Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுமா? தீப்பந்தம் போல பிற மாநிலங்களை வாட்டும் வெப்பத்துக்கு இதுவா காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுமா? தீப்பந்தம் போல பிற மாநிலங்களை வாட்டும் வெப்பத்துக்கு இதுவா காரணம்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்தியா முழுவதும் வீசும் வெப்ப அலை: காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா முழுவதும் அடுத்த சில நாட்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடுமென இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் வெப்ப அலை இவ்வளவு அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் மத்தியப் பகுதிகளிலும் இந்த வாரம் வெப்ப நிலை 2 முதல் நான்கு டிகிரிவரை அதிகரிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதற்குப் பிறகு பெரிய அளவில் வெப்ப நிலையில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

"நாடு முழுவதும் வெப்பம் வெகுவாக அதிகரித்துவருகிறது. வழக்கமான காலத்திற்கு முன்பாகவே வெப்பம் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது" என புதன்கிழமையன்று முதல்வர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதியும் குறிப்பிட்டார்.

மே, ஜூன் மாதங்களில் இந்தியாவில் வெப்ப அலை வீசுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த ஆண்டு கோடைக் காலம் முன்கூட்டியே துவங்கிவிட்டதுதான் பிரச்சனை. மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. மார்ச் மாதத்திலேயே வெப்ப அலையும் வீச ஆரம்பித்தது.

தற்போதைய வெப்ப அலைக்கு காரணம் என்ன?

இந்த ஆண்டில் முன்கூட்டியே வீச ஆரம்பித்த வெப்ப அலை, இமாச்சலப் பிரதேசம் போன்ற இதமான வெப்ப நிலைக்குப் பெயர்போன மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களை பாதித்திருப்பதாக தி சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் என்ற சிந்தனைக் குழு தெரிவித்திருக்கிறது.

இந்த வாரத்தில் தலைநகர் தில்லியில் வெப்பநிலை 44 டிகிரியைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானியான நரேஷ் குமார், தற்போதைய வெப்ப அலைக்கு உள்ளூர் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளே காரணம் என்கிறார். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைவாக இருந்ததால் வடமேற்கு இந்தியாவிலும் மத்திய இந்தியப் பகுதியிலும் பருவநிலைக்கு முன்பு சுத்தமாக மழையே இல்லாமல்போய்விட்டது. புயல்கள் உருவாவதற்கு எதிரான காற்றழுத்தத்தின் காரணமாகவும் வறண்ட, வெப்பக் காற்று மார்ச் மாதத்தில் மேற்கிந்தியப் பகுதியில் வீச ஆரம்பித்தது.

இந்த வெப்ப அலையின் விளைவுகள் வெளிப்படையாகவே தென்பட ஆரம்பித்துள்ளன. வெப்ப நிலை திடீரென அதிகரித்திருப்பது தங்களுடைய கோதுமை விளைச்சலைக் கடுமையாகப் பாதித்திருப்பதாக வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். யுக்ரேன் போரினால் உலகம் முழுவதுமே கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படுவது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த வெப்ப அலையால் பல மாநிலங்களில் மின்சாரத்தின் தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

 

இந்தியா முழுவதும் வீசும் வெப்ப அலை: காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாகவே கோடைக்காலம் என்பது மிக மோசமாகவே இருக்கும். குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தீவிரம் இருக்கும். இருந்தாலும் இப்போது ஏற்படும் வெப்ப அலைகள் மிக மிகத் தீவிரமானவையாகவும் அடிக்கடி நிகழக்கூடியவையாகவும் இருக்கின்றன. தவிர, இந்த வெப்ப அலைகள் நீடிக்கும் காலமும் அதிகரித்துள்ளது.

வெப்ப அலைகள் அதிகரித்துள்ள

உள்ளூர் காலநிலைக் காரணிகளே தற்போதைய வெப்ப அலைக்குக் காரணம் என்று வலியுறுத்துகிறார் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மெடராலஜி நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானியான ராக்ஸி மேத்யூ கோல். ஆனால், புவி வெப்பமயமாதலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வழக்கத்தைவிட மூன்று டிகிரி வரை வெப்பம் அதிகரிக்குமென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வேலூர், திருச்சி, திருத்தணி, கரூர் பரமத்தி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளைவிட வெப்ப அதிகமாகவே பதிவாகிவருகிறது.

புவி வெப்பமயமாதல் இதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். "வளைகுடா நீரோட்டம் எனப்படும் மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆன்டி-சைக்ளோன் விளைவை ஏற்படுத்துகிறது. இதற்கு கிரீன்லாந்து பகுதியில் பனி உருகுவதுதான் முக்கியக் காரணமாக அமைகிறது" என்கிறார் அவர்.

வழக்கத்தைவிட 5 டிகிரி அதிகம்

பல மாநிலங்களில் வழக்கத்தைவிட ஐந்து டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள 36 வானிலைப் பிரிவுகளில் 17 பிரிவுகளில் வெப்ப அலை வீசுகிறது என்று கூறப்பட்டிருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார் அவர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் குளிர் அலை அதீதமாக வீசுவது குறைந்து, வெப்ப அலைகள் அதிகரித்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

 

இந்தியா முழுவதும் வீசும் வெப்ப அலை: காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்கள் தொகை அதிகரித்திருப்பதும் புவியின் வளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் நிலைமையை மேலும் மோசமாக்குவதாகக் கூறுகிறார் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கிளைமேட் சேஞ்ச் ஸ்டடீஸின் இயக்குனரான சிவானந்தா பய். காடுகளை அழிப்பது, அதிகமான போக்குவரத்து போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவிக்கிறார் அவர்.

"கான்க்ரீட் சாலைகளும் கட்டடங்களும் அதிகரிக்க அதிகரிக்க, வெப்பம் மேலே செல்வது தடுக்கப்பட்டு, புவிச் சூழல் கூடுதல் வெப்பமடைகிறது" என்கிறார் பய்.

இம்மாதிரி வெப்பம் அதிகரிக்கும்போது, இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

எந்த பாதுகாப்பும் இல்லை

"சூழலை குளுமையாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் குறைவு" என்கிறார் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மென்ட்டின் மூத்த ஆய்வாளரான சாந்தினி சிங்.

வெப்ப அலைகளால் ஏற்படும் மரணங்கள் மட்டுமே பொதுவாக கவனிக்கப்படுகின்றன. ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு அதனால் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.

"வெப்ப அலைகளால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். இரவிலும் வெப்பம் கடுமையாக இருந்தால், நோய்களின் கடுமையும் அதிகரிக்கும். இதனால், மருத்துவச் செலவுகளும் கூடும்" என்கிறார் சாந்தினி.

 

இந்தியா முழுவதும் வீசும் வெப்ப அலை: காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலான இந்தியர்களைப் பொறுத்தவரை, எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வெப்பதில் வேலைபார்க்கும் சூழல் இருக்கிறது. "கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தகரக் கொட்டகைகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறார்கள். கோடை காலத்தில் அது தாங்க முடியாததாக இருக்கும்" என்கிறார் ராக்ஸி மேத்யூ கோல்.

"நம்முடைய கட்டடங்களைப் பொறுத்தவரை, வெப்பத்தை வெளியேற்றுவதற்குப் பதிலாக உள்ளே பிடித்துக்கொள்ளும் வகையில்தான் கட்டப்படுகின்றன. சர்வதேச அளவில் செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகளில் இருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் சாந்தினி.

2015ஆம் ஆண்டிலிருந்து வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விடுத்துவருகின்றன. அதீத வெப்பம் நிலவும் காலங்களில் திறந்த வெளியில் வேலைசெய்யக்கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. ஆனால், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவது, நகரங்களை பசுமையாக்குவது போன்றவையில்லாமல் இந்த அறிவித்தல்களுக்கு எந்தப் பலனும் இருக்காது என்கிறார் சாந்தினி சிங்.

உலகம் முழுவதுமே தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவதை மனதில்கொண்டு, பருவநிலை மாற்றத்தை அணுகவேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

https://www.bbc.com/tamil/india-61286498

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உலகம் முழுவதுமே தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவதை மனதில்கொண்டு, பருவநிலை மாற்றத்தை அணுகவேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

இவர்களை வெப்பம் பாதிக்காதா.?????🤫

th?id=OIP.dHqH0jZO34h_Wdm0m0YTGgHaE8&pid=Api&P=0&w=271&h=181

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே பழகிப் போயிருக்கும். அதிலும் கறுப்பு துணி கூட வெப்பத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

இவர்களை வெப்பம் பாதிக்காதா.?????🤫

th?id=OIP.dHqH0jZO34h_Wdm0m0YTGgHaE8&pid=Api&P=0&w=271&h=181

 

அவர்கள், வெப்பமாக இருப்பதுதான்…. “பாய்”மாருக்கு விருப்பம். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப அலைகள்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? – எப்படி தற்காத்துக் கொள்வது?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கொளுத்தும் வெயில்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? - எப்படித் தற்காத்துக் கொள்வது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெயிலின்போது வெளியே செல்லவே அச்சமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உச்சி வெயிலில் வெளியே செல்லாதே என்ற அறிவுரைகளை வீட்டின் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அனல் காற்றின் வெப்ப உணர்வு முகத்தில் வீசும்போது, தொண்டை வறண்டு நீரைத் தேடச் சொல்லிக் கெஞ்சுவதை உணராதவர்கள் இருக்கமுடியாது.

வெயிலில் வைக்கும் செடிகள் கருகத் தொடங்குவது, துவைத்து காயவைத்த துணிகள் அதிவேகமாக உலர்ந்துவிடுவது என்று கோடைக்கால அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதுவரையிலான இந்த அனுபவங்களை எல்லாம் ஒன்றுமே இல்லையெனச் சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டின் வெப்ப அலை இருக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. 1901-ஆம் ஆண்டு முதலான வெப்பத்தில், மார்ச் 2022-ஆம் ஆண்டு பதிவான வெப்பநிலை மூன்றாவது அதிக வெப்பநிலை எனக் கூறப்படுகிறது.

மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை முழுமையாக 26 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது.

தண்ணீர் குடிப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?

இத்தகைய அதீத வெப்பநிலை, இந்தக் கோடைக்காலத்தில் பொதுமக்களிடையே என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அவற்றிலிருந்து எப்படி மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, மருத்துவர் சிவராம கண்ணனிடம் பேசினோம்.

அவர், "வெயில் நம் மீது படாமல் பார்த்துக் கொள்வதே முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கை. வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே அதிகமாகச் செல்லாமல் இருக்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தாலும், காரில் செல்வது, குடை எடுத்துச் செல்வது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தோல் வெளியே தெரியாதவாறு முகம் உட்பட அனைத்தையும் துணியால் மறைத்துக் கொள்வது போன்ற உரிய பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் தோல் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு, சன்ஸ்க்ரீன் லோஷன் போடுவது போன்றவற்றின் மூலம், தோல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றைவிட மிக முக்கியமாக, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சராசரியாக நாளொன்றுக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டுமெனில், இப்போதைய சூழலில் கூடுதலாக ஒரு லிட்டர் குடிப்பது பாதுகாப்பானது," என்று கூறினார்.

 

கொளுத்தும் வெயில்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? - எப்படித் தற்காத்துக் கொள்வது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்

அவரிடம் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அதிர்ச்சி போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பாதிப்புகள் குறித்துக் கேட்டபோது, "கோடை உச்சத்தில் இருக்கும்போது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) ஏற்படும் அபாயம், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடையே மிக அதிகமாக உள்ளது. அவர்கள் உச்சி வெயிலின்போது வெளியிலேயே செல்லக்கூடாது.

முதியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்குமே கூட உடலில் நீர் அளவு போதுமான அளவுக்கு இல்லையென்றால் அதிக உடற்பயிற்சியால் வெப்ப அதிர்ச்சி ஏற்படக்கூடும். 15 நாட்களுக்கு முன்பு கூட 22 வயதான ஓர் இளைஞர் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் ஓடியதால் வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஏசியில் இருப்பதைப் போலவே, நம் மூளையிலும் உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிப்பதற்கான தெர்மோஸ்டாட் உள்ளது. அது செயலிழந்துவிடுவதால் வெப்ப அதிர்ச்சி ஏற்படுகிறது.

வெப்ப அதிர்ச்சியின்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து மொத்தமும் ஆவியாகிவிடும். அதற்கு உடல் எதிர்வினையாற்றும்போது, மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். அந்த இளைஞருக்கு அதிக உடற்பயிற்சியால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதத்தில், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் கிட்டத்தட்ட வெந்துபோனதைப் போல் ஆகியிருந்தது.

முதியவர்களின் உடலில் ரத்த அளவும் நீர்ச்சத்தும் குறைவாகத்தான் இருக்கும். அவர்கள் இப்போதுள்ள வெயிலில் வெளியே செல்லும்போது, வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உயிரையே இழக்கும் அபாயம் ஏற்படலாம். ஆகவே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

கொளுத்தும் வெயில்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? - எப்படித் தற்காத்துக் கொள்வது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த இளைஞரைப் பொறுத்தவரை, மாரத்தான் ஓடுவதற்கு முன்பு அவர் போதுமான அளவுக்கு நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளாததே இதற்குக் காரணம். கோடைக்காலங்களில் மாரத்தான் ஓடுவதில் தவறு ஏதுமில்லை. ஆனால், பருவநிலையை கருத்தில் கொண்டு, உடல் ஆரோக்கியத்திற்கான உரிய விஷயங்களைச் செய்துகொள்ள வேண்டும். அதிலும், அதிகளவு நீர் ஆகாரம் எடுப்பது மிகவும் முக்கியம்," என்றார்.

தண்ணீர் பற்றாக்குறை கொண்டுவரக்கூடிய நோய்கள்

இதுபோக, அதீத வியர்வை காரணமாக பூஞ்சைத் தொற்றுகள், சொறி, படங்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தைப் பராமரிப்பது, பவுடர் போடுவது, உடலை குளிர்ச்சியாகப் பராமரிப்பது போன்றவற்றைச் செய்துகொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் மருத்துவர் சிவராம கண்ணன்.

மேலும், "கோடைக்காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, பல்வேறு நீர்சார் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, கிடைக்கும் நீர் மாசடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், நீர்சார் நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைஃபாய்ட் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது.

அணியும் ஆடைகளையுமே இறுக்கமாக அணிவதை விட காற்றோட்டம் இருக்கக்கூடிய வகையில் அணிவதும் அடர்த்தி குறைந்த நிறத்திலான ஆடைகளை அணிவதும் நல்ல பலனளிக்கும்.

இவைபோக, சிறுநீரகக் கல் வருவதும் அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும்," என்றார்.

 

கொளுத்தும் வெயில்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? - எப்படித் தற்காத்துக் கொள்வது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோடையில் கம்பஞ்சோறு உடலுக்கு நல்லது

கோடைக்காலங்களில் எதைச் சாப்பிடுவது அதீத வெப்பநிலையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன், "வெயில் காலங்களில் நமக்கு மிகவும் அவசியமானது தண்ணீர். அதிலும் சிறப்பானது பானைத் தண்ணீர்.

ஏனெனில், சராசரி வெப்பநிலை எதுவாக இருந்தாலும் அதைவிடக் குறைவாகவே பானைத் தண்ணீர் இருக்கும். அதுமட்டுமின்றி, குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டப்படும் நீரைவிட இதுவே தாகத்தைத் தணிக்கச் சிறந்தது. அது இல்லையெனில், ஓரளவுக்குச் சூடாக்கிய குடிநீரை பருகலாம். இவையிரண்டும் தாகத்தைத் தணிக்கச் சிறந்தது.

பொதுவாக, 70 வயதுக்கு மேலுள்ள முதியவர்களுக்கு அவ்வளவாக தாகம் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் குடிநீரை அவர்களுக்கு அருகிலேயே வைத்துவிட வேண்டும். அதை அவர்கள் அன்றைய நாளுக்குள் குடித்துவிட வேண்டும்.

இவைபோக, கோடைக் காலத்தில் ராகி கூழ், கம்பஞ்சோறு போன்றவற்றை இரவில் புளிக்க விட்டு, காலையில் நீர் மோர் சேர்த்து, வெங்காயம் அல்லது நார்த்தங்காயுடன் சாப்பிடுவது சிறந்தது. இதிலுள்ள நல்ல பாக்டீரியா உடலுக்கு குளிர்ச்சியை வழங்கி பாதுகாப்பு வழங்கும்.

கோடைக்காலங்களில் ஷாம்பூ போட்டுக் குளிப்பதைவிட, சீயக்காய், உசிலம்பொடி போன்றவற்றைப் பயன்படுத்தி குளிப்பது மிகவும் நல்லது. குளிர்பானங்களை எடுத்துக் கொள்வதில் எவ்விதப் பயனும் இல்லை. அதுமட்டுமின்றி, பழங்களை ஜூஸ் போட்டுக் குடிப்பதைவிட, பழங்களை அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.

பழங்களை சாறாக்கிக் குடிக்கும்போது, அதிலிருக்கும் நார்ச்சத்துகள் போய்விடும். அதைவிட, அப்படியே சாப்பிடும்போது நமக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்கும்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/india-61293591

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.