Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலையின் விரிதளங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்கள் - 01

எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி

Tuesday, 15 May 2007

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும்.

(பிரான்சில் வசித்துவரும் ஊடகவியலாளர் பரணிகிருஸ்ணரஜனி...தன் வாழ்க்கையை ஒரு வரலாற்று நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஈழத்தமிழ்ச் சூழல் குறித்த தார்மீகக் கேள்விகளையும், பெண்ணியம், உளவியல், பண்பாடு, விடுதலை சார்ந்த அறவியலையும் முன்வைத்து இவ் வரலாற்று நூலை அவர் எழுதி வருகிறார். அந்நூல் விரைவில் முழுத்தொகுப்பாக வெளிவர இருக்கிறது.

இந் நூலில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை குறித்தும் அவரது 'விடுதலை' நூல் குறித்தும் மிக ஆழமாக, விரிவாக எழுதியிருக்கிறார். விடுதலை நூல்பற்றிய அப்பகுதியை சில மாற்றங்களுடன் உங்களுக்காக இங்கு தருகிறோம்.)

01.

நான் யார்? ஒரு மனிதன் என்றைக்கு இந்தக் கேள்வியை எதிர்கொள்ளத் தொடங்குகிறானோ அன்றே சமூகத்தில் அவனுக்கென்று ஒரு இடமும், இருப்பும், தனித்த ஒரு அடையாளமும் சேர்ந்தே உருவாகிவிடுகின்றன.

இன்று உலகம் போற்றும் மாமேதைகளும், தத்துவவாதிகளும், கோட்பாட்டாளர்களும், இறையியலாளர்களும் தமது வாழ்வின் ஒரு தருணத்தில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டதன் விளைவாகத்தான் தோற்றம் பெற்றார்கள் - சமூகத்தில் மேற்படி நிலையை அடைந்தார்கள்.

இந்தக் கேள்வியின் எல்லா இடுக்குகளிலும் பயணம் செய்து அதைத் தீவிரமாக எதிர்கொண்டவர்களே பின்னாளில் உலகம் போற்றும் மேதைகளாயினர். இந்தக் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் சாதாரண மனிதர்களாகி மறைந்து போயினர்.

சாதாரண தனிமனித வாழ்வின் இயங்கியல் போக்கின் ஒரு கட்டத்தில் இயல்பான பொது வாழ்விலிருந்து அவர்களைத் துண்டித்துக் கொண்டது இந்தச் சமூகம். அவர்களின் வாழ்விற்கான சௌகர்யமான எல்லாப் பாதைகளையும் அடைத்துவிட்டு வேறொரு பாதை திறக்கப்பட்டது. நிராகரிப்பு சில சமயம் கட்டங்கட்டமாகவும் பல தருணங்களில் முழுவதுமாகத் திணிக்கப்பட்டது. அது தந்த வலி மனித உடலில் ஆன்மாவின் இருப்பில் சலனத்தை ஏற்படுத்தியது. விளைவு,மேற்கண்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இதை எதிர்கொள்வதற்குள் இக் கேள்வியின் உக்கிரம் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர். பலர் மனப்பிறழ்வைச் சந்தித்து மனநோயாளிகளாகினர். பலர் விரக்தியின் விளிம்பில் நின்று குற்றங்களை நோக்கி ஓடினர்.

உலகில் மனிதம், மனித விடுதலை, மனித வாழ்வு குறித்த நெறிமுறைகளும் தத்துவங்களும் உருவான கதையின் சோகமான பின்புலம் இது.

கடந்த ஐந்து வருடங்களாக என்னைப் பாடாய்ப்படுத்திய இக்கேள்வி கடந்த வருடம் இதே நாட்களில் என் ஆன்மாவையும் உடலையும் ஒருங்கே அசைத்துப் பார்த்தது. விபரீதத்தை உணர்ந்து சாதாரணமனிதன் போல் தப்பிக்க முயன்றேன். அப்போதுதான் ஒரு பேருண்மை தெளிவாகப் புரிந்தது. நான் தப்புவதற்கான எல்லாப் பாதைகளும் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதென்பதை......

விளைவு, இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்வு இஸ்டம் போல் என்னைத் தூக்கியடித்து விளையாடியது. மைதானத்தில் விளையாட்டு வீரர்களின் காலடியில் கிடந்த பந்தின் நிலையானது என் கதை. வாழ்வின் விளிம்பு வரை துரத்தப்பட்டேன். சக மனிதர்கள் குறித்த - மனித வாழ்வு குறித்த நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கினேன்.

எனது உயரிய நேசிப்புக்குரியவர்களே எனக்கெதிராகத் திரும்பியபோது எனது ஆன்மா நையத்தொடங்கியது. ஆனால் எனது வாழ்வியற் செல்நெறியினூடாக அவர்கள் மீது நான் வைத்திருந்த பேரன்பும் பெருங்காதலும் இதனால் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. என்னளவிலான அவர்கள் மீதான எனது எதிர்வினை சில மனவருத்தங்கள், சில கோப வெளிப்பாடுகள், மனச் சோர்வால் ஏற்பட்ட மூர்க்கத்தனமான வார்த்தைப் பிரயோகங்கள்..... அவ்வளவே. இதில் எந்தத் திட்டமிடலும் இல்லை. ஆனால் அவர்களின் ஆழ்ந்த மௌனமும் எதிர்வினையும் ஒட்டுமொத்த மனித இயக்கமும் எனக்கெதிராக ஒரு கூட்டணியை வைத்துக்கொண்டனவோ என்ற அச்சமாக மேலெழுந்து எனது மன அடுக்குகளின் ஒழுங்கைச் சீர்குலைத்தன.

முடிவில் மனநல மருத்துவர்களின் முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் தேடி அலையத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மனம் முறிவைச் சந்திக்கத் தொடங்கியது. பிறிதொரு கட்டத்தில் இந்தச் சமூகத்திற்கெதிராகக் குற்றங்கள் புரிவது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியது. எல்லாம் ஒழுங்கற்றும் கட்டற்றும் இருந்தன. எல்லாமுமே.........

ஒருகட்டத்தில் தப்பிக்க வழியேதுமற்ற நிலையில், மனித வாழ்வின் ஆதாரமான அந்தக்கேள்வியை முழுவதுமாக எதிர்கொள்வதென்று முடிவு செய்தேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். தனிமையின் உக்கிரம் பீடித்த கண்களுடன் எனது வாசிப்பை அதிகப்படுத்தினேன். வாசித்தது குறித்து எழுதத் தொடங்கினேன்.

வாசிப்பையும் எழுத்தையும் தவிர வேறு எந்த வகையிலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியாதெனவும், மனித வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதெனவும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். மனதை ஒருநிலைப்படுத்தி வாசிப்பை அதிகப்படுத்தினேன். கையில் அகப்பட்டதெல்லாவற்றையும் வாசித்தேன். ஆனால் என்னைத் தொந்தரவு செய்த அந்தக் கேள்விக்கான விடை என் கைகளுக்குள் சிக்கவேயில்லை.

இத்தகைய ஒரு தருணத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கடந்த வருடம் மே மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த செய்தி ஒன்றின் துர்சகுனங்களின் தீவிரம் தாங்கமுடியாமல், ஏற்கனவே குரூரமாகச் சிதைந்திருந்த மனம் பிறழ்வை நோக்கி சரியத் தொடங்கியது.

நிலமையின் விபரீதத்தை உணர்ந்து என்னை ஒருநிலைப்படுத்த எடுத்த எல்லா எத்தனங்களும் தோல்வியில் முடிய, அளவுக்கதிகமான நித்திரைக் குளிசைகளின் உதவியுடன் தூங்கமுற்பட்டேன். அதிரும் எனது ஆழ்மனம் மருத்துவ விஞ்ஞானத்தைத் தோற்கடித்தது. மனம் எதிர்நிலையில் கூடுதல் விழிப்படைந்து அதிர்வு தீவிரமாகியது.

ஏற்கனவே பல தடவை வாசிப்புக்குள்ளான நூல்கள் மனதை ஒருநிலைப்படுத்தாமல் வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்தின. புதிதாக ஏதோ ஒன்றை மனம் நாடியது. என்ன செய்வதென்று புரியாமல் ஒருவித மூர்க்கத்துடன் புத்தக அலுமாரியை இழுத்து வீழ்த்தினேன். எனது அறையை புத்தகங்களால் நிரப்பினேன். என் கால்களுக்கிடையில் தண்ணீர் போல் புத்தகங்கள் நிரம்பத் தொடங்கின.

இழுத்த வேகத்தில் எல்லா நூல்களும் சரிந்து விட ஒரு நூல் மட்டும் சிறிது கணம் தாமதித்து பரணில் இருந்து விழுந்து என் காலடியில் சிதறியது. எல்லா நூல்களும் மூடியபடி என் அறையை நிறைத்துக்கொண்டிருக்க இது மட்டும் திறந்தபடி அசைவற்றிருந்தது.

உற்றுப் பார்த்ததேன். திறந்திருந்த பக்கத்தில் "மனிதனைத் தேடும் மனிதன்" என்ற தலைப்பின் கீழ் பின்வரும் வாசகங்கள் அசைந்து கொண்டிருந்தன..

"ஆதி மனிதன், தனது உலகானுபவத்தை அர்த்தமுள்ள சப்தங்களாக வார்த்தைகளில் உருவகித்து, பேசும் ஆற்றல் பெற்று சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனிடம் அந்தக் கேள்வி பிறந்தது.

கேள்விகளுக்கு எல்லாம் மூலக் கேள்வியாக, வாழ்வியக்கத்தின் அர்த்தத்தையே தொட்டு நிற்கும் கேள்வியாக, ஆதி மனிதன் தன்னை நோக்கி அந்த வினாவை எழுப்பினான்.

'நான் யார்?'

எல்லையற்ற பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு முலையிலிருந்து திசை தெரியாது தவித்த மானிடத்தின் அவலக்குரலாக அந்தக் கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்வி பிறந்த கணத்திலிருந்து இன்று வரை, ஒரு நீண்ட முடிவில்லாத சுயவிசாரணைத் தேடலாக மனிதன் தன்னைத்தானே தேடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தேடுதல் இன்னும் முடியவில்லை."

ஆச்சர்யமும் ஒருவித அச்சமும் என்மனதை ஒருங்கே ஆக்கிரமித்தன. புத்தகத்தைத் திருப்பி அது என்னவென்று பார்த்தேன்."விடுதலை : அன்ரன் பாலசிங்கம்" என்றிருந்தது.

எனது உணர்வுகளை ஒருநிலைப்படுத்தி நூலை வாசிகத் தொடங்கினேன்; வாசித்தேன்- வாசித்துக் கொண்டேயிருந்தேன்.

முடிவில் அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் குறித்து நான் இதுவரை கட்டமைத்திருந்த பிம்பம் மெல்ல மெல்லக் கலைந்து அது வேறொரு வடிவம் எடுத்திருந்தது.

இது எப்படி என் கைகளுக்குள் சிக்காமல் இருந்தது என்ற எண்ணம் மட்டுமல்ல 'விடுதலை' நூலில் அவர் இதையா எழுதியிருந்தார் என்ற எண்ணமும் சேர்ந்து ஆச்சர்யம் கலந்த அதிர்வகளை மனதில் ஏற்படுத்தின.

சிறுநீர் முட்டி சிறுநீர்ப்பை வெடித்துவிடும் என்றவொரு கட்டம் வந்தபோதுதான், கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் அந்த நூலை நான் வாசிப்புக்கு உட்படுத்தியுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

புத்துணர்வு பெற்றவனாக - புது மனிதனாக அறையிலிருந்து வெளியேறினேன். எனது ஆழ்மனத்தின் அனைத்துத் திசைகள் மீதும் "விடுதலை" வெளிப்படுத்திய விழிப்புணர்வு சட்டென ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் எனது ஆழ்மன அடுக்குகளில் மின்சாரத்தைப் பாய்ச்சியது. அது தந்த புத்துணர்ச்சியும் கவித்துவமும் சீர்குலைந்த எனது மன அடுக்குகளை மீளொழுங்கு செய்து சீராக அடுக்கத் தொடங்கின.

நான் கடவுளை உணர்ந்த தருணங்கள் அவை. நான் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவருக்கே மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒரு ஆத்மார்த்த நிலையை அன்று நான் உணர்ந்தேன்.

'விடுதலை' எனக்கு எந்தவிதமான விசாலமான வெளியையும் திறந்து விடவில்லை. ஆனால் வாழ்வு குறித்து நம்பிக்கை இழந்தவனாக, மனித வாழ்வு குறித்த ஆதாரமான கேள்விகளுக்கு பதில் தேடியவனாக எந்தப் பாதையும் தெரியாமல் வழியும் புரியாமல் திகைத்து நின்ற எனக்கு "விடுதலை"யின் வழி ஒரு பாதை திறக்கப்பட்டிருக்கிறது.

ஒழுங்கற்றும் கட்டற்றும் இருந்த மனிதர்கள் குறித்த எனது விசாரணையை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்திருக்கிறது 'விடுதலை'. இதன் வழியே எனது வாழ்வின் வட்டம் விரிகிறது.

எனது வாசிப்பும் தேடலும் எழுத்தும் மட்டுமல்ல எனது வாழ்வே பேரியக்கமாக விரிகிறது. எனது ஒவ்வொரு அசைவும் இந்த உலகத்திற்கான கோட்பாடுகளாகவும் தத்துவங்களாகவும் மனித விடுதலை குறித்த தார்மீகக் கேள்விகளுக்கான பதில்களாகவும் நகரத் தொடங்கியுள்ளன.

என்னை வாழ்வின் விளிம்பு வரை துரத்தியவர்கள் பலர் இன்று எனது வாழ்வியற் கோட்பாட்டின் உக்கிரம் தாங்காமல் ஓடத் தலைப்பட்டுள்ளனர். அதுகூட அவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு ஆத்மார்த்த நிலைதான் என்பதை அவர்களுக்கே புரிய வைக்கும் முயற்சிதான் எனது எழுத்துக்களாக விரிகின்றன.

இதன்வழி எல்லா அபத்தங்களுடனும் வாழ்வைக் கொண்டாடுவது குறித்த கலைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறேன். இதை எனக்கு சாத்தியப் படுத்துவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அன்ரன் பாலசிங்கத்தின் 'விடுதலை" நூலைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பு என்ற சொல்லாடல் அந்தப் பிரதிக்கும் எனக்குமான உறவை - நெருக்கத்தை விபரிப்பதற்கு போதுமானதல்ல என்றே கருதுகிறேன். அந்த பிரதியின் கனபரிமாணமும் கனதியும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களையும் விளைவுகளையும் பற்றித்தான் நான் உங்களுடன் உரையாட இருக்கிறேன்.

வாசிப்பு, மறு வாசிப்பு, மீள்வாசிப்பு என்று விரிந்த எனக்கும் விடுதலைக்குமான உரையாடல் ஒரு கட்டத்தில் விசாரணையாக பரிமாணம் கண்டது.

இது பின்நவீனத்துவ யுகம் (post modernism). பின் நவீனத்துவம் ஒரு படைப்பை பிரதியாகவே (text) நெருங்குகிறது.

எனவே விடுதலையையும் ஒரு பிரதியாகவே அணுகினேன் நான்.

படைப்பு பிரதியாகும் போது வாசிப்பு என்ற சொல்லாடல் மறைந்து வாசகனுக்கும் பிரதிக்கும் இடையில் புது உறவொன்று மலர்கிறது. பிரதியுடனான ஊடாட்டமாக அதுமாறி பிரதியை தொடாந்து எழுதிச்செல்லும் நிலைக்கு வாசகன் நகர்கிறான். முடிவில் அந்தப் பிரதியாகவே அவன் மாறி விடுகிறான்.

எனவே நானும் வரும் நாட்களில் விடுதலையின் தொடர்ச்சியை எழுதிச் செல்வேன் -அவர் விட்ட இடத்திலிருந்து....

நான்தான் "விடுதலை". நான்தான் பாலசிங்கம். ஏன் நீங்கள்கூடத்தான்....

(தொடரும்..)

நன்றி - http://www.appaal-tamil.com/index.php?opti...8&Itemid=60

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்கள் - 02

எழுதியவர்: பரணி கிருஷ்ணரஜனி

Friday, 25 May 2007

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும்.

02.

அன்ரன் பாலசிங்கம், இந்த மனிதரை ஈழத்தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்ய முற்படுவதென்பது காகம் கறுப்பு என்று உரத்துச் சொல்வதற்கு ஒப்பானது.

அவர் ஒரு அற்புதமான மனிதர்.

தமிழீழத் தேச நிர்மாணிகளில் ஒரு முன்னோடி. தேசத்தின் மதியுரைஞர் - கோட்பாட்டாளர்.

தேசத்தை நிர்மாணிக்கும் அரசியல் உரையாடல் மேசைகளில் எதிரிகளே வியக்கும் வண்ணம் தெளிவான ஆங்கில உச்சரிப்புடன் சொற்களை லாவகமாக வளைத்துத் தர்க்கரீதியாகப் பேசி எதிர்த்தரப்பைத் திணறடிப்பவர்.

தமிழ்மக்களுடனான உரையாடலின்போது அரசியல் மட்டுமின்றி 'கள்ளு'க் குடிக்கிறது முதல் எதிரிகளுக்கான 'கட்டிப்பிடி வைத்தியம்' வரை அவர்கள் மொழியிலேயே உரையாடும் வல்லமை பெற்றவர்.

கலகலப்பானவர் அதே சமயம் கண்டிப்பானவர் - கடும் கோபக்காரர்.

அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதரின் பின்னாலுள்ள கோபம் ஒரு தேசத்தின் கோபம் - விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் கோபம் - தமது நியாயங்கள் மறுக்கப்பட்டதனாலும் தாம் அங்கீகரிக்கப்படாமல் தொடாந்து நிராகரிக்கப்படுவதனாலும் பிறக்கும் ஒரு இனத்தின் வலியிலிருந்து எழும் பெருங்கோபத்தை அவர் ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

அதுதான் அவர் மறைந்த போது 'தேசத்தின் குரல்' ஆகியிருந்தார்.

அவர் கோபத்திற்கு ஆளானவர்களில் நானும் ஒருவன் என்பது தற்போது என் மனஉலகத்தை ஒரு ஆன்மீகதரிசனமாக அலங்காரம் செய்கிறது.

கோபம் என்பதன் பின்னாலுள்ள நியாயங்களை - அறங்களை மனித மனம் பல சமயங்களில் ஏற்க மறுப்பதுமட்டுமல்ல புரிந்து கொள்ளவும் மறுக்கிறது.

சக மனிதன் ஒருவனின் கோபத்தை என்று நாம் புரிந்து கொள்ள முற்படுகிறோமோ அன்றே மனித வாழ்வின் அர்த்தத்தையும் வாழ்வின் சாராம்சத்தையும் புரிந்தவர்களாகிவிடுகிறோம்.

எனது வாழ்வின் ஒரு கட்டத்தில் எனது அதிநேசிப்புக்குரியவாகள் சிலர் மீது நான் கோபப்பட்டுக்கொண்டேயிருந்தே

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்கள் - 03

எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி

Saturday, 16 June 2007

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 03

வாசிப்பில், வாசகனுக்கும் அந்த நூலைப் படைத்த படைப்பாளிக்கும் மத்தியில் ஒரு விசித்திரமான உறவு நிகழ்கிறது. அகவயமான ஒரு சங்கமம் நிகழ்கிறது. படைப்பாளியின் எழுத்துலகில், அவனது கருத்துலகில், அவனது அனுபவக் களத்தில் பிரவேசிக்கும் வாசகன் படைப்பாளியுடன் இணைந்து ஒரு தேடுதலை நடத்துகிறான். ஒரு விசாரணையை நடத்துகிறான். அந்தத் தேடுதலில், அந்த விசாரணையில், படைப்பாளியின் தரிசனத்தை வாசகன் தரிசித்துக் கொள்கிறான். அவனது பார்வை இவனைப் பற்றிக் கொள்கிறது. கருத்துக்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் விந்தை நிகழ்கிறது.

-"விடுதலை" யில் அன்ரன் பாலசிங்கம் (பக்கம் 86, 87)

01.

எனது நீண்ட சுய வராலாற்று நூலில் மிக எளிமையான முறையில் எழுதப்பட்டுள்ள பகுதி அன்ரன் பாலசிங்கம் அவர்களது "விடுதலை" நூல் குறித்த எனது அனுபவப் பகிர்வுகள்தான். மனித வாழ்வு பற்றிய, மனிதவிடுதலை பற்றிய, மனித வரலாறு பற்றிய மிகவும் கனமான, பூடகமான, சிக்கலான விடயங்களை ஒரு வித சிக்கலான மொழியிலேயே உலக வரலாற்றாளர்களும் கோட்பாட்டாளர்களும் எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். சாதாரண மனித மனத்தை அவற்றுடன் நெருங்கவிடாமல் தடுப்பதே இத்தகைய மொழிதான். ஆனால் "விடுதலையில்" அன்ரன் பாலசிங்கம் அதை எளிமைப்படுத்தியிருக்கிற அழகு குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய ஒன்று. தமிழ்ச்சூழலில் அதன் முக்கியத்ததுவம் உணரப்படுவதும் இதையொட்டித்தான்.

யாரேனும கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி மனதை ஒருநிலைப்படுத்தி விடுதலையை வாசிப்புக்குட்படுத்தினால் மிகச்சுலபமாக விடுதலை பேசும் தத்துவ உலகத்தைத் தரிசிக்கலாம்.

எனது தத்துவங்கள், இலக்கியங்கள் தொடர்பான அறிமுகத்திற்கு ஒரு சிறிய வரலாறு இருக்கிறது. 1998 இன் முற்பகுதி இங்கிலாந்தின் மன்செஸ்ரர் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் ((micro biology) பீடத்தில் சேர்ந்திருந்தேன். அந்த வருடத்தின் இறுதியிலேயே விதி வேறு விதமாக விளையாடி பாரிஸ் நகரத்திற்குத் தூக்கியெறியப்பட்டது வேறு ஒரு தனிக்கதை. இப்போது மட்டும் என்னவாம் எந்த நேரத்திலும் பாரிஸ் நகரிலிருந்து உங்கள் நகரங்களில் ஏதேனும் ஒன்றில் வந்து விழுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. கவனம், ஏனெனில் எனது மனைவி அடிக்கடி சொல்வாள் " அப்பா, நீங்கள் ஒரு இனிமையான இம்சை" என்று.

எனது முழுத் தெரிவும் விருப்பும் எனது சொந்த ஊர்தான். ஆனால் சிலரது செய்கைகள் எனது ஊரையே எனக்கு அடையாளம் தெரியாததாக்கி விட்டது. அது முன்பின் தெரியாத ஒன்று போலவும் குழப்பங்கள் நிறைந்த பொருளற்ற ஒரு சூனியமாகவும் ஊர் பற்றிய எனது புரிதல் மாறியிருக்கிறது.

ஊரிலிருந்து நேரடியாக வந்தவுடனேயே மன்செஸ்ரர் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த படியால் அங்கு ஆங்கிலத்தில் கல்வியைத் தொடர்வதில் ஒரு வித அச்சம் மனதில் எழுந்திருந்தது. எனது "மீடியம் சைஸ்" ஆங்கில அறிவுதான் இவ் அச்சத்திற்குக் காரணம். போதாதற்கு எனது ஒரு பேராசிரியர் ஐரிஸ்காரர். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இவர் வகுப்புக்குள் நுழையும்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் "வந்துட்டான்யா!" என்று கோரஸாகக் குரல் கொடுப்பார்கள். அந்தளவிற்கு அவரது ஆங்கிலம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொங்கும். எனது நிலையைக் கேட்கவா வேண்டும்!

எனவே ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எனது பல்கலைக்கழக விடுதித்தோழன் ஒருவனுடன் ஆங்கில அறிவை விருத்தி செய்வது குறித்து உரையாடியபோது கிடைத்ததுதான் எனது உலக தத்துவ இலக்கிய அறிமுகங்கள்.

ஒரு நாள் அவன் ஒரு புத்தகத்தை தந்து இதைப்படி என்றான். ஆர்வத்துடன் வாங்கி படித்தேன், மன்னிக்கவும் பார்த்தேன். ஏனெனில் ஒரு பந்தியைக்கூட ஒழுங்காகப் படிக்கமுடியவில்லை. வசனங்கள் உடைந்தும் முறிந்தும் ஆங்காங்கு தொங்கின. நான் அதிமேதாவித்தனமாக "ஆங்கிலத்தில் போதிய அறிவில்லாதவர் எழுதியதோ" என்று கேட்டேன்.

அவன் மன்செஸ்ரர் நகரமே அதிரும்படி விழுந்து விழுந்து சிரித்தான். இறுதியில் அவன் கூறினான்." உன்னிடம் இதை எதிர்பார்த்துத்தான் அதைத் தந்தேன். நீ என்னை ஏமாற்றவில்லை". எனக்கு தூக்கிவாரிப்போட்டது. திருப்பி மீண்டும் வாசித்தேன். எனக்கு புத்தகத்திலிருந்து மீண்டும் கிடைத்தது அதே அனுபவம்தான்.

எனது நிலையை உணர்ந்து அவன் கூறினான்" உன் கையிலுள்ளது 1992 ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற கப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marghez)என்ற எழுத்தாளர் எழுதிய ""one hundred years of solitude" என்பது உனக்குத் தெரியுமா?"

எனக்கு ஆச்சர்யம் பிடிபடவில்லை. இது என்ன கோமாளித்தனமாக இருக்கிறது என்ற நினைப்புடன் அந்த வார விடுமுறையில் அந்த நூலுடன் கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தையே நிகழ்த்தினேன். ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான். ஆனால் அதை வாசிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு மாயத்தன்மையை மனதில் உணர்ந்தேன்.

"விடுதலை"யைத் தரிசித்ததன் பின்னாளில்தான் உணர்ந்து கொண்டேன் மிகையதார்த்தம் (magical realism) என்னும் கனவாக, புனைவாக, மயங்க எத்தனிக்கும் ஒரு கொடுரமான யதார்த்தத்தை திரிபுகளற்று யாவும் ஒரு காலத்தில் மறுக்க இயலாத கற்பனையுடன் அதேசமயம் பரவசத்துடன் முன்வைக்கும் எழுத்துக்கள் அவை என்று.

இன்று எனது வாழ்க்கையே இத்தகைய மிகையதார்த்தம் சார்ந்துதான் இயங்குகிறது. நினைவுகளுடன் வாழும் கலை அது. கனவுகளையும் கற்பனைகளையும் நிறைவேறாத ஆசைகளையும் மனதில் வடித்து அதற்கு உயிர் கொடுத்து உருக்கொடுத்து வாழும் ஒரு பரவசநிலை அது. ஞானிகளுக்கும் துறவிகளுக்குமே சாத்தியமான ஒரு நிலையை சாதாரண மனித மனம் வரை நகர்த்தும் படைப்பிலக்கியம் அது.

ஏன் நான் பாரிஸ் நகரின் கோடைச் சூரியனை குளிர்காலத்தேவைக்காக பிடித்து என் அறையில் அடைத்து வைத்திருப்பதும், என்னிடம் கார் இல்லாத காரணத்தால் பாரிஸ் நகரின் தெருக்களில் படகோட்டித் திரிவதும் என்ன வகையானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். (இரகசியமாகச் எனக்கு மட்டும் சொல்லுங்கள் பைத்தியம் என்றுதானே....) இதுதான் magical realism.

1998 இல் என்னவென்றே புரியாத ஒன்றை தனது "விடுதலை" நூலை வாசிக்க வைத்ததனூடாக அதன் பல கனபரிமாணங்களையும் உணரவைத்தது மட்டுமல்லாமல் அத்தகைய எழுத்தை என்னை எழுத வைத்தவரும் அன்ரன்பாலசிங்கம் அவர்கள்.

அத்துடன் மிக மிக முக்கியமான விடயம் என்னவெனில் உலக தத்துவ நூல்கள் பெரும்பாலானவை மொழிபெயர்ப்பில் எமக்குக் கிடைக்காது. கிடைத்தாலும் அந்த மொழிபெயர்ப்புகளில் நேர்மை இருக்காது. ஏனெனில் பெரும்பாலான தத்துவ நூல்களின் முலம் பிரெஞ்சு, ஸ்பானிய, ருஸ்ய, டொச் மொழிகளில்த்தான் எழுதப்பட்டுள்ளன. அவை பின்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பின்பு தமிழுக்கு வரும் போது அவரவர்களின் அரசியல் சார்ந்து மூலம் சிதைந்து விடும் அபாயம் இருக்கிறது. அத்தோடு மிக முக்கியமானது சரியான விளக்கமோ விபரணமோ செய்யப்படுவதில்லை. படித்தால் படி, இல்லாவிட்டால் போ என்ற அசட்டுத்தனமும் மமதையும்தான் தென்படுகின்றன.

மொழிபெயர்ப்பு என்பதே அரசியல்தான் என்று சொல்லப்படும் ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம். உதாரணத்திற்கு இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் எனப்போற்றப்படும் பப்லோ நெருடா (Pablo Neruda) வின் ஒரு கவிதைக்கு தமிழிலேயே எனக்குத் தெரிந்து குறைந்தது 20 மொழிபெயர்ப்புக்கள் இருக்கின்றன. போதாதற்கு நான் வேறு எனது மனைவி எனது அவள் மீதான அன்பையும் காதலையும் சந்தேகித்தபோது "ரஜி நான் உன்னைக் கைவிடவும் இல்லை, பிரியவும் இல்லை" என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்து அவளுக்கு அனுப்பினேன்.

இங்கு எனது அன்பை வெளிப்படுத்த எனக்கு பப்லோ நெருடா தேவைப்பட்டிருக்கிறார். இதுதான் அரசியல்.

எனக்குத் தெரிந்த வரையில் தமிழ்ச்சூழலில் இத்தகைய குழப்பங்கள் இல்லாமல் மூல நூல்களாயினும் மொழிபெயர்ப்பு நூல்களாயினும் அவற்றை நெருங்கும் முறைகளையும் உள்வாங்கும் கலைகளையும் தெளிவாக முன்வைத்த முதல் தமிழ்த்தத்துவ நூல் என்ற பெருமையை "விடுதலை" எதவித அலட்டலுமின்றித் தட்டிச் செல்கிறது.

அத்துடன் எல்லா நூல்களிற்கும் ஒரு மூல நூலாய் - அகராதியாய் விளங்கும் ஒரு தனிப் பண்பை "விடுதலை" தன்னகத்தே கொண்டுள்ளதை அதை நெருங்கிச் செல்லும் ஒவ்வொருவரும் தெளிவாய் உணர்வார்கள்.

எனது சுயவரலாற்று நூலில் அதிகம் அடிபடும் பெயர்கள் இரண்டு ஒன்று ழான் போல் சார்த்தர் அடுத்தது மிசேல் பூக்கோ. இவர்களை புரிவதென்பது ஒரு புறம் இருக்கட்டும் இருவரது நூல்களையும் படிப்பதென்பதே ஒரு தனிக்கலைதான். அந்தளவிற்கு சிக்கலான மொழி நடையில் எழுதுபவர்கள். இவர்களது பெரும்பாலான நூல்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு "விடுதலையில்" அன்ரன் பாலசிங்கம் இவர்களைப் பற்றி முன்வைத்திருக்கும் அறிமுகம் - அது அறிமுகம் அல்ல ஒரு பெரிய சுரங்கப் பாதையைத் திறப்பதற்கான திறவுகோல் அது.

இப்போது நேரடி வாசிப்பு முடிந்து ழான் போல் சார்த்தரையும் மிசேல் பூக்கோவையும் இடமிருந்து வலமாக வாசிப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறேன். நன்றி அன்ரன் பாலசிங்கம்.

எனது தனி மனித அவலத்தினூடாக எனக்கு ஈழத்தமிழ்ச் சூழலில் உளவியல், பண்பாடு, பெண்ணியம், விடுதலை சார்ந்த சில அறவியற் கேள்விகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. என் தனி மனிதன் ஒருவனின் கேள்விகள் எப்படி ஒரு இனத்தின் கேள்விகளாக மாறுகின்றன - இருக்கின்றன என்பதையே எனது சுய வரலாற்று நூலினூடாக உரத்துப் பேசவிழைகிறேன். இவை ஒரு வகையில் ஈழத்தமிழ்ச் சமுகம் தேடி அலையும் தார்மீகக் கேள்விகளாகவும் இருக்கின்றன என்பதை நிச்சயமாக உணர்வீர்கள்.

இந்தக் கேள்விகளினூடாகவும் அதற்கான விடைகளினூடாகவும் கிடைக்கப்போவது என் தனிமனித விடுதலை அல்ல ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்தின் இருப்பும் அடையாளமும் விடுதலையுமாகும்.

ஒரு இனக்குழுமத்தின் வாழ்வியலின் இயங்கியல் போக்கில் அடிநாதமாக விளங்குபவை அக்குழுமம் சார்ந்த உளவியலும் பண்பாடும். இவை கேள்விக்குள்ளாகும் போது அந்த இனத்தின்- சமுகத்தின் நேரியக்கம் எதிர்த்திசையில் பயணித்து ஒரு தளம்பலை சந்திக்க நேரிடும். விளைவாக அதன் அசைவியக்கம் இறுகி இயக்கமற்று முடிவில் ஒரு "தற்கொலை"யை நோக்கி தன்னைத் தயார்ப்படுத்த தொடங்குகிறது. அத்தோடு அந்த இனம் உலக வாழ்வியல் வரைபடத்திலிருந்து தொலைந்தும் விடுகிறது.

சாதாரண இனக்குழுமத்திற்கே இத்தகைய நிலை என்றால், போராடும் இனம் ஒன்றின் உளவியலும் பண்பாடும் சிதைவுறத் தொடங்குவது எத்தகைய விளைவுகளை அந்த இனத்திற்கும் அதன் போராட்டத்திற்கும் கொடுக்கும் என்பதை உய்ந்துணர முடிகிறதல்லவா!

02.

அண்மையில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பெண்உளவியலில் (women psycology) ஆய்வை மேற்கொண்டிருக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த என் சக பல்கலைக்கழகத் தோழி ஒருத்தி ஜப்பானிய எழுத்தாளரான கோபோ அபே ((kobo abe) யின் "friends" என்ற நாடகம் பற்றி குறிப்பிட்டு கிட்டத்தட்ட என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியை பிரதிபலிப்பதாகத் தான் உணர்வதாகக் தெரிவித்தாள். அந்த நாடகத்தின் மையக்கரு இதுதான்.

முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டிற்குள் எதுவித முன்னறிவித்தலுமின்றி புகுந்து கொள்ளும் ஒரு குடும்பம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டி வைத்துத் துன்புறுத்தி முடிவில் அவரைக் கொலை செய்து விட்டு அதைப்பற்றிய எதுவித குற்றவுணர்வுமின்றி அவரது வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வதுதான் கதை.

இப்படித்தான் எனக்குச் சொந்தமான, எனது அதி நேசிப்புக்குரிய, எனது வாழ்வையே அர்த்தப்படுத்திக் கொண்டிருந்த "உயிரி" ஒன்றை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஒரு உளவளத்துணை நிலைய நிர்வாகத்தினரும், அங்கு கடமையாற்றிய உளவியற் பேராசிரியர் ஒருவரும், அவரது உறவினர்களும் சேர்ந்து கையகப்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் ஒரு உண்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை........ அவர்கள் கையகப்படுத்தியது வெறும் சடம் மட்டுமே. அதன் உயிர் என் ஆன்மாவோடு இரண்டறக் கலந்து என் வாழ்வின் பேருண்மையாகவும் பெருவெளிச்சமாகவும் என்னைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதையும் யாராலும் அதை என்னிலிருந்து வேறுபடுத்திப் பிரிக்க முடியாதென்பதையும்....

எனது மன உளைச்சலினதும் மனப் பிறழ்வினதும் பெரும் பகுதியை அவர்களே ஆக்கிரமித்து நிற்கிறார்கள். என்னை மனப்பிறழ்வின் விளிம்புக்குத் தள்ளிவிட்டு அது குறித்த குற்றவுணர்ச்சி எதுவுமின்றி திரிகிறார்கள் அவர்கள். கோபே அபேயின் நாடகத்துடன் இதை ஒப்பிட்டு வைத்துப் பார்த்த எனது தோழியின் அவதானம் சிறப்பான கவனிப்புக்குரியது.

ஒரு செய்தியாகவேனும் அதை எனக்குத் தெரியப்படுத்தாத அவர்களின் உளவியலை என்னவென்று சொல்வது...

அந்தப் "உயிரிக்கு" சமுகத்தில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து வாங்கிக் கொடுத்திருக்கும் "பட்டம்"; எழுத்தில் பதிவு செய்ய முடியாதது. ஒரு பொருளை அடைவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த வழி சமுக நியதிகளிற்கும் பண்பாட்டிற்கும் எதிரானது, சட்ட விதிகளுக்கு முரணானது என்பதுடன் மனித அறங்களிற்கும் விழுமியங்களிற்கும் அப்பாற்பட்டது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. அது ஒரு இனத்தின் பிரச்சினையாக பரிமாணம் அடையும் இடமும் அததான்.

ஒரு உளவியல் நிறுவனத்திடமிருந்தும் ஒரு உளவியற் பேராசிரியரிடமிருந்தும் அவரது குடும்பத்தினரிடமிருந்தும் இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் யாருமே எதிர்பார்க்க முடியாதது.

சமுகத்தில் அத்துமீறல்களும் அதிகார வலைப்பின்னல்களும் எங்கிருந்தெல்லாம் தோற்றம் கொள்கின்றன பார்த்தீர்களா? சமுகத்தில் இத்தகைய அதிகார மையங்களை கட்டுடைக்க வேண்டிய ஒரு உளவியல் நிறுவனமே அதைக் கட்டவிழ்த்துவிடும் அவலம் ஈழத்தமிழ்ச் சூழலில்தான் சாத்தியம். உலகில் வேறு எந்த இனத்திற்கும் இத்தகைய அவலம் நேராது.

எனது சுயவரலாற்று நூலின் மையமே இந்தப்புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது. ஈழத்தமிழ்ச் சூழலில் "விடுதலை"யின் முக்கியத்துவம் உணரப்படும் இடமும் இதுதான்.

அதிகாரம், வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற ஆதிக்கப் பெருங்கதையாடல்களினால் அவர்களது "உளவியல்" கட்டமைக்கப்பட்டிருப்பதை அவர்களை நெருங்கிச் செல்லும் யாராலும் மிக இலகுவாக உணரமுடியும்.

உளவியல் என்ற மையப்புள்ளியுடன் என்றுமே சந்திக்க முடியாதவை - கூடாதவை மேற்குறிப்பிட்ட கருத்துருவாக்கங்கள். ஆனால் இவர்களது "உளவியல்" அந்த சூழலுடன் இரண்டறக் கலந்து உறவாடிக் கருத்தரித்திருக்கிறது இந்தப் பேரவலம்.

உளவியலை விடுவோம். சரி தவறுகளுக்கும் அப்பால் சக மனிதர்களாக இன்னொரு மனிதன் மீது எப்படி இந்த வன்முறையை இவர்களால் நிகழ்த்த முடிந்திருக்கிறது?

"நான் யார்?" என்ற எனது தேடலை அடுத்து என்னைத் தொந்தரவு செய்த பெருங் கேள்வி இதுதான்.

இந்தக் கூட்டு வன்முறைக்குள் சிக்கி எனது ஆழ்மனத்தின் பெரும்பகுதி அதிர்ந்து முறிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போதிலும் எஞ்சிய சிறு பகுதி மனம், மனித அகவுலகத்தின் இந்தப் புதிரை கட்டவிழ்த்துப் பார்க்கும் ஆர்வ மிகுதியை மன அடுக்குகளில் உருவாக்கிக் கொண்டேயிருந்தது.

அததான் இன்று என்னை உங்கள் முன்னிலையில் நிறுத்தியது மட்டுமல்ல - எனது எதிர்கால வாழ்வின் தேடலாகவும் ஆதாரமாகவும் விரிகிறது. "விடுதலை"யின் விரிதளங்களினூடாக வாழ்வின் புதிரான முடிச்சுக்களை அவிழ்க்கும் எனது பயணம் தொடர்கிறது.

ஆனால் முன்பு மனிதன் குறித்த இந்த விசாரணையை எங்கிருந்து தொடங்குவது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. உலகத் தத்துவங்கள், கோட்பாடுகள் குறித்து எனக்கு ஓரளவிற்குப் பரிச்சயம் இருந்த போதிலும் "விடுதலை"யைத் தரிசிக்கும்வரை எனது தேடலின் மையம் அவிழ்க்க முடியாத ஒரு மர்ம முடிச்சாகவே என்னை அலைக்கழித்தது.

ஆனால் "விடுதலையில்" அன்ரன் பால சிங்கம் அவர்கள் மனித வாழ்வு குறித்த ஆதாரமான கேள்விகளையும் அது குறித்த விசாரணைகளையும் மெய்த்தேடல், அறிவு சார்ந்த தேடல் என்ற இரு தளங்களிலும் சிக்மண்ட் ப்ராய்டில் தொடங்கி ழான் போல் சார்த்தர் வரை ஒரு சீராக நகர்த்தியிருக்கிற பாங்கு மனித விடுதலை - விசாரணை மீதான நேர்மையான அகத்தூண்டலை நிகழ்த்திவிடுகிறது.

இந்த அகத்தூண்டலிலிருந்தே எனது வாழ்வு சார்ந்த காத்திரமான தேடல் நகர்கிறது.....

ஒரு உளவியல் நிறுவனத்தால் எப்படி இந்த வன்முறையை நிகழத்த முடிந்தது என்ற கேள்வி மேலெழும்புகிறதல்லவா? அன்ரன் பாலசிங்கம் சொல்கிறார் இது அதிகாரத்தின் அரூப கரங்கள் என்று. பின் நவீனத்தின் பிதாமகன் எனப் போற்றப்படுபவரும் பிரெஞ்சு தத்துவாசிரியருமான மிசேல் பூக்கோவை முன்வைத்து இத்தகைய அதிகாரங்களை கட்டவிழ்க்கிறார் பாலசிங்கம்.

(2000 பக்கங்களிற்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்ட எனது சுயவரலாற்று நூலின் ஒரு விடயத்தை நானே சுருக்கி சிறிய அறிமுகம் செய்வதென்பது மனதில் ஒருவித அயர்ச்சியையும் களைப்பையும் விதைக்கிறது. எனவே உங்கள் வாசகர் எதிர் வினைகளைப் பொறுத்தே எனது அடுத்த பாகத்தை அப்படியே வெளியிடுவதா சுருக்கி வெளியிடுவதா என்ற முடிவு எட்டப்படும்)

நன்றி -

http://www.appaal-tamil.com/index.php?opti...3&Itemid=60

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரணி கிருஸ்ணரஜனி அவர்களின் மிக நல்ல பதிவு. முதிர்ச்சியான பொருள் நிறைந்த வரிகள். தனி மனிதர்கள் தங்களை எழுதுவது தங்களை விளம்பரப் படுதிக் கொள்வதற்காக அல்ல (அப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்). மாறாக தங்களது எண்ண ஓட்டத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுப்போது அதிலிருந்து பல பயனுள்ள தகவல்களை பெற்றுக் கொள்வது மட்டுமல்ல அதைப் படிக்கும் எங்களுக்கு அவர்களில் நாங்களும் ஒருவர் என்ற நிலை மனதில் உருவாகிறது. எடுத்துக்காட்டாக கட்டுரையாளர் எழுதியுள்ள இந்த வரிகள்

'விடுதலை'யின் சில இடங்களில் அன்ரன் பாலசிங்கம் தன்னை பூக்கோவாகவும்இ சர்த்தாராகவும் கற்பனை செய்து சில கருத்துருவாக்கங்களை பேச முயல்கிறார்.

இதற்காக அன்ரன் பாலசிங்கம் என்ன பூக்கோவா? சர்த்தாரா? இல்லை அவர் அவர்களின் தொடர்ச்சி அவ்வளவே...

ஆழம் நிறைந்தவை.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய விடுதலை தலை சிறந்த நூல்களில் ஒன்று. எம்.ஜி.ஆர் தொடர்பாகவும் ராஜீவ்-பிரபா எழுதப் படாத ஒப்பந்தம் தொடர்பாகவும் அவர் எழுதியுள்ளது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது ஆனால் ஏனையவை அப்படியல்ல. நான் பல தடவை வாசிக்க வேண்டியிருந்தது. பரணி கிருஸ்ணரஜனி அவர்களின் இந்த முயற்சியால் விடுதலையின் அந்தப் பகுதிகளை பலர் வாசிக்க முற்படுவார் என்பது திண்ணம்.

விடுதலையின் தளங்கள் மேலும் விரிவடையட்டும். கட்டுரையாளர் பரணி கிருஸ்ணரஜனி அவர்களின் பணி தொடரட்டும். இந்தச் சிறந்த பதிவை யாழில் இணைத்த கறுப்பியக்காவுக்கு நன்றி.

Edited by இளங்கோ

இணைப்பிற்கு மிக்க நன்றி.

கட்டுரையாளர் பல தளங்களில் தான் இவ்வாறான தனது எழுத்துக்களைப் பதிப்பதாகக் கூறியுள்ளார். அத்தளங்கள் எவை என யாரேனும் குறிப்பிட முடியுமா?

மேலும் இவரது ஆக்கங்கள் ஏதேனும் நூல் வடிவில் வந்துள்ளனவா?

நன்றி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்கள் - 04

எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி

Sunday, 01 July 2007

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 04

'விடுதலையில்' மிசேல் பூக்கோ பற்றிய அறிமுகம் பின்வருமாறு உள்ளது. "பூக்கோ சமுக உலகத்தையும் மனித உறவுகளையும் ஒரு புதிய பரிமாணத்தில் வித்தியாசமாக நோக்கியவர். அறிவுலகங்களை அகழாய்வு செய்தவர். அவற்றின் ரிசி முலங்களை கண்டு பிடித்துக் காட்டியவர். அதிகார உறவுகளின் சிலந்தி வலைக்குள் மனித வாழ்வு சிக்குண்டு கிடப்பதை மிகவும் நுட்பமாக எடுத்து விளக்கியவர். அறிவுலகமும் அதிகார உலகமும் கூட்டுச்சேர்ந்து மனித அடக்குமுறைக்கு ஒத்துழைக்கும் தந்திரோபாயங்களை பிட்டுக்காட்டியவர்" என்று நீள்கிறது.

அதாவது அறிவுலகத்தை சமுக வாழ்வியக்கத்தின் ஆழத்தில் அலசிப்பார்த்த பூக்கோவிற்கு ஒரு விசித்திரமான உண்மை புலப்பட்டது. அறிவுலகமானது தனியுலகமாக நின்று, மனித விமோசனத்திற்கு வெளிச்சம் காட்டவில்லை. மாறாக, அது அதிகார உலகத்துடன் கைகோர்த்து நின்று மனிதர்களை விலங்கிட்டு வைத்திருக்கிறது என்ற கசப்பான உண்மையை அவர் கண்டுகொண்டார். ஆரம்பத்தில் மாக்சிய சிந்தனையாளராக தன்னை தகவமைத்துக் கொண்டபோதிலும் பின்பு அதிலிருந்து தன்னை விடுவித்து நீட்சேயின் கண்டனத் திறனாய்விலும் அவரது மரபு முல (geneological) விசாரணை முறையிலும் கவர்ச்சி கொண்டு பொய்மைகளைப் போர்த்தியவாறு, மறைபொருளாகப் புதைந்து கிடக்கும் மெய்மைகளைக் கண்டு கொள்வதற்கான மூலங்களைத் தேடும் விசாரணையே சிறந்ததென உணர்ந்து நீட்சேயின் வழி தழுவி வேர்களைத் தோண்டும் தனது ஆய்வை உலகிற்கு அறிவித்தார். அதுதான் 'அறிவின் அகழாய்வு' என அழைக்கப்படுகிறது.

1926 இல் பிரான்சில் பிறந்த மிசேல் பூக்கோ (michel foucault) ஒழுங்கமைப்பு, அதிகாரம், பாலியல் குறித்த நுண் அரசியல் ஆய்வுகளினூடாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தத்துவ அறிஞர். அதிகாரம் பற்றிய இவரது ஆய்வுகள் நீட்சேயின் அணுகுமுறையை அதன் எல்லை நோக்கி விரித்துச் சென்றன என்று 'விடுதலை'யில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

"நான் இங்கு பேச விரும்பும், முன்வைக்க விரும்பும், விவாதிக்க விரும்பும் கருத்துக்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு முறையியலையோ பிரநிதித்துவப்படுத்துபவை அல்ல" என்பதை ஒத்ததான ஒரு வாசகத்துடன்தான் மிசைல் பூக்கோவின் அனேகமான உரையாடல்களோ, எழுத்துக்களோ ஆரம்பிக்கும். பூக்கோவை ஆழ்ந்து கற்றவர்களுக்கு இது வெளிப்படையான ஒன்று.

இதற்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் பல இருந்தபோதிலும் அவற்றுள் முதன்மையானதாக, நீண்ட தேடலின் விளைவாய் - ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் எழுந்த தனது தர்க்கரீதியான ஆய்வின் முடிவைக்கூட ஒரு கருத்துத் திணிப்பாகவும், அதிகார மீறலாகவும் அவர் கண்டார். அதன் அடிப்படையிலேயே மேற்குறித்த வாசகம் அவரிலிருந்து தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. இதனூடாக தனது கருத்தை - முடிவை நிராகரிப்பதற்கான எல்லா உரிமைகளையும் எமக்கு வழங்குகிறார்.

அதிகாரத்தின் அனைத்துத் திசைகளிலும் பயணம் செய்து அதன் அடியாழம் வரை சென்று அதன் நுண்ணிய அதிர்வுகளை கண்டறிந்த - அதிகாரத்தை எதிர்ப்பதையே தனது வாழ்வியல் செல்நெறியாகக் கொண்டிருந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாரால் இத்தகைய புரிதலை வெளிப்படுத்த முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்.

"அதிகாரம் ஏதோ ஒரு தருணத்தில் ஒன்றிலிருந்து தோன்றி மற்றதற்குச் செல்கிறது. எல்லாவித உறவுகளிலும் அதன் உற்பத்தி நடக்கிறது. அதிகாரம் எங்கும் நிறைந்திருக்கிறது. இப்படிக் கூறுவது அது எல்லாவற்றையும் தழுவியுள்ளது என்பதனால் அல்ல. அது எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது என்ற காரணத்தினால்தான்" என்ற பூக்கோவின் ஆய்வு, அதிகாரம் மையம் கொள்ளும் நுண்தளங்கள் (micro centers of power) பற்றிய ஆழந்த புரிதலை எமக்குத் தருகிறது.

யார் சொன்னது, அதிகாரம் அரசியலிலிருந்தும் துப்பாக்கிகளிலிருந்தும் பிறப்பதாக.... அது ஒரு உளவியல் நிறுவனத்திடமிருந்தும் - ஒரு மனநல மருத்துவரிடமிருந்தும் - ஒரு உளவியற் பேராசிரியரிடமிருந்தும்கூட பிறக்கமுடியும். பிறந்திருக்கிறது......

அண்மையில் எனது நண்பரும் கவிஞருமான க.வாசுதேவனின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அவர் தனது அலுவலக வாசலில் தொங்கவிட்டிருக்கும் வாசகத்தில் காணப்பட்ட "அதிகாரமும் வன்முறையும் சக படைப்பாளிகளிலிருந்து கூட பிறக்கின்றது" என்ற வரிகள் அதிகாரத்தின் எல்லையை விரிவாக்கம் செய்கின்றன.

கடந்த வருடம் எனது மீள்வாசிப்புக்குரிய நூல்களில் ஒன்றாக அவரது "தொலைவில்" கவிதைத்தொகுப்பும் இருந்தது இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று. ஆனால் அத் தொகுப்பு ஈழத்தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. உக்கிரமான ஒரு மொழியில் அகதி வாழ்வின் வலிகளைப் பேசும் அவரது கவிதைத் தொகுப்பு கவனிக்கப்படாதது ஈழத்தமிழ்ச் சூழலின் வேறு ஒரு பக்கத்தை எமக்குக் காட்டுகிறது. இது ஒரு பொதுமையான நிகழ்வாக இருந்தபோதிலும் இதைத் தனி மனித அவலமாகவும் பார்க்கலாம்.

சந்தோசமோ கவலையோ பகிர்ந்து கொள்வதற்கு இனி வாழ்வில் ஆள் இல்லை என்று உணரும் ஒரு தருணம் எத்தகையது என்று எனக்குத்தான் தெரியும். சொன்னால் நம்புவீர்களா! இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் என்னோடு தனது சக வாழ்வைப் பகிர்ந்து கொண்டது ஒரு எலிதான். நம்புவதற்குக் கஸ்டமாக இருக்கிறதா?

இந்த காலகட்டத்தில்தான் 'விடுதலை' யின் தரிசனம் கிடைத்ததை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு வாரம் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துபார்த்தேன். புத்தகங்களும் வாசிப்பும் என்று நாட்கள் நகர்ந்தபோதும் அதைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாதது மனஅடுக்குகளின் ஒழுங்கைச் சீர்குலைத்து தீராத மனநோய்க்குள் அமிழ்த்திவிடுமோ என்ற ஐயம் துளிர்விடுவதும், இனி உன் வாழ்வு அப்படித்தானே என்ற யதார்த்தம் மனத்தில் பேயாய் அறைவதும் என்று ஒரு போராட்டம் என் மனக்குகைகளில் நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில்த்தான் அந்த எலியின் பிரவேசம் நிகழ்ந்தது.

முதல் நாள் இரவு படித்து முடித்துவிட்டு குறிப்பெடுப்பதற்காக எனது மேசையில் வைத்திருந்த அல்பேர்ட் காம்யூவின் (albert camus) அந்நியன் (stranger) நாவலின் விளிம்புப் பகுதியை பதம் பார்த்ததனூடாகத்தான் 'அது' அறிமுகமாகியது. புத்தகத்தை கடித்துவிட்டதே என்ற கோபம் ஒருபுறம் கொப்புளித்துக் கொண்டிருக்க மனத்தின் மறுபக்கம், என்னுடன் ஒரு உயிர் வீட்டில் உலாவுகின்றது என்ற சந்தோசத்தில் குதூகலிக்கத் தொடங்கியது.

அது என் கைகளுக்குள் சிக்காதபோதும் என் கண்ணெதிரே நடமாடித் திரிந்தது. இரவில் எதையாவது அரித்துக்கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டால்தான் எனக்குத் தூக்கமே வரும் என்ற நிலைவரை எமது உறவு வளர்ந்தது.

பொதுவாகவே எலி மனித உடலின் 'விபரீதமான பாகங்களைக்' குறிவைக்கும் என்று எங்கோ கேள்விப்பட்டதையும் மறந்து என் படுக்கையில் ஓடித்திரிவதற்கும் அனுமதித்தேன். எனது தனிமனித வாழ்வின் இருப்புக்கு அது ஒரு அர்த்தத்தை தந்தததாகவே நான் நம்பினேன்.

எனது நூல்கள் சிலவற்றையும் அது அவ்வப்போது பதம் பார்க்கத்தொடங்கியிருந்தது எனக்குப் பெரும் தொல்லையாக இருந்தது. இதற்கு ஒரே வழி அதற்கான உணவை தயார்செய்து அது உலாவித் திரியும் இடங்களில் வைப்பதுதான் என்று முடிவு செய்து அதற்கான உணவை தயார்செய்து அதற்குரிய இடங்களிலேயே வைத்தேன்.

இரு நாட்கள் அது சாப்பிட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. எனக்குச் சந்தோசம். இனி புத்தகங்களுக்கு எலியிடமிருந்து விடுதலை. ஆனால் முன்றாம் நான்காம் நாட்கள் எலி உணவை முகர்ந்து பார்த்த அடையாளங்கூட இல்லை என்பது ஒரு புறம் இருக்க அதன் நடமாட்டத்தையும் காணவில்லை. தொடர்ந்த நாட்களில் அது முழுவதுமாகக் காணாமல் போயிருந்தது.

அதற்கு நான் உணவைத் தயார்செய்து வைத்ததை அது வேறுவிதமாகக் கற்பனை பண்ணியது போலும். இடம் மாறிவிட்டது. மீண்டும் என்னைத் தனிமை சூழ்ந்து கொண்டது. வாழ்க்கையில் ஒரு உயிரை அளவிற்கதிகமாக நம்பக்கூடாது - நேசிக்கக்கூடாது என்பதை நான் புரிந்து கொண்ட இரண்டாவது சம்பவம் அது. உங்கள் வீட்டில் எலித்தொந்தரவு இருந்தால் இப்படி முயற்சித்துப் பாருங்களேன்......

பிரபல ரஸ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி (fydor dostoevsky) எழுதிய 'மரண வீட்டின் குறிப்புக்கள்' நாவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் தனது சிறைச்சாலை அன்றாட நிகழ்வுகளை அறைக்குள் உள்ள ஒரு சிலந்தியுடன் பகிர்ந்து கொள்வதாகப் படைக்கப்பட்டிருக்கும். தான் தனியாக இல்லை, தன்னோடு ஒரு சிலந்தி கூட இருக்கிறது என்ற உறவு மட்டுமே தன்னை வாழவைத்துக்கொண்டிருப்பதாகக

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை என்ற புத்தகத்தின் முன்னுரையில் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் தனது விருப்பை இப்படி எழுதி உள்ளார்

"சிந்தனையாளர் சிலரின் புதுமையான பார்வைகளை இக்கட்டுரைகள் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கிறேன் இந்த எழுத்துகள் யாரையாவது புதிதாக சிந்திக்க தூண்டும் என்ற நம்பிக்கை எனகுண்டு"

அவரின் நம்பிக்கை வீணாக போகவில்லை என்பதை பரணி கிருஸ்ரஜனி போன்றவரின் ஆக்கங்கள் மூலம் நிருபணமாகி உள்ளது அவரின் இந்த முயற்சி பாராட்டதக்கதாகும்,தொடரட்டும

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 05

01.

நான் அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதரின் வழி பூக்கோவை கிரமமாக உள்வாங்கியவன் என்ற அடிப்படையில் நான் முன்வைக்க இருக்கும் தத்துவம் முழுமையானதா, ஒரு கோட்பாட்டியலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற

ஆகவே அந்தப் புதிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு - கிரகிப்பதற்கு அந்தத் தத்துவத்தை மட்டும் கற்பதனூடாகவோ - உள்வாங்குவதனூடாகவோ நாம் ஒரு முழுமையை எய்த முடியாது. எனவே பரந்துபட்ட அறிவும் வாசிப்பும் கற்கையும் நமக்குத் தேவைப்படுகிறது.

புத்து இப்படி எழுதப்பட்டிருக்கு இந்த கட்டுரையை வாசிக்கவும் பொறுமை வேண்டும் அது நம்மகிட்ட இல்லை ஆனா ஒருக்கா வாசித்து பார்தேன் ஒன்றுமே விளங்கவில்லை ...........இதை சோட் அன்ட் சுவீட்டாக யாரும் எனக்கு விளங்கபடுத்துங்கோ............... :lol:

மிகவும் அருமையான படைப்பு. பல புத்தகங்களையும் நூலாசிரியர்களின் பெயர்களை முழுமையாக ஆங்கிலத்திலும் தந்திருப்பது அந்நூல்களை வாசகர்கள் தேடி வாசிக்க உதவுகிறது. புத்தகங்களை வாசிப்பது மட்டும் நில்லாது, ஒரு மனிதன் எப்போது அதைப் பற்றி ஆலசி, ஆராய்ந்து தனது வாழ்க்கையோடு ஒப்பிட்டு அதனைப் பின்பற்றுகிறானோ அப்போது அவன் முழுமையடைகிறான். அப்போதுதான் அவனுக்குள் ஒரு தெளிவு ஏற்படுகிறது. கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடும் படித்த மேதாவிகள், வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிட்டவர்கள். அதனால்தான் அவர்களால் இவர் கூறும் விடயங்களை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

தேடல் உள்ள மனிதன் நிச்சயமாக வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தை அடைகிறான். இடையில் நிறுத்துபவர்கள் அழிந்து போகிறார்கள். சாதாரண மனிதர்கள் தேடல்களின்றி, இலக்கின்றி தமது வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனனுக்கு எவ்வாறு குருவி மட்டும் தெரிந்ததோ, அவ்வாறே ஒவ்வொரு மனிதனுக்கும் தனது இலக்கு மட்டுமே அவனுக்குத் தெரியவேண்டும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, நம் நிகழ்காலத்தில் வாழ்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் எமது தேசியத்தலைவர் அவர்களைக் குறிப்பிடலாம். அவருக்கு எமது தாயக விடுதலை மட்டுமே தெரிகிறது. அவரைப்போலவே நாமும் ஓர் இலக்கைத் தெரிவு செய்து, அதனை நோக்கியே எமது வாழ்வைக் கொண்டு செல்லவேண்டும். எமது இலக்கைக் கண்டறிந்தவுடன், அதற்கான தேடலைத் தொடங்கவேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமும், ஆராய்வதன் மூலமும் நாம் ஒரு தெளிவைப் பெறமுடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

03.

அன்ரன் பாலசிங்கம் காட்டும் வழியிலேயே நாம் அந்த தத்துவ உலகத்தைத் தரிசிப்போம். சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) விடுதலை பேசும் முதல் தத்துவ அறிஞர். விடுதலையில் இவரது உளப்பகுப்பாய்வு (Psychoanalysisp) தத்துவம் ஏன் முதல் பேசப்படுகின்றதென்பதை நாம் முதலில் கவனிப்போம்.

"மனிதன் என்பவன் இயற்கையின் குழந்தை. இயற்கை என்ற மாபெரும் கலைஞனால் படைக்கப்பட்ட ஒரு கலை வடிவம் - உயிர் வடிவம். இயற்கையின் கருவகத்துடன் மனிதனின் தொப்புள்கொடி பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஒரு புறம், இயற்கையின் மடியில் வேர் பதிந்து நிற்பவனாகவும், மறுபுறம் சமூகப்பிறவியாகவும், சமூக வாழ்வியக்கத்தில் உருவாக்கம் பெறுபவனாகவும், இருமுகப் பரிமாணத்தில் மனிதவாழ்வு அமைகிறது." என்று அன்ரன் பாலசிங்கம் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வரையறை செய்கிறார். தொடர்ந்து மனிதனை உணர்சிமயமானவன் என்றும் இயல்புணர்ச்சிகள் ((Instincts) மனிதனை ஆட்டிப்படைப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இதன் மையமாக "பாலுணர்ச்சி" இருப்பதாகவும் அது ஒரு ஜீவ சக்தியாக எல்லா உயிரினங்களையும் இயங்கவைப்பதாகவும் - உயிர்களை மீளாக்கம் செய்வதாகவும், அது படைத்தலின் தவிர்க்க முடியாத நியதி என்றும் தொடர்கிறார்.

இதைத்தான் உளவியல்மேதையான சிக்மண்ட் பிராய்ட் Libido, Life force, Eros என்று விபரிக்க முனைந்ததை சுட்டியும் காட்டுகிறார்.

இதனூடாக பாலியல் உணர்வுகளை மையமாகக் கொண்டு மனிதனையும் மனிதவாழ்வையும் விசாரணை செய்த சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வு தத்துவத்தை அன்ரன் பாலசிங்கம் அறிமுகம் செய்ய முயல்கிறார்.

மனித வாழ்வை விசாரணை செய்வதற்கு எத்தனையோ தத்துவங்கள் இருக்கும்போது ஏன் ஒரு பாலியல் தத்துவத்தை அன்ரன் பாலசிங்கம் முதன்மையானதாகக் கையிலெடுத்திருக்கிறார் என்ற கேள்வி உங்களில் பலருக்குத் தோன்றலாம்.

ஏனெனில் நாம் பாலியல் எச்சங்கள்தான். பாலுணர்வு இல்லாமல் நாமில்லை - மனித இனமே இல்லை. உயிரினங்களின் தோற்றமூலமே இதுதான்.

மனிதனின் தோற்றம், வாழ்வு பற்றிப் பேசும் விஞ்ஞானங்கள் மட்டுமல்ல மதங்கள் வழி பரவிய புராணங்கள், ஐதீகங்களும் பாலியல் கதைகளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையிலிருந்து சிவன் - சக்தி கதைகள் வரை மதம் கடந்து இது பரவிக்கிடக்கிறது.

ஆனால் விசித்திரமாக இந்த மதங்கள் பாலுணர்வை ஒரு குற்றமாகவும் அதிலிருந்து மனிதர்களை மீட்பதாகவும் சொல்லிக்கொண்டு முரணாக தமது மதங்களினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அதை ஒரு கேளிக்கையாகவும் முன்வைக்கின்றன.

மதங்கள் மட்டுமல்ல அறத்தைபோதிக்கும், பண்பாட்டை ஆராதிக்கும் நிறுவனங்களும் அவை சார்ந்த தனிமனிதர்களும் ஏன் அறிவுலகங்கள் கூட பாலுணர்வை ஆராய்வதில்லை. மாறாக பாலுணர்வு சார்ந்து உருவாகும் புதிரை இறுக்குவதிலும் பூடகப்படுத்துவதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் கண்காணிப்பதிலுமே தமது செயற்பாட்டை வரையறுத்துள்ளார்கள்.

இந்த வகையைச் சாராமல் பாலுணர்வை ஆராயமுடியும் என்பதையும் இதனூடாக மனித வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை கற்பிக்கமுடியும் என்பதையுமே சில தத்துவவாதிகள் வலியுறுத்துகின்றனர். அதன் வழி சில தத்துவங்களையும் உருவாக்கியுள்ளனர். அத்தகைய ஒன்றுதான் சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வுத் தத்துவம். ப்ராய்ட மிக முக்கியமான தத்துவ அறிஞர் என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.

இவரது உளப்பகுப்பாய்வுத்தத்துவம் மனித மனத்தின் ஆழத்திற்குள் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல. சாதாரண விழிப்பு நிலை மனத்திற்கும் (Consciousness) நினைவற்ற நிலையில் இருக்கும் நனவிலி மனம் (Unconscious Mind) என்ற மனித மனத்தின் அகவுலகம் ஒன்றின் அடிப்படையிலிருந்தே பிராய்டின் இத் தத்துவம் கட்டியெழுப்பப்படுகிறது.

பிராய்டின் இந்த நனவிலி மனத்தைப் பேசும் பகுப்பாய்வுத் தத்துவம் பற்றி அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. "அவரது உளப் பகுப்பியல் கண்டுபிடிப்பில், அடிமனத்தின் ஆழத்தில் ஒரு எரிமலை இருந்தது. உணர்ச்சிகளின் நெருப்பலைகளாக அது எரிந்து கொண்டிருந்தது. அடக்கப்பட்ட ஆசைகளின் அக்கினி நாக்குகள் நர்த்தனமாட அது குமுறிக்கொண்டிருந்தது. பிராய்டின் ஆழ்மனமானது கொதிக்கும் உணர்ச்சிகளின் கொப்பறை" என்று மிக எளிமையான சொற்களில் சிறப்பாக வரையறை செய்கிறார் பாலசிங்கம்.

ஆனால் நனவு மனமானது பண்பாட்டு உலகத்தால் வனையப்பெற்றதாகவும், நியமங்களிற்கும் ஒழுங்குகளிற்கும் கட்டுப்பட்டு இயல்புணர்ச்சிகளை தணிக்கை செய்து ஒடுக்கி விடுவதாகவும் குறிப்பிடும் பாலசிங்கம் தொடர்ந்து இந்த ஆசைகள் தஞ்சமடையும் இடமே இந்த நனவிலி மனம் என்கிறார். அங்கு அவை தணிந்து அணைந்து போகாமல் சீறறம் கொண்ட பாம்புகளாக சீறி எழுவதாகவும் எப்படியாவது எந்த வழியிலாவது எந்த வடிவத்திலாவது

வெளியேற சதா விழைந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயம். சிக்மண்ட் ப்ராய்ட் தொடர்பாகவும் அவரது உளப்பகுப்பாய்வுத் தத்துவம் தொடர்பாகவும் ஒரு தனிநூல் எழுதும் நோக்கில் அவரையும் அவரது தத்துவத்தையும் ஆழமாகவே கற்று வருகிறேன். ப்ராய்ட் மட்டுமல்ல பிரபல பிராய்டிய சிந்தனையாளரான லக்கான் மற்றும் குஸ்தாவ் யுங் எழுதிய நூல்களையும் அகராதிகளையும் அருகருகே அடுக்கிவைத்து ஒரு பெரும் யுத்தத்தையே நடத்தி வருகிறேன். ஆனால் இது குறித்த உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும், நூல்களது பருமனும் தடிப்புமே ஆளைத்தடுமாறச் செய்துவிடுகின்றன. அனேகமான நூல்கள் எனக்கு பல தடவை தலையணைகளாக மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. நூலின் உள்ளே நுழையவே முடிவதில்லை. தெரியாத்தனமாக எனது பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடம் இது குறித்த நூல்களைக் கேட்டிருந்தேன். விளைவு, அவர் எனக்குத் தொடர்ச்சியாக "தலையணைகளை" வழங்கியபடியே இருக்கிறார்.

Unconscious Mind க்கு பக்கம்பக்கமா விளக்கங்கள் அவற்றுள் இருக்கிறதேயொழிய ஆனால் ஒருவரால் அதைப்புரிந்து கொள்ளமுடியுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் இந்த Unconscious Mind பற்றிய ஆழமான புரிதலை எனக்கு ஏற்படுத்தியவர் என்ற பெருமை அன்ரன் பாலசிங்கத்தையே சாரும்.

இப்போது ப்ரய்ட், லக்கான், குஸ்தாவ் யுங் எல்லாம் அன்ரன் பாலசிங்கம் வழி எனக்குச் சொந்தக்காரர்களாகி விட்டார்கள்.

மேற்படி ஆழ்மனத்தின் கொந்தளிப்பே கனவுக்காட்சிகளாக கட்டவிழ்வதாகவும் அதன் கதவுகளைத் திறந்துகொண்டே ஆழ்மனவுலகைப் ப்ராய்ட் தரிசித்ததாகவும் பாலசிங்கம் குறிப்பிடுகிறாhர்.

உணர்ச்சிகள் ஆசைகளாக அடிமனத்திலிருந்து வெளியேற விழைவதும் அவை நனவு மனத்தில் மறுக்கப்படுவதும், மறுக்கப்பபட்ட ஆசைகள் முகமூடிகள் அணிந்து, வேடங்கள் பூண்டு வேறு வழிகளில் வெளிப்பாடு காண விழைவதும், அதனால் எழும் நெருக்குவாரங்களும், முரண்பாடுகளும் உளச்சிக்கல்களாகவும் , மனக்கோளாறுகளாகவும், ஆளுமைச்சிதைவுகளாகவும் விபரீதத் தோற்றம் கொள்வதாகவும் உளப்பகுப்பாய்வின் நீட்சியை திறம்பட விபரிக்கிறாhர் பாலசிங்கம்.

பிராய்டின் இத்தத்துவம் ஆழ்மனத்து அசைவியக்கத்துடன் நின்றுவிடாமல் மனிதனின் கலை பண்பாட்டு உலகத்திற்கும், மனித நாகரிகத்தின் தோற்றத்திற்கும் விசித்திரமான விளக்கங்களைக் கொடுக்க முனைவதாகக் குறிப்பிடும் பாலசிங்கம் ஆழ்மனத்தில் முடங்கிக் கிடக்கும் ஆசைகள் கனவுலகத்தை சிருஸ்டித்து வெளிப்பாடு காண விளைவது போல், நனவு மனமும் விழிப்பு நிலையில், கற்பனா உலகில் பிரவேசிக்கிறது. கற்பனை வடிவில் மனிதன் விழித்துக்கொண்டு காணும் கனவுகள் புராணங்களாகக், காவியங்களாக, இலக்கியங்களாக கலைவடிவம் பெறுவதாகவும், மனிதனின் அடக்கப்பட்ட பாலுணர்வு ஆசைகள் இன்பநுகர்ச்சி என்ற அதன் இயல்பான இலக்கிலிருந்து விடுபட்டு, கலாசிருஸ்டிப்பு என்ற உன்னத வெளிப்பாடாக உயர் நிலைமாற்றம் (Sublimation) பெறுவதாகவும் விபரிக்கிறார்.

ஆதாம்-ஏவாள், சிவன்-சக்தி கதைகள் இ;ப்படித்தான் உருவாகியது போலும்.

04.

இந்த இடத்தில்தான் "விடுதலையும்" சிக்மண்ட் ப்ராய்டும் தனிமனிதனான என்னுடன் இடைவெட்டும் மையம் ஒன்று உருவாகிறது. எனது சுயவரலாற்று நூலில் இந்த Sublimation குறித்து எழுதியிருக்கிறேன் என்பதை விட பிரித்து மேய்ந்து வைத்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். அது குறித்து இங்கு தொடர்ந்து எழுதுவது வெளியீட்டாளர்களுக்கு சங்கடத்தைத் தரலாம் என்ற வகையில் தவிர்த்துக்கொள்கிறேன். ஏனெனில் ஈழத்தமிழ் வாசகப்பரப்பிற்கு அந்த எழுத்துக்கள் பீதியையும் கிலியையும் ஏற்படுத்தக்கூடியவை. தமிழகப் பரப்பில் ஓரளவிற்கு அந்த எழுத்துக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

பாலியல்உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவமாறுபாடுகள், பாலியல் பதிலீடுகள் குறித்து தர்க்கமான ஆய்வு முறைமை ஒன்றையே நான் என்நூலில் முயன்று பார்த்துள்ளேன். ஏனெனில் ஈழத்தமிழ்ச் சூழலில் பாலியல் அளவிற்கதிகமாகவே பூடகப்படுத்தப்பட்டுள்ளதும் அதே சமயம் குற்றங்களின் மூலமாய் அது இருக்கின்றதென்பதனாலும் இந்த ஆய்வை செய்துள்ளேன்.

பெண்ணுடலை வெறுத்த பட்டினத்தாரிலிருந்து பெண்ணுடலைப் போகப்பொருளாக்கிய மார்க்கே து சாட் வரை இதை நீட்டியுள்ளேன். ஏனெனில் எல்லாமே பாலுணர்வை ஆணாதிக்கப் பரப்பில் வைத்தே விளங்கப்படுத்த முற்படுகின்றன. ஆனால் பெண்ணியம் சாhந்து பெண்ணுடல் சார்ந்து ஒரு பார்வையை நான் பதிவு செய்திருக்கிறேன்.

இந்த இடத்தில் மார்க்கே து சாட் (Marquis de Sade) பற்றி ஒரு சிறு குறிப்பு. "சாடிசம்" என்று சொல்லே இவரிலிருந்துதான் பிறந்தது. வன்கலவி, பாலியல் சித்திரவதை, கொலை என்று தனது எழுத்துக்களை மட்டுமல்ல அதைத் தனது வாழ்வியல் நெறியாகவே கடைப்பிடித்தவர்.

ஒரு நாள் எதேச்சையாக பல்கலைக்கழக நூலகத்தில் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கட்டுரை வாசிக்கக்கிடைத்தது. அது யார் எழுதியது என்று முதலில் தெரியவில்லை. Marquis de Sade இன் எழுத்துக்கள் தடைசெய்யப்படுவதை எதிர்த்து எழுதப்பட்ட மிக ஆழமான கட்டுரை அது.

பின்பு ஒரு நாள் எனது விரிவுரையாளர் எதேச்சையாக குறிப்பிட்ட தகவல் ஒன்றின் மூலம்தான் தெரியவந்தது அது பிரபல இருத்தலியல்வாதியும் பெண்ணிய சிந்தனையாளருமான சிமோன் தி பொவா எழுதியது என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஒரு பெண்ணிய சிந்தனையாளரால் எந்த வகையில் மார்கே து சாட்டை கொண்டாடமுடியும். அதன் பிறகு விரிவாக ஆராய்ந்தபோது வேறு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

தடைசெய்யப்பட்டிருந்த அவரது "The 120 days of Sodom" என்ற நூலை மீண்டும் பதிப்பித்ததே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல உளவியற் சிகிச்சையாளரான டாக்டர் இவான் பிளோக் என்பது. அத்துடன் பின் அமைப்பியல் உளவியலாளரான லக்கான் சேட்டின் "The philosophy in bedroom" நாவலை தலையில் வைத்துக் கொண்டாடும் கதையும். போதாதற்க மிசேல் பூக்கோ, ரோலண்ட் பார்த் போன்றவர்களும் தத்தமது பாhர்வை சார்ந்து சேட்டை சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஈழத்தமிழ்ச்சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தாத மனிதராக marquis de sade இருந்தபோதிலும் நான் அவரை என்நூலில் ஆய்வு செய்திருப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று இயற்கை - மனிதன்- அறம் (Nature- Human -Ethics) என்னும் தத்துவ உரையாடலில் மிக முக்கியமான பங்களிப்பை இவர் செய்துள்ளதாக நான் கருதுவதால். இரண்டு ஒரு தத்துவத்தை (தத்துவம் என்றில்லை எதுவுமே..) முழுமையாக ஆராயாமல் அதை நிராகரிப்பதென்பதுடன் நான் என்றுமே முரண்படுகிறபடியால். இந்த ஆய்வுகள் 'விடுதலை"யினூடாக பாலசிங்கம் விட்டுச்சென்ற நிரப்பப்படாத பக்கங்களை இட்டுநிரப்புவதாக நான் நம்புகிறேன். Simone de Beauvoir, Edward Said, Jacques Derrida, Roland Barthes என்று விடுதலையின் நீட்சியை எழுதிச் சென்றுள்ளேன்.

அதிர்ச்சி அடையாதீர்கள் எனது நூலின் முடிவில் நான் சிக்மண்ட் பிராய்டையே அவரது "உளப்பகுப்பாய்வத் தத்துவத்தை" தூக்கிக்கொண்டு வெளியேறச் சொல்லியிருக்கிறேன்.

ஏனெனில் போராடும் ஒரு இனக்குழுமத்தில் பாலியல் விதிகளின் அளவீடு வரையறை செய்யப்படவேண்டியதாக இருக்கிறது. மிசேல் பூக்கோ சிரிப்பது கேட்கிறது. தன்னைப்போற்றி நுண்ணதிகாரங்களைப் பற்றி விரிவாகப் பேசிய "பரணி கிருஸ்ணரஜனி"யா இந்த அதிகாரத்தை போதிப்பது...

பூக்கோ தயவு செய்து கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான்குறிப்பிட்ட பின்வரும் பந்தியைப் படியுங்கள்... "ஒரு தத்துவம் - கோட்பாடு - சிந்தனை என்பதன் அடிப்படையை நாம் கவனமாக உற்று நோக்கி உள்வாங்கினால் சில உண்மைகள் தெரியவரும். ஒரு புதிய தத்துவம், ஏற்கனவே உள்ள ஒரு வடிவத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சிதைப்பதனூடாகவோ அல்லது அதை முற்று முழுதாக நிராகரிப்பதனூடாகவோதான் தோற்றம் பெறுகின்றது."

என்னளவில் என்றுமே நான் உங்களின் சிஸ்யன்தான். ஆனால் போராடும் இனம் என்னும் போது உங்களைக் கொஞ்சமாகவும் சிக்மண்ட் பிராய்டை சற்று அதிகமாகவும் சிதைக்க வேண்டியுள்ளது. உங்களுக்குத் தெரியாததா பூக்கோ!

ஒரு புதிய தத்துவத்தின் அடிப்படையே இதுதானே....

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 05 - தொடர்ச்சி

05.

அத்துடன் ஒரு தத்துவத்தை - கோட்பாட்டை அப்படியே நாம் பிரயோகித்துப் (apply) பார்க்கமுடியாது. ஏனெனில் பெரும்பாலான தத்துவங்கள் மேலைத்தேய சூழலிலிருந்தே தோற்றம் பெற்றவை. அத்துடன் மேற்கிலேயே பல தத்துவங்கள் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விரிதளங்களும்,

வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 06

01.

வாழ்க்கையை அதன் ஒரு முனையில் இல்லாமல் பல முனைகளில் திறந்து காட்டிய - வாழ்க்கையை ஒருவருக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் திறந்து காட்டிய ஒரு புரட்சிகரப் போராளியைப்போல் வாழ்ந்திருக்கிறேன். அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறேன்.

-பாப்லோ நெருடா

02.

எனது இருப்பே எனக்கு முதன்மையான உண்மை. எனது இருப்பு நிலையிலிருந்தே நான் என்னையும் இந்த உலகத்தையும் இனம் கண்டு கொள்கிறேன். நானே எனக்கு வெளிச்சம். நானே எனது வழிகாட்டி. நானே எனது இருப்பிற்கு ஆதாரம். என்னிலிருந்தே எல்லாம் எனக்குத் தோற்றப்பாடு கொள்கிறது.நான் வாழும் இந்த உலகமும், நான் உறவுகொள்ளும் மற்றவனும், என்னைச்சூழ இருப்புக்கொள்ளும் எல்லாமுமே எனது அனுபவ தரிசனத்தால் அர்த்தம் பெறுகிறது.

இந்த உலகத்தில் நான் ஒரு தனிமனிதப் பிறவி. இனம், மதம், தேசம், சமூகம், என்ற முழுமையில் - மொத்தத்தில்- கூட்டுறவில் நான் கட்டுண்டு கிடந்தபோதும் நிதர்சன வாழ்வில் நான் தனித்துவமானவன். முழுமை என்ற பெருவெள்ளம் என்னை அடித்துச்சென்ற போதும், நான் என்னை நானாக, ஒரு தனித்துவ ஜீவனாக, ஒரு சுதந்திரப்பிறவியாக, நானே எனக்குப் பொறுப்பானவனாக, நானே எல்லாவற்றையும் தெரிவு செய்பவனாக, தீர்மானிப்பவனாக, எனது வாழ்வனுபவத்திற்கு நானே உரித்தானவனாக, நான் என்னை, எனது தனித்துவத்தை உணர்கிறேன். மீளமுடியாதவாறு தனிமனிதம் என்ற சிலுவையில் நான் அறைபட்டுக் கிடக்கிறேன்.

இருப்பிய ((existentialism) தரிசனம் குறித்த விளக்கவுரையில் அன்ரன் பாலசிங்கம் - விடுதலை (பக்கம்- 209, 210)

03.

எந்தப் பொருளுக்கும் ஒரு தன்னியக்கம் இருக்கிறது. உள்ளீட்டான சுய-இயக்கம் இருக்கிறது. இந்த சுய- இயக்கம் முரணிய தன்மையைக் கொண்டது. அதாவது ஒன்றுக்கொன்று மாறான, முரணான எதிர்வுத் தன்மைகளைக் (opposite tendencies) கொண்டது. ஒரு பொருளில் இந்த எதிர்வுத் தன்மைகள் ஒன்றித்திருக்கும் நிலை எதிர்வுகளின் ஒன்றியம் (unity of the opposites) எனப்படும். இந்த எதிர்வு சக்திகள் ஒன்றித்திருந்து அதே சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிகழ்த்தும் பிணக்காக, போராட்டமாக அந்தப்பொருளின் வாழ்வியக்கம் அசைகிறது. இந்த முரண்பாடு முற்றிவெடிக்கும் பொழுது மாற்றம் நிகழ்கிறது. புதியது பிறக்கிறது. எனவே, எந்தப் பொருளது இயக்கத்திற்கும், மாற்றத்திற்கும், புத்தாக்கத்திற்கும், புதிய வளர்ச்சிப்போக்கிற்கும் அந்தப் பொருளில் உள்ளீடாக - அதன் உள்ளியக்கமாகச் செயற்படும் முரணியமே காரணியாக இருக்கிறது. சிந்தனை உலகிலும் சரி, சமூக உலகிலும் சரி, இயற்கையின் சகல பொருட்களிலும் சரி தோற்றம், மாற்றம், முன்னேற்றம் என்பன புற சக்திகளால் தூண்டப்படுவதில்லை. அது உள்ளீட்டாக, உள்- முரண்பாட்டின் உந்துதலால் நிகழ்கிறது.

இயங்கியல் விதியின் (law of dialectics) அடிப்படையான முரணியம் (contradiction) பற்றி அன்ரன் பாலசிங்கம் - விடுதலை( பக்கம்- 112, 113)

01.

தத்துவம் என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு புள்ளியில் இருந்து பிறந்து சஞ்சரிக்கும் ஒரு விடயம். எனவே இத் தொடரை கடந்த பாகத்துடனேயே முடிவின்றி அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஆனால் எதற்குமே விசித்திரமான வியாக்கியானங்களை கொடுத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்ளும் எமது சமூக மனம் இதற்கும் ஏதும் விசித்திரங்களைக் கற்பித்துவிடக்கூடாது என்பதும் இம்முடிவுரையை எழுதுவதற்கான கூடுதல் காரணங்களில் ஒன்று.

இத்தொடரை இத்துடன் நிறுத்துவதற்கான முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. அதாவது மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட "விடுதலை" என் தொடரில் சற்று பூடகமடைந்துள்ளதாக நான் உணர்கிறேன். அடிப்படையில் நான் ஒரு விமர்சகன். அதன் அடிப்படையில் இத்தொடரை அன்றொரு நாள் முழுமையாக வாசிப்புக்குட்படுத்தியபோது இந்த அனுபவம் எனக்குக் கிட்டியது. இது அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதருக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என்றே கருதுகிறேன். எழுதிய எனக்கே இந்த அனுபவம் கிட்டும்போது சாதாரண வாசக மனத்திற்கு எத்தகைய வாசிப்பு கிட்டியிருக்கும் என்று யோசித்ததன் விளைவும் இத் தொடரின் முடிவுக்குக் காரணம்.

நூற்றுக்கணக்கான பக்கங்களில் மிக விரிவாக எழுதப்பட்ட "விடுதலை" குறித்த எனது அனுபவப் பகிர்வுகளை ஒரு சில பக்கங்களில் அறிமுகம் செய்வதென்பது சற்று சிரமமான காரியமும்கூட. இத்தொடர் இருண்மையடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானது இதுதான் என்று நினைக்கிறேன்.

ஒரு சிறிய உதாரணம். பாலமுருகன் என்பவரால் எழுதப்பட்ட "சோழகர் தொட்டி" என்று ஒரு நாவல், வீரப்பன் கதை என்ற நண்பர் ஒருவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு சென்றிருந்தபோது நானும் என் மனைவியும் கடை கடையாக அலைந்து திரிந்து அதை வாங்கினோம். (அதைப்படித்துவிட்டு அவள் கண்கலங்கியது இன்றும் என் மனத்திரையில் நிழலாடுகிறது. ஏனெனில் மெல்லிய மனம் படைத்தவர்கள் குறிப்பாகப் பெண்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அந்நூலைத் தொடர்ந்து வாசிக்க முடியாது. அந்தளவிற்கு வன்முறை சித்திரிக்கப்பட்டுள்ளது.) மிகச் சிறந்த படைப்பு அது. வீரப்பன்தான் கதையின் மையமாக - அவரைச்சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தபோதும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் நாம் வீரப்பனைக் காண முடியாது. ஆனால் ஒவ்வொரு பக்கத்தையும் வீரப்பன் கடந்தபடியே இருப்பார். வீரப்பனை பிடிப்பதாகக்கூறி காட்டுக்குள் நுழைந்து மலைவாழ்மக்களின் வாழ்வியல்மீது கர்நாடக- தமிழ்நாடு கூட்டு விசேட அதிரடிப்படையினர் நடத்திய வன்முறையிலிருந்து பிறந்ததே இப் படைப்பு.

இதே போன்ற ஒன்றுதான் எனது சுயவரலாற்று நூலும். "விடுதலையையும்" அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் குறித்தும் நேரடியான தரிசனம் ஒன்றை நீங்கள் என்நூலில் காணமுடியாது. ஆனால் விடுதலையின்வழி வெளிப்பட்ட அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை என்நூலின் பெரும்பாலான பக்கங்களை கடந்தபடியே இருப்பார். நூல் வெளிவரும்போது அதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள். "விடுதலை" குறித்து விரிவாக - எளிமையாக ஆனால் நுட்பமான ஒரு உத்தியைக் கையாண்டு எழுதியிருக்கிறேன்.

அதை பிடித்து கண்முன்னால் நிறுத்துவதென்பது சற்றுக் கடினமாக இருக்கிறது. எனவே இத்தொடரை நிறுத்தி துரிதமாக நூலை வெளியிடுவதே சிறந்ததென்று நினைக்கிறேன்.

அன்ரன் பாலசிங்கம் மறைவிற்கு முன்னரும் சரி பின்னரும்கூட அவரை எல்லாவழியிலும் புரிந்துகொண்ட ஈழத்தமிழ்சமூகம் அவரது தத்துவ அடையாளத்தைக் காணத்தவறியிருந்தது. இதை அடையாளங்கண்டே அவருடைய பன்முக அடையாளத்தை உலகறியச் செய்யும் நன்நோக்கத்தடன் "அப்பால் தமிழ்" குழுமத்தினர் என்னை அணுகி எனது நூலிலுள்ள "விடுதலை" குறித்த விடயங்களை சுருக்கி எழுதித்தருமாறு கேட்டிருந்தனர். எனது சுயவரலாற்றில் கலந்துள்ள அந்த விடயத்தை எப்படி பிரித்தெழுதுவதென்று தெரியாமலேயே ஒப்புக்கொண்டேன்.

எனது சுயம் குறித்த தரவுகள் அதிகமாக வருமே என்ற ஐயத்தை வெளியிட்டதற்கு அது விடுதலையை நெருங்கச்செய்வதற்கான ஒரு உத்தியாக இருக்கும் தயங்காமல் எழுதுங்கள் என்று ஊக்குவித்திருந்தனர். அவர்களுடைய நோக்கம் மிகத்தெளிவானது. ஒரு தத்துவார்த்த ரீதியான முற்போக்கான ஈழத்தமிழ் சமூகத்தைக் கனவு கண்டு எழுதப்பட்ட "விடுதலை" ஈழத்தமிழர்களால் பரவலாக வாசிக்கப்படவேண்டும், அதனூடாக அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமையின் பணியின் ஆழம் புரியப்பட்டு அவருடைய வெற்றிடம் இட்டுநிரப்பப்படவேண்டும் என்பதாக அது இருந்தது. இத் தொடரினூடாக அவர்களுடைய நோக்கத்தின் பெரும்பகுதியை நிறைவேற்றிவிட்டதாகவே நம்புகிறேன்.

ஏனெனில் பலராலும் கவனிக்கபடாதிருந்த "விடுதலை" இன்று தீவிரமான வாசிப்புக்குட்பட்டிருப்பது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.