Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் என்ன சித்தனா? தெய்வமா? – நேர்காணல் -தமிழ்க்கவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ன சித்தனா? தெய்வமா? – நேர்காணல் -தமிழ்க்கவி

இதுவரை படித்தவர்கள்: 351
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

நான்வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் பரந்தனைக் கடந்து கிளிநொச்சியை விரைவாக அண்மித்து நீதிமன்ற நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுத் தனது பயணத்தைக் தொடர்ந்தது. கிளிநொச்சிக்கும் எனக்கும் ஒரு பரமார்த்தமான தொடுகைகள் முன்பு இருந்தன. சிறுவயதில் இருந்தே எனது தந்தையார் இங்கு கடமையாற்றியதால் ஏற்பட்டதாலும் இங்கு நெற்செய்கை வயல் இருந்தகாரணத்தினாலும் அது ஏற்பட்டது. நான் கிளிநொச்சியில் இறங்கியபொழுது அந்தக்காலை வேளையிலும் வெய்யில் வெளுத்துக்கட்டியது. வியர்வையில் உடல் தெப்பமாக நனைந்து விட்டதாலும் குறித்த நேரத்திற்கு முதலே வந்து விட்ட காரணத்தினாலும் நீதிமன்ற வளாகத்தின் அருகே சடைத்து நின்ற மரநிழலின் ஓரத்தில் ஒதுங்கி நின்று எதிரே இருந்த ஏ நைன் வீதியை விடுப்புப் பார்த்தேன். இந்த வீதி பல சங்கதிகளை கண்டிருந்தாலும் அதற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போல் புதுப்பொலிவு பெற்று ஒரே இரைச்சலாக இருந்தது. காலம் தான் எவ்வளவு கனதியானது? அது இதேவீதியில் பல ரணங்களையும் இரத்த வெடில்களையும்  அழுத்தமாக எழுதி வைக்க இந்த மனிதர்கள்தான் மறதிநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்களோ என்று எனது மனது என்னுடன் சமராடியது.

நான் சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று விட்டு அருகே இருந்த செம்மண் ஒழுங்கையினால் நடக்கத் தொடங்கினேன். ஒழுங்கையின் நடுவிலே ஒரு இராணுவ முகம் முகப்பு இருந்தது தெரிந்தது. நான் அதைக்கடந்த பொழுது அங்கு காவலுக்கு நின்ற சிப்பாய் ” கொய்தன்ன மாத்தயா?”என்று கேட்க, நான் நண்பர் ஒருவரை பார்க்கப்போவதாக ஆங்கிலத்தில் சொன்னேன். இந்தக்கேள்வி எனக்கு சிறிது இடைஞ்சலாகஇருந்தாலும் நான் அவனது கடமைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை. அந்த மினிமுகாமிற்கு அருகே இருந்த கட்டிடத்தின் அருகே பல மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நின்றிருந்தன. அந்தக் கட்டிடம் பொலிவிழந்து காணப்பட்டாலும் முன்னர் புலிகளது ஏதாவதொரு நிர்வாகப்பிரிவில் இருந்திருக்கலாம். நான் சந்திக்க வந்த தமிழ்க்கவியின் வீடு இந்த முகாமிற்கு அருகேயே இருந்தது. நான் வீட்டுப்படலையை திறந்த பொழுது அங்கே முற்றத்தின் நடுவே இருந்த சிறிய தோட்டத்தில் பயிர்களுக்கும் பூக்கண்டுகளுக்கும் தண்ணிவிட்டுக் கொண்டிருந்த தமிழ்க்கவி என்னைக் கண்ட சந்தோசத்தில் முகமெல்லாம் மலர,

“என்னஅங்கை திகைச்சு போய் நிக்கிறியள் ? உள்ளுக்கைவாங்கோ”.என்று அன்பு கொப்பளிக்க வரவேற்றா.

எனக்கோ கைகால் உதறல் எடுக்கத்தொடங்கி விட்டது. அதற்கு காரணங்களும் இல்லாமலும் இல்லை.         

எல்லோராலும்அன்ரி என்று அழைக்கப்பட்ட தமிழ்க்கவி, தமிழீழவிடுதலைப் புலிகளின் அமைப்பின் அரசியற் துறை கலைத்துறை என்று இவரது கால்படாத இடங்களே இல்லை. பிரான்ஸில் இருக்கும்பொழுது இவரது நாடகங்களை புலிகளின் தொலைக்காட்சியில் பார்த்துப் பிரமித்ததுண்டு. தனது மகன்களையும் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப்போருக்கே கொடுத்தவர் என்ற வகையில் எனக்கு அவரின் மீது மதிப்பு இருந்ததுண்டு.

 “இப்ப நீங்கள் இருக்கிற கொண்டிசனிலைவீட்டுக்குள்ளை போனால்  என்னம் மோசமாய்போடும். அதாலை இதிலை இருக்கிற மாமரத்து நிழலைஇருப்பம்”.என்றவாறே கதிரைகளை மாமரத்து நிழலில் போட்டு விட்டார். காலைவேளையாகையால்  பறவைகளின் சத்தம் இன்னும்அடங்கவில்லை. தூரத்தே மயில்கள் இரண்டு  வேலி  கடப்புக்கருகில் மேய்ந்துகொண்டிருந்தன. அவர்விட்டு முற்றத்தில் நின்றிருந்த எலுமிச்சை மரத்தில் பறித்து  அவர் போட்டுத்தந்த இருந்த எலுமிச்சம்பழச்சாறுடன் எமக்கிடையிலான கதையாடல் தொடங்கியது. 

“முதலிலை அரசியலை பத்தி கொஞ்சம் கதைப்பம்  எண்டு பாக்கிறன். இப்ப அதுதானே எல்லாத்துக்கையும் கிடக்கு”.

“பின்னை….. “

கோமகன்: இப்பத்தையான் பரம்பரைக்கு உங்களை அவ்வளவு பெரிசாய் தெரியேலை. அதாலை உங்களை பத்திகொஞ்சம் சொல்லுங்கோ. அப்பிடியெண்டால் தான் இப்ப நாங்கள் கதைக்க போறதுக்கு அது ஒருபெலப்பாய் இருக்கும்.

தமிழ்க்கவி: என்னைச்சுற்றி ஒளிவட்டம் எதுகுமில்லை. எங்கள் குடும்பத்தில் எல்லாரும் பட்டதாரியள் இல்லை. அதோடை  அரச அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலை பார்த்தவையும் இல்லை. இதுதான் என்ர இளம் வயதுச்சூழல். எங்களுக்கு காடுகளும் குளங்களும், சேனைப்புலவுகளுமே இருந்துது. பள்ளிக்கூடம் அஞ்சாம் வகுப்போட போச்சு படிப்பை போதுமெண்டிட்டார் என்ர அப்பு.

இது அண்டைக்கிருந்த சூழலில கடிதம் எழுதவும் பத்திரிகை படிக்கவும் போதுமான படிப்பே  எங்கட வாழ்வாதாரத்துக்கும் போதுமெண்ட கணிப்பு. ஆனா நான் படிச்சன். அது முறைசாராக்கல்விதான். பிறந்தது வவுனியா சின்னப்புதுக்குளம் கிராமத்தில் ஒரு குடிசை. படிச்சது வவுனியா சீ. சீ பாடசாலையில எட்டாம் வகுப்புவரை. அதுக்குப்பிறகு இறம்பைக்குளம் மகா வித்தியாலயம் . அவ்வளவுதான் பதினாலு வயதில கலியாணம். , பதினைந்து வயதில் தாயாகி, பதின்மூண்டு வருசம் ; பெரும் வறுமையில கழண்டு, உடுத்த ஒரேசேலை. அநேகமான  நாட்களில ஒருவேளை சோறும் இல்லாம காட்டுக்காயளையும் கீரையளையும் திண்டு….வேண்டாமே ஆறின புண்ணைக் கீறிப்பார்க்க வலிக்கிது. வலி அந்த அனுபவங்களிலதான் நான் எழுதத் துவங்கினன். பதினாலு வயதில நான் எழுதின கவிதை வீரகேசரியில் பிரசுரமாச்சுது பிறகு…. பதின்மூண்டு வருசமா….. அதுக்கும்  மேல நான் பேனையைத் தொடவேயில்ல.அதுக்கு நேரமுமில்ல.

கோமகன்: சரி இவ்வளவு தூரத்துக்கு கஸ்ரபட்டு இருக்கிறியள். பேந்தென்னத்துக்கு ஒண்டுமில்லாத எழுத்து வேலைக்கு வந்தியள்?   

தமிழ்க்கவி: எட……….. கத சொல்லுறது எனக்கு கைவந்த கலை. அந்தக்காலத்தில வாற புத்தகமெல்லாம் படிப்பன். ஓவ்வொரு நாளும் ராவில அக்கம்பக்கத்தில இருந்து கிழவன்கள், கிழவியள் கொஞ்சம் கதைவிரும்பிறவை எண்டு எப்பிடியும் வீட்டில பயினைஞ்ச பேராவது வருவினம். அப்பு வேலயால வந்து ஒரு சின்ன வெங்கலக் கைவிளக்கைப்பிடிச்சுக்கொண்டு கதைப்புத்தகம் வாசிப்பார். எல்லாம் விக்கிரமாதித்தன்கதை, மதனகாமராசன்கதை, புராணங்கள், சேதுபுராணம், பாரதமெண்டு இப்ப கோயிலுகள்ள புராணம் படிச்ச மாதிரி ராகமாபாடுவார். சனம் சும்மா சொக்கிப்போய் கேக்கும். அந்தப் புத்தகங்களில முற்றுத்தரிப்பு கமா ஒண்டும் இராது. ஒருகட்டத்தில தொடரும் போட்டிருவார். மிச்சம் நித்திரைவருது நாளைக்குப்பாப்பம் எண்டா சனம் எழும்பி போடும். பிறகு என்ர தம்பிமாருக்கு அடுத்தநாள் காலமை நான் அதேகதைய வாயிச்சு காட்டோணும். நான் மனதாலயே முற்றப்புள்ளி கமா எல்லாம் போட்டு வசனமா வாசிப்பன்.  கல்கி, கலைமகள். ரெண்டும் அப்பு எடுப்பார். அப்பாத்தை குமுதமும், ஆனந்தவிகடன், கல்கண்டு, காதல் எண்டு இதுகள எடுப்பா…காதல நாங்கள் களவாத்தான் படிப்பம். பக்கத்துவீட்டில வடிவேலண்ணை பேசும்படமெடுப்பார். எல்லாம் படிப்பன். பிறகு அக்காவும் நானும் தொடர்கதையளின் போக்கை இப்பிடித்தான் வருமெண்டு தீர்மானிச்சு வாதாடுவம். அதேமாதிரி  வருசத்துக்கு  வாற சினிமாப்படமெல்லாம் அப்பாத்த பாப்பா. என்னையும் அக்காவையுங் கூட்டிக்கொண்டுதான் போவா. என்ன.. செக்கன் சோ தான். பாதிப்படத்தில நித்திரையாப்போவன். பிறகு குட்டிக்குட்டி நடக்க வைச்சு வீட்ட கூட்டிக் கொண்டருவா…வீட்டிலயிருந்து ஒண்டரைக்கட்டை தியேட்டர். அதெல்லாம் ஒருகாலம். ஜெகசிற்பியன், நா. பார்த்தசாரதி, அகிலன், மு.வரதராசனார், அநுத்தமா திலகவதி, பிரபஞ்சன், சின்ன அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், ஜாவர் சீதாராமன், கல்கி, சாவி, பரணீதரன், குண்டூசி, எண்டு எவ்வளவு பேரப்படிச்சிருப்பம். இந்த கதையெல்லாம் என்ர வாழ்க்கைக்கு அங்காலதான் எண்டா என்ர கதை எப்பிடி இருக்கும்? எழுதிப்பாப்பமே…எண்டொரு ஓர்மம். அதுதான் ‘இனி வானம் வெளிச்சிருமெண்டு வந்திது’. கையிலை வைச்சிக் கொண்டிராம தண்ணியக்குடியுங்க எலுமிச்சம் பழச்சாறு பிழிஞ்ச உடன குடிக்கோணும்.

கோமகன்: எலுமிச்சைப்பழ சாறை உறிஞ்சியவாறே அவரைப் பார்த்து கேட்டேன், சண்டைக்கும் உங்களுக்கும் என்ன தொடுப்பு?  

தமிழ்க்கவி: எல்லாம் நடந்து முடியிற நேரம் ஆறுதலாய் இருந்து யோசிச்சா எனக்குள்ளயே ஒரு தெளிவு வந்திருக்கு. காரணமில்லாம காரியமில்லை. எனக்கு இலக்கியத்தில ஈடுபாடு வந்ததே என்ர செருக்காலதான். எதையெடுத்தாலும் அப்பிடியே நம்பாம வாதிக்கிறது தர்க்கம் பண்ணிப்பாக்கிறது என்ரை பரவணிக்குணம். தொழிலா, புத்தகமா, சமயமா, குடும்பமா, நட்பா, உறவா எண்டு எல்லாத்தையும் ஆராயிற,வாதிக்கிற குணம் எனக்கு இருக்கு. என்ர சீவியத்தில நான் பட்ட துன்பத்தையும் ஆராயப்போனா நான் சண்டைக்க வந்ததுக்கு காரணமே தேவையில்ல. அதுதான் நியதி எண்டு தெரியும். இன்பமோ துன்பமோ இருந்து யோசிச்சுப்பாத்தா அது ஒரு தனி அனுபவமா இருக்கும். தனி உணர்வா இருக்கும். எனக்குள்ள இருந்த மொழிப்பற்று, நாட்டப்பற்று எல்லாத்துக்கும் மேல இனக்கலவரத்தில பாதிக்கப்பட்டு வந்த சனத்த நேரில கண்டது…எல்லாந்தான் எனக்குள்ள வன்மமா விழுந்திட்டுது. உள்ளத உள்ளபடி எழுதினா கட்டுரை. உள்ளத உணந்தபடி எழுதினா அதுதான் இலக்கியம் எண்டு சொல்லுவினம். நானும் உள்ளத உணர இந்த சண்டைக்க நிண்டதுதான் பெரிய உதவியா நினைக்கிறன். அதோடை ,ஒவ்வொரு இலக்கிய வாதிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கடமை இருக்கு. இந்த இலக்கியவாதியின் பற்று மொழியையும் மண்ணையும் நேசிச்சிது. அதோட விதி என்னை என் மகன் ஊடாகப் போராட்டத்தில வளைச்சுப்போட்டுது. நான் போராளியா வாழ்ந்த அந்தக்காலம் எனக்கு பெருமையைத்தருது. ஆம்….. நான் பெருமையுள்ள ஒரு மனிதன்ர காலத்தில அவற்ற தலைமையில அவரது தானையில் வாழ்ந்திருக்கிறன். வளர்ந்திருக்கிறன்.

கோமகன் : ம் சரி …. சண்டை முடிஞ்சு இவ்வளவு காலமாகுது அக்கா நீங்கள்  எப்பவாவது பழைய தமிழ்க்கவியை சந்திச்சு இருக்கிறியளோ ?  இதை ஏன் கேக்கிறன் எண்டால், ஆரைப்பாத்தாலும் , ‘அன்ரி முந்தி புலியோடை இருக்கேக்கை அவங்களுக்கு எதிராய்  ஒருகதையும் கதைக்கேலை.  இப்பத்தான் ஆள் மாறிநிக்கிறா’ எண்டு சொல்லுகினம் கண்டியளோ …….

அவருடைய கைகள் தானாகவே பழச்சாறு தம்ளரை நிலத்தில் வைத்து விட்டு, “நான் இதிலை நிலத்திலை இருக்கிறன் தம்பி. அதுதான் எனக்கு வசதி. ஆ………. என்ன கேட்டியள் ?”

தமிழ்க்கவி: நான் அப்பவும் அப்பிடித்தான். இது என்னை நல்லாத்தெரிஞ்சவைக்கு தெரியும். இயக்கத்திலை தலைவரையே எதித்து கேள்வி கேட்ட ஆள் நான்தான். இதுக்காக எத்தினை பொறுப்பாளர்மார் என்னக் கண்டிச்சவையெண்டது…. இப்ப நிரூபிக்க ஏலாது. ஏனெண்டால் அவையள் இப்ப உயிரோடை இல்லை. ஆனா தெரிஞ்சவை சிலர் இன்னும் உயிரோடதான் இருக்கினம். சும்மா எல்லாரும் மாதிரி கவுட்டன் கொட்டுண்டு போச்செண்டு பேசப்படாது சொல்லிப்போட்டன்.  

கோமகன்: எல்லாத்தையும் இப்ப கூட்டி கழிச்சு பாத்தால் எங்கடை சண்டையிலை ஒரு 95 வீதமான சனம் விடுப்பு பாத்துக்கொண்டிருக்க மிச்ச சனம்தான் சண்டைபிடிச்சினம். உண்மையிலை எங்கடை சனத்துக்கு இப்பிடியான போராட்டங்கள் வேணும் எண்டுநினைக்கிறியளோ ? 

தமிழ்க்கவி : தமிழர்களுக்கு விடுதலை வேணும் எமக்கொரு தாயகம் வேணும் என்று சொல்லுறவை பெரும்பாலும், தமிழற்றை மண்ணிலேயே  இருக்கினம்? தமிழர் எந்தக்காலத்தில ஒண்டா நிண்டவை ? சேர சோழ பாண்டியர்காலத்திலயிருந்து இவன் அவனை அடிப்பான். அவன் இவனை அடிப்பான் இடையில நிக்கிறவன் தனக்கிசைஞ்சவனோட நிப்பான். காலங்காலமா இதுதான நடக்கிது. இல்லத் தெரியாமத்தான் கேக்கிறன், நாங்கள் அஞ்சாறு லச்சம் பேர் இருந்து நாப்பதாயிரம் ராணுவத்தை எதித்துதான் சண்டைபிடிச்சம். எல்லாரும் வந்தவையே சண்டைக்கு? அதேநேரம் கொழும்பு ரேடியோக்களில பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும்  எத்தினபேர் துடிச்சுக் கொண்டிருந்தவை? அப்பவந்த சினிப்படத்தை பாத்துப்போட தியேட்டர் வாசலுகள்ள எத்தினயாயிரம் பேர் நிண்டவை? போகட்டன். திருக்கணாமலையில சிங்களவரோட மீனுக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தவையும், அதே ஊருகள்ள அரச உத்தியோகத்தில திளைச்சவை….. சரி விடு. கீரையில பீ சாத்தில இறுத்தாப்போல ஊத்தெண்டது போல அரசாங்கத்தோட சண்டை, ஆனா  அரச உத்தியோகம் பாக்கிற பொம்பிள வேணும். தங்கட குடும்பத்தில் உள்ளவைக்கும் அரச உத்தியோகம் தேடினவை எத்தின பேர்?  மலையகத்திலயுள்ள தமிழர்களின்ர பிரச்சனையள் அவயளின்ர அன்றாட வாழ்க்கையஒட்டியது. அவை அதில மூழ்கியிருந்திச்சினம். பரவலாய் பாத்தால்  தமிழர்கள் திரைப்படக் கொட்டகைகளில டிக்கட்டுகளுக்காக வரிசை கட்டிச்சினம். வானொலி தொலைக்காட்சிகளில தொலைபேசி நிகழ்ச்சிகளில ஒரு வார்த்தை பேசிப்போட நாளும் பொழுதும் போனோடகாத்திருந்தினம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொண்டாட்டங்கள் கிரிக்கட் போட்டிகள் எதிலும் எங்கும் தமிழர் தமது பங்களிப்பை மகிழ்ச்சியோடு வழங்கிக் கொண்டிருந்தினம். என்ன இல்லையெண்ணப்போறியளே? இதெல்லாம் பாக்கத்தானே பாராளுமன்றத்துக்கும் மாணசபைக்குமா வோட்டுப் போட்டநாங்கள். அவை என்னத்தை பண்ணுகினம்? வசதியான வாழ்க்கை. இல்ல சனத்துக்கதான் என்ன? பட்டம், படிப்பு, வசதியான வீடு,  நல்ல கொழுத்த சம்பளம் சலுகையள். சும்மா விடுங்க, உதுகளக்கதைக்கப்போனா வேதனதான் மிஞ்சும். 

கோமகன் : ‘உதுகளக் கதைக்கப்போனா வேதனதான் மிஞ்சும்’ எண்டுறியள். கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ….?  

தமிழ்க்கவி: தாயகம் எண்டது இப்ப முன்னாலை நிண்டுகொண்டு நாங்கள்தான் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவைக்குக் கூட தேவையில்லாததுதான். அவங்கள் பேசிப்பேசியே இப்படிபேசியே வாழ்நாள்  முழுதும் பாராளுமன்ற மாகாணசபை உள்ளூராட்சிசபைகளின் கவர்ச்சிகரமான சம்பளப்பணத்துக்கும் சலுகையளுக்கும், மக்களை ஏச்சுப்பிழைப்பு நடத்தி செத்தும் போவாங்கள். தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு. அது நான் மேற்கூறிய குணங்கள்தான் அவயளுக்கு விடுதலையா? தாயகமா? முதல்ல சிந்திக்கிறதையே மறந்து போச்சுதுகளே. முதல்ல சாப்பாடு. அப்பால வசதியான வீடு,  படிப்பு, பட்டம் , சம்பாத்தியம், வெளிநாடுபயணம், அங்கயே சிட்டிசன். இதுதான் இப்ப அத்தியாவசியம் மற்றதெல்லாம்…

கோமகன்: எங்கடை சண்டை வந்து உள்பிரச்சனையளாலையும்  வெளிப்பிரச்சனைளாலையும் தான் தோத்தது எண்டு இந்தமண்டை கூடின ஆக்கள் சொல்லினம். எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை. உங்களுக்கு ஏதாவதுஎத்துப்படுதோ ……. 

தமிழ்க்கவி: ‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளோடொக்கும்’,‘ ஆற்றாது அழுத கண்ணீரன்றோ மாற்றானை அழிக்கும்படை. எண்டு ஒரு பழமொழி இருக்கு கண்டியளோ. பின்ன சனம் அந்த கடசிநேரத்தில பட்ட துயரம் சும்மாவே…… ஒருகாலத்தில சனத்தாலதான் தாங்கள் போராட்டத்த இவ்வளவுக்கு கொண்டு வந்தம் எண்டவை, கடசிக்கட்டத்தில கூட அதை நினைக்கேல்லயே….? அதைத்தான் விடுவம். இவையட நிர்வாகமெல்லாம் தலைகுத்தெண மாறிப்போச்சே! முதல் தளவதிமார் தறிகெட்டு நடக்கினம் எண்டு தலைவருக்கு சேதி கிடைக்க அவரென்ன சொன்னவர், ‘இப்பபோய் உதுகள விசாரிச்சுக் கொண்டிருந்தா சண்டயப் போட்டிட்டுப் போடுவாங்கள் எண்டு. இல்ல நீங்களா யோயிச்சு பாருங்கோ, கருணா இயக்கத்தை உதறிப்போட்டு போன பிறகு எந்த தாக்குதலாவது வெற்றியா வந்தததோ? தோல்வியில்லைத்தானே முடிஞ்சுது… உந்த சூரியக்கதிர் நடவடிக்கை நடந்திது. எல்லா போராளியளும் மக்களோட கிளம்பி வன்னிக்க வந்தாச்சு. என்ன நடந்துது? அதுகாலம்வரையும் வன்னியில பொறுப்பில இருந்தவைய எடுத்துப்போட்டு யாழ்ப்பாணத்தால வந்தவைய முழுப் பொறுப்புகளுக்கும் மாத்தி விட்டினம். சனம் அப்பவே குழம்பீட்டுது.  யாழ்ப்பாணத்து சனம் நிறைய இஞ்சால வந்திட்டுதுகள். அதாலை அதுகள நிருவகிக்கிற பொறுதி யாழ்ப்பாணத்துப் பொடியளுக்குத்தான் இருக்காம்.

வந்தவை எல்லைக்கு குடும்பகாறரைப்பிடிச்சு ஏத்திச்சினம். ஆனானப்பட்ட மாசக்கணக்கில வருசக்கணக்கில பயிற்சி எடுத்த போராளியளே தவண்டையடிக்கினமாம். இது குடும்பப் பாசமுள்ளவங்களைக் கொண்டே ஒருமாசம் பயிற்சி குடுத்திட்டு பொறுத்த களத்தில கொண்டே விட்டா….!! சொன்னா நம்ப மாட்டியள். சோலையெண்டொரு கிராமம் இருந்திது அதிலை இருவத்திநாலு இளப் பொம்பளையள். ஒரு இருவத்தைஞ்சு முப்பது வயசுக்குள்ள தான். இப்ப அவையள்  விதவையளாப் போச்சினம். என்ன சுத்திவளைச்சு ஆமி கொண்டு போட்டான். ஊராக்கள் ஒண்டா சேந்து நிண்டிருக்கிறாங்கள்.

சரி போகட்டும். பழைய பொறுப்பாளர் மாரை பதவியால விலத்திறதுக்காக அவயளில தேவையில்லாத பழியளப்போட்டு அவமானப்படுத்தித்தான் அனுப்பினாங்கள். மனங்கேளாம விட்ட இடங்கள்ள இருந்தவையும் கண்டனாங்கள் தான். நீங்களும் வேண்டாம் உங்கட இயக்கமும் வேண்டாமெண்டிட்டு வெளிநாடுகளுக்கு ஓடினவையும் இண்டைக்கு வெளியில நல்லாத்தான் இருக்கிறாங்கள். ங…வேறயென்ன கேக்கப்போறிங்கள். கதையோட கதையாய்  கொஞ்சப்பேர் கணிசமாக பணத்தோட கொழும்பு நடவடிக்கையளுக்கு அனுப்புப்பட்டவை…… (சிரிப்பு) அவைக்கென்ன குருச்சந்திர யோகந்தான். காசோடை  பறந்திட்டினம். இப்பவும் வாய்ச்  சவடால் கதைக்கிறதுதான் புதினம் கண்டியளோ.

எல்லாத்துக்கும்மேல ராசா போனா ராசாவின்ர மகன்தான் பட்டத்துக்கு வாற மாதிரி இளவரசன். எது சொன்னா விளங்குந்தானே……..?  இளவரசன் பதவிக்கு வந்தான் .

அது சரி சண்டையென்ன தானாவே துவங்கினது? இல்லை…..  அவனே துவங்கினது.  அட எங்கடயள் போய் மாவிலாத்தில தண்ணிய மறிச்சு தேக்கி குளிக்கிறது நெடுக நடந்ததுதான். உடனையே குளிச்சிட்டு தண்ணிய திறந்து விட்டிட்டு வந்திடுவாங்கள். அண்டைக்கு எண்டு பாத்து தண்ணிய திறக்க மறந்திட்டாங்கள. அவன்ர நெல்லுக்கு தண்ணி போகேல்ல. அப்பயும் எழிலன் போய் தளவதியிட்ட கேக்கிறானாம். ‘பொடியள் மறந்து போய் வந்திட்டாங்கள் என்ன செய்ய’ வெண்டு .அவர் சொன்னாராம், “விடு பாப்பம் என்ன நடக்குதெண்டு” பின்ன, புலியள் சண்டைக்கு ஆயித்தமில்ல எண்ட கொஞ்சப் பதட்டமும் அவருக்கில்ல. அவன்  தண்ணிய வச்சு கேமை துவங்கிட்டான். 

நல்லாத் திட்டம் போட்டு ‘ரிவரச’ மாதிரி அவன் ஒருபக்கத்தால தண்ணிய வச்சு படைநகர்த்தினான். புலியள் பின்வாங்க வாங்க மக்களிலதான் அவங்கட அட்டாதுட்டி கூடிச்சுது. சனமும் சில இடத்தை மோதத்தான் செய்துதுகள். ஆனா மக்கள் எழுச்சி கோரமா அடக்குப்பட்டிச்சு. அதெல்லாம் கதைக்கிறதெண்டால் தனிப்புத்தமாய் தான்  எழுதவேணும் பரவாயில்லையா? ஏனெண்டல்  எல்லாம் முடிஞ்சபிறகு அவை இவையெண்டு பேர்சுட்டி கதைக்கிறது இருக்கிறவைய பாதிக்கும்.

கோமகன்: இத்தவரையிலை ஒரு ரெண்டு பேரோடை கதைச்சிருக்கிறன். அதிலை ஒருத்தர் கருணாகரன்மாற்றாள் யோ கர்ணன். இப்ப நீங்கள் ………,நான்  யோ கர்ணனோடை கதைக்கேக்கை சொன்னார்,

01 வன்னியிலை இருந்த மூளை சாலியள் புலிக்கு வேலை செய்தவை எல்லாம் புலியளின்ரை “மனுசிமார்” மாதிரி அடக்க ஒடுக்கமாய் வேலை செய்தவை.

02 இந்த போர் இலக்கிய வித்துவானுகள் எழுத்தாளர்கள் எல்லாருமே தங்கடை சொல்லுகளுக்கு உண்மையாய் நடக்காமல் அதை நடு றோட்டிலை விட்டுட்டினம்.

03 முக்கியயமாய் புலியளின்ரை அரசியல் துறை எண்டதே தஞ்சம் எடுக்கிற இடம். உங்களுக்கு உதெல்லாம் தெரியாது பாருங்கோ எண்டு  கர்ணன் சொன்னதிலை ஏதாவது உண்மை இருக்கோ ?  

தமிழ்க்கவி:

1. முதலாவது கேள்விக்கு ‘மனைவி’ எண்ட சொல்லை எடுத்துட்டு போடுங்கோ சரியா இருக்கும். அதவிட வேறு வழியள் இருக்கயில்லையே? 

2. இதுக்குள்ள யோ.கர்ணனும் அடக்கம். ஒரு படிமேல போய் சிலர் தமது தாயகக் கனவைத் துறந்துதுமில்லாம, எல்லாத்துக்கும் பிரபாகரனே காரணம் எண்ட வகையில அறிக்கை விடுறதாகும்.

3.  தஞ்சமடையும் இடமெண்டா தாமாக தேடி சேரக்கூடியதாஅமையவேணும். இது அப்படியில்லை. அரசியற்துறையில தஞ்சமடையமுடியாது. அங்கதான்போராட்டத்தின் அடி வேராக ஆட்சேர்ப்பிலயிருந்து மக்களை போருக்குள்ளயே தொடர்ந்து வைச்சிருக்கிற அலுவலுகள் நடந்தன. வேறவேற பெயர்களில பலஅமைப்புகளை ஆரம்பிச்சாலும், பயிற்சியளை (தையல்கணனிபோன்ற) வழங்கினாலும்  வேலைவாய்ப்புகளைகொடுத்தாலும் கோயிற் திருவிழாக்களுக்குப் போனாலும்… அலிபாபாவும் நாற்பதுதிருடர்களும் படத்தில் வருமே ஒரு பாடல். “நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு, நாம ஆடிக்குல்லா போடுவதும்காசுக்கு காசுக்கு காசுக்கு காசூக்கூ” எண்டது போல அரசியல்துறையின்ர நடவடிக்கையள்எல்லாம் புதிய போராளியளை இணைப்பதற்கே. போராளியளை இணைக்கத்தவறினவைக்கு தண்டனையள் இருந்தன. பிரிவுமாற்றம் அல்லது களமுனைக்கு அனுப்பப்படுறது போன்ற   சம்பவங்களும் நடக்கும். பின்ன எப்பிடி அதுதஞ்சம் அடையிற இடமா முடியும்? மக்களிட்ட அடிவாங்கும் போராளியள் இவையளே. ஒவ்வொரு வீரச்சாவுகள் நடக்கேக்கையும், ஒவ்வொரு போராளி புதிதாக இணையும் போதும் இவயளே சனத்தின்ரை திட்டுகளுக்கும், சிலவேளை அடிவாங்கிறவையாகவும்இருப்பினம். இவயள் திருப்பி அடிக்கவோ ஏசவோ கூடாது எண்ட பலத்த சட்டம் இருந்துது. பின்நாளில மக்களால் வெட்டப்பட்டு, வாகனத்துடன் அடித்து நொருக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. எல்லாம் மறந்து போறதும் உண்டு. அது ஒரு பெரியகதை. இதெல்லாம் கர்ணனுக்கு தெரியாதா? “வித்தாரக்கள்ளி விறகுக்குப் போனாளாம் கத்தாளை முள்ளு கொப்போட ஏறிச்சாம்” எண்டமாதிரி கர்ணன் என்ன நடிக்கிறாரா?    

மழைவருவதற்கு ஏற்றால் போல் வானம் கருமைகொண்டு தூரத்தே இடிமுழக்கம் கேட்கத்தொடங்கியது. கிளிநொச்சியின் கால நிலையை என்னால் நாடி பிடிக்க முடியவில்லை.

“இங்கை……… வெறும் கையோடை இருக்கிறியள் கொஞ்சம் தேத்தண்ணி போட்டு கொண்டு வரட்டே”. இது அன்ரி.

எனக்கும் அந்த கூதல் நேரத்திற்கு சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்தது. தமிழ்க்கவி எனக்காக தேனீர் தயாரிக்க, நான் அடுத்து எதைக் கேட்போம் என்ற சிந்தனையில் மூழ்கினேன். சில நிமிடங்களில் நான் சொல்லாமலே தேனீருக்கு சீனி போடாது அன்ரி கொண்டு வந்து தந்தா. தங்கத்தையயும் செம்பையும் உருக்கி வார்த்த நிறப்பிரிப்பில் ஆவி கிளப்பியபடி தேனீரின் வாசம் எனது மூக்கைத் துளைத்தது.

கோமகன் : டெமோக்கிரசிக்கும் புலியளுக்கும் எட்டாப்பொருத்தம் எண்டு ஆரைப்பாத்தாலும்சொல்லுகினம். அதோடை புலியளின்ரை அன்ரிடெமோக்கிரசி வேலையளை பத்தி கனக்க புத்தகங்கள்வந்திருக்கு. இதுகளைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமே …….?     

தமிழ்க்கவி: நூற்றுக்கு நூறு சரிதானே…..  சும்மா உளவாளியெண்டும் மாற்றியக்கத்தில பயிற்சியெடுத்தவயட குடும்பமெண்டும் ஆண் பெண் குழந்தையள் எண்ட வேறுபாடில்லாம எத்தினையாயிரம் பேர் கொல்லுப்பட்டிருக்கினம். அதுக்கெல்லாம் கணக்கில்ல. ‘தமிழினப்படுகொலை’ எண்டொரு புத்தகம் ‘மனிதம்’ வெளியீடாய் வந்தது. அதிலயும் உந்தக்கணக்கில்ல எண்டால் பாருங்கோவன். அந்த நாளயில இந்தியனாமி வந்து தன்னோட நிண்ட இயக்கங்கள வச்சு ஆயிரக்கணக்கில தமிழ் பொடியள பலவந்தமா பிடிச்சுக்கொண்டே பயிற்சி குடுத்தவங்கள். அவங்கள் அங்கால போன கையோட புலியள் அந்தப்பொடியள தேடிப்பிடிச்சும் முகாம் முகாமா போய் அடிச்சுப்பிடிச்சும் கொண்டுபோட்டாங்கள். அதுக்கும் ஒரு கணக்கும் இல்லை. அது சொந்த இனத்தையே அழிச்சுப்போட்டு பிரேமதாசவின்ர கையக்குலுக்கி வாழ்ந்தகாலம்.

“இன்னும் ஒழிச்சிராதையுங்கோ மாற்று இயக்கத்தில பயிற்சி எடுத்தவை எங்களட்ட சரணடையுங்கோ உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவம்” எண்டு ஒலிபெருக்கியில அறிவிச்சும்அப்பாவியளான ஏராளமான பொடியள் போனதுதான். ஆரை விட்டவங்கள்? ஆனா இந்தநேரத்திலை இண்டைக்கு ராணுவத்திட்ட ஆயிரக்கணக்கில சரணடைஞ்சு விடுதலையாகி  நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கயுக்க, உதை பொருத்திப்பாக்காம, கதைக்காம இருக்கேலாமல் கிடக்கு தம்பி.

கோமகன் : புலியள் ஆக்களை மண்டையிலை போட்ட விசையங்கள், புலியளின்ரைஅன்ரிடெமோக்கிரசி வேலையள் எல்லாம் தம்பிக்கு தெரியாமத்தான் நடந்தது எண்டுஒருக்கால் எனக்கு சொன்னியள். இது நம்பிறமாதிரி தெரியலையே? ஏனெண்டால்தன்னை சுத்தி இருக்கிறவையின்ர ஒவ்வொரு அசுமாத்தத்தையும் விரல் நுனியிலைவைச்சிருந்தவருக்கு இதுகள் எப்பிடி தெரியாம போனது அன்ரி?       

தமிழ்க்கவி: பிரபாகரன் என்னப்பா சித்தனோ இல்லாட்டி தெய்வமோ? உது ஒரு  அம்பது நூறு புலியள் இருந்த காலத்தில சரி. அதுக்கும்பிறகும் நம்பிக்கையான தளவதி பொறுப்பாளர்மார் இருக்கயுக்க சரி. பல்லாயிரக்கணக்கில போராளியள் பெருகினபிறகு எப்பிடி சாத்தியம் எண்டு யோசிக்கிறேல்லயே? எண்டாலும் எல்லாமே தெரியாது எண்டு சொல்லுறதிலும் ஞாயமில்லைத்தான்.

கோமகன் : இந்த மிலேனியத்திலை ஒரு பெரிய மனுசஇழப்பு இங்கை நடந்தது. அதுக்கு பிறகு வெந்தபுண்ணிலை கொள்ளிக்கட்டையை செருகின மாதிரி இவை புலியள், ‘நாங்கள் அரசாங்கத்தோடை ஆயுதத்தாலை கதைக்காமல்விடுறம்’ எண்டு சொன்னது வெளிநாடுகளிலை இருந்த சனங்களாலை  நம்பேலாமல் போட்டுது. இதை பத்தி நீங்கள் என்னநினைக்கிறியள் ?    

தமிழ்க்கவி: உங்களுக்குத்தெரியுமோ தெரியாது விசுவமடுவோட புலியளிட்ட ஆயுதங்கள் பத்தாமப்போட்டுது. மோட்டாப் படையணியளையே  முற்றா கலைச்சுப்போட்டு அதுகளை கொஞ்சமும் பயிற்சியில்லாத களமுனைச்சண்டையில ‘ஏகே’யளோடயும் ‘பீக்கே’யளோடயும் விட்டாச்சு. மோட்டார் படையணி கொஞ்சமும் பயிற்சியில்லாமல் துப்பாக்கிச்சமருக்கு போச்சினம். இனி பிடிச்சுக்கொண்டுபோன பயிற்சி காணாததுகளும் களத்தில காயப்பட்டும் வீரமரணமெண்டும் வருது. இல்ல…ராணுவத்த ஆரப்பா கண்ணால கண்டது? அவன் பங்கை நாலைஞ்சு கிலோமீட்டருக்கங்கால நிண்டு கொண்டு செல்லாலயே ஒவ்வொரு பிரதேசத்தையும் துடைச்சழிச்சுப்போட்டுத்தானே முன்னுக்குவாறான். இந்த றொக்கற் மழையிலை காயபட்ட போராளியளும் சனங்களும் கணக்குவழக்கில்லை. என்னசெய்யிறது…… சும்மா பிழை சொல்லப்படாது வெளிநாடுகள்ள நிக்கிற சனம்தண்ணியாத்தான் காசை இறைச்சதுகள்.ஆனாத்தம்பி இஞ்ச நிலைமை அதுக்கு தோதுப்படேல்லை. கடைசியில இப்பிடியாப்போகுமெண்டு ஆர்தான் கண்டது? 

கோமகன்: சண்டையள் நடந்து கொண்டிருந்த நேரம் அங்கை உந்த அரசவைக்கவிஞர்களும் அறம்பாடியளும்தான் இருந்தவை சனங்களின்ரை பிரச்சனையளை சொல்லுறதுக்கு ஒருத்தரும் அங்கை இருக்கேலைஎண்டும் ஒரு இடைக்கதை இருக்கு. அப்பிடிஉங்களுக்கு ஏதாவது தெரியத்தக்கதாய் நடந்ததோ ?

தமிழ்க்கவி: அது சரிதான் அவை தங்கட பிரச்சனைய ஆரெட்டச் சொல்லுறதெண்டு தெரியாம ஆலையேக்க மக்களின்ர பிரச்சனைய ஆர் பாக்கிறது ? ஏல்லாரும் உள்மனதுக்க எப்பிடி வெளியில ஓடித்தப்பிறது எண்டதிலை இல்லை  தங்கடை  தங்கடை  பிள்ளைகுட்டியள எப்பிடி தப்பவைக்கிறது  எண்டதிலயோ தான் குறியா நிண்டவை அப்பிடி தந்திரமா தப்பிப்போனவையும் அல்லது பிள்ளையளத் தப்ப வைச்சவை இல்லையெண்டு சொல்லப்போறியளே…விடுங்க இனி உதைப்பறையப்போனா விழுந்த மாட்டில குறிவைக்கிற மாதிரிப் போகும்.

நாங்கள் எங்களை மறந்து கதைத்துக்கொண்டு இருந்த பொழுது மின்னல் இடைவெட்டி மழைத்தூறல்கள் நிலத்தை நனைக்கத்தொடங்கின. வெய்யிலில் வறண்ட நிலம் மழைத்துளி பட்டு புழுதி வாசத்தைக் கிளப்பியது. நாங்கள் இருவரும் வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக்கொண்டோம். வீட்டுப்பீலியால் மழை நீர் ஊற்றத்தொடங்கியது. முற்றத்தில் நின்ற கோழிகளும் எங்களுடன் சேர்ந்து கொண்டன. அவற்றின் கழுத்துப் பக்கங்கள்  இறகுகள் இல்லாது சிவப்பாகத் தோல்கள் தெரிந்தன.  தூரத்தே வேலிக்கடப்பில்  நின்று மேய்ந்து கொண்டிருந்த மயில்கள் இரண்டும் தங்கள் தோகையை விரித்து நடனம் ஆடத்தொடங்கின. இவை எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. இவற்றைப் பார்த்துக் கொண்டு தேனீரை மெதுவாகச்  சிப்பினேன். எனது சிந்தனை அடுத்த கேள்விக்கு உருப்போட்டுக்  கொண்டு இருந்தது. 

கோமகன்: மெய்யே அன்ரி……. எனக்கு இந்த  விசையம்மட்டும் விளங்கேலை. எங்கடை சனங்கள் எல்லாம் படிச்சவைதானே? தற்குறியள் எண்டு ஒருத்தரும் இல்லைத்தானே? அட உந்தபுள்ளி விபரங்களும் அதைத்தான் சொல்லுது. ஆனா எப்பிடி நாங்கள் தோத்தம் ? 

தமிழ்க்கவி: புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை.

கோமகன்: ஒரு மார்க்கமாய்த்தான் மறுமொழி சொல்லுறியள். அதெல்லாம் கிடக்கட்டும், இப்பவும் உந்த தமிழ்த்தேசியம் எழுப்பமாய் இருக்கோ இல்லாட்டில் அதுவும்உந்த நந்திக்கடலோடை போட்டுதோ ?   

தமிழ்க்கவி: அது கண்டியளோ விசுவமடு கடந்தநேரமே குற்றயிரும் குலையுயிருமாத்தானே போனது? பிறகு வட்டுவாகல் கடக்க தன்மானமும் போய், முள்ளுக்கம்பி வேலிக்க கிடந்து… என்னவோ சொல்லுவினமே….. தங்கத்த புடம் போடுறதெண்டு, அதுபோல எங்கட தேசியமும் புடம் போட்டதில ஐஸ்பழம் மாதிரி உருகி கரைஞ்சு போச்சுது.

ம் …………. மனுசி பிடி குடுக்குதில்லையே……. என்ன செய்யலாம். ஆ …..

கோமகன் :இப்ப உந்த தமிழ் தேசியத்தை பாக்கேக்கை மலையகத்திலை இருக்கிற தமிழாக்களையோஇல்லாட்டில் இங்காலை முஸ்லீம் ஆக்களையோ கணக்கிலை எடுக்கிறதாய் தெரியேலை. இது எதோஊர் பிரச்சனை மாதிரியல்லோ கிடக்கு? 

தமிழ்க்கவி: தம்பி……….. இந்தத் தமிழ்,  தமிழ்த்தேசியம்  எண்டு கத்துறதும் ஒரு இனவாதந்தானே? இப்ப வன்னிக்க சிங்கள் மொழி படிப்பிக்கிறவையும் படிக்கிறவையும் வெகுத்துப்போச்சினம். ஏன் கனக்க, நீங்கள் உந்த ஒழுங்கையாலை வரேக்கை அங்காலை  வேலிக்கை உள்ளை மோட்டச்சயிக்கிலுகள் நிக்குது தெரியேல்லயே?  ஙா…அங்க ஒரு சிங்கள மொழி அக்கடமியே  நடக்குது.

கோமகன்: ஆரைப்பாத்தாலும் இணக்க அரசியல் எண்டு சொல்லுகினம். காலம் காலமாய் உவ்வளவு அட்டூளியங்களையும்  செய்த ஆக்களோடை எப்பிடி ஒத்துப்போறது? அப்பிடி போகலாம் எண்டால் உங்களை போலை ஆக்கள் எல்லாம் உங்கடை சீவியங்களை துலைசிருக்கத் தேவையில்லையல்லோ?  

தமிழ்க்கவி: தம்பி சொன்னால் கோபிக்கப்படாது. ஏன் முடியாது எண்டு கேக்கிறன்? தங்கடைதங்கடை வசதியளுக்கு ஏத்தமாதிரி புலியள் அரசாங்கத்தோடை தேன்நிலவு கொண்டாடலாம் எண்டால் ஏன் சாதாரணப்பட்ட சனங்களாலை முடியாது எண்டு கேக்கிறன்? மாத்தம் ஒண்டுதான் மாறாமல் இருக்கும்.

கோமகன்: மைத்திரியினரை அரசாங்கத்திலை சனங்கள் தண்டுதராதரமாய் இருக்கினமோ அன்ரி ? 

தமிழ்க்கவி: ஒண்டும் இல்லையெண்டுதான் சொல்லவேணும். மகிந்தரின்ரை  காலத்திலை பெரிய அளவுக்கு நாட்டை   அபிவிருத்தி செய்தார். இப்ப கண்டியளோ நல்லாட்சிக்காலத்திலை  விகாரைகள் மட்டும் தான் முழத்துக்கு ஒண்டு கிடக்கு. வேறை ஒண்டும் சொல்லுறதுக்கில்லை.

கோமகன்: இவ்வளவுகாலமாய் சண்டை நடந்தது. எங்கடைஇடங்களை  சிங்களவங்கள் உழுது தள்ளினாங்கள். சனங்களும் படாத பாடெல்லாம் பட்டுதுகள். இப்ப இந்த சண்டைஉங்களுக்கோ  இல்லாட்டில் உங்களை சுத்திஇருக்கிற ஆக்களுக்கோ ஏதாவது படிப்பினையளை தந்திருக்கோ ?  

தமிழ்க்கவி: படிப்பினையோ………..? யுத்தம் முடிஞ்ச கையோட உறவுகளெல்லாம் வெளிநாடுகளுக்கு தத்தி தெறிச்சுவிழுந்திட்டுது. நானே இறுதிவரை ஆரோட இருக்கப்போறன் எண்டு நினைச்சு என்ர வாழ்நாளை அர்ப்பணிச்சு வாழ்ந்தனோ அந்த உறவுகள் கிட்டவுமில்லை. அநேகமானவை செத்தும்போச்சினம். உறவுகளத் தொலைக்காத வீடே இல்லை. வீட்டுக்கு வீடு இதேகதை தான். முன்னை சின்ன சின்ன வீடுகள் நிறம்ப சனம் இருந்தம். இப்ப வீடுகள் பெரிசாக்கட்டிற்றம். ஆனால் சனம் ? வீடுகள்ள என்னைப்போல வயசு போனவை கூட்டித்துடைச்சு வச்சிருக்கிறம். அவ்வளவுதான்.

நாங்கள் கதைத்துக்கொண்டிருந்த பொழுது ஒரு தொலைபேசி அடித்து எமது பேச்சை இடைநிறுத்தியது. அன்ரி தொலைபேசியுடன் வீட்டிற்குள்  சென்று மறைந்தா. ‘ஒருவேளை ஆமிக்காறங்கள் நான் வந்ததை வேவு பார்க்க அன்ரியுடன் தொலைபேசி அறிகின்றார்களோ ?’ என்று எனது மனம் பலவாக உழன்றது.

இப்பொழுது மழை  முற்றாகப் பெய்வதை நிறுத்தி வானம் வெளிக்கத்தொடங்கியது. பொட்டுக்குள்ளால் தெரிந்தும் தெரியாமலும் அடுத்தவர் வீட்டுக் கதைகளை ஒட்டுக் கேட்கும் அயல் வீட்டு மனிதர்களை போல ஓடும் முகில்களுக்கப்பால் சூரியன் மறைவதும் தெரிவதுமாக விளையாட்டுக்காட்டி கொண்டிருந்தான். முற்றத்தில் ஓடி வடிந்த மழை நீரில் சிவப்பு நிறத்தில் கம்பளப்பூச்சியும் சரக்கட்டையும் ஓடித்திருந்தது. எனக்கும் அக்காவுடன் தொடர்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தது அலுப்பாக இருந்தது. வாயும் ஒரு சிகரெட்டுக்காகப் போர்க்கொடி தூக்கியது. அதன் கோரிக்கையை ஏற்று வீட்டின் படலைப்பக்கமாகப் போய் சிகரட்டை வாயில் பொருத்தி அதை உயிர்ப்பித்தேன்.  

தொலைபேசி உரையாடலை முடித்து வெளியே வந்த அன்ரி

“என்ன வெளியாலை போய் நிக்கிறியள் ? இங்கையும் சிகரட் பத்தலாம். மரியாதை மனசிலை இருந்தால் காணும்” என்றா. நானோ சிகரட்டின் கடைசி இழுவையை இழுத்து எறிந்து விட்டு அன்ரியை நோக்கிச் சென்றேன். மழை நின்றதால் மீண்டும் மாமரத்து நிழலில் இருந்த கதிரையில் இருந்து நின்ற கதையை தொடர்ந்தோம்.     

கோமகன்: கிட்டடியிலை உங்கடை “இனியொரு போதும்” எண்ட நாவல் வந்ததாய்கேள்விப்பட்டன். இந்த நாவலை என்னத்துக்கு எழுதவேணும்? அதிலை உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்கள் எல்லாம் கிடைச்சுது?  

தமிழ்க்கவி: எவ்வளவு பெரிய சீர்திருத்தவாதி நான்? உங்களுக்கு தெரியுந்தானே……ச்சா…எல்லாம்போச்சு. என்னவோ சொல்லுவினமே, ‘பாயிழைக்கிறவன்வீட்டில படுக்க பாயிருக்காது’ எண்டு. நான் எவ்வளவு கருத்த சொல்லியிருக்கிறன். அதக்கேட்டு எத்தினைபேர் நல்லா வாழுகினம். ஆனா என்ர குடும்பத்தில எதிர்மாறாத்தான் நடக்கிது. என்ர மகள்களோ பேத்திகளோ அடிமைகளாத்தான் வாழுறாளவை. அதையே சொர்க்கமா நினைக்கிறாளவை. இறுதிவரை தன்ர காதலனைக் காட்டிக்குடுக்காம தன்னைப்பலியிட்ட என்ர பேத்தியில எனக்கு இப்பவும் பெருங்கோவமிருக்கு. என்ன செய்ய? அதை பாசம் மேவிடுது. ஆம்பிளையளின்ர வஞ்சகம்கூட பெரிசில்ல. அதை திருத்தக்கூடிய முழு வாய்ப்பும் சட்டத்தாலயும் சமூகத்தாலயும் தரப்பட்டிருக்கயுக்கயும், அதை நழுவ விடுறபத்தினியளத்தான் என்னால மன்னிக்கேலாமக்கிடக்கு. எங்கயும் பாருங்கோ  இந்த குடும்ப பந்தமிண்டு சொல்லுறது தனியபெண்டுகளின்ர சகிப்புத்தன்மையிலதான் கட்டி வச்சிருக்கு. இதுதான் யாதார்த்தம்.நான்கூட பெண்ணியம் பேசி கொடுமையிலயிருந்து தப்பிறன் பேர்வழியெண்டுபுருசனைப்பிரிஞ்சு வாழ்ந்தநான்தான். அந்த பிரிவு, குடும்பச்சிதைவுஎன்ர பிள்ளையள வெகுவாப்பாதிச்சிருக்குது எண்டதை, அவங்கள் பேசமுடிந்தபோது பேசினாங்கள். உயிரோட தந்தைய இழந்த சோகம் பெரிசுதானே. என்ர மூத்தமகன்அதை வெளிப்படுத்தின நேரம். நான் பொல்லாதவளாயும் என்ர மனிசன் கதைநாயகனாயும் அவனுக்கு தெரிஞ்சிது. சேர்ந்துவாழ்ந்திருக்கலாமோ எண்டு கவலைப்பட்டன். என்னில எனக்கே வெறுப்பு வந்தது. என்ர பெண்ணிய நோக்கை மறுபரிசீலனை செய்யவும்இதை எழுதினன். சகிச்சுக் கொண்டு போயிருக்கலாமோ?  ஏன்ர பிள்ளையளுக்காகத்தானே என்ரவாழ்க்கை…அப்பிடி வாழ்ந்திருந்தா…இப்ப, இந்த தமிழ்க்கவி இல்லஎண்டதும் உண்மை.

கோமகன்: உங்கடை ஊழிக்காலம் உங்களுக்கு ஒரு கியாதியை குடுத்த நாவல். இப்ப என்னடாவெண்டால் அதின்ரை ரெண்டாவது பாகம் எழுதிக்கொண்டிருக்கிறதாயும் சொல்லுறியள். அதோடை உங்கடை ஊழிக்காலம் நாவலை சிங்கள மொழியிலை மொழிபெயர்ப்பு செய்யிறதுக்கும் அடுக்கு நடக்குதெண்டு சொன்னியள். இப்ப என்னத்துக்கு அவதிப்பட்டு ஊழிக்காலம் பாகம் ரெண்டுவிடவேணும் எண்டு உங்களுக்கு ஐடியா வந்தது? மொழிபெயர்ப்பு நடக்கிற நேரம் உங்களுக்கு என்னமாதிரியான அனுபவங்கள் கிடைச்சுது ? 

தமிழ்க்கவி: எனக்கு ஒரு அவதியும் இல்லை தம்பி….. சிங்கள மொழிபெயர்ப்பை அவையள்தான் விரும்பி செய்யினம். என்னட்டை   அனுமதி கேட்டினம் கொடுத்தன்.அவ்வளவுதான். மத்தும்படி அது வெளிலை வரேக்கைத்தான் அதைப்பத்தி  கதைக்கலாம். அதோடை ஊழிக்காலத்தில கன கேள்வியள்விடுபட்டிருக்கு. அதுக்கங்கால என்ன எண்டமாதிரி. அதை நிரவிறதுக்குத்தான்ஊழக்காலம்  இரண்டு. என்ர போர்க்காலவாழ்க்கைக்குப்பிறகு நான் பலவிதமான நடத்தைப் பிறழ்வுகளக் கொண்ட மனிதர சந்திச்சிட்டன். முழுசா இவை இவைதான் எண்ட எண்ணத்த தூக்கியடிச்சு மாறிப்போய் நிண்டகாலத்தில என்ர அனுபவங்களை எழுத விரும்பினன். அதோட புனர்வாழ்வு முகாமுக்கால வெளியாலவந்தவை வர முதலே தங்கட புழுகு மூட்டையள அவிட்டு உதறியிருக்கினம். ஒரு நேர்மையற்றமுகமூடியளை போட்டுக்கொண்டு அந்த எழுத்துக்கள அவை எழுதி விட்டிருக்கினம். அதுகும்எனக்கு ஆச்சரியமாயும் வேதனையாவும் இருந்திச்சு. இதெல்லாம் என்னை இதை ரெண்டாவதுபாகத்தை எழுத தூண்டிச்சு. அது தேவை எண்டு பட்டுது. எழுதினன்.

கோமகன்: இந்த மொழிபெயர்ப்பு எண்ட உடனைதான் இன்னொரு விசயமும் நினைப்புக்கு வருகுது அன்ரி.சண்டையிலை கிடைச்ச வெற்றிக்கு ஆதரவாயும் எங்கடை பக்கத்திலை  நடந்ததுகளின்ரை  பிழையளை கதைக்கிற புத்தகங்களைத்தான் கூடினஅளவுக்கு சிங்கள பதிப்பகங்கள் மொழிபெயர்க்க விரும்பினம் எண்டு ஒரு கூட்டாளி எனக்குசொன்னார். அது உண்மையோ?   

தமிழ்க்கவி: உள்ளதை சொல்லுறதெண்டால்  நான் அப்படியானஆக்கங்களை படிக்கயில்லை. சிங்களவர்கள் எல்லாரும் கெட்டஆக்கள் இல்லை அதைமாதிரி  தமிழ்ஆக்கள் எல்லாரும்  நல்லாக்களும் இல்லத்தம்பி. நான் இரண்டொருசிங்கள நாவல்களை வாசிச்சிருக்கிறன்; அவைசொல்லுற விசயங்கள் போர்சம்பந்தமானதுதான் அனால் அவை  போரை சாட்டாய் வைச்சுக்கொண்டுகொலைசெய்யப்பட்டசிங்கள பெடியள் பெட்டயள் பத்தியும் அரசாங்கத்தின்ர படையள்அதுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளின்ரை அராஜகங்களை பேசினவைதான். அதிலை ஒரு பொலீஸ்அதிகாரி தன்னால கொல்லப்பட்ட பதினாலு வயசு பெடியன்ரை குடும்பத்தை நேராய் பாக்கேக்கைஅவனின்ரை மன ஓட்டங்களை வடிவாய் சொன்ன சிறுகதையொண்டு சிங்கள வாரப்பத்திரிகை ஒண்டிலபடிச்சன். அந்தமாதிரி திறமாய்  இருந்துது.அதிகாரம் எண்டிறது எல்லா இடத்திலையும் தன்ரை குணத்தைத்தான் காட்டுது அதுக்குசிங்களவன் தமிழன் எண்ட வித்தியாசம் பாக்கத்தெரியாது. அவையளுக்கும் அரசாங்கப்படையளால அநியாயம் நடக்கத்தான் செய்யிது. அவையளும் எழுதுகினம். ஆனால் என்னபெரிய பிரச்சனையெண்டால் எங்கடை சனத்துக்கு அரசியலாலை சிங்களத்தை பெரிசாய் படிக்கேலை. அதோடை சிங்கள புத்தகங்களின்ரை வரவுகள் எங்கடை பக்கத்துக்கு வாறது செரியானகுறைவு. அதாலை எங்கடை சனத்துக்கு இதுகளைப்பத்தின அறிவு மட்டுஎண்டுதான் சொல்லக்கூடியதாய் இருக்கு. இதுகளையெல்லாம் எங்கடை பக்கத்திலைவைச்சுக்கொண்டு வாய்க்கு வந்தபடி நாங்கள் இனவாதம் கதைக்கப்படாது.  

கோமகன்: இப்ப நான் பாத்த அளவிலை எங்கடை சனங்கள் பெரிசாய் ஒண்டும் வாசிக்குதுகள் இல்லை.வாசிக்கிறது எண்டாலே அவைக்கு பெரிய பிரச்சனையாய் கிடக்கு. இப்பிடியே விட்டால்சனங்கள் எல்லாம் தற்குறியளாய் போடும். இதை மாத்திறதுக்கு ஏதாவது வழியள் கிடக்கோ அன்ரி ?  

தமிழ்க்கவி: இப்ப…….. மாத்தம் ஒண்டுதான் மாறாது. இந்த மாத்தத்தை ஏத்துக்கொள்ளாத எதுவும் வாழுறதே கஸ்டமாபோம். அந்தக்காலத்திலை  கூத்துகள் கோயிலுகளிலை விடியவிடிய நடக்கும். நாங்கள் பாய் தலைகணியோட போய் அங்கை படுத்திருந்தே நாடகம் பாத்தம். கொஞ்சகாலம் போக  தியேட்டர்களில படம் பாத்தம். பிறகு எல்லா வீட்டு மூலைக்குள்ளையும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்துப் பாத்தம். இண்டைக்கு என்னடாவெண்டால்   எல்லாற்றை கையுக்குள்ளையும் ரெலிபோனிலை தொலைக்காட்சி சினிமா எல்லாம் வந்துட்டுது எண்டால் பாருங்கோவன். வாசிக்கிறது எண்டதை இனி எழுத்துக்கூட்டித்தான் வாசிக்கவேணும்போலை கிடக்கு. இப்பத்தையான் பிள்ளையளுக்கு வாசிப்பு எண்டால் அது முந்தினகாலத்து  வினாவிடைத்தாள்கள்தான். கதையளிலை ருசி வாற அளவுக்கு கூடிக்கதைக்கிற நிகழ்ச்சியள் செரியான குறைவு. கொஞ்ச புத்தகங்களை தெரிஞ்சு அதில பரிசுக்குரிய கேள்வியளை கொண்டுவந்து, பள்ளிகூடப் பிள்ளையளை அதிலை பங்குபெறச் செய்யலாம். பரிசுக்கும் கேள்வியளுக்காயும்  முறைக்கு முறை படிக்கிறவையள் அதில தங்கடை  ரசனையை கண்டுகொள்ளுறதோடை பேந்து தாங்களாயே புத்தகங்களை தேடத் தொடங்குவினம். ஓவ்வொரு நூலகத்திலும் மாசாமாசம் ; ரெண்டு அல்லது மூண்டு  நூலுகளையாவது இப்பிடி போட்டிக்கு விட்டா கொஞ்சநாளைக்குப் பிறகு வாசிக்கிற பழக்கம் கூடலாம். ஒரு நூலகத்தில மாணவர்களை கொண்டே விட்டுட்டு சில கேள்வியள கேட்க வேணும். பேந்து மாணவர்கள் நூலகத்திலேயே தேவையான புத்தகத்தை தேடி அந்த விடையளை கண்டுபிடிக்க வேணும். இதுகளை தொடங்க அறிஞர்கள் எண்டு சொல்லுறவை ஆதரவு குடுத்தால் வாசிக்கிறதுக்கு பிள்ளையள் வலுகெதியில உருவாகுவினம்.

கோமகன்: புலியளோடை கனகாலம் இருந்திருக்கிறியள். அதோடை எல்லாரோடையும் தொடர்புகளிலைஇருந்திருக்கிறியள். அவையின்ரை காலத்திலை இலக்கிய சூழல் எப்பிடியாய் இருந்துது? இப்ப எப்பிடியாய் கிடக்குது?   

தமிழ்க்கவி: நானும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதலைப்புலியளளின்ர காலத்திலதான் அறிமுகமானம்.அப்ப நல்ல சோக்கான நூலகங்கள் எல்லாம் இருந்துது . வாசிப்பு எண்டிறது அப்ப கட்டாயமாய் இருந்துது . விசுவமடு நூலகத்தில சமகாலப் பிரச்சனைகளை தலைப்பாக்கி திரு சோமாஸ்கந்தன் அவர்களுடைய தலைமையில மாதாந்தக் கலந்துரையாடல்கள் நடந்தது . இதோட திரு உதயசூரியனின் முயற்சியில மாதாமாதம் கவிஞர்கள் ஒன்று கூடி கவிதைகள் படிச்சினம். வாசிப்புகளை மையமாக வைச்சுத்தான் போராளிகளுக்கான போட்டியளை சஞ்சிகைகள் நடத்திச்சினம். மாணவர்களுக்கான பத்திரிகைகள் அவர்களுக்கான போட்டிகளை நடத்திசினம். இனியில்லை எண்ட திறமான  இலக்கியகர்த்தாக்கள் எங்களுக்கு  வகுப்புகளை நடத்திச்சினம். ஆய்வரங்குகள் எல்லாம் நடந்தன. அந்த நேரத்திலை இலக்கியச் சூழல் நல்ல சோக்காய்த்தான் இருந்தது 

பேந்து யுத்தகாலத்திக்கு  பின்னாலை அந்தமாதிரி அரங்குகள் சிலதில் நான் கலந்து கொண்டிருக்கிறன். அங்கயெல்லாம் தனிப்பட்ட ஆக்களின்ரை கியாதியள் தான் பெரிசா பேசப்பட்டுது. அதோடை  குறிப்பிட்டஆக்களே எல்லாத்தையும் எல்லாத்திலும் முன்னுக்கு நிண்டிச்சினம் நிக்கப்ப்பட்டினம். இதாலை மற்றாக்களுக்கு  வாய்ப்பு இல்லாமல் போகுது. இதுக்கு அரச அதிகாரியளே காரணமாய் இருக்கினம். அவையள் தங்கடை சம்பளம் பதவியளைக் காப்பாத்திறதிலையும் பதவியளை உசத்திக்கொள்ளுறதிலையும் தான் கவனமாய் இருக்கினம். அநேகமாய்  இந்தவிழாக்களில அரசியல் தலைவர்கள் தான்   கௌரவிக்கப்படுகினம். இவையளுக்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடுப்பு எண்டு எனக்கு விளங்கேலைத் தம்பி.  இலக்கியம் கிலோ என்ன விலை எண்டு  கேக்கிறவயளுக்கு பொன்னாடை. போர்த்தப்படுது. ஏனெண்டால் அவர்தான் நிகழ்ச்சிக்கான பெருங் கொடையாளியா இருப்பார். இப்ப எல்லாமே போலியாகத் தெரியுது . எண்டாலும்  சிலபல கருத்தாடல்கள் இதுகளை எல்லாம் மேவி நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அங்கையெல்லாம்  கலைஞர்கள் வாறது குறைவாத்தெரியுது.   

கோமகன்: எக்கச்சக்கம் கதையள் எழுதி இருக்கிறியள். இதிலை ரெண்டு நாவல் வேறை எழுதிஇருக்கிறியள். எங்கடை  போரிலக்கியம்  பத்தி உங்களுக்கு என்ன எத்துப்படுது? 

தமிழ்க்கவி: போரியல் இலக்கியங்கள் எண்டிறது கூடின அளவு  சண்டை நடக்கேக்கை வந்தவைதான். அதுக்குப் பிறகு சண்டையை  ஆய்வு செய்து ‘போஸ்மோட்டம் ரிப்போர்ட்’வழங்கும் கதைகளைத்தான் பாக்கக்கூடியதாய் கிடக்கு .போரியல் இலக்கியமாக சாத்திரியின் ஆய்த எழுத்துமட்டும்தான் போருக்குப்பின் வந்திருக்கிது. சண்டைக்கு முன்னம் மலரவனின்ர போர்உலா, தமிழ்க்கவியின்ர இருள் இனி விலகும், தூயவனின் எழுத்துகள், போரின் களமுனையள்பற்றி உருவானகதையள் எண்டு வந்திருக்கிது. போரிலக்கியத்தின்ரை  வளர்ச்சிப்பாதை எண்டிறது குறைஞ்சுதான் போச்சுது.  

கோமகன்: இந்த பெண் போராளியளை பத்தி எக்கச்சக்கமான கதையள் வெளியாலை உலாவுது. அதிலைமுக்கியமாய் தடுப்பு காவலிலை இருந்தவைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சாகிறமாதிரிகிரிமியள் ஊசியாலை ஏத்தினதாய் ஒரு கதை பேப்பரிலை அடிபட்டுது. உப்பிடியான கதையள்உண்மையோ அன்ரி ?  

தமிழ்க்கவி: உந்த மீடியாக்கள் தங்களை முன்னுக்கு பிதுக்கி காட்ட உப்பிடியான பரபரப்பான செய்தியளை வெளியிடுறதுதானே வழக்கம். ஆராவது முன்னுக்கு வந்து  வழக்குகிழக்கு போட ஏலாதமாதிரி ‘பேசப்படுகிறது’, ‘சொல்லப்படுகிறது’, ‘அறியமுடிகிறது’ எண்டு வலு றிக்கியாய்  நியூசுகளை போட்டுக் கொண்டு போறாங்கள். இப்ப எங்களாலை  எத்தனைபேர் பிழைச்சுக்  கொள்ளுறாங்கள் இதையும் ஒரு தூசியாய் நினைச்சு விட்டுவிடலாமே.

கோமகன்: சரி பரபரப்பான நியூஸ்சுகள் எண்டு சொல்லுறியள். ஆனா எங்கடை இலக்கியவாதியாளும் பெண்போராளியாளை கிலிசை கெடுத்தி  இருக்கினமல்லோ. தடுப்பு முகாமிலை பெண்போராளியள் ஒரு பாலியல் பண்டமாய் காட்சிக்குவைக்கப்பட்டிச்சினம் எண்டு ஷோபா சக்தியின்ரை ‘பொக்ஸ்’ நாவல் சொல்லுது. இப்பிடி அங்கை  ஏதாவது நடக்க சான்ஸ் இருக்கோ? 

தமிழ்க்கவி: சோபாசக்தியின்ரை ‘பொக்ஸ்’ ஒரு புனைவுதானே! அதிலை அவர் தன்ரை கற்பனையை விற்பனை செய்திருக்கிறார். அதை என்னத்துக்கு ஒம்புவிக்கவேணும்? இதைமாதிரிஅள்ளுகொள்ளையாய் கனக்க பேர் எழுதியிருக்கினம்தானே! கடைசியா போர்க்களத்திலயேநடந்ததா கூசாம எழுதிவிட்டிருக்கிறாங்களே ! அவனவன் சிந்தனை அவவனவனைப் போலதானே இருக்கும். அதெல்லாம் கண்டுக்காம விட்டிரணும். 

கோமகன்: உங்கடைஎழுத்துக்களுக்கு ஆறாவது ரோல் மொடலாய் இருந்திருக்கினமோ ?

தமிழ்க்கவி: ஜெயகாந்தனும் செங்கை ஆழியானும் என்ரை றோல்மொடலுகள்

நாங்கள் இருவரும் அரசியல் இலக்கியம் என்று நேரம் போனதே தெரியாது பேசி முடிய மத்தியானத்துக்கு மேல் ஆகிவிட்டது. என்னுடன் கதைத்தவறே அன்ரி சமைத்திருந்த முத்துச்சம்பா சோறும் துவரம்பருப்பு கறியும் கோழிக்கறியும் என்னை அம்மாவின் சமையல் காலத்திற்கு எடுத்துச்சென்றது. என்னைக்கேட்டால் உணவின் சுவை படோடபத்திலோ அன்றில் நாகரீகமான பரிமாறலிலோ இல்லை. அது அன்பின் மிகுதியினால் உணவை உருவாக்கும் கையிலேயே இருக்கின்றது என்பேன்.  வெய்யில் சிறிது இறங்கியவுடன் நான் வீட்டிற்குச் செல்வதற்காகப் பருத்தித்துறை செல்லும் பஸ்ஸில் ஏறி இருந்தேன். பஸ் ஓடிய ஓட்டத்தில் ஆனையிறவு விரைந்து நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழ்க்கவியுடன் கதைத்த விடயங்கள் எனது மனதை மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன. இவ்வாறு எத்தனை தமிழ்க்கவிகள் தங்கள் வாழ்வைத்தொலைத்தரர்கள் என்ற கேள்விக்கு என்னால் விடை காண முடியவில்லை. சும்மா இருந்த  அன்ரியின் மனதைக் கிண்டிக்கிளறி வேதனைப்படுத்தி விட்டேனோ என்று என் மனம் குற்ற உணர்வில் தவித்தது. நானிருந்த இருக்கையிலிருந்து இடது பக்கம் கீழே இறங்கி  கொண்டிருந்த சூரியனால் ஆனையிறவு உப்பங்கழி மஞ்சள் நிறத்தில் என்னை மயக்கியது. இறங்கிக் கொண்டிருந்த சூரியனிற்குக் குறுக்காகக் கூழைக்கடாக்கள் ஆரை வடிவில் தம்பணி செய்து கிடந்தன.

கோமகன்- பிரான்ஸ்

 

http://www.naduweb.net/?p=8795

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்..........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கோமகன்: மெய்யே அன்ரி……. எனக்கு இந்த  விசையம்மட்டும் விளங்கேலை. எங்கடை சனங்கள் எல்லாம் படிச்சவைதானே? தற்குறியள் எண்டு ஒருத்தரும் இல்லைத்தானே? அட உந்தபுள்ளி விபரங்களும் அதைத்தான் சொல்லுது. ஆனா எப்பிடி நாங்கள் தோத்தம் ? 

தமிழ்க்கவி: புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை.

என்னுடைய கைநாட்டும் இப்படித்தானே இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

"என்ட  அண்ணா இயக்கத்தை விட்டு பிரிந்த பின் எல்லா யுத்தத்திலும் புலிகள் தோத்து விட்டினமாம".அன்றி சொல்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

"என்ட  அண்ணா இயக்கத்தை விட்டு பிரிந்த பின் எல்லா யுத்தத்திலும் புலிகள் தோத்து விட்டினமாம".அன்றி சொல்கின்றார் .

உங்க அண்ண பிரிந்தது ஒரு பிரச்சினையும் இல்ல அண்ண இருந்த போராளிகளை கலைந்து செல்லுங்கள் அல்லது வெளிநாடு சென்று விடுங்கள் என்றதனாலாலேயே ஆட்பலம் குறைந்து போனது விலகினவர்கள் இருந்தால் தனியாக உங்க அண்ணனுடன் செல்ல முடியாது என்ற உள் மனது குமுறலுடன் அவர்களால் முடிந்த மத்திய கிழக்குக்கு உயிர் பிழைக்க ஓடினார்கள். :grin::101_point_up: 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

"என்ட  அண்ணா இயக்கத்தை விட்டு பிரிந்த பின் எல்லா யுத்தத்திலும் புலிகள் தோத்து விட்டினமாம".அன்றி சொல்கின்றார் .

 உங்கட. அண்ணை குடுத்த உதவியால தான் நாப்பதயிரம்nசனமும் கொல்லப். பட்டது.  இலங்கையின்  முதல் போர்  குற்றவாளியாக உங்கள்  அண்ணனை  மைத்ரியும்  ரனிலும் சேர்ந்து கழுவேற்றெக்கை பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

 உங்கட. அண்ணை குடுத்த உதவியால தான் நாப்பதயிரம்nசனமும் கொல்லப். பட்டது.  இலங்கையின்  முதல் போர்  குற்றவாளியாக உங்கள்  அண்ணனை  மைத்ரியும்  ரனிலும் சேர்ந்து கழுவேற்றெக்கை பாருங்கோ.

என்ட  அண்ணர் ஆனானப்பட்ட பொட்டரையே  சுழிச்சவர். எப்படி ரணிலையும்,மைத்திரியையும் சுழிப்பது என்று அவருக்கு தெரியும்...அதையும் மீறி அவருக்கு துவக்கால் தான் சா என்றால் அதை யார் மாற்ற முடியும்?....தவிர,40,000 பேர் செத்தது எனக்கும் கவலை தான் ஆனால் மட்டக்கிளப்பில் உள்ள எத்தனையோ லட்சம் சனம் தப்பிட்டுது என்பதை நினைக்க நிம்மதியாய் இருக்கு

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சித்தனோ.. சிவனோ ஆகல்ல. இவா மாதிரி பச்சோந்திங்க தான்.. சித்தன் போக்கு சிவன் போக்குன்னு திரியுதுங்க. 

பரமசிவன் கழுத்தில் இருக்கேக்க பாம்புக்கு ஒரு கதை.. அதே பாமரன் கரத்தில் இருக்கேக்க இன்னொரு கதை.

இவை போன்ற ஆக்களால் தான் எமது போராட்டம் பெரு வீழ்ச்சியை நோக்கிப் போக நேரிட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.