Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாகராவர்த்தனா கப்பலை கற்பிட்டிக் கடலில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாகராவர்த்தனா கப்பலை கற்பிட்டிக் கடலில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்

 

 

Black-Sea-Tigers-Attack-on-the-Sinking-of-the-Sagaravarthana-Ship-scaled.jpg

 

கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல் கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல் ஒரு மீள் பார்வை.

வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதான தாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு. தேசியத் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கமைவாக கடற்புலிகளின் அணிகள் பிரிக்கப்பட்டு சிறப்புத் தளபதி சூசை அவர்கள், தளபதி கங்கைஅமரன் அவர்கள், துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் தலைமையில் வேவு நடவடிக்கைகளுக்கு நாலாபுறமும் அனுப்பப்டடன வேவு வீரர்களின் கண்களில் சிக்கிக்கொண்டது சிறிலங்கா கடற்படையில் 1984ம் ஆண்டு சேவையில் அமர்த்தப்பட்ட சாகரவர்த்தனா கப்பல்.

இலங்கை கடற்படையின் நான்கு பெரிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களில் சாகராவர்த்தனாவும் ஒன்றாகும் .இது 39.8m நீளமும் 7m அகலமும் கொண்டதாகும். இதன் பிரதான ஆயுதங்களான ஒரு 40mmL/70 பீரங்கியும், இரண்டு 25mm கனோனும், இரண்டு 14.5mm கனரகத்துப்பாக்கி, இரண்டும் ஐம்பது கலிபர் துப்பாக்கிகள், பி.கே ரகத் துப்பாக்கிகள், ஏ.கே ரகத் துப்பாக்கிகளும் உள்ளடக்கிய இக் கப்பல் 15 (knots) வேகத்தில் செல்லும் (மணித்தியாலத்தில் பதினைந்து கடல்மைல் வேகத்தில் செல்லும்) இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக பொயாகொட மற்றும் அவரின் கீழ் ஐம்பத்தியிரண்டு கடற்படையினர் பணியிலிருந்தார்கள்.

இப்பாரிய கப்பல் பற்றிய தகவல்கள் தேசியத் தலைவர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ‘எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும்’ என்ற தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக இந்த பாரிய ஆழ்கடல் கப்பலுக்கான தாக்குதற் திட்டம் மிகவும் நேர்த்தியான முறையில் கப்பலின் எந்தப்பகுதி பலவீனம் என்பதை இணங்கண்டு அதற்கேற்ப தாக்குதல் திட்டம் தேசியத் தலைவர் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடற்புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. அது மட்டுமன்றி இப்பாரிய கப்பல் தப்பக்கூடாது என்று உறுதியாகவும் தெளிவாகவும் கூறி கடற்புலிகளை வழியனுப்பி வைத்தார்.

சாகராவர்த்தனா கப்பலிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.

Sagaravarthana-Ship-002.jpg

Sagaravarthana-Ship-001.jpg

Sagaravarthana-Ship-003.jpg

இத்தாக்குதல் திட்டத்தின்படி கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகள் தமது படகுகளால் மோதி கப்பலை மூழ்கடிப்பார்கள். அதற்கமைவாக 19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்புக் கட்டளைக்கப்பல் மீது லெப். கேணல் டேவிற் தலைமையிலான சண்டைப் படகுகள் முறையே மாவீரர்களான லெப். கேணல் நிமல், லெப். கேணல் சலீம், கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், மேஐர் கண்ணன், கடற்கரும்புலி மேஐர் சுடரொளி, கடற்கரும்புலி கப்டன் தணிகை, கப்டன் தாயகி, மேஐர் சிங்கன், மேஐர் கனியன், கடற்கரும்புலி மேஐர் வினோதா, கப்டன் வில்வம் ஆகியோர் தமது படகுகளால் தாக்கி கடற்கரும்புலிகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகளான லெப். கேணல் நளாயினி, மேஐர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோர் தமது கரும்புலிப் படகுகளால் மோதி கப்பலை மூழ்கடித்து கற்பிட்டக்கடலில் காவியமானார்கள்.

Captain-of-Sagaravarthana.jpg

கடற்புலிகளினால் கைதுசெய்யப்பட்ட சாகராவர்த்தனா கப்பல் கப்டன் பொயாகொட

இதுவே கடற்புலிகளால் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக தாக்கி மூழ்கடிக்கப்பட்ட முதலாவது பாரிய கப்பலாகும். அது மட்டுமன்றி கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையணியான லெப். கேணல் சாள்ஸ் படையணியின் முதலாவது தாக்குதலாகும். அந்தநேரம் ஆண், பெண் போராளிகளை இணைத்து உருவாக்கப்பட்டதே சாள்ஸ் படையணியாகும். இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவின் பங்கும் மிகவும் அளப்பரியது. மேஐர் இன்பநிலா, கடற்கரும்புலி மேஐர் பரன் தலைமையிலான அணியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியையும் செவ்வனவே செய்திருந்தார்கள். இந்நடவடிக்கைகளை தேசியத் தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் சிறப்புத்தளபதி சூசை அவர்களும், தளபதி கங்கைஅமரன் அவர்களும், துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரும் செவ்வனவே வழிநடாத்தியிருந்தர்கள். இத்தாக்குதலில் பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டதுடன் இக்கப்பல் கப்டன் பொயாகொட கடற்புலிகளால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தேசியத் தலைவர் அவர்களின் உள்ளத்திலிருந்து… ‘சிறிலங்கா கடற்படையின் ஒரு கப்பற் தளபதியை, தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெற்றியைப் பெற உயிர் துறந்தாள்.

பின்னாளில் இவ் வரலாற்றுக் காவியத்தில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களான லெப். கேணல் நளாயினி அவர்களின் பெயர் தாங்கி கடற்புலிகளின் மகளிர் அணியின் ஒரு பகுதியினரை ஒன்றாக்கி ஒரு பெரும் தாக்குல படையணியை உருவாக்கி தமிழீழக் கடலெங்கும் சிறிலங்கா கடற்படைக்கு எதிரான புதிய சாதனைகளை படைக்க வழிவகுத்தார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனுடன் மேஜர் மங்கை அவர்களின் பெயர் தாங்கி கடற்புலிகளின் படகு கட்டுமானம் அமையப்பெற்று கடற்புலிகள் கடற்படைக்கு எதிராக பயன்படுத்தும் பெரும்பாலான படகுகள் மங்கை படகு கட்டுமான மகளீர் போராளிகளால் உருவாக்கம் பெற்றது.

அன்று கற்பிட்டிக் கடலில் சாகராவர்த்தனா கப்பல் மூழ்கடித்து தாக்குதலில் பங்கு பற்றி இன்றைய காலங்களில் பல்வேறு தேசங்களில் வாழும் போராளிகள் கூறிய தகவல் அடிப்படையில் இக்காவியம் பதியப்படுகின்றது.

  • அன்றைய நினைவுகளுடன் கடற்புலி போராளிகள்.

https://thesakkatru.com/black-sea-tigers-attack-on-the-sinking-of-the-sagaravarthana-ship/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலிகள் லெப். கேணல் நளாயினி

 

 

Black-Sea-Tiger-Lieutenant-Colonel-Nalayini.jpg

இன்று விழுந்தாலும் நாளை எழுவோம்

கட்டையான குண்டு உருவம். காற்று அடித்த பலூன் மாதிரி வெடித்து விடுவது போன்று வீங்கிய கன்னங்கள். மல்யுத்த வீரர்களுக்கு இருப்பது போன்று உருண்டையான கை, கால்கள் – இதுதான் நளாயினி.

இந்தப் பெரிய உடலையும் சுமந்து கொண்டு நளாயினி சாதித்தவை ஏராளம்.

மிக வேகமான ஓட்டம். யாராலும் நம்ப முடியாது. ஆனால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவதாகத்தான் ஓடி முடிப்பார். பெரிய உடலையும் தூக்கிக்கொண்டு தன் குண்டுக் கால்களை வீசி வீசி நளாயினி ஓடும் அழகைப் பார்த்து பயிற்சிப் பாசறையில் தோழிகள் இவருக்கு இட்ட பட்டப்பெயர் ‘தவளைக்குட்டி’

எதையுமே ஏன் எதற்கு எப்படி? என்று தூண்டித் துருவி விசாரிப்பது இவரின் வழக்கம். எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லோரையும் கேள்விகள் கேட்பதால் ‘சயன்ரிஸ்ற்’ என்ற அதியுயர் விருதும் தோழிகளால் இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

வயதில் சின்னவர் என்பதாலும் துடியான இயல்பைக் கொண்டவர் என்பதாலும் மேஜர் சோதியாவுக்கும் இவரில் நல்ல விருப்பம். இவரும் மேஜர் சோதியாவுடன் தாயிடம் பிள்ளை கதைப்பது போன்று செல்லமாகக் கதைப்பதுதான் வழக்கம்.

காட்டிலே நாம் வாழ்ந்த காலத்தில் திசையறி கருவிதான் எமக்குப் பாதைகளை இனங்கண்டு கொள்ளப் பெரிதும் உதவியது. ஒவ்வொரு அணியும் தன்னிடம் ஒரு திசையறிகருவியையாவது கட்டாயம் வைத்திருக்கும். காட்டுக்கு நளாயினி வந்த புதிதில் எல்லாப் போராளிகளும் காடு ஏதோ தமக்கு நன்கு பழகிய இடம்போல திசையறி கருவியுடன் போவதும் வருவதும் நளாயினிக்கு வியப்பை ஊட்டியது. தானும் அதுபோலப் போய் வரவேண்டும் என்ற ஆர்வம் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது. தமக்குரிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட முன்னரே மூத்த போராளிகளிடம் திசையறிகருவி பற்றிய பூரண விளக்கத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு விட்டார். காட்டிலே நின்ற காலத்தில் திசையறி கருவிகளைப் பார்த்துப் பாதைகளைப் பிடித்துப் போவதில் ஒருமுறை கூட நளாயினி தவறியது கிடையாது. அதனால்தான் எந்த இரவிலும் எந்த நடுக்கடலிலும் நளாயினியால் தனது படகைச் சரியான பாதையில் செலுத்த முடியும்.

1990ஆம் ஆண்டின் முற்பகுதி, விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு ‘முன்னணி’ என்ற பெயருடன் செயற்பட்ட ஆரம்பக்காலம். வவுனியா மாவட்டத்தில் அரசியல் வேலை செய்யவென விடப்பட்ட ஆறு பெண்போராளிகளுள் நளாயினியும் ஒருவர்.

ஒவ்வொருவருக்கும் மாறி மாறிச் சமையல் முறை வரும். நளாயினியின் சமையல்முறை நாளில் எல்லோருக்கும் கஸ்டகாலம். நளாயினிக்குச் சமைக்கவும் தெரியாது. தேநீர் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு கழிவுநீர்த் தண்ணீர் தயாரிப்பதுதான் நளாயினியின் வழக்கம். அன்று பார்த்து யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால் அவர்களின் நிலை விபரிக்க முடியாததாகிப் போய்விடும்.

தேநீரே இப்படியென்றால் சமையலைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அறுசுவை என்று சொல்லப்படுகின்ற எல்லைக்கு அப்பாற்பட்டு புதுச்சுவையாக இருக்கும். மனித நாக்கின் சுவையுணர்மொட்டுக்கள் நளாயினியின் சமையலின் சுவையை இனங்காணமுயன்ற ஒவ்வொரு தடவையும் சமையலைச் சகிக்க முடியாத பொறுப்பாளர் நளாயினியைக் கூப்பிட்டு உன்ர ரேணுக்கு நீ சோறும் சம்பலும் மட்டும் செய் ராசாத்தி. நாங்க சந்தோசமா சாப்பிட்டு விட்டுப் போறம் என்று சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் அவர் தன்னுடைய சமையல் முறையன்று அடுப்பில் உலைப் பானையை ஏற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருக்கும் உரலில் சம்பல் இடிக்கப் போய்விடுவார். நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்றே எப்போதும் நினைக்கின்ற நளாயினிஇ ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? என்ற எண்ணத்தில் சுவரில் நிற்கும் பல்லியையும் எறும்பையும் பார்த்தவாறு சம்பலை இடித்து இடித்துஇ

“அன்பான தமிழீழ மக்களே, இந்தத் தமிழீழ விடுதலைப் போராட்டமானது……” என்று தனது பேச்சுப் பயிற்சியை ஆரம்பித்து விடுவார். ஒருநாள் பின்புறம் யாரோ கதைக்கும் குரல் கேட்டதைக் கவனித்த ஒரு போராளி என்னவென்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடிப்போய் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டுவர……

ஐந்து பேர் மறைந்திருந்து தன்னைக் கவனிப்பதை அறியாத நளாயினி தொடர்ந்தும் சொற்பொழிவாற்றிக்கொண்டிருக்க……

இவர்கள் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டார்கள். திரும்பிப் பார்த்த நளாயினி வெட்கப்பட்டு என்னக்கா நீங்க?

என்று சிணுங்க அடுத்த முறை நளாயினி இந்தமாதிரி ஏறுமாறாக ஏதாவது செய்யும் வரை சொல்லிச் சிரிப்பதற்கு அவர்களுக்கு ஒரு சுவையான செய்தி கிடைத்து விட்டது.

வவுனியாக் கோட்டத்தில் வேலை செய்த காலத்தில் நளாயினி வாங்காத தண்டனைகள் இல்லை. வெளியில் போய்விட்டு இரவு தளத்துக்கு வந்து முகம் கழுவாததற்கு, இரவில் நிலத்தை கூட்டாமல் பாயை விரிக்காமல் படுப்பதற்கு, காலையில் குளிக்காமல் வெளியில் புறப்படுவதற்கு, குளித்தாலும் உடைகளைத் தோய்க்காமல் – தோய்த்தாலும் கொடியில் விரிக்காமல் – விரித்தாலும் காய்ந்ததுடன் மடித்து வைக்காமல் என்று நீண்ட பட்டியல் ஒன்றையே தயாரிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் தன் மக்களிடம் போய் சமையலறையையில் அம்மாமார்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வெங்காயம் உரித்துக் கொடுத்து தேய்காய் துருவிக்கொடுத்து ஐயாமார்களுடன் அமர்ந்து பழையதுகள் கதைத்து அரசியல் வேலை செய்து அந்த மக்களின் மனங்களில் தனக்கென ஒரு சிம்மாசனத்தைக் கட்டி எழுப்பியவர் நளாயினி. தளத்திலிருக்கும் போது குழந்தை போலவே நடந்து கொள்வார்.

வவுனியா மாவட்டப் பொறப்பாளராக நியமிக்கப்பட்ட பின் மதியம் 12.30 மணிக்கு எங்கிருந்தாலும் தன் தளத்துக்கு வந்து சேர்ந்துவிடுவார். பாடசாலை முடிந்து வரும் கீழ்ப்பிரிவு மாணவர்கள் நளாயினியின் தளத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அவர்களின் கொப்பிகளை வாங்கிப் பார்த்து சரி பிழைகளை விளங்கப்படுத்தி முதல் நாள் பாடசாலைக்குப் போயிருக்காவிட்டால் அதற்குக் காரணம் கேட்டு ஆசிரியர்கள் ஒழுங்காகப் பாடங்களை நடத்துகின்றார்களா என்பதைக் கேட்டறிந்து பின்னர் மாணவர்களின் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் அதைப் பற்றிக் கதைத்து முடிவெடுத்து, இது நளாயினியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று. வீதியால் போகும் சிறுமிகள், சிறுவர்கள் அழுக்காகப் போனால் வீதியிலேயே அவர்களை நிறுத்தி தன் கைக்குட்டையால் முகம் துடைத்துவிட்டு தன்சீப்பால் தலை வாரிவிட்டு அவர்களின் உடைகளைச் சீர்படுத்தி அனுப்புவதில் நளாயினி என்றுமே பின்னின்றதில்லை.

அப்போதுதான் அந்தச் சண்டை நடந்தது. திடீரென முன்னேறிய சிறீலங்கா இராணுவம் கோழியாகுளத்திலிருந்த நளாயினியின் தளம் வரை வர நளாயினியின் துப்பாக்கி சீறியது. சிறிது நேரத்திற்குள்ளேயே ஏனைய போராளி அணிகளின் உதவியும் கிடைக்க அன்று நடந்த சண்டையில் இராணுவம் பின்வாங்கிவிட்டது.

ஆனால், அனுமதியில்லாமல் சண்டை பிடித்ததற்கு தண்டனையாக நளாயினி பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டார்.

ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலுக்காக விடுதலைப் புலிகள் மகளிர் படையணி தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது வவுனியா, பூவரசங்குளத்தில் வைத்து சிறீலங்கா இராணுவத்தை வழிமறித்துத் தாக்குவதென திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனையிறவு மீதான தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த போராளிகளில் ஒரு பகுதியினர் பூவரசன்குளத்துக்குப் புறப்பட்டனர். வவுனியாவின் ஒவ்வொரு மூலையும் தலைகீழ்ப் பாடம் என்பதால் நளாயினியும் தாக்குதலணியுடன் புறப்பட்டார்.

இந்த மோதலின் போது நளாயினி வயிற்றில் பலத்த காயமடைந்தார். காயமடைந்த நளாயினியை தூக்கி அவரது ஆயுதங்களை அவரிடமிருந்த அப்புறப்படுத்திய பொழுது அவரது ரவைக்கூடுகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. கிரனைட்கூட எஞ்சியிருக்கவில்லை. எல்லாவற்றையுமே சண்டையில் பாவித்து விட்டார். ஏனென்றால் வவுனியாவின் தள அமைப்பைத் துல்லியமாகத் தெரிந்த நளாயினி இராணுவம் தம்மை நோக்கி முன்னேறுவதற்கு வாய்ப்பாக இருக்கக்கூடிய ஒரு சின்ன இடைவெளியைக்கூட விடாமல் தனித்து நின்று ஒரு பக்கத்தில் சண்டை பிடித்திருந்தார். அவர் தாக்கிய பக்கத்திலிருந்து இராணும் முன்னே வரவேயில்லை. காயமடைந்த நளாயினியைத் தூக்கிக் கொண்டு பின்னுக்கு வருவதற்கிடையில்;

எங்க எங்கட பிள்ளை? நளாயினிக்குக் காயமாமே. என்னமாதிரி? என்று கேட்டவாறு வவுனியா மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். அந்த மக்களை விலக்கி, நளாயினிக்கு ஒன்றுமில்லை. என்று பொய் சொல்லி நளாயினியை அந்த இடத்திலிருந்து கொண்டு வருவதற்குள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டுத்தான் போனோம்.

தான் ஒரு கரும்புலியாகப் போக விரும்புவதாக நளாயினி தலைவருக்கு கடிதம் எழுதினார். அந்த நேரம் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் பெண் போராளிகள் இருக்கவில்லை.

“கணிசமான அளவு போராளிகளைக் கொண்ட அமைப்பாக கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்த்தபின் கரும்புலியாகப் போகலாம்” என்று கூறிய தலைவர் கடற்புலிகள் மகளிர் படையணியைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நளாயினியிடம் ஒப்படைத்தார். லெப். கேணல் நளாயினி, மேஜர் சுகன்யா, மேஜர் மங்கை உட்பட முப்பது பெண் போராளிகளுடன் 1992.03.01 இல் “கடற்புலிகள் மகளிர் படையணி” தோற்றம் கொண்டது.

Commander-of-Sea-Tigers-Woman-Thesakkatru-01-scaled.jpg

ஆரம்ப காலத்தில் வாகன வசதி ஒன்றுமில்லை. நடந்து திரிந்தும் மிதிவண்டியில் திரிந்தும் இயக்கத்தோடு பெண்களை இணைத்தார்கள். இந்த முப்பது பேரும் பலதுறை சார்ந்த பிரிவுகளாகப் பிரிந்து எல்லாவற்றைம் கவனித்தார்கள். முப்பது பேரில் பத்துப் பேர் நீச்சற் பயிற்சிக்கென விடப்பட்டனர். அவர்களுள் நளாயினியும் ஒருவர். அந்தப் பத்துப் பேரும் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திமுடித்தால் கடற்புலிகள் மகளிர் படையணிக்கென ஒரு வாகனம் தருவதாகச் சூசையண்ணை சொல்லி விட்டார். அவர்கள் நீந்த வேண்டிய நாளும் வந்துவிட பத்துப் பேரும் கடலுள் குதித்தார்கள். ஒன்பது பேர் நீந்தி முடித்துவிட்டார்கள். நளாயினியால் முடியவில்லை. வயிற்றுக் காயம் மிகுந்த வேதனையை உண்டாக்கியதால் நீந்த முடியாமற் கரையேற நேர்ந்தது. அன்று முழுவதும் ஒரே அழுகைதான். காயத்தின் வேதனை குறையாத போதும் மறுநாள் மீண்டும் நீந்தினார். ஒருகடல் மைலைக் கடக்காமல் கரையேறுவதில்லை என்ற உறுதியுடன் போய் நீந்தி முடித்து விட்டார்.

அதன் பின்னர் நளாயினி சூசையண்ணையிடம் வாகனம் வாங்கியதும் பின்னர் பல கடல் மைல்களை நீந்திக் கடந்தும் விசைப்படகுகள் ஓட்டும் வல்லமை பெற்றதும் மிக நீண்ட கதைகள்.

வோட்டர் ஜெட் எடுக்கவேணும். அவனை அடிச்சு அவன்ரை 50 கலிபர் எடுக்கவேணும் என்பது தான் நளாயினியின் தாரக மந்திரமாகிவிட்டிருந்தது. இந்த நேரத்தில்தான் பூநகரி இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கு நாள் நிச்சயிக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நளாயினியும் கடற்புலிகள் மகளிர் படையணியின் ஒரு அணியும் தரைச் சண்டைக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பூநகரித் தளத்தின் மாதிரி அமைப்பைச் சூழ பெண் – ஆண் போராளி அணிகளின் பொறுப்பாளர்கள் தளபதி சொர்ணமண்ணை தாக்குதல் திட்டத்தைப் பற்றிச் சொல்வதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். நளாயினிக்கு தரைப்பகுதியில்தான் இலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நளாயினியின் கண்களோ நாகதேவன்துறைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை அவதானித்து விட்டன.

“ஆய் வார்ட்டர் ஜெட் நிக்குது” என்று தன்னை மறந்த நிலையில் நளாயினி சொல்ல எல்லோரும் நளாயினியையே திரும்பிப் பார்த்தார்கள். கண்களை அகல விரித்தவாறு மெய்மறந்து நின்ற நளாயினியை அருகிலுள்ள தோழிகள் தட்டித்தான் சுய நினைவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. மாதிரி அமைப்பு விளக்கப்பட்ட பின்னர்…,

நான் என்ரை பக்கத்தை அடிச்சுப் பிடிச்சு அப்பிடியே நடுவுக்குள்ளாலை அங்காலை போய் நாகதேவன்துறையையும் அடிச்சுப் பிடிச்சு அங்க நிக்கிற வோட்டர் ஜெட்டுக்களையெல்லாம் எடுத்து காயப்பட்டாக்களை அதில ஏத்திக் கொண்டு போவன். தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டு திரிந்தார். தனது குரலை அடிக்குரலில் மாற்றி வோக்கியில் கதைத்து தன்னுடைய குரல் கம்பீரமாக இருக்கின்றதா என்று தோழிகளிடம் கேட்பார்.

சண்டை ஆரம்பமானது. நள்ளிரவில் நடுக்கடலில் நட்சத்திரங்களைப் பார்த்து திசையறிந்து கரைசேருகின்ற நளாயினிக்கு அந்த இரவில் தனக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை இனங்கண்டு கொள்வதில் எந்தச் சிரமமுமே ஏற்படவில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட அரண்களில் சிலவற்றைக் கைப்பற்றி அழித்து அந்த இடையூடாக உதவிக் குழுவை பிரதான தளத்துக்கு அனுப்ப வழிவகை செய்துவிட்டு தொடர்ந்தும் நடந்த சண்டையில் நளாயினி வயிற்றில் காயமடைந்தார். முன்னர் காயப்பட்ட அதே இடம் இம்முறை மிகமோசமாகப் பாதிப்புக்குள்ளானது. இரத்தக் உட்கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தவர் பலத்த முயற்சிகளின் பின் பிழைத்தார். நிமிர்ந்து உட்காரமுடியாத நிலையில் வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தார்.

மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. தன்னைத் துயிலுமில்லத்துக்குப் போக அனுமதிக்குமாறு நச்சரித்துக் கொண்டேயிருந்தார். யாருமே பிடிகொடுக்கவில்லை. 1993.11.27 அன்று ஒருவருக்கும் சொல்லாமல் ஒரு காரை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு துயிலுமில்லத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார். அனைத்துத் தளபதிகளும் பொறுப்பாளர்களும் நளாயினியைக் கோபத்துடன் ஏச நான் என்னென்டு ஆஸ்பத்திரியிலை இருக்கிறது? கண்ணை மூடினாலும் துறந்நாலும் துயிலுமில்லந்தான் தெரியுது. நான் என்ன செய்ய? என்று எல்லோரையும் சமாதானப்படுத்தி விட்டார்.

நளாயினியை ஓய்வாக இருக்கும்படி விட அவர் புறப்பட்டு தனது தளத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். தான் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டு நீச்சற் பயிற்சிகளிலும் படகோட்டும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.

பூநகரித் தாக்குதலிலும் லெப். கேணல் பாமா நீரூந்து விசைப்படகை கைப்பற்றி வந்த பின்னர், அவன்ரை கப்பலொண்டைத் தாக்கவேணும் என்பதே நளாயினியின் கனவாகிப் போயிருந்தது.

Commander-of-Sea-Tigers-Woman-Thesakkatru-04.jpg

கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளியில் ஒருமுறை விளையாட்டுப் போட்டி நடந்து முடிய பொறுப்பாளர்களுக்கான அஞ்சலோட்டம் நடந்தது. பெண் போராளிகளின் பொறுப்பாளர்களும், ஆண் போராளிகளின் பொறுப்பாளர்களும் ஓட ஆரம்பித்தார்கள். பெண் போராளிகள் தரப்பில் நளாயினி முதலில் ஓட ஆரம்பித்தார். வயிற்றுக்காயம் வேகமான ஓட்டத்துக்குத் தடை போட்டது. ஆனாலும் விடாது ஓடி அடுத்தவரிடம் கோலை மாற்றிக் கொடுக்குமிடத்தை அடைய ஏறத்தாழ பத்து மீற்றர்களே இருக்கும் போது நளாயினி தடக்கிக் கீழே விழுந்துவிட்டார். எல்லோரும் கூக்குரலிட்டு விசில் அடித்தனர். ஆனால் நளாயினி உடனேயே எழும்பி ஓடிக் கோலை அடுத்தவர்களிடம் மாற்றிக் கொடுத்தார். அன்று பெண் போராளிகள் அணி கடைசியாகத்தான் வந்தது. எல்லோரும் நளாயினியைக் கேலி செய்தார்கள். அவர்களெல்லோருக்குமே நளாயினி சொன்ன பதில் இதுதான்.

“இண்டைக்கு விழுவம் நாளைக்கு எழும்புவம்.”

படைத்துறைப்பள்ளியின் ஆண் போராளிகளில் எட்டுப் பேர் ஐந்து கடல்மைல்களைக் நீந்திக் கடந்துவிட்டார்கள். அவர்களின் பொறுப்பாளர் பெண் போராளிகளின் பொறுப்பாளரிடம் வந்து, உங்கட ஆக்களில் ஒரு அஞ்சு பேரையாவது நீந்த வையுங்கோ இல்லாவிட்டால் மரியாதை இராது, என்று சொல்லிவிட்டுப் போக அதை அறிந்த நளாயினி வந்து பெண் போராளிகளின் பொறுப்பாளரிடம், பத்துப் பேரையாவது கட்டாயம் நீந்த வைக்க வேணும் பொம்பிளைப் பிள்ளையளாலை சாதிக்க ஏலும் எண்டது எல்லாருக்கும் தெரிய வேணும்.

Commander-of-Sea-Tigers-Woman-Thesakkatru-02.jpg

மறுநாள் படைத்துறைப்பள்ளியின் பெண் போராளிகள் நீந்தத் தொடங்கினார்கள். நளாயினி ஒரு படகில் ஏறி நீந்திக் கொண்டிருந்த ஒவ்வொரு போராளியின் அருகேயும் வந்து படகை நிறுத்தி, நீந்தி முடிக்கவேணும் என்னம்மா நல்லா நீந்த வேணும் என்று சொல்லிச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

படகின் இயந்திரத்தை நிறுத்தி நிறுத்தி இயக்குவதிலுள்ள சிரமத்தையும் பாராது எல்லாப் பெண் போராளிகளையுமே ஐந்து கடல் மைல்களைக் கடக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வேகத்தில் அப்படிச் செய்தார். அன்று பத்தொன்பது பெண் போராளிகள் ஐந்து கடல் மைல்களை நீந்திக் கடந்தார்கள். அன்று முழுவதும் நளாயினியின் பாதங்கள் நிலத்தில் படவில்லை. அவ்வளவு உற்சாகம்.

எல்லாச் சின்ன போராளிகளையும் கிட்டண்ணையின் நினைவுப் பூங்காவுக்குக் கூட்டி வந்து விளையாடவிட்டு அவர்கள் விளையாடுவதை ரசித்து அவர்களுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுத்து அவர்கள் குடிப்பதை ரசித்து அவர்களைப் பற்றி பெருமைப்பட்டு…..

“உங்களை நான் நேவியாகத்தான் பாக்கிறன்” என்று தன் கனவை அடிக்கடி அவர்களிடம் சொல்லிச் சொல்லியே வளர்த்தார்.

தன் பிள்ளைகளுடன் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ஆறுதலாக இருந்து கதைப்பது நளாயினியின் வழக்கம். அப்படிக் கதைக்கும் நேரங்களில்,

“எங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே தலைவர்தான். அவர் சொல்லுறதையெல்லாம் நாங்க கேக்க வேணும்”

பெண் போராளிகள் எப்போதுமே தங்கள் வேலைகளைத் தனித்துவமாகவும் திறமையாகவும் செய்ய வேணும். கடற்சண்டைகளில் தொடர்ந்து ஈடுபடவேணும்.

இந்தக் கடல் எங்கட கடல். இந்தக் கடல்ல தான் நாங்க சாகவேணும்.

அண்ணைக்கு உங்களில சரியான நம்பிக்கை இருக்கு. அதுக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள வேணும். என்றெல்லாம் சொல்லுவார். பிள்ளைகளைப் பாடச்சொல்லிக் கேட்பார். இல்லாவிட்டால் தானே தன் அடைத்த குரலில் பாடிக் காட்டுவார்.

பிள்ளைகளைத் தன்னைச் சுற்றி வட்டமாக அமரச்செய்து விட்டு அவர்களுக்குச் சோறு குழைத்துக் கொடுப்பது நளாயினியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று. ஒருமுறை லெப்.கேணல் சாள்ஸ் தலைமையில் கனரக ஆயுதங்களை இயக்க வேகப் படகுகளை ஓட்ட நீச்சற் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை தவறுதலாக நளாயினியின் ஆட்கள் ஒரு கொள்கலனிலிருந்து எண்ணெய் கசிவதைக் கவனிக்காது விட்டதில் எண்ணெய் முழுவதும் வெளியில் வழிந்து விட்டது. அதற்குத் தண்டனையாக குறிப்பிட்ட காலம் வரை இவர்களுக்கு காலை உணவு நிறுத்தப்பட்டு விட்டது. பயிற்சியோ மிகக் கடுமையானது. கடற்புலிகளின் வயிறோ கடலை விட ஆழம் கூடியது. காலையில் சாப்பிடாமல் பயிற்சி எடுப்பது என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. எப்போதடா மதியமாகும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Commander-of-Sea-Tigers-Woman-Thesakkatru-03.jpg

ஒருநாள் பயிற்சி ஆசிரியர்கள் இவர்களுக்குரிய மதிய உணவை அனுப்ப மறந்து விட்டார்கள். இவர்களோ உணவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நேரமோ மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய வாடிய முகங்களையும் பார்க்கச் சகிக்காத நளாயினி பயிற்சி ஆசிரியர்களிடம் போய்ச் சாப்பாட்டைக் கேட்ட போது தான் அவர்களுக்கு ஞாபகம் வந்து சமையலறைக்குப் போய்ப் பார்த்தார்கள். சொற்ப அளவிலான உணவுதான் எஞ்சியிருந்தது. அதை வாங்கி வந்த நளாயினி எல்லோருக்கும் குழைத்துச் சாப்பிடக் கொடுத்து விட்டுத்தான் தான் சாப்பிட்டார்.

இப்படியெல்லாம் பழகுவதாலேயோ என்னவோ இவரை இடையிடையில் அம்மா என்றும் போராளிகள் கூப்பிடுவதுண்டு.

என்னோடை எப்படிப் பழக விரும்புகிறீர்களோ அப்படி நினைச்சுப் பழகுங்கோ என்றுதான் நளாயினியும் போராளிகளிடம் சொல்லுவார்.

கரும்புலித் தாக்குதலுக்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தற்செயலாக விசைப்படகு ஒருமுறை கவிழ்ந்ததில் நளாயினியின் வயிற்றுக்காயம் பலமாகத் தாக்கப்பட்டது. தாங்க முடியாத வேதனை ஏற்பட்ட போதிலும் சமாளித்துக் கொண்டு தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டார்.

Commander-of-Sea-Tigers-Woman-Thesakkatr

கடுமையான பயிற்சியை ஆரம்பித்த நாளிலிருந்து நளாயினியின் கனவு நனவெல்லாம் “சாகரவர்த்தன” வுடன் மோதும் கற்பனைதான். எந்த நேரமும் நான் அப்படிப் போய் இடிப்பன். நான் இப்படிப் போய் இடிப்பன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார். இருட்டில் தன் இலக்கைச் சரியாக அடைய முடியாமல் தவறுதலாக வேறெங்காவது மோதி இலக்குத் தப்பிப் போகக்கூடாது என்பதில் எப்போதுமே நளாயினிக்கு கவனம் இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்படும் பதட்டத்தால் தவறு நேராமல் தவிர்ப்பதற்காக எந்த நேரமும் சாகரவர்த்தனாவுடன் தன் படகு மோதும் காட்சியையே திருப்பி கற்பனை செய்து பார்த்துக் கொண்டார்.

இலக்குக்கு மிக அண்மையிலுள்ள ஒரு தரைப்பகுதி லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் லக்ஸ்மன், கப்டன் வாமன் உட்பட கடற்புலிகளின் பெண் – ஆண் போராளிகளைக் கொண்ட ஒரு அணி தயார் நிலையில் நின்றது. அங்கு நிற்கும் வரை சமையல் முறை ஒரு நாள் ஆண் போராளிகளுக்கும் மறுநாள் பெண் போராளிகளுக்கும் என மாறி மாறி வரும். பெண் போராளிகளின் சமையல் முறை என்றால் நளாயினிதான் மெயின் குக். சுவையாகச் சமைப்பவர்களுக்கு கண்டோஸ் வாங்கித் தருவதாக சூசையண்ணை சொல்லியிருந்ததால் போட்டியாகத்தான் சமையல் நடக்கும். சாப்பாட்டு நேரத்தில் வழமை போல் நளாயினி பெண் போராளிகள் எல்லாரையும் தன்னைச் சுற்றிவர இருத்தி சோறு குழைத்துக் கொடுத்து……

தன் படகு மோதி சாகரவர்த்தனா நீருள் மூழ்கத் தொடங்கியதும் எல்லோரும் சாப்பிட என்று இனிப்புக்கள் வாங்கிக் கொடுத்து……

1994.09.19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தப் பிசகுமே இல்லாமல் செய்து பார்த்த பயிற்சிகளில் எந்தத் தவறுமே நேராமல் நளாயினியும் மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் லக்ஸ்மனும் மோதியதில் சாகரவர்த்தனா மூழ்கத் தொடங்கியது.

நளாயினியையும் இன்னும் எண்ணற்ற வீரர்களையும் தன்னுடனணைத்துக்கொண்ட கடலன்னையின் அலைக்கரங்களிலே நீந்தி விளையாடி படகோட்டிப் பயிற்சிகள் செய்யும் அந்த வேகமான வீராங்கனைகள் யார்? தெரியவில்லையே?

இன்னும் கொஞ்சம் கிட்டப் போய்ப் பார்ப்போமே அட நளாயினி படையணி!

மூலம்: உயிராயுதம் பாகம் 01.

https://thesakkatru.com/commander-of-sea-tigers-black-tiger-lt-col-nalayini/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி மேஜர் மங்கை

 

 

Black-Sea-Tiger-Mejor-Mangaii.jpg

 

கற்பிட்டிக் கடலில் சிங்களக் கடற்படையின் கடலரசனைத் தாக்கியழித்த கடற்கரும்புலி.

“மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி கூறினாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் அனேகமான போராளிகளுக்கு அவள் நீச்சல் பழக்கியிருந்தாள். இரவு பகல் பாராது பிள்ளைகளோடு ஒருத்தியாக மங்கை நிற்பாள். எங்கடை ‘மங்கை அக்கா எந்தக் கஸ்டமான பயிற்சிகளையும் தான் முன்மாதிரியாகச் செய்து காட்டித்தான் எங்களைச் செய்யச் சொல்லுவா. எங்களுக்கு கஸ்டமாக இருந்தாலும் மங்கை அக்காவே செய்யிறா. ஏங்களால ஏலாதோ” என்று செய்து போடுவம்.

எப்போதுமே முன்மாதிரியான போராளியாகவே நாம் அவளைக் கண்டோம். பிள்ளைகள் நாலுமுப்பது மணிக்கு நித்திரை விட்டு எழுந்தபோதெல்லாம் அவள் நாலு மணிக்கே எழுந்து விடுவாள். எந்தப் பிள்ளையும் நீந்தத் தெரியாமல் இருக்கக்கூடாது. குறைந்தது ஐந்து கடல் மைல்களாவது நீந்திப் பழகியிருக்க வேண்டுமென்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

அதற்காக மழையென்றும் வெயிலென்றும் பாராது பிள்ளைகளுடன் நனைந்தும் காய்ந்தும் நின்றாள். பிள்ளைகளை நீந்தப் பழக்குவதற்கென கடலில் இறக்கி விட்டு அலைகளில் நனைந்தபடி அவள் நிற்பாள். கால்கள் விறைத்தாலும் கண்கள் தூரத்தே புள்ளியாய்த் தெரியும் எதிரியின் விசைப்படகின் அசைவினைப் பார்த்தபடி நிற்கும்.

ஒருமுறை வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்துக்கு மங்கை அலுவலாகச் சென்றிருந்தாள். அங்கிருந்து நான்கு படகுகள் இவர்களது பக்கம் வருவதாகச் செய்தி வந்தது. பிள்ளையள் நீந்துவதற்குப் போவார்களே, நான்கு படகுகளும் தாக்குதல்தளை நிகழ்த்தலாம், பிள்ளைகள் கடலுக்குள் இறங்கினால் ஆபத்து. விடியுமுன்னரே அவள் சைக்கிளில் நீண்டமைல்கள் கடந்து கண்களில் சிவப்போடு வந்து சேர்ந்தாள். அவ்வளவு தூரம் ஒவ்வொரு போராளிகளையும் கண்ணுக்குள் வைத்துப் பேணினாள்.

போராளிகள் வீணாக இறக்கக் கூடாது. இந்தப் போராட்டத்தில் நிறையச் சாதிக்கவேணும் என்பதில் தீவிரமாக நின்றாள். ஒவ்வொரு போராளிகளுக்கும் படகு எஞ்சின் உதிரிப் பாகங்களிலிருந்து படகு ஓட்டுவது வரை சகல துறைகளையும் கற்றுக் கொடுத்தாள். கட்டுமரம் ஓடப் பழக்கி குல்லா வலிக்கக் கற்றுக் கொடுத்தது வரை அவள் சாதித்தது ஏராளம்.

கடலைப் பற்றித் தெரியாது. நீச்சல் பற்றி அடி தலை தெரியாது வந்த போராளிகளே அனேகம். ஐயோ நான் தாழப்போறன் எனக்குப் ‘போசா’ தாங்கோ என்று மூச்சுமுட்டி நிற்கும் போராளிகளுக்கெல்லாம் அண்ணையை (தலைவரை) நினைச்சுக் கொண்டு பயிற்சி எடுங்கோ, கஸ்டம் தெரியாது என்று நம்பிக்கையூட்டி தைரியமளித்து பிள்ளைகளோடு எப்போதும் தானும் ஒரு பயிற்சியாளராகவே நின்றாள். எப்போதும் தலைவரின் வளர்ப்புப் பற்றியும் போராட்டம் பற்றியும் சொல்லிச் சொல்லி வாழ்ந்த போராளி அவள்.

அவளது முதற்சண்டை ஆனையிறவு ஆகாய – கடல் – வெளித்தாக்குதலாக அமைந்தது. அதற்கு அவள் விநியோகக் குழுவில் ஒருத்தியாகச் சென்றாள். அந்தச் சண்டையில் நான் திரும்பி வருவேன் என்ற உறுதியோடு தான் சென்றாள். கையில் சிறிய காயத்தோடு வந்தவளிடம் நிறையக் கனவுகள் இருந்தன. கரும்புலியாய்ப் பாயவேணும் என்ற கனவையே நெஞ்செல்லாம் நிறைத்து அதற்காகவே தன்னைத் தயார்ப்படுத்தினாள்.

பூநகரிச் சண்டைக்கும் அவள் லெப். கேணல் பாமாவுடன் சென்றாள். அலைகளில் நனைந்து நனைந்து படகோட்டியபடி கண்காணிப்புப் படகின் ஓட்டியாக நின்றாள். லெப். கேணல் பாமா நீருந்து விசைப் படகை எடுக்கும் போது படகுக்கு ஓட்டியாக நின்று அதைக் கொண்டு வந்து சேர்த்து பெரிய வெற்றிப் பூரிப்போடு திரும்பவும் சென்றாள். எதிரியின் ஆயுதங்கள் அள்ளி 50 கலிபரின் தாங்கி கழற்றி இலக்குப்பிசகாமல் வந்து கரைசேர்ந்த அந்தச் சண்டையில் அவளது பங்கு கணிசமானது.

கடைசியாக கற்பிட்டிக் கடலில் கரும்புலியாய்ச் செல்வதற்கு முன் அவள் படகு துறைத்தொழில்நுட்பப் பிரிவுக்குப் பொறுப்பாக நின்றாள். ஒவ்வொரு போராளிக்கும் நுட்பமாக விளங்கப்படுத்தி உற்சாகமூட்டி தானே அருகிருந்து ஒவ்வொரு தேவைகளையும் கவனித்துச் சென்றாள். மங்கையக்கா தனக்கு என்ன தெரியாது என்டாலும் எந்தப் போராளியிடமும் கேட்டு அறிஞ்சு கொள்ளுவா.

எதையும் துருவித் துருவி நுட்பமாக கேட்டறிவது அவளிடம் எப்போதுமே இருந்தது. அப்படி என்டா என்ன? இப்படிச் செய்தால் சரிவருமோ? என்று அவளுக்குப் புதிய புதிய நுட்பமான யோசனைகள் தோன்றும். அதனைச் செயலிற் காட்டும் போது மூக்கில் விரலை வைக்கத் தோன்றும்.

அங்கையற்கண்ணியின் தாக்குதலுக்குப் பின்னெல்லாம் அவளுக்குப் பொறுமை எல்லை கடந்துவிட்டது. எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தாள். மனம் சலித்து ஓய்ந்ததில்லை, அந்த இடைப்பட்ட கணங்களிலெல்லாம் இயலுமானவரை போராளிகளுக்கு நீச்சல் பழக்கி, படகு ஓட்டப் பயிற்சி அளித்து அவற்றில் தன்னைத் தீவிரப்படுத்திக் கொண்டாள்.

கற்பிட்டித் தாக்குதலுக்கு நெஞ்சிலே சாவைச் சுமந்தபடி வாய் ஓயாமல் அண்ணையைப் பற்றியே கதைத்தபடி சென்றாள். இலக்குச் சரிவராவிட்டால் காட்டுக்குள்ளேயே இருந்திடுவன். கரையில் நின்ற போராளிகளுக்கு கைகளை அசைத்தபடி சொன்னாளாம்.

இரவு 11.25 மணி உச்சி நிலவு பொங்கித் தணிந்தது. மன்னார் கற்பிட்டிக் கடலில் ஓயாத அலைச்சத்தத்தின் மத்தியில் கடலரசன் விரித்தபடி நின்றது. நளாயினி தலைமையில் மங்கையின் படகு உயரக் கிளம்பிய அலைகளை கிழித்தபடி முன்னே சென்று மோதி வெடித்தது. லக்ஸ்மனும், வாமனும் சென்ற படகு கப்பலின் அடுத்தபுறம் மோதி வெடிக்க கடலரசன் தீப்பற்றியபடி கற்பிட்டிக் கடலடித்தளத்தோடு மெல்ல மெல்ல தாழ்ந்து போனது.

நான் வெடிச்சதன் பிறகு வீட்டில என்ர உடுப்புகளோடை இருக்கிற மஞ்சள் சீலையை அம்மாவுக்கு உடுத்துவிடுங்கோ என்ற கூறிச் சென்ற மங்கை சத்தமிட்ட கற்பிட்டிக் கடலலையோடு கரைந்து போனாள். பிள்ளைகள் திருந்துறத்துக்குத் தானே அப்படிச் செய்தனான். கிச்சினிலை விடப்போறியளோ? அப்ப நல்லாப் பனங்காய்ப் பிட்டு செய்து சாப்பிடலாம் என்று கண்கள் விரிய வாயைச் சப்புக் கொட்டியபடி சொன்ன மங்கை வரவேயில்லை.

கண்கள் வலித்து மீண்டன. அவள் சிரித்தபடி…… சிதறிப்போன உடலைச் சுமந்தபடி அலை குமுறி எழுந்தது.

மூலம்: உயிராயுதம் பாகம் 01

https://thesakkatru.com/black-sea-tiger-mejor-mangai/

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.