Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஜராத் பில்கிஸ் பானோ வழக்கு: விடுவிக்கப்பட்ட 11 கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகளுக்கு ஆரத்தி வரவேற்பு சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் பில்கிஸ் பானோ வழக்கு: விடுவிக்கப்பட்ட 11 கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகளுக்கு ஆரத்தி வரவேற்பு சரியா?

  • ராகவேந்திர ராவ் மற்றும் தேஜஸ் வைத்யா
  • பிபிசி செய்தியாளர்கள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பில்கிஸ் பானோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த 11 பேரும் கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கைதிகளின் தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, ஜூன் மாதம் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில் ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் மன்னிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்களின் தண்டனையை ரத்து செய்யும் முடிவை குஜராத் அரசு எடுத்துள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 76வது ஆண்டு சுதந்திர அமிரித் மஹோத்சவின் போது, சில வகை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 10ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது. அவை மூன்று கட்டங்களாக: 15 ஆகஸ்ட் 2022 , 26 ஜனவரி 2023 மற்றும் மூன்றாம் கட்டமாக 15 ஆகஸ்ட் 2023 அன்றும் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

 

இதனுடன் எந்தெந்த வகை கைதிகளின் தண்டனையை மன்னிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இதில் பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அடங்குவர்.

ஆனால் விஷயம் இத்துடன் முடியவில்லை.

 

பில்கிஸ் பானோ

பட மூலாதாரம்,CHIRANTANA BHATT

குஜராத்தின் 2014 மன்னிப்புக் கொள்கை

2014, ஜனவரி 23 ஆம் தேதி குஜராத் உள்துறை அமைச்சகம், மன்னிப்பு மற்றும் முன்கூட்டிய விடுதலைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை வெளியிட்டது. அதில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களின் கும்பல் கொலை மற்றும் பாலியல் வல்லுறவு அல்லது கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம், 1946இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை மன்னிக்கவோ அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யவோ முடியாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.

1946-ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மத்தியப் புலனாய்வு கழகம் சிபிஐ க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பில்கிஸ் பானோ வழக்கை சிபிஐ விசாரித்து 11 பேரை குற்றவாளிகள் என்று நிரூபித்தது.

 

குஜராதி

பட மூலாதாரம்,CHIRANTANA BHATT

 

படக்குறிப்பு,

பில்கிஸ் பானோ தனது குடும்பத்துடன்

1992 கொள்கையின் கீழ் வழங்கப்பட்ட மன்னிப்பு

இது குறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) ராஜ்குமாரிடம் பிபிசி பேசியது.

"இது முன்கூட்டிய விடுதலை விவகாரம் அல்ல. இதில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் யார் வேண்டுமானாலும் மன்னிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். 2014 இன் கொள்கையின்படி அவர்கள் மன்னிப்பு பெற முடியாது. எனவே இந்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நாளில் நடைமுறையில் இருந்த கொள்கையின் கீழ் நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது."

"தண்டனை வழங்கப்பட்டபோது,1992 ஆம் ஆண்டின் கொள்கை அமலில் இருந்தது," என்று ராஜ்குமார் மேலும் கூறினார்.

"அந்தக் கொள்கையில் எந்த வகைப்பாடும் இல்லை. தண்டனையின் பிரிவுகள் தொடர்பான வகைப்பாடும் இல்லை. 14 ஆண்டுகள் நிறைவடைந்தால் இதுபோன்ற விவகாரங்களை பரிசீலிக்க முடியும் என்று மட்டுமே அந்தக்கொள்கை கூறுகிறது. 2014 ஆம் ஆண்டின் கொள்கை இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது,"என்றார் அவர்.

"இந்த விவகாரம் சிபிஐயால் விசாரிக்கப்பட்டதால், இந்த வழக்கில் எந்த அரசு மன்னிப்பு அளிக்கமுடியும், அதாவது மத்திய அரசா மாநில அரசா என்று குஜராத் அரசு இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தியது," என்று ராஜ் குமார் மேலும் கூறினார்.

"இந்த வழக்கில் மன்னிப்பு விஷயம் தொடர்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது," என்றார் அவர்.

 

பில்கிஸ் பானோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

2014 ஆம் ஆண்டின் மன்னிப்புக் கொள்கையை புறந்தள்ள முடியுமா?

குஜராத் மாநிலஅரசு 2014-ம் ஆண்டு கொள்கையை புறந்தள்ளி, 1992-ம் ஆண்டின் கொள்கையை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியது சரியா?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள, வழக்கறிஞரான மெஹ்மூத் பிராச்சாவிடம் பேசினோம்.அவர் டெல்லி கலவரம் போன்ற முக்கியமான வழக்குகளுடன் தொடர்புடையவர்.

கூட்டுப்பாலியல் வன்புணர்வை உதாரணமாகக் கூறிய அவர், முன்பு இதற்கான தண்டனை மரணதண்டனையாக இருக்கவில்லை.ஆகவே யாரேனும் கூட்டுப் பலாத்காரம் செய்து பின்னர் கூட்டுப் பலாத்காரத்தின் வரையறையும் தண்டனையும் மாற்றப்பட்டால் அது முந்தைய விவகாரங்களுக்குப்பொருந்தாது என்றார். எளிமையாகச் சொன்னால், இப்போது சட்டம் மாறிவிட்டது என்பதால் முன்பு குற்றம் இழைத்த கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க முடியாது. குற்றம் செய்யும் போது இருந்த சட்டத்தின் படிதான் தண்டனை வழங்கப்படும்.

ஆனால் மன்னிப்பு விஷயத்தில் அப்படி இல்லை என்கிறார் பிராச்சா.

"எந்த காரணத்திற்காகவும் அளிக்கப்படும் மன்னிப்பு என்பது ஒரு செயல்முறை. நீங்கள் செயல்முறையை மாற்றலாம் மற்றும் அது பின்னோக்கி விளைவை ஏற்படுத்தலாம். எனவே குற்ற மன்னிப்பு ,செயல்முறையின் ஒரு அம்சமாகும். குற்றத்திற்கான தண்டனையை அது அடிப்படையில் மாற்றாது." என்று மெஹ்மூத் பிராச்சா கூறுகிறார்.

ஒரு குறிப்பிட்ட காலம் தண்டனையை முடித்த பின்னரே மன்னிப்பு தொடர்பான கேள்வி எழும். இந்த விஷயத்தில் எந்த சட்ட நிபந்தனையும் மீறப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

"மன்னிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியிருந்தால்மட்டுமே மன்னிப்பு குறித்த கேள்வி எழுகிறது. அன்று அமலில் உள்ள மன்னிப்புச் சட்டத்தின் அடிப்படையில், மன்னிப்புக்கான விண்ணப்பம் முடிவு செய்யப்பட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகளின் மன்னிப்பு குறித்துப்பேசிய பிராச்சா,"2014க்குப் பிறகு மன்னிப்பு கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தால், 2014ன் கொள்கையே வழிகாட்டும் கொள்கையாக இருந்திருக்க வேண்டும்,"என்றார்.

 

பில்கிஸ் பானோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

விவகாரம் என்ன?

2002 குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அவரது மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

2008 ஜனவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து, ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷ்யாம் ஷா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்தபிறகு நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். குற்ற மன்னிப்பு அளிப்பது பற்றி ஆராயுமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனையை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு இந்தக்கமிட்டி பரிந்துரைத்தது. இறுதியாக இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க, குஜராத் அரசின் கமிட்டி எப்படி முடிவு செய்தது என்பது தனக்குப் புரியவில்லை என்கிறார் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் பியோலி ஸ்வதீஜா.

"குஜராத் அரசுதான் மன்னிப்பு குறித்து முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து குஜராத் அரசு அமைத்த குழுவிற்கு அதிகாரம் இருந்தன. ஆனால் கமிட்டி அந்த அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்தியிருக்கக்கூடாது. குற்றத்தின் தன்மை என்ன என்பதை கமிட்டி பார்த்திருக்க வேண்டும். கைதியின் நடத்தை எப்படி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குற்றத்தின் தன்மை என்ன என்பதையும் பார்க்க வேண்டும். குற்றத்தின் தன்மையை பார்த்திருந்தால், மனசாட்சி உள்ள ஒரு குழு இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்திருக்க முடியும் என்று தெரியவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரை சாடும் எதிர்க்கட்சிகள்

இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை "எதிர்பாராதது" என்று வர்ணித்த காங்கிரஸ், பிரதமர் மீது நேரடித் தாக்குதலை தொடுத்துள்ளது.

"பிரதமர் செங்கோட்டையில் இருந்து பெரிய பெரிய விஷயங்களை பேசினார்... மகளிர் பாதுகாப்பு, மகளிர் மரியாதை, மகளிர் சக்தி... என வார்த்தை பிரயோகம் செய்தார். சில மணி நேரம் கழித்து குஜராத் அரசு இத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளது. இது எதிர்பாராதது, முன்னெப்போதும் நடந்திராதது," என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறினார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்களின் நல்ல நடத்தை மற்றும் குற்றத்தின் தன்மை ஆகியவையே அவர்கள் விடுதலைக்கான காரணங்களாகும் என்று கூறிய குஜராத் அரசின் அறிக்கையை கேரா கடுமையாக விமர்சித்தார்.

"குற்றத்தின் தன்மையைப் பற்றி நாம் பேசினால், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் பிரிவின்கீழ் கூட்டு பாலியல் வன்புணர்வு வராதா? இந்தக்குற்றத்திற்கு எவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும் அது குறைவுதான் என்றே கருதப்படுகிறது,"என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு வெளியான படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் பிரதமரை சாடியது.

"விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்படுவதையும், திலகம் இடப்படுவதையும், வாழ்த்துகள் கூறப்படுவதையும் நாம் பார்த்தோம். இதுதான் அம்ரித் மஹோத்சவா? இதுதான் பிரதமரின் பேச்சு மற்றும் செயல்பாட்டிற்கு இடையிலான வித்தியாசமா? அவரது சொந்த அரசுகளே பிரதமரின் பேச்சைக் கேட்பதை நிறுத்திவிட்டனவா அல்லது பிரதமர் நாட்டுக்கு ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு தொலைபேசியை எடுத்து தனது மாநில அரசுகளுக்கு வேறு எதையோ சொல்கிறாரா."என்று காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62579477

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கொலையாளிகள்  கால தொட்டு ஆசீர்வாதம் வாங்கி இனிப்பு கொடுக்கின்றார்கள். அவ்வளவிற்கு மத துவேஷம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 கொலையாளிகள்  கால தொட்டு ஆசீர்வாதம் வாங்கி இனிப்பு கொடுக்கின்றார்கள். அவ்வளவிற்கு மத துவேஷம்.

 

தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்துக்கு… அதி உயர் பதவி கொடுப்பது மாதிரி…
அவர்களின் நாட்டில்… முஸ்லீம்களை கொன்றவர்களுக்கு… லட்டு கொடுத்து, ஆசீர்வாதம் வாங்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழ் சிறி said:

தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்துக்கு… அதி உயர் பதவி கொடுப்பது மாதிரி…
அவர்களின் நாட்டில்… முஸ்லீம்களை கொன்றவர்களுக்கு… லட்டு கொடுத்து, ஆசீர்வாதம் வாங்குகின்றார்கள்.

 

இப்படியான ஒரு நாட்டிலிருந்துதான் எம் அரசியல் தலைவர்கள் நீதியான  தீர்வு ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த குற்றவாளிகளுக்கு அந்தநேரம் தலைவராக இருந்தவர் மோடி அவர்கள்.

நன்றிக் கடனை செய்து முடித்துள்ளார்.

இதனால்த் தான் முன்னரெல்லாம் இவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக் குற்றம், கூட்டுப் பாலியல் பலாத்காரம்  = நவீன இந்தியா  

🤣

  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண் முஸ்லிமாக இருத்ததால் இலகுவாக வெளியில் வந்து விட்டார்கள். மோடி முஸ்லிம் கலவரத்தின் மூல கர்த்தா. மேற்கு நாடுகளுக்கு விசா மறுக்கப்பட்டவர். பிரதமர் ஆனதும் அதனை விலக்கி கொண்டனர். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் - கள நிலவரம்

  • ராக்ஸி காக்டேகர் சாரா
  • பி பி சி செய்தியாளர்
19 ஆகஸ்ட் 2022, 09:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்
 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,ANI

குஜராத்தின் மிக கொடூர குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கால் அறியப்பட்டது.

மார்ச் 3, 2002 அன்று நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, 2008-ம் ஆண்டு பாம்பே செஷன்ஸ் நீதிமன்றம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

 

ஆகஸ்ட் 15, 2022 அன்று, கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இந்த 11 கைதிகளும் குஜராத் அரசின் மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கள் கிராமமான சிங்வாடாவை அடைந்ததும், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

பலர் தங்கள் வீடுகளில் நடனமாடியும், உரத்த இசையை இசைத்தும் கொண்டாடினர். அதேநேரம், சிலர் முகத்தில் மஞ்சள் பொட்டிட்டும் கொண்டாடினர்.

விடுதலை செய்யப்பட்ட 11 பேர் கடந்த 15 ஆண்டுகளாகவும், இவர்களில் சிலர் கடந்த 18 ஆண்டுகளாகவும் சிறையில் உள்ளனர்.

சிங்வாடா எப்படிப்பட்ட இடம்?

குஜராத்தின் சிங்வாடா கிராமம் சற்று பெரிதானது. ஆனால் நகரத்தை விடச் சிறியது. இங்கு பெரிய கடைகள் மற்றும் காவல் நிலையம் உள்ளது. பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கின் காரணமாக, இந்த கிராமம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு வகையான பிரபலம் அடைந்திருந்தது.

ஆகஸ்ட் 15 அன்று, பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நபரின் வீட்டிற்கு பிபிசி குழு சென்றடைந்தது.

இங்கு இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் படங்களை பார்த்தோம். இதற்குப் பிறகு நெற்றியில் சந்தனம் பூசிய ஒருவர், எந்த நிருபருடனும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பில்கிஸ் பானு

ஆனால், இதற்குப் பிறகு, ஊடக விசாரணையால் தான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறினார். அந்த நபரின் வீட்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் எம்எஸ் கோல்வால்கர் மற்றும் டாக்டர் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் படங்கள் இருந்தன. மேலும் ஆர்எஸ்எஸ் வரையறுத்த பாரத மாதா படமும் இருந்தது.

குறைந்தபட்சம் இரண்டு பேர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ராதேஷ்யாம் சாஹி அவர்களில் ஒருவர். சாஹியின் மனு மீது, பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைக்குமாறு மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்தியா டிவிக்கு பேட்டியளித்த சாஹி, அப்போதைய மத்திய அரசால், தான் தவறாகச் சிக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் தான் சிக்கிக் கொண்டதாகக் கூறினார்.

சாஹியும் சிங்வாடா கிராமத்தில் வசிப்பவர். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான கோவிந்த் ராவல், இந்துத்துவா அமைப்புடன் தொடர்புடையவர் என்பதால் தான் சிக்கியதாக கூறியுள்ளார்.

வைரலான வீடியோவில், தான் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் சாஹி கூறியுள்ளார்.

கிராமவாசிகளின் கருத்து

இந்தக் கிராமத்தில் வசிக்கும் பலரிடம் பிபிசி பேச முயன்றது. இவர்களில் பெரும்பாலோர், அவர்கள் செய்த செயல்களுக்குப் போதுமான தண்டனை கிடைத்ததாக நம்பினர். இப்போது அவர்களும் சிறையில் இருந்து வெளிவர உரிமை பெற்றுள்ளனர் என்றும் கருதினர்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு கடைக்காரர், கிராமத்தில் யாரும் இதுவரை பெறாத தண்டனையை இவர்கள் பெற்றுவிட்டனர் என்கிறார். அவர்களை மும்பையில் உள்ள சிறைக்கு அனுப்பியதால், அவர்களது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

2004 முதல் 2011 வரை மகாராஷ்டிராவில் உள்ள அமர்வுகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் கோபால் சிங் சோலங்கியிடம் பிபிசி பேசிய போது,

அவர்களை விடுவிப்பதில் தவறில்லை, அது அவர்களின் உரிமை என்றார்.

இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது சரியானதா என்று கேட்டபோது, இங்கு தண்டனை வழங்கும் முறை சரிவரக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது, இதன் கீழ் சிறையில் உள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை புதிய வழியில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்றார்.

பில்கிஸ் பானுவின் கருத்து என்ன?

 

பில்கில் பானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோபால் சிங் சோலங்கியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆமதாபாத்தின் மூத்த வழக்கறிஞர் சம்சாத் பதான், இவர்களின் விடுதலை குறித்து கவலை தெரிவிக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற கொடூரமான வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதில் தான் கவலை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தண்டனை முடிந்த பிறகும் பலர் விடுதலைக்காகக் காத்திருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவற்றுக்குச் செவிசாய்க்கப்படுவதில்லை என்றும் இதுமட்டுமின்றி, கடுமையான குற்றங்களுக்காகப் பலர் பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர் என்றும் கூறுகிறார்.

ஆனால், இந்த 11 பேரின் விடுதலை குறித்து பில்கிஸ் பானு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், தானும் தனது குடும்பத்தினரும் அச்சத்தின் நிழலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பில்கிஸ் பானு

"கடந்த 20 வருட வலி என்னை மீண்டும் ஒருமுறை உலுக்கி விட்டது. எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இன்னமும் நான் மரத்துப் போயிருக்கிறேன். இன்று ஒரு பெண்ணின் நீதியின் முடிவு இப்படித்தான் இருக்கிறது என்றுதான் என்னால் சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார். நான் என் நாட்டின் உச்ச நீதிமன்றங்களை நம்பியிருந்தேன். அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து மெல்ல மெல்ல என் துயரங்களுடன் வாழக் கற்றுக்கொண்டேன். இந்தக் குற்றவாளிகளின் விடுதலை என் அமைதியைப் பறித்துவிட்டது, நீதியின் மீதான நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டேன். இந்த வருத்தமும் நம்பிக்கையிழப்பும் எனக்கு மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் எழுகிறது."

மேலும் அவர், "இவ்வளவு பெரிய மற்றும் அநியாயமான முடிவை எடுப்பதற்கு முன் எனது பாதுகாப்பை யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. இந்த முடிவை திரும்பப் பெற குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அச்சமின்றி அமைதியாக வாழ விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். என் மற்றும் என் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல், எங்களுக்கு வீடு தருமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில அரசு இந்த உத்தரவை இன்னும் நிறைவேற்றவில்லை. இன்னும் நடைமுறைகள் முடிவடையும் வரை காத்திருக்கிறோம்.

தண்டனையும் விடுதலையும்

2002 குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து, ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர்களது தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷியாம் ஷா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியதால், நிவாரணம் குறித்த சிக்கலைக் கவனிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த கமிட்டி இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனையை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்து அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்தது.குஜராத்தின் மிகக் கொடூரமான குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் பிரபலமடைந்தது. https://www.bbc.com/tamil/india-62603542

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்கிஸ் பானு வழக்கில் நீதி வழங்கப்பட்டிருக்கிறதா? - ஓர் ஆழமான ஆய்வு

  • ராகவேந்திர ராவ்
  • பிபிசி நியூஸ், டெல்லி
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பில்கிஸ் பானு

"இந்த முடிவு சட்டத்தையே வன்புணர்வு செய்வது போன்றது"

"முறையாக அமல்படுத்தப்படாத சட்டம், அந்தச் சட்டத்தை ஏளனம் செய்யும் போலி வடிவம்"

"இந்த முடிவினால் மனம் பயன்படுத்தப்படவில்லை"

"இது ஒரு மனிதாபிமான விவகாரம். இதை நுட்பமாக மட்டுமே முடிவு செய்ய முடியாது"

 

"பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அபாயங்களை இந்த தீர்ப்பு உருவாக்கியுள்ளது"

இந்த வாசகங்களெல்லாம், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனை குறைக்கப்பட்டு, வெளியில் வந்த சம்பவம் குறித்து, இந்திய முன்னாள் நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள்.

கடந்த ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு விருந்து வைத்து இனிப்பு வழங்கியது போன்ற பல புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதையடுத்து நாடு முழுக்க இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு பதிவுகள் பரவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் வாத, பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன?

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் கொன்ற வழக்கில் இந்த 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றமும் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது. அவர்கள், கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், குஜராத் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட இந்த குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க ஒருமனதாக முடிவு செய்தது.

குஜராத் அரசின் தண்டனை குறைப்புக் கொள்கை, 1992இன் படி, எந்த வகை குற்றவாளிகளுக்கும் தண்டனையை குறைப்பதற்கு எந்த தடையும் இல்லை. அதன் அடிப்படையில் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த 1992 தண்டனைக் குறைப்புக் கொள்கையைப் பயன்படுத்தக் காரணம், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டபோது அந்தக் கொள்கைதான் நடைமுறையில் இருந்தது.

இருப்பினும், குஜராத் அரசு 2014 ஆம் ஆண்டில் ஒரு புதிய கொள்கையை உருவாக்கியது, இதில், பல பிரிவுகளின் குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பை தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த புதிய கொள்கையின்படி கொலை, பாலியல் வல்லுறவு வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை குறைக்க முடியாது. ஒருவேளை ஒருவழக்கை சிபிஐ விசாரித்திருந்தால், அந்த நபரின் தண்டனையை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு குறைக்க முடியாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.

எனில், பில்கிஸ் பானோ வழக்கில் 2014ஆம் ஆண்டின் கொள்கை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருந்தால், அவர்களின் தண்டனையை மாற்றியிருக்க முடியாது என்பது தெளிவாகிறது. எனவே, இந்த வழக்கில் 2014 ஆம் ஆண்டின் கொள்கைக்குப் பதிலாக 1992ஆம் ஆண்டின் தண்டனைக் குறைப்புக் கொள்கையை பயன்படுத்தியது முறையா என்று கேட்பது பொருத்தமானது.

 

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

 

படக்குறிப்பு,

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

குழுவில் இருந்தவர்கள் யார்?

இந்த குழுவின் சார்பற்ற தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த 11 பேரின் தண்டனைக் குறைப்புக் குழுவில் இருந்தவர்களில் இருவர் பாஜகவின் எம்எல்ஏக்கள், ஒரு உறுப்பினர் பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், மற்றொருவர் பாஜக மகளிர் அணி உறுப்பினர் எனத் தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, கோத்ரா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான சி.கே. ரவுல் ஜி, குற்றவாளிகள் குறித்து பேசியபோது, "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்கள் நல்ல கலாசாரம் கொண்டவர்கள். அவர்கள், 'தவறான நோக்கங்களால்' கூட தண்டனை பெற்றிருக்கலாம்" என்று கூறினார்.

தொடர்ந்து, தண்டனை குறைப்பு பற்றி பிபிசி குஜராத்தியின் தேஜஸ் வைத்யாவிடம் பேசிய சி.கே. ரவுல் ஜி, "முடிவெடுக்கும் குழுவில் இருந்த யாரும் இந்த முடிவில் வேறுபடவில்லை. 11 பேரின் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஒருமனதாகக் கருதினர்" என்றார்.

மேலும், "குற்றவாளிகள் அனைவரும் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த ஆதரவற்ற குற்றவாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அப்படியே அனுபவித்தனர். அதுபோக, அவர்கள் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை" என்றும் தெரிவித்தார்.

அப்படியானால், பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதா? ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலருடன் இதுகுறித்து பிபிசி பேசியது. அவர்களின் பார்வை இந்த முடிவின் மீது எப்படி இருக்கிறது?

'இது சட்டத்தையே வன்புணர்வு செய்வது போன்றது'

"இந்த விவகாரத்தில் தண்டனையைக் குறைக்கும் முடிவு என்பது சட்டத்தையே வன்புணர்வு செய்வது போன்றது" என்கிறார் ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பஷீர் அகமது.

அவரைப் பொறுத்தவரை இந்த முடிவு 'தீங்கானது, தவறானது, உள்நோக்கம் கொண்டது, ஒருசார்புடையது', அத்துடன் நீதியின் எல்லா அம்சங்களுக்கும் முரணானது.

நீதிபதி பஷீர் அகமது கூறுகையில், "இந்த முடிவு தவறான நோக்கத்துடன் எடுக்கப்பட்டது. ஒரே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு, அந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில் பணியாற்றிய அதிகாரிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவால் எடுக்கப்பட்ட, ஒருதலைப்பட்சமான முடிவு இது" என்கிறார்.

1992ஆம் ஆண்டின் கொள்கையின் அடிப்படையில் குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

"நீங்கள் ஒரு சட்ட விதியை பல வழிகளில் விளக்கலாம். குற்றம் நடந்தபோது நடைமுறையில் இருந்தது 1992ஆம் ஆண்டு கொள்கைதான் என்று ஒருவர் வாதிடலாம். மற்றொரு வாதம் என்னவென்றால், மன்னிப்புக்கான முடிவு அந்த முடிவு விவாதிக்கப்படும்போது, நடைமுறையில் இருக்கும் கொள்கையின் அடிப்படையில்தான் முடிவு இருக்க வேண்டும். ஆனால், என் பார்வையில், இது வெறும் நுட்பமான அறிவை மட்டும் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டிய வழக்கு அல்ல. இது ஒரு மனிதாபிமான விவகாரம். இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்களின் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களை எப்படி பாதுகாக்க முடியும் என்பதே கேள்வி" என்கிறார் நீதிபதி பஷீர் அகமது.

பாரபட்சமற்ற குழுவை குஜராத் அரசு அமைத்திருக்க வேண்டும் என்று நீதிபதி பஷீர் அகமது கூறுகிறார். "இது ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவு. இந்த முடிவு 1992 இன் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று யாராவது வாதிட்டால், என் பார்வையில் அது ஒரு அர்த்தமற்ற வாதம்தான்"

"நிர்பயா வழக்குக்குப் பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. எப்படியாயினும் 11 பேரையும் வெளியில் விட்டது சரியான முடிவு அல்ல. அத்துடன், இது மனித விழுமியங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் இல்லை"

"தண்டனையை மாற்றும் போது, அத்தகைய முடிவுகளால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க முடியுமா என்று குழு பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால், இந்த முடிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய் பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமான, தீங்கிழைக்கக்கூடிய பாரபட்சமான முடிவாகும். இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தையும் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.

 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

பில்கிஸ் பானு

நீதியை நிலைநாட்டும் விதமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்கிறார் நீதிபதி பஷீர் அகமது. "சட்டத்தை விட நீதி எப்போதும் வலிமையானது. நல்லெண்ணம் இன்னும் மீதமிருந்தால், மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த முடிவை ரத்து செய்யப்பட வேண்டும்,'' என்றார்.

எல்லா பாலியல் குற்றவாளிகளும் இனி மன்னிப்புக்கு தகுதி பெறுவார்களா?

"இந்த தண்டனையை மாற்றும் போது கருத்தில் கொள்ளப்பட்டது அம்சம் என்ன என்பதுதான் என் கேள்வி" என்றும் கேள்வி எழுப்புகிறார், டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, ஆர்.எஸ். சோதி.

அவர் தெரிவித்ததாவது: "ஒரு குற்றவாளி 14 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தால், அவர் தனது தண்டனையை மாற்றுவதற்கு விண்ணப்பிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், விடுவிக்கப்பட அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு தண்டனையை தன்னிச்சையாக மாற்றவே முடியாது."

"ஆனால் தற்போதைய இந்த முடிவின்படி, பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியுடையவர்களா? நீதி சரியாக வழங்கப்படாவிட்டால், அது கேலிக்கூத்தாக அமையும்" என்று முன்னாள் நீதிபதி சோதி தெரிவிக்கிறார்.

"இந்த விவகாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது" என்றும் நீதிபதி சோதி சுட்டிக்காட்டினார். மேலும் "இந்த முடிவு முற்றிலும் தன்னிச்சையானது என்பதுடன் 'மனம்' இதில் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் மனதைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளின் தண்டனையை குறைக்கக் கூடாது என்ற கொள்கையே இருக்கும்போது, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்" என்றும் தெரிவிக்கிறார் முன்னாள் நீதிபதி சோதி.

 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

 

படக்குறிப்பு,

பில்கிஸ் பானு

1992 அல்லது 2014: எந்தக் கொள்கையை கருத்தில் கொள்ள வேண்டும்?

குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பைக் கருத்தில் கொள்ளும்போது 1992 இன் கொள்கை அல்லது 2014 இன் கொள்கையில் எதை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது இந்த விவகாரத்தில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்ரா இது குறித்து பேசும்போது, "நடப்புக் கொள்கை எதுவோ அதுதான் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறுகிறார். அத்துடன், "நடப்பில் இருக்கும்கொள்கை எதுவென்று பார்க்க மாட்டார்களா?" என்றும் கேள்வி எழுப்புகிறார்.

"ஒரு தண்டனையை குறைக்கும் முடிவை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றால், 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, தற்போது ரத்து செய்யப்பட்ட கொள்கையின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நடப்பு கொள்கைதான் பொருந்தும் என்பதே என் கருத்து" என்கிறார் அவர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கிரிதர் மால்வியா, " சமீபத்திய கொள்கைகள் பின்பற்றப்படுவதும், பழைய கொள்கைகள் பயன்படுத்தப்படாது என்பதும்தான் நடைமுறை" என்கிறார்.

இந்த வழக்கில், ஒரு முடிவெடுக்கும்போது, அந்த சமயத்தில் என்ன கொள்கை நடைமுறையில் இருக்கிறதோ அதுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது, 2014ஆம் ஆண்டின் கொள்கைதான் பொருந்தும்" என்கிறார் கிரிதர் மால்வியா.

11 பேர் தரப்பு சொல்வது என்ன?

 

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

நிறுவப்பட்ட சட்டத்தின்படி, 1992ஆம் ஆண்டின் கொள்கையை பயன்படுத்துவது சரியானது.

11 குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா, தன் தண்டனையை குறைக்கும்படி உச்சநீதிமன்றத்தை அனுகினார். அவரது வழக்கறிஞர், ரிஷி மல்ஹோத்ராவுடன் பிபிசி பேசியது.

அவர் தெரிவித்ததாவது, " 2008ஆம் ஆண்டு இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபோது, 2014ஆம் ஆண்டின் கொள்கை உருவாக்கப்படவேயில்லை." அதேபோல, தண்டனை குறைப்பு குறித்த முடிவுகளின்போது, விசாரணை நீதிமன்றங்களில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட சமயத்தில் இருந்த கொள்கையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கலாம் என்று 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏராளமான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், குழுவின் உறுப்பினர்கள் குறித்த விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்தார். " இது ஒரு அர்த்தமற்ற விஷயம். சிறை ஆலோசனைக் குழுவில் ஒரு மாவட்ட மாஜிஸ்திரேட், ஒரு அமர்வு நீதிமன்ற நீதிபதி, மூன்று சமூக சேவகர்கள், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மற்றும் ஒரு சிறைக் கண்காணிப்பாளர் உட்பட 10 பேர் இருந்தனர். இந்த உறுப்பினர்கள் இணைந்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் இரண்டு கமிட்டி உறுப்பினர்கள் பா.ஜ.க.வின் உறுப்பினர்கள் என்று சொன்னால் மட்டும் போதாது, ஏனெனில் கமிட்டியில் நீதிபதிகளும் இருந்தனர். அவர்களது அறிவையும் நம்பகத் தன்மையை நாம் சந்தேகிக்கிறோமா?" என்றும் தெரிவித்தார் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா. https://www.bbc.com/tamil/india-62623506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக குஜராத், இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

16 ஆகஸ்ட் 2022
புதுப்பிக்கப்பட்டது 23 ஆகஸ்ட் 2022
 

Bilkis Banu

பட மூலாதாரம்,GETTY IMAGES

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது. இந்நிலையில், 11 பேரின் விடுதலையை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அபர்ணா பாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், விளக்கம் கேட்டு குஜராத், இந்திய அரசுக்கு இன்று நோட்டீஸ் அளித்துள்ளது.

 

Banner

என்ன நடந்தது?

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அத்துடன், அவரது குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் அரசு அமைத்த குழுவின் முடிவின் பேரில் தண்டனைக்குறைப்பு செய்து விடுவித்தது குஜராத் அரசு.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழு, "குஜராத் மற்றும் இந்திய அரசுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அளிக்கிறோம். இதில் இரு அரசுகளும் பதில் அளிக்க வேண்டும். மேலதிக விசாரணைக்காக 2 வாரங்கள் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது " என்று அறிவித்தது.

 

Banner

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி "இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து தான் கருத்தில் கொள்வதாக" தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்தது. கர்ப்பிணியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் நிவாரணம் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கக் கூடாது என, கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

 

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது.

குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

குற்றவாளிகள் 15 வருடங்கள் சிறையில் கழித்த பின், அதில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

அதன்பின் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை கேட்டுக் கொண்டது. பின் குஜராத் அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியது.

இந்த கமிட்டிக்கு பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயாட்ரா தலைமை தாங்கினார்.

குற்றவாளிகளும் 11 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயத்ரா, "சில மாதங்களுக்கு முன்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

பில்கிஸ் பானு வழக்கு?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது 20 வயதான பானு கர்ப்பமாக இருந்தார். பில்கிஸின் 3 வயது மகள், பில்கிஸ் பானுவின் கண்முனே கொல்லப்பட்டார்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று உயிர்ப்பிழைத்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையை சேர்ந்த சிலர் பில்கிஸ் பானுவை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர்.

 

பில்கிஸ் பானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். பில்கிஸ் பானுவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரியூட்டப்பட்டன.

இருப்பினும் பில்கிஸ் பானு தொடர்ந்து போராடினார். தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டார். இதுகுறித்த முதல் கைது கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானுவின் வழக்கு மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

குஜராத் நீதிமன்றம் நீதியை வழங்க இயலாது என்ற பில்கிஸ் பானுவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

17 ஆண்டுகால போராட்ட வாழ்க்கையில் பில்கிஸ் பானுவும் அவரின் கணவரும் தங்களது குழந்தைகளுடன் இதுவரை 10 வீடுகள் மாற வேண்டியிருந்தது.

2017ஆம் ஆண்டு பிபிசி செய்தியாளர் கீதா பாண்டேவிடம் பேசிய பில்கிஸ் பானு, "காவல்துறையும், அரசு நடைமுறைகளும் தாக்குல்தாரிகளின் பக்கமே இருந்தன. குஜராத்தில் நாங்கள் யாரிடமும் பேச முடியாது. எங்கள் விலாசத்தைக் கூட யாரிடமும் வழங்க முடியாது." என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62558832

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில் செய்த அடாவடித்தனம், கட்டாய ஹிந்தி திணிப்பு, இந்து மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை, மாநிலங்களிற்கான அதிகாரங்களை குறைத்தல்/தலையீடு, ஒரு குறிப்பிட்ட பணக்கார வர்க்கத்திடமே தொழில் முயற்சிகள் போய் சேரும் வகையில் நடத்தல்.. இப்படி பல செய்திகளை பார்க்க முடிகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் மோடி அரசும் கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியில் போவதாகவே தோன்றுகிறது.. 

சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக பிரிந்ததைப் போன்று இந்தியாவும் உடையும் நாள் விரைவில் வருமா? 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்கிஸ் பானு வழக்கு: கைதிகளின் முன்விடுதலைக்கு பாஜக அரசு கொடுத்த ஒப்புதல் - புதிய தகவல்

  • கீதா பாண்டே
  • பிபிசி நியூஸ், டெல்லி
18 அக்டோபர் 2022
 

பில்கிஸ் பானு

 

Presentational grey line

(எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம்பெறும் சில தகவல்கள் வாசகர்களுக்கு சங்கடத்தைத் தரலாம்)

 

Presentational grey line

கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொன்ற வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த சுதந்திர தினத்தன்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த விடுதலைக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த குற்றவாளிகள், கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது, பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தைத் தாக்கிய இந்து கும்பலைச் சேர்ந்தவர்கள்.

பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மற்றும் அவர்களுக்கு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம், உலக அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

 

பெண்களை மதிக்க வேண்டும் என்று பிரதமர் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இணையத்தில் வைரலான ஒரு காணொளியில் கோத்ரா சிறைக்கு வெளியே உறவினர்கள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதையும், கால்களைத் தொட்டுக் கும்பிடுவதையும் பார்க்க முடிந்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

சிறையில் 14 ஆண்டுகள் கழித்தது, வயது மற்றும் சிறை நன்னடத்தை உட்பட பலவற்றைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய அவர்களது கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்ததாக அந்த நேரத்தில் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், கடந்த திங்களன்று குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், இதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டதாகவும், அந்த ஒப்புதலை அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் ஜூன் மாதம் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அவர்கள் விடுதலை செய்யப்பட்ட சில தினங்கள் கழித்து அறிக்கை வெளியிட்ட பில்கிஸ் பானு, இந்த முடிவு அநியாயமானது என்றும் நீதித்துறை மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாகவும் கூறினார்.

"என் குடும்பத்தையும், வாழ்க்கையையும் நாசமாக்கியவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போதும் உணர்ச்சியற்று இருக்கிறேன்" என்றார் பில்கிஸ் பானு.

"ஒரு பெண்ணுக்கான நீதி எப்படி இவ்வாறு முடிவடையலாம். நம் நாட்டில் இருக்கும் உயர்ந்த நீதிமன்றங்களையும் இந்த அமைப்பையும் நான் நம்பினேன். எனக்கு இழைக்கப்பட்ட அநீதியுடன் வாழ மெதுவாக பழகிக்கொண்டேன். குற்றவாளிகளின் இந்த விடுதலை என்னுடைய அமைதியையும், நீதித்துறை மீதான நம்பிக்கையையும் பறித்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ள அவர், அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள் என குஜராத் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்குற்றத்தில் ஈடுபடும் நபர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்ற மாநில மற்றும் மத்திய அரசின் விதிகளுக்கு எதிராக இந்த விடுதலை இருப்பதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக, இந்தியாவில் இத்தகைய குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

பில்கிஸ் பானு குடும்பத்துக்கு பின்னடைவு

மாநில அரசின் இந்த முடிவு பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது.

நீதிக்கான அவர்களது நீண்டகால போராட்டத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டால், அந்தக் குடும்பத்தின் கோபத்தையும் விரக்தியையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

 

கோத்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதல் கலவரத்தின் போது நடந்த மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகும். கோத்ரா நகரில் பயணிகள் ரயிலில் இருந்த 60 இந்து யாத்ரீகர்கள் தீயில் கருகி உயிரிழந்ததை அடுத்து, இந்தக் கலவரம் வெடித்தது.

தீ வைப்பு சம்பவத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, இந்து கும்பல்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் நடந்த இந்த கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில், பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

இந்தப் படுகொலையைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதி மீது விமர்சனம் எழுந்தது. இத்தகைய குற்றச்செயல்களை எப்போதும் எதிர்க்கும் அவர், இந்தக் கலவரத்திற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த கலவரம் தொடர்பாக நரேந்திர மோதி மீது வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லையென கடந்த 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அவரது பார்வையிலேயே இந்தக் கலவரம் நடந்ததாக விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்ட பலர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், சில உயர்மட்ட குற்றவாளிகள் ஜாமீன் பெற்றனர் அல்லது உயர்நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.

இதில் விசாரணை நீதிமன்றத்தால் 'கலவரங்களின் அரசன்' என்று குறிப்பிடப்பட்ட முன்னாள் அமைச்சரும், மோதியின் உதவியாளருமான மாயா கோட்னானியும் அடங்குவார்.

தற்போது பில்கிஸ் பானுவிடம் தவறாக நடந்துகொண்டவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பில்கிஸ் பானுவின் வழக்கில் 11 பேரின் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த சில நாட்களுக்குப் பிறகு, டெல்லியில் அவரை நான் சந்தித்தேன்.

அந்தத் தாக்குதலின் கொடூரங்களைப் பில்கிஸ் பானு கண்ணீருடன் விவரித்தார்.

 

கோத்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது பில்கிஸ் பானுவிற்கு 19 வயது. இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த அவர், தனது மூன்று வயது மகளுடன் கோத்ராவிற்கு அருகேயுள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் தனது பெற்றோரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்.

"நான் சமையலறையில் மதிய உணவு செய்துகொண்டிருந்தேன். என்னுடைய அத்தையும் அவருடைய குழந்தையும் ஓடிவந்து அவர்களுடைய வீட்டுற்குத் தீ வைக்கப்பட்டதாகவும், நாம் இங்கிருந்து உடனடியாகக் கிளம்ப வேண்டும் என்றனர். நாங்கள் உடுத்தியிருந்த உடையுடன் கிளம்பினோம். எங்களுக்கு செருப்பு அணியக்கூட நேரமில்லை" என பில்கிஸ் பானு என்னிடம் தெரிவித்தார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பில்கிஸ் பானு அவரது மகள், தாய், ஒரு கர்ப்பிணி உறவினர், இளைய உடன்பிறப்புகள், இரண்டு வயது வந்த ஆண்கள் உட்பட 17 முஸ்லிம்கள் இருந்த குழுவில் இருந்தனர்.

அடுத்த சில நாட்களுக்கு, பள்ளிவாசல்களில் அடைக்கலம் தேடி அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்றனர்.

மார்ச் 3ஆம் தேதி காலை தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பிய ஒரு கிராமத்திற்கு அவர்கள் செல்ல தயாராக இருந்தபோது, ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது.

"அவர்கள் எங்களை வாள் மற்றும் தடிகளால் தாக்கினார்கள். அதில் ஒருவர் எனது மகளை என் மடியில் இருந்து பறித்து தரையில் வீசினார். பின் அவள் தலையை ஒரு பாறையில் மோதச் செய்தார்" என்றார் பில்கிஸ் பானு.

அவரைத் தாக்கியவர்கள் அவருடைய வீட்டின் அருகே வசிப்பவர்கள். அவர்களை தினமும் அவர் பார்த்திருக்கிறார். பில்கிஸ் பானுவின் உடையை அவர்கள் கிழித்துள்ளனர். பின்னர், அதில் சிலர் அவரைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தன்னை விட்டுவிடும்படி அவர் கெஞ்சியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

அவர்கள் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த சமயத்தில் அதில் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண்ணையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்தனர். மேலும், பிறந்து இரண்டு நாட்களேயான அவரது குழந்தையும் கொல்லப்பட்டது.

அந்தத் தாக்குதலின்போது பில்கிஸ் பானு மயக்கமடைந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அந்தக் கும்பல் கிளம்பிவிட்டது. அவரைத் தவிர்த்து, இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு சிறுவர்கள் மட்டுமே அந்தத் தாக்குதலில் உயிர்பிழைத்தனர்.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பில்கிஸ் பானுவின் நீதிக்கான போராட்டம் மிக நீண்டது மற்றும் கொடுங்கனவுகள் நிறைந்தது. சில காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அவரை மிரட்ட முயன்றுள்ளனர், சாட்சியங்கள் அழிக்கப்பட்டன, இறந்தவர்கள் பிரேத பரிசோதனையின்றி புதைக்கப்பட்டனர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்துள்ளன.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகே, முதல் கைது 2004ஆம் ஆண்டு நடந்தது. மேலும், பில்கிஸ் பானுவிற்கு குஜராத் நீதிமன்றம் நீதி வழங்கவில்லை என்று கூறி இந்த வழக்கை மும்பைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிக்கான அவரது போராட்டம் அவருடைய குடும்பத்திற்கும் இடையூறாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் பலமுறை வீடு மாற வேண்டியிருந்தது.

"எங்களால் இன்னும் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் எங்களுக்கு பயமாக உள்ளது. காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகள் எங்களைத் தாக்கியவர்களுக்கு எப்போதும் உதவியுள்ளனர். நாங்கள் குஜராத்தில் இருந்தால் எங்களுடைய முகத்தை மூடியிருப்போம். எங்களுடைய வீட்டு முகவரியையும் வெளியே கொடுக்கமாட்டோம்" என்று பில்கிஸ் பானுவின் கணவர் என்னிடம் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, பில்கிஸ் பானுவைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் உட்பட பலரும் முன்வைத்தனர்.

ஆனால், மும்பை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தபோது, தனக்கு பழிவாங்குவதில் விருப்பமில்லை என்றும், தாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால் போதும் என்றும் பில்கிஸ் பானு என்னிடம் தெரிவித்தார்.

"சிறு குழந்தைகளை எப்படிக் கொன்றார்கள், பெண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.

ஆனால், அந்தக் குற்றவாளிகள் மீதமுள்ள வாழ்நாட்களை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.

அவர்கள் விடுதலையான பிறகு, தன்னுடைய மனைவி கலக்கத்திலும் மனச்சோர்விலும் இருப்பதாக பில்கிஸ் பானுவின் கணவர் ரசூல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.

"எங்களுடைய இத்தனை வருடப் போராட்டம் ஒரே தருணத்தில் முடிவுக்கு வந்துவிட்டது" என்றும் ரசூல் கூறினார்.

"இந்தச் செய்தி குறித்து யோசிக்க எங்களுக்கு நேரமில்லை. அந்தக் குற்றவாளிகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-63304971

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.