Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

Capture.JPG-1-2-696x593.jpg
 320 Views

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசு என்ன முடிவை எடுக்கும் என்பது பற்றி தமிழர் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஐயா அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

கேள்வி – இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏழு தமிழர்களைத் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முடியும். ஆனால் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை எவ்வாறுள்ளது?

பதில் –  இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குவது, அவர்களை விடுதலை செய்வது ஆகிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறுகிறது. இந்த அதிகாரம் தங்குதடையற்ற அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதாசிவம் இருந்த போது அவரது தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகு ஏழு தமிழர் விடுதலை வழக்கிற்காக நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயமும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி மாநில அரசு கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தங்குதடையற்றது என்று கூறிவிட்டது.

ஆனால் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசுக்குள்ள 161ஆம் உறுப்பின் அதிகாரத்தைச் செயற்படுத்த விடாமல் மாநில ஆளுநர் மூலம் இந்திய ஆட்சியாளர்கள் தடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் கொஞ்சநஞ்ச மாநில உரிமைகளும் தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது என்றே இந்திய அரசின் காங்கிரஸ் ஆட்சியும் செயற்பட்டது. இப்போதுள்ள பாசக ஆட்சியும் செயற்படுகின்றது.

இந்திய அரசின் இந்த சட்டவிரோத ஆதிக்கங்களை, அதிகார ஆக்கிரமிப்புகளை எதிர்த்துத் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் நிலைநாட்டப்படும். மாநில அரசியல் இங்கு இல்லை.

மேற்கண்ட நீதிபதி எச்.எல். தத் ஆயத்தின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2018 செப்டெம்பர் மாதம் அஇஅதிமுக அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் அமைச்சரவை அனுப்பி வைத்த ஏழு தமிழர் விடுதலை முடிவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தார். தமது விடுதலை தொடர்பாகத் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் கடந்த சில மாதங்களுக்கு முன், ஆளுநர் அப்படியே கிடப்பில் போட்டு வைப்பது சரியல்ல என்று நீதிபதி நாகேஸ்வரராவ் விமர்சனம் செய்தது. அடுத்த தடவை இவ் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஆளுநர் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

அதன் பிறகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தந்திரமாக, ஏழு தமிழர் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி  விட்டார். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படியான சிறையாளர் விடுதலையில், குடியரசுத் தலைவர்க்கு அதிகாரம் எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஏழு தமிழர்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்து குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியது இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ள 161ஆம் உறுப்பு அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது போல் ஆயிற்று என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மீண்டும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தி ஆளுநருக்கு நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும். மாநில ஆளுநர் என்பவர்  அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்ற வேண்டியது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, சிறைக் கைதிகளுக்கு விடுப்புகள் வழங்க,  தமிழ்நாடு தண்டனைக் குறைப்பு, சட்ட அதிகாரம் வழங்குகிறது. அச் சட்டத்தின் பிரிவு 40 இன்படி காலவரம்பற்ற சிறை விடுப்பை (Leave) ஏழு தமிழர்களுக்கும் மு.க.ஸ்டாலின் அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளேன்.

எங்களின் இக் கோரிக்கைக்கு ஆதரவாக இரண்டு முன் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

மராட்டிய மாநிலத்தில், வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சற்றொப்ப 200 பேரை – பொது மக்களை கொன்ற பயங்கரவாதிகள் – நிழல் உலகத் தாதாக்களைக் கொண்ட குழுவுடன் இந்தி நடிகர் சஞ்சய் தத் கூட்டாகச் செயற்பட்டார். அவர்களின் துப்பாக்கி இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டில் 6 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 3 ½ ஆண்டு மட்டுமே மொத்தமாக அவர் சிறையில் இருந்தார். அவருக்கு இரண்டு கட்டங்களில் பரோல் என்ற விடுமுறையை 90 நாள், 90 நாள் என்று தொடர்ந்து நீடித்து விடுதலை செய்தது மராட்டிய அரசு.

அதற்கும் முன்பு, தமிழ்நாட்டில் ஐயா புலவர் கலியப்பெருமாள் அவர்கள் நக்சல்பாரி இயக்கத்தின் வழியாக கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். பலரின் கோரிக்கையை ஏற்று, அவரின் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக குடியரசுத் தலைவரால் குறைக்கப்பட்டது. அதன் பிறகு, புதுதில்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் கோரிக்கையை ஏற்று, புலவர் கலியப்பெருமாள் அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலவரம்பற்ற விடுப்பு  அளித்து, சிறையிலிருந்து விடுவித்தது. அவ்வாறான விடுப்பில் புலவர் இருந்த போது அப்போதிருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவரை நிரந்தரமாக விடுதலை செய்திருந்தார்.

இந்த எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கூறித்தான் ஏழு தமிழர்களுக்கும் காலவரம்பற்ற சிறை விடுப்புத் தருமாறு நான் முதலமைச்சரைக் கோரியிருந்தேன்.

அற்புதம் அம்மாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று. தம்பி பேரறிவாளனுக்கு மட்டும் ஒரு மாதம் சிறை விடுப்புக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

ஏழு தமிழர்களுக்கும் காலவரம்பற்ற சிறை விடுப்புத் தரவேண்டும். அவர்களில் உள்ள தமிழீழத் தமிழர்களைப் பராமரித்துப் பாதுகாக்க முன்வரும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இலங்கை ஏதிலியர் என்ற வரையறுப்பில் அவர்களைத் தமிழ்நாட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இதைத் திமுக ஆட்சி செயற்படுத்த வேண்டும். இதற்கு முன்பிருந்த எடப்பாடி ஆட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியாக மு.க.ஸ்டாலின் இவ்வாறு செயற்பட வேண்டும் என்று கோருகிறோம்.

கேள்வி – தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் ஏழு தமிழர் விடுதலை தொடர்பான தங்கள் வாக்குறுதிகளை  நிறைவேற்றாததற்கான காரணம் என்ன?

பதில் – முதலில் அவர்களுக்குத்  தமிழினம் சார்ந்த கொள்கை இல்லை. அவர்கள் பேசுவது திராவிட இனம்; கூட்டணி சேர்ந்து இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சிகளுடன் அவற்றின் ஆட்சிகளுடன்!

இந்தியத் தேசியவாதியான மம்தா பனர்ஜிக்கு இருக்கும் வங்காளி இன உணர்வு, மனத்துணிச்சல் போல் தமிழ்நாட்டுத் திராவிடத் தலைவர்களுக்குத் தமிழின உணர்வும் இல்லை. துணிச்சலும் இல்லை. பதவியைப் பாதுகாக்க மண்டியிடத் தயங்காதவர்கள்.

கேள்வி – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, தமிழினத்திற்கு எதிரான ஓர் அரசியல் வன்முறை என்று பார்க்கலாமா?

 பதில் – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, அரசியல் வன்முறை – சட்ட விரோதச் செயல் – தமிழர்களுக்கு  எதிரான இனப்பாகுபாடு.

இந்தியாவின் தந்தை  என்று போற்றப்படும் காந்தியடிகளை 1948 ஜனவரி 30 அன்று ஆரியத்துவ வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். அக் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றவர் கோபால் கோட்சே. காந்தி நேரடியாகச் சுட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி, நாதுராம் கோட்சேவுக்குத் தூக்கு. கோபால் கோட்சேவுக்கு வாழ்நாள் தண்டனை. மராட்டியச் சிறையில் இருந்தார். 16 ஆண்டுகளில் 1964ஆம் ஆண்டு மராட்டிய காங்கிரசு ஆட்சி கோபால் கோட்சேயை விடுதலை செய்தது.

காங்கிரசுக்காரர்களாக இருந்த மராட்டிய காங்கிரசுத் தலைவர்களுகு்க மராத்தியர் என்ற இன உணர்ச்சி  இருந்தது. அதனோடு, கோபால் கோட்சே மராட்டிய சித்பவன பிராமணர்!

மனுதர்மப்படி கொலைக் குற்றம் செய்திருந்தாலும் பிராமணர்களைத் தண்டிக்கக் கூடாது.   தலைமுடியை  (மயிரை) மட்டும் தான் அகற்ற வேண்டும்.

நம்முடைய ஏழு தமிழர்களும் முப்பதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் தமிழின உணர்ச்சி ஆட்சியாளர்களிடையே இல்லை.

அத்துடன் இந்த ஏழுபேரும் பிராமணர்கள் அல்ல. சூத்திரர்கள்!  தாய் மண்ணிலேயே தமிழர்களுக்கு நடக்கும் இன ஒதுக்கலைப் புரிந்துகொண்டு இளந் தலைமுறையின் தமிழ்த் தேசிய எழுச்சி கொள்ள வேண்டும்.

 

 

https://www.ilakku.org/?p=51975

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மணியரசனின் பார்வை மிக தெளிவானது. பல புதிய விடயங்களை இதில் சொல்லி உள்ளார்.

இதை வாசித்த பின் நான் யோசிப்பது:

ஸ்டாலின் செய்ய வேண்டியது உடனடி விடுதலை. அதன் பின் விடுதலை செய்தது பிழை என்று எதிர் தரப்பு கோர்ட்டுக்கு போகட்டும்.

ஜனாதிபதி பதிலழிக்காவிட்டால் இதை செய்வாரோ ஸ்டாலின் ?

அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

..அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்தும் சனாதிபதிக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதுவதெனறால், எனக்கென்னமோ இது வழக்கம்போல கிடப்பில் போடும் வேலை போலத்தான் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஐயா மணியரசனின் பார்வை மிக தெளிவானது. பல புதிய விடயங்களை இதில் சொல்லி உள்ளார்.

இதை வாசித்த பின் நான் யோசிப்பது:

ஸ்டாலின் செய்ய வேண்டியது உடனடி விடுதலை. அதன் பின் விடுதலை செய்தது பிழை என்று எதிர் தரப்பு கோர்ட்டுக்கு போகட்டும்.

ஜனாதிபதி பதிலழிக்காவிட்டால் இதை செய்வாரோ ஸ்டாலின் ?

அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

நல்ல ஐடியா. இருந்தாலும் நான் நினைப்பது....

பரோலில் ஒவ்வொருவராக அனுப்பி விடுவது. ஒவ்வொருமாதமாக நீடித்து, ஒரு ஆறு மாதம் ஓட விட்டு, சத்தமே இல்லாமல், மீடியா மறந்த நிலையில் விடுதலை பத்திரத்தில் கையெழுத்தினை போடுவது.

ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகி... மறந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

நல்ல ஐடியா. இருந்தாலும் நான் நினைப்பது....

பரோலில் ஒவ்வொருவராக அனுப்பி விடுவது. ஒவ்வொருமாதமாக நீடித்து, ஒரு ஆறு மாதம் ஓட விட்டு, சத்தமே இல்லாமல், மீடியா மறந்த நிலையில் விடுதலை பத்திரத்தில் கையெழுத்தினை போடுவது.

ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகி... மறந்து விடுவார்கள்.

அப்படி மறக்கும் விசயமாக இது எனக்கு தெரியவில்லை.

இவர்கள் விடுதலை ஆனதும் இது இந்தியா முழுக்க எதிரொலிக்கும். எப்போ விட்டாலும் ஒரு கிழமைக்கு அதுதான் சென்சேசனல் செய்தியாக இருக்கும். காங்கிரசும் சும்மா இராது. கிசோர் சாமி, சு சாமி என்று சங்கிகளும் இதை பெரிதாக்குவார்கள்.

ஆனால் ஸ்டாலின் இதை நிச்சயம் அரசியல் கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார். அவருக்கு லாபமா நட்டமா என்று. தனது தந்தையை போல் தனது ஆட்சிக்கு ரிஸ்க்கான எதையும் செய்யமாட்டார்.

அண்மைய சமூக வலைத்தள அவதூறுகள், தனியே தம்பிகளுக்கும், உபிகளுக்கும் இடையான மோதலாக தெரியவில்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, போரட்டத்தையும், தலைவரையும், ஈழத்தமிழர்களையும் விமர்சிக்கும் இல்லை கொச்சைபடுத்தும் முடிவுக்கு திமுக வந்து விட்டதோ என்பது என் ஐயம்.

அப்படியாயின் இவர்களை ஏன் விடுதலை செய்யவேண்டும், கிடப்பில் போட்டால் நல்லது என நினைக்க கூடும்.

மறுவளமாக, தாம் ஒன்றும் தெலுங்குகாரர் அல்ல, எமக்கும் தமிழுணர்வு உண்டு என்பதை காட்டி ஹீரோ ஆக இவர்களை விடுவிக்கவும் செய்யலாம்.

எப்போதும் போல இப்போதும் இவர்கள் வாழ்க்கை அரசியல் கால்பந்துதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.