Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 06:38

போர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன.   

ஒரு போர் முடிந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள், ஆண்டாண்டுக்கும் தொடரும்; போரின் தீவிரம் அத்தகையது.   

போர் உருவாக்கிய கதைகள், பதிலின்றிப் பதில்களை வேண்டி, பல குரல்களாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். முடியாத கதைகளின் களம், போரும் அதன் பின்னரான நிலமுமாகும்.   

கடந்த எட்டு ஆண்டுகளாக, சிரியாவில் நடைபெற்று வந்த போர், முடிவுக்கு வந்திருக்கிறது. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொண்டு, 110 இலட்சம் பேரை இடம்பெயரச் செய்த போர், முடிவுக்கு வந்துள்ளது.   

சிரியாவின் பெரும்பாலான பகுதிகளையும் முழுமையான மக்கள் தொகையையும் சிரிய அரசாங்கம், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.   

சிரியப் போருக்கு, கடந்த எட்டு வருடங்களாகக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இப்போது வழங்கப்படுவதில்லை. ஊடகங்களில் சிரியா பற்றிய செய்திகளைக் காணக் கிடைப்பதில்லை. ஏனெனில், பலர் எதிர்பார்க்காத, விரும்பாத முடிவைச் சிரியப் போர் எட்டியுள்ளது.  

 எட்டு ஆண்டு காலமாக, வன்முறையாகத் திணிக்கப்பட்ட போரின் வடுக்களை, சிரியா தாங்கி நிற்கின்றது. சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றி, ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து உருவாக்கிய ஒரு போரின் முடிவில், வெற்றியின் பக்கத்தில் அசாத் நிற்கிறார்; போரை அவர் வென்றுள்ளார். அவருக்குத் தோள் கொடுத்த ஈரானும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் அந்த வெற்றியில், பங்கைக் கொண்டுள்ளன. சிரியப் போரின் முடிவு, மத்திய கிழக்கில் புதியதோர் அதிகாரச் சமநிலையை உருவாக்கியுள்ளது.   

அமெரிக்காவின் அடியாளும் மத்திய கிழக்கின் ‘பேட்டை ரவுடி’யுமாகிய சவூதி அரேபியா, இப்போரில் தோற்ற முக்கியமான நாடாகவும் ஈரான் - சவூதி அரேபியா கெடுபிடிப்போரில், ஈரான் இன்னொருமுறை மேல்நிலையும் அடைந்திருக்கிறது.   

அதேவேளை, அமெரிக்கா எதிர் ரஷ்யா போட்டியில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை சிரியாவில் நிலைநாட்டியுள்ளது.  இவை, புதிய உலக ஒழுங்கின் பரிமாணங்களையும் அதன் தாக்கத்தையும் காட்டி நிற்கின்றன.  

லிபியாவின் வழித்தடத்தில் ஈராக்  

அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானில் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை’த் தொடங்கிய அமெரிக்கா, அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு, ஈராக்கைக் குறிவைத்தது. ஈராக்கின் மீதான குறி, அதன் எண்ணெய் வயல்கள் மீதானது.  

 ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று குற்றஞ்சாட்டி, ஈராக்கை முற்றுகையிட்டுப் போரிட்ட அமெரிக்கா, சதாமைத் தூக்கிலிட்டு, தனக்கு வேண்டியதைச் சாதித்தது.  

image_4ae26b926a.jpg 

ஈராக்கில் பெற்ற வெற்றி, லிபியாவின் மீதான போருக்கு வித்திட்டது. அதே காலப்பகுதியில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட ‘அரபு வசந்தம்’, லிபிய முற்றுகைக்கு வேண்டிய காரணியை வழங்கியது.   

உலகின் அதிகமான எண்ணெய் வளங்களை உடைய நாடுகளில், முன்னணியில் உள்ள லிபியா மீதான போரும், ‘ஆட்சிமாற்றம்’ என்ற போர்வையிலேயே தொடங்கியது. முஹம்மர் கடாபியின் கொலையுடன் முடிவடைந்த போரின் பின்னரும், அரசாங்கமற்ற நிலையிலேயே, லிபியா இன்றுவரை தொடர்கிறது.   

அமெரிக்கா, தனக்கு உவப்பில்லாத மத்திய கிழக்கின் ஆட்சிகளை, ஒவ்வொன்றாக அகற்றியது. இதன் வரிசையில், அமெரிக்காவின் அடுத்த குறியாக அமைந்தது சிரியா.   

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், வழமையாகப் பெருநகரங்களில், அதிகளவு எண்ணிக்கையான மக்களுடனேயே தொடங்குவது வழமை. ஆனால், சிரிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், ஜோர்டானுடனான எல்லையில் உள்ள, டாரா என்ற சிறிய நகரில், 2011 மார்ச்சில் தொடங்கியது. சில காலத்துக்குப் பின்னர், சிரிய எதிர்குழுக்களுக்கு ஜோர்டானுக்கூடாக ஆயுதம் அனுப்பியதை, சவூதி அரேபியா ஒப்புக் கொண்டது.  

மக்கள் எழுச்சிகளை, அமெரிக்காவும் அதன் நேட்டோக் கூட்டாளிகளும் திட்டமிட்டுத் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த எழுச்சியின் காரணங்களை உணர்ந்த சிரிய அரசாங்கம், அதனை அடக்கியது.  

சிரிய அரசாங்கம் மக்கள் எழுச்சிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று காரணம் காட்டி, அரபு லீக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சிரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.  

அதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த சிரியர்களின் உதவியுடன், அரசாங்கத்துக்கு எதிரான சிரிய எதிர்க்கட்சிகளின் ‘சிரிய தேசியக் கவுன்சில்’ உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா நேரடியாக நிதியுதவி அளித்தது. இவர்கள், சிரியாவின் ஆட்சிமாற்றம், அமெரிக்க நலன்களுக்காகவே என வெளிப்படையாக அறிவித்தார்கள்.   

இதேவேளை, அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த துருக்கி, சிரியாவின் ஆட்சி மாற்றத்துக்குத் தனது பங்கைக் கச்சிதமாக ஆற்றியது. ‘சிரிய விடுதலை இராணுவத்தின்’ பயிற்சித் தளங்களும் இராணுவத் தளங்களும் துருக்கியில் நிறுவப்பட்டன. அவற்றுக்கான நிதியுதவி, சவூதி அரேபியாவாலும் கட்டாராலும் வழங்கப்பட்டது. அந்த இராணுவத்தில், பல வெளிநாட்டவர்கள் இணைந்துள்ளமை ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது.   

காலப்போக்கில், சிரிய விடுதலை இராணுவத்தால் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்று உணர்ந்த அமெரிக்கா, அப்பொறுப்பை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் ஒப்படைத்தது. மிகுதிக் கதை நாம் அறிந்தது.   
இன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் கிட்டத்தட்ட முழுமையாகத் துடைத்து அழிக்கப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிராக, ஒன்றாக நிதியுதவி செய்த சவூதி அரேபியாவும் கட்டாரும் தமக்குள் முரண்பட்டுள்ளன.   

துருக்கியில் அமெரிக்கா ஏற்படுத்த முயன்ற ஆட்சிமாற்றம், துருக்கி - அமெரிக்க உறவுகளில் பாரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது. இந்தப் பின்புலத்திலேயே, சிரியாவில் அல்அஷாத்தும் அவரது கூட்டாளிகளும் அடைந்துள்ள வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.   

ரஷ்யாவின் ஆதிக்கம்  

சிரியப் போர் தொடங்கி, நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சிரிய அரசாங்கம், 75 சதவீதமான பகுதியின் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. இன்னும் சில மாதங்களில், சிரியாவின் தலைநகரை ஐ.எஸ்.ஐ.எஸ் எட்டிவிடும் என்று சொல்லப்பட்டது.   

இஸ்லாமிய அரசை நிறுவும் நோக்கத்தை உடைய ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய பாரிய விம்பம் கட்டமைக்கப்பட்டிருந்தது. பல நாடுகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்தார்கள். சிரிய யுத்தம், சிரியத் தலைநகரான டமாஸ்கஸின் தலைநகரை எட்டியிருந்தது.   

அரசாங்கத்துக்கு எதிரான போராளிகளுக்குத் தடையற்ற இராணுவ உதவிகளையும் ஆயுத உதவிகளையும் அமெரிக்காவும் நேட்டோவும் வழங்கின. சதாம், கடாபி வரிசையில் அல்அஷாத் எனப் பத்திரிகைகள் எழுதின.   

2015 செப்டெம்பரில் அல்அஷாத், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்து, ‘ஜிகாத்’ பயங்கரவாதிகளிடம் இருந்து, நாட்டைக் காப்பாற்ற உதவி கோரினார். கோரிக்கையை புட்டின் ஏற்றுக் கொண்டார்.   

2015 செப்டெம்பர் 30ஆம் திகதி, சிரியப் போரில், ரஷ்யா இறங்கியது. ரஷ்ய வான்படைகளின் உதவியுடன் சிரிய இராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் இழந்த பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தொடங்கியது. 

2016ஆம் ஆண்டு முடிவடையும் போது, 70சதவீதமான நிலப்பரப்பை, மீண்டும் சிரிய இராணுவம் கைப்பற்றியது.   

குறிப்பாக, சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான அலெப்போவின் விடுதலையைச் சாத்தியமாக்கியது ரஷ்யாவின் விமானப்படைகளே. ரஷ்ய விமானப்படைகள், ஈரானின் சிறப்புப் படையணிகள், ஹிஸ்புல்லா போராளிகள் என்ற முக்கூட்டின் உதவியுடன் போர் திசைமாறியது.   

இந்தப் போரின் மூலம், ரஷ்யா தனது இராணுவ வலிமையை உலகுக்குச் சொல்லியுள்ளது. கெடுபிடிப்போர் காலத்துக்குப் பின்பு, முதன்முதலாக அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிர் எதிர்த் திசைகளில் போரிட்ட களம் சிரியா. இதில் ரஷ்யாவின் வெற்றி, உலக ஒழுங்கில் முக்கியமான செய்தி.   

அதேவேளை, மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை ஈரான் நிலைநாட்டியுள்ளது. இப்போரில் 300க்கும் மேற்பட்ட புதிய ஆயுதங்களை ரஷ்யா பரிசோதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்கா வலிந்து தொடங்கிய ஒரு போர், இன்று அதற்கு அவமானகரமான தோல்வியாகவும் ரஷ்யாவை நாயகனாகவும் ஆக்கியுள்ளது.   

அடுத்தது என்ன?   

போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் சிரியா இறங்கியுள்ளது. அல்அஷாத்தின் அண்மைய ஈரான் விஜயம், முக்கியமான பலன்களை அளித்துள்ளது. 200,000 வீடுகளைக் கட்டித்தர ஈரான் உறுதியளித்துள்ளது. 

அதேவேளை சீனா, சிரிய மீள்கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. 

இதேவேளை, மேற்குலக நாடுகள் மிகுந்த குழப்பகரமான நிலையில் உள்ளன.   

அமெரிக்கா, தனது படைகளைச் சிரியாவில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளும் என, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், அல்அஷாத்தை ஜனாதிபதியாக ஏற்பதில் அமெரிக்காவுக்கு சிக்கல் உண்டு.   

யாரைப் பதவியில் இருந்து அகற்ற, எட்டு ஆண்டுகளாக அமெரிக்கா போர் புரிந்ததோ, அவரை மீண்டும் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை.   

அதேவேளை, சிரியாவுடனான உறவுகள் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உண்டு. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகள், அல்அஷாத்தை அங்கிகரித்துப் பொருளாதாரத் தடைகளை நீக்கி, சிரியாவுடன் உறவுகளைப் பேண விரும்புகின்றன. அந்நாடுகள், சிரியாவை மீளக்கட்டமைத்து, பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதே, அகதிகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என நம்புகின்றன.   

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்குச் செலுத்தும் பிரான்ஸும் ஜேர்மனியும் இதற்குத் தயாராக இல்லை.   

மத்திய கிழக்கு நாடுகளில், ஐக்கிய அரபு இராச்சியம், தனது தூதரகத்தை சிரியத் தலைநகர் டமாஸ்கஸில் மீள நிறுவியுள்ளது. பஹ்்ரேனும் சிரியாவில் தனது தூதரகத்தை மீளத் திறந்துள்ளது.   

சிரியாவுடன் உறவுகளைப் புதுப்பிக்க வேண்டாம் என சவூதி அரேபியா, கட்டார் ஆகியவற்றின் உதவியுடன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைக் கோரியுள்ளது. தாம் விரும்புவதை, ஓரணியாகச் சவூதியும் கட்டாரும் செய்வதை, தாம் வரவேற்பதாக வெளிப்படையாகவே அமெரிக்கா அறிவித்துள்ளது.   

இதேவேளை, அல்அஷாத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், பதவிவிலக்க வேண்டும் என்று, சில அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் எழுதுகிறார்கள். மழை விட்டாலும், தூவனம் விடாத கதைதான் சிரியாவின் தற்போதைய கதை.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிரியா-முடிந்த-போரும்-முடியாத-கதையும்/91-230707

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில வல்லரசு குஞ்சுகள் சும்மா தங்கடை பாட்டுக்கு இருந்த மத்திய கிழக்கை குழப்பிப்போட்டு... ....தாங்கள் நினைச்சது நடக்காது எண்டவுடனை தலைய சொறிஞ்சுகொண்டு திரியினம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஒருசில வல்லரசு குஞ்சுகள் சும்மா தங்கடை பாட்டுக்கு இருந்த மத்திய கிழக்கை குழப்பிப்போட்டு... ....தாங்கள் நினைச்சது நடக்காது எண்டவுடனை தலைய சொறிஞ்சுகொண்டு திரியினம்.

இருந்தாலும் அவர்கள் விரும்புவது நடக்கிறது.....இந்த நாடுகளை குழப்பத்தில் வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம், இல்லாவிட்டால் ஆயுதங்கள், விமானங்கள், டாங்கிகள்,கப்பல்கள்,மருந்துகள்   எல்லாவற்றையும் என்ன செய்வது......!   😗

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

இருந்தாலும் அவர்கள் விரும்புவது நடக்கிறது.....இந்த நாடுகளை குழப்பத்தில் வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம், இல்லாவிட்டால் ஆயுதங்கள், விமானங்கள், டாங்கிகள்,கப்பல்கள்,மருந்துகள்   எல்லாவற்றையும் என்ன செய்வது......!   😗

 

15 hours ago, குமாரசாமி said:

ஒருசில வல்லரசு குஞ்சுகள் சும்மா தங்கடை பாட்டுக்கு இருந்த மத்திய கிழக்கை குழப்பிப்போட்டு... ....தாங்கள் நினைச்சது நடக்காது எண்டவுடனை தலைய சொறிஞ்சுகொண்டு திரியினம்.

அத்தோடு புதியபுதிய ஆயுதங்கள் செய்யும் போது சரியான இலக்குக்கு செல்கிறதா என்று பார்க்க ஒரு இடம் வேணும் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.