Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் சந்திரன்

 

 

Commander-Lieutenant-Colonel-Santhiran.jpg

 

வன்னியின் முழுநிலவு”

வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன்.

சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை.

புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழுங்கிய கடலலைகளைப் போலவே குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சந்திரன், நீ முல்லைத்தீவுக்கு வரும்பொழுது ஒரு சின்னப்போராளி.

நீ கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பாய். கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் உனது கண்களில் அன்பும், கனிவும் இருக்கும் சில நேரங்களில் கோபமும் தெறிக்கும்.

சந்திரன் நீ அடிக்கடி சொல்வாய்: “நான் ஏழைக்குடும்பத்தில்தான் பிறந்தனான். வயலில் கூலிவேலை செய்துதான் நாங்கள் வாழ்ந்தனாங்கள்.” உண்மைதான். அதனால்தான் ஏழைகளை நேசிக்கும் இதயத்தைப் பெற்றுக்கொண்டாய். அதனால்தான் எப்பொழுதுமே ஏழை மக்களுடன் ஒன்றிக் கலந்துவிடுவாய்.

ஒருமுறை, புதரிகுடா என்ற கிராமத்திற்கு நாங்கள் போயிருந்தோம். வயற்கரை ஓரங்களில் சிறு கொட்டகைகளைக் கட்டி அங்கு சில குடும்பங்கள் இருந்தன. கூரைகள் பிய்ந்துபோயிருந்தன. மழையிலும் வெயிலிலும் அவர்கள் நனைந்துகொண்டுதான் இருந்தார்கள். விழிகளில் ஏக்கத்துடன், வெறும் மேனியுடன், நோயினால் வீங்கிய வயிறுகளுடன் இந்த மண்ணின் குழந்தைகள் எங்கள் முன்பு நின்றார்கள்.

நீ தவித்தாய்… அவர்கள், பல நாட்களாகக் குளிக்கவில்லை என்றார்கள். தண்ணீர் அள்ளவேண்டாம் என்று பக்கத்து வளவுக்காரன் தடுத்துவிட்டானாம். குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை என்றார்கள். அதைக்கேட்டு நீ பட்ட தவிப்பும், உன்னிடம் தோன்றிய கோபமும் எங்களுக்கு நன்றாகவே தெரிந்தன. அந்த ஏழை மக்கள் இந்த மண்ணில் மனிதர்களாக வாழவேண்டும். அவர்களுக்கென்று இந்த மண்ணில் சொந்த நிலம், தொழில், மகிழ்ச்சிக்குரிய வாழ்வு எல்லாமே தோற்றுவிக்கப்பட வேண்டும் என, நீ தீர்மானித்துக் கொண்டாய். உண்மையில் நீ கேலியாகச் சொல்வது மாதிரி ‘அதுவும் ஒரு போர்முனை’ தான்.

நீண்ட காலமாகக் கவனிக்கப்படாமல் ஊருக்குள் காடாய் இருந்த உடையார் ஒருவரின் பெரும் நிலம், அவர்களுக்குச் சிறிய பகுதிகளாகச் சொந்த நிலமானது. புதிய அழகான மண் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானது. அந்தக் கிராமத்திற்கென்று பாலர் பாடசாலையை ஆரம்பித்தபோது, உன்னுடன் நாங்களும் அங்கே நின்றோம். நீ அவர்களுக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்திருந்தாய். ஆறு வயது தொடக்கம் பத்துப் பன்னிரண்டு வயதுவரை, எல்லாக் குழந்தைகளும் பாலர் வகுப்பில் படிப்பதற்கு வந்திருந்தார்கள். அது ஒரு மகிழ்ச்சிக்குரிய நாள். இனி அந்தக் கிராமம் தனக்கென்றொரு வாழ்வைக் காணும் என்பது அன்று வெளிப்பட்டது.

சில நாட்கள் சென்றன. அந்தக் கிராமத்தவர்களுக்குப் புதரிகுடா என்ற பெயர் பிடிக்கவில்லையாம். அதனைச் சந்திரபுரம் என மாற்றிவ்ட்டார்கள். அதனைக்கேட்ட எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. உனக்குக் கோபமாக இருந்தது. நீ எசினாய். இனி அப்படிச் சொல்லக்கூடாது என்றே. ஆனால் சந்திரன், நீ உயிரோடு இருக்கும் பொழுதும் உன் மரணத்தின் பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை. நீ அதற்குப் பின் எவ்வளவோ பெரிய பெரிய பொறுப்புக்களில் எல்லாம் இருந்திருப்பாய். ஆனால் நீ தடம்பதித்துச் சென்றது இங்குதான். உன் நினைவுகள் ஆழமாக வேரூன்றிப் போனதும் இங்குதான்.

சந்தின், உன் நினைவுகளைச் சொன்னபடி சந்திரபுரம் மட்டும்தான் இருக்கிறதென்றில்லை. நீ உருவாக்கிய இன்னொரு கிராமமான பொன்னகர், நாவற்காடு, உன்னைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட முள்ளியவளை, தண்ணீருற்று, முல்லைத்தீவு, பாண்டியன்குளம், பனங்காமம்… ஏன் வன்னி முழுவதுமே உன் நினைவுகளைச் சொன்னபடி நிற்கின்றன.

சந்திரன், உனது உள்ளம் சிலவேளைகளில் தாயன்பைத் தேடி அழுவதுண்டு. நீ உந்து அம்மாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தாய் என்பது, எங்களுக்குத் தெரியும். உன்னுடைய சோகம் நிறைந்த இளமைக் காலத்தை நீ, வேலைகளினூடே சொல்வதுண்டு.

அந்தக் காலங்களில் எங்கள் முன் கடுமையான வேலைகள் நின்றன. நீ முறிந்து, கஷ்டப்பட்டு வேலை செய்வாய். நாங்கள் வியந்து நிற்போம்.

“நான் சின்ன வயசிலேயே வயலுக்கை நிண்டனான்” என்பாய் நீ. உன் விழிகளில் ஏதோ ஒரு ஏக்கம் தெரியும்.

“அண்ணன்மாருக்கும் எனக்கும் சேர்த்து அம்மா பழஞ்சோறு உருட்டித்தருவா” என்பாய் நீ. உன் விழிகளை நாங்கள் பார்ப்போம். நீ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பாய்.

சந்திரன், நீ கிளிநொச்சியில்தான் பிறந்தாய். ஆனால் உனது அம்மாவும், அப்பாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். உனது அப்பா சாகும்பொழுது உனக்கு இரண்டு வயதாம். உனது இரண்டு அண்ணன்மாரும் சின்னப்பிள்ளைகள். உங்கள் மூன்று போரையும் வைத்துக்கொண்டு உனது அம்மா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாள். இப்போதெல்லாம் உன்னுடைய அம்மா உனது படத்தை வைத்துக்கொண்டு விம்மிக் கொண்டிருக்கிறாளாம்.

சந்திரன், நீ முள்ளியவளையில் அரசியல் வேலை செய்யும்பொழுது, சில நேரங்களில்…… இரவில் உன்னைத் தேடி நாங்கள் வருவதுண்டு. இரவில் சோகமான பாடல் கேட்கும். வீட்டில் உன்னை நாங்கள் காணுவோம். நீ விழித்திருப்பாய். “இந்த விடயம் ஆமிக்காரனுக்குத் தெரிந்தால் பாட்டுக்கேட்கிற வீட்டில் வந்து உன்னைப் பிடிக்கப்போறாங்கள்” என்று, நாம் எசுவோம். நீ வீடு வீடாக வேலிகளுக்கு மேலாகப் பழைய சோறு தேடித் திரிவாய். அதற்காக நீ வெட்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அங்கிருக்கிற எல்லா வீட்டிற்கும் நீ பிள்ளை மாதிரித்தான். உனக்குச் சாப்பாடு தரவேண்டும் என்பதற்காகவே, அவர்கள் இரவில் சோற்றை மிச்சம் வைப்பதுண்டு. சந்திரன், இன்றைக்கு அந்தச் சனத்தினுடைய இதயத்தில் நீ இருக்கிறாயடா!

சந்திரன், நீ அரசியல் பேசுவதை நாங்கள் கேட்பதில்லை. சில நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஏதாவதொரு வீட்டின் முற்றத்தில், ஒரு கல்லின்மேல் நீயிருப்பாய். தங்கள் வீட்டுக் கதைகளைச் சொல்லிக்கொண்டே அந்த வீட்டுகாரரும் முன்னாலிருப்பார்கள். அப்போதுதான் நீயும் இந்த மண்ணின் நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருப்பாய். அவர்கள் எவருக்குமே தெரியாது, அவர்களுக்கு நீ அரசியல் படிப்பிக்கிறாய் என்று. கதைத்து முடிந்த பின்பு, “இந்த மண்ணின் விடுதலைக்காக எல்லோரும் போராடத்தான் வேண்டும்” என்பார்கள்.

முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசத்திற்கு நீ அரசியல் வேலை செய்வதற்கு வந்து, இரண்டு வருடங்கள் சென்றன. இந்தக் கால இடைவெளியில் உன்னிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. எதற்கெடுத்தாலும் கோபப்படும் உனது இயல்பும் மாறி இருந்தது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. உனதும் உனது தோழர்களதும் கடுமையான உழைப்பு, தேசவிரோத சத்திகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தன. தங்கள் மண்ணின் விடுதலையைப் பற்றி மக்களைச் சிந்திக்க வைத்தது. அந்த விடுதலைக்காக மக்களைப் போராடத் தூண்டியது.

சந்திரன், உனக்குத் தெரியும்; அந்த நேரங்களில்த்தான், இந்தியப்படை எம் தேசத்தின் மீது ஒரு யுத்தத்தை நடாத்தியது. நாங்கள் தெருக்களில் நடக்க முடியாமலும், கிராமங்களில் நிற்க முடியாமலும், இருந்த நேரமது.

இரவு நேரங்களில் காடுகளிற்குள்ளும், காட்டுக் கரையோரங்களிலும்தான் நாங்கள் படுப்போம். ஆபத்தை எதிர்பார்த்தபடியே இரவின் அச்சத்தில், பசித்த வயிற்ருடன் இருக்கும் எங்களை, நீதான் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாய். நாட்கள் செல்ல செல்ல ஆபத்து நிறைந்த அந்த இரவுகளே இனிமையான இரவுகளாக எங்களுக்கு மாறிவிட்டன. சந்திரன், எங்களின் எல்லாத் தோழர்களும் சொல்வார்கள் “கஸ்டமான அந்த நாட்களும் அந்த நினைவுகளும்தான், இன்னும் எங்களின் மனங்களில் பசுமையாய் படிந்து கிடக்கின்றது” என்று.

சந்திரன் நீ அரசியல் வேளைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், தாக்குதற் களங்களுக்குச் செல்வதற்கும் தவறுவதில்லை. உன் கைகள் எதிரிக்கு எதிராகப் பலமுறை துப்பாக்கிகளை இயக்கியிருக்கும்.

இந்தியப் படைகளுடன் நெடுங்கேணியில் நடந்த சண்டை ஒன்றில் நீ, கழுத்திலும் கையிலும் காயமடைந்திருந்தாய். களத்தில் ஆயுதங்களைக் கைப்பற்ற முன்னேறியபோது நீ காயமடைந்ததாக, உன் தோழர்கள் சொன்னார்கள்.

நீ எமது முகாமில் சாய்மனைக் கட்டிலில் சாய்ந்திருத்தாய். உன் கழுத்தில் சிக்கிய துப்பாக்கி ரவை, உன்னை வேதனைப்படுத்தியது. நீ அதைவிட அதிகமாக பாவனை, நடிப்புச் செய்தாய். உன் பாவனைகளை எத்தனை தோழர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு தோழன் உன்னை அழைப்பான். நீ கழுத்தைத் திருப்ப முடியாமல் உடல் முழுவதையும் திருப்பி அவனைப் பார்ப்பாய். எங்கள் முகாம் முழுவதும் உன்னைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும். இந்தியப் படைகள் எங்களைச் சுற்றி ஒரு வலயத்தை அமைத்து எங்களை நெருங்கிய பொழுதும், நாங்கள் காடுகளிற்குள் மகிழ்ச்சியாக இருந்தோம். போராட்டத்தில் நம்பிக்கையோடு இருந்தோம் என்பது, இந்தியர்களுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது.

உனது காயம் சுகமாகியது. அந்த நேரத்தில் முல்லைத்தீவு பிரதேசத்து மக்கள் இந்தியப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு, காடுகளிலும் வயல்களிலும் தஞ்சமடைந்து வாழ்ந்தனர். நீயும் அவர்களுடன் கலந்து நின்றாய். நீயும் உனது தோழர்களும் அந்த மக்களுக்குப் போராட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்கள். போராட்டத்தின் தேவையைப்பற்றி, இந்த மண்ணின் விடுதலையைப்பற்றி, இந்திய ஆக்கிரமிப்பின் நோக்கத்தைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினீர்கள். அந்த நிலையை விளங்கிக்கொண்டு, மக்கள் எங்களை அரவணைத்ததால்தான், ஆக்கிரமிப்பாளனுக்கு இந்த மண் அடிபணியாது தலை நிமிர்ந்துகொண்டது.

அந்த நாட்களில்தான், நீ கிளிநொச்சிக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிகப்பட்டாய். முல்லைத்தீவு மாவட்டத்து மக்களின் கண்கள் உன் பிரிவைத் தாங்காது தவித்தன. ஆனால் உன்முன் இருந்ததோ பெரும் கடமை. நீ கிளிநொச்சிக்குச் சென்ற பின்பு, அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி விஸ்தரித்திருந்தாய். உனது திறமையான செயற்பாடுகள் அந்த மாவட்டத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்த நேரங்களில் இரண்டு மூன்று தடவைகள், இந்தியப் படைகளின் சுற்றிவளைப்புக்களிலிருந்தும் நீ தப்பிக்கொண்டாய்.

வன்னி மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த மாறன் அண்ணாவின் இழப்பின் பின்பு, நீ வன்னி மாவட்ட அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாய். அந்த நேரத்தில்தான் இந்தியப் படை இந்த மண்ணை விட்டு வெளியேறியது. நீ வன்னி முழுவதும் அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி, வேலைத் திட்டங்களை வகுத்துக்கொண்டே. புதிதாய்ப் பிறப்பெடுத்த எமது கட்சி அமைப்பும் அந்த நேரங்களில் பலப்பட்டுக்கொண்டது. அந்த நேரங்களில் நாங்கள் நடாத்திய பேரணிகளில், கூட்டங்களில், உனது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பார்கள். உன்னால் எப்படி இவ்வளவு இலகுவாக, தெளிவாக எல்லா மக்களையும் கவரக்கூடியமாதிரிப் பேசமுடிகிறது என்பது, எங்களுக்கு வியப்பாகவே இருக்கும்.

சிறிலங்கா இராணுவத்தினருடனான சண்டை மீண்டும் தொடங்கியபோது, நீ எங்கேயோவொரு தாக்குதற் களத்தில்த்தான் நிற்பாய் என்பது, எலோருக்குமே தெரியும். அப்படித்தான் நீயும் நின்றாய்.

கொக்காவில் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் நீ கலந்துகொண்டாய். அந்த முகாமை நாங்கள் வெற்றிகொண்டோம். ஆனால், அங்குதான் உனது அடிவயிற்றில் துப்பாக்கிக் குண்டு தாக்கியது.

சந்திரன், நீ எங்கள் வைத்தியசாலை ஒன்றில் கிடந்தாய். உன் விழிகள் நீ தப்பிக் கொள்வாய் என்ற நம்பிக்கையைத் தரவில்லை. உன் உறுதியான கறுத்தத் தேகம் வாடிப்போய்க் கிடந்தது; கலங்கிய விழிகளுடன் நாங்கள் காத்திருந்தோம்.

சில வாரங்கள் சென்றன. நீ கண் விழித்தாய். ஆனால், உன் கால்கள் இனி இயங்காது என்றார்கள். கால்கள் இல்லாத சந்திரனை எங்களால் கற்பனை கூடச் செய்யமுடியாது சந்திரன்! ஆடாமல், பாடாமல், ஓடாமல் நீ இருக்கவே மாட்டாய். நாங்கள் தவித்தோம். கலங்கி நின்றோம். ஆனால் நீ கலகலப்பாக இருந்தாய். உனது நிலை உனக்குத் தெரிந்த பின்பும் உற்சாகமாக இருந்தாய்.

சந்திரன், நீ வைத்தியசாலைக் கட்டிலிருந்துகொண்டெ “நான் இங்கையும் அரசியல் வேலை செய்யிறன். இங்கு வருகிற தாதிகளுக்கும், வைத்தியர்களுக்கும், ஏன் என்னை இந்தக் கதவுகளால் எட்டிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் ஒரு போராட்டம் ஏன் நடக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றாய். உண்மைதான்; நீயிருந்த – சோகம்பாடும் அந்த, வைத்தியசாலைகூட கலகலப்பாக மாறிப்போனது.

சந்திரன் நடக்கத் தேவையில்லை, அவன் இருந்தாலே போதும் போராடுவான், போராட்டத்திற்குப் பங்களிப்பான் என எங்கள் மனங்கள் எண்ணிக்கொண்டன.

அதன் பின்பு; நீயும் உனது தோழர்களும் வைத்திய வசதியைத் தேடிக் கடலில் பயணம் போனதாகக் கேள்விப்பட்டோம். உண்மையில் உங்களுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. கடலிற்குள் தோன்றிய சிங்கள மிருகங்கள் உங்களைக் கவிட்டிருக்கும். உனக்கு நீந்தத்தெரியும். நீ கைகளால் நீந்த முயன்றிருப்பாய். இயலாத உனது கால் உன்னைக் கீழே கீழே இழுத்திருக்கும். கடல் உன்னை மூட ஒரு கணம் தயங்கியிருக்கும். மூடிய பின்பும் ஏற்றுக்கொள்ள முடியாமல் குமுறி இருக்கும். வன்னி மக்களின் மனங்கள் கொந்தளித்ததைப் போலவே, கடலும் உன்னை அணைத்த பின்பு வேதனை தாளாது கொந்தளித்திருக்கும்.

நினைவுகளுடன் தோழர்கள்.
நன்றிகள்: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி 1991), களத்தில் இதழ் (09.10.1996).

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-santhiran/

 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.