Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிகரெட் பிடிப்பதை விடுங்கள்🚭 பாலகுமாரனின் அனுபவ பாடம்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 நபர் மற்றும் பூ இன் படமாக இருக்கக்கூடும்

சிகரெட் பிடிப்பதை விடுங்கள்,,,
பாலகுமாரனின்
அனுபவ பாடம்...!
இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.
சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.
நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?
நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?
கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.
இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
உதவியும் செய்தது. என்ன உதவி?
சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன்.
அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.
காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.
வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.
இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.
பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.
எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள் என்றும் சொன்னார்கள்.
அது நேர்ந்தது.
திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.
மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.
முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.
அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.
நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.
நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக,நன்கு சுவாசிக்கிறவனாக, மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.
ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.
பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.
இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.
சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.
ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை.
என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.
இதை எப்படி சரி செய்வது?
வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.
மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.
வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.
ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும்.
அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.
ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.
மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.
மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது.
சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும்.
நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.
அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.
வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப் போவது.
எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.
நான் விட்ட பிறகும்.. அது விடவில்லையே…
பாலகுமரன்...
முகநூலிருந்து....
  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது அத்தனையும் உண்மை அதுவும் அவரது அனுபவம் சொல்லவா வேண்டும்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பள்ளிபருவத்தில் எமக்கு முன்னரே கல்லூரியில் இருந்து வெளியேறிய மூத்த மாணவர்கள்  ஒதுக்கு புறங்களிலும்  தேனீர் கடைகளிலும் எம்முடன் கல்லூரி நடப்புக்கள் பற்றி வினவியவாறே  கை மணிக்கூட்டில் ஒரு பிறிஸ்டலை அடிச்சு அடிச்சுகிட்டே பேசும்போது கவனம் அங்கேயே செல்லும், பின்பு அவர்கள் ஸ்டைலாக புகை  இழுத்து வட்டம் வட்டமாக விடும்போது வாயூறுவதுபோலிருக்கும்.

ஊரில் பத்தினால் தர்ம அடிவிழும் என்பதனால் வெளிநாடு வந்த பின்னர் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நண்பர்கள் இழுக்கும்போது நானும் ஒரு ஓசி வெண் சுருட்டை வாங்கி இழுத்து, பின்பு அதுவே படிப்படியாக ஒரு பக்கெட் வாங்கி பத்தும் அளவிற்கு போய் , பின்பு அதுவே காலையில் ஒரு பக்கெட் வாங்கினால் இரவு பத்து மணிக்கு முன்னர் இன்னும் ஒன்று வாங்கி கையிருப்பில் வைக்கும் அளவிற்கு அபிவிருத்தி கண்டது.

விடாது புகை விட்டேன், அதுவும் சாப்பிட்ட பின்னர், கோப்பி ,ரீ குடித்த பின்னர் புகைத்து பழகினால் யாரும் அடிச்சு சொன்னாலும் சிகரெட்டை இலகுவில் விட முடியாது.

காலபோக்கில் வாய்க்குள் சிறியதாய் அடிக்கடி புண் வந்தது, பல் ஈறுகளிலிருந்து சில சமயம் ரத்த கசிவு ஏற்பட்டது, ஆனாலும் அதுபற்றி யார் கவலைப்பட்டது, ஓயாமல் ஊதி தள்ளல்தான்.

நண்பனின் 10 வயசு குழந்தையுடன் ஒருநாள் காரில் போகும்போது ஓரிடத்தில் பார்க் பண்ணிவிட்டு இறங்கி  காரின் பின்னாடி போய் நின்று மறைவாக புகைவிட்டேன். சிறுமி காருக்குள் இருந்தபடி வெளியே என்னை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.

மீண்டும் காருக்குள் ஏறியதும் 

மாமா நீங்கள் எவ்வளவுகாலம் புகைக்கிறீர்கள் என்று கேட்டாள்,

ஏன்? ஒரு 15 வருசம் என்றேன்

மாமா நீங்கள் லைசன்ஸ் எடுத்து எவ்வளவு காலம் என்றாள்,

அதுவும் அதுக்கு கிட்டத்தான் என்றேன்.

பிறகு ஏதோ போனில் கிண்டிக்கொண்டிருந்தாள் நாங்கள் எங்கடபாட்டில அலட்டிக்கொண்டு வந்தோம் 

திடீரென 

நானும் பத்து வருசத்துக்கு பிறகு லைசன்ஸ் எடுத்து உங்களமாதிரி கார் ஓடுவேன் மாமா  ஆனா அதை பார்க்கமாட்டீங்க, டெத் ஆகியிருப்பிங்க என்றாள்.  சிறிய அதிர்ச்சியுடன் ஏண்டி எண்டு கேட்டேன்.

அவங்களோட ஸ்கூல்ல ஒரு மனிதன் ஒரு சிகரெட் புகைத்தால் அவன் வாழ்நாளில் எத்தனை விநாடி ஆயுள் குறைகிறது என்று டீச்சர் சொல்லிருக்காவாம், ஆகவே 15 வருசமா புகைக்கிற ஒரு ஆள் இன்னும் எவ்வளவுகாலம் உயிரோடு இருக்கும் என்று அவளோட லைசன்ஸ் எடுக்கும் காலத்தோடு என்னமோ கூட்டி பெருக்கி பிரிச்சு கழிச்சு பாத்து 

விடையை மட்டும் சொல்லலேல்ல நான் கூடிய சீக்கிரம் விடைபெறபோகிறேனென்றத சொன்னாள்,

டாக்டர் சொல்லியே அதிராத இந்த மனசு, குழந்தை சொன்னதும் பயந்து போச்சு.

அண்டைக்கு விட்டதுதான் இன்றுவரை இல்லை, யாரும் அருகில் இருந்து புகைத்தாலே எழுந்து போய்விடுவேன் , அந்த புகை மணமே பின்னாளில் ஒவ்வாமைபோல் ஆனது.

மீண்டும் பழைய நினைவுகளுக்குபோய் ஸ்டைலாக மணிக்கூட்டில் அடித்தபடி என் முன் புகைத்த என் கல்லூரியின் முன்னாள் மாணவர்களை நினைத்து பார்க்கிறேன், விதை அவர்கள் போட்டதுதானே.

90%க்கு மேலான புகைப்பவர்கள், குடிப்பவர்கள் இன்னொருவரை பார்த்தோ அல்லது இன்னொருவருடனான சகவாசத்தாலோ பழகிகொண்டவர்களே.

சிறுவர்கள்,வாலிப வயசில் உள்ளவர்கள் முன் புகை மது பழக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் ஒருவனை, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தை, அவனது சந்ததியை கொலை செய்தவர்களுக்கு ஒப்பானவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியில் தொடங்கியது.97 கார்த்திகை நெஞ்சடைப்பு வந்து வைத்தியசாலையில் படுக்கும் வரை தொடர்ந்தது.
நெஞ்சு நோவு வந்ததற்கு காரணம் சிகரட் தான் என்று டாக்ரர் சொன்னதும் சிறய வயது குழந்தைகள் மனைவி யாருமே துணையில்லாத இடத்தில் இது தேவையா என்று முடிவெடுக்க வேண்டி வந்தது.

இனிமேல் தொடமாட்டேன் என்று சொல்ல நளினச் சிரிப்புடன் டாக்ரர்.இந்த நிலையில் போகும் போது எல்லோரும் சொல்கிற வார்த்தை தான்.ஒருநாள் இருநாள் ஒருகிழமை அல்லது இருகிழமை மீண்டும் புகை பிடிக்கத் தான் போகிறாய்.நீ விரும்பினால் இதை மறப்பதற்கு ஒரு வைத்திய முறை இருக்கிறது முயற்சி பண்ணிப் பார்.

இல்லை டாக்கர் இனிமேல் தொடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.

ஒரு சிரிப்புடன் டாக்ரர் சரி முயற்சி செய்.ஆனாலும் மீண்டும் வருவாய்.

கொஞ்ச நாட்களாக மிகவும் கஸ்டமாக இருந்தது.
இப்போ 24 வருடங்களாகி விட்டது.
நண்பர்கள் உறவினர்கள் பலருக்கு முன் உதாரணமாக இருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு வயதிலிருந்தே நானும் புகைக்க/புகை விட ஆரம்பித்தவன். பீடி முதல் 555 வரை ஊதி தள்ளியவன்.ஒரு காலத்தில் ஏதோ உற்சாக சக்தி போல் இருந்தது. அதற்கேற்ப புகைத்தல் விளம்பரங்களும் ஒத்தாசை புரிந்தது. ரஜனிகாந்த் சிகரெட்டை தூக்கியெறிந்து வாயில் கவ்வும் ஸ்டையில் என்னை மட்டுமல்ல அக்கால கன்னியரையும் கவர்ந்தது.😁


Rajini Cigarette Flipping GIF | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டது நெட்டளவு: காட்டிலும் கெட்டப் பழக்கம்

59308.jpg

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி அதைப் பார்த்து, “சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்? என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்” என்றது.

அதை கேட்ட புலி, சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு யானை புகையிலை போட்டுக்கொண்டிருந்ததை அந்த எலி பார்த்தது. இதைத்தொடர்ந்து யானையிடம் சென்ற எலி, “சகோதரா நீ ஏன் இப்படி புகையிலையை உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்” என்றது. இதை கேட்ட யானை புகையிலையைத் தூக்கி எறிந்துவிட்டு எலியுடன் சென்றது.

 

மூன்று பேரும் நடந்து போகும் பொழுது ஓரிடத்தில் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதைக் கண்ட எலி சிங்கத்திடம் சென்று, “மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் அதைக் காட்டுகிறேன்” என்றது.

இதைக் கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு புலிக்கும் யானைக்கும் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. இருந்தாலும் ஒருவாறு தங்களை சமாளித்துக்கொண்ட அவை சிங்கத்திடம் சென்று, “மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்?” என்று கேட்டன.

அதற்கு சிங்கம், “இந்த பரதேசி, கஞ்சா அடிச்சிட்டு இதைச் சொல்லித்தான் நேத்து என்னை இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். தினமும் இவனுக்கு இதே வேலையாப் போச்சு” என்றது.

நீதி:

சிகரெட், புகையிலை, மது ஆகியவற்றைப் போல கஞ்சாவும் ஒரு கெட்ட பழக்கம்தான். அது உடலைக் கெடுப்பதுடன் சமயத்தில் அடி உதையும் வாங்க வைக்கும்.

 

https://www.hindutamil.in/news/blogs/59308--1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.