Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா வளங்களையும் போர்த்தயாரிப்பில் திருப்பிய ஜேர்மனி – உலகயுத்தம் 2 - பகுதி 4

Featured Replies

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegஜேர்மனி ஹிட்லரை நம்ப ஆரம்பித்திருந்தது. அடாவடிக்காரர், போர்வெறி கொண்டவர் என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுந்தாலும், ஹிட்லர் அவசியமானவர் என்று தான் தோன்றுகிறது. அங்கே தவறு செய்தார். இங்கே விதிகளை மீறினார் என்று அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார்கள். இருக்கட்டுமே!  யாருக்காக செய்கிறார் ஹிட்லர்? தனக்காகவா? தேசத்துக்காக தானே? தேசத்தின் முன்னேற்றத்திற்காக தானே? அவர் வெற்றி எமது வெற்றி அல்லவா? அவர் சறுக்கினால் ஜேர்மனி பின்னுக்குச் செல்லும் அல்லவா? கடந்த உலகப் போரில் பட்டது போதாதா? கடன்கள் போதாதா? ஹிட்லராக இருப்பதால் பிழைத்தோம். ஹிட்லர் அவர் பாதையில் செல்லட்டும். என்ன தான் ஆகிறது என்று பார்ப்போம்.

இதுவே ஹிட்லரின் ஆதரவாளர்களால் ஜேர்மனி மக்களுக்கு வைக்கப்பட்ட பிரச்சாரம். ஏற்கனவே முதலாம் உலகப்போர் தோல்வி ஏற்படுத்திய அவமானத்துடன் பல சமூக பொருளாதார பிரச்சனைகளை முகம் கொடுத்துக் கொண்டிருந்த ஜேர்மனி மக்களை இந்த தேசியவாத பரப்புரை கவர்ந்தது. இதைப் பயன்படுத்தி  எதிர்காலத்தில் ஹிட்லர் செய்ய திட்டமிட்ட இனவழிப்பு திட்டத்தையும் அதனால் ஜேர்மனிக்கு ஏற்படப்போகும் வரலாற்று ரீதியான அவப்பெயரையும் ஜேர்மனி மக்கள் அறிந்திருக்கவில்லை.

கிடைத்ததை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளும் ஜாதியில்லை ஹி்ட்லர். இதுவரை நடந்தது ஒரு முன்னோட்டம். ஏதோ அங்கும் இங்குமாக சில பிரதேசங்கள் கிடைத்தன. உடைந்து போன பழைய பாகங்கள். ஒரு சில புதிய பகுதிகள். இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது நண்பர்களே என்று ராணுவத்திடம் திருப்பிக்கேட்டார் ஹிட்லர். நான் சிந்திக்கும் வேகத்தில் செயல்கள் முடிந்துவிட்டால் நாம் தான் ஐரோப்பாவின் ஒரே சக்தி. உலகின் பலசாலி நாடாக ஜேர்மனி திகழும்  . நாம் ஆளப்பிறந்தவர்கள் என்பதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். சோம்பல் வேண்டாம். தயக்கம் வேண்டாம். குறிப்பாக வெற்றி போதை வேண்டவே வேண்டாம்.

கிழக்கு ப்ரஷ்யாவையும் ஜேர்மனியையும் இணைக்கும் சாலை ஒன்றை போலந்தில் அமைக்கவேண்டும் என்பது ஜேர்மனியின் திட்டம். சாலைக்குச் சாலை. ஆக்கிரமிப்புக்கு ஆக்கிரமிப்பு. இது அடிமைப்படுத்துவதற்கான யுக்திதான் என்பதை போலந்து உணர்ந்து கொண்டது. சாலை அமைக்கும் திட்டத்தை நிராகரிக்கவும் செய்தது. ஹிட்லரை நம்பத் தயாராக இல்லை போலந்து. அவரது பிரதேச  ஆசையைக்கண்டு அஞ்சியது.

மார்ச் 30, 1939 ல் பிரிட்டனும் பிரான்ஸும் போலந்துக்கு உதவி செய்ய முன்வந்தன. உதவி என்றால் ராணுவ உதவி அளிப்பீர்களா? ஜேர்மனியிடம் இருந்து மீட்டெடுப்பீர்களா? என்று போலந்து கேட்டபோது, அப்படியல்ல என்று நழுவிக் கொண்டன இரு நாடுகளும். போலந்துக்கு புரியவில்லை. ராணுவ உதவி இல்லை என்றால் பிறகு என்னமாதிரியான உதவியை அளிக்க இவர்கள் விரும்புகிறார்கள்?  சாம்பர்லைன் போலந்தை அமைதிப்படுத்தினார். யார்? ஹிட்லர்தானே? பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய நபர்தான். போலந்தை ஆக்கிரமிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் ஹிட்லர் மறுக்கவா போகிறார்?

ஹிட்லரின் ராணுவம் தயார் நிலையில் இருந்தது. போலந்திடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், பிரிட்டனுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இரண்டையும் மீறுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் ஹிட்லர்.  அவரைப் பொறுத்தவரை ஒப்பந்தம் என்றால் கத்தைக்காகிதம். தயாராவதற்கு அவகாசம் தேவைப்படும்போது எல்லாம் ஒப்பந்தங்கள் தான் போட்டுக்கொண்டார். தயங்காமல் கைகுலுக்கிக் கொள்வார். மெலிதாகப் புன்னகையும் செய்து கொள்வார். குனிந்து கையெழுத்துப்போடுவார். வரட்டுமா என்று சொல்லி விடைபெறுவார். விடைபெற்ற கையோடு நேராக ராணுவத்திடம் தான் செல்வார். என்ன, எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்ற அறிவதற்கு.

ஏப்ரல்28, 1939 அன்று ஒப்பந்தங்களை கிழித்துப்போட்டார். பிறகு, சோவியத் யூனியனுடம் பேச ஆரம்பித்ததார். எதிரி தேசம்தான். பிடிக்காத கொள்கைதான். ஒத்துவராத சித்தாந்தம் தான். ஆனாலும் ஹிட்லர் எதையும் சட்டை செய்யவில்லை. நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் சிறிதளவு விட்டுக்கொடுப்பதில் தவறென்ன?

சோவியத் ஜேர்மனி ஒப்பந்தம்  - Molotov – Ribbentrop Pact

large.683619358_StalinRibbentrop.jpg.80cb967f77a2015cd0c71669267eea39.jpgமுதல் உலகப்போருக்கு முன், ரஷ்யாவிற்கும்  ஜேர்மனிக்கும் நீண்ட, பலமான தொழில் உறவு இருந்தது. போருக்கு முன் ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யா ஜேர்மனிக்கு 1.5 பில்லியன் ஜேர்மன் மார்க் மதிப்புள்ள மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது. 1920 களில் ஏற்றுமதி ஆண்டுக்கு 433 மில்லியன் ஜேர்மன் மார்க்காக குறைந்தது. 1934 ல் 223 மில்லியன். ஹிட்லர் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சோவியத்யூனியனுடனான நட்புறவு தேய்ந்து போனது. கம்யூனிசம் அவரைப் பொறுத்தவரை ஓர் அச்சுறுத்தல். ஹிட்லரின் மேலாதிக்கக் கனவு ஸ்டாலினைப் பொறுத்தவரை மிகப் பெரும் உலக அச்சுறுத்தல்.

ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தில் ஜேர்மனியும் சோவியத்தும் எதிரெதிர் முகாம்களில் இருந்ததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். 1938 ல் செக்கோஸ்லாவாக்கியா குறித்து முனிச்சில் நடத்தப்பட்ட மகாநாட்டிற்கு சோவியத் அழைக்கப்படவில்லை. சிந்தனை தொடங்கி சித்தாந்தம் வரைக்கும் எந்தவொரு புள்ளியிலும் இந்த இரு தேசங்களும் சந்தித்துக் கொண்டதில்லை.

இறக்குமதி இல்லாமல் ஜேர்மனியால் ஜீவித்திருக்க முடியாது. அதுவும், ஹிட்லர் போன்ற அடங்காப்பசி கொண்ட ஒரு தலைவனின் ராணுவத் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அபரிமிதமான இறக்குமதி இன்றியமையாதது. யாருடைய உதவியும் தேவையில்லை, எனக்கானதை நானே உருவாக்கிக் கொள்வேன் என்று சொல்லத்தான் ஹிட்லர் நிச்சயம் விரும்பி இருப்பார். ஆனால், அது சாத்தியமல்ல என்பது அவருக்குத் தெரியும்.

மற்றொரு பக்கம், சோவியத்தைக் கட்டமைக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் ஸ்டாலின். வகுத்துக் கொண்ட மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும். பெரும் தொழிற்சாலைகளை வடிவமைக்க வேண்டுமானால் புதிய இயந்திரங்கள் தேவைப்படும். பிற நாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்யாமல் இவற்றைப் பெறமுடியாது. அந்த வகையில் பிரிட்டனுக்கே சவால் விடும்படியான தொழில் நுட்ப வளர்ச்சியை பெற்றிருந்த ஜேர்மனியை ஒதுக்கித்தள்ள முடியாது.

இதற்கிடையில் சோவியத் பிரிட்டன், பிரான்ஸ் மூன்றும் தங்களுக்குள் அவ்வப்போது பேச்சுவாரத்தைகள் நடத்திக்கொண்டிருந்தன. ஜேர்மனி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஹிட்லரால் ஐரோப்பாவுக்குப் பிரச்சனை வரும் என்று நிஜமாகவே நினைக்கிறீர்களா? ஹிட்லர் சூறாவளியாகச் சுற்றிவந்து ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருப்பது உண்மை. போலந்து போன்ற நாடுகள் அவரைக் கண்டு நடுங்கிக்கொண்டிருப்பதும் உண்மை. ஆனால், மாபெரும் போர் ஒன்றை ஏற்று நடத்தும் அளவுக்கு ஹிட்லருக்கு தில் இருக்குமா?

இருக்குமோ இல்லையோ நமக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்றது பிரான்ஸ். பிரிட்டனுக்கும் அது சரியென்றே தோன்றியது. பிரான்ஸுடன் கைகோர்த்துக்கொள்ள பிரிட்டன் தயாராக இருந்தது. பிரிட்டனுடன் இணைய பிரான்ஸுக்கு விருப்பம். ஆனால் இரு நாடுகளும் சோவியத்தை இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டின. சோவியத்தின் சித்தாந்தம் ஒத்துவராது என்பது தான் காரணம். ஹிட்லர் அபாயகரமானவர் என்றால் ஸ்ராலினும் அப்படியே. முன்னையவர் நாசிஸத்தை முன்னிறுத்துகிறார். பின்னயவர், கம்யூனிஸத்தை. இரண்டுமே எதிரெதிர்க் கோட்பாடுகள் என்றாலும் இரண்டுமே நமக்கு எதிரானவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், தொழிலாளர் புரட்சி, முதலாளித்துவம், மார்க்ஸியம் என்று அவர்கள் போகும் பாதை அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனானப்பட்ட ஜார் மன்னரையே தூக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருபவர்கள். எப்படி கூட்டணி சேர முடியும் சோவியத்துடன்? தவிரவும், இவர்களிடம் மெச்சத்தகு ராணுவபலம் இருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சோவியத்துடன் கைகுலுக்குவதில் ஹிட்லருக்கும் இதே தயக்கங்கள் இருந்தன என்றாலும் சோவியத்துடன் இணக்கமாவதில் உள்ள நன்மைகளை அவர் அறிந்திருந்தார். சித்தாந்தம் ஒத்துப்போகாவிட்டால் என்ன, ஆதாயம் கிடைத்தால் போதுமே!  1939  தொடக்கம் முதலே சோவியத்துடன் பேச ஆரம்பித்துவிட்டது ஜேர்மனி. பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் சேர்வதைக் காட்டிலும் தங்களுடன் இணைந்து அரசியல் ரீதியாக சோவியத்துக்கு அதிக பயன் தருவதாக இருக்கும் என்று சொன்னது. தீர்மானமான முடிவு எதையும் எதையும் எடுக்கவில்லை சோவியத்.

சோவியத்தின் அயல்துறை அமைச்சராக இருந்த மாக்ஸிம் லிட்வினோவ் (Maxim Litvinov)  என்பவர் பதவியிறக்கப்பட்டு அவர் இடத்தில் மோலடோவ் (Vyacheslav Molatov)  என்பவர் அமர்த்தப்பட்டார். இது நடந்தது மே 1939.

இடையில். போர் விமானங்களை தயாரிக்கும் ஜேர்மனியர்கள் ஹி்ட்லரிடம் தனது ஆதங்கத்தை தெரியபப்படுத்தினார்கள். சோவியத்திடம் ராணுவ உதவிகள் பெற்றால் தான் நம் பலத்தை கூட்ட முடியும். குறிப்பாக, போர்விமானங்களுக்கு அவர்கள் உதவி தேவை. ஏதாவது செய்யுங்கள். பேசிப்பார்த்தது ஜேர்மனி. அரசியல் ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ எந்தவொரு உடன்படிக்கையும் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது சோவியத். இருந்தாலும் யோசித்தது.  

பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளையும் நம்பிக்கொண்டிருந்தால் ஐரோப்பாவை ஜேர்மனி கபளீகரம் செய்துவிடும். மற்றொரு பக்கம் ஹிட்லரே நேரடியாக தொடர்பு கொண்டு ஏதாவது செய்யட்டுமா என்று கேட்கிறார். இதை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடது? சாட்சிக்காரர்கள் சும்மா இருக்கிறார்கள். சண்டைக்காரனிடம் பேசிப்பார்த்தால் என்ன? ஹிட்லரின் கையைக் கட்டிப்போட இந்த ஒப்பந்தம் உதவும் என்னும் போது ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

ஜேர்மனி, ரிப்பன்ராஃபை சோவியத்துக்கு அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 24 ம் திகதி, மோலடோவ் ரிப்பனட்ராப் ஒப்பந்தம் (Molotov – Ribbentrop Pact) கையெழுத்தானது. நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவேண்டாம். மூன்றாவது நாட்டின் மீது நம்மில் ஒருவர் போரிட்டால் மற்றொருவர் நடுநிலையுடன் இருக்கவேண்டும். ஒப்பந்தத்தின் சாரம் இது.

சோவியத் ஜேர்மனி ஒப்பந்தம் குறித்து தெரியவந்த போது, ஐரோப்பா குழம்பிப் போனது. பிரிட்டன், பிரான்ஸ், சோவியத்  இந்த மூன்றும் ஒரணி என்று தானே நினைத்துக்கொண்டிந்தோம். அதெப்படி ஜேர்மனியுடன் கூட்டு சேர்ந்தது சோவியத்? டைம்ஸ் பத்திரிகை இதை கம்யூநாசி ஒப்பந்தம் என்று அழைத்தது. அதில் பங்கேற்றவர்களை கம்யூநாசிகள் என்று குறிப்பிட்டது. சோவியத் தரப்பில் இருந்து விளக்கங்கள் வெளிவந்தன. ஜேர்மனியுடன் ஒப்பந்தம் போடுவதால், நாசிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. நாசிஸத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறோம். சோவியத், ஜேர்மனியை ஆதரிக்கவில்லை. நாசிஸத்தை ஆதரிக்கவில்லை. பிரிட்டனும் பிரான்ஸும் கைவிட்டதால்தான் ஜேர்மனியுடன் பேசவேண்டிவந்தது.

பதற்றம் குறைந்துவிட்டது என்றது பல்கேரியா. நம் பக்கத்து தேசங்களான ஜேர்மனியும் சோவியத்தும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதால் இனி நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று பெருமூச்சு விட்டன லாட்வியாவும் எஸ்டோனியாவும். முஸோலினிக்கும் ஸ்பெயின் ஃபிராங்கோவுக்கும் இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை. நம் எதிரி தேசமான சோவியத்துடன் ஏன் கைகுலுக்கிக்கொள்ளவேண்டும் என்று ஹிட்லரிடம் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஜப்பானுக்கு இதில் துளி விருப்பமும் இல்லை.

large.1939-daily-herald-front-page-reporting-nazi-soviet-pact-signed-by-E5GF2E.jpg.d0034bbea7914099c5ba17d3c0d1a0b1.jpg

 

சாம்பர்லைனின் ரத்தம் கொதித்தது ஐயோ, ஹிட்லர் இப்படி ஏமாற்றிவிட்டாரே!

ஆகஸ்ட் 26, 1939 காலை நான்கு மணி. பிரிட்டன் போலந்தை அணுகியது. ஜேர்மன் தாக்கும் அபாயம் இருக்கிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். பிரிட்டன் உங்களை ஹிட்லரிடம் இருந்து பாதுகாக்கும். ஹிட்லருடன் பேசியது பிரிட்டன். போலந்தை ஆக்கிரமிக்கும் திட்டத்தை கைவிடுங்கள். உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம். போலந்துக் கூட ஹிட்லருக்கு விண்ணப்பம் அனுப்பியது. பேசலாம் வாருங்கள்.

இறுதியாக ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்தார் ஹிட்லர். ஓகஸ்ட் 29, அன்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது ஜேர்மனி. போலந்தில் அமைதி நிலவ வேண்டுமானால் எங்கள் சொற்படி போலந்து நடக்கவேண்டும். டான்சிக் (Danzig) எமக்கு வேண்டும். போலிஷ் காரிடரில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். நாளை மதியத்திற்குள் போலந்தில் இருந்து ஒரு அரசாங்க அதிகாரி பேர்லினுக்கு வந்து இந்த உடன்படிக்கையில் ஒப்பமிடவேண்டும். மதியம் வரை தான் அவகாசம் பிறகு எங்களை யாரும் குறை கூறமுடியாது. ஹிட்லர் எதிர்பார்த்தததைப் போலவே உருப்படியான பதில் எதுவும் வரவில்லை. எங்கள் கோரிக்கையையை போலந்து நிராகரித்துவிட்டது என்று அறிவித்தார் ஹிட்லர்.

பிரிட்டனின் தடுமாற்றம்

பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

ஹிட்லர் கொத்து கொத்தாக யூதர்களை கொன்று போடுவதை உதட்டளவில் மட்டுமே எதிர்த்தார். சக மனிதர்களை கொல்வது அநியாயம் என்பது  போல ஏதோ சொன்னார். மற்றப்படி, யூதர்கள் மீது அவருக்குப் பெரிய அபிமானம் இருக்கவில்லை. அந்த வகையில், ஜேர்மனியை எதிர்த்து போரிடவதில் தார்மீக காரணம் எதையும் சாம்பர்லைனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், சமாதானத்துக்கு  அல்ல போருக்கு தான் ஹி்ட்லர் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மை பட்டவர்த்தனமாக தெரியவந்தபோது  சோர்ந்து போனார்.  அப்போதும் கூட, ஏதோவதொரு அதிசய சக்தி குறுக்கிட்டு ஹிட்லரின் கோணல் எண்ணத்தை மாற்றி அமைக்கும் என்று நம்பினார்.  ஓகஸ்ட் இறுதியில் தனது தங்கை ஹிட்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். யாருமற்ற ஒரு வெளியில் தனியாக நடந்து போவதைப்போல் உணர்கிறேன். வயிற்றில் ஏதோ ஒரு வலி பரவிக்கொண்டிருக்கிறது. உட்கார முடியவில்லை. படுக்க முடியவில்லை. தவியாய் தவிக்கிறேன்.

போர் தவிர்க்க முடியாது என்ற நிலையில் சாம்பர்லைன் பிபிசிக்கு பேட்டி கொடுத்தார். நான் எத்தனை கசப்பான உணர்வுடன் இருக்கிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். அமைதி நீடிக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துவிட்டன. நான் எதைச் செய்திருந்தாலும் இந்த நிலைமை ஏற்படுவதைத் தவிர்த்திருக்கமுடியாது. ஹிட்லரின் செய்கைகள் மாறப்போவதில்லை. பலாத்காரத்தை ஹிட்லர் விடுவதாக இல்லை. அவரை தடுத்து நிறுத்துவதென்றால் பலத்தைப் பிரயோகப்படுத்தியே ஆகவேண்டும்.

போரிற்கு பிரிட்டன் ஆயத்தமாவதற்கும் ஜேர்மனி ஆயத்தமாவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. ஒப்பீடளவில், ஜேர்மனியைவிட பிரிட்டனின் படைபலம் அதிகம் என்றாலும் போர் ஒன்றே குறிக்கோள் என்பதால் ஜேர்மனியால் வேறு எந்த நாட்டையும் விட வேகமாகத் தன் படைகளைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது. மேலும், ஹிட்லரால் சுயமாக முடிவெடுக்க முடிந்தது.. தன் தோழமை தேசங்களான இத்தாலி, ஜப்பான் போன்றவற்றோடு பேசி அவர்கள் ஒப்புதலையும் பெற வேண்டிய அவசியம் ஹிட்லருக்கு இருக்கவில்லை.

பிரிட்டனுக்கு இது சாத்தியமில்லை. தன்னிச்சையாகக் கிளம்பிப்போய் ஹிட்லரை எதிர்க்க முடியாது. பிரான்ஸுடன் பேசவேண்டும். போலந்திடம் பேசவேண்டும். அவர்கள் ஒப்புதலையும் பெற்றாக வேண்டும். காமல்வெல்த்தில் நடுநாயகமாக பிரிட்டன் இருப்பதால், கனடா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா நியுசிலாந்து ஆகிய நாடுகளிடமும் பேசவேண்டும். ஜேர்மனியைப் போல் அல்லாமல் மிகவும் கவனமாகச் செயற்படவேண்டிய அவசியம் பிரிட்டனுக்கு இருந்தது. கிட்டத்தட்ட சிலந்தி வலைப்பின்னல் போன்ற அமைப்பு அது.

கூடுதலாக, பிரிட்டனின் காலனிகள் ஐரோப்பாவைத் தாண்டி உலகம் முழுவதும் பரவியிருந்தன. போர் என்று வந்துவிட்டால் காலனிகளைக் காப்பாற்றியாக வேண்டும். ஜேர்மனியுடன் போர் என்றால் ஜப்பான் வரும். வந்தால், இந்தியா, அவுஸ்திலேரியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளை ஜப்பானிடம் இருந்து காப்பாற்ற வேண்டியிருக்கும். ஐரோப்பாவில் எப்படி ஜேர்மனி பலம் பொருந்திய தேசமாக வளர்ந்திருக்கிறதோ அதே போல் ஆசியாவில் ஜப்பான் வளர்ந்திருக்கிறது. மூன்றாவது சக்தி, இத்தாலி.

தவிரவும், ஒவ்வொரு நாட்டுடனும் ஒவ்வொரு விதமான உறவு. ஒவ்வொரு தலைவர்களுடனும் ஒவ்வொரு மாதிரியான பரிவர்த்தனை, புரிதல்கள். இதில் எதுவும் சேதமடையக்கூடாது. அதே சமயம், பிரிட்டனின் நலனுக்கு எதிராகச் செயற்படும் ஜேர்மனியையும் எதிர்த்தாக வேண்டும். சரியான வியூகங்களை அமைத்து கொண்ட பிறகே போரில் இறங்க வேண்டும். இறங்கிய பிறகு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஐரோப்பாவின் பொதுவான எதிரியாக ஜேர்மனியை ஏற்றுக்கொள்வதில் மேற்குலக நாடுகளிடையே எந்த விதமான தயக்கமும் இல்லை. ஆனால், இத்தாலியையும் ஜப்பானையும் எதிர் தேசங்களாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். முசோலினியோடு நல்லுறவு வைத்துக்கொள்ளலாம் என்று பிரான்ஸ் 1935 ல் கருதியது. பிரிட்டன் ஒப்புக்கொள்ளவில்லை. ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்தபோது பிரிட்டனும் பிரான்ஸும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா எல்லோருக்கும் ஒரே கனவு தான். ஒரே கொள்கை தான். ஒரே சித்தாந்தம் தான். தனது நலன் கெடாமல் மற்றவர்கள் பிரதேசங்களைக் கைப்பற்றவேண்டும். இது நிலத்திற்கான போட்டி மட்டுமல்ல அதிகாரத்திற்கான போட்டி. நானா, நீயா போட்டி. யார் வெற்றி பெறுகிறார்களோ அவருக்கே அதிக பிரதேசங்கள் சென்றடையும், யாரிடம் அதிக பிரதேசங்கள் இருக்கிறதோ அவருக்கு அதிகாரம் கூடிப்போகிறது.

வளம் கொழிக்கும் பிரதேசங்களை அபகரித்துக்கொள்ளும் போது பொருளாதாரம் உயர்கிறது. லாபம் அதிகரிக்கிறது. லாபம் அதிகரித்தால் ராணுவபலம் அதிகரிக்கும். பலம் அதிகரித்தால் அதிகாரம் அதிகரிக்கும்.  

எனவே போலந்தை தாக்கலாம் என்றார் ஹிட்லர். தாக்குதல் திட்டத்திற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டியிருந்தார். Blitzkrieg -  மின்னல்வேகயுத்தம் என்று அர்த்தம். மொத்தம் 2400 டாங்கிகள். ஆறு பிரிவாக இவை பிரிக்கப்பட்டிருக்கும். ராணுவத்தின் பிற பிரிவுகளுடன் இவை இணைந்து செயற்படும். எதிரிகளின் எல்லைக்கோட்டிற்கு அருகில் இருந்து தாக்கி, எதிரிகளின் படைகளைத் தனிமைப்படுத்துவது இந்த டாங்கி பிரிவின் வேலை. பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சிறு படைப் பிரிவுகள் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்படும்.

இதற்கு அடுத்த கட்டம், காலாட்படை. முதல் வேலை முடிந்ததும் இந்தப் படைகள் முன்னேறும். பிறகு, விமானப்படை. அதாவது Luftwaffe பிரிவு. இந்த பிரிவில் 4000 போர்விமானங்கள் இருந்தன. பறந்தபடியே குண்டு தூவும் டைவ் பாம்பர்ஸ் எதிரிகளை சுற்றி சுற்றி வரும். எதிரிகளின் தகவல் தொடர்பு சாதனங்களை சேதப்படுத்தும். மொத்த படைபலம் கிட்டத்தட்ட 16 லட்சம். போலந்தை தாக்கியழிக்க Blitzkrieg தேர்ந்தெடுத்தது ஜேர்மனி.

போலந்து போருக்கு தயாராக இல்லை. ஜேர்மனியின் அச்சுறுத்தல் தெரியும். ஆபத்து சூழலாம் என்று தெரியும். ஆனால், எப்படியாவது காலத்தைக் கடத்திவிடலாம் என்று நம்பியது போலந்து. தொழில் முனையும் நாடாக இது இருந்தது. ராணுவத்தைப் பலப்படுத்தவேண்டுமானால் தொழில்துறை லாபகரமாக இயங்கவேண்டும் என்று போலந்து நம்பியது. தன் தயாரிப்புகளின் பெரும்பகுதியை அது ஏற்றுமதி செய்தது. 1936 ல் தேசிய பாதுகாப்பு நிதி என்னும் அமைப்பை உருவாக்கி தேசம் முழுவதும் சுற்றியலைந்து பணம் திரட்ட ஆயுதம் வாங்கினார்கள். ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி. மற்றொரு பக்கம் அந்தப் பணத்தைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் பணி. கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது. எனவே எப்போதும் அந்தரத்திலேயே நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது பொருளாதாரம். 

பூர்வீக குடிகளான போலிஷ் மக்களும் யூதர்களும் செக் இனத்தவரும் உக்கிரேனியர்களும் கொண்ட பிரதேசம் போலந்து. முதல் உலகப் போர் ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து மீளாமல் தத்தளித்துக்கொண்டிருந்த நாடாகவும் போலந்து இருந்தது.

ஹிட்லர் போலந்து படையெடுப்புக்கான முழுத்தயாரிப்பு வேலைகளையும் முடித்திருந்தார்.  Blitzkrieg - மின்னல்வேகயுத்தம் என்று ஹிட்லரால் பெயரிடப்பட்டிருந்த, உலக மக்களை அடுத்த ஐந்தரை ஆண்டுகளுக்கு உலுக்கி எடுக்கவிருக்கும் மாபெரும் யுத்தத்தின் முதல் வெடிகுண்டு வெடிப்பதற்கான நேரம் மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்தநாள் அதிகாலை நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாது போலந்து மக்கள் 31 ஓகஸ்ட் 1939 இரவு தூங்கச் சென்றனர்.

(தொடரும்)

நூல் இரண்டாம் உலகப்போர்

எழுதியவர் மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்   மே 2009

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு!

இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை எண்ணற்ற கோணங்களில் இருந்து பார்க்கலாம், கதையைத் தொடங்கலாம். நான் அறிந்த வரையில் தமிழில் எல்லாக் கோணங்களில் இருந்தும் இந்த வரலாற்றைப் பார்க்கும் ஒரே நூலாக இது இருக்கிறது! இதே போன்று ஆங்கிலத்தில் சகல கோணங்களையும் உள்ளடக்கியது அன்ரனி பீவரின் (Antony Beaver) நூல் தான்! 

அன்ரனி பீவரின் இரண்டு நூல்கள்: Stalingrad, Second World War சுவாரசியமாக வாசிக்கத் தகுந்தவை!

  • தொடங்கியவர்
18 hours ago, Justin said:

நன்றி பதிவிற்கு!

இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை எண்ணற்ற கோணங்களில் இருந்து பார்க்கலாம், கதையைத் தொடங்கலாம். நான் அறிந்த வரையில் தமிழில் எல்லாக் கோணங்களில் இருந்தும் இந்த வரலாற்றைப் பார்க்கும் ஒரே நூலாக இது இருக்கிறது! இதே போன்று ஆங்கிலத்தில் சகல கோணங்களையும் உள்ளடக்கியது அன்ரனி பீவரின் (Antony Beaver) நூல் தான்! 

அன்ரனி பீவரின் இரண்டு நூல்கள்: Stalingrad, Second World War சுவாரசியமாக வாசிக்கத் தகுந்தவை!

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின். 

large.C6318FF8-997C-473A-A243-E87337F21CE8.jpeg.cf36f05b2c36ebe54a45a7d4bfbc35ba.jpeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.