Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? செய்தியாளனின் நேரடிச் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? செய்தியாளனின் நேரடிச் சாட்சியம்

அ.நிக்ஸன்

சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன்.

அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர்காணல்களில் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தனர்.

–புலிகள் மீதான கோபம்–

டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனையவர்களுக்குப் புலிகள் மீதிருந்த கோபம் சற்றுத் தணிந்து வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி குறித்த நியாயப்பாடுகளையும் இவர்கள் அப்போது வெளிப்படுத்தியிருந்தனர். (தமிழ் ஈழக் கோரிக்கையை அல்ல) இதே காலப்பகுதியில் வரும் தமிழ் மக்கள் சார்ந்த செய்திகளில்– தமிழ்க் கட்சிகள் கூட்டாக வேண்டுகோள், அல்லது தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை என்றுதான் நாங்கள் செய்திகளுக்குத் தலைப்பிட்டு எழுதியிருந்தோம்.

அப்போது செய்தியாளராக இருந்த எஸ். ஸ்ரீகஜனும் (இவர் தற்போது வீரகேசரியின் பிரதம ஆசிரியர்) நானும் இவ்வாறான செய்திகளைத் தலைப்பிட்டுக் கூடுதலாக எழுதியிருந்தோம். ஆனால் மேற்படி கட்சிகள் கூட்டாக இணைந்து ஒருபோதும் அறிக்கை வெளியிட்டிருக்காது.

எனினும் நாங்கள் இருவரும் ஒவ்வொருவருடனும் தொலைபேசியில் குறித்த ஒரு விடத்தைப் பற்றிப் பேசிவிட்டுப் பின்னர் அதனைத் தமிழ்க் கட்சிகளும் கூட்டாக வேண்டுகோள் என்று தலைப்பிடுவோம். தினக்குரல் பத்திரிகையிலும் அவ்வாறுதான் தலைப்பிட்டுச் செய்திகளை எழுதுவார்கள்.

வீரகேசரியில் நாங்கள் அப்படி எழுதும் செய்திகளை வைத்து எமது பிரதம ஆசிரியாக இருந்த எஸ். நடராஜா ஆசிரியர் தலையங்கங்களை எழுதித் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு வலியுறுத்துவார். தமிழ்க் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்துவிட்டர்கள் என்பது போன்றதொரு தோற்றப்பாட்டைத் தனது ஆசிரியர் தலைங்கத்தில் அவர் வெளிப்படுத்தியும் விடுவார்.

–பதினொரு தமிழக் கட்சிகள்–
இதே காலப்பகுதியில்தான் பதினொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்புத் தொடர்பாக குமார்பொன்னம்பலத்தின் கொழும்பு கொள்பிட்டி குயின்ஸ் வீதியில் உள்ள இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி கட்சிகளோடு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில மலையகக் கட்சிகளும் அதில் பங்கெடுத்திருந்தன.

(அப்போதுதான் மனோ கணேசனின் அரசியல் பிரவேசம் ஆரம்பம். மலையகக் கூட்டுக் கட்சிகளின் மயில் சின்னத்தில் போட்டியிட்டு மேல் மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்திருந்தார்.)

அது பற்றிய செய்திகளை கூடுதலாக நாங்கள் வீரகேசரியில் எழுதியிருந்தோம். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி குமார்பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அது பற்றிய செய்திகளை எழுத முடியவில்லை. அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக எங்களுக்குக் கருத்துக்களைக் கூறினாலும் நாங்கள் அவற்றை தமிழ்க் கட்சிகள், கூட்டாகக் கோரிக்கை என்றுதான் செய்திக்குத் தலைப்பிட்டு எழுதுவோம்.

இப்படி இருந்தபோதுதான் 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி விநாயகமூர்த்தி, அதன் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், ஊடகவியலாளர்களான சிவராம், எஸ்.ஜே திஸநாயகம், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் அமரர் குமார்பொன்னம்பலத்தின் வீட்டில் சந்தித்து உரையாடினர்.

-மட்டக்களப்பில் ஆரம்பம்-
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்த உரையாடல்கள் மட்டக்களப்பில் முதலில் இடம்பெற்றிருந்தன. செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி மட்டக்களப்பில் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றின் பின்னர்தான் அந்தச் சந்திப்புகள் நடந்தன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிஜராஜா, ஜோசப்பரராஜசிஙிகம் மற்றும் செல்வராசா ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தற்போது சுவிஸ்லாந்தில் வசிக்கும் ஊடகவியலாளர் துரைரெட்ணம் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். கொழும்பில் குமார்பொன்னம்பலத்தின் வீட்டில் இடம்பெற்ற மேற்படி உரையாடல்களையடுத்துக் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மற்றொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரபல தொழிலதிபர் வடிவேற்கரசன், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், தில்லைக்கூத்தன் எனப்படும் தில்லைநடராஜா. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த நல்லையா குமரகுருபரன், அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவராக இருந்த எஸ். கைலாசப்பிள்ளை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அபிவிருத்தித் திட்ட அதிகாரி நிமலன் கார்த்திகேயன், ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதநிதிகளும் கூட்டத்தில் பங்குகொண்டனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் ஊடகவியலாளர் சிவராம் கலந்துகொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்திலேயே மேற்படி நான்கு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதென முடிவு செய்யப்பட்டது. வடக்குக் கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தமிழர்களின் முக்கிய பிரதிநிதியாகப் புலிகளை தமிழ் மக்கள் ஏற்றுள்ளமையினால் அவர்களோடு அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமெனத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

நான்கு கட்சிகளும் அதனை ஏற்றுக் கொண்டன. அதன்படி 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை வடிவேற்கரசனின் கொள்பிட்டியில் உள்ள வீட்டில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சம்பந்தன், அகில இலங்கைத் தமிழக் காங்;கிரஸ் சார்பில் குமரகுருபரன், ஈபிஆர்;எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் சிறிகாந்தா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அன்றைய தினம் நானும் ஸ்ரீகஜனும் மாத்திரமே செய்தியாளர்களாக வடிவேற்கரசனின் இல்லத்திற்கு முன்பாக நின்றிருந்தோம். ஓப்பந்தம் கைச்சாத்திட்டு முடிய இரவு 10 மணியாகிவிட்டது. இந்த நான்கு கட்சிகளும் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கும் புலிகளுக்கும் எந்தவிதாமான தொடர்புகளும் இல்லை. புலிகள் தலையீடும் செய்யவில்லை. ஆனாலும் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரரித்துப் புலிகள் வன்னியில் இருந்து அறிக்கை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது.

tna

-வாயோ திறக்காத புலிகள்-
எனினும் புலிகளின் தலைப்பீடம் அது பற்றி வாயே திறக்கவில்லை. இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கொள்பிட்டியில் உள்ள ஹொலிடேயின் ஹோட்டலில் வெளியிடப்பட்டது. மேற்படி நான்கு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென்பதே அந்த விஞ்ஞாபனத்தின் முக்கிய அம்சமாகக் காணப்பட்டது.

நான், ஸ்ரீகஜன், மட்டக்களப்பு நிருபர் நடேசன். தினக்குரல் பத்திரிகையில் இருந்து ரவிவர்மன் போன்ற வேறு சில செய்தியாளர்களும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் வைபவத்தில் பங்குபற்றியிருந்தோம். தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

நீண்டகால இடைவெளியின் பின்னர் முதன் முதலாக சம்பந்தன் திருகோணமலையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுகின்றார். தேசியப் பட்டியலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுகிறார்.சந்திரிகாவின் கட்சி 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் பெரும்பான்மைப் பலம் இல்லாதால் நாடாளுமன்றம் ஒரு வருடத்தில் கலைக்கப்பட்டு, 2001 ஆம் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேற்படி தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே போட்டியிட்டிருந்தன. 2001 ஆம் ஆண்டுதான் மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரமே நான்கு கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிட்டு 15 ஆசனங்களைப் பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது.

இந்த அரசாங்கமே 2002இல் நோர்வேயின் ஏற்பாட்டில் செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டுப் பேச்சு நடத்தியது.  இதனால் சந்திரிகா- ரணில் முரண்பாடு ஏற்பட்டு ரணில் அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மூன்று முக்கிய அமைச்சுகளை சந்திரிகா பறித்தெடுத்தார். அதனால் உருவான மனக் கசப்புகள் இறுதியில் ரணில் அரசாங்கத்தைக் கலைக்குமளவுக்குச் சென்று விட்டது.

இதனால் மீண்டும் 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இங்கேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதற் தடவையாக மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலை உருவானது. அப்போதுதான் முரண்பாடுகளும் தோன்றியது. ஆனந்த சங்கரி கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போட்டியிட அனுமதிக்க விரும்பவில்லை.

ஆகவே முரண்பாடு இங்கேதான் உருவெடுத்தது. 2002 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி சிவசிதம்பரம் உயிரிழந்தமையினால் ஆனந்த சங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகப் பதவியேற்றிருந்தார். அன்றில் இருந்து ஆனந்த சங்கரிக்குப் புலிகள் பற்றிய முணுமுணுப்புகளை கொழும்பில் உள்ள என்னைப் போன்ற செய்தியாளர்கள் பலருக்குச் சொல்ல ஆரம்பித்துவிட்;டார்.

ஆனால் அந்த முணுமுணுப்புகள் எதுவுமே செய்தியாக வெளிவரவில்லை. ஆனந்த சங்கரிக்கும் அவரது குடும்பத்துக்கும் புலிகள் மீது ஆரம்பகாலம் முதலே முரண்பாடு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனாலும் நோர்வேயின் ஏற்பாட்டுடன் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்தில் முரண்பாடுகளில் உடன்பாடாக ஆனந்த சங்கரி கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட புலிகளின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்தும் வந்திருந்தார்.

-ஆனந்த சங்கரி-
புலிகளின் செயற்பாடுகளையும் ஆதரித்து அப்போது அவர் கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் (திகதி ஞாபகம் இல்லை) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆனந்த சங்கரி, புலிகள் பற்றிக் காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக சமாதானப் பேச்சுக்களின்போது புலிகள் ஏன் தாங்கள் மட்டும் பங்குகொள்கின்றனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சம்பந்தனையாவது அழைத்துச் செல்லலாமே என்று அவர் என்னிடம் ஆதங்கப்பட்டார்.

இதைப் பற்றி நீங்கள் ஏன் சுட்டிக்காட்டி எழுதக் கூடாதெனவும் அவர் என்னிடம் கேள்வி தொடுத்திருந்தார். சரி– நீங்கள் சொன்னதைச் செய்தியாக எழுதலாமா என்று நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன். ஏனெனில் பல தடவை இவர் இப்படி என்னுடன் தொலைபேசியில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நான் கேட்டபோது, அவரும் ஒரு கட்டத்தில், ஓம் எழுதடா தம்பி என்றார்— நானும் அவர் கூறியதை அப்படியே எழுதாமல் கொஞ்சம் சுயதணிக்கை செய்துதான் எழுதினேன்.

ஞாயிறு வாரஇதழ் ஆசரியர் வீ. தேவராஜ் அந்தச் செய்தியை முன்பக்கத்தில் பெரிதாகப் பிரசுரித்தும்விட்டார். இதனால் ஆனந்த சங்கரியின் புலி எதிர்ப்புக் கோசம் குறையவேயில்லை என்ற தகவல் மேலும் உறுதியானது. அன்றில் இருந்து வெளிப்படையாக ஆனந்தசங்கரி புலிகள் பற்றி ஊடகங்களுக்கு அறிக்கைகளையும் வெளியிட ஆரம்பித்துவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதனால் குழப்பமும் உருவானது.

(கூட்டணியில் உள்ள ஏனைய உறுப்பினர்களைவிட, ஆனந்த சங்கரி தான் நினைத்தை நேரடியாகச் சொல்லும் பண்புடையவர். அதனாலேயே அவர் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது)

2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட ஆனந்த சங்கரி மறுப்புத் தெரிவித்தார். கொள்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது.

அடிதடியும் நடந்தது. செய்தி சேகரிக்கச் சென்றது இந்த மோதலை நான் நேரடியாகப் பார்த்திருந்தேன். ஆனந்த சங்கரியையும் ஒரு சில உறுப்பினர்களையும் தவிர அனைத்து உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். ஆனாலும் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் யாருக்கு என்று கேட்டுக் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

அதேவேளை. மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்று குறிப்பிட்டு அப்போதைய தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவுக்குக் கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பினார். சம்பந்தனை கட்சியின் தலைவராகவும் கட்சியின் மத்திய குழு அவசரமாகக் கூடி நியமித்திருந்தது. ஆனால் ஆனந்த சங்கரியும் விடவில்லை.

-தமிழரசுக் கட்சி–
தமிழரசுக் கட்சியின் செயலாளராக ஆவரங்கால் சின்னத்துரை என்பவரே பதவி வகிப்பதாகக் தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பினார். அப்போது சின்னத்துரை லன்டனில் வசித்திருந்தார். அங்கிருந்து உறுதிப்படுத்திக் கடிதம் ஒன்றை அவரும் ஆணையாளருக்கு அனுப்பியிருந்தார்.

வீட்டுச் சின்னத்திலும் இவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதே ஆனந்த சங்கரியின் நோக்கமாக இருந்தது. எவ்வாறாயினும் இறுதியில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவே என்பதை தேர்தல்கள் ஆணையாளர் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உறுதிப்படுத்தினார். இதனால் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்தது. அன்றில் இருந்தே தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

ஆனந்த சங்கரி உள்ளிட்ட சில உறுப்பினர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறியது. இந்த நிலையில் உதயசூரியன் சின்னம் யாருக்கு என்று கேட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பும் ஆனந்த சங்கரிக்குச் சாதகமாக வெளியாகியது. இதனால் மாவை சேனாதிராஜா அணி உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்து.

எனினும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது பற்றிக் கவலைப்படவேயில்லை. எனினும் தேர்தல் விதிகளுக்கு அமைவாக ஆனந்த சங்கரியும் 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த மோதல்களின்போது சிவராம் எந்தவிதமான தலையீடும் செய்யவில்லை. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், புளொட். ரெலோ. ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளும் அமைதி காத்துக்; கொண்டிருந்தன. ஏனெனில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உள்ளகப் பிரச்சினை. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற முறையில் மாவை சேனாதிராஜாவுக்கே ஆதராவாகப் பேசியிருந்தன.

விடுதலைப் புலிகளும் அமைதியாகவே இருந்தனர். புலிகளின் செய்தியாளர் மாநாடுகளுக்காக நாங்கள் கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்லும்போது தமிழ்ச்செல்வனிடம் இந்த மோதல்கள் பற்றிக் கேட்டால், அவர் சிரிப்போடு அமைதியாகிவிடுவார். இந்த மோதல்கள் முடிவடைந்து தமிழரசுக் கட்சியை மையமாக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியும் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர் மைய அரசியலுக்குள் பிரவேசித்தது எனலாம். இந்த மாற்றத்தின் பின்னர் பெப்ரவரி 23 ஆம் திகதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு விடயத்திலேதான் புலிகளின் மாவட்டத் தளபதிகள், அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் தலையிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வேட்பாளர்களாகச் சேர்க்கப்பட்டனர். மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம் தவிர்ந்த அனைத்து வேட்பாளர்களுமே புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் தயாரித்த பட்டியல்தான் வழங்கப்பட்டிருந்தன. மட்டக்களப்புப் பட்டியல் தயாரிப்பில் சிவராமின் ஆலோசனையே கூடுதலாக ஏற்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைதான். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் தங்கள் சார்பாக வழங்கிய வேட்பாளர்களை நீக்குங்கள். அல்லது மாற்றுங்கள் என்ற எந்தவொரு தலையீடுகளையும் புலிகளின் மாவட்டத் தளபதிகள் மேற்கொள்ளவில்லை என்றுதான் இந்தக் கட்சிகளின் பிரமுகர்கள் கூறுகின்றனர்.

–புளொட்டின் நிலைமை–
அதேவேளை, 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேற்படி நான்கு கட்சிகளோடும் சேர்ந்து புளொட் இணைந்திருக்க முடியும். ஆனால் புளொட்டை இணைத்துக் கொள்வதில் சிவராமின் கருத்துக்கள் தடையாக இருந்தாக முக்கிய பிரமுகர் ஒருவர் என்னிடம் கூறினார். மேற்படி நான்கு கட்சிகளும் தடையாக இருக்கவில்லை என்றும் அன்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் அன்று சிவராம் இதனை மறுத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை வெளியேற்றித் தமிழரசுக் கட்சியை உள்ளே கொண்டு வந்தபோது புளொட்டை இணைத்துக் கொள்வது பற்றிப் பேசப்பட்டது. ஆனால் சித்தார்த்தன் விரும்பவில்லை என்றே முக்கிய பிரமுகர் ஒருவர் சொன்னார். எனினும் சித்தார்த்தன் கூட்டமைப்பில் இணைந்து வவுனியாவில் போட்டியிட்டிருந்தால், ரிஷhட் பதியுதீன் வவுனியாவில் வெற்றிபெற்றிருக்க முடியாதென்ற கருத்து அப்போது நிலவியது.

இந்தத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்துப் புலிகள் பெரியதாக அலட்டிக் கொள்ளவேயில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தினால் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்குத் தீர்வைக் காண முடியாது என்பது புலிகளின் அசையாத கருத்து.

எனினும் கடந்த காலங்களைப் போன்றல்லாது, இந்தக் கட்சிகள் தங்கள் போராட்டத்திற்குப் பக்கபலமாக இருந்தாலேபோதும் என்று புலிகளின் தலைமை எண்ணியிருக்கக் கூடும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டதும். நோர்வேயின் எற்பாட்டுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த சமாதானப் பேச்சில் இலங்கை அரசாங்கம் நேர்மையோடு செயற்பட வேண்டுமெனக் கோரியிருந்தார்.

அது மாத்திரமல்ல முதலாவது நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதும் இந்த விடயத்தை சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். புலிகளின் போராட்டத்தின் நியாயத் தன்மைகள் பற்றியும் அவர் கூறியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் மாவீரர் நாள் உரையின் முக்கிய பகுதிகளைச் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழியில் எடுத்துக் கூறுவார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையான நாடாளுமன்ற கன்சாட் அறிக்கைகளை வாசித்தால் சமபந்தனின் மாவீரர் நாள் உரைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பைக் காணலாம். நான் நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்தபோது ஏனைய தமிழ் பத்திரிகைகளின் நாடாளுமன்றச் செய்தியாளர்களோடு சேர்ந்து எமக்குள் சம்பந்தனின் உரை குறித்துப் பேசியதுண்டு. அதாவது மற்றுமொரு மாவீரர் நாள் உரை எனவும் சம்பந்தன் ஆங்கிலத்தில் அதுவும் சிங்கள நாடாளுமன்றத்தில் நிகழ்த்துகிறாரெனவும் பேசிச் சிரிப்பதுண்டு.

தமிழ்நெற் ஆங்கில செய்தி இணையத் தளத்தில் வெளியான மாவீரர் நாள் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பையே சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வாசித்திருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் புலிகள் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு மேலதிகமாகத் தமது கருத்தையும் சேர்த்தே தமது நாடாளுமன்ற உரைகளை நிகழ்த்தியிருந்தார்கள்.

–புலிகளுக்கு விசுவாசமா?–
புலிகளுக்கு விசுவாசமாக இருப்பதுபோன்ற தொனியில் அக்காலத்தில் அவர்களின் நாடாளுமன்ற உரைகள் இருந்தமை கண்கூடு. ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அவ்வாறான உரைகளைத் தவிர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகத்துக்கு மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதாலேயே புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்றது என்பதை சம்பந்தன் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாததில் கூறியிருந்தார். அதுமாத்திரமல்ல அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, அமைதியாக இருந்த புலிகள், 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே தமது மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் மூலமாகக் குறிப்பிட்ட சில தலையீடுகளைச் செய்திருந்தபோது, தமது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டால் அதன் பின்னரான காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குப் பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப நகர்த்துவார்கள் என்று நம்பியிருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் சர்வதேசம் எதிர்பார்க்கின்ற ஜனநாயகம், இலங்கை ஒற்றையாட்சி அரசு கூறுகின்ற ஜனநாயகம் என்ற கட்டமைப்புக்குள்ளும், மிதவாத அரசியல் தலைவர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்கின்ற தமிழரசுக் கட்சித் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் கொஞ்மாவது திருப்திகொள்ளட்டும் என்ற நோக்கில் புலிகளின் தலமைப்பீடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தியிருக்கலாம்.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பின்னர் உலகத்தில் உள்ள அனைத்துப் பயங்கரவாதிகளையும் தடை செய்ய வேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குள், தேசிய இனங்களின் விடுதலை வேண்டிப் போராடிய இயக்கங்களும் தவிர்;க்க முடியாத சூழலில் உள்ளடக்கப்பட்டன.

இதனை இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்தி விடக்கூடாதென்ற சிந்தனைப் போக்கில் 2001ஆம் ஆண்டு இறுதியில் புலிகள் தாமகவே ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார்கள் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்தில்லை. இதேகாலத்தில்தான் மேற்படி நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முற்றுமுழுதாக இந்த இடைவெளிகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட்ட சாதாரண கட்சி அரசியலை முன்னெடுப்பதையே நோக்கமாக் கொண்டு செயற்பட்டிருந்தனர் என்பதை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் கோடிகாட்டுகின்றன.

–மக்களிடம் உள்ள கொள்கை
ஆனாலும் தமிழ்த்தேசிய அரசியல் கொள்கைகள் மக்களிடத்தில் தாராளமாகவே இருக்கின்றது என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களை உசுப்பேத்தி முன்னாள் போராளிகளைத் தியாகிகளாக வர்ணித்து ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குக் கேட்கின்றனர். முன்னாள் போராளிகளை தியாகிகளாக இவர்கள் வர்ணிக்கவோ புகழவோ தேவையில்லை. ஏனெனில் அந்தப் போராட்டம் ஈழத் தமிழர்களின் மாறாத அடையாளம்.

மாகாண சபைகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. ஆனாலும் குறைந்தபட்சம் இருக்கின்ற ஒரேயொரு அரசியல் தீர்வு இந்த மாகாண சபைக்கான 13 ஆவது திருத்தச் சட்டம்தான். அதுவும் ஆயுதப் போராட்டத்தினால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை. தமிழரசுக் கட்சியின் மிதவாத அரசியல் செயற்பாடுகளினாலோ, அவர்களின் அரசியல் சாணக்கியத்தினாலோ மாகாணசபைகள் உருவாக்கப்படவில்லை.

2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பு என்றுதான் நாங்கள் அன்று செய்திகளில் எழுதியிருந்தோம். 2004ஆம் ஆண்டு புலிகளின் மாவட்டத் தளபதிகள், அரசியல்துறைப் பொறுப்பாளர்களின் தலையீட்டுக்குப் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சொல் அதிகமாகச் செய்திகளில் பயன்படுத்தப்பட்டது.

2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில்  பங்கெடுத்திருந்த நல்லையா குமரகுருபரனுக்கே இரண்டாது தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனவே, முதலாவது தேசியப் பட்டியலில் தெரிவாகியிருந்த சிவசிதரம்பரம் 2002இல் இறந்ததும் அவருடைய இடத்துக்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருகோணமலையில் இருந்து இரா.துரைரெட்ணசிங்கம் அந்த இடத்திற்குத் தெரிவாகினார்.

அக்காலத்தில் வீரகேசரியில் வெளியான எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் இந்தத் தகவல்கள் உண்டு. இன்னுமொரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நிறுவனம் 2001 ஆம் ஆண்டுதான் சுடர் ஒளி என்ற பத்திரிகையை கொழும்பில் ஆரம்பித்திருந்தது. வீரகேசரியில் நான் பணியாற்றியருந்தாலும் சுடர் ஒளி பத்திரிகைக்கு நான் செய்திகளை வழங்கினேன். அதில் நாடாளுமன்றச் செய்திகள் முக்கியமானவை.

ஊடக ஒழுக்க விதிகளுக்கு மாறானது என்று தெரிந்தும் தினக்குரல் பத்திரிகைக்குப் பின்னர் மற்றுமொரு தமிழ் பத்திரிகை கொழும்பில் வெளி வருகின்றது என்ற மகிழ்சியோடும் உணர்வோடும் குறிப்பிட்ட சில காலத்திற்குச் செய்திகளை வழங்கியிருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் பற்றிய செய்திகளையும் சுடர் ஒளி முக்கியப்படுத்தி பிரசுரித்திருந்தது.

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-17/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

97785918_2856757074443492_45756883341515

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இப்படி இருந்தபோதுதான் 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி விநாயகமூர்த்தி, அதன் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், ஊடகவியலாளர்களான சிவராம், எஸ்.ஜே திஸநாயகம், ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் அமரர் குமார்பொன்னம்பலத்தின் வீட்டில் சந்தித்து உரையாடினர்.

 

13 hours ago, கிருபன் said:

புலிகளுக்கு விசுவாசமாக இருப்பதுபோன்ற தொனியில் அக்காலத்தில் அவர்களின் நாடாளுமன்ற உரைகள் இருந்தமை கண்கூடு. ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அவ்வாறான உரைகளைத் தவிர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகத்துக்கு மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதாலேயே புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்றது என்பதை சம்பந்தன் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாததில் கூறியிருந்தார். அதுமாத்திரமல்ல அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

 

13 hours ago, கிருபன் said:

2004 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையான நாடாளுமன்ற கன்சாட் அறிக்கைகளை வாசித்தால் சமபந்தனின் மாவீரர் நாள் உரைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பைக் காணலாம். நான் நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்தபோது ஏனைய தமிழ் பத்திரிகைகளின் நாடாளுமன்றச் செய்தியாளர்களோடு சேர்ந்து எமக்குள் சம்பந்தனின் உரை குறித்துப் பேசியதுண்டு. அதாவது மற்றுமொரு மாவீரர் நாள் உரை எனவும் சம்பந்தன் ஆங்கிலத்தில் அதுவும் சிங்கள நாடாளுமன்றத்தில் நிகழ்த்துகிறாரெனவும் பேசிச் சிரிப்பதுண்டு

 

13 hours ago, கிருபன் said:

ஆனால் அன்று சிவராம் இதனை மறுத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை வெளியேற்றித் தமிழரசுக் கட்சியை உள்ளே கொண்டு வந்தபோது புளொட்டை இணைத்துக் கொள்வது பற்றிப் பேசப்பட்டது. ஆனால் சித்தார்த்தன் விரும்பவில்லை என்றே முக்கிய பிரமுகர் ஒருவர் சொன்னார். எனினும் சித்தார்த்தன் கூட்டமைப்பில் இணைந்து வவுனியாவில் போட்டியிட்டிருந்தால், ரிஷhட் பதியுதீன் வவுனியாவில் வெற்றிபெற்றிருக்க முடியாதென்ற கருத்து அப்போது நிலவியது.

 

13 hours ago, கிருபன் said:

விடுதலைப் புலிகளும் அமைதியாகவே இருந்தனர். புலிகளின் செய்தியாளர் மாநாடுகளுக்காக நாங்கள் கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்லும்போது தமிழ்ச்செல்வனிடம் இந்த மோதல்கள் பற்றிக் கேட்டால், அவர் சிரிப்போடு அமைதியாகிவிடுவார். இந்த மோதல்கள் முடிவடைந்து தமிழரசுக் கட்சியை மையமாக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டது.

வீரகேசரி  இது தமிழ்த்தேசியத்தின் ஊடகமா ?

19 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? செய்தியாளனின் நேரடிச் சாட்சியம்

ஒரு பத்திரிகையாளர் தன்ர கண்களால் மேலோட்டமாக காண்பவற்றை மட்டுமே சொல்ல முடியும். அதை மீறி தான் கண்ட சம்பவங்களின்ட அடிப்படையில தனக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணி குண்டை வெடிக்கவைத்து இறந்தவர்கள் மட்டுமே என்டு சொல்றதைப் போலத் தான் அமையும். அத தான் அன்டனி நிக்சன் பின்னணிகள் தெரியாம இங்க சாட்சியம் என்கிற வகையில உளறிக் கொட்டியுள்ளார். இதை வாசித்து பலர் ஏமாறலாம்.  
 
ஒரு பத்திரிகையாளராக கண்ட சம்பவங்கள் பற்றி சொல்லப்படுகிற விஷயங்கள் உண்மையான பின்னணிகளை வெளிப்படுத்த முடியாதவை. அத மீறி தாங்கள் கண்டவற்றை அதுதான் உண்மை என்ட கோதாவில் பதிவு செய்ய ஓர் அரைவேக்காட்டு பத்திரிகையாளரால தான் முடியும்.
 
காலம் காலமாக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சேர்ந்து இயங்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது வரலாறு.

அக்காலத்தில வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்குவதற்கு (பின்புலமாக) தமிழீழ விடுதலைப் புலிகளும் சிவராமும் தான் மூல காரணம். அந்த முயற்சியை நிறைவேற்ற ஆரம்பத்தில பொது வெளியில் ஈடுபட்ட ஆட்கள் குமார் பொன்னம்பலம், பரராஜசிங்கம், நீலகண்டன் ....... முதல் பலர். இதன் காரணமாகவே சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

கொழும்பில சந்திப்புக்கள் நடந்தபடியா அதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்று முழுமுட்டாள்களால் மட்டுமே முடிவெடுக்க முடியும். அதுவும் இப்பிடியான கூட்டங்களில் சில அரசியல்வாதிகள் துவக்குகளை காட்டி பேசினவை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்புல நெறிப்படுத்தல் இல்லாதிருந்தால் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி கூட்டமைப்பு உருவாகி இருக்காது என்கிறது தான் உண்மை. இதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்ககளில ஊடகங்களில வெளிப்படுத்தப்பட்டிருக்கு.

 

97201535_2286238535004359_82381537236630

97292439_2286238528337693_69023153300606

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய  தனது பத்தாண்டு கால செய்தித்திரட்டல் அனுபவத்தை  அ. நிக்சன் எழுதியிருப்பது பல வரலாற்று சம்பவங்களை வெளிப்படுத்தி இருக்கிறது.

 

On 16/5/2020 at 20:27, Rajesh said:

 

 

97201535_2286238535004359_82381537236630

97292439_2286238528337693_69023153300606

 

எந்த திகதியில் இந்த கையெழுத்துகள் இடப்பட்டன? அ. நிக்சன் எழுதியபடி 2004 தேர்தலுக்கான உடன்பாடாக இது இருக்க வேண்டும். செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் கையெழுத்திட்டு உள்ளனர்.

 

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.