Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

30 அக்டோபர் 2022, 15:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
 

பாலம்

 

लाल लाइन

  • குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
  • சுமார் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாலம், பழுது நீக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
 

लाल लाइन

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது.

 

மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "இந்த சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்" என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இருள் சூழ்ந்ததால் தண்ணீரில் சிக்கியவர்களைக் காப்பாற்ற பார்வையாளர்கள் முயற்சிக்கும் போது காட்சிகளை வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்முவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மீட்புப் பணிகளில் உதவ அண்டை மாவட்டங்களில் இருந்து அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால், மூன்று குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காந்திநகரில் இருந்து இரண்டு குழுவும், பரோடாவில் இருந்து ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

குஜராத் பாலம்

ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் பூபேந்திர படேல் "மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்தது வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு 5 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது

தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்றுதான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது.மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த ஊஞ்சல் பாலம் நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோர்பிக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது.மோர்பி நகரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், இந்த பாலம் பொறியியலின் அதிசயம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

 

குஜராத்

இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது.இந்த விபத்து குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், "மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு 150 பேர் கூடியிருந்தனர்." என்றார்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் 15 நிமிடங்களில் அங்கு வந்தனர். இதனுடன், கலெக்டர், மாவட்ட எஸ்பி, டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அங்கு வந்தனர். தாமும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-63448644

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் சுமார்  40 பேர் உயிரிழப்பு : பலர் மாயம்

30 OCT, 2022 | 09:46 PM
image

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்குபாலம் ஒன்று அறுந்து வீழ்ந்தால் நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் வீழ்ந்தனர்.

இவர்களில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த சுமார் நூற்றாண்டு பழமையான தொங்கு பாலமே இவ்வாறு அறுந்துள்ளது.

பூஜையொன்றில் கலந்துகொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுகொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலம் அறுந்ததால் நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் வீழ்ந்தனர். குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/138742

  • கருத்துக்கள உறவுகள்

அதுபாட்டுக்கு சிவனே என்று தொங்கிக்கொண்டு கிடந்த பாலத்தை எதுக்காக திருத்தப் போனவர்கள்......சும்மா பறவைகள் வந்தமர்கின்ற விமான நிலைய கூரையையே திடமாக அமைக்கத் தெரியாதவர்கள்......மக்கள் போக்குவரத்து செய்யும் பாலத்தை திருத்த வந்தது எவ்வளவு பெரிய அறிவீனம்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வல்லரச..அதிலும் பிரதம மந்திரியின் சொந்த மானிலத்தில..

😏

  • கருத்துக்கள உறவுகள்

சூடாக.. சுவையான.. ருசியாக உடன் வடை கிடைக்குமிடம்...👍

DiEFV5MU0AAvp8C.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை திரண்டிருந்தனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த பாலத்தில் அதிகளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக திடீரென அந்த தொங்குப் பாலம் அறுந்து விழுந்துள்ளது.

குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.

இதனையடுத்து, இது குறித்து அறிந்த உள்ளுர் மக்கள் மற்றும் பொலிஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 132ஆக பதிவாகியுள்ளதாகவும் 177 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என கூறப்படுகிறது.

மீட்புப்பணிகளில் தொடர்ச்சியாக முப்படைகள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையை மேற்கொண்டார்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது.

அரசின் டெண்டரைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது. பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா 4 இலட்சம் ரூபாயும் மத்திய அரசு தலா 2 இலட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து குஜராத்தில் இன்று பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி இரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1307865

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்து விபத்து – ரணில் இரங்கல்

குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்து விபத்து – ரணில் இரங்கல்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தின் மோர்பி பகுதியில் நேற்று (30) பிற்பகல் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1307872

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – வெளிவிவகார அமைச்சர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் !

குஜராத்தில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 91 பேர் உயிரிழந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மற்றவர்களை மீட்கும் பணிகள் வெற்றியடையும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் 100 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் மூழ்கினர்.

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் இருந்து தப்பியவர்கள் தொங்கிக்கொண்டிருப்பதை சமூக வலைதள வீடியோக்களில் காணமுடிகின்றது.

உள்ளூரில் ஜுல்டோ குளம் என்று அழைக்கப்படும் குறித்த பகுதி பிரபலமான சுற்றுலாத்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1307914

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: '15 சடலங்களை நான் மட்டுமே வெளியே எடுத்தேன்'

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து:

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றில் கட்டப்பட்ட பாலம் உடைந்தது இதுவரை 141 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

6 மாதங்களாக மூடப்பட்டு, பழுது பார்க்கப்பட்ட பாலம் அக்டோபர் 28ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

பண்டிகை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

மீட்புப் பணியில் ராணுவமும் ஈடுபட்டுள்ளது, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் களத்தில் உள்ளன.

 

நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இடிந்து விழுந்த பாலத்தில் 400க்கும் மேற்பட்டோர் இருந்திருக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

நள்ளிரவு வரை பலரை காணவில்லை. அவர்களின் குடும்பத்தினர் காணாமல் போன உறவுகளைத் தேடி வந்தனர்.

 

குஜராத் பாலம் இடிந்து விபத்து:

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆற்றில் இருந்த தடுப்பணை உடைந்தது

மச்சு ஆற்றில் தண்ணீர் தேங்க சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலத்தின் அருகே கட்டப்பட்ட இதேபோன்ற தடுப்பணை நள்ளிரவில் உடைந்தால் அங்கு நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

பிபிசிக்காக செய்திகளை வழங்கும் செய்தியாளர் ராகேஷ் அம்பாலியா, "பாலம் உடைந்த இடத்தில் வழக்கமாக 20 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும். திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணிக்குப் பிறகும், இங்கு மூழ்கியவர்களை டைவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்," என்று கூறினார்.

உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மோகன் குந்தாரியா இது குறித்து கூறுகையில், "தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னரே இன்னும் எத்தனை பேர் நீரில் மூழ்கியுள்ளனர் என்பது தெரியவரும். ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் செளராஷ்டிராவின் பிற மாவட்டங்களிலிருந்தும் குழுக்கள் இங்கு வந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன," என்று தெரிவித்தார்.

"எங்கும் அலறல் ஒலித்தது"

 

பாலம் இடிந்து விபத்து

பட மூலாதாரம்,RAJESH AMBALIYA

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் நடந்தது. செய்தியாளர் ராகேஷ் அம்பாலியா மாலை 6.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

களத்தில் இருந்து அவர் வழங்கிய தகவலின்படி, விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அவசர ஊர்தி வாகனங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்கும் பணியில் ஏராளமான அப்பகுதி மக்களும் ஈடுபட்டனர்.

"நான் அந்த இடத்தை அடைந்தபோது சுற்றிலும் அலறல் ஒலித்தபடி இருந்தது. அது மிகவும் அச்சுறுத்தும் காட்சியாக இருந்தது. சிலர் பாலத்தின் இடுபாடுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர், சிலர் பாலத்தின் நீரில் மூழ்கிய பகுதியில் ஏறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். பலர் நீரில் மூழ்கினர். தங்களை மீட்கக் கோரி அவர்கள் அலறிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் இருந்து தப்பி வந்த ஒருவர், நான் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன், பலர் சிக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்றுங்கள் என்றார்," என்று கூறினார்.

விபத்து நடந்த உடனேயே, உள்ளூரிலும் அருகேயும் இருந்த அனைத்து அவசர ஊர்தி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. மோர்பி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தன என்கிறார் ராகேஷ் அம்பாலியா.

 

பாதிக்கப்பட்டவர்

"நான் பிழைத்துவிட்டேன் ஆனால் என் தங்கையை காணவில்லை"

பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானபோது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் தனது 6 வயது தங்கையை காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய அவர், "நாங்கள் பாலத்தின் மீது நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது பாலத்தின் மீது நூற்றுக்கணக்கானோர் இருந்தனர்.. நான் இங்கு முதன்முறையாக வந்தேன். நானும் எனது தங்கையும் எங்களின் அலைப்பேசியில் புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்தோம். அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

நானும் எனது தங்கையும் நீரில் விழுந்துவிட்டோம். நான் பிழைத்து கொண்டேன் ஆனால் எனது தங்கையை காணவில்லை." என்றார்.

மேலும் அழுது கொண்டே பேசிய அவர், "நேற்று மாலையிலிருந்து அவளை தேடி கொண்டிருக்கிறேன்.

அரசு மருத்துவமனைக்கு சென்றேன். எல்லா இடத்திலும் தேடினேன் ஆனால் அவளை காணவில்லை" என்றார்.

'நான் பதினைந்து சடலங்களை கயிறு கட்டி வெளியே எடுத்தேன்'

 

ரமேஷ் பாய்

பட மூலாதாரம்,ANI

விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்களும் ஓடி வந்து உதவி செய்தனர். பாலம் உடைந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரமேஷ் பாய் ஜில்லாரியா வசித்து வருகிறார்.

பிபிசிக்காக செய்தி வழங்கும் ராகேஷ் அம்பாலியாவிடம் ரமேஷ் பாய் கூறுகையில், "நான் சம்பவ பகுதிக்கு அருகேதான் வசிக்கிறேன், மாலை ஆறு மணியளவில் விபத்து பற்றி அறிந்தேன், உடனடியாக கயிறை எடுத்துக் கொண்டு உதவி செய்ய ஓடினேன். கண்ணில் பட்ட சடலங்களை எல்லாம் கயிறு கட்டி வெளியே எடுக்க முடிந்தது. இப்படியாக 15 சடலங்களை வெளியே எடுத்தேன்," என்றார்.

சம்பவத்துக்குப் பின்பு நடந்த சூழலை விவரித்த அவர், "நான் வந்தபோது, உடைந்த பாலத்தில் ஐம்பது அறுபது பேர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். சூழலை புரிந்துகொண்டு உடனே தொங்கியபடி கிடந்தவர்களை மேலே ஏறி வர உதவினோம்" என்கிறார்.

"அதன்பிறகு, நாங்கள் பார்த்தவை உடல்களைத்தான். நாங்கள் அவற்றை வெளியே எடுக்கச் சென்றோம், அந்த உடல்களில் மூன்று சிறிய குழந்தைகளும் இருந்தனர்."

இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியான சுபாஷ் பாய் கூறும்போது, "வேலை முடிந்ததும் நானும் எனது நண்பரும் பாலத்தின் அருகே அமர்ந்திருந்தோம். பாலம் உடையும் சத்தம் பலமாக கேட்டதால் அந்தப் பக்கமாக ஓடிப்போய் முடிந்தவரை மக்களைக் காப்பாற்றத் தொடங்கினோம்.

காணொளிக் குறிப்பு,

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

"சிலர் நீந்தி வெளியே வந்து கொண்டிருந்தனர்.சிலர் நீரில் மூழ்கினர்.முதலில் குழந்தைகளை வெளியேற்ற ஆரம்பித்தோம்.அதன் பின் பைப்பை எடுத்து பைப்பின் உதவியால் பெரியவர்களை காப்பாற்ற முயன்றோம்.எட்டு ஒன்பது பேருக்கு தண்ணீர் கொடுத்தோம். இரண்டு உடல்களை வெளியே எடுத்தோம்," என்று சுபாஷ் பாய் தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பாலம்

'மச்சு நதி' மோர்பி நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம், நகரின் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கிறது. மேலும் இது நகரின் பிரபல சுற்றுலா மையமாக உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலம் பழுது பார்க்கப்பட்டது. குஜராத்தி புத்தாண்டின் போது தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 28ஆம் தேதி இந்த பாலம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர் ராகேஷ் அம்பாலியா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால், சாதாரண நாட்களை விட இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் தான் பாலம் வலுவிழந்து ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி இறக்க நேரிட்டது என்றார்.

இது தவிர, பள்ளி விடுமுறை காரணமாக ஏராளமான குழந்தைகளும் பாலத்தில் இருந்ததாகக் கூறுகிறார் அம்பாலியா,

"இந்த பாலம் மோர்பியின் அடையாளம், எனவே பல மாதங்களாக மூடப்பட்ட பிறகு அது மீண்டும் திறக்கப்பட்டபோது, ஏராளமான மக்கள் அதைப் பார்க்க வந்தனர். பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்." என்றார்.

தகுதிச்சான்றிதழே இல்லை

செய்தி நிறுவனமான பிடிஐ, "மோர்பி நகராட்சி இன்னும் பாலத்துக்கு தகுதிச் சான்றிதழை கூட வழங்கவில்லை," என்று கூறியுள்ளது.

மோர்பி நகராட்சியின் முதன்மை செயல் அதிகாரி சந்தீப் சிங் ஜாலா, "இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓரேவா நிறுவனத்திற்கு பாலத்தை பழுதுபார்க்கும் பணியும் அதை பராமரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. பழுதுபார்ப்பதற்காக பாலம் மூடப்பட்டது. அந்தப் பணி முடிந்த பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் பழுது நீக்கிய பிறகும் நகராட்சி அதற்கு தகுதிச் சான்றிதழை வழங்கவில்லை," என்று கூறினார்.

இந்த பாலம் 19 ஆம் நூற்றாண்டு கால கட்டுமானம் ஆகும். மோர்பி அரச குடும்பத்தின் இரண்டு அரண்மனைகளான தர்பார்கர் மஹால், நசர்பாக் மஹால் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இது கட்டப்பட்டது.

1.25 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம், 233 மீட்டர் நீளம் கொண்டது.மாவட்ட நிர்வாக இணையதள தகவலின்படி, இந்த பாலம் அன்றைய ஐரோப்பாவில் நிலவிய அப்போதைய சமீபத்திய தொழில்நுட்ப அடிப்படையில் கட்டப்பட்டது. மோர்பியின் ஆட்சியாளர்களின் அறிவியல் மற்றும் முற்போக்கான அணுகுமுறையை அது காண்பிப்பதாக இருந்தது.

மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

இதற்கிடையே, பாலம் இடிந்து விழுந்ததில் மோர்பியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தொலைபேசி உதவி எண்ணை மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை வெளியிட்டிருக்கிறது.

02822 243300 என்ற இந்த எண்ணில் இன்னும் யாராவது குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேசியதாக பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-63452549

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் கட்டின பாலம் பிரச்சனை இல்லாமல் இருந்தது. அதை இந்தியன் பழுதுபார்த்தவுடன் அறுந்து தொங்குகிறது. 😱

அன்மையில் அருணாச்சல் பிரதேசத்தில் புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. 🥶

கொமிசன் வேண்டிய அரசியல்வாதிகள் தப்பிவிடுவினம். பாலத்தில் திருத்த வேலை செய்த பல பொறியியளாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக இனிமேல்  செய்திகள் வெளிவரும். 

Make in India

☹️

  • கருத்துக்கள உறவுகள்

 

குரங்குக் கூட்டம் பாலத்தை ஆட்டி அறுந்து விழ வைத்திருக்கிறார்கள். 

பாலங்களின் மீது படையினர் நடந்து செல்லும்போது அணிநடையினைத் தவிர்ப்பது அணிநடை அதிர்வினால் பாலங்களுக்குச் சேதம் ஏற்படக்கூடாது என்பதனாற்தான். 

😡

  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தை... தகுதி  சான்றிதழ்  பெறாமல் திறந்திருக்கிறார்கள்.

பாலத்தை பராமரிக்க...  கொடுத்த நிறுவனம் அனுபவம் இல்லாதது. 
அது  மணிக்கூடு  தயாரிக்கும் நிறுவனமாம்.

பா.ஜ. க. எம்.பி. ஒருவரின்... 12 உறவினர்கள் இதில் இறந்து இருக்கிறார்கள்.

1929´ம் ஆண்டில் அந்த ஆற்றின் ஆணை உடைந்த போது 1200 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.

விசாரணைக்கு குழு அமைத்திருக்கிறார்கள். 
அதன் அர்த்தம், அரசியல்வாதிகள்  எல்லோரும் தப்பி விட்டார்கள்.

காணொளியில் மேலும் பல தவறுகளை சுட்டிக் காட்டுகிறார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

பாலத்தை... தகுதி  சான்றிதழ்  பெறாமல் திறந்திருக்கிறார்கள்.

பாலத்தை பராமரிக்க...  கொடுத்த நிறுவனம் அனுபவம் இல்லாதது. 
அது  மணிக்கூடு  தயாரிக்கும் நிறுவனமாம்.

இலங்கை இந்தியாவில் கட்டடங்கள் பாலங்கள் எந்த வேலை என்றாலும் கமிசன் கமிசன் கமிசன் எல்லோருக்கும் கமிசன் கொடுத்து மிகுதி    பணத்தில் சீமெந்துக்கு பதிலாக  மண்ணில் தான் கட்டி முடிக்க முடியும்.

தேர்தலின் போது சொத்து விபரம் அறிவிக்க வேண்டும் என்கிறார்கள்.

அதே 5 வருடத்தின் பின் கோடீஸ்வரனாகிறான்.இதைப் பற்றி கதைக்க ஆளே இல்லை.

அப்படி யாரும் கதைத்தா காணாமல் போவார்கள்.அல்லது ஏதாவது விபத்தில் சிக்கி இறந்துவிடுவார்கள்.

48 minutes ago, Kapithan said:

குரங்குக் கூட்டம் பாலத்தை ஆட்டி அறுந்து விழ வைத்திருக்கிறார்கள். 

என்னது ஆட்டினால் பாலம் அறுந்து விழுமா?

ரொம்ப சிரிப்பூட்டுறீங்க போங்க.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

கொமிசன் வேண்டிய அரசியல்வாதிகள் தப்பிவிடுவினம். பாலத்தில் திருத்த வேலை செய்த பல பொறியியளாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக இனிமேல்  செய்திகள் வெளிவரும். 

கமிசன் கமிசன் கமிசன்

இதைச் சொல்லுங்க ஒத்துக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

என்னது ஆட்டினால் பாலம் அறுந்து விழுமா?

ரொம்ப சிரிப்பூட்டுறீங்க போங்க.

ஆம். 

பாலங்களில் அல்லது கட்டடத் தூண்களில் பாரம்/அழுத்தம் சீராக எல்லா தாங்கி/தூண்களின் ஊடாக நிலத்திற்குக் கடத்தப்படும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பாரம்/அழுத்தம் சீரற்று, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கொடுக்கப்படும்போது, அந்தப் புள்ளியின்(தூண்....) தாங்குதிறன் நிலைகுலைந்து பலவீனமடைகிறது. அதனால் அது  தனது செயற்றிறனை இழக்கிறது. 

 இத்துறையில் தேர்வு பெற்றவர்கள் இதனைச் சிறப்பாக விளக்குவர். 
 

https://www.britannica.com/topic/Tacoma-Narrows-Bridge

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

125 பேரை தாங்க கூடிய தொங்குபாலத்தில் 500 பேர் நின்று அதில் சிலர் ஆடினால்  🤔

10 போர் சேல்ல கூடிய லிப்டில் 40 பேர் போனால்..

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் மோர்பி விபத்து: பாரம் அதிகமானது தளத்திலா கேபிளிலா? விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

குஜராத் பாலம் விபத்து

பட மூலாதாரம்,ANI

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகரின் அடையாளம் என்று அழைக்கப்படும் இந்தத் தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் நிறைந்த இந்தப் பாலம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் உள்ளூர் மக்களிடையே ஒரு கவர்ச்சியான சுற்றுலா தலமாக இருந்தது. இதனைக் காணச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.

இந்த வழக்கில், அரசு தரப்பு நீதிமன்றத்தில், தடயவியல் அறிக்கையை மேற்கோள் காட்டி, பாலத்தின் தளம் மாற்றப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு ஆதாரமான கேபிள்கள் மாற்றப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

 

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் வரும் சனிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் ஓரேவா நிறுவனத்தின் இரண்டு மேலாளர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள் அடங்குவர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 5 பேரையும் நீதிமன்றக் காவலுக்குத் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் எம்.ஜே.கான் அனுப்பி வைத்துள்ளதாக அரசு வழக்கறிஞர் எச்.எஸ்.பஞ்சால் தெரிவித்தார். இவர்களில் டிக்கெட் புக்கிங் கிளார்க்குகள் மற்றும் பாதுகாவலர்களும் அடங்குவர்.

ஒரேவாவின் மேலாளர்கள் தீபக் பரேக் மற்றும் தினேஷ் தவே, ஒப்பந்ததாரர்கள் பிரகாஷ் பர்மர் மற்றும் தேவங் பர்மர் ஆகிய நான்கு பேர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசு தரப்பு வக்கீலின் வாதம்

தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை அரசு வழக்கறிஞர் பஞ்சால், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தடயவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பாலம் புதிய தளத்தின் எடையைத் தாங்க முடியாமல் அதன் கேபிள்கள் உடைந்ததாக அவர் கூறினார்.

 

குஜராத் பாலம் விபத்து

பட மூலாதாரம்,ANI

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சால், "தடவியல் அறிக்கையை மூடிய உறையில் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்த போதிலும், பாலத்தின் கேபிள்கள் மாற்றப்படவில்லை. தரைத்தளம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்று ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டுள்ளது" என்கிறார்.

"தளம் நான்கு அடுக்கு அலுமினியத் தகடுகளால் ஆனது. அதன் எடை மிகவும் அதிகரித்து, பாலத்தை தாங்கியிருந்த கேபிள் அதன் எடையைத் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது."

மராமத்து பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் அதைச் செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த விவரம்

மோர்பியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொங்கு பாலத்தின் பழுது மற்றும் பராமரிப்பு, மோர்பியின் தொழில்துறை நிறுவனமான ஓரேவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு அஜந்தா பிராண்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது. இது தவிர, பல்புகள், விளக்குகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிக்கிறது.

 

குஜராத் பாலம் விபத்து

பட மூலாதாரம்,ANI

இந்தக் குழுவிற்கும் மோர்பி நகராட்சிக்கும் இடையே ரூ.300 முத்திரைத் தாளில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த நான்கு பக்க ஒப்பந்தத்தில் டிக்கெட் கட்டண விவரங்கள், பாலத்தின் பராமரிப்பு விதிமுறைகள் குறித்துத் தெளிவாக இல்லை. இந்த ஒப்பந்தத்தின் நகல் பிபிசியிடம் உள்ளது.

ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பினரும் "ஓ&எம் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு), பாதுகாப்பு, தூய்மை, பராமரிப்பு, கட்டண வசூல், பணியாளர்கள் ஆகிய அம்சங்களை நிர்வகிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்."

ஒப்பந்தத்தில், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி, ஒரேவா குழு மூலம் பாலத்திற்கான நுழைவுக் கட்டணம், 2027-28ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு எவ்வளவு உயர்த்தப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 15 ரூபாயாக உள்ள டிக்கெட் கட்டணம் 2027-28ம் ஆண்டுக்குள் 25 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. 2027-28ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் நுழைவு கட்டணம் இரண்டு ரூபாய் அதிகரிக்கும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

குஜராத் பாலம் விபத்து

பட மூலாதாரம்,ANI

இந்த டிக்கெட் கட்டணம் குறித்த விவரம் உட்பட ஒப்பந்தத்தில் மொத்தம் ஒன்பது அம்சங்கள் உள்ளன. இருப்பினும், வேறு எந்த அம்சமும் விரிவாக விளக்கப்படவில்லை அல்லது எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

தொங்கு பாலம் என்றால் என்ன?

கேபிள் கம்பிகளில் தொங்கும் இத்தகைய பாலங்கள் ஸ்விங் பாலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பொறியியல் மொழியில், அவை தொங்கு பாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இத்தகைய பாலங்கள் கீழே எந்தத் தளத்தையும் ஆதாரமாகக் கொள்ளாமல், கேபிள்களின் உதவியுடன் இருபுறமும் வலுவான தளத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

"இந்த வகை கேபிள் பாலத்தில், இருபுறமும் இரண்டு வலுவான ஆதரவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சிமென்ட், இரும்பு அல்லது மரத்தால் ஆன உயரமான தூண்கள். இந்த வலுவான ஆதாரத்தில் கேபிள்கள் கட்டப்பட்டுள்ளன" என்று ராஜ்கோட்டின் கட்டமைப்பு பொறியாளர் ஜெயந்த்பாய் லக்லானி விளக்குகிறார்.

 

குஜராத் பாலம் விபத்து

பட மூலாதாரம்,ANI

ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் சுரேஷ் சங்வி, "தொங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கேபிள் அல்லது கயிற்றின் சுமந்து செல்லும் திறனும் சோதிக்கப்படுகிறது.

அத்தகைய கட்டுமானத்தின் தரம் ஒவ்வொரு கட்டத்திலும் சரிபார்க்கப்படுகிறது." என்கிறார். முழு கட்டுமானமும் இந்திய தரநிலைகளின் பணியகத்தின்படியே முடிக்கப்பட்டுள்ளது என்று ஜெயந்த்பாய் லக்லானி தெரிவிக்கிறார்.

அதிக அளவிலான மக்கள் செல்லக்கூடிய மற்றும் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை நிர்மாணிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

ரிஷிகேஷின் லக்ஷ்மண் ஜூலா மற்றும் ராம்ஜுலா பாலங்கள் பிரபலமான தொங்கு பாலங்களாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பவன் சிங் அதுல்

https://www.bbc.com/tamil/india-63481565

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.