Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு

என்.கே. அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்ளது.

‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்’ போராட்டங்கள் கடுமையாகியுள்ள நிலையில், இலங்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கும், இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதற்குமான முதற்படியாக, அரசியலமைப்பு மாற்றம் அவசியம் என்ற அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியால் இந்தத் திருத்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபின் முக்கிய அம்சங்களை அலசுவதே இந்தப் பத்தியின் நோக்கமாகும்.

image_cd4de077d9.jpg

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின் பிரதான அம்சமானது, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாகும். 1978ஆம் ஆண்டு, ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் மூலமாக, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை, இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கான யோசனை, முன்வைக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கெதிரான கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும், பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அரசின் அதிகாரம், ஒரு நபரிடம் குவிவது, ஜனநாயகத்துக்கு பாதகமாகதொன்று. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைக்கு எதிரான பிரதான விமர்சனமும் இதுதான். அக்டன் பிரபு சொன்னது போல,“அதிகாரம் கெடுக்கும்; முழுமையான அதிகாரம், முழுமையாகக் கெடுக்கும்”.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் கீழ், பாராளுமன்றம் தனது சுயாதீனத்தை இழந்துள்ளது என்ற விமர்சனத்தில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்திலுள்ள, ஜனாதிபதியின் கட்சியினர், ஜனாதிபதியின் ஏவலாளிகளாகச் செயற்படும் பாங்கை, கடந்த 44 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி முறையில், இலங்கையர்கள் மிக வௌிப்படையாகவே அவதானித்திருக்கிறார்கள்.

ஆகவேதான், ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கான பெரும் அரசியல் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக, அரசியலமைப்புக்கான 17ஆவது, 19ஆவது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதிகார போதை மிகுந்தவர்கள், தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதனால், மேற்சொன்ன 17ஆவது திருத்தம், 18ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.

2015இல் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் வருகையின் பின்னர் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தம், மீண்டும் ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், 20ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் விளைவுகளைத்தான் இலங்கையும் இலங்கையர்களும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின் படி, ஜனாதிபதியானவர் அரசுத் தலைவராகவும் முப்படைகளின் தளபதியாகவும் தொடர்ந்தாலும், அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, பாராளுமன்றத்தால், ஐந்து வருட பதவிக் காலத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவராவார்.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவரை பிரதமராக நியமிப்பார். இதில், ஜனாதிபதியின் தெரிவுக்கு இடமில்லை. பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவர் எவரென்றாலும், அவரைப் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டவராவார்.

ஜனாதிபதியானவர், பிரதமரின் ஆலோசனையின்படியே அமைச்சரவை அமைச்சர்களை நியமனம் செய்தல், மாற்றியமைத்தல், பதவிநீக்கம் செய்தல் என்பவற்றைச் செய்யலாம். அமைச்சரவையானது 25 வரையிலான அமைச்சர்களைக் கொண்டிருக்கும் என்பதோடு, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத ஏனைய அமைச்சர்கள் 25 பேர் வரை நியமிக்கப்பட முடியும். பிரதமரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார்.

இது தற்போதுள்ள அரசியலமைப்பின் நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டது. தற்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதி-மைய நிர்வாக முறையிலிருந்து, பிரதமரைத் தலைவராகக் கொண்டு, அமைச்சரவை-மைய நிர்வாக முறைக்கு இலங்கையை மாற்றுவதாக இந்தத் திருத்தம் அமைகிறது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின் படி, பிரதமர் பதவியானது, இறப்பின் மூலமோ, பதவி விலகலின் மூலமோ, பிரதமரானவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதன் மூலமோ, நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலமோ, அல்லது பாராளுமன்றத்தால் அரசாங்கப் பாதீடு தோற்கடிக்கப்படுவதன் மூலமோ வெற்றிடமாகும்.

பிரதமர் பதவி வெற்றிடமாகும் போது, அரசாங்கம் கலையும். பிரதமர் பதவி வெற்றிடமாகும் போது, பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்ற வேறொரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். பிரதமரும் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு தனியாகவும் கூட்டாகவும் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.

பாராளுமன்றமானது ஓர் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது, குறித்த அமைச்சரானவர் பதவியிழப்பார். இந்த முன்மொழிவுகளும் தற்போதுள்ள அரசியலமைப்பில் இருந்து மாறுபட்டவை என்பதோடு, நிர்வாகத்துறை மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை அதிகரிப்பதாகவும், நிர்வாகத்துறையின் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின்படி, பாராளுமன்றமானது ஐந்து வருட காலத்துக்கென மக்களால் தேர்தெடுக்கப்படுவதுடன், பாராளுமன்றமானது அறுதிப் பெரும்பான்மையின்படியான தீர்மானமொன்றின் மூலம், குறித்த பதவிக்காலம் முடிவுறும் முன்பே, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

குறிப்பிடத்தக்கதொரு முன்மொழிவாக, கட்சி மாறி இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பாராளுமன்ற பதவிக்காலத்தின் போது அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த கட்சியால் பதவி நீக்கம் செய்யப்படும் போது, அது தொடர்பில் விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள உயர் நீதிமன்றத்தின் அதிகாரமானது, குறித்த பதவி நீக்கலின் சட்டத் தகுதிப்பாடுகள் பற்றி மட்டும் ஆராய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்சி, பதவி நீக்கம் செய்த நடைமுறை பற்றி, உயர் நீதிமன்று ஆராய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிராது.

குறித்த அரசியலமைப்பு திருத்த வரைபின் மிக முக்கியமானதோர் அம்சமாக அமைவது, அரசியலமைப்பு பேரவையின் மீள்அறிமுகம். சபாநாயகர் தலைமையில் அமையும் அரசியலமைப்பு பேரவையானது, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் ஐந்து சுயாதீன உறுப்பினர்களைக் கொண்டு அமையும்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் தொடர்பில், கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு வழங்கவும், முக்கிய அரசுப் பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவுகளை அங்கிகரிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும். ஏலவே 19ஆம் திருத்தத்தின் கீழ், பட்டியலிடப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களுடன், தகவலறியும் உரிமை ஆணைக்குழு, துறைமுக நகர் ஆணைக்குழு என்பனவும் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை அதிகாரத்துக்குள் கொண்டுவரப்படுவதுடன், அரசியலமைப்புப் பேரவையின் அங்கிகாரத்தின் படி, ஜனாதிபதியால் நியமிக்கக் கூடிய அரசுப் பதவிப் பட்டியலுக்குள், மத்திய வங்கி ஆளுநர் பதவியும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைபில், தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொள்கை வகுப்பு, கொள்கை மேற்பார்வை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு பேரவையை ஸ்தாபிக்கும் ஏற்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பிரதமர் தலைமையில், நிதி, வௌிவிவகாரம், பாதுகாப்பு அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், சட்டமா அதிபர், 12 வேறுபட்ட சுயாதீன துறைசார் விற்பன்னர்களைக் கொண்டமையும் அரசுப் பேரவையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறின், இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலநோக்கமானது ஜனாதிபதியிடம் குவிந்துள்ள அதிகாரத்தைக் குறைப்பதாகும். இன்று, இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலையிலிருந்து இலங்கை மீண்டு வரவேண்டுமென்றால், அதிகாரம் ஜனநாயகப் படுத்தப்படுதல் அவசியம்.

ஜனாதிபதி, ஒரே இரவில் இரசாயன உரத்தைத் தடை செய்ததன் விளைவாக இன்று உணவுத்தட்டுப்பாட்டை இலங்கை எதிர்நோக்கி நிற்கிறது. ஜனாதிபதியும் அவரால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநரும், இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாததால் இலங்கை பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது.

அரச இயந்திரத்தின் அத்தனை உயர் பதவிகளையும் ஜனாதிபதியே தீர்மானிக்கிறார். ஆகவே, இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம், ஜனாதிபதி என்ற ஒரு நபரிடம், அளவற்ற அதிகாரம் குவிந்திருப்பது என்றால் அது மிகையல்ல. இது மாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே, இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திருத்த வரைபானது, இலங்கையின் அரசியல், அரசியலமைப்பு சார் பிரச்சினைகளுக்கு எல்லாம் முழுமையான தீர்வை வழங்கவில்லை. ஆனால், இந்த நொடிக்கு அவசியமான முதலுதவியைச் செய்யும் வகையிலானதொரு முன்னகர்வாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐக்கிய-மக்கள்-சக்தியின்-அரசியலமைப்பு-திருத்த-வரைபு/91-295203

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இந்தத் திருத்த வரைபானது, இலங்கையின் அரசியல், அரசியலமைப்பு சார் பிரச்சினைகளுக்கு எல்லாம் முழுமையான தீர்வை வழங்கவில்லை. ஆனால், இந்த நொடிக்கு அவசியமான முதலுதவியைச் செய்யும் வகையிலானதொரு முன்னகர்வாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இன்றைய பிரச்சனைக்கு மூலகாரணமான இனப்பிரச்சனையை பற்றி எதுவுமே காணலையே?

  • கருத்துக்கள உறவுகள்

பதவி மோகமே தவிர....இதில் வேறொன்றுமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் கட்சி தற்போதைய மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது.?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

ஐக்கிய மக்கள் கட்சி தற்போதைய மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது.?

முதல்ல ஆட்சி.

அப்புறம் பிரச்சனைக்கு தீர்வு.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 19:30, nunavilan said:

ஐக்கிய மக்கள் கட்சி தற்போதைய மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது.?

ஆட்சியைக் கைப்பற்றுவதே தீர்வென்பது அவரது அரசியல்.

On 25/4/2022 at 17:39, ஈழப்பிரியன் said:

இன்றைய பிரச்சனைக்கு மூலகாரணமான இனப்பிரச்சனையை பற்றி எதுவுமே காணலையே?

பிரேமதாசவின் புதல்வரென்பதை  நிரூபித்துள்ளார். எல்லா சிங்களத் தலைமைகளும் இனவாதிகளே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 16:39, ஈழப்பிரியன் said:

இன்றைய பிரச்சனைக்கு மூலகாரணமான இனப்பிரச்சனையை பற்றி எதுவுமே காணலையே?

(வடிவேலுவின் தம்பி டீ வரல்ல மீம்ஸை மனகண்ணில் கொண்டு வருக).

தமிழ் மக்கள் சஜித்திடம் “ தம்பி சம்ஸ்டி வரல்ல”🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.