Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன்

 

 

Lt-Col-Senthamizh-Avan-Niraiya.jpg

 

அவன் நிறைய சாதிக்க வேண்டியவன்.

யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? இல்லையே?

விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடன் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன்.

1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிலிருந்து மீண்டும் தமிழர் படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம்.

மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக செயற்பாட்டாளர்களாக ஆட்கள் தேவைப்பட, ‘கட்டைக்’ குணத்தாரை அணுகி “குணம் அண்ணா உங்கட ஊர்ப்பக்கம் புலனாய்வு வேலைகள் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஆட்கள் தேவை இருந்தால் ஒழுங்கபடுத்தித் தாருங்கோ” என பொறுப்பாளர் கூற குணத்தாரின் மூளையில் பொறியாய்த் தட்டுப்பட்டவனே பிரபாகரன் எனும் இயற்பெயரைக் கொண்ட கரன். குணத்தின் ஈருருளி பூவரசு, வடலி, மதில் ஒழுங்கைகளினூடாக விரைந்தோடி பண்டத்தரிப்பைக் கண்டு வடலி அடைப்பை அடைய, அப்பொழுதுதான் கொழும்பிலிருக்கும் தந்தையிடம் சென்று வந்த களைப்பில் அவன் நின்றான்.

“கரன், புலனாய்வு வேலைகளுக்கு ஆட்கள் தேவையாம் – பகுதி நேரமாக வேலை செய்ய உன்னால் முடியுமே?” சுற்றி வளைத்துக் கதைக்கத் தெரியாத குணத்தார் நேராய்க் கேட்டார். சில நிமிட அமைதியின் பின் “அண்ணை என் தம்பி எனக்கு முன் தன்னை விடுதலைப் பாதையில் இணைத்துக் கொண்டது என் மனட்சாட்சியை நித்தமும் குடையுது. பகுதி நேரமாக விடுதலைக்காக உழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. முழுமையாக என்னை இணைத்துக் கொள்வதைப் பற்றியே சிந்திக்கிறேன்.” அவனது சோடனையற்ற தெளிவான பதிலை குணத்தார் எதிர்பார்க்கவில்லை. மூன்று சகோதரர்களில் ஒருவன் ஏற்கெனவே நீலவண்ணன் ஆக தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் தாயாருக்கு ஆதரவின்றி, தமக்கைக்கு உதவியின்றி இவனை முழு நேரம் போராளியாகச் செயற்படும்படி கேட்க குணத்தாரின் கனிவு துணிவைக் கொடுக்கவில்லை.

போரின் வடுக்களை அதிகம் சுமக்காத பண்டத்தரிப்பு சிற்றூரில் சிவபாக்கியநாதன் இராசமணி குடும்பமும் போரின் வடுக்களை அதிகம் சுமக்காத, விடுதலைப் போருடன் அதிகம் ஈடுபாடு கொண்டிராத குடும்பம். இருந்தும் குணத்தார் கதைத்துச் சிறிது காலத்தின் பின் 13.09.1991 புலிகள் அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்து விடுதலைப் பாதையில் பயணிக்க முதல் அடியை எடுத்து வைத்தான் செந்தமிழ்ச்செல்வன்.

செந்தமிழ்ச்செல்வன் பெயரிலிருக்கும் அழகு, அறிவு, அமைதி, விருப்பு, ஈர்ப்பு, செழிப்பு எல்லாமே அவனிலிருந்தன. சிங்கத்தின் தோற்றத்தைப் பார்த்தே அதன் குணத்தை அறிந்து விடலாம். இவன் அப்படிப்பட்டவனல்ல. யானையைப்போல் அமைதி, அழகு, ஆழம், பக்குவம், வீரம் எல்லாமே. அதனால் அவனைப் புரிந்து கொள்ள அளவெடுக்க சிலருக்கு சிரமமாயிருந்தது.

டேவிட் 01 பயிற்சி முகாம் வாழ்வே விளையும் பயிரை அடையாளப்படுத்தியது. பல்வேறு சாயல் உள்ள உபயோகமுள்ள பல்வகைப் பொருட்களை வைத்து சில மனித்துளிகளில் மனதில் பதித்து வெள்ளைத்தாளில் எழுதுமாறு கூறி பயிற்சிப் போராளிகளின் நினைவாற்றலை பயிற்சி ஆசிரியர் அமீன் பரிசீலிப்பார். எல்லோரும் எழுதத் தொடங்க “பேனாக்களை கீழே வையுங்கோ ஓடுங்கோ” என கட்டளை பிறக்கும். பிறகென்ன எல்லோரும் ஓடத் தொடங்க மனதில் உள்ளவை அனைத்தும் மறந்து விடும். இவன் மட்டும் ஒவ்வொரு தரம் விழுந்து எழும் போதும் ஒவ்வொரு பொருளாய் உச்சரிப்பான். “வெற்றி பெற வேணும் அல்லது செய்து காட்ட வேணும்” என்ற அவனது முயற்சி அதிக புள்ளிகளை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கும். அப் பயிற்சி முகாமிலிருந்து சிறப்பப் பணிக்கென தேர்வுசெய்த பதினைந்து போராளிகளினுள் இவனும் ஒருவன்.

யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற அறிவும், இயல்பான புலனாய்வுச் சிந்தனையும்இ ஒல்லியான பளிச்சென்ற வெள்ளை உருவமும், அலட்டல் அற்ற அமைதித் தன்மையும் யாருக்கத்தான் பிடிக்காது. அவை புலனாய்வுப் பணிக்கான சாதகமான கூறுகள். ஆரம்ப புலனாய்வுப் பணிக்கான களங்களாக இவனுக்கு நல்லூர், பாசையூர், குருநகர் பிரதேசங்கள் அமைந்திருந்தன.

1994 விடுதலைப்போர் வீரியமும், வீச்சம் பெற்றிருந்த காலம். விடுதலை வீச்சை, மூச்சை, அதன் வேரையே தன் வீட்டு நலனுக்காக, எஜமானிய இருப்புக்காக அரித்துவிடத் துணிந்த அயல் “வீட்டுக் கறையான்” களின் கரங்களை முறியடிக்க, முறித்தெறிய ஒழுங்மைக்கப்பட்ட புலனாய்வுப் பணியில் ‘மனிதனுக்கு இதயம்’ போன்ற அலுவலகப்பணி இவனுடையது. புலனாய்வுப் பணியில் சிறு தகவல் கூட பெரும் முடிச்சை அவிட்டுவிடும். போலித் தகவல்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே முடிச்சுக்களைப் போட்டு ஆபத்துக்களையும் உண்டுபண்ணிவிடும் – பாலையும் தண்ணீரையும் அன்னத்தால் வேறுபடுத்த முடியுமோ இல்லையோ புலனாய்வாளன் உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்தித் தான் ஆக வேண்டும்.

புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையில், “சிறந்த புலனாய்வாளனின் வரலாறு என்பது, அவன் சேகரித்து ஆய்ந்து எழுதிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள், விடுதலைப் போரின் வளர்ச்சிக்கு, தமிழீழ கட்டுமாணத்திற்கு எத்துணை துணை புரிகிறதோ, அதுவே அவனது வரலாறாகிறது” என்ற அவரின் பார்வையில் தன் அலுவலுகப் பணிகளை, தூரநோக்குடன் காலம் கடந்தும் பயன்தரக்கூடியதாய் உண்மை பொய் அறிந்து, தகவல்களைக் கோவையாக்கி, தன் முக்கியத்துவம் விளங்கிஇ தன் பணி முக்கியத்துவம் விளங்கி புலர்வே இல்லாப் பொழுதுகளில் பணியாற்றியதை இவன் பொறுப்பாளர் இன்றும் சிந்தித்து நினைவு கூறுகிறார்.

(இரகசியம் என்பதால் விரித்துரைக்க முடியவில்லை)

நிர்வாகச் செயற்பாட்டின் பெறுபேறுகளை கோவையாக்குதல், தகவல்களைப் படிவங்களில் பூர்த்தி செய்தல், தேவையானவற்றினைப் பெறுதல்…என நீளும் அலுவலகப் பணிகளை தூரநோக்குடன் காலங்கடந்தும் பயன்தரக்கூடியதாய், புதிதாய் வரும் பொறுப்பாளன், போராளி பயன்படுத்தக் கூடியதாய் உண்மை, பொய்மை அறிந்து கோவையாக்கி, தன் பணி முக்கியத்துவம் விளங்கி புலர்வே இல்லாப் பொழுதுகளில் பணியாற்றியதை இவன் பொறுப்பாளர் இன்றும் சிந்தித்து நினைவு கூறுகிறார்.

வழங்கப்பட்ட பணி முடிவடையவில்லை எனின் முகாமிலிருந்து ஐந்நூறு மீற்றர் முன்னுக்கே உந்துருளியின் இயக்கத்தை நிறுத்தி ஓசையின்றி அதனை உருட்டி முகாம் வந்து தன் பணி முடித்து மீண்டும் அதனை உருட்டி ஐந்நூறு மீற்றருக்கு அப்பால் இயக்கி தன் பணிக்காக விரையும் இவன் செயல் பொறுப்பாளர்களுக்குக் கொடுக்கும் மதிப்புக்கப்பால், தன் பணிக்குக் கொடுக்கும் மதிப்பையே முன் நிறுத்தும்.

“தம்பிமாரே, சண்டைக்குபோக விருப்பமான ஆட்கள் கையை உயர்த்துங்கோ”

புலனாய்வுப் பணியில் சலிப்பு வந்துவிட்டதா? என பார்ப்பதற்கான பொறுப்பாளரின் உத்தி இது. தயங்கித் தயங்கி ஆளையாள் பார்த்து கைகள் உயரும். ‘ஒரு நாள்’ உயர்ந்த கைகளினுள் இவனது கையும் ஒன்றாய் இருந்தது. பிறகென்ன, வழமைபோல் கடற்கரை வெட்டையில் தகதகக்கும் சுடு மணலில் உருட்டி உருட்டி சண்டைக்கான பயிற்சிகள் நடைபெறும். ஆனால் இறுதியில் சண்டைக்கான வாய்ப்பு மட்டும் கிடைக்காது போகும்.

10.03.95 மீண்டும் ஒருதரம் யாழ்மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சிங்களப் படை நடவடிக்கையான இடிமுழக்கம் சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைப் பார்ப்பதற்காக இவன் சென்ற போது தான் தற்செயலாக தனது தம்பி லெப். நீலவண்ணன் யாழ் மண்ணை தக்கவைக்கும் சமரில் வீரச்சாவைத் தழுவியிருந்தமையைக் கண்டான். சக போராளி என்பதற்கப்பால் இடுப்பில் சுமந்து திரிந்த கடைசித் தம்பியுமல்லவா? இறுதியில் அவனைத் தோளில் சுமந்து செல்லக்கூட இன்றைய போர்ச் சூழல் இவனுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை.

1996, 1997 புலிகளே இல்லாத யாழ்ப்பாணத்தை சிங்களத் தலைமை கனவுகண்டு ஆக்கிரமித்திருந்த காலம். ஒடுங்கிய குடாப்பரப்பைச்சூழ படைவேலி அமைத்து, சந்திக்கு இரு படைத்தளம் அமைத்து, முழத்துக்கு ஒரு சிங்களப்படைவீரனை காவலுக்கு விட்டிருந்த நேரம். யாழ்மண் குடாவாக விரிந்து ஒடுங்கியமை பாதுகாப்பு ரீதியில் சிங்களப்படைக்கு அதிகம் சாதகமாயிற்று.

தலைவர் அவர்கள் குறிப்பிடுவது போல் எந்தப் பலத்திலும் பலவீனம் இருந்திடாமலா போய்விடும் “பலவீனம் இல்லாவிட்டாலும் பலம் உடைத்து உட்புகுவோம்” என்ற விடுதலை வீரர்களின் வீச்சை சிங்களத் தலைமையின் ‘ஆக்கிரமிப்பு மனோபாவம்’ உணரவிடவில்லை.

துப்பாக்கியுடன் கொரில்லா வீரனாக யாழ் மண்ணில் நடவடிக்கையில் ஈடுபடுவது அதிக ஆபத்தை உருவாக்கி இருந்த காலத்தில் மக்களுடன் மக்களாக, அவர்களின் புதல்வர்களாக, தேவை ஏற்படும் போது மட்டும் கைத்துப்பாக்கியுடன் தாக்குதலாளர்களாக தயார் படுத்தப்பட்ட புலனாய்வு அணியில் இவன் முதன்மையானவன். பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் ஒவ்வொரு வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் புலனாய்வு செய்வதற்காக, ஆக்கிரமிப்பாளனின் பிடரியில் அடிப்பாற்காக புலனாய்வுப் படையியற் பயிற்சிக்காக முல்லைத்தீவுக்குச் சென்றான்.

என்ன பயிற்சி? கரும்புலி வீரனுக்குரிய பயிற்சி, எதிரியை அடித்து விழுத்தி துப்பாக்கியை பறித்தெடுக்கும் பயிற்சிஇ உணவு உறக்கத்தை மறந்து சகிப்புடன் மறைந்திருக்கும் பயிற்சி என நீண்டுகொண்டே சென்ற பயிற்சியில் ஒருநாள் ஓய்வுப் பொழுதில்…

இவனுடன் அன்பு வாத்தி உந்துருளியில் புதுக்குடியிருப்புக்கு வந்து கொண்டிருக்க பெற்றோல் தீரும் நிலை, பல ஒழுங்கைகள் சுற்றி ஒரு வீட்டின் வாசலில் உந்துருளியை நிறுத்தியவன்இ “மாஸ்ரர் ஆதரவாளர் ஒருவரைச் சந்திக்கோணும் குறை நினைக்காமல் வாசலில் நில்லுங்கோ” போனவன் விரைவாகவே திரும்பினான். “பெற்றோல் தீரப்போகுது ஒழுங்கைகள் எல்லாம் விட்டுக் கொண்டோடுகிறீர்கள்…” உந்துருளியில் பின்னால் இருந்து அன்பு வாத்தி கேட்க “பெற்றோல் அடிச்சாச்சு மாஸ்ரர், உங்களைக் கூட்டிப்போனால் சனம் உங்கடை முகத்தைக் காண பிறகு என்னைச் சாட்டி நீங்கள் பெற்றோல் அடிக்க…”, “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” அன்பு வாத்திக்கு உறைத்தது.

கூப்பிடு தூரத்திலிருந்தும் யாழ் மண்ணுக்குப் பயணிப்பதாயின் ஏதாவதொரு கடல் வழியையே பயன்படுத்த வேண்டும். ஆழமான கடற்பகுதி அதற்கு வாய்ப்பளிப்பதில்லை. ஆதலால் உப்பு ஏரிகளே தெரிவுசெய்யப்படும். ‘குல்லா’ என அழைக்கப்படும் சிறு ஓடங்களின் ஆதரவுடன் தற்துணிவைத் துடுப்பாக்கி பயணம் தொடரும். வயிறு விழுங்கி ஆறு (நீரோட்டம்) சில வேளை வீச்சாய் ஓடும். அல்லது சாதுவாய் ஓடும். வீசும் கடுங்காற்றைக் கடந்து இருட்டைக் கிழித்து ஓடம் நகரும்.

அன்றும் அப்படியான பயணம் தான். “அண்ணை, இடுப்பளவு தண்ணீர் வந்திட்டா எங்களை இறக்கிவிடுங்கோ. நாங்கள் தரையேறும் வரை எங்களுக்காகக் காத்திருங்கோ சில வேளை ஆமி சுடத்தொடங்கினால் நாங்கள் எப்படியும் தப்பிவரப் பார்ப்பம் அப்படி வெடிச்சத்தம் ஏதும் கேட்காட்டால் தரையில் நிற்கிற பொடியளிட்டை நாங்கள் சுகமாய் போய்ச் சேர்ந்ததாய் சொல்லுங்கோ” பொறுப்பாய்ச் செல்லும் இவன்தான் அப்படிக் கூறுவான். செய்திக்காக ஓட்டி காத்திருக்க அவர்களின் பயணம் தொடரும். சிங்களப் படைகளின் அதிவெளிச்ச மின்குமிழ்கள் (FOCUS LIGHT) ஏரிப்பரப்பில் ஒளியைப் பாய்ச்சும். கண்கள் மட்டுமே வெளியே தெரிய நீருக்குள் மறைந்து கொள்வார்கள். இருள்கவிய மீண்டும் பயணம் தொடரும். குரையை அண்மிக்க கூரிய கத்திபோல் நீண்டிருக்கும் ‘கவாட்டி’ ஊறிய பாதங்களை பதம் பார்க்க ஊறிவிறைத்து உறைந்து போன பாதங்களுக்கு வெட்டுவதும் தெரியா குத்துவதும் தெரியா. ஆனால் குருதி கொப்பளிக்கும். அமைதியாக நகர்ந்து கரையேற ஏதோ ஒரு அசமாந்தம் படையினரை விழிப்படைய வைக்க அவர்கள் துப்பாக்கிகள் சடசடக்கத்தொடங்கியது. காதைக் கூர்மைப்படுத்திக் காத்திருக்கும் ஓட்டிக்கு விடயம் விளங்க சத்தம் வரும் திசையை நோக்கி ஓடத்தைச் செலுத்த, போனவர்கள் மீண்டு வந்தார்கள். தொடக்கப் புள்ளிக்கு வந்துசேர, உப்பூறிய றொட்டிகளும் ஒருநாளுமே சுவைத்திடாத சுவையைத்தர அதைச் சாப்பிட விடாமல் நுளம்புகள் மோசம் செய்தன. அவற்றை விரட்டுவதற்கு இருந்த ஒரே வழி அவர்களது பழைய செருப்புகள். செருப்புகள் நெருப்பில் எரியத் தொடங்க.. கடசியாக எரிந்து கொண்டிருந்தது இவனது ஒற்றைச் செருப்பு. சூரியன் பகலைத்தர ஒற்றைச் செருப்பு மட்டுமே எஞ்சியது. இன்னொரு இரவில் இவர்கள் தங்கள் பயணத்தில் வெற்றிகண்டனர்.

லெப். கேணல் சிவனேசனுடன் வலிகாமம் சென்றவன், தாம் இரவு தங்க வேண்டிய கோண்டாவில் ஆதரவாளரின் வீட்டினை பல மணி நேரம் தேடியும், கண்டுகொள்ள முடியவில்லை. நாய்கள் குரைக்கத் தொடங்கியிருந்தன. “இரவில் நடமாடுவது ஆபத்தானது” என உணர்ந்த இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாத இருவேறு வீடுகளில் கதவினைத் தட்ட அந்த இரவில் ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் யார்தான் கதவினைத் திறப்பர்? பிறகென்ன வாசல் படிகளில் அரைகுரை உறக்கத்தில் நம்பிக்கையுடன்… காலையில் வீட்டாருக்கு அதிர்ச்சி, அவர்கள் தங்களை அறிமுகப்படுத்த வீட்டாரின் மனப்பீதி இன்னும் அதிகமானது. தாம் தேடிவந்த வீட்டினை விசாரிப்பது புலனாய்வுச்சிக்கல். ஒருவாறாய் கோண்டாவில் சந்தியில் ‘றோசாப்பூ’ எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட ஆதரவாளனைக் கண்ட போது “கடவுளே உங்களுக்கு நல்ல காலம் தான்இ என்ரை வீட்டை உடைச்சு ஆமி எல்லோ இருக்கிறான்” என்ற அதிர்ச்சித் தகவல்களுடன் தன் தற்காலிக வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்றாரர்.

மறுநாள் சிவனேசனை முன் இருக்கையில் ஏற்றி ஈருருளியை சந்தியில் திருப்ப ‘படையினர்!’, சடுதியாக ஈருருயியைத் திருப்பியவன் “நாங்கள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வந்தவர்கள். ஆமி, அடையாள அட்டையைக் கேட்டாலும் அதனைக் காட்டி சாதுரியமாய் தப்பி பணியாற்ற வேண்டும்” என்ற பொறி சிந்தனையில் தட்டுப்பட ஈருருளியைத் தேநீர்க் கடைக்கு செலுத்தினான். உண்மையில் அவர்களது அதிஸ்டம், அன்று எதுவுமே நடக்கவில்லை. பின்னாளில் எல்லாமே அத்துப்படியானது. படை உளவாளிகள் கூட இவனின் நண்பர்களானார்கள்.

இவனது பணியில் தாக்குதல் நடவடிக்கை என்பது இரண்டாம் பட்சமானவை. இரகசிய செயற்பாட்டாளர்கள் தங்கி வேலை செய்யும் வீடுகள், அவர்களுடைய அம்மா, அப்பா, சகோதரர்கள், அன்ரி…. என உறவுகள், படை உளவாளிகளின் கண்களினுள், அயல் வீட்டாரின் கண்களினுள் சந்தேகப் பிராணியாய் விழுந்திடாதபடி சூழலுக்கேற்ப, வயதுக்கேற்ப, தோற்றத்திற்கேற்ப மறைப்புத் தொழில்கள் என இவனது புலனாய்வுச் செயற்பாடுகள் துடிப்புடன் நீண்டதில், வலிகாமத்தில் சிவனேசன், எமர்சன், சிவம், சுந்தர் எனப் பல இரகசிய செயற்பாட்டுப் போராளிகளை நிலைப்படுத்த வழிவகுத்தன. செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் ‘வன்னிக்கு வரவும்’ கட்டளைப் பணியகத்திலிருந்துப் பொறுப்பாளரின் தகவல் அவன் கரம் சேர்ந்தது.

“வன்னிக்கு போகுமுன் தாக்குதல் செய்ய வேண்டும். விரைவாகச் செய்ய வேண்டும். நல்லதொரு இலக்காகத் தேர்வு செய்ய வேண்டும்” இவனது உதடுகள் இப்படித்தான் உச்சரித்தன.

வேவு முடிந்து, தயார்ப்படுத்தல் முடிந்து தற்கொடையாளனுடன் இலக்கை அண்மிக்க சில மணித்துளிகளில் இலக்குத் தப்பிட முதல் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இன்னுமொரு முயற்சி, மறைப்பொன்றைத் தேடி ஆபத்தைச் சந்தித்து மறைப்பைப் பெற்று அதற்குள் கண்ணிவெடியை (CLAY MOUR) வைத்துக் காத்திருக்க இலக்கு வரவேயில்லை.

படைப் பிரதேசத்தினுள் தாக்குதல் நேரத்து சாதுரியத்தை, துணிவை விட தாக்குதல் முயற்சியின் போதே அதிக துணிவும், சாதுரியமும் தேவைப்படும். நிறைந்த ஆபத்தைச் சந்தித்தும் முயற்சிகள் வெற்றியளிக்காமை இவனது மனதை உடைத்தது உண்மைதான்.

வன்னிக்குச் செல்வதற்கான நாள் வந்தது. எண்ணத்தில் துடித்த முயற்சிகள் வெற்றிகொள்ளப்படாத கவலை ஆட்கொள்ள ‘முயற்சிகள் தான் வெற்றிக்கான படிக்கற்கள்’, என புலனாய்வுப் பொறுப்பாளர் கூறுவார் என்பதை அறியாத இவனை சிறு ஓடம் மீண்டும் வன்னிக்கரையில் சேர்ப்பித்தது. இவனது செயற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டன. கோவையாக்கப்பட்டன. நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஆத்ம பூர்வமாக நேசிக்கப்பட்ட தலைவரை சந்தித்தான். தலைவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டான். புதிய கட்டளைகள், புதிய செயற்பாடுகளுடன் இன்னும் அதிக துணிச்சலுடன், நம்பிக்கையுடன் யாழ் உள்ளக புலனாய்வுக் கட்டளைப் பொறுப்பாளராக மீண்டும் யாழ் மண் இவனை வரவேற்றது.

1999 முற்பகுதி “சிங்களப் படைப்பிரிவின் புலனாய்வாளர்களையும் துணைபோகும் கைக்கூலிகளையும் அழித்தல், அவர்களது செயற்பாடுகளை நடமாட்டத்தை முடக்குதல் என்பன யாழ் மண்ணில் போராளிகளின் செயற்பாட்டை இலகுபடுத்த வழிசடைக்கும்” என்ற தலைமையின் முடிவு இவனை செயலில் இறக்கியது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை இரண்டு, “சிங்களப்படை உளவாளிகள் யாழ்நகர் கடையொன்றில் கூடுவது வழமை” என்ற வேவுத் தகவலின் அடிப்படையில் அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈருருளியை இவன் மிதிக்க முன்னிருக்கையில் கைத்துப்பாக்கியுடன் சகபோராளி. காலை பத்துமணி வரை இலக்கு கண்ணில் புலப்படவில்லை தொடர்ந்து அவ்வீதியில் நடமாடுவதன் ஆபத்தைக் கருத்திற் கொண்டு தங்குமிடம் சென்று, பின் மீண்டும் மாலை நான்கு மணிக்கு நடவடிக்கை தொடர்ந்தது. இரவு ஏழு மணியாகியும் இலக்குவர வேண்டிய இடத்துக்கு வரவில்லை ஈருருளியை யாழ்நகர கஸ்தூரியார் வீதியால் இலக்கைத் தேடி மிதிக்கையில் சற்று முன்னால் சென்ற ஈருருளியின் முன் இருக்கையில் இருந்து பயணிப்பவன் ஆக்கிரமிப்பாளனுடன் சேர்ந்து செயற்படும் கைக்கூலிக் குழு ஒன்றின் யாழ். மாவட்டப் பொறுப்பாளன் என்பதை கடைத்தெருவில் ஒளிர்ந்த மின்குமிழின் வெளிச்சம் காட்டியது. “தேடி வந்த இலக்கைவிட தற்செயலாகக் கண்ட இலக்கு பெறுமதியானது அழிக்கப்பட வேண்டியது” சடுதியாக இவனது ஈருருளி வேகம் கொள்ள துப்பாக்கிக் குறியில் இலக்குத் தப்பவேயில்லை.

இன்னொருநாள், நல்லூர்ப் பிரதேசத்தில் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து போராளிகளைக் காட்டிக்கொடுப்பதிலும் படையினருடன் நெருங்கி ஒத்துழைத்து வந்ததுமான இலக்கு, அழிக்கப்பட வேண்டிய இலக்கு வேவுத் தகவல்கள் எல்லாவற்றையும் இவனே முடித்திருந்தான். இன்றும் முன்னிருக்கையில் சக போராளி கைத்துப்பாக்கியுடன் இருக்க ஈருருளியை இவனே இலக்கின் வாசல் வரை ஓட்டி வந்தான். இலக்கின் பெயர்கூறி இலக்கை அழைக்க, வெருட்சியுடன் “இந்தப் பெயருக்குரியவன் நானில்லை” என குற்ற உணர்வுடன் இவர்களை நோக்கித் திரும்பியது இலக்கு. காட்டிக்கொடுப்புக்கு வழமை போலவே ஒறுப்பு அளிக்கப்பட்டது.

இன்னுமொருநாள், முக்கிய இலக்கு ஒன்றை அழிப்பதற்காய் பயிற்சி முடித்திருந்த தாக்குதலாளனை வன்னியிலிருந்து உப்புநீரேரி கடந்து யாழ் மண்ணுக்கு அழைத்து வருகையில்…

06.06.1999 நீரேரி ‘கவாட்டியால்’ பாதங்கள் கிழிக்கப்பட்ட நிலையில் இவனும் தோழர்களும் பாசையூர் கடற்கரையிலேறி பிரசவ விடுவியை அண்மிக்க சிங்களத்தில் ‘யார்?;’ என சிங்களச்சிப்பாய் வினாவ, துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்கின. கப்டன் சித்தார்த்தன் வீரச்சாவைத் தழுவ தப்பி ஓடியவன் ஏறிய ஒழுங்கைகள், சந்திகள் எல்லாமே படையினர். பிறகென்ன உயிர் பிழைப்பதற்கான இவனது கடைசி முயற்சி வெற்றியைக் கொடுத்திருந்தது. யாருக்கும் தெரிந்திடாத ஒரு மறைவிடத்தில் ஆயிரம் கைகள் உணவூட்ட காத்திருந்தும் அக்கைகளுக்குத் தெரியாமலேயே பதுங்கிக்கிடந்தான் நாளைய பாய்ச்சலுக்காய்.

மறுநாள் அவனை அரவணைத்து தன் வீட்டின் பிள்ளையாக வைத்திருந்த தேசத்தின் அன்னை கூறினார் “என்ர பிள்ளையின்ர கால்களிலெல்லாம் காயங்கள், முள்ளுக் கீறல்கள். நான்கைந்து நாட்களாக ஒரேநாரி நோவு. பிள்ளை சோர்ந்தே போனான். இரவிரவாக நானும், அப்பாவும் காலுக்கு மருந்து போட்டு நாரிக்கு எண்ணெய் தடவி அவனை பிள்ளை ஆக்கினம்”.

“அம்மாவோட தான் அவன் நல்ல வாரப்பாடு 18.06.99 அன்று அதிகாலை எழும்பியவன் என்னிடமிருந்த பயபக்தியையும் மீறி வழக்கத்துக்கு மாறாய் ஒருநாளும் இல்லாத செல்லம் கொஞ்சினான்.

என் கைகளைப் பிடித்து “அப்பா, இந்த ஆயிரம் ரூபாவை ஏதாவது அநாதை இல்லத்துக்கு கொடுங்கோ எனக்கு இன்று பிறந்தநாள்” என்றான். நான் பணத்தைக் கொடுத்து பற்றுச்சீட்டை கொடுக்கலாம் என்றால் “உங்களில் என்ன நம்பிக்கை இல்லை என்றா தாறியள்?” எனக் கேட்டான். கொடுக்காட்டில் எனது மனட்சாட்சிக்குப் பிழை. நான் அதைக் கொடுக்கவே இல்லை. 29 வயதில் அவனது பக்குவத்தை எண்ணி வியந்தே போனேன்.” கலங்கும் அம்மாவின் கண்களைப் பார்த்து கலங்கியபடியே இப்படித்தான் அப்பா கூறினார்.

சக நண்பனைப் பாதிவழியில் இழந்த துயர் இவன் இதயத்தை அம்பாகத் துளைத்தாலும், தன் பாதையில், இலக்கில் அம்பு போல் செயல்படலானான்.

Lt-Col-Senthamizh.jpg

“யாழ் கொட்டடியில் சீனிவாசன் வீதியில் இரண்டு சிங்களப்படைப் புலனாய்வாளர்கள் மாஸ்ரர் ஒருவரின் வீட்டுக்கு வந்து போகின்றனர்” பூட்டு எனப்படும் விடுதலைப் பற்றாளனின் வேவுத் தகவல் அது. ஒரு இரவுப் பொழுது மாலை ஏழு மணி, சக போராளியுடன் இலக்கத்தைத் தேடிச் சென்றான். துப்புத் துலக்கி தேடப்படுவோர் தம்மைத் தேடி வருவதை அறியாத இலக்கு நகையாடிக் கொண்டிருந்தது. சக போராளியின் குறியில் ஒருவன் சரிய மற்றையவன் ஓட எத்தனித்தான். ஓடுபவனைக் குறி வைத்து தன்னிடம் இருந்த கைக்குண்டை எறிந்தவன் கூப்பிடு தூரத்தில் உள்ள சக படைவீரர்கள் ஓடிவரும் முன் சடுதியாய்த் தாக்குதலை முடித்துத் திரும்பினான்.

“அம்மா இன்றைக்கு உங்கட புட்டை விட்டுட்டு நல்லதாய் ஏதாவது செய்து தாங்கோ சரியா பசி எடுக்குது” புழுக்கிண்டுவது போல் புளுகம் கிண்ட, தாக்குதல் வெற்றியில் திளைத்தவனை அப்பாவும் அம்மாவும் புரிந்து கொண்டனர்.

“அம்மா, நான் அவசரமாக வெளியில போறன் றேடியோவில ஏதாவது தகவல் வந்தால் பதிவு செய்து வையுங்கோ” “டேய் ஒருக்காத்தான் பழக்கித் தந்திட்டு பதிவு செய் என்டால் முடியுமே? இன்னும் ஒருக்கா பழக்கித் தந்துட்டு போடா” வாசல் வரை வந்தவனை மறித்து அம்மா கேட்க, “குறித்த நேரத்திற்கு அங்க நிக்கோணும் எதற்கும் விரைவாய் வரப்பார்கிறேன்”

அவசரமாய் இவன் போய்விட இவன் திரும்பும் முன்னமே தகவல்வரும் நேரத்தை மணிக்கூடு காட்டியது. அம்மாவிடம் மேலோங்கியிருந்த அறிவுப் புலமை ஒருவாறாய் அலைவரிசையைப் புடித்து தகவலைப் பதிவு செய்து விட்டது.

என்ன தகவல்? “நீங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்ற தகவலை எங்களுக்கு அனுப்பி வைக்க, தொடர்பு முறையொன்றை நீதான் தேட வேண்டும். சீரான தொடர்புகள் இன்றி செயற்படுவதிர் அர்த்தமில்லை. என்ற தொனிப்பட நல்ல ஏச்சுடன் வந்திருந்தது. “தகவலைக் கொடுத்தால் பிள்ளை நொந்து போவான், வெந்துபோவான்” தகவலைக் கொடுக்க அம்மாவின் தாய்டை உணர்வு தடுத்தது. இயக்கத் தகவலை, அம்மா கொடுக்காமலும் இரா. தயங்கித் தயங்கிக் கொடுத்தார். அவை பற்றி அம்மா கூறுகையில்இ தகவலைக் காட்டியதும் நினைத்தது போலவே உடைந்தே போனான். அன்றிரவு சாப்பாடும் நித்திரையும் இன்றி கட்டிலில் உருண்டு உருண்டு புரண்டான். நான்தான் அருகிலிருந்து தேற்றினான்” பின்னொரு நாளில் அவன் இங்கே ஒரு நிமிசம் கூட சும்மா இருக்கிறது இல்லை காலையில் எழும்பினால் இரவு வரைக்கும் நாட்டுக்காகத்தான் உழைக்கிறான். இனிமேல் ஏசித் தகவல் வரக்கூடாது” என அம்மா இவன் பொறுப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தா.

அம்மா வீட்டுடன், தேவையற்று ஆதரவாளர்களையோ, தொடர்பாளர்களையோ, சக போராளிகளையோ தொடர்பு படுத்தாத தன்மை மற்றும் செயற்பாட்டின் போது பயன்படுத்தும் போலி ஆவணங்கள், வேறு பெயரில் பெறப்பட்ட அவனது ஈருருளி…. அம்மா புட்டவிக்கும்போது தடயங்களை நெருப்பில் போட்டு அவை எரிந்து முடியும் மட்டும் கண்வெட்டாது பார்க்கும் பொறுப்புணர்வு, எப்பொழுதுமே அவனிடமிருக்கும் சைனற்குப்பி என இரகசியம் பேணுவதில், தான் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதில் இவனது அதீத பாதுகாப்பு உணர்வு அம்மாவுக்கு இவனைப் பிடித்துப் போனதில் வியப்பில்லைதான்.

04.09.1999 அம்மாவின் இடக்கை சுழுக்கெடுத்து நோவு எடுத்திருந்ததை அறிந்தவன் அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு மலசலகூடத்துக்கு தண்ணீர் எடுத்து வைத்து, பாத்திரங்களில் எல்லாம் தண்ணீர் நிரப்பி, வீடு கூட்டி… வீட்டுப் பணியெல்லாம் முடித்து தன் பணிக்காகப் பயணப்பட்டவன், வாசலில் நின்று கொண்டு, “அம்மா இன்றைக்கு சில நேரம் வரமாட்டன். அன்ரி வீட்டிலை தங்கினாலும் தங்குவன்…” சொல்லித்தான் வெளிக்கிட்டான். எங்க அன்ரி வீடு இருக்குது? கண்டிப்பாக நீ வீடு வரவேணும் என அம்மா கேட்கவும் மாட்டார். கட்டளையிடவும் மாட்டார். இரகசியம் பேணுவதில் அம்மாவும் கண்டிப்பானவர். வழமை போலவே வாசலில் நின்று அம்மா வழியனுப்பி வைக்க அம்மா புள்ளியாய்த் தெரியும் மட்டும் அவன் கையசைத்துச் சென்றான். “என் மகன் தன்னைப் போராளியாக இணைக்கும் போதும் இப்படித்தான் கையசைத்துச் சென்றவன்” அம்மாவின் இதய அறைகளில் ஒன்றுக்குள் மகனும் மற்றையதில் இவனுமாக அம்மா கனதியானார்.

05.09.1999 நல்லூர் முருகன் கோயில் வீதி மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த, பகல் பதினொரு மணிப்பொழுது, காதலியை ஏற்றிய ஈருருளிகள், மனைவியை ஏற்றிய உந்துருளிகள், குடும்பத்தையே சுமக்கும் கார்கள், பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்புக்காக முருகனிடம் வந்த பள்ளிக்கூட நண்பர்கள்… என எல்லோரையும் கடந்து இவனது ஈருருளியும் சக போராளிகளினது ஈருருளிகளும் புலனாய்வுக் கண்களுடன் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தன.

நல்லூர் அரசடி வீதியை (பாரதி சிலையடி) இவனது சைக்கிள் கடக்க முற்பட, காவலரணுக்கு அருகில் நின்ற சிங்களப்படைவீரன் வழிமறித்து இவன் கைகளைப் பிடிக்க, அவனை உதறிவிட்டுத் துப்பாக்கியைப் பறித்தெடுக்கும் நோக்குடன் காவலரணுக்குள் பாய்ந்தோட.. முடியாமல் போக, சைனைற் குப்பியை அவன் பற்கள் நன்றாக அரைக்க, அது அவன் உயிரை பிரித்துத்தான் விட்டதா?

கறுப்பு ஜூன்ஸ், சாம்பல் நிற சேட், பச்சை உள்ளாடையுடன் இளைஞனின் சடலம் செய்தித்தாளில் வந்த செய்தி அம்மாவை இடியாய் இடித்தது. உடைகள் அவனுடையது தான். அப்பாவும் அம்மாவும் குசுகுசுத்துக்கொண்டனர். வைத்தியசாலையில் இவன் உடலைப்பார்க்க அம்மாவால் முடியவில்லை. உடலைப் பார்த்து ஓவென அழாமல் அம்மாவால் இருக்க முடியாது. அப்படி அழுதால் சிங்களப் புலனாய்வாளர்களின் கண்களில் எத்துப்படலாம். இன்னுமொரு போராளியைத் தன் சிறகினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அம்மா வைத்தியசாலைக்குச் செல்லவே இல்லை.

அம்மா நினைத்தது போலவே அவனது சைக்கிள், அடையாள அட்டைகள் என்பனவற்றைப் படையினர் கைப்பற்றியிருந்த போதிலும் அம்மாவின் வீட்டை இனங்காண முடியவில்லை.

“அவன் நிறைய சாதிக்க வேண்டியவன் வன்னிக்கு எடுத்து கதைப்பம் என்றிருக்க இப்படி நடந்து போய்ச்சு.. அவனுக்குத் தெரிந்த நிறையச் சனம் வருமென்று தெரிந்தும் அதற்குள்ள போயிருக்கிறான்..” என்ற புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையிலும், “விடுதலை வீரனின் சுயநலமற்ற பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமுடையது. விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான்” என்ற தலைவரின் பார்வையிலும் இவனது வாழ்வு உன்னதமானது.

நினைவுப்பகிர்வு: சி.மாதுளா
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை, 2003).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-sentamilselvan/

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.