Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நா அதிகாரிகளால் பத்திரிக்கையாளர் மாநாடுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், விக்கிலீக்கின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட உண்மைகள், படுகொலைக் களத்தில் பணியாற்றிய 12 ஐ. நா அதிகாரிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது எத்தகைய பொதுமக்கள் அழிவுகள் ஏற்படினும் புலிகளை தோற்கடித்து அழித்துவிடவேண்டும் என்று ஐ. நா திட்டமிட்டுச் செயற்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பாரிய மனிதப்படுகொலைகளை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்ப சிங்கள அரசாங்கத்தினது "போர் சூனியப் பிரதேசம் மீது கனரக ஆயுதங்களைப் பாவிக்க மாட்டோம்" எனும் பொய்யை முழுமையாக வேண்டுமென்றே நம்பியது மட்டுமல்லாமல், வேண்டுமென்றே வன்னிக் கொலைக்களத்தில் நடந்த படுகொலைகளை மறைத்தது, அங்கே நடைபெற்ற படுகொலைகளின் எண்ணிக்கை என்று சிங்கள அரசு சொன்னதையே பத்திரிக்கையாளர்களுக்கும் சொல்லியது போன்ற அந்நாள் ஐ. நா வின் மனிதாபிமான, இடர் நிவாரண பணிப்பாளராக விளங்கிய ஜோன் ஹோம்ஸின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அந்நாள் பதுகாப்புச்சபைத் தலைவரான யுக்கியோ டகாசு கூறிய ஐ. நா வின் ரகசியத் திட்டமான "பலமுறை பேச்சுவார்த்தைகளைக் குழப்பிய பயங்கரவாதிகளான புலிகளை முற்றாக அழிப்பது, அதன்பின்னரே பொதுமக்கள் அழிவுகள் பற்றிச் சிந்திப்பது" என்பதன் அடிப்படையிலேயே அவர் செயற்பட்டிருக்கிறார் என்று தெளிவாகிறது.

பாரிய அமைப்பு ரீதியான தவறுகளை ஐ. நா இழைத்திருப்பதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு சில மாதங்களில் மட்டுமே 40,000 இற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டக் காரணமாக அது இருந்திருக்கிறது என்று ஐ. நா வின் உள்ளக விசாரணைக் குழுவொன்றே அண்மையில் ஐ. நாவை குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த அறிக்கைய விமர்சித்திருக்கும் ஜோன் ஹோம்ஸ், ஐ. நா வின் அன்றைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருப்பதுடன், அன்றைய இக்கட்டான காலகட்டத்தில் ஐ. நா இதைவிட வேறு வழியில் செயற்பட்டிருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். "நாம் எமது நடவடிக்கைகளை மாற்றியிருந்தால், சிறிலங்கா அரசும் தனது நடவடிக்கைகளை மாற்றியிருக்கும், முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும், ஆகவேதான் நாம் அப்படிச் செய்தோம்" என்று கூறியிருக்கிறார்.

அபோதைய ஐ. நா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராக இருந்த யுக்கியோ டகாசு கூறுகையில், " மனித அவலம் என்பது ஒரு பிரச்சினையில் சிறிய பகுதி மட்டுமே. ஆனால் அதற்குமப்பால் நாம் அரசியல், பாதுகாப்பு நிலமை பற்றிச் சிந்திக்க வேண்டும். நிலமை மிகவும் சிக்கலானது, பலமுறை கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தங்களப் பயங்கரவாத இயக்கமான புலிகள் முறித்திருக்கிறார்கள், யுத்த நிறுத்தங்களைப் பாவித்து புதிய இராணுவ தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்க நாம் அரசாங்கத்தைப் பார்த்து யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோருவது நியாயமற்றது" ஆகவேதான் நாம் வாளாவிருந்தோம் என்று சொல்கிறார்.

பாதுகாப்புச் சபை தலைவரின் அறிக்கைக்குப் பின்னர் வந்த 5 மாதங்களிலும், ஐ. நா நடந்துகொண்ட விதத்தினையும், அதற்கேற்றாப்போல் அவ்வப்போது வெளிவந்த ஜோன் ஹோம்சின் அறிக்கைகளையும் பார்க்கும்போது ஐ. நா புலிகளை முற்றாக அழிப்பதையே விரும்பியிருந்தது என்பது தெளிவாகிறது. இந்தத் திட்டத்தை ஐ. நா வின் இரு உயரதிகாரிகளான ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் நியூ யோக்கில் இருந்து அமுல்ப்படுத்த, களத்திலிருந்த உள்ளூர் அதிகாரிகளான நீல் பூனே, பிலிப்பே டுவாமெல்லே, அமின் அவாட், அண்டி புறூக்ஸ் ஆகியோர் பாரிய படுகொலைகளுக்கான ராசதந்திர பாதுகாப்பையும், பட்டினிச் சாவுக்கான முழு அளவிலான மறைப்பையும் வழங்கிக் கொண்டிருந்தனர். மாசி மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜோ ஹோம்ஸ் ஐ. நா சபையில் ஐந்து தடவை போர் பற்றிய பத்திரிக்கையாளர் மாநாடுகளை நடத்தியிருந்ததோடு, பல முறை மக்கள் அழிவுகள் பற்றிய கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டார். இன்னர் சிட்டிப் பிரெஸ் வெளியிட்ட ஐ. நாவின் ரகசியத் தகவல் குறிப்பொன்றின் மூலம் மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தின் செல்த்தாக்குதலினால் கொல்லப்பட்ட 2800 பொதுமக்களின் எண்ணிக்கை பற்றி ஐ. நா வுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் கூட, பத்திரிக்கையாளர் பொதுமக்கள் அழிவுகள் பற்றிக் கேட்ட போது எந்தவித பதிலையும் அவர் கூற மறுத்து விட்டார். "உங்களால் சரியான பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கையைச் சொல்ல முடியாவிட்டாலும் பறவாயில்லை, அண்ணளவாக எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், அதன் மூலமாவது அங்கே நடக்கும் மனித அவலத்தை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்து, இந்த அழிவுகர யுத்தத்தை நிறுத்தலாமே?" என்று ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கையாளர் கேட்டதற்கும், எதுவித பதிலையும் அவர் கூறவில்லை.

ஐ. நா உள்ளக விசாரணைக் குழுவின் விசாரனை அறிக்கைப்படி, "நீங்கள் உண்மையான பொதுமக்கள் அழிவுகளை வெளியே கூறினால் அது ஐ. நா வை பாரிய சங்கடத்துக்குள் தள்ளிவிடும், ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் உண்மையான அழிவுகளை வெளியே சொல்லக்கூடாது" என்று ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் அந்நாள் ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலின் தலைவரான நவிப்பிள்ளையைக் கடுமையாக நிர்ப்பந்தித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் பகுதியிலிருந்த பொதுமக்களின் எண்ணிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, ஜோன் ஹோம்ஸ் தொடர்ந்தும் சிங்கள அரசு கூறிய வெறும் 70,000 எனும் எண்ணிக்கையயே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தார். ஆனால் அதேவேளை, ஐ. நா வின் வேறு அதிகாரிகளின் மதிப்பீடோ குறைந்தது 200,000 பொதுமக்களாவது அங்கிருக்கலாம் என்று கூறியிருக்க, தமிழர் தரப்புக்களோ இந்த எண்ணிக்கை 300,000 ஐயும் தாண்டும் என்று கணிப்பிட்டிருந்தன. அந்நாட்களில் கொழும்பிலிருந்து ரொபேட் பிளேக்கினால் அமெரிக்க ராசாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட செய்திகள்கூட, இந்த 300,000 என்கிற எண்ணிக்கையயே மேற்கோள்காட்டி,சிங்கள அரசு உணவை ஒரு ஆயுதமாகப் பாவித்து, புலிகளின் பின்னாலிருந்த மக்களை தம்பக்கம் இழுக்க முயன்று கொண்டிருக்கிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேலாக, செய்மதிப்படங்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தபோது சிங்கள அரசு கூறிய 70,000 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகளாவான மக்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது ஐ. நா வுக்கு நன்கே தெரிந்திருந்தும் அது சிங்கள அரசுமீது உணவு மற்றும் மருந்துப் பொருள் நிவாரணங்களை அதிகப்படுத்துங்கள் என்று எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை என்பதும் உள்ளக அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது. இவ்வாறான ஐ. நா வின் நடவடிக்கைகளால் பல ஐ. நா அதிகாரிகள் ஜோன் ஹோம்ஸ் தலமையிலான அமைப்பிலிருந்து விலகியதுடன், பெருமளவு மக்கள் கொல்லப்படவும், பட்டினிச் சாவை எதிர்நோக்கவும் காரணமாக இருந்த ஐ. நாவையும் கடுமையாகச் சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருக்க, உள்ளூர் ஐ. நா அதிகாரிகள், மக்களுக்கு கிரிக்கெட் ஆட்ட மட்டைகளையும், பந்துகளையும் நிவாரணப் பொருட்களாக விநியோகித்தமையும் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பொதுமக்களின் எனண்ணிக்கையை ஜோன் ஹோம்ஸ் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டது, பின்னால் நடக்கவிருந்த பாரிய மனிதப் படுகொலைய எதிர்பார்த்துத்தான் என்பதும் இவரதும், ஐ. நா வினதும் நடவடிக்கள் மூலம் தெரிய வருகிறது.

எல்லாப் பத்திர்க்கியாளர் மாநாடுகளிலும், சிங்கள அரசுக்குச் சார்பாக கருத்துத் தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், புலிகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களைத் தம்முடன் வைத்திருப்பதால், மக்களின் இழப்புக்களுக்கு அவர்களே பொறுப்பு என்றும் தவறாமல் கூறி வந்தார். போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த அனைத்து பொதுமக்கள் மட்டுமல்லாமல், போர் வலயப் பகுதிக்கு வெளியே இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்கள் கூட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டது பற்றியும், அங்கே நடைபெற்ற இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றியும் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய ஜோன் ஹோம்ஸ், "அங்கிருக்கும் எல்லாப் பகுதிகளும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, ஆகவே, இராணுவம் அப்படி நடந்துகொண்டதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று ராணுவத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் தவறவில்லை. உலகின் இனச் சிக்கல்களின்போது பாதிக்கப்படும் இனத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய அமைப்பான ஐ. நா வே ஒரு இனத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துணை போனதென்றால், இவ்வாறான அமைப்பொன்றின் தேவையென்ன என்கிற கேள்வியும் பலரின் மனதில் எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபைக்கு பின்னால் அமெரிக்க, இந்திய அரசுகளே இருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா உண்மையை மறைத்தது போர் நடந்து கொண்டிருந்த சமகாலத்திலேயே உள்ளூரில் வெளிவந்து விட்டது. ஆனால், புலிகள் மக்களை கேடயமாகத் தடுத்து வைத்திருந்த குற்றசாட்டு அங்கேயிருந்த மக்களாலேயே உறுதிப் படுத்தப் பட்ட ஒரு தகவல்! ஏன் அப்படிச் செய்தார்கள்? இழப்புகளைக் காட்டி யுத்தத்தை நிறுத்த வைக்கும் தந்திரமாக இதைச் செய்தார்கள் என்பதைத் தவிர வேறெந்த விளக்கமும் யாரிடமும் இல்லை!

ஐநா, ஜப்பான் நாட்டவர், பிளேக், அமெரிக்கா, இந்தியா இவர்கள் தமிழர்களின் உயிரை துச்சமாக மதித்தது பற்றி எனக்கு அதிர்ச்சியில்லை! புலிகளிடம் வன்னி மக்களின் உயிர்களை காத்திருக்கக் கூடிய இயலுமையும் தெரிவும் (choice) இருந்தன! அவர்கள் செய்யவில்லை என்பது தான் வன்னி மக்களின் மேல் விழுந்த கடைசி சவப் பெட்டி ஆணி என்பது என் கருத்து!  

  • கருத்துக்கள உறவுகள்

ஓமண்ணை மக்களுக்காக போராடப் போனவை செய்த தவறு உங்களுக்கு பூதாகரமாக தெரியுது!
ஆனால் மக்களை பாதுகாக்க வேண்டிய ஐ.நாவும் அரசுகளும் செய்தது சின்ன விடயம், நல்லா இருக்கு நியாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

ஓமண்ணை மக்களுக்காக போராடப் போனவை செய்த தவறு உங்களுக்கு பூதாகரமாக தெரியுது!
ஆனால் மக்களை பாதுகாக்க வேண்டிய ஐ.நாவும் அரசுகளும் செய்தது சின்ன விடயம், நல்லா இருக்கு நியாயம்.

ஏராளன், மக்களுக்காகப் போராடப் போகிற ஒரு அமைப்புக்கு அந்த மக்கள் கூட்டத்தின் மொத்த உயிரும் collateral ஆக எழுதி வைக்கப் பட வேண்டுமா? அவர்கள் செய்தது ஐநா போன்ற வந்தார் வரத்தானான வெளியார் செய்ததை விட பெரிய தவறு என்பது என் கருத்து! 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பிணையாக வைத்திருந்தார்களா? இல்லை மக்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு சென்றார்களா?
தங்களால் பாதுகாக்க முடியாத நிலை வந்தபோது மக்களை வெளியேற சொல்லி போரிட்டு மடிந்தவர்கள் யார்?

இவ்வளவு மக்கள் உயிரோடு மீண்டு வந்தார்களே அது எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

ஐநா உண்மையை மறைத்தது போர் நடந்து கொண்டிருந்த சமகாலத்திலேயே உள்ளூரில் வெளிவந்து விட்டது. ஆனால், புலிகள் மக்களை கேடயமாகத் தடுத்து வைத்திருந்த குற்றசாட்டு அங்கேயிருந்த மக்களாலேயே உறுதிப் படுத்தப் பட்ட ஒரு தகவல்! ஏன் அப்படிச் செய்தார்கள்? இழப்புகளைக் காட்டி யுத்தத்தை நிறுத்த வைக்கும் தந்திரமாக இதைச் செய்தார்கள் என்பதைத் தவிர வேறெந்த விளக்கமும் யாரிடமும் இல்லை!

யுத்தத்தின் இழப்புகளைக் காட்டி சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முயன்றிருக்கலாம் என்பது ஓரளவிற்கு உண்மைதான். அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் தம்முடனிருந்தால், சிலவேளை தாக்குதலின் தீவிரத்தையாவது குறையுங்கள் என்று சிங்களத்தின் மீது அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், புலிகளாகவிருந்தால் என்ன, பொதுமக்களாக இருந்தாலென்ன, கொல்லப்படுவது தமிழர்களாக இருந்தால்ச் சரி என்கிற மனநிலையில் இருக்கும் சிங்கள ராணுவத்திற்கு புலிகளின் எந்த முயற்சியும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை என்பதே உண்மை.

20 minutes ago, Justin said:

புலிகளிடம் வன்னி மக்களின் உயிர்களை காத்திருக்கக் கூடிய இயலுமையும் தெரிவும் (choice) இருந்தன!

எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படியான வலுவோ அல்லது பலமோ அவர்களிடம் அப்போது முற்றாக இல்லாமல்ப் போயிருந்தது என்பதே உண்மை.

தெரிவு என்று வரும்போது, மக்களை வெளியேற விட்டு விட்டு, கடைசிச் சமரை செய்திருக்கலாம். 

ஆனால், இறுதியில் நடந்ததும் அதுதானே? மக்கள் வெளியேறுவதை இறுதியில் தடுக்காமல் விட்ட புலிகள், மக்களுடன் மக்களாக தமது உறுப்பினர்களையும் சரணடயச் சொல்லியிருந்தார்கள். 

இறுதியில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள், சண்டையிட்டவர்களும் கொல்லப்பட்டார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

மக்களை பிணையாக வைத்திருந்தார்களா? இல்லை மக்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு சென்றார்களா?
தங்களால் பாதுகாக்க முடியாத நிலை வந்தபோது மக்களை வெளியேற சொல்லி போரிட்டு மடிந்தவர்கள் யார்?

இதுவும் நடந்ததுதான். போரின் ஆரம்ப நாட்களில், புலிகள் சென்ற இடங்களுக்கு மக்களும் பிந்தொடர்ந்து சென்றார்கள். வன்னிச் சமர்களில் முன்னர் பலவிடங்களில் பின்வாங்கியிருந்த புலிகள், சில காலங்களில் தாம் இழந்த நிலப்பரப்பை மீட்டிருந்தார்கள். இந்த நம்பிக்கையின் காரணமாக ஆரம்ப நாட்களில் மக்கள் புலிகளின் பின்னால் சென்றார்கள். அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின் கைகளில் அகப்பட்டால் நடப்பது என்னவென்பதை நன்கே உணர்ந்திருந்த அம்மக்களுக்கு வேறு தெரிவும் அப்போது இருந்திருக்கவில்லை. 

பின்னர் போர் கடுமையாகி, மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்படும்போது, புலிகளைக் காரண்மாகக் காட்டி ராணுவம் அழிக்க நினைப்பது தம்மைத்தான் என்கிற உண்மை தெளிவாகியபோது, புலிகளை விட்டு அகல முடிவெடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை போரியல் ஆயுதமாகப் பாவித்துச் சிங்களமும், ஐ. நா வும் மக்களை புலிகளிடமிருந்து அந்நியப்படுத்த பகீரதப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தபொழுது பலர் வேறு வழியின்றி ராணுவத்தின் பக்கம் சென்றார்கள்.

சுமார் நான்கு லட்சம் மக்களை மனிதக் கேடயங்களக, வாழ்விற்கும் சாவிற்குமிடையே போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு சில நூறு புலிகளால் வைத்திருந்திருக்க முடியுமா என்கிற கேள்வி இருந்தபொழுதும் கூட, சில சந்தர்ப்பங்களில் மக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மையே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கொல்லவேண்டும் என்கிற தேவை புலிகளுக்கு எந்த விதத்திலும் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. எவர்களைக் காப்பதற்காக பல்லாயிரம் வீரர்களைக் காவுகொடுத்தார்களோ, அவர்களையே கொல்லுமளவிற்கு அவர்கள் கீழிறங்க வேண்டிய அவசியம் இல்லை.

தம்முடன் மக்களும் இருக்கவேண்டும் என்று ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்ப்பது வியப்பில்லை. தமக்கு அரணாக, தமது புதிய வீரர்களுக்கான வழங்கலாக, தம்மீதான அழுத்தத்தினைக் குறைக்கக் கூடிய காரணியாக மக்களை அவர்கள் பார்த்திருக்கலாம் என்பதையும் மறைப்பதற்கில்லை. 

ஆனால், சிங்களமும், ஐ. நா வும், சர்வதேசமும் சொல்லிவந்ததுபோல பொதுமக்களை தமது அரணாக வைத்து பின்னாலிருந்து புலிகள் சுடுகிறார்கள், அதனால் ஒரு கைய்யில் ஐ. நா மனிதவுரிமை சாசனத்தையும் மறுகைய்யில் மனிதாபிமான யுத்தத்தையும் நடத்தினோம் என்பதையும் நம்புவதற்கில்லை. 

நடத்தப்பட்டது அப்பட்டமான இனக்கொலை. அது புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, சிங்களத்தால் நடத்தித்தான் முடிக்கப்பட்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

யுத்தத்தின் இழப்புகளைக் காட்டி சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முயன்றிருக்கலாம் என்பது ஓரளவிற்கு உண்மைதான். அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் தம்முடனிருந்தால், சிலவேளை தாக்குதலின் தீவிரத்தையாவது குறையுங்கள் என்று சிங்களத்தின் மீது அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், புலிகளாகவிருந்தால் என்ன, பொதுமக்களாக இருந்தாலென்ன, கொல்லப்படுவது தமிழர்களாக இருந்தால்ச் சரி என்கிற மனநிலையில் இருக்கும் சிங்கள ராணுவத்திற்கு புலிகளின் எந்த முயற்சியும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை என்பதே உண்மை.

எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படியான வலுவோ அல்லது பலமோ அவர்களிடம் அப்போது முற்றாக இல்லாமல்ப் போயிருந்தது என்பதே உண்மை.

தெரிவு என்று வரும்போது, மக்களை வெளியேற விட்டு விட்டு, கடைசிச் சமரை செய்திருக்கலாம். 

ஆனால், இறுதியில் நடந்ததும் அதுதானே? மக்கள் வெளியேறுவதை இறுதியில் தடுக்காமல் விட்ட புலிகள், மக்களுடன் மக்களாக தமது உறுப்பினர்களையும் சரணடயச் சொல்லியிருந்தார்கள். 

இறுதியில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள், சண்டையிட்டவர்களும் கொல்லப்பட்டார்கள். 

ரஞ்சித், நான் இயலுமை என்று சொன்னது போர் செய்து காக்கும் இயலுமையை அல்ல! மக்களைப் போக விடும் முடிவைப் புலிகளே எடுத்திருக்க வேண்டும்! இப்படியான மக்களைப் பணயம் வைத்து யுத்தத்தின் போக்கை மாற்ற நினைத்தது கிட்டத் தட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஆப்கானிலும் சிரியாவிலும் செய்த வேலைக்கு ஒப்பானது! உங்கள் இறுதியில் போக விட்டார்கள் என்பது நான் பல புலி apologists சொல்லக் கேட்கும் ஒரு மிக நொய்மையான வாதம்! மே 17 க்கு அண்மையில், புலிகளே சில எல்லைகளைக் காக்க முடியாமல் போன பின்னர் மக்களாகவே வெளியேறினார்கள்! புலிகள் கதவைத் திறந்து "போய் வாருங்கள்" என்று யாரையும் அனுப்பி வைக்கவில்லை! வந்த எல்லாரும் கொல்லப் பட்டார்களா? வெள்ளைக் கொடியுடன் வந்த தலைவர்களும், பஸ்ஸில் ஏற்றி போன போராளிகளும் மக்களும் கொல்லப் பட்டார்கள் காணாமல் போனார்கள்! மிகுதி மக்கள் பெருந்தொகையினர் முகாம்களில் உழன்று பின்னர் விடுவிக்கப் பட்டனர். வெளியே வந்து கொல்லப் பட்ட மக்களை விட உள்ளே புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்து தாக்குதலில் இறந்த மக்கள் அதிகம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொல்கிறீர்களா?

இந்த "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்பது எங்கே இருந்து வருகிறது எனத் தெரியவில்லை! புலிகள் திட்டமிட்டு மக்களை போக விடாமல் தடுத்தார்கள்! இருந்த மக்களில் இருந்து இளையோரை கட்டாயமாக இணைத்து முன்னரங்கில் canon fodder ஆக சாகக் கொடுத்தார்கள்! தப்பியோட முற்பட்ட மக்கள் அல்லது புதிய போராளிகள் புலிகளால் சுடப்பட்ட சம்பவங்களும் நடந்தன! இவையெல்லாம் "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்ற வசனத்தினால் எப்படி மறைக்கப் பட்டிருக்கின்றன என உங்களுக்குப் புரிகிறதா?

28 minutes ago, ஏராளன் said:

மக்களை பிணையாக வைத்திருந்தார்களா? இல்லை மக்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு சென்றார்களா?
தங்களால் பாதுகாக்க முடியாத நிலை வந்தபோது மக்களை வெளியேற சொல்லி போரிட்டு மடிந்தவர்கள் யார்?

இவ்வளவு மக்கள் உயிரோடு மீண்டு வந்தார்களே அது எப்படி?

அப்படியா? இதெல்லாம் உங்கள் கனவில் நடந்ததா? உங்கள் கனவை நம்பவும், நிஜமாக ஏற்றுக் கொள்ளவும் உங்களுக்கு உரிமையுண்டு! எனக்கு அதை நம்பிப் பதில் கொடுக்கக் கடப்பாடெதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மனசில பட்டத கேட்டன் அண்ணா!
அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை.
நான் கண்டது கனவு என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களைக் கொல்லவேண்டும் என்கிற தேவை புலிகளுக்கு எந்த விதத்திலும் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. எவர்களைக் காப்பதற்காக பல்லாயிரம் வீரர்களைக் காவுகொடுத்தார்களோ, அவர்களையே கொல்லுமளவிற்கு அவர்கள் கீழிறங்க வேண்டிய அவசியம் இல்லை.

தம்முடன் மக்களும் இருக்கவேண்டும் என்று ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்ப்பது வியப்பில்லை. தமக்கு அரணாக, தமது புதிய வீரர்களுக்கான வழங்கலாக, தம்மீதான அழுத்தத்தினைக் குறைக்கக் கூடிய காரணியாக மக்களை அவர்கள் பார்த்திருக்கலாம் என்பதையும் மறைப்பதற்கில்லை. 

ஆனால், சிங்களமும், ஐ. நா வும், சர்வதேசமும் சொல்லிவந்ததுபோல பொதுமக்களை தமது அரணாக வைத்து பின்னாலிருந்து புலிகள் சுடுகிறார்கள், அதனால் ஒரு கைய்யில் ஐ. நா மனிதவுரிமை சாசனத்தையும் மறுகைய்யில் மனிதாபிமான யுத்தத்தையும் நடத்தினோம் என்பதையும் நம்புவதற்கில்லை. 

நடத்தப்பட்டது அப்பட்டமான இனக்கொலை. அது புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, சிங்களத்தால் நடத்தித்தான் முடிக்கப்பட்டிருக்கும். 

ரஞ்சித், புலிகள் மக்களின் உயிரை தங்கள் கேடயமாகவும் வெற்றி வாய்ப்பாகவும் பயன் படுத்த வேண்டிய நிலைக்குக் கீழிறங்கிய பின்னர் தான் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் இப்போது! இதில் அவசியம் இருக்கவில்லை இருந்தது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத வாதம்! இதையெல்லாம் எங்கள் நலன் மீது அக்கறை செலுத்த எந்தக் கடப்பாடும் இல்லாத தரப்புகள் மீது சாட்டி விட்டு வரலாற்றை பிழையாக பதிவு செய்ய வேண்டிய தேவை ஏன் இப்போது வந்தது என்று தான் விளங்கவில்லை! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ரஞ்சித், நான் இயலுமை என்று சொன்னது போர் செய்து காக்கும் இயலுமையை அல்ல! மக்களைப் போக விடும் முடிவைப் புலிகளே எடுத்திருக்க வேண்டும்! இப்படியான மக்களைப் பணயம் வைத்து யுத்தத்தின் போக்கை மாற்ற நினைத்தது கிட்டத் தட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஆப்கானிலும் சிரியாவிலும் செய்த வேலைக்கு ஒப்பானது! உங்கள் இறுதியில் போக விட்டார்கள் என்பது நான் பல புலி apologists சொல்லக் கேட்கும் ஒரு மிக நொய்மையான வாதம்! மே 17 க்கு அண்மையில், புலிகளே சில எல்லைகளைக் காக்க முடியாமல் போன பின்னர் மக்களாகவே வெளியேறினார்கள்! புலிகள் கதவைத் திறந்து "போய் வாருங்கள்" என்று யாரையும் அனுப்பி வைக்கவில்லை! வந்த எல்லாரும் கொல்லப் பட்டார்களா? வெள்ளைக் கொடியுடன் வந்த தலைவர்களும், பஸ்ஸில் ஏற்றி போன போராளிகளும் மக்களும் கொல்லப் பட்டார்கள் காணாமல் போனார்கள்! மிகுதி மக்கள் பெருந்தொகையினர் முகாம்களில் உழன்று பின்னர் விடுவிக்கப் பட்டனர். வெளியே வந்து கொல்லப் பட்ட மக்களை விட உள்ளே புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்து தாக்குதலில் இறந்த மக்கள் அதிகம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொல்கிறீர்களா?

இந்த "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்பது எங்கே இருந்து வருகிறது எனத் தெரியவில்லை! புலிகள் திட்டமிட்டு மக்களை போக விடாமல் தடுத்தார்கள்! இருந்த மக்களில் இருந்து இளையோரை கட்டாயமாக இணைத்து முன்னரங்கில் canon fodder ஆக சாகக் கொடுத்தார்கள்! தப்பியோட முற்பட்ட மக்கள் அல்லது புதிய போராளிகள் புலிகளால் சுடப்பட்ட சம்பவங்களும் நடந்தன! இவையெல்லாம் "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்ற வசனத்தினால் எப்படி மறைக்கப் பட்டிருக்கின்றன என உங்களுக்குப் புரிகிறதா?

புலிகள் ஆரம்பத்திலிருந்தே மக்களை மனிதக் கேடயங்களாகக் வைத்திருந்தார்கள் என்று நம்புகிறீர்களா?? அப்படியில்லை என்பதுதான் உண்மை.

சுமார் நான்கு லட்சம் மக்களை சிலநூறு புலிகளால் எப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கமுடியும் என்பதையும் நினைத்துப் பார்த்தீர்களா? 

ஆனால், பலவந்தமாக ஆட்களை இணைத்தது, பயிற்சியில்லாமல் முன்னரங்கிற்கு அனுப்பியது, கடலைக் கடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதென்பவை நடந்தவைதான். அதில் மறுபேச்சிற்கு இடமில்லை. 

போராட்டத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்லமுடியும் என்கிற ஒரு நப்பாசை புலிகளுக்கு இறுதிவரை இருந்திருக்கலாம். அதன் காரணமாக மக்களைத் தம்முடன் வைத்திருக்க முயன்றிருக்கலாம்.

வெளியே இருந்த மக்களைவிட, உள்ளேயிருந்தவர்கள்தான் அதிகம் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், உள்ளேயிருந்தவர்களை கணக்கு வழக்கின்றி ராணுவத்தால் கொல்லமுடிந்தது, சரணடைந்து முகாம்களில் இருந்தவர்களைக் கொல்வதென்பது புலிகளோடு உள்ளேயிருந்தவர்களைக் கொல்வதுபோல இலகுவாக இருக்கவில்லை என்பதே எண்ணிக்கை குறைவானதற்குக் காரணமேயன்றி, ராணுவம் நல்லவர்களாக இருந்தமையால் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

மனசில பட்டத கேட்டன் அண்ணா!
அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை.
நான் கண்டது கனவு என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?!

தம்பி ஏராளன், இதில் என்ன கஷ்டம்?  இங்கே நான் சொல்லும் தகவல்கள் போர் நடந்த சம காலத்திலேயே வெளியே வந்த தகவல்கள், பின்னர் புலிகளுடன் இருந்த போராளிகள் மக்களாலேயே நூல்களாகவும் ஆவணங்களாகவும் பதிவானவை. இதை இன்னும் நம்பாமல் சந்தேகிப்போரும் மறுத்துரைப்போரும் கனவில் இருக்கிறார்கள் என்று ஊகிப்பது கடினமா? ஆனால் நீங்கள் தனியே இல்லை! பல பேர் இப்படியான கனவில் இருக்கிறார்கள்! போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது, அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளின் வாசல் படிகளில் ஏறி "மக்களைப் பாதுகாருங்கள்" என்று வேண்டியவர்களில் நானும் ஒருவன். அந்த நேரம் அவர்கள் "புலிகள் மக்களைப் பணயமாக வைத்திருக்கிறார்கள், அதுவும் பிரச்சினை" என்று சொன்னதை நானும் மறுத்திருக்கிறேன், அப்ப நான் அதை நம்பாத கனவில் இருந்தேன். பின்னர், உள்ளே இருந்து தப்பி வந்த வன்னி மக்கள் உறவுகள் மூலம் அறிந்த போது, கனவு கலைந்து போனது!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இதையெல்லாம் எங்கள் நலன் மீது அக்கறை செலுத்த எந்தக் கடப்பாடும் இல்லாத தரப்புகள் மீது சாட்டி விட்டு வரலாற்றை பிழையாக பதிவு செய்ய வேண்டிய தேவை ஏன் இப்போது வந்தது என்று தான் விளங்கவில்லை! 

நான் எழுதியது ஐ. நா இறுதிப்போரின்போது, புலிகளை அழிப்பதற்கு எவ்வளவு விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதை விளக்கத்தான். 

ஐ. நா வோ அல்லது போரின் முக்கிய பங்குதாரர்களோ சிங்கள ராணுவத்தின்மீதும், அரசின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தால் இந்த மனித அழிவு நடந்திருக்காது என்பதை விளக்கத்தான்.

புலிகள் தமிழர்களைப் பலியிட்டார்கள் என்னும் சரித்திரத்தை எழுதத் துடிக்கும் நீங்கள் அதற்கு முன்னரான சரித்திரத்தையும் சேர்த்தே எழுதுங்கள். அப்போதுதான் சரித்திரம் சரியாக இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பின்னாலிருந்து தமிழர்களின் அவலங்களைப் பற்றிய சரித்திரத்தை மறந்துவிட்டு, புலிகள்தான் 2009 இல் மக்களைக் கொன்றுகுவித்தார்கள் என்றும் சரித்திரம் எழுதுவது எனக்குச் சரியாகப் படவில்லை.

புலிகள் மீதான உங்களின்கோபம் சிங்களத்தின் இனக்கொலையை நியாயப்படுத்துமளவிற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

புலிகள் ஆரம்பத்திலிருந்தே மக்களை மனிதக் கேடயங்களாகக் வைத்திருந்தார்கள் என்று நம்புகிறீர்களா?? அப்படியில்லை என்பதுதான் உண்மை.

சுமார் நான்கு லட்சம் மக்களை சிலநூறு புலிகளால் எப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கமுடியும் என்பதையும் நினைத்துப் பார்த்தீர்களா? 

ஆனால், பலவந்தமாக ஆட்களை இணைத்தது, பயிற்சியில்லாமல் முன்னரங்கிற்கு அனுப்பியது, கடலைக் கடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதென்பவை நடந்தவைதான். அதில் மறுபேச்சிற்கு இடமில்லை. 

போராட்டத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்லமுடியும் என்கிற ஒரு நப்பாசை புலிகளுக்கு இறுதிவரை இருந்திருக்கலாம். அதன் காரணமாக மக்களைத் தம்முடன் வைத்திருக்க முயன்றிருக்கலாம்.

வெளியே இருந்த மக்களைவிட, உள்ளேயிருந்தவர்கள்தான் அதிகம் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், உள்ளேயிருந்தவர்களை கணக்கு வழக்கின்றி ராணுவத்தால் கொல்லமுடிந்தது, சரணடைந்து முகாம்களில் இருந்தவர்களைக் கொல்வதென்பது புலிகளோடு உள்ளேயிருந்தவர்களைக் கொல்வதுபோல இலகுவாக இருக்கவில்லை என்பதே எண்ணிக்கை குறைவானதற்குக் காரணமேயன்றி, ராணுவம் நல்லவர்களாக இருந்தமையால் அல்ல. 

ரஞ்சித், ஆரம்பம் என்றால் எப்போது? பாஸ் நடைமுறை எப்போது நடைமுறைக்கு வந்தது என்று சொல்லுங்கள்? அதை விடுங்கள்! போர் உக்கிரமான பொழுதில் தப்பியோட முற்பட்ட மக்களைத் தடுத்ததே உயிர்ப்பலிகளுக்கு பிரதான காரணம்! அது நிலப் பரப்புக் குறைந்து வரும் போது அதிகமாகியது!

இந்த நூறு புலிகள் இலட்சம் மக்கள் கதைகளெல்லாம் உங்கள் புத்தி சாலித் தனத்தையே நீங்கள் கேலி செய்வது போல இருக்கிறது! எல்லைகளில் துவக்கோடு நிற்கிற நூறு புலிகள் தான் தடுத்தனர், சுட்டனர். சில இடங்களில் மக்கள் திருப்பித் தாக்கியதும் நடந்தது! தன் மகளை வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்ல வந்த புலிகளைத் தாக்கிய முதிய தந்தையொருவர், அதே இடத்தில் மற்றோருக்குப் பாடமாக பச்சை மட்டையால் பின் இடுப்பில் தாக்கப் பட்டார்! கால்கள் பலவீனமாகி தொழில் இன்றி இப்போது வவுனியாவில் வசிக்கிறார்! மகளும் இல்லை! இப்படி பல கதைகள்! ஆயுதத்துடன் நிற்கும் புலிகளுடன் மக்கள் மோதி தப்பிச் செல்ல எந்த முன்முயற்சியும் எடுக்காமல் இந்த மாதிரியான தண்டனைகள் உதவின! 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

நான் எழுதியது ஐ. நா இறுதிப்போரின்போது, புலிகளை அழிப்பதற்கு எவ்வளவு விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதை விளக்கத்தான். 

ஐ. நா வோ அல்லது போரின் முக்கிய பங்குதாரர்களோ சிங்கள ராணுவத்தின்மீதும், அரசின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தால் இந்த மனித அழிவு நடந்திருக்காது என்பதை விளக்கத்தான்.

புலிகள் தமிழர்களைப் பலியிட்டார்கள் என்னும் சரித்திரத்தை எழுதத் துடிக்கும் நீங்கள் அதற்கு முன்னரான சரித்திரத்தையும் சேர்த்தே எழுதுங்கள். அப்போதுதான் சரித்திரம் சரியாக இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பின்னாலிருந்து தமிழர்களின் அவலங்களைப் பற்றிய சரித்திரத்தை மறந்துவிட்டு, புலிகள்தான் 2009 இல் மக்களைக் கொன்றுகுவித்தார்கள் என்றும் சரித்திரம் எழுதுவது எனக்குச் சரியாகப் படவில்லை.

புலிகள் மீதான உங்களின்கோபம் சிங்களத்தின் இனக்கொலையை நியாயப்படுத்துமளவிற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

எங்கே இப்படிப்பட்ட என் நியாயப் படுத்தல் இருக்கிறது என்று நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் விலகி விடுகிறேன் யாழில் இருந்து!

இது உணர்ச்சி வசப்பட்ட கோபம் அல்ல! ஒரு பெரும் தவறு அப்பாவிகள் மேல் அவர்களைப் பாதுகாக்கும் முடிவை எடுக்கும் சக்தியுடையோரால் இழைக்கப் பட்டிருக்கிறது! குற்றமிழைத்தோர் இன்றில்லை, எனவே தண்டனை பற்றிய தேவையும் இல்லை! ஆனால், குற்றத்திற்காளானவர்கள் இருக்கிறார்கள்! புலிகளை புனிதப் படுத்தும் வகையில் நாம் சம்பவங்களையும் வரலாற்றையும் மீள்வியாக்கியானம் செய்யும் போது, அப்படிப் பாதிக்கப் பட்டோரை இன்னொருமுறை காலில் போட்டு மிதிப்பது மாதிரி இருக்கிறது. இப்படியான மீள் வியாக்கியானங்களும் நொய்மையான விளக்கங்களும் அவசியம் அற்றவை என்பதே என் கருத்து. ஐ.நாவும் மற்றையோரும் கள்ள மௌனம் சாதித்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், கோடரியின் கூர்மையான பாகமாக புலிகள் மாறி விட்டனர் என்பது என் கருத்து! இதை நான் சொன்னால், அது சிங்கள அரசை சுத்தவாளிகள் என்பதாகப் புரிந்து கொள்வது இங்கே பலரது குறைபாடு, இதுக்கு நான் பொறுப்பல்ல! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ரஞ்சித், ஆரம்பம் என்றால் எப்போது? பாஸ் நடைமுறை எப்போது நடைமுறைக்கு வந்தது என்று சொல்லுங்கள்? அதை விடுங்கள்! போர் உக்கிரமான பொழுதில் தப்பியோட முற்பட்ட மக்களைத் தடுத்ததே உயிர்ப்பலிகளுக்கு பிரதான காரணம்! அது நிலப் பரப்புக் குறைந்து வரும் போது அதிகமாகியது!

இந்த நூறு புலிகள் இலட்சம் மக்கள் கதைகளெல்லாம் உங்கள் புத்தி சாலித் தனத்தையே நீங்கள் கேலி செய்வது போல இருக்கிறது! எல்லைகளில் துவக்கோடு நிற்கிற நூறு புலிகள் தான் தடுத்தனர், சுட்டனர். சில இடங்களில் மக்கள் திருப்பித் தாக்கியதும் நடந்தது! தன் மகளை வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்ல வந்த புலிகளைத் தாக்கிய முதிய தந்தையொருவர், அதே இடத்தில் மற்றோருக்குப் பாடமாக பச்சை மட்டையால் பின் இடுப்பில் தாக்கப் பட்டார்! கால்கள் பலவீனமாகி தொழில் இன்றி இப்போது வவுனியாவில் வசிக்கிறார்! மகளும் இல்லை! இப்படி பல கதைகள்! ஆயுதத்துடன் நிற்கும் புலிகளுடன் மக்கள் மோதி தப்பிச் செல்ல எந்த முன்முயற்சியும் எடுக்காமல் இந்த மாதிரியான தண்டனைகள் உதவின! 

வன்னியிலிருந்து வந்த உங்களின் உறவுகளின் அனுபவங்களைப் போலவே எனக்கும் சிலர் சொன்னார்கள். 

2008 இல் போர் தொடங்கிய காலப்பகுதியில் புலிகள் பின்வாங்கத் தொடங்கியபோது, மக்களும் அவர்களுடன் சேர்ந்து சென்றதாக நான் கேள்விப்பட்டேன். நான் முன்னரே சொன்னதுபோல, மீண்டும் பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தமையால் இது நடந்தது. ஆனால், போர் நெருங்கிவந்து, இனி சாத்தியமில்லை என்கிற நிலை வந்தபோதுதான், மக்கள் வெளியேறும் முடிவினை எடுத்தார்கள். 

பதின்ம வயதினரைக் கட்டாயப்படுத்தி போர்முனைக்கு இட்டுச் சென்றதும், பெற்றோருடனான புலிகளின் சண்டைகளும் நான் கேள்விப்பட்டதுதான். அதை மறுக்கவில்லை. புலிகளோடு இருந்தபடியினால்த்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நம்பவில்லை. ஏனென்றால், தமிழர்கள் என்றும் புலிகளென்றும் சிங்கள ராணுவம் பிரித்துப் பார்த்ததாக நான் அறியவில்லை. தமிழர்கள் எல்லாம் புலிகள் - புலிகள் எல்லாம் தமிழர்கள், ஆகவே எவரைக் கொன்றாலும் தகும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. 

புலிகள் செயற்பட்ட விதத்தை சரியென்று வாதிடுவது எனது நோக்கமில்லை.  2009 இல் அவர்கள் நடந்துகொண்ட முறை மட்டுமல்லாது, இன்னும் பல தருணங்களில் அவர்களின் நடத்தைகள் பற்றியும் விமர்சிக்கப்பட வேண்டும்.

நான் இங்கு சொல்ல வந்தது ஐ. நா எனும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டிய ஒரு அமைப்பு, எவ்வாறு ஒரு இனக்கொலை அரசுடன் சேர்ந்து ஒரு சிறுபான்மையினத்தை அழிக்கத் துணை போனதென்பதுபற்றி விளக்கத்தான். 

ஐ. நா நடந்துகொண்ட முறையினை நான் விமர்சிப்பது தவறு, ஏனென்றால், ஐ நா எனும் அமைப்போ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளோ எம்மீது அக்கறைகொள்ளத் தேவையில்லை, அவர்கள் மீது நாம் பழியைப் போட முடியாது என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் எமது போராட்டத்தில் எந்தவிதத்திலும் பங்கினைச் செலுத்தியிருக்கக் கூடாது.

பேச்சுவார்த்தைக்கு அணுசரணையாளர்களாக வந்தது முதல், எம்மைத் தடைசெய்து, சிங்களத்திற்கு பண, ஆயுத, சர்வதேச அணுசரணை வழங்கியதைத் தொடர்ந்து, இறுதி யுத்தத்தைச் செய்யவும், மறைக்கவும் என்று எதையுமே செய்திருக்கத் தேவையில்லையே? அப்படிச் செய்துவிட்டு, அவர்கள் மீது பழிபோடவேண்டாம், புலிகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் என்ன செய்வது? 

2 minutes ago, Justin said:

எங்கே இப்படிப்பட்ட என் நியாயப் படுத்தல் இருக்கிறது என்று நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் விலகி விடுகிறேன் யாழில் இருந்து!

ஜஸ்டின்,

நீங்கள் சிறந்த ஒரு எழுத்தாளர், அறிவாற்றல் மிக்கவர். நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

அடுத்தது, நீங்கள் இனவழிப்பை நியாயப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நான் சொல்ல வந்தது, புலிகளை விமர்சிக்கும் பொழுது, சிலவேளைகளில் நீங்கள் சிங்களம் செய்த இனவழிப்பை மறந்துவிடுவீர்கள் என்பதைத்தான்.

நீங்கள் இதுவரை இனவழிப்பை நியாயப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

வன்னியிலிருந்து வந்த உங்களின் உறவுகளின் அனுபவங்களைப் போலவே எனக்கும் சிலர் சொன்னார்கள். 

2008 இல் போர் தொடங்கிய காலப்பகுதியில் புலிகள் பின்வாங்கத் தொடங்கியபோது, மக்களும் அவர்களுடன் சேர்ந்து சென்றதாக நான் கேள்விப்பட்டேன். நான் முன்னரே சொன்னதுபோல, மீண்டும் பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தமையால் இது நடந்தது. ஆனால், போர் நெருங்கிவந்து, இனி சாத்தியமில்லை என்கிற நிலை வந்தபோதுதான், மக்கள் வெளியேறும் முடிவினை எடுத்தார்கள். 

பதின்ம வயதினரைக் கட்டாயப்படுத்தி போர்முனைக்கு இட்டுச் சென்றதும், பெற்றோருடனான புலிகளின் சண்டைகளும் நான் கேள்விப்பட்டதுதான். அதை மறுக்கவில்லை. புலிகளோடு இருந்தபடியினால்த்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நம்பவில்லை. ஏனென்றால், தமிழர்கள் என்றும் புலிகளென்றும் சிங்கள ராணுவம் பிரித்துப் பார்த்ததாக நான் அறியவில்லை. தமிழர்கள் எல்லாம் புலிகள் - புலிகள் எல்லாம் தமிழர்கள், ஆகவே எவரைக் கொன்றாலும் தகும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. 

புலிகள் செயற்பட்ட விதத்தை சரியென்று வாதிடுவது எனது நோக்கமில்லை.  2009 இல் அவர்கள் நடந்துகொண்ட முறை மட்டுமல்லாது, இன்னும் பல தருணங்களில் அவர்களின் நடத்தைகள் பற்றியும் விமர்சிக்கப்பட வேண்டும்.

நான் இங்கு சொல்ல வந்தது ஐ. நா எனும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டிய ஒரு அமைப்பு, எவ்வாறு ஒரு இனக்கொலை அரசுடன் சேர்ந்து ஒரு சிறுபான்மையினத்தை அழிக்கத் துணை போனதென்பதுபற்றி விளக்கத்தான். 

ஐ. நா நடந்துகொண்ட முறையினை நான் விமர்சிப்பது தவறு, ஏனென்றால், ஐ நா எனும் அமைப்போ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளோ எம்மீது அக்கறைகொள்ளத் தேவையில்லை, அவர்கள் மீது நாம் பழியைப் போட முடியாது என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் எமது போராட்டத்தில் எந்தவிதத்திலும் பங்கினைச் செலுத்தியிருக்கக் கூடாது.

பேச்சுவார்த்தைக்கு அணுசரணையாளர்களாக வந்தது முதல், எம்மைத் தடைசெய்து, சிங்களத்திற்கு பண, ஆயுத, சர்வதேச அணுசரணை வழங்கியதைத் தொடர்ந்து, இறுதி யுத்தத்தைச் செய்யவும், மறைக்கவும் என்று எதையுமே செய்திருக்கத் தேவையில்லையே? அப்படிச் செய்துவிட்டு, அவர்கள் மீது பழிபோடவேண்டாம், புலிகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் என்ன செய்வது? 

அவர்கள் வந்தது உதவி செய்ய ஒரு 50% வீதம், தெற்காசியாவில் கால் பதிக்க ஒரு 50% காரணத்துடன் என நான் நம்புகிறேன். ஆனால், தமிழ் மக்கள் ஐநாவிற்கோ, அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ சோறு போட்டு வளர்க்கவில்லை! எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய சட்ட ரீதியான (legal) கடமை மட்டுமல்ல, தார்மீக ரீதியான (ethical)  கடமை கூட இந்த வெளித்தரப்புகளுக்கு இல்லை! யாருக்குப் போட்டார்கள் சோறு தமிழர்கள்? பதிலை உங்களிடமே விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அவர்கள் வந்தது உதவி செய்ய ஒரு 50% வீதம், தெற்காசியாவில் கால் பதிக்க ஒரு 50% காரணத்துடன் என நான் நம்புகிறேன். ஆனால், தமிழ் மக்கள் ஐநாவிற்கோ, அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ சோறு போட்டு வளர்க்கவில்லை! எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய சட்ட ரீதியான (legal) கடமை மட்டுமல்ல, தார்மீக ரீதியான (ethical)  கடமை கூட இந்த வெளித்தரப்புகளுக்கு இல்லை! யாருக்குப் போட்டார்கள் சோறு தமிழர்கள்? பதிலை உங்களிடமே விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்!

இறுதியாக புலிகளை, செல்லப்பிராணிகளாக்கிவிட்டுச் சென்றுவிட்டீர்கள் ??!! சோறுபோட்டு வளர்த்ததைத்தான் சொல்கிறேன் !!

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியை விட்டு ஐ.நா. அமைப்புக்கள் வெளியேறியபோதே புலிகளை அழிக்க மேற்குநாடுகள் சம்மதம் கொடுத்துவிட்டனர் என்று தெரிந்திருந்தது. ஐ.நா. அமைப்பு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடக்கும்போது பார்வையாளர்களாக இருந்தார்கள்.  யுத்தத்தை தடுத்து நிறுத்த ஆர்வமாக இருக்கவில்லை. மக்களைக் காக்கவும் ஒன்றும் செய்யவில்லை.

இறுதிப் போர்க்காலத்தில் புலிகள் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்து போர் முன்னரங்கில் கொண்டுபோய் விட்டதும், மக்கள் வெளியேற முயற்சித்தபோது தடுத்ததும் சிலரைச் சுட்டுக்கொன்றதும் நடந்தைவதான். 

ஆக மொத்தத்தில் சிறிலங்காவின் போர்ப்படைகள் இறுதியில் செய்த மோசமான இனப்படுகொலையை புலிகளின் தவறுகள் மூலம் சமப்படுத்தத்தான் எல்லோரும் முனைகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இதில் சிங்கள - புலிகள் சமப் படுத்தல் என்று இல்லை! ஆனால், சிங்களப் படைகளின் இனவழிப்பை நாம் சொல்ல சர்வதேசம் நம்ப வேண்டுமென்றால் (நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை!) புலிகளின் தவறால் மக்கள் இறந்ததும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்! என்னைப் பொறுத்த வரை, தமிழர்களின் உயிர் மீது புலிகளுக்கு சிங்களவனை விட நூறு மடங்கு அதிக அக்கறை இருந்திருக்க வேண்டும் அந்த இறுதி யுத்த நேரங்களில்! அதுவே பாரிய தவறாக புலிகளின் 2008/2009 கால நடவடிக்கைகளை அடையாளப் படுத்துகிறது! சிங்களவருக்கு எங்கள் உயிர் மீதான மதிப்பு என்னவென்று அவர்கள் 1958 இலேயே காட்டி விட்டார்களே? பிறகேன் அவர்கள் கொல்வதை நாம் அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்? ஆனால் புலிகள் தங்கள் துப்பாக்கிகளை அப்பாவித் தமிழர் மீது திருப்பியது தான் அதிர்ச்சியானதும் அநியாயமானதும்! இதில் குத்தி முறிய ஒரு காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தில் சார்ள்ஸ் அன்ரனியின் தவறான முடிவுகள் தளபதிகளுக்கே பிடிக்காமல் இருந்தன என்றும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தனர் என்றும் பீஷ்மர் எழுதியதை படித்துத்தான் இருந்தேன். புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகளின் ஆலோசகர்களும் பெரும் அவலம் நடந்தால்தான் தலையீடு வரும் என்று ‘அறிவுரை’ கொடுத்திருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களை இனவழிப்புச் செய்தவர்கள் சிறிலங்காப் படையினரே. அவற்றை ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று புறந்தள்ளி புதிய வரலாற்றை எழுதமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

புலிகள் இயக்கத்தில் சார்ள்ஸ் அன்ரனியின் தவறான முடிவுகள் தளபதிகளுக்கே பிடிக்காமல் இருந்தன என்றும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தனர் என்றும் பீஷ்மர் எழுதியதை படித்துத்தான் இருந்தேன். புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகளின் ஆலோசகர்களும் பெரும் அவலம் நடந்தால்தான் தலையீடு வரும் என்று ‘அறிவுரை’ கொடுத்திருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களை இனவழிப்புச் செய்தவர்கள் சிறிலங்காப் படையினரே. அவற்றை ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று புறந்தள்ளி புதிய வரலாற்றை எழுதமுடியாது.

இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்! இரண்டு தரப்பையும் மன்னிக்க வேண்டியதில்லை! ஆனால் ஒரு தரப்பு மட்டுமே இன்றும் இருப்பதால் அது தண்டனை பெற வேண்டும்!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை அழித்துவிட்டோம்.

இப்போது அதன் சாம்பலையும் அதிர்வுகளையும்  சுவடுகளையும் அழிக்கவேண்டும்.

அதுதான் புலிவாந்திகளின்  இன்றைய இலட்சியம்.

சரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது எல்லோரும் சம உரிமையுடன் வாழ்வோம் என்று இறுதி 10 வருடங்களில் ஒரு சிங்கள அரசியல்வாதியாவது சொல்லியிருக்கின்றாரா?

புலி என்று சொன்னால் மட்டும் எப்படிப்பட்ட திரியானாலும் கொலரை மேலுக்கு இழுத்து விட்டு வியாக்கியானம் புசத்த வந்துவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.