Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்று தணியும்....

Featured Replies

நேற்றொரு நண்பன் MSN ல் "வான்படை எழுந்தது சிங்களம் திகைத்தது" என்று போட்டிருந்தான். பலவருடக்கனவு இப்பத்தான் நிறைவேறியிருக்கிறது. ஒரு ஈழத்தமிழ் மகளாக சந்தோசப்பட்டாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவோர் உணர்வும் கூடவே சேர்ந்தே வருது. ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்.. தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.மீண்டும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகப் பிரிந்துபோன நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பழையபடி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோசமாய்க் கழிக்கலாம் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்து போறமாதிரி ஒரு உணர்வு.

இராணுவம் செய்த மாதிரி சிறார்களையோ பாடசாலைகளையோ தொழுகைத் தலங்களையோ குண்டுபோட்டு நம்மவர் அழிக்கவில்லைத்தான் இருந்தாலும் இறந்துபோன மூன்று அதிகாரிகளின் உயிருக்குப்பலியாக இப்பவோ எப்பவோ கொழும்பிலும் அருகிலுள்ள சிங்கள மக்கள் அதிகமாக செறிந்து வாழும் மாத்தளை , கண்டி போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இனி தினமும் நடுக்கத்துடன்தான் அன்றாட வேலைகளைச் செய்யமுடியும். எந்த நேரம் யாருக்கு இனவெறி வரும் யாரைக்கொல்வார்கள் யாரைச் சூறையாடுவார்கள் என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும்.

எட்டு வருடங்களுக்கு முதல் நான் மாத்தளையில் வசித்தபோது ஒரு சமரில் மடிந்த ஒரு இராணுவ வீரரின் பூதவுடல் நாங்கள் வசித்த பகுதியிலிருந்த சகோதரியின் வீட்டுக் கொண்டுவரப்பட்டது. எங்களைப்போல அவர்கள் அழவில்லை மாறாக அரசாங்கத்தையும் பணத்துக்காக மகனை இராணுவத்தில் சேர்த்துவிட்ட தந்தையையும் தான் திட்டினார்கள். இருந்தாலும் இருந்த ஒரே அண்ணனைப் பறிகொடுத்த சோகத்தை அவர்களுடைய கண்ணில் காண முடிந்தது. நடக்க இருந்த பபிதாக்காவின் திருமணமும் தள்ளிப்போனது.

குடும்பத்திலுள்ள ஒரு உயிரைத் தற்காலிகமாகப் பிரிவதும் நிரந்தரமாகப் பிரிவதும் கொடுமையானது. அதை நான் சொல்லிப்புரிய வைக்கவேண்டியதில்லை.. அந்த வலியை ஒருமுறையாவது நாம் அனுபவித்திருப்போம். இப்போது நாட்டுக்காக வீட்டுக்கொருவரைப் போராட அழைக்கிறார்கள். இது நான் பிறந்தது முதலே நடந்துகொண்டுதானிருக்கிறது. மாமா, சித்தப்பா என்று தொடங்கி அண்ணா, அக்கா என்று போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானார்கள். பிறகு கூடப் படித்தவர்களும் அந்தவழியிலே போய்விட்டார்கள். ஒருவர் போராடப்போயாவது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சில உயிர்களையாவது தமிழீழம் மலரும்போது நிம்மதியாக வாழவைக்க முடியும் என்ற நம்பிக்கையால் இப்ப தம்பி தங்கை மாரை பெற்றோரே போராட்டத்தில் இணைத்து விடுகிறார்கள்.

இன்று இங்க சரியான மழை... காலையிலிருந்து ஒரே இடியும் மின்னலும்.காலையில் பஸ் எடுக்கச் செல்லும்போதுதான் முதலாவது இடிச்சத்தம் கேட்டது. உடனே மனசு கனடாவிலிருந்து ஊருக்குப்போய்விட்டது.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாய் குண்டுச்சத்தம் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறன். பாலர் வகுப்புப் படிக்கேக்க தூரத்தில தான் குண்டுச்சத்தம் கேக்கும் எங்கயோ சண்டை நடக்குது என்று பேசாமல் இருப்பம். பிறகு பிறகு பக்கத்திலயே ஆமி வந்திட்டான். எந்தப்பக்கம் சூடுச் சத்தம் கேட்டாலும் அம்மா, அம்மம்மா சத்தம் கேட்ட பக்கத்தில இருக்கிற சொந்தக்காரரை தெரிஞ்சாக்களை நினைச்சு கடவுளே அவைக்கு ஒன்றும் நடக்கக்கூடாதென்று உள்ள எல்லாக்கடவுள் மாரிட்டையும் கெஞ்சுவினம். பிறகு வளர வளர எல்லாமே பழகிப்போச்சு. குண்டுச் சத்தம் கேட்டாலும் பயம் இல்லாமல் போயிற்று. ஒருமுறை பாடசாலையில் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று பயங்கர சத்தங்கள். அந்த நேரம் வெளியில நின்டனாங்கள் எங்கட வகுப்பில எல்லாரும் உடன கீழே விழுந்து படுத்திட்டம். செல் கூவிக்கொண்டு போறது தெரியுது. அன்றைக்கு நெல்லியடி சென்றல் ஸ்கூல் பள்ளிக்கூடத்துக்கருகில் இரு தரப்பினரும் சந்தித்துக் கொண்டதால தான் அந்த அடிபாடு. கொஞ்ச நேரத்தில ஸ்கூல் விட்டிட்டுது. வீட்ட போய்க்கொண்டிருக்கிறம் கொஞ்ச ஆக்கள் சேர்ந்து. வீட்டுக்கு கிட்டப் போட்டம். ஸ்கூலடியிலதான் சண்டை என்று கேள்விப்பட்டு எல்லாற்ற அம்மாமாரும் கோயிலடியில வந்து எங்களைக் காணேல்ல என்று கவலைல பார்த்துக்கொண்டு நிக்கினம் நாங்களும் பாலத்தால இறங்கிறம் சைக்கிள்ல, எங்களுக்கு மேல வந்த ஹெலியில

இருந்து நெருப்புப்பொறி விழுந்து மேல கறன்ட் வயர்ல பட்டு வயர் தொங்கிக்கொண்டு வருது அப்ப நினைச்சம் நாங்கள் எல்லாரும் சாகப்போறம் என்று ஆனால் ஒருதருக்கும் ஒன்றுமே நடக்கேல்ல.

எங்கட வீடுதான் கடைசி வீடு அதால எங்கட வீட்டு முன் பக்க மதிலால பார்த்தா மெயின்றோட்டால ஆமி போறதையும் பார்க்கலாம். வீடுகளுக்கு அடுத்து தோட்டங்கள். தோட்டங்கள் முடியிற இடத்தில ஒரு சின்னத்தெரு .. அதாலதான் அண்ணைமார் போய் வாறவை. பின் பக்க மதிலடியில வந்து நின்று ஆமி ரோந்து போறதை நோட்டம் விடலாம். அப்பிடி ஒருநாள் சிலபேர் வந்துநின்று பார்த்துக்கொண்டு நிண்டதை ஹெலி கண்டிட்டுதோ இல்லை சும்மா சுட்டாங்களோ தெரியாது சுடத்தொடங்கிட்டினம். அந்தநேரம் பார்த்து நான் சிவப்புக்கலர் தண்ணிக்கானோட நின்டனான் முத்தத்தில.. அம்மா நினச்சா நான் அதில படம் காட்டிக்கொண்டு நின்டதாலதான் சுட்டதென்று எனக்கு நல்ல பேச்சு. ஏற்கனவே எண்பத்தேழாம் ஆண்டு ஹெலி அடிச்சதில அக்காக்கு காலில காயம் பட்டு திரும்ப திரும்ப வெட்டி வெட்டி ஒரு அரிசியளவில் சன்னங்கள் எடுக்கிறது. அப்ப எனக்கும் அப்பிடி நடந்திடும் என்று கவலைல எனக்கு அடியும் விழுந்திச்சு.

காயம் பட்டாக்களுக்கு உடன தெரியாதாம். அக்காக்கு காயம் பட்டதே தெரியாதாம். அவாக்கு அப்ப என்ன 6 வயதிருக்கும். விளையாடிக்கொண்டு நிண்டவவாம். ரத்தக்கறையைப் பார்த்திட்டு யாருக்கு காயம் என்று தேடித்தான் அக்காக்கு காயம் பட்டிருக்கென்று கண்டுபிடிச்சவையாம். பல வருடங்களுக்குப்பிறகு 95 ல் என்று நினைக்கிறேன்.. அக்கா ஒருநாள் ஸ்கூலால வந்து அம்மா மொழிக்குப் பக்கத்தில ஏதோ உருளுது என்று சொல்லிப் பக்கத்து வீட்டு டொக்டர் அங்கிள் வீட்ட போனா அவரும் பார்த்திட்டு ஓம் பிள்ளை ஏதோ கிடக்கு என்று சொல்லி கொஸ்பிற்றலுக்குக் கொண்டுபோய் திரும்ப வெட்டி ஒரு ஒருசதம் அளவுக்கு இன்னொரு செல் துண்டு கிடந்து எடுத்தது.அம்மா அதைப் பத்திரமா வச்சிருந்தவா பிறகு ஊரை விட்டு வெளிக்கிடும்போது எறிஞ்சு போட்டா.

சாவகச்சேரியில கவிதா மச்சாளின்ர அப்பா குண்டு பட்டு இறந்திட்டார் என்று செத்த வீட்டுக்குப் போனம். அவேன்ர வீட்டைக் கண்கொண்டு பார்க்கேலாது.100 இடத்தில ஓட்டை கிடந்திச்சு.அவை சன்னங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒரு லாச்சி நிறையச் சேர்த்து வச்சிருந்தவை.

பங்கரில ஒளியுறதைப் பற்றியும் சயந்தனண்ணா எழுதியிருந்தார். எங்கட வீட்டில பங்கரே இல்லை. டொக்டர் அங்கிள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழ ஒரு பெரிய பங்கர் அங்கதான் அந்த ஏரியாவில இருக்கிற நிறைய ஆக்கள் வருவினம் பங்கரில ஒளியுறதுக்கு. ஆனால் எங்களுக்கு அது ஒரு விளையாட்டிடம் மாதிரி. திருவலகை கொஞ்சச் சாப்பாட்டு சாமான் எல்லாம் அதுக்குள்ள இருக்கும்.பொரிவிளாங்காய் ஞாபகம் இருக்கா? கடிச்சாலும் கடிபடாது. தொடர்நது குண்டடிபட்டா அன்றைக்கு முழுக்க பங்கருக்குள்ளதான் எல்லாரும். ஆனால் பெருசுகள் எங்களைச் சத்தம் போடாம இருக்கச் சொல்லுவினம் நாங்கள் எங்கட பாடு.

ஒருநாள் ஊராக்கள் எல்லாரும் நிலா வெளிச்சத்தில கோயில் வாசல்ல இருக்கிற பலாமரத்துக்கு கீழ இருந்து கதைச்சுக்கொண்டிருந்தம். சில நேரம் சாமம் சாமமா அதில இருந்து கதைப்பம். அப்பிடி ஒருநாள் தான் 91 என்றுதான் நினைக்கிறன். ஹெலில அறிவித்தல் வந்திச்சு எல்லாரயும் தென்மராட்சிக்குப் போகச்சொல்லி. ஊரில இருக்கிறாக்கள் ஒருதரும் வெளிக்கிடுற பிளானில்லை. கடைசியா வேறவழியில்லாம சாவகச்சேரிக்குப்போனம். இடம்பெயர்ந்தது அந்த அனுபவம் மட்டும்தான்... இதைப்பற்றிப் பிறகு எழுதணும்.

உண்மையா இன்றைக்கு எழுத நினைச்சது வேற. அதயும் சொல்றன். போர் என்று ஒன்று இல்லாம இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று யோசிச்சுப் பார்த்தன்.

இப்ப என்னோட படிக்கிற நண்பர்கள் சிலர் நாங்கள் சின்னவயசில இருந்தே நண்பர்கள் என்று சொல்லும்போது எரிச்சல் எரிச்சலா வருது. நாங்களும் தான் சின்ன வயசில இருந்தே பல கனவுகளோட ஒன்றாய் வளர்ந்தோம் படித்தோம், அழுதோம், சிரித்தோம் ஆனால் இப்ப பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல எங்கெங்கயோ வாழுறம். ஜெசி, ஜெயந்தி, வாசு, வசா ,லுசா ,வித்தி ,கோதா, கார்த்தி இப்பிடி ஒரு குறூப். எல்லாரும் அஞ்சு ஆறாம் வகுப்பில இருந்தே ஒரே யுனிவர்சிற்றுக்குப் போவம் என்ற கனவில திரிஞ்சனாங்கள். சொன்னா நம்பமாட்டிங்கள். எங்களில நிறையப்பேர் பத்துப் பதினொரு வயதிலயே இது ஹொஸ்டல்ல போயிருக்கும் போது பாவிக்க என்று நிறைய பொருட்கள் வாங்கி வச்சனாங்கள். ஆனால் இன்றைக்கு நானிங்க. மற்றவர்களும் எங்கயோ எல்லாம் சிதறிப்போயிருக்கிறம். ஜசி அம்மாக்கு கான்ஸர் வந்து இறந்துபோனதால படிப்பையே நிப்பாட்டிட்டு மற்றவர்களுடைய தொடர்பையும் விடுத்து நத்தைபோல வாழுறாள். ஜெயந்தி ரெக்னிக்ல் கொலேஜ்ல. வாசு ஸ்ரீபாதா கொலேஜ், வசா செய்தா மெடிசின்தான் என்று இரண்டாந்தரம் A/L எடுத்து இப்ப யாழ் பல்கலைக்கழகத்தில எப்பவாவது நடக்கிற வகுப்புக்கு போய்க்கொண்டு.. வித்தி எங்கயோ சித்தமருத்துவம் படிக்கிறாள். லுசா பாங்ல வேலை. கோதா கார்த்தி என்ன செய்யினம் என்றே தெரியா. எப்பவாவது ஒரு போன். அதிசயமா ஒரு கடிதம். இப்பிடித்தானிருக்கிறம் இப்ப.

அங்க பட்டதாரிகள் என்று மரியாதையாக அழைக்கபட்ட பலர் புலம்பெயர் நாடுகளில் காஸ் ஸ்ரேசனிலும் pizza டெலிவரியும் செய்துகொண்டிருப்து தான் கொடுமை. திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்குப் பௌதீகம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் இப்ப இங்க ஒரு பக்டரியில வேலை செய்யுறா. ஈழப்போருக்கு உதவி செய்த ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கபட்ட பலர் பெற்றவர்களின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்து கொள்ள முடியாமல் புலம்பெயர் நாடுகளில் இருந்து புழுங்குவது ஒருவிதக்கொடுமை என்றால் போரால ஏற்படுகின்ற மனவுளைச்சல்களும் வடுக்களும் அதவிடக்கொடுமை.

சிறார்கள் வெளிச்சக்கூடு வாங்கவும் தேவையில்லை. இந்த வெளிச்சக்கூடு பற்றிய பதிவு பற்றி நான் யோசிச்ச விசயமிது. ஆமி மாமா கொஞ்சநேரம் அழுதவர் என்றொரு வரி வரும். நான் நினைக்கிறன் அவர்களுக்கும் ஒரு மூலையில் கொஞ்ச இரக்க குணம் இருக்கும்தானே அப்ப தாங்கள் இந்தச் சின்னஞ்சிறார்களைச் சீரழிப்பது போலத் தங்கள் குழந்தைககளையும் யாரும் சீரழிக்கக்கூடும் என நினைத்திருப்பாரோ அந்த ஆமி மாமா?

பெண்கள் சூறையாடப்படவும் தேவையில்லை. அந்த ரணத்தோடு உயிர் வாழவும் தேவையில்லை. ஒருமுறை சூறையாடப்பட்டவர்கள் பிறகு சாதாரண வாழ்க்கை வாழுதல் என்பது எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை. பிற்காலத்தில் இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய மனநிலை பிறழ்தலுக்கு கூட இதுபோன்ற அக்கிரமங்கள்தான் காரணம். ஆண்களும் எந்தவிதமான வக்கிர சோதனைகளுக்கும் உட்படத் தேவையில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்ட்ட சிறுவர்கள் கூட பிற்காலத்தில் ஆக்ரோசமுடைய கணவனாகவோ தந்தையாகவோ மாறுதலுக்குக் கூட சின்ன வயதில் ஏற்பட்ட மாறாத வடுக்கள்தான் காரணம்.

ஊரிலுள்ளவர்களினதும் சரி புலம் பெயர்ந்தவர்களினதும் சரி கல்வி கற்கும் உரிமை நசுக்கப்படத் தேவையில்லை. என்னோட கூடப் படித்த பெடியங்களில் ஒராளைத் தவிர மற்ற எவருமே உயர்கல்வி கற்கவில்லை. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தீபன் என்ற நண்பனை ஒரு ஒன்றுகூடலில் சந்திக்க நேர்ந்தது. அன்று தான் தெரிந்து கொண்டேன் பலர் போராட்டத்தில் இணைந்திருப்பதையும் சிலர் பாதுகாப்புத்தேடி துபாய் போன்ற நாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பதையும். கனடாவிலிருக்கிற தீபனாவது படிக்கிறான் என நினைத்தேன் ஆனால் அவனும் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருந்து விட்டு இப்பத்தான் இங்க வந்ததாம். இனி கடனையடைக்க இரண்டு வேலை செய்ய வேண்டுமாம். நான் குறிப்பிட்டவர்களெல்லாம் எங்களோடு எப்பவுமே எல்லா விசயத்திலயும் போட்டி போடுபவர்கள். எங்களைப்போலவே பல கனவுகளுடனே படித்தவர்கள் தான்.

சில தினங்களுக்கு முன்னர் இங்குள்ள ஒரு யுனிவர்சிட்டியில் நடந்த ஒரு நிகழ்வின்போது விடுதலையைப் பற்றி ஒரு றாப் பாடல் பாடியதற்காக சில தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. அவர்கள் விடுதலையானது பற்றி இன்னும் தெரியவில்லை.

உயிர்ச் சேதங்களைப் பற்றியும் அம்மா அப்பா இல்லாது வளரும் குழந்தைகளைப் பற்றியும் சொல்லவே தேவையில்லை.போரால் ஏற்பட்ட, நானிங்கு சொல்லாமல் விட்ட நிறை பிரச்சனைகளுமுண்டு.

[நானிப்ப இவற்றை போர் என்று ஒன்று இல்லாமல் விட்டால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசையில்தான் இதை எழுதினேன் எனவே போரின் அவசியம் என்ன என்று தெரியாதது காரணமில்லை என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.... பதிவு கொஞ்சம் நீளமாப் போயிற்று அத்தோடு தொடர்பில்லாத மாதிரியும் இருக்கு :-(( ]

தொடர்புடைய ஆக்கங்கள்:

வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட...

இரை தேடும் இயந்திரக் கழுகுகள்

குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....

தமிழனின் பறப்பு முயற்சிகள்!

ஆனந்தன் அண்ணாஇ நேற்றும் உங்களை நினைத்தேன்

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

சினேகிதி இந்த ஆதங்கம் உங்களுக்கு மட்டுமல்ல எல்லோர் மனதிலுமே குடைந்து கொண்டிருக்கிறது.

வான் படை எழுந்தது சிங்களம் திகைத்தது என போட்டிருந்த அந்த நபர் நம்ம அருவிதானே.நல்ல ஆக்கம் பாராட்டுக்கள்

நீங்கள் சென்ன விசயங்களில் தமிழீழமக்கள் ஒன்றை எண்ணியேனும் வருந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஏக்கம் எதிர்பார்ப்பு கவலை கோபம்

நிலையில்லாத மனநிலையில்தான் 99 % மக்கள்

என்று கிடைக்கும் சிந்தனை; பயம் இன்றிய பயணம்

கொழும்பிலிருந்து

கருணை_நிழல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிநேகிதி.

உங்கள் ஆதங்கம் ஒவ்வொரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழனுக்கும் உள்ள உணர்வுதான். இங்கு கொட்டும் பனியில் விறைத்து நிற்கும் போதெல்லாம் சூடேற்றிப் போவதே ஊர் நினைவலைகள் தான். நல்ல காலம் குடும்பமாய் வந்ததால் எங்கள் மேல் கல்வியினைத் தொடரமுடிந்தது. கனவுகள் நிறைவேற்றப்படாமல் சிதறிப்போனவர்கள் எத்தனை பேரோ நினைக்கவே நெஞ்சு கலங்குகின்றது!..

நிச்சயம். ஈழம் மலரும். அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கின்றோம். !

சினேகி இன்றைய கனவுகள் நாளைய நனவுகள், கனவு ஒரு நாள் நனவாகும்

  • தொடங்கியவர்

நன்றி எல்லாருக்கும்...ஈழவன் அது அருவியில்லை நீர்தான்.

நன்றி எல்லாருக்கும்...ஈழவன் அது அருவியில்லை நீர்தான்.

நான் அப்படி போடவே இல்லையே நான் எப்பவும் போடுவது போல [மாண்புமிகு ஈழவன்] எனத்தான் போட்டிருகீறன்

ஈழவன் என்றும் நல்ல பிள்ளை தான் பட் அவருக்கு ஏத்தினா எஙகலை எல்லோ மறந்திராரு.?

சிநேகிதி நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை. ஆனால்இ போராட்டம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் தமிழர்கள் இந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களில் பலர் மேற்படிப்பு படிக்கிறார்கள். அங்கு கடைசி பெஞ்சில் இருந்த பலர் இன்று நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். அங்கு படிப்பு ஏறவே ஏறாது என்று கைவிட்ட பலர் புலம்பெயர் நாடுகளில் வசதியாக இருக்கிறார்கள் போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டும் நடக்கவில்லை. எமது சமுதாயச் சீர்திருத்தத்திற்காகவும் பயன்பட்டிருக்கிறது. தமிழர்களுக்குள் இப்போதிருக்கும் ஒற்றுமை அப்போதிருந்ததா? எமக்கு முந்தைய அக்காமார்இ அண்ணாமாரைப் பாருங்கள். அவர்களுக்குள்ளும் ஒருசிலர்தான் நன்றாகப் படித்து முடித்து நல்ல வேலையில் இருந்திருப்பார்கள். என்னைப் பொறுத்தவரைஇ நாம் புலம்பெயராமல் இருந்திருந்தால் தமிழர்கள் முன்னேறியிருந்திருக்கமாட்ட

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்

இருக்கலாம் தமிழச்சி....என்னுடையது மிகவும் குறுகிய பார்வை...நான் என்னைச்சுற்றி இருப்பவர்களையும் நான் இழந்து போனதையும்; மட்டுமே வைத்து எழுதினேன்.

உங்களது பார்வை குறுகியதாக எனக்குத் தெரியவில்லை. பலவிடயங்களில் உங்கள் கருத்தும் எனது கருத்தும் ஒத்துப் போகக்கூடியதாக இருந்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். மேற்கூறியது அநேகமாக எல்லோருக்கும் பொருந்தக்கூடியதுதான். ஆனால் உங்களது இந்த ஆதங்கம் மிகவிரைவில் போய்விடும் என்பதையிட்டு மகிழ்ச்சியடையுங்கள். 10-15 வருடங்கள் பொறுத்த எம்மால் ஒரிரு வருடங்கள் பொறுப்பது கடினமாக இருக்காது என நினைக்கிறேன். எந்தவொரு விடயமும் ஒன்றை இழந்து பெற்றுக் கொள்வதுதான். எமது சந்ததி மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக நாம் கஸ்டப்படுகிறோம் என்பது உண்மைதான். எமக்கு வந்த இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பது எனது விருப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.