Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்

%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg

இது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர்  26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன்.

சமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 

"இலங்கையின் வரலாற்றில் உண்ணாவிரதம் இருந்து செத்த ஒரே ஆள் திலீபன் மட்டுமே. அதுவும் திலீபன் செத்தது தனக்கு இருந்த நோயால் தான். அதனால் தான் பிரபாகரன் திலீபனை உண்ணாவிரதம் இருக்கப் பணித்தார்." 

என்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1987 ஆம் ஆண்டு இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் என்கிற தகவலைக் கூட அறிந்திருக்கவில்லை என்பதோடு திலீபன் நோயால் மரணித்தார் என்கிற அண்டப் புளுகையும் சொல்ல முடிகிறதென்றால் அதிகாரத்துவ இனவெறி எகத்தாள வெளிப்பாடாக மட்டுமே நம்மால் கணிக்க முடியும். மேற்படி அவரின் கருத்தை பல சிங்கள ஊடகங்களும் பெரிதுபடுத்தி வெளியிட்டிருந்தன. அக்கருத்தை உள்வாங்கிக்கொண்ட சிங்கள வெகுஜன உளவியல் அதை அப்படியே பிரதிசெய்து பல இடங்களிலும் வினையாற்றி வருவதை காண முடிந்தது.

மாவீரர் தினத்தை மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், நினைவு கொள்ள விடாதது போல திலீபன் நினைவையும் மேற்கொள்ள முடியாதபடி கடும் கட்டுப்பாடுகளை திணித்துவருகிறது.

இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக எங்காவது கல்லறைகளை உருவாக்குவதன் மூலம், நம்முடைய அன்புக்குரியவர் மீதுள்ள அன்பையும், அவரின் நினைவையும் நிரந்தரமாக நிலைநிறுத்த முயற்சிக்கிறோம். எல்லாளன் துட்டகைமுனு சண்டையின்போது துட்டகைமுனு எல்லாளனைக் கொன்ற போதும். போரில் தோற்கடிக்கப்பட்ட தனது எதிரி எல்லாளனுக்காக துட்டகைமுனு ஒரு கல்லறைக் கோபுரத்தை அமைத்து துட்டகைமுனுவுக்கு மரியாதை செய்ய மறக்கவில்லை என்பதை மகாவம்சம் வழியாக அறிகிறோம். அந்தக் கல்லறை வழியாக கடந்து செல்லும் எவரும் அங்கு வந்து தமது தலைக்கவசங்களை கழற்றி கௌரவம் செய்யவும் உத்தரவிட்டாராம் துட்டகைமுனு.

இறந்துபோனபின் ஒருவரின் கல்லறை மதம், இனம், இனம், சாதி என்பவற்றினதும் சின்னமாக ஆகிவிடுவதில்லை. மறுபுறம் இறந்து மண்ணுக்குள் புதைந்துபோன ஓருடல் எந்த சமூக அடையாளங்களுக்கும் சொந்தமாகிவிடுவதில்லை. ஒருவரையோ, ஒரு நிகழ்வையோ நினைவுகொள்வது என்பது அரசியல் பண்பாடல்ல மாறாக வழிவழிவந்த பண்பாட்டு மரபின் தொடர்ச்சி, அதற்கென்று பண்பாட்டுப் பெறுமதி, அரசியல் பெறுமதி, அறப்பெறுமதி, மரபுப் பெறுமதி என ஒரு திரட்சியான பெறுமதியைக் கொண்டிருக்கிறது. நினைவுகொள்ளல் என்பது நமது மரபின் ஒரு அங்கமாகவே ஒட்டியிருக்கிறது. அதை வெறுப்பதும், மறுப்பதும், தடுப்பதும் பண்பாட்டு அறமுள்ள ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் இனக்குரோதத்துடன் அந்த நினைவழிப்பு வன்முறை ஒரு தொடர் நிகழ்வாகவும், பேரினவாத அரசியலின் அங்கமாகவும் ஆகியிருக்கிறது.

இலங்கையில் நிகழ்ந்த போரில் உயிரிழந்த சிங்கள இராணுவத்தினருக்கு சிங்களப் பிரதேசங்களில் மாத்திரமன்றி தமிழர் பிரதேசங்களெங்கும் ஏராளமான நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு நினைவுச் சின்னங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவை சிங்கள பௌத்த வீரத்தனத்தின் பெருமையாக கொண்டாடப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பல இராணுவ நினைவுத் தூபிகளில் ஒரு கையில் சிங்கக் கொடியையும், மறு கையில் துப்பாக்கியையும் உயர்த்தி ஏந்தியபடி இருக்கும் சிலைகள் நிறுவப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

thileepan-edit.jpg


யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளின் நினைவாக அங்கு உருவாக்கப்படிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்களின் சொந்தங்கள் வந்து அழுதாறி, தீபத்தை ஏற்றி, ஒரு பூவை வைத்துவிட்டுச் செல்ல உரிமை இருந்தது.

ஆனால் “சமாதானத்துக்கான யுத்தம்” என்றும், “தமிழர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் யுத்தம்” என்றும் போர் புரிந்த சிங்கள அரசு; போர் நிறைவடைந்ததன் பின்னர் அம்மக்களுக்கு ஏற்கெனவே இருந்த அந்த உரிமையை மறுத்துவிட்டது. அம்மக்கள் அதுவரை அழுதாறி வந்த அந்தக் கல்லறைகள் எதையும் மிச்சம் வைக்காது புல்டோசர் வைத்து தகர்த்து சின்னாபின்னமாக அழித்து விட்டது. அப்படி அடையாளம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்ட இடங்களில் அந்தக் கல்லறைகளுக்கு சொந்தமானவர்களின் தாய்மார்களும், பிள்ளைகளும், சகோதரர்களும், துணைவியரும், உறவினர்களும் வந்து ஒரு பொது இடத்தை தெரிவு செய்து ஒரு தீபத்தை ஏற்றக் கூட விடாமல் யுத்தம் முடிந்து இந்த பதினோரு வருடங்களாக தொடர்ந்தும் தடுத்து வருகிறது சிங்கள அரசு.

இடிக்கபடுவதற்கு முன்னர் இருந்த திலீபனின் நினைவுத் தூபி
இடிக்கபடுவதற்கு முன்னர் இருந்த திலீபனின் நினைவுத் தூபி

சிசிரவின் பதிவுக்கு...

அரச அதிகாரத்தின் மறுப்பு இப்படி இருக்கையில் மறுபுறம் திலீபனைக் கொண்டாடும் சிங்களத் தோழர்கள் பலரும் இருக்கவே செய்கிறார்கள். ஊடகவியலாளரும் இடதுசாரி முகாமைச் சேர்ந்தவருமான சிசிர யாப்பா திலீபன் மாபெரும் கூட்டமொன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும் படத்துடன் ஒரு குறிப்பையும் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

“திலீபன்!

ஒருபோதும் சந்தித்துக்கொள்ளாத சகோதரனே!

உன் பெயருக்குக் கூட பீதியுருவோரும் இருந்த போதும் நான் உன்னை நினைவில் வைத்து மரியாதை செய்கிறேன்!”

என்று எழுதியிருந்தார். இந்தப் பதிவை அவரின் பக்கத்திலிருந்து மாத்திரம் 170 சிங்கள நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இப்படி வேறு சில சிங்கள தோழர்களும் திலீபனின் நினைவேந்தலை செய்திருந்தனர். சிசிர யாப்பாவின் பதிவின் கீழ் அப்பதிவை வரவேற்று பல பதிவுகள் இருந்தன. அதுபோல அவரை சபித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் பல வாதங்கள் அங்கே காணப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திலீபனை வலுக்கட்டாயமாக சாக அனுப்பியதாக அங்கே விவாதங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு சிசிர யாப்பா தான் அறிந்த திலீபன் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்.

மறுபுறம் இன்னொரு சிங்கள நண்பர் சிசிரவிடம் கேட்கிறார்.

“சிசிர அண்ணா! திலீபன் பற்றி விரிவான கட்டுரையை எழுதுங்கள். முடிந்தால் ஒரு ஆவணப்படத்தை சிங்களத்தில் செய்யுங்கள் நான் உங்களுடன் ஒரு கெமராமேனாக பயணிக்கிறேன்....”

என்கிறார்.

திலீபனை சிங்கள சமூகத்திடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஜயதிலக்க பண்டாரவுக்கு முக்கிய பாத்திரமுண்டு.

மருத்துவ மாணவரும், புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளருமான திலீபனுக்காக நல்லூர் கோவில் அருகில் கட்டப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இப்போது அங்கில்லை. திலீபன் போர் புரிந்து கொல்லப்பட்டவரும் அல்ல. தன் மக்களுக்காக விடாப்படியான உண்ணாவிரதம் இருந்து மரணித்த ஓர் உண்ணாவிரதி.

thileepan_monument_destroyed.jpg
உடைத்து அழிக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத் தூபி

ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் இந்தோ-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் இந்திய துருப்புக்கள் பங்கு வகிப்பதை எதிர்த்து ஐந்து கோரிக்கைகளை எதிர்த்து திலீபன் 1987 செப்டம்பர் 15 அன்று ஒரு கொடிய உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தின் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தை திலீபன் தேர்வு செய்தார். உண்ணாவிரதமிருந்த அந்தப் பகுதியை நோக்கி மக்கள் தொகைதொகையாக வந்து ஒன்று கூடினர். பலர் இரவுபகலாக அங்கேயே அமர்ந்திருந்தனர். திலீபனுக்காக பாடல்களையும் பாடினர். 

மகாத்மா காந்தி மற்றும் திலீபனின் உருவத்தை தாங்கிய பதாகைகள் அந்த இடத்தை அலங்கரித்தன. திலீபன் தன் இலட்சியத்துக்காக மரணத்தை அண்மித்துக்கொண்டிருந்தார். அவருக்காக பக்திப் பாடல்களைப் பாடிய தமிழ் மக்கள் திலீபனின் தலைவிதியை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை. கையறுநிலை. உண்ணாவிரதம் தொடங்கி பதினொரு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26, 1987 அன்று, திலீபன் மூச்சுத்திணறினார். திலீபனின் கடைசி பெருமூச்சுடன் அந்த இடமெங்கும் கூடி இருந்த தமிழ் மக்களின் கண்களில் இருந்து ஏக்கம் மிகுந்த வேதனையும் கண்ணீரும் பெருமூச்சும் பீறிட்டது. திலீபன் ஒரு நிராயுதபாணியாகவும் அமைதியாகவும் இலட்சிய மரணத்தைத் தழுவினார். திலீபனின் மரணம் அரசியல் வர்ணனையாளர்களால் "ஆயுதங்கள் மீதான நம்பிக்கை; வன்முறையற்ற போர் வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்பு" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் திலீபனின் மரணம் வடக்குக்கு மட்டுமன்றி தெற்கும் முக்கிய செய்தியாக அமைந்தது.

நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்?

வடக்கைப் போலவே தெற்கில் உள்ள மக்களுக்கும் திலீபனின் இறப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி பல்வேறு பல்வேறு கலை, இலக்கிய படைப்புகளால் பேசுபொருளானது பெப்பிலியானா சுனேத்ராதேவி பிரிவேனாவின் தலைவராக இருந்த கோன்கஸ்தெனிய ஆனந்த தேரோ என்கிற ஒரு பௌத்த பிக்கு இந்தச் சம்பவத்தால் மனம் நொந்து போனவர்களில் ஒருவர். அவர் ஒரு படைப்பாளியும் கூட. அவர் தனது கவிதைப் படைப்பால் பட்டினிப் போராட்டம் இருந்து மரணித்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“வானத்தைப் பார்த்து எரியும் சூரியனைத் தாங்கிக் கொள்

தரையில் சிந்தியுள்ள இரத்தக் கடலைப் பார்

உயிரால் விலை கொடுத்த சகோதர திலீபனே

நீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள் திலீபன்

120315247_334111144522964_5798191124417898068_n.jpg

இப்படியான கவிதைகளை யுக்திய பத்திரிகை அப்போது வெளியிட்டது. யுக்திய பத்திரிகை தென்னிலங்கையின் முக்கிய மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தினால் அது அப்போது வெளியிடப்பட்டு வந்தது. இதே இயக்கத்தின் வெளியீடாக அப்போது பிரபலமான தமிழ் மாற்றுப் பத்திரிகையான சரிநிகரும் வெளிவந்தது. இந்தக் கவிதையை ஒரு பாடலாக நாடெங்கும் சிங்கள மேடைகளில் கொண்டு சென்றார் பிரபல சிங்களப் பாடர் ஜயதிலக்க பண்டார. 1971 ஜேவிபி கிளர்ச்சியில் பங்குகொண்டு நான்கு வருடங்கள் சிறைத்தண்டையும், சித்திரவதையும் அனுபவித்து விடுதலையானவர். அதன் பின்னர் மீண்டும் ஜே.வி.பியின் “விடுதலை கீதம்” (விமுக்தி கீ) அணியில் இணைந்து பல தொழிலாளர் வர்க்க எழுச்சிப் பாடல்கல் பலவற்றை பாடியிருக்கிறார் ஜயதிலக்க பண்டார. அடிமட்ட மக்களின் போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு கலைஞராக அவர் தனது பாடல்களால் பங்களித்தார். அது மட்டுமன்றி அநியாயத்துக்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் அவரைக் காணலாம்.

90களின் நடுப்பகுதியில் சந்திரிகாவின் ஆட்சிகாலப்பகுதியில் “வெண்தாமரை இயக்கம்” நாடளாவிய ரீதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் சமாதான உறவை வளர்க்கும் என்கிற நம்பிக்கை தோழர் ஜயதிலக்க பண்டாரவுக்கு இருந்தது. அதனால் அவர் வெண்தாமரை இயக்க பிரச்சார மேடைகளில் பிரதான பாடகராக ஜொலித்தார். தமிழ் மக்களின் துயரங்களைச் சொல்லும் பல பாடல்களை அவர் பாடினார். “பயத்திலிருந்து விடுபடுவோம்” (‘බියෙන් අත්මිදෙමු’) என்று அன்று ஜே.வி.பியின் மேடைகளில் பாடிய பாடல்களை மீண்டும் இந்த மேடைகளில் பாடினார். அந்தப் பாடல்ககள் வரிசையில் முக்கிய பாடலாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையைச் சேர்ந்த திலீபனின் உண்ணாவிரத இறப்பை நினைந்து பாடப்பட்ட இந்தப் பாடல்.

அவர் 2017 ஆம் ஆண்டு வெளியான “சமபிம” என்கிற சிங்கள சஞ்சிகையில் “நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

“மக்களை கொல்வது பரிநிர்வாணத்திற்கு வழிவகுக்கும் ஒரு நல்லொழுக்கம்” என்பது போன்ற கருத்தை பரப்புகிற போர் இலக்கியங்கள் சிங்கள சமூகத்தில் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில் இந்த பௌத்த துறவி மரண அச்சுறுத்தலையும் மீறி தனது பேனையைப் பயன்படுத்தினார். தமக்கு தொடர்பேயில்லாத போரில்; தொடர்புடையவர்கள் மரணித்து வருவதைக் கண்டு மனம்நொந்தவர்களில்  ஆனந்த தேரரும் ஒருவர். அவர் தனது கவிதையின் இறுதியில் மரணித்துவிட்ட திலீபனை நோக்கி “உன் சிலையை நடந்துவந்து மண்டியிட்டு முத்தமிடுகிறேன்...”

என்று உருகுகிறார்.

“ஆனால் இனி முத்தமிடுவதற்கு மட்டுமல்ல நினைவு கொள்வதற்கோ கூட அந்த சிலை அங்கில்லை. அது இடித்து வீசியெரியப்பட்டுவிட்டது...”  என்கிறார்.

மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார். 

“சமாதான காலப்பகுதியில் இந்த பாடலை திலீபன் நினைவுத் தூபியின் முன் ஒரு மேடையில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தத் தூபி பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்தது. யுத்தத்தின் பின் நான் அங்கு சென்றிருந்தேன். நல்லூர் கோவிலருகில் அமைதியாக நின்றிருந்த அந்த சிலையைக் காணவில்லை. அதை இனிமேலும் நிரந்தரமாக காண முடியாது என்பதை விளங்கிக்கொண்டேன்.

மரணித்த தமிழ் போராளிகளுக்காக கட்டப்பட்டிருந்த மற்ற கல்லறைகளின் எச்சங்களைத் தவிர வேறெதையும் அங்கு காண முடியவில்லை. இறந்த மற்ற தமிழ் வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களின் எச்சங்களைத் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புபவர்களாக இருந்தால் தமிழ் போராளிகளுக்காக கட்டப்பட்டிருந்த நினைவுச்சின்னங்களையும் கல்லறைகளையும் அழித்ததன் மூலம் ஒரு நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாது என்கிற உண்மையை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம். வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் அல்லது கல்லறைகளை இடிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்ற உண்மையை எப்போது உணருவோம்...?”

என்று ஏக்க அழுகுரலில் ஜயதிலக்க பண்டார கூறுகிறார்.

 

 

ஜெயதிலக்க பண்டார பாடிய அந்தப் பாடல் மீண்டும் இப்படித் தொடர்கிறது...

“வானத்தைப் பார்த்து எரியும் சூரியனைத் தாங்கிக் கொள்

தரையில் சிந்தியுள்ள இரத்தக் கடலைப் பார்

உயிரால் விலை கொடுத்த சகோதர திலீபன்

நீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள் திலீபன்

 

உனதும் எனதும் எதிரி யார் என்பதை கண்டுபிடிக்கலையே

ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஏற்றுக்கொள்ளலையே

நாம் ஒர் வழியில் செல்ல உடன்படவுமில்லையே

வாழ்ந்தபடி போராட விரும்பவுமில்லையே

 

நாங்கள் சிங்களவர், நாங்கள் தமிழர்கள் என்கிற

மூடத்தனத்தை கைவிட்டு - அடுத்த தலைமுறை

நாட்டை ஒன்றிணைத்து மனிதத்தை நேசிக்கும் நாள் வரும்போது

உன்னை நினைத்தபடி - அந்த கோவிலருகிலிருந்து

நடந்துவந்து மண்டியிட்டு முத்தமிடுகிறேன் உன் சிலையை...

இந்தப் பாடலின் உள்ளடக்கத்தையும், அதன் மெட்டும், உருக்கமான இசையையும் கேட்டு அழுத சிங்களவர்களை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக வெண்தாமரை இயக்கம் முன்னெடுத்த “சாது ஜன ராவ” என்கிற இசை நிகழ்சிகளை பார்வையிட குழுமியிருந்த சிங்களவர்கள் பலர் அழுதிருக்கிறார்கள். “சாது ஜன ராவ” இசை நிகழ்ச்சி இலங்கையின் மூலை முடுக்கெங்கும் 1200 க்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வீதி வீதியாக சென்று “வீதியே விரோதய” (வீதியில் எதிர்ப்பு) என்கிற வீதி நாடகத்தை நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்தினார்கள். அந்த வீதி நாடகத்தின் பிரதான பாடல் குரல் ஜயதிலக்க பண்டாரவினது. நாட்டின் அராஜகத்தை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட நாடகம் அது. 2014 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வீதி வீதியாக நடந்து பல நாட்கள் சென்றது அந்த நாடகக் குழு. டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நகரத்தில் வைத்து ராஜபக்ச அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மேயருமான  எராஜ் தன் சண்டியர்களுடன் சேர்ந்து அந்தக் குழுவை கடுமையாக விரட்டி விரட்டி தாக்கியது. ஜயதிலக்க பண்டார கடுமையாக தாக்கப்பட்டார்.

jayathilaka-bandara.jpg

ராஜபக்ச அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவரின் நண்பர்கள் அவரை நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர் ஐரோப்பாவுக்கு வந்திருந்தபோது அவர் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தான் தங்கிருந்தார். தோழர் ஜயதிலக்க பண்டாரவுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் சோர்ந்து காணப்பட்டார். எப்போதும் இயங்கியே பழகிய மனிதர் இங்கு வந்து அரசியல் ஓர்மம் பிடுங்கப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தவராக இருந்தார். நான் இங்கு இருக்க மாட்டேன் சென்று விடுவேன் என்றார். அதுபோலவே அச்சுறுத்தல் மத்தியில் மீண்டும் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வருகிறார். 

திலீபனைப் பற்றிய பாடல் மட்டுமன்றி அவர் தமிழர்களுக்காக பாடிய ஏனைய பாடல்களையும் நீங்கள் கேட்க வேண்டும்.

யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் போர் கொண்டாட்ட, போர் களிப்பு பாடல்கள் தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் வெகுஜன ரசனையை உயர்த்தும் அளவுக்கு போர் போதை ஊட்டப்பட்டாகிவிட்டது.

திலீபனை நினைவுகொள்ள முடியாதபடி ஸ்ரீலங்கா இனவெறித் தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், உறுமல்களும், மிரட்டல்களும் "தமிழருணர்வைத்" தான் ஊட்டிப் பெருக்கியிருக்கிறது என்பதை சிங்களத் தேசம் அறியாது. செப்டம்பர் 15-26 வரையான நாட்களையும் சினமேற்றும் நாட்களாக சிங்களத் தேசம் ஆக்கியதாக புரிந்துகொள்கிறோம்.

சீப்பை ஒளித்துவிட்டால் கலியாணம் தான் நின்றுவிடுமா? நினைவுகொள்ளலை மறுத்துவிட்டால் மறதிதான் வந்திடுமோ? கல்லறைகளை சிதைத்துவிட்டால் வேட்கைதான் ஓய்ந்திடுமா?

நன்றி - தாய்வீடு - ஒக்டோபர் 2020

thaiveedu-october-2020-87.jpg
thaiveedu-october-2020-88.jpg
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.