இரானின் புதிய தலைவர் முன்னுள்ள மிகப்பெரிய சவால் - அமெரிக்கா, இஸ்ரேல் கூறியது என்ன?
பட மூலாதாரம்,AFP via Getty Images
படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி
கட்டுரை தகவல்
லைஸ் டூசெட்
பிபிசி செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் இஸ்லாமிய குடியரசு ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் போது, இதுவரை சோதனைகளை சந்திக்காத ஒருவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
இந்த போரின் முதல் வார தாக்குதல்களில் அவரது தந்தை ஆயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் 56 வயதான மொஜ்தபா காமனெயியை உயர்மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
1979 புரட்சிக்குப் பிறகு இரானின் மூன்றாவது உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் அவர், இஸ்லாமியக் குடியரசு தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போரை எதிர்கொள்ளும் தருணத்தில் பொறுப்பேற்கிறார்.
88 ஷியா முஸ்லிம் மதகுருக்களைக் கொண்ட அமைப்பான நிபுணர்கள் சபையால் (Assembly of Experts) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உடனடியாக வீதிகளில் இறங்கி 'அல்லாஹு அக்பர்' - 'கடவுள் மிகப்பெரியவர்' - என்று முழக்கமிட்டுக் கொண்டாடினர்.
அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் தங்களின் புதிய தலைமைத் தளபதிக்கு தங்களின் 'உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை' சேவை செய்வதாக உறுதி அளித்தன.
அரசுத் தொலைக்காட்சி அவரது பெயரில் ஏவப்பட்ட முதல் ஏவுகணைகளின் படங்களைக் காட்டியது, அதன் பக்கவாட்டில் "உங்கள் சேவையில், செய்யது மொஜ்தபா" என்ற செய்தி எழுதப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் - ஜனவரி மாதம் அவரது தந்தையை 'சர்வாதிகாரி' என்று கண்டித்து அவருக்கு மரணம் கோரி வீதிகளில் திரண்ட எதிர்ப்பாளர்களில் சிலர், நேற்றிரவு (மார்ச் 9) தங்கள் குடியிருப்புகளில் இருந்து 'மொஜ்தபாவுக்கு மரணம்' என்று முழக்கமிடுவதைக் கேட்க முடிந்தது.
போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் இழப்பை இன்னும் நினைத்து வருந்துவோருக்கு, ஒரு கடுமையான ஆட்சி சூழலை இன்னும் கடுமையானதாக மாற்றப்போவதாகத் தோன்றுகிறது.
காமனெயி மற்றும் அவரது அமைப்பின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக அவர்கள் இன்னும் துணிச்சலுடன் நம்புகிறார்கள்.
மொஜ்தபா காமனெயி - யார் இவர்?
மறைந்த ஆயதுல்லாவின் இரண்டாவது மகனான மொஜ்தபா, அவரது தந்தையின் தீவிர பழமைவாத வார்ப்பில் உள்ளவர்.
மொஜ்தபா காமனெயி பல ஆண்டுகளாகத் தனது தந்தையின் நிழலில் பணியாற்றினார்; வெளிப்புற அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களை எதிர்கொள்ளும் போது 'அரசு அமைப்பு' எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் அவர் அறிவார்.
அவர் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்து பணியாற்றியுள்ளார். உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த உடனேயே ஒரு இளைஞனாக அதில் சேர்ந்தார். பின்னர் ஷியா இஸ்லாமிய படிப்புக்கான முதன்மையான மையமாக அறியப்படும் கோம் (Qom) நகருக்குப் படிக்கச் சென்றார்.
1979-இல் புரட்சியைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் நிறுவப்பட்ட ஐஆர்ஜிசி, இப்போது பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஒரு மிகப்பெரிய பொருளாதார சாம்ராஜ்யத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் தளபதிகள் இப்போது முடிவுகளை எடுக்கிறார்கள்.
மொஜ்தபா காமனெயி அவர்களின் வேட்பாளர் என்று கூறப்பட்டது.
இந்தப் போர் இப்போது வெறும் அரசியல் சண்டை மட்டுமல்ல; இது மிகவும் தனிப்பட்ட ரீதியிலானது.
இது பழிவாங்குவதைப் பற்றியதுமாகும்.
உச்ச தலைவரின் வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொஜ்தபா காமனெயி தனது தந்தையை மட்டுமல்லாமல், தனது தாய் மன்சூரே கோஜஸ்தே பாகெர்சாதே, மனைவி ஜஹ்ரா ஹதாத்-ஆடெல் மற்றும் ஒரு மகனையும் இழந்தார்.
அவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த விவரங்களோ அல்லது அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த அறிகுறியும் கூட இல்லை.
பட மூலாதாரம்,EPA/Shutterstock
படக்குறிப்பு,தெஹ்ரானில் நடந்த பேரணியின் போது இரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயியின் படத்தை ஏந்திய ஒரு பெண். (9 மார்ச் 2026)
அமெரிக்கா, இஸ்ரேல் கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். அவர் தனது உத்தரவுகளை எதிர்ப்பவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறார்.
காமனெயியின் 'அரசியல் வாரிசு' குறித்து ஊகங்கள் பரவியபோது, அலி காமனெயி மகனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டிரம்ப் பல முறை அறிவித்தார்.
இப்போது மொஜ்தபா காமனெயி 'நீண்ட காலம் நீடிக்க மாட்டார்' என்று டிரம்ப் எச்சரிக்கிறார். மொஜ்தபா இஸ்ரேலின் இலக்காகவும் இருக்கிறார், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் 'மொஜ்தபா சந்தேகத்திற்கு இடமில்லாத இலக்கு' என்று விவரிக்கிறார்.
எனவே மொஜ்தபா காமனெயி இன்னும் சிறிது காலம் மறைந்திருக்கலாம். இது அவரைச் சுற்றியுள்ள மர்மத்தை இன்னும் அதிகப்படுத்தும்.
அவர் பகிரங்கமாகப் பேசியதற்கான எந்தப் பதிவும் இல்லை, அவர் அரிதாகவே பொது இடங்களில் தோன்றியுள்ளார். அவர் இதுவரை முறையாக எந்த அரசாங்கப் பதவிகளையும் வகித்ததில்லை. அவரது புகைப்படம் இரான் எங்கும் நிறைந்திருந்த அவரது தந்தையின் உருவப்படங்களுடன் ஒருபோதும் தோன்றியதில்லை.
1979 புரட்சியில் தூக்கியெறியப்பட்ட முடியாட்சியின் பரம்பரை முறையைத் தவிர்க்க விரும்பி, அவரை வாரிசுப் பொறுப்பிலிருந்து மறைந்த ஆயதுல்லா காமனெயி விலக்கி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான இரானியர்கள் அவரது குரலைக் கேட்டதே இல்லை.
ஆனால் அவரது அரசியல் பார்வை குறித்த சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
மொஜ்தபா காமனெயி எழுச்சி
2005-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பழமைவாத வேட்பாளர் அஹ்மதிநிஜாத்தின் தேர்தல் வெற்றியை ஒரு முக்கிய தருணமாக இப்போது குறிப்பிடுகிறார்கள். அவரது வெற்றியை உறுதி செய்ய மொஜ்தபா காமனெயி திரைமறைவில் சதி செய்ததாக சீர்திருத்தவாதப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டினர்.
2009-இல் அஹ்மதிநிஜாத் சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது 'பச்சை புரட்சி' (Green Revolution) என்று இப்போது நினைவுகூரப்படும் போராட்டங்களைத் தூண்டியது. முக்கிய சீர்திருத்தவாத அரசியல்வாதிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர், அவர்கள் இன்றும் அதே நிலையில் உள்ளனர்.
இரானின் புதிய உச்ச தலைவருக்கான பிற போட்டியாளர்களில் ஒருவர் வேறுபட்ட புரட்சிகர சிந்தனைகளுக்காக அறியப்படும் ஒரு வேட்பாளர் ஆவார். முதல் உச்ச தலைவர் ஆயதுல்லா ருஹொல்லா கோமேனியின் பேரனான ஹசன் கோமேனி, சீர்திருத்தவாதிகளின் போக்கில் இருந்தவர்.
காமனெயியின் எழுச்சி, இரானின் பிளவுபட்ட அரசியல் சூழலில் ஒப்பீட்டளவில் மிதவாதிகளாக இருக்கும் சீர்திருத்தவாதிகள் (தற்போதைய அதிபர் மசூத் பெசெஷ்கியன் உட்பட) இப்போது இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது.
அரசியல் ரீதியாக, காமனெயி புரட்சிகர பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய இரண்டு முன்னணி நபர்களுக்கு நெருக்கமானவர். உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசியல்வாதி அலி லாரிஜானி மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியும் அரசியல்வாதியுமான முகமது பாகர் கலிபாஃப், இவர் இப்போது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக உள்ளார்.
மறைந்த ஆயதுல்லா அலி காமனெயியின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளான இவர்கள், சமீபத்திய மாதங்களின் உயர்மட்டத் திட்டமிடலில் பெரும் பொறுப்புகளை ஏற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இதில் கத்தார் மூலம் டிரம்பின் தூதர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது மற்றும் இரானின் மிகப்பெரிய எதிரிகளின் ராணுவ மற்றும் உளவுத்துறை வலிமையுடன் ஒரு முழுமையான மோதலுக்குத் தயாராவது ஆகியவை அடங்கும்.
கடந்த மாதம் இரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான (கைவிடப்பட்ட) பேச்சுவார்த்தைகளின் போது லாரிஜானியைச் சந்தித்த ஒரு மேற்கத்திய அதிகாரி, அவரை ஒரு யதார்த்தவாதி (pragmatist) என்று விவரித்தார்.
தங்கள் அமைப்பைப் பாதுகாப்பதற்காகத் தங்களை 'கொள்கையாளர்கள்' என்று அழைத்துக் கொள்ளும் கடும்போக்குவாதிகள் மைய இடத்தைப் பிடித்துள்ள இந்தத் தருணத்தில், இது இன்னும் வேறு திசையில் திரும்பக்கூடும் என்று கூறும் குரல்களும் உள்ளன.
மொஜ்தபா காமனெயிக்கு நெருக்கமான ஒரு அரசியல்வாதியான அப்துல்ரேசா தவாரி - பொது அறிக்கைகளிலும் நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய நேர்காணலிலும் 'அவரை மிகவும் முற்போக்கானவர்' என்றும் 'கடும்போக்குவாதிகளை ஓரம்கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பவர்' என்றும் விவரித்தார்.
ஆட்சியில் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்த அதே வேளையில், நாட்டில் சமூக சுதந்திரங்களை கணிசமாக விரிவுபடுத்திய சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைப் போன்றவர் அவர் என்றும் அப்துல்ரேசா தவாரி கூறினார்.
இப்போது, அத்தகைய பெரிய மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. குறிப்பாக இந்த அபாயகரமான மற்றும் கணிக்க முடியாத காலங்களில்.
மத்திய கிழக்கை உலுக்கி, அதன் அண்டை நாடுகளுடனான உறவுகளை அழித்து, நீண்டகால பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமடைந்து வரும் மோதலின் பிடியில் இரான் தற்போது சிக்கியுள்ளது.
மொஜ்தபா காமனெயியின் எழுச்சி 'மிக மோசமான ஒரு சூழல்' என டிரம்பால் குறிப்பிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் படைகள் இதனை முறியடிக்க தங்களின் சிறந்த வாய்ப்பாக அவரைக் கருதுகின்றன.
https://www.bbc.com/tamil/articles/clyx8zl0v2xo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.