலும், மாலை மங்கிய வேளையிலும், மனிதர்களின் பேச்சுக் குரலைவிடப் பறவைகளின் ஓசை அதிகமாக அந்தத் தெருவில் கேட்டுக் கொண்டிருக்கும். போதாததற்கு அவன் கடையின் எதிரில் பூங்கா வேறு. பெங்களூரில் பூங்காக்களுக்குக் குறைச்சலில்லை. ஆளை முடக்கும் பனி முடிந்து, வெயில் தொடங்கும் இந்த இடைப்பட்ட பருவகாலம் அவனுக்கு உற்சாகமூட்டுவதாகவே இருந்தது.

கேசவரெட்டியின் மளிகைக் கடையில் வேலையில் சேர்வதற்கு முன் கதிரும் ரோட்டில் ஒரு கூடாரத்தில்தான் தங்கினான். ஊரை விட்டு ஓடி வந்தவனுக்கு வீடென்ன, வாசலென்ன. மெட்ரோ சாலைப் பணியாளர்கள், மேம்பாலம் கட்டுபவர்கள் ஆங்காங்கே நடைபாதையிலேயே கூடாரம் போட்டு வசித்தனர். அவர்களுடன் சேர்ந்து தங்கினான்.

ரெட்டிதான்,  வீட்டு வேலைக்கும் உபயோகமாக இருப்பான் என மளிகைக் கடையின் பின்பக்கமுள்ள அவர் வீட்டின் மாடியறையில் கதிரைத் தங்க வைத்தார். காரை பூசப்படாத செங்கல்லால் கட்டிய சுவரும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுமாக இருந்தது அவன் வசித்த சிறு அறை.

இலைகளைப் பெருக்கும்போது கதிர் எதிரிலிருந்த கூடாரங்களைப் பார்த்தான். அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பச்சைக் கண்ணழகி இன்னும் எழுந்திருக்கவில்லை. பூங்காவை ஒட்டிய நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்டிருந்தன அக்கூடாரங்கள். நீல நிற உறைக் காகிதத்தாலும் வெள்ளைத் துணியைக் கொண்டும் கூடாரங்களை அமைத்திருந்தனர்.

கதிர் பாதாம் இலைகளைப் பெருக்கி ஓரமாக ஒதுக்கிவைத்தான். குப்பை அள்ளுபவர் வந்து வண்டியில் அவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுவார். அரிசி மூட்டைகள் வந்ததும் கணக்கு முடித்துவிட்டுக் கடையை மூடினான். இனி எட்டு மணிக்கு வந்தால் போதுமெனத் தனது அறைக்குச் சென்றான்.

மேலே மாடிப்படியேறும் போது கேசவ ரெட்டியின் அம்மா பார்த்திருக்கக் கூடும். வீட்டு உள்ளேயிருந்தபடி அவனை அழைத்தாள்.

“கதிரூ”

கதிருக்கு எதற்காக அழைக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. ரெட்டிக்கு மணம் முடிப்பது தொடர்பாக ஜோசியக்காரரைப் பார்க்க வேண்டும். அதற்குக் கதிரையும் துணைக்கு அழைக்கிறார்.

“இன்னைக்கு மல்லேஸ்வரம் போலாமா தம்பி?” என்று கேட்டார்.

ரெட்டி உள்ளறையிலிருந்து வந்து என்ன என்பது போல் இருவரையும் பார்த்தார். ஜவ்வாது வாசம் பரவியது. ரெட்டியின் அம்மா அவரது துணியை அலசும்போது ஜவ்வாதைச் சிறிது நீரில் கலந்துவிடுவார். அந்த வாசமும் ரெட்டியும் பிரிக்க முடியாத ஒன்றாகக் கதிருக்குத் தோன்றும்.

“மல்லேஸ்வரம் போலாம்னு அம்மா கேட்டாங்கண்ணா” என்று இவன் முந்திக்கொண்டான்.

“எந்த மாட்டி ஸெப்பேனு” எனத் தெலுங்கில் ரெட்டி அவர் அம்மாவைத் திட்டத் தொடங்கினார். பதிலுக்கு அவரும் ஏதேதோ புலம்பியபடி உள்ளே போனார்.

“நீ ஜல்தியா கடைக்குப் போ. அம்மா கூட போ வேணாம்” என்றார்.

p46b_1524031846.jpg

சரி என்று தலையாட்டிவிட்டுத் தன் அறையை நோக்கி நடந்தான். அவனுக்கும் போக விருப்ப மில்லைதான். இல்லையென்றால், கதிரை இழுத்துக்கொண்டு உள்ளூர், வெளியூரில் அகப்படும் ஜோசியக்காரர்களைப் பார்க்கச் சென்றுவிடுவார். அப்படிச் சென்றால் ஒரு வேளை உணவு என்ன, காபித் தண்ணிகூட வாங்கித் தரமாட்டார், அதனால் அவர்கூ ப்பிடும்போதெல்லாம் மழுப்புவான். வம்படியாகக் கூட்டிச் செல்லும்போது ஏதும் சொல்ல முடியாது. சகித்துக் கொண்டு செல்வான். சம்பளம் தருபவராயிற்றே.

ரெட்டிக்கு இன்னும் மணமாக வில்லை. அவர் அம்மாவின் தாள முடியாத கவலை அது. அவரது குள்ளமான, குண்டான உடல் வாகுக்கு ஏற்ற பெண் சரியாக அமையவில்லை. அப்படியே காலங்கடந்து இப்போது நாற்பதுகளின் இறுதியில் வந்து விட்டார்.

“உங்க பையனுக்கு நிச்சயம் கல்யாணம் நடக்கும். துலாம் லக்னத்துல சந்திரனும், புதனும் பாக்கிய ஸ்தானத்துல இருக்கிறதால, அவருக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு ராஜ அம்சம் இருக்கு. இந்திரன் மாதிரியான ஒரு ராஜ வாழ்க்கை அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்” என வைத்தீஸ்வரன்கோவிலில் ஒரு நாடி ஜோசியக்காரர் சொன்னதை வேதவாக்காக நினைத்துக்கொண்டு ரெட்டியின் அம்மா பெருங்கனவோடு அவருக்குப் பெண் தேடி அலைந்தாள்.

கதிர் திரும்பி வந்து கடையைத் திறக்கும்போது எதிரிலிருந்த கூடாரத்தில் நான்கு நாடோடிப் பெண்கள் வெளியில் அடுப்பை மூட்டி சப்பாத்தியைக் கையால் தட்டிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். சிறு குழந்தைகள் தனியாக அமர்ந்து எதையோ தங்களது அழுக்கான கைகளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. கைகள் முழுவதும் பிசுபிசுப்பாக இருந்தன.  முடிகள் செம்பட்டையாக எண்ணெய் காணாது இருந்தன.

இந்த நாடோடிகள் சாலையின் டிவைடரிலேயே பலியாய்க் கிடப்பார்கள். சிவப்பு விளக்கு ஒளிர்ந்தவுடனே அங்கு நிற்கத் தொடங்கும் வண்டிகளிடம் விற்பனையைத் தொடங்குவார்கள். பெண்களும், குழந்தைகளும் கையில் நீளமான பேனாக்களையும், செல்ஃபி எடுக்கும் தடிகளையும் விற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் சிக்னலில் நிற்கும் கார்களின் கண்ணாடி மேல் அனுமதியின்றி புளிச்சென்று நீரைத் தெளித்து அவர்களின் கையிலிருக்கும்  துடைப்பானால் துடைத்துவிட்டு அதுபோல் மற்றொரு துடைப்பானை வாங்கச் சொல்வார்கள். அவர்கள் கன்னடம் புரிந்து வைத்திருந்தார்கள். பேக்கா, தொகலி எனச் சில வார்த்தைகள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

மூப்படைந்த ஆண், பெண் இருவர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மிக அழுக்கான வெள்ளை குர்தாவும், தலைப்பாகையும் பெரியவர் அணிந்திருப்பார். முகம் முழுக்கச் சுருக்கங்கள்... இமைகளும்கூட நரைத்திருக்கும் அந்தப் பாட்டிக்கு. இவ்விருவரும் கண்ணீர் விட்டபடி சில்க்போர்டு சிக்னலில் பிச்சையெடுப்பார்கள். முதன் முதலில் பார்ப்பவர்களுக்கு அவர்கள்மீது இரக்கம் சுரக்கும். காசு தருவார்கள். ஆனால், தினப்படி வந்து செல்பவர்கள் அந்த வயதானவர்களைக் கண்டும் காணாது செல்வார்கள்.

இவர்கள்தாம் இப்போது இவன் மளிகைக்கடையின் எதிரில் வசிக்கக் கூடாரம் அமைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் அந்த இடத்தை அவர்கள் ஆக்கிரமித்தபோது கதிருக்குக் கோபம் வந்தது. அது மஞ்சுநாத் வழக்கமாகத் தள்ளுவண்டி உணவுக்கடை போடும் இடம்.

பெங்களூருவில் கிடைத்த முதல் ஸ்நேகம் மஞ்சுநாத். கதிர் மஞ்சு நாத்தின் தள்ளுவண்டிக் கடையிலேயே மதிய உணவை முடித்துக் கொள்வான். கன்னடம் அவனிடம் கற்றறிந்தான். பெங்களூரின் மூலை முடுக்கெல்லாம் மஞ்சு நாத்தின் மூலம்தான் பரிச்சயம். ஆனால் சினிமா வுக்கு மட்டும் போக மாட்டார்கள். காரணம், ஒரு கன்னடப்படத்திற்கு இருவரும் சென்றபோது இடைவேளை நெருங்குகையில்,
“எங்கடா ஹீரோ இன்னும் வரலை?” என, கதிர் சீரியசாக மஞ்சு நாத்திடம் கேட்டான்.

மஞ்சு நாத் முறைத்துக்கொண்டே “இவருதாண்டா” என ஒருவரைச் சுட்டிக்காட்டியபோது படம் முடியும் வரை கதிர் சிரித்துக்கொண்டேயிருந்தான். அதனால் மஞ்சுநாத் இவனிடம் கோபித்துக்கொண்டான். கதிர் தமிழ்ப் படத்திற்கு இவனை அழைத்தால், வராமல் முறுக்கிக்கொண்டு நிற்பான்.

மதிய வேளைகளில் கடைக்கு யாரும் பெரிதாக வரமாட்டார்கள். ரெட்டியும் தூங்கச் சென்று விடுவார். இவன் மளிகைக் கடைக்கு எதிரில் மஞ்சுநாத் வண்டியருகே அமர்ந்து, அவ்வப்போது கடையையும் ஒரு கண் பார்த்தவாறே, கதை பேச ஆரம்பிப்பான். ஆனால் இந்த நாடோடிகள் அந்த இடத்தை ஆக்கிரமித்ததும் மஞ்சுநாத் சற்று தள்ளி வேறொரு  நிழலான இடத்தில் தனது கடையைப் போட்டான். முன்பு போல் மஞ்சு நாத்திடம் அமர்ந்து பேச முடியாதே எனக் கோபம் அவனுக்கு. ஆனால் அந்தப் பச்சைக் கண்ணழகியைப் பார்த்ததும் அத்தனையும் மறந்துபோயிற்று.

கதிர் கடையில் ஊதுபத்தி வைத்துக்கொண்டே அந்தப் பச்சைக் கண்ணழகியைத் தேடினான். அவள் பெரும்பாலும் வெளியமர்ந்து மூங்கில் பிளாச்சுகளால் சாமான்கள் பின்னிக்கொண்டிருப்பாள்.

அவன் நினைத்த நேரம் அவளும் வெளியே வந்தாள். அடர் சாம்பல் நிற மேல்சட்டை அணிந்து தலையில் ஒரு துப்பட்டாவினால் முக்காடு போட்டிருந்த அவளின் கையில் காற்றடிக்கும் பம்பு இருந்தது. அவளுக்கு இடது கை முழுமையடைந்திருக்காது. முழங்கைக்குக் கீழ் சிறுத்திருக்கும்.

வெளியே சாகவாசமாக அமர்ந்து அங்கிருந்த பிளாஸ்டிக் பலூனுக்குள் காற்றடிக்க ஆரம்பித்தாள். சிறுத்திருந்த அந்தக் கையினால் பம்பை வளைத்துக்கொண்டு, காலினால் பலூனைப் பிடித்து, வலது கையினால் பம்பை அடிக்கத் தொடங்கியதும் அமுங்கியிருந்த பிளாஸ்டிக் பலூன் உப்பி ஒவ்வொரு விலங்காய் மாறியது. சில நிமிடங்களில் அவளருகே, புலி, பூனை, நாய், ஒட்டகம் என விதவித நிறங்களில் விலங்குகள் உருமாறியிருந்தன.

அந்தப் பெண்ணை முன்னமே இவன் பலமுறை சில்க் போர்டு சிக்னலில் பாத்திருக்கிறான். இடது மூக்கில் பெரிய வளையம் அணிந்திருப்பாள். காது முழுவதும் சிறுசிறு வளையங்கள். கழுத்து தெரியாதபடி பாசி மாலைகள். வலப்புறத் தாவணி அல்லது முழுச்சட்டையை அணிந்து எப்போதும் தலையில் முக்காடு இட்டிருப்பாள். ஒரு முறை எவருக்கோ பொருளைக் கொடுக்கும்போது தான் கவனித்தான், அவளுக்கு இடது கை ஊனமென்று. கதிருக்கு முதன் முறை பார்த்தபோது தாங்க முடியாத வருத்தத்தைத் தந்தது.

செம்மண் நிறம் அவள்... அதனாலோ என்னவோ அந்த நீளமான மீன் வடிவ பச்சை நிறக் கண்கள் தனித்துத் தெரிந்தன. அவளைச் சாலையில் பார்க்கும்போதெல்லாம் திரும்ப அவளைப் பார்க்க வேண்டுமென்ற தவிப்பு கதிருக்கு ஏற்படும். பெருந்தூசியிலும், வெயிலிலும் புழுங்கிய இந்த அழுக்கான முகத்தில் இத்தனை பேரழகு எப்படி என ஆச்சர்யம் அவனுக்கு. மற்ற நாடோடிகள் போல் அவள் பழக்க வழக்கங்களில்லை. மிகவும் நாசூக்காய் இருந்தன அவள் நடவடிக்கைகள்.

இந்த நாடோடிகள் அருகில் அமர்வதைக்கூட யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் கதிருக்கு அவளை அப்படிக் கடந்து போய்விட முடியவில்லை. காரணம், அவனுக்கு அழகானவர்களென்றால் மிகப் பிடிக்கும்.
பெங்களூரு வந்த புதிதில் அவனுக்கு எந்தப் பெண்ணைக் கண்டாலும் அழகாய் இருப்பதாகத் தோன்றியது. நீளமான கூந்தலை விரித்தபடி செல்லும் பெண்கள், பெரிய கண்களைக் கொண்டவர்கள், கன்னத்தில் குழி விழச் சிரிப்பவர்கள், அவசரமாய்ப் பேருந்தைப் பிடிக்கும் பெண்கள், அலுவலக வாகனத்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் லிப்ஸ்டிக் போட்ட பெண்கள் எல்லாம் அவனுக்குக் கூடுதல் விசேஷமாகத் தெரிந்தார்கள்.
அவனது ஊரில் எப்சி அக்காதான் அழகு. அவளைத்தாண்டி யாரும் ஊரில் அவனை ஈர்த்ததில்லை. கருமை நிறமான அவளுக்குப் பூனை நிறக் கண்கள், சர்ச் போகும்போது அவனது வீதியைத் தாண்டிதான் வருவாள். அந்தக் கண்களைப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் வீட்டு வாசலில் நிற்பான். அப்போது அவன் சிறியவன் என்பதால் அவன் பார்த்துக்கொண்டிருப்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பின்னாளில் எப்சியும், பொன்னரசும் காதலித்தபோது இவன்தான் தூது போனான். அவன் தரும் தகவல்களைக் கேட்டதும் விரியும் அந்தக் கண்களைப் பார்ப்பதற்காகவே தூது போவான். அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடியபோது சக கூட்டாளிகளாக வழியனுப்பி வைத்தவர்களில் இவனும் ஒருவன்.

பின்னர் ஊரே அமர்க்களமானபோது இவன் பயந்து ஊரை விட்டு ஓடி பெங்களூரு வந்தவன்தான். மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் தனது அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். படிப்பு ஏறாமல் ஊர் சுத்திக் கொண்டிருந்தவன் கண்காணா நகரத்தில் ஏதோ பிழைக்கிறானே என அவன் அம்மா சந்தோஷப்பட்டாள். ஒருமுறை இவனைப் பார்க்க பெங்களூரு வந்தாள். அவன் வேலை செய்வதைப் பார்த்து பையன் பொறுப்புடன் வாழ்கிறானே என மகிழ்ச்சியாக அழுதபடி சென்றாள். ஏதேதோ நினைவுகளால் வெறித்து நின்றுகொண்டிருந்தவனை ரெட்டி தட்டி எழுப்பினார்.

“அங்க என்ன பராக்கு பாத்துன்னு இருக்க... ஜல்தியா வேலையப் பாரு” என்று எதிரிலிருந்த நாடோடி கூடாரத்தைப் பார்த்துவிட்டு இவனை முறைத்தபடி கடைக்குள் நுழைந்தார். கதிர் அலமாரிகளைத் துடைக்கும்போது, ரெட்டி இவன் என்ன செய்கிறான் என அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். சந்தேகத்துடன் எப்போதும் மூன்றாவது கண் தன்னையே உற்று நோக்குவது எரிச்சல் தந்தது.

அரை மணி நேரம் மூச்சு முட்ட யாராவது ரெட்டியிடம் பேசினால் அவரது பதில் தலையாட்டுவதாகத்தான் இருக்கும் அல்லது அதிக பட்சம் இறுதியில் “ம்’’ என்பதோடு முடித்துக்கொள்வார். வந்தவர் அதிர்ச்சியாகி மேற்கொண்டு பேச முடியாமல் போய்விடுவார். இப்படி எந்நேரமும் சிடுசிடுப்பவருடன் இருக்கும் போது கதிர் அசௌகரியமாக உணர்ந்தான். கதிருக்குத் தனியாக ஏதாவது வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கிடைக்கும் சம்பளத்தில் சிக்கனம் பிடித்து சிறுகச் சேர்க்கத்தொடங்கியிருந்தான்.

அந்த வீதி மதியம் நான்கு மணிவரை மந்தமாகத்தான் இருக்கும். பின் மெதுவாய் களைகட்டும், `ஸ்டார் ஃபுட்’ என எழுதப்பட்ட சற்று நீளமான தள்ளுவண்டியில் நான்கு ஹிந்திப் பையன்கள் செக்கச்செவேலென சிவப்பு நிறத்தில் காலிஃபிளவரில் செய்யப்பட்ட மஞ்சூரியன், பொரித்த மசாலா பப்படங்கள் மற்றும் நூடுல்ஸ் எனத் துரித உணவுகளை மும்முரமாகச் செய்யத் தொடங்குவார்கள். மாதம் நாற்பதாயிரமே இதன் மூலம் சம்பாதிப்பதாகப் பின்னாளில் இவன் தெரிந்துகொண்டான்.

இன்னொரு பக்கம் பானிபூரி, கச்சோரி எனத் தள்ளுவண்டிகளின் மேற்கூரைகளில் பளிச் பளிச்சென்று எரியும் விளக்குகளுடன் ஆங்காங்கே கடைகளை ஆரம்பிப்பார்கள். மெல்லப் பரவும் மசாலா வாசனை, வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புபவர்களின் பசியைத் தட்டியெழுப்பும், அதன் சுத்தத்தையோ, சுவையையோ சந்தேகிக்க இடம் தராமல் ஈ மொய்ப்பதைப் போல இந்தத் தள்ளுவண்டிகளை மனிதர்கள் கூட்டமாக மொய்த்துக்கொள்வது அன்றாடம் நிகழும். பிரதான சாலையில் ட்ராஃபிக் இருக்குமென்பதால், குறுக்கு வழியில் செல்ல எல்லா வீதிகளையும் வாஸ்கோடகாமாவை   விட வேகமாகக் கண்டுபிடித்து வீதிகளிலும் நெரிசலை உண்டாக்கிவிட்டிருந்தார்கள் இருசக்கர வாகன ஓட்டிகள்.

அந்த நாடோடிகள் மதிய நேரத்தில் பிரதான சாலையின் சிக்னல் அருகில் இருக்கும் நிழலான நடைபாதையில் அமர்ந்துகொள்வார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டியபடி கதையளக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவள் மட்டும் கூடாரம் அருகே வந்து மரத்தின் கீழ் சாய்ந்து அமர்ந்து முறம் பின்ன ஆரம்பிப்பாள். அப்படியே சில சமயம் தூங்கிப் போவாள். மஞ்சள் நிறக் கொன்றைப் பூக்கள் அவ்வப்போது உதிர்ந்துகொண்டேயிருக்கும். அப்படியொரு நாள் அவள் திடுக்கென்று கண் விழித்துப் பார்த்து கருவிழிகளை அங்குமிங்கும் நகர்த்தி விட்டு மீண்டும் அயர்ந்தாள். வெண்சங்கு போலிருந்தன அவள் கண்கள்.

கதிருக்குக் கடையின் வியாபாரத்தைத் தவிர்த்து அந்த நாடோடிகளின் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்தமானதாக இருந்தது.  பூங்காக்களில் நடைப்பயிற்சிக்கு வரும் மேல்தட்டு ஆட்கள் ஓரமாக, வரிசையாகப் போடப்பட்டிருக்கும் குடிசை மற்றும் பாலிதீன் வீடுகளை வேடிக்கை பார்ப்பார்கள். அது போலத்தான் இவனும் இந்த நாடோடிகளை வேடிக்கை பார்க்கிறான்.

ஹோலிப் பண்டிகையை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதே அவனுக்கு அத்தனை வியப்பு. ஹோலி ஆரம்பிப்பதற்குப் பத்து நாள் முன்பிருந்தே கொண்டாட்டங்களைத் தொடங்கியிருந்தார்கள். வீடு, வசதி இல்லை, பொது வெளியிலும் மதிப்பில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலையும் படவில்லை.

மளிகைக் கடைக்குப் பின் சுவரை ஒட்டி ரெட்டியின் வீடு இருப்பதால், மாடியிலிருந்து பார்த்தால் அந்தக் கூடாரங்கள் நன்றாகத் தெரியும். பின்னிரவுகளில் சாலையில் சருகு மற்றும் குப்பைகளைக் குவித்து நெருப்பூட்டி, கூட்டாகப் பெண்கள் கும்மியடிப்பதுபோல் கைகளைக் குறுக்கித் தட்டிக்கொண்டே நெருப்பைச் சுற்றிப் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். பக்கத்தில் அவர்களின் குழந்தைகள் உடுப்பு ஏதும் போடாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த நாடோடிப் பெண்களின் ஒப்பனையற்ற முகத்தில் வசீகரம் இருப்பதாக இவனுக்குத் தோன்றிற்று. இரவு ஒரு மணி வரை ஆடல் பாடலில் அந்த நாடோடிகள் லயித்துக்கொண்டிருந்தனர்.

மதிய நேரங்களில் தனியாக இருக்கும் அவளிடம் பேச வேண்டுமென கதிருக்கு ஆசையிருக்கும். அவளிடம் ஒருநாள் பெயர் கேட்டான். அவள் லேசாகச் சிரித்தபடி பதில் பேசாமல் அமர்ந்து கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு மாதிரியாயிற்று. தன்னை யாராவது பார்த்துவிட்டார்களா என அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்றான். சமூகத்தின் மீதான பயம் அவனது இயல்பை சிதைத்தது. அவன் பலதடவை பெயர் கேட்டும் அவள் சொல்லவேயில்லை. இவன் ஏதாவது கேட்டால், அவள் கண்டும் காணாத மாதிரி போய்விடுகிறாள்.

சமையல் செய்யும்போதும், அல்லது சாலையில் அமர்ந்து முறம் பின்னும்போதும் அவ்வப்போது அங்கிருந்து கதிரைப் பார்த்து லேசாகச் சிரிப்பதுதான் அதிகபட்ச அறிமுகமாக அவளுடையது இருந்தது.
இவள் ஹிந்தி போல் ஒரு மொழியில் அவனிடம் கடையில் ஏதோ கேட்பாள். இவனுக்குப் புரியாது. அவன் பேசுவது அவளுக்கு நன்றாகப் புரியும். அவள் பதிலளிப்பதுதான் அவனுக்கு விளங்காது. உடனே அங்கே தொங்கும் மசாலா பாக்கெட்டையோ அல்லது தனக்குத் தேவையானதையோ பிய்த்துக்கொண்டு காசு கொடுப்பாள்.

அவளிடம் ஒரு மக்கிய கடுகு எண்ணெய் வாசனையடிக்கும். அவளுடைய கூட்டத்தில் எல்லோருக்கும் இதே வாசனைதான்.

“நாம் க்யா ஹை?” என இன்னொரு நாளும் கேட்டான்.

அவள் பெரிய மனது பண்ணி ‘`சுகந்த் ஹை” என்று சொன்னாள்.

சுகந்த் என்றால் நறுமணம். அவளிடமிருந்து வரும் வாசனையை நினைத்துச் சிரித்தான். “எதுக்கு சிரிக்கிற?” எனக் கேட்டாள். இவன் ஒன்றுமில்லை எனத் தலையாட்டினான்.

அவனுக்குப் பெரும் மயக்கம் அவள் கண்கள் மீதுதான். அவள் சிரிப்பு எப்படி இருக்கும் என்பது நினைவில்லை. அவள் மூக்கில் போட்டிருக்கும் பெரிய வளையமும் மறந்து போய்விடுகிறது. அவள் முகத்தில் கண்களைப் பார்த்தால் வேறெதுவும் காண இயலாத நிலைக்கு வந்துவிடுகிறான். ஏன் இப்படி அவளைப் போய் நினைக்கிறோம். அதுவும் நாடோடியை, வீடற்றவளை என்ற நினைப்பும் அவன் மனதில் வராமலில்லை.
அவ்வப்போது எங்காவது பண்டிகைகள், திருவிழாக்கள் நடந்தால் அந்த நாடோடிகள் மோப்பம் பிடித்து அங்கு சென்று தங்கள் பொருள்களை விற்று வருவார்கள். சில சமயம் வெளியூருக்கும் சென்று வருவார்கள். எந்த ஊரில், எப்போது திருவிழா நடக்கும் என எல்லாம் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இவன் சுகந்தின் கண்களைப் பற்றி மஞ்சு நாத்திடம் தெரியாத்தனமாகச் சொல்லி வைத்தான்.

“நீ எங்க ஊரு ஹீரோவைக் கிண்டல் பண்றியா? இப்படி இருக்கே உன் ரசனை” என விழுந்து விழுந்து சிரித்தான்.

அவள் வரும்போதெல்லாம் மஞ்சு நாத் கதிரை வேண்டுமென்றே கூப்பிடுவான். கதிர் மஞ்சு நாத்தை அடிக்க முனைவான். கதிருக்கு அவள் மேல் காதலில்லை. அவளை ரசிப்பதோடு சரி... ஆனால் மஞ்சு அவளையும் இவனையும் சேர்த்து அடிக்கடி கிண்டல் செய்ய ஆரம்பித்தான். அவன் ஹீரோவைக் கிண்டல் செய்ததற்கான பழிவாங்கலாக இருந்தது.

இவளுக்குப் பாஷை புரியாவிட்டாலும் இவர்களின் செய்கைகளை இனங்கண்டுகொண்டு கடப்பாள்.

அவளின் சிறுத்த இடது முழங்கையின் நுனியில் சிறு காம்பு போல் இருக்கும். அந்த நாடோடிக் குழந்தைகள் அந்தக் காம்பைப் பிடித்து விளையாடுவார்கள். இவள் போ என்று துரத்திவிட்டாலும், மறுபடியும் வந்து வந்து இழுக்கும் போது வலியினூடே சிரிப்பாள். அது நிச்சயம் அவள் அகத்தின் வலியாகத்தான் பட்டது. கையைத் தனது துப்பட்டாவினால் மறைத்துக்கொண்டு கதிர் பார்க்கிறானா எனப் பார்ப்பாள்.

p46c_1524031862.jpg

சில நாள்களாகவே அந்தக் கூடாரங்கள் வெறிச்சோடியிருந்தன. மற்றவர்கள் யாரும் காணோம். பச்சைக் கண்ணழகி மட்டும் இருந்தாள். அவனுக்கு அவளிடம் பேச்சுக் கொடுக்கலாமெனப் பட்டது. அன்று அவள் மூங்கில் பிளாச்சுகளில் நீண்ட ஜன்னல் விரிப்பானைப் பின்னிக்கொண்டிருந்தாள். அவனும் சாவகாசமாகச் சென்று நடைபாதையில் அமர்ந்து ஹிந்தியில் பேச்சுக்கொடுத்தான்.

“எங்கே மத்தவங்களைக் காணோம்?”

“வெளியூர்த் திருவிழாவுக்குப் போயிருக்காங்க.”

“உங்க ஊர் எது?”

“ராஜஸ்தான் பக்கம்” என அவனுக்குத் தெரியாத  ஊரைச் சொன்னாள்.

“உன் அம்மா அப்பா..?”

“எனக்குத் தெரியாது. பார்த்ததில்லை. வளர்த்ததெல்லாம் இந்தத் தாத்தா பாட்டிதான்” எனச் சிரித்தாள்.

“எனக்கு சந்தேகமாயிருக்கு. உன்னை எங்கிருந்தோ தூக்கி வந்து இவங்க வளர்த்திருக்கலாம் தெரியுமா. ஏன்னா, அவங்க மாதிரி உன் சுபாவம் இல்லை” எனச் சொன்னான்.

அவள் சிரித்தாள்.

“பிறக்கும்போதே என் கை இப்படியிருக்குன்னு என்னை ஹாஸ்பிடல்லேயே விட்டுட்டுப் போயிட்டாங்களாம். பெண் குழந்தை. அதுவும் ஒரு கையில்லைன்னு யாருமே என்னை வளர்க்கவும் முன் வரலை. கேள்விப்பட்ட இந்தப் பாட்டி ஹாஸ்பிடலுக்கே போய் என்னை வாங்கிட்டு வந்தாங்களாம்” என்றாள். அவள் குரலில் சுரத்தில்லை. இவனுக்கு என்னவோ போலிருந்தது.

சிலநொடி கழித்து ‘பொறு’ என்பதுபோல் கை காட்டி கூடாரத்தின் உள்ளே சென்று எதையோ எடுத்துக்கொண்டு வந்தாள்.

“இத வச்சுக்கோ, அதிர்ஷ்டம் உண்டாகும். வசதியான வாழ்க்கை, அழகான பொண்ணு மனைவியா வருவா” என அவனுக்குப் புரியும் வகையில் கூறினாள்.

“ஏன் இத வச்சுக்கிட்டு நீ வசதியா வாழலாம்ல?”

“இதை நாங்க வச்சுக்க முடியாது. இருக்க ஒரு இடம், சாப்பிட மூணு வேளைச் சோறு இது தவிர்த்து வேற யோசிச்சதில்லை. நாங்க இதை யாருக்குத் தர்றோமோ அவங்களுக்கு அதிர்ஷ்டம் வரும், தெரியுமா?” எனச் சிரித்தபடி சொன்னாள். அவள் சிரிக்கும்போது கண்களோரத்தில் பறவையின் சிறகு போல் சுருக்கம் விரிந்தது.

இவன் வாங்கிப் பார்த்தான். வெளிர் பழுப்பு நிறத்தில் கெட்டியான மயிர்க்கற்றைகள். மஞ்சு நாத்திடம் காண்பித்தபோது, ‘இது நரிக் கொம்பு. வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டம்’ எனக் கூறினான். அந்த நரிக்கொம்பைப் பத்திரமாய் அவனது பெட்டிக்குள் வைத்தான்.

அடுத்த நாள் காலை விரைவிலேயே கடைக்கு வந்தான். கூடாரத்திலிருந்து அழுகை சப்தம் கதிருக்குக் கேட்டது. அவளின் சனங்கள் இன்னும் வந்திருக்கவில்லை. ஏன் அழுகிறாள் எனத் தெரியவில்லை. இவன் கூடாரத்தின் அருகில் எட்டிப் பார்த்தான். உள்ளே செல்லத் தயக்கமாக இருந்தது.

அதற்குள் ரெட்டியும் வந்துவிட்டதால் இவன் கடைக்குள் சென்றுவிட்டான். ஆனால், அழுகைச் சத்தம் தொடர்ந்து கேட்டது. அவனுக்கு எதுவோ சரியாகப்படவில்லை. அப்போது அவளுடைய சனங்களும் வந்துவிட்டிருந்தனர். அதன் பின் ஆளாளுக்கு சத்தமாகப் பேசிக்கொண்டனர். ஒரு பெண் அவளை வெளியே கூட்டி வந்து முகம் கழுவி விட்டாள்.

அவளின் செம்மண் முகம் இன்னும் செக்கச் சிவந்திருந்தது. முகம் கழுவக் கழுவ அழுதுகொண்டேயிருந்தாள். காகக் கூட்டம் கத்துவது போலிருந்தது அவர்களின் இரைச்சலான பேச்சுகள். என்னாச்சு என வேடிக்கை பார்த்தவர்களிடம் ஏதோ புகாரிட்டுக்கொண்டிருந்தனர். அவள் கதிரைக் கண்டதும் இன்னும் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.

ரெட்டி போக்குவரத்துக் காவலர்களிடம் பணம் கொடுத்து, அந்தக் கூடாரங்களை அன்றே அப்புறப்படுத்தச் செய்தார். காவலர்கள் அந்த நாடோடிகளைத் துரத்திவிட்டனர். தங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு சிதறியபடி அவர்கள் வேறோர் இடத்திற்கு நடக்கத் தொடங்கினர். அவர்கள் சொல்வதை யாரும் காதுகொடுத்துக் கேட்கத் தயாரில்லை. அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள்... கண்டுகொள்ளாமல் நகரத் தொடங்கினார்கள்.

மறுநாள் வெற்றிடமாக இருந்தது அந்த இடம். ஆங்காங்கே சமைத்த, கரியான இடங்கள், மூங்கில், குப்பைகள், கிழிந்த துணிகள் என, கலைந்த ஒரு வாழ்வு கண் முன் தெரிந்தது கதிருக்கு, அவளின் அந்த அழுகை அவனுக்கு இரவில் ஒலித்துக்கொண்டிருந்தது. எதற்காக அழுதாள் என அவனுக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமெனத் தவிப்பு இருந்தது.

மறுநாள் அந்த பச்சைக் கண்ணழகி கடையின் முன் வந்தாள். ஏதோ சத்தமாகத் திட்டிக் கொண்டிருந்தாள். ரெட்டி கடையில் இல்லை. ஊருக்குப் போயிருந்தார். இது, வழக்கமாக சங்குபோல் அமைதியாக இருக்கும் கண்கள் இல்லை. கோபம், வெறுப்பு பொங்கிக்கொண்டிருந்த அவள் கண்கள் கடையில் வேறு யாரையோ தேடியது. இப்படி அவளை அவன் பார்த்ததில்லை. புதிதாக இருந்தாள்.

இவன் என்னவென்று கேட்டதற்குப் பதில் சொல்லுமளவு பொறுமையில்லாமல் திட்டி ஓய்ந்தபடி சென்றாள். மறுநாளும் வந்து கடையின் முன் சத்தம் போட்டாள். சில நாள்கள் கழித்து மீண்டும் வந்த அவள் கடையில் ரெட்டியைப் பார்த்ததும் குரலை உயர்த்தினாள். திடீரென, கையில் வைத்திருந்த ஏதோ ஒன்றை அவர் மீது தூக்கியெறிந்தாள்.

ரெட்டியின் கண் ரப்பையில் பட்டு ரத்தம் குபுக்கென்று பொங்கியது. ரெட்டி கண்ணைப் பொத்தியவாறு பரீட்சை அட்டையைக் கொண்டு அவளை அடிக்க ஓங்க, அவள் பயந்து மிரட்சியுடன் ஓடினாள். ரெட்டிக்கு ரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது.

“வலிக்குதுடா, போய் ஆட்டோவைப் புடிச்சுட்டு வா. டாக்டர்கிட்ட போகணும்” என்றார்.

அவனுக்குச் செல்லத் தோணவில்லை. அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவள் பயந்து ஓடியது அவன் கண் முன் வந்தது. பின் ரெட்டியே ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றார். ரெட்டிக்கு ஆட்டோவில் செல்லச் செல்ல பதற்றம் உண்டானது. அவள் இப்படி நடந்து கொள்வாளென ரெட்டி நினைக்கவில்லை. துரத்திவிட்டதும் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்தார். குற்ற உணர்வு சற்றும் அவர் மனதில் தோன்றவில்லை. பிடிபடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது காரிய மூளையில் ஓடியது. அன்று அவர் குடித்திருந்தார். காமமும் போதையும் தலைக்கேற அவருக்குத் தற்காலிகமாகத் தனது இச்சையை முடித்துக்கொள்ள வேண்டும். எதிரில் தென்பட்டது அவளின் கூடாரம்தான். தனியாக இருந்தாள். கேட்பதற்கு ஆளில்லை என யோசித்து அர்த்த ராத்திரியில் புகுந்துவிட்டார். அவரது ஜவ்வாது வாசனை காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அடிக்கடி கடைக்கு வந்துபோனபோது அவளும் இந்த வாசனையை உணர்ந்திருக்க வேண்டும் என நினைத்தார்.

அதன்பின் அவள் வரவில்லை. கதிருக்கு அரைகுறையாகப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அவள் அழுததற்கும் ரெட்டியின் மீது கோபப்பட்டு அடித்ததற்குமான காரணத்தை அவனால்  யூகிக்க முடிந்தது. ரெட்டியிடமே மறு நாள் கேட்டான். ரெட்டியின் ஒரு கண்ணில் கம்பளிப் பூச்சி போல் பெரிய தழும்பு ஏற்பட்டு விட்டது. ஏற்கெனவே தள்ளிப்போன திருமணம் இனி எப்போதும் நடக்காது என இவன் தீர்மானித்தான்.

“அந்தப் புள்ளை ஏன் உங்கள அடிச்சிச்சுண்ணா?”

“காலி பண்ணச் சொன்னேன்ல. அதான்” என அவன் கண்களை ஏறிடாமல் கூறினார்.

“பாத்தா அப்படித் தோணலையேண்ணா... அதுகூட இருந்த மத்தவங்கலாம் கோபப்படவில்லையே?”

“ரோட்ல போற பிச்சக்காரங்க பத்தியெல்லாம் நா கவலைப்பட முடியுமா... வேலையப் பாரு” என்றார்.

இவனுக்கு அப்படியே ரெட்டியின் மண்டையைப் பிளக்க வேண்டுமென ஆத்திரம் வந்தது. இந்த மாதம் சம்பளம் வாங்கிய பின் வேலையை விடணும் என நினைத்தான்.

p46d_1524031895.jpg

இயலாமை சில சமயம் குரோதமாகவும், வெறுப்பாகவும் மாறிவிடும். ரெட்டியின் இயலாமை குரோதமாக மாறியிருக்கிறது. கதிருக்கு ரெட்டிமீது வெறுப்பு கூடியிருந்தது. அவன் இன்னொரு வேலையைத் தேடும்போது மஞ்சுநாத் வேறொரு யோசனை கூறினான்.

“சிட்டி மார்க்கெட்ல பாய் ஒருத்தர் காய்கறி மொத்த விற்பனைக் கடையை லீசுக்குத் தரப்போறதா சொன்னார். நீ எடுக்கறியா? வர்ற லாபத்துல அவருக்கும் உனக்கும் பாதி கிடைக்கும்” என்று சொன்னான்.
கதிருக்கும் இந்த யோசனை  சரியெனப் பட்டது. அதன் தொடர்பாகப் பேரம் பேச மஞ்சு நாத் உதவி செய்தான்.

இவன் பத்திரமாய் வைத்திருந்த நரிக்கொம்பை எடுத்துப் பார்த்தான். ‘இத வச்சுக்கிட்டா அதிர்ஷ்டம் கிடைக்கும்’ என ஒரு பறவையின் சிறகை நினைவுபடுத்திய அவளின் சிரிப்பும், வெண்சங்குக் கண்களும் நினைவில் வந்து போயின. கூடவே அந்த மிரட்சியான பயந்த கண்களும் கண்முன் விரிந்தன.

இவன் வேலையை விடுவதாகச் சொன்னபோது, ரெட்டியும்  வேண்டாமென்று சொல்லவில்லை. இவன் சிட்டி மார்க்கெட் பக்கம் தன் இருப்பை மாற்றிக்கொண்டான்.

எங்காவது சாலையில் கூடாரங்களைப் பார்க்கும்போது அவனுக்கு அவள் ஞாபகம் வந்தது. சில மாதங்கள் கழித்து சில்க் போர்டு சிக்னலில் அந்தப் பச்சைநிறக் கண்ணழகியை மீண்டும் கதிர் பார்த்தான். தூரமாகப் போய்க்கொண்டிருந்தாள்.

யாரிடமோ பொருளை வாங்கச் சொல்லி நீட்டிக்கொண்டிருந்தாள். அவள் வயிறு மேடிட்டு இருந்தது. ஏனோ அந்த வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியக்காரன் சொன்னதாக, ரெட்டியின் அம்மா சொன்னது நினைவில் வந்து போனது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.