Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன்

spacer.png

 

கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார்.

நாய்களில் மோதிப் படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமல்ல, கோமாநிலைக்கு சென்றவர்களும் உண்டு என்று போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தின் சிறிய ஒழுங்கைகளில் கட்டாக்காலி நாய்கள் பெருகிவிட்டன. காலை வேளைகளில் எல்லாச் சிறிய தெருக்களிலும் நாயின் கழிவுகளைக் காணலாம்.

எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை திருநெல்வேலி பகுதியில் உள் ஒழுங்குகளால் பாடசாலைக்கு செல்வதில்லை. ஏன் என்று கேட்டேன். “காலையில் எழுந்து குளித்து வெளிக்கிட்டு அந்த வீதி வழியாக சென்றால் எங்கும் நாயின் கழிவுகளைக் காணலாம். அந்தக் கழிவுகளில் மொய்க்கும் இலையான் மோட்டார் சைக்கிள் கடக்கும்போது அப்படியே எழும்பி எங்களுடைய முகங்களிலும் மோய்க்கிறது. அருவருப்பாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக பிரதான சாலைகளின் ஊடாக பாடசாலைக்குச் செல்கிறேன்”என்று சொன்னார்.

அவர் குறிப்பிட்ட அந்த வீதி வழியாக நான் அடிக்கடி காலை வேளை போய் வருவேன். அப்பொழுதெல்லாம் சந்தைக்குக் கறிப்பிலையைச் சுமந்து செல்லும் வியாபாரிகளை கண்டிருக்கிறேன். அவர்கள் கறிவேப்பிலைக் கிளைகளை சைக்கிள் கரியரில் வைத்துக் கட்டிக்கொண்டு போவார்கள். சைக்கிள் கரியரின் இருபக்கமும் தொங்கும் கறிவேப்பிலைக் கிளைகள் வீதியைத் தொட்டுக் கொண்டு போகும். அந்த வீதி நெடுக நாயின் மலம் இருக்கும். அதை பார்த்ததிலிருந்து நான் சந்தையில் கறிவேப்பிலை வாங்குவதே இல்லை. திருநெல்வேலி சந்தையில் மட்டுமல்ல,யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சந்தைகளில் வீதியோரங்களில் நாய் மலத்தைக் காணலாம். அந்த மலத்தில் மொய்க்கும் இலையான்கள் அப்படியே எழும்பி அந்த வீதியோரம் அமைந்திருக்கும் சாப்பாட்டுக் கடைகளிலும் மொய்க்கின்றன. ஆயின் நாம் சாப்பிடும் சாப்பாட்டின் சுகாதாரத்தை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள்.

நாய் மலத்தை அகற்றுவது என்பது தெருநாய்களை அகற்றுவதுதான். தெரு நாய்களை ஏன் அகற்ற முடியவில்லை? அண்மையில் ஒரு நேர்காணலின்போது தெருநாய்களுக்கு உணவூட்டிய ஒருவர் கௌரவிக்கப்பட்டார். கனடாவில் இருந்து வந்த ஒரு நண்பர் அது தொடர்பாக பின்வருமாறு கேட்டார்…. ”தெருநாய்களைப் பராமரிப்பது நல்ல விடயம். ஆனால் எப்படிப் பராமரிக்க வேண்டும்? வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களின் தெருநாய்களுக்குப் பராமரிப்பு நிலையங்கள் உண்டு. அப்படிப்பட்ட பராமரிப்பு நிலையங்களில் கொண்டுபோய் நாய்களைச் சேர்ப்பதுதான் அதற்குரிய வழி. மாறாக கட்டாக்காலி நாய்களைத் தெருக்களிலேயே வைத்து  பராமரிப்பது என்பது மோசமான ஒரு நடைமுறை. அதைப் பாராட்டலாமா?” என்று.

மாநகரங்களில் கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கென்று ஒரு பொறிமுறை உண்டு. அதற்கென்று பராமரிப்பு நிலையங்களும் உண்டு. தவிர தமிழகத்தில் செயல்படும் “ப்ளூகுறஸ்”(BLUE CROSS) நிறுவனத்தை போன்ற தன்னார்வ நிறுவனங்களும் உண்டு. ஆனால் தமிழ்ப்பகுதிகளில் அவ்வாறு ஒரே ஒரு தன்னார்வ நிறுவனந்தான் உண்டு.

நாய்களைத் தெருக்களில் விடுவது குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளைத் தெருவில் விடுவது என்பது தமிழ்க் கலாச்சாரத்தின் சீரழிந்த ஒரு பகுதியாக பல தசாப்த காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக யோகர் சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்பு தெரிவித்த ஒரு தகவலை ஒரு சமயப் பெரியார் எனக்குச் சொன்னார். ஒருமுறை மருதனாமடம் சந்தையில் யோகர் சுவாமிகள் குந்தியிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பெட்டிக்குள் எதையோ காவிக் கொண்டு வந்திருக்கிறான். அப்பெட்டியை வைத்துக்கொண்டு நீண்டநேரமாக சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றிருக்கிறான். நீண்டநேரமாக அச்சிறுவன் வீதியில் நிற்பதைக் கண்ட யோகர் பெட்டிக்குள் என்ன என்று கேட்டிருக்கிறார். பெட்டிக்குள் பெண் நாய்க்குட்டிகள் உண்டு என்று அவன் சொல்லியிருக்கிறான். அவற்றை மருதனாமடம் சந்தையில் விடுமாறு சொன்னார்கள். ஆனால் அங்கே இருப்பவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதனால், ஆளில்லாத வீதி ஓரத்தில் விடலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவன் சொல்லியிருக்கிறான். இதைக் குறித்து பின்னர் தனது அடியார்கள் மத்தியில் உரையாற்றிய யோகர் பெண் நாய்களை இவ்வாறு தெருக்களில் அனாதைகளாக விடுவது ஒரு பாவம். அதன் கர்ம வினையை யாழ்ப்பாணம் ஒரு நாள் அனுபவிக்கும்…. யாழ்ப்பாணத்தவர்களும் ஒரு நாள் தெருவில் வந்து நிற்க வேண்டியிருக்கும் என்று  மனம் நொந்து கூறியிருக்கிறார்.

ஆனால் யோகர் சுவாமிகளுக்கு முன்னரும்,பின்னரும்,இப்பொழுதும்,பெண் நாய்க்குட்டிகள் தெருக்களில் விடப்படுகின்றன.

2015க்கு முன்புவரை இந்த நாய்களைப் பிடித்து கடலில் மூழ்கடித்துக் கொல்வார்கள். எமது சிறுவயது ஞாபகங்களில் நாய் வண்டி என்பது நம்மைப் பயமுறுத்தும் ஒரு வண்டிதான். இரண்டு பேர் அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு வருவார்கள். பிடிபட்ட நாய்கள் சிறைக்கூண்டுக்குள் இருந்து கொண்டு எம்மைப் பரிதாபகரமாகப் பார்க்கும். யாழ் நகரப் பகுதியில் அவ்வாறு நாய் பிடிப்பதற்கு முழங்கைவரை ஒரு கை இல்லாத நகரசுத்தித்  தொழிலாளர் ஒருவர் மாநகர சபையால் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய கையில் கம்பியாலான ஒரு சுருக்குத் தடம் இருக்கும். அந்த வண்டில் வீதியில் வரும்போது அவர் தன்னிடம் உள்ள தடியால் உள்ளே பிடிபட்டிருக்கும் நாய்களைக் குத்துவார். நாய்கள் கத்தும். அச்சத்தத்தைக் கேட்டு வீட்டிலிருக்கும் நாய்களும் தெரு நாய்களும் அந்த இடத்துக்கு வரும். அப்பொழுது அவர் நாய்களைப் பிடிப்பார். சுருக்குக் கம்பியில் சிக்கி நாய் துடிக்கும் காட்சி பரிதாபகரமாக இருக்கும். அதை அப்படியே இழுத்து வண்டிக்குள் ஏறிவார். வளர்ப்பு நாய்களை எஜமானர்கள் காசு கொடுத்து மீட்பார்கள். ஆனால் அனாதைகளான கட்டாக்காலி நாய்கள் பின்னர் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்படும். அதன் பின் கொல்லப்பட்ட நாய்களின் வால்களை வெட்டி கொண்டு வந்து கணக்குக் காட்டி தங்களுக்குரிய கொடுப்பனவைப் பெறுவார்களாம்.

spacer.png

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாய்களை அவ்வாறு கொல்வதற்குத் தடை விதித்து ஒரு சுற்றுநிருபத்தை வெளியிட்டார். அதாவது 2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்களை பூச்சி,புழுக்களைப் போல கொன்று யுத்தத்தை வென்ற ஒருவர்,சரியாக ஆறு ஆண்டுகளின் பின் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

அதன் பின் நாய்களைப் பிடிப்பவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் பிடிக்கப்படும் நாய்களைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் உரிய பராமரிப்பு நிலையங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இவ்வாறான ஒரு பின்னணியில் யாழ் மாநகர சபை பிடித்த நாய்களைச் சிறிது காலம் கல்லுண்டாய் வெளியில் கொண்டு போய்விட்டது. ஆனால் அந்த நாய்கள் அயலில் உள்ள கிராமத்தவர்களின் கால்நடைகளைக் கடிக்கத் தொடங்கியதும் அது ஒரு முறைப்பாடாக வந்தது. அதைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் கட்டாக்காலி நாய்கள் பிடிக்கப்படுவதில்லை.

கட்டாக்காலி நாய்களைப் பராமரிப்பதற்கென்று சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் ஒரு பராமரிப்பு நிலையத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரிடம் நாய்களைப் பிடிக்கும் ஏற்பாடு இல்லை. பிடிக்கப்பட்ட நாய்களை பராமரிக்கும் ஏற்பாடுதான் உண்டு. அதிலும் போதிய வளங்கள் இல்லை. தனக்குப் போதிய நிதி உதவியோ, துறைசார் உதவிகளோ அல்லது குறைந்தபட்சம் தார்மீக உதவிகளோ கிடைக்கவில்லை என்று அவர் கவலைப்பட்டார். தனது பராமரிப்பு நிலையத்தின் தராதரம் குறித்து ஒரு பகுதியினர் எழுப்பிய முறைப்பாடுகளால் அவர் அதிகம் நொந்து போயிருந்தார்.

அவரைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவரும் ஒரு நாய் பராமரிப்பு நிலையத்தை உருவாக்க முற்பட்டார். அதைக் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. அவர் அந்த முயற்சியைப் பாதியிலேயே கைவிட்டார். இப்பொழுது சிவபூமி அறக்கட்டளையின் ஒரே ஒரு நாய் பராமரிப்பு நிலையந்தான் வடக்கில் உண்டு. அங்கேயும் போதிய வளங்கள் இல்லை. ஆதரவு இல்லை. ஆறு.திருமுருகன் பெரும்பாலும் சலித்துப் போய்விட்டார். அந்த பராமரிப்பு நிலையத்தை முடிவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அவர் நொந்து போய்விட்டார்.

ஆனால் தென்னிலங்கையில் நாய்களைப் பராமரிப்பதற்கு பல நிலையங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. அவ்வாறு அம்பாந்தோட்டையில் காணப்படும் பராமரிப்பு நிலையத்துக்கு வேண்டுமானால் வடக்கிலிருந்து நாய்களைக் கொண்டு வந்து ஒப்படைக்கலாம் என்று உள்ளூராட்சி சபை நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.

மனிதகுல வரலாற்றில் மனிதனின் முதல் வளர்ப்புப்பிராணி நாய்தான். மனிதன் வேட்டையாடி உணவு தேடுபவனாக இருக்கும்போதே வேட்டைத் துணையாக நாய்கள் இணைந்தன. அதன் பின் நதிக்கரை நாகரீகங்களில் வீட்டு வளர்ப்பு பிராணிகளாக நாய்கள் மனிதர்களோடு காணப்பட்டன. நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பூர்வகாலத்திலிருந்தே தொடங்குகிறது. நன்றியுள்ளது;மனிதர்களைப்போல பழிவாங்காது;காவல் காப்பது என்றெல்லாம் போற்றப்பட்ட நாய்களை இந்துக்கள் வைரவக் கடவுளின் வாகனமாக உருவகித்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு தமது காவல் கடவுள் ஒருவரின் வாகனமாகக் காணப்படும் நாய்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ? யோகர் சுவாமிகள் 1960களின் நடுப்பகுதியில் மனம் நொந்து கூறிய அதே நிலைமைதான் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டின் பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது.நாய்களைப் பராமரிப்பதற்குக்கூட ஒரு வளம் பொருந்திய நிலையத்தை உருவாக்க முடியாத மக்களா நாம்?

 

http://www.nillanthan.com/5933/

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வாழும் அடித்தட்டு  தமிழ் சனத்துக்கு ஒரு நேர உணவே சின்கியடிக்குது இதுக்குள்ளே நாய் வளர்ப்பு நரி வளர்ப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனையும் இல்லை. சீனாக்காரனுக்கு Project ஒன்றை கொடுங்கள், தெருவில் ஒரு நாயும் இருக்காது!!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாக்காலி நாய்களால் உணவுச் சுகாதார, போக்குவரத்துப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் ஒரு சீரியசான உயிர்கொல்லிப் பிரச்சினையும் இருக்கிறது: றேபிஸ் எனப்படும் விசர்நாய்கடி நோய்.

ஒரு தீவான இலங்கையில், மக்கள் ஒத்துழைத்தால் றேபிஸ் நோயை முற்றாக ஒழிக்க முடியும், ஆனால் இன்னும் ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை றேபிஸ் நோயினால் இலங்கையில் இறக்கின்றனர். இலங்கையில் றேபிஸ் மனிதர்களுக்குத் தொற்றும் முதன்மையான மூலமாக நாய்கள் இருக்கின்றன.

எனவே, ஒன்று வலியில்லாமல் கொல்ல வேண்டும் அல்லது 75% வீதமான நாய்களுக்கு கிரமமாக றேபிஸ் தடுப்பூசி போட்டுப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு மேலதிகமாக பெண், ஆண் நாய்களுக்கு கருத்தடைச் சத்திர சிகிச்சையும் செய்து விட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கட்டாக்காலி நாய்களால் உணவுச் சுகாதார, போக்குவரத்துப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் ஒரு சீரியசான உயிர்கொல்லிப் பிரச்சினையும் இருக்கிறது: றேபிஸ் எனப்படும் விசர்நாய்கடி நோய்.

ஒரு தீவான இலங்கையில், மக்கள் ஒத்துழைத்தால் றேபிஸ் நோயை முற்றாக ஒழிக்க முடியும், ஆனால் இன்னும் ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை றேபிஸ் நோயினால் இலங்கையில் இறக்கின்றனர். இலங்கையில் றேபிஸ் மனிதர்களுக்குத் தொற்றும் முதன்மையான மூலமாக நாய்கள் இருக்கின்றன.

எனவே, ஒன்று வலியில்லாமல் கொல்ல வேண்டும் அல்லது 75% வீதமான நாய்களுக்கு கிரமமாக றேபிஸ் தடுப்பூசி போட்டுப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு மேலதிகமாக பெண், ஆண் நாய்களுக்கு கருத்தடைச் சத்திர சிகிச்சையும் செய்து விட வேண்டும். 

இலவச கருத்தடை சத்திரசிகிச்சை அரச மிருக வைத்திர்களால் பொது இடங்களில் நடத்தப்பட்டாலும் கட்டாக்காலி நாய்களை பிடிப்பது கடினமானது. எங்க வீட்டில டெலிவரிக்கு கிரமமாக(4/5 தரம். இப்ப குப்பைக்குள்ள ஒதுங்கிறா, அநேகமாக குட்டி போட்டிருப்பா) ஒரு தெரு நாய் வரும், அதற்கு சத்திரசிகிச்சை செய்ய முயன்று பிஸ்கற்றை போட்டு பிடிக்க முயல சாப்பிட்டுவிட்டு ஓடிவிட்டது. 

வீடுகளில் வழக்கும் பெரும்பாலான ஆண் நாய்களுக்கு சத்திரசிகிச்சை செய்து தான் வளர்க்கிறார்கள்.

வளர்ப்பு நாய்களுக்கு இலவச தடுப்பூசிகளும் கிராமங்களில் போடுவது உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலவச கருத்தடை சத்திரசிகிச்சை அரச மிருக வைத்திர்களால் பொது இடங்களில் நடத்தப்பட்டாலும் கட்டாக்காலி நாய்களை பிடிப்பது கடினமானது. எங்க வீட்டில டெலிவரிக்கு கிரமமாக(4/5 தரம். இப்ப குப்பைக்குள்ள ஒதுங்கிறா, அநேகமாக குட்டி போட்டிருப்பா) ஒரு தெரு நாய் வரும், அதற்கு சத்திரசிகிச்சை செய்ய முயன்று பிஸ்கற்றை போட்டு பிடிக்க முயல சாப்பிட்டுவிட்டு ஓடிவிட்டது. 

வீடுகளில் வழக்கும் பெரும்பாலான ஆண் நாய்களுக்கு சத்திரசிகிச்சை செய்து தான் வளர்க்கிறார்கள்.

வளர்ப்பு நாய்களுக்கு இலவச தடுப்பூசிகளும் கிராமங்களில் போடுவது உண்டு.

உண்மை தான் ஏராளன். இலங்கை போன்ற வளங்கள் குறைந்த நாடுகளில் பல சவால்கள் உண்டு. ஆனால், மருந்தே இல்லாத ஒரு நோயைத் தடுக்க கட்டாக்காலி நாய்கள் கட்டுப்பாடே ஒரே வழியென மக்கள் உணர்ந்தால் இருக்கும் வளங்களை வைத்தே வேலை செய்யலாம்:

1. கட்டாக்காலி நாய்களை பிடிக்கவோ, வைத்துப் பராமரிக்கவோ இயலாவிட்டால், முற்காலத்தில் செய்தது போல நகரசபைகள் பிடித்துச் சென்று அழிக்க அனுமதிக்க வேண்டும். ஆனாலும், கொடுமையான நஞ்சான strychnine மூலம் கொல்லாமல் மயக்க மருந்துகள் பாவிக்க வேண்டும்.  

2. அமெரிக்காவில் காட்டு விலங்குகள் (raccoon, fox, coyote) தான் றேபிஸ் பரப்பும் பிரதான மூலங்கள். அவற்றிற்கு வாய் வழியாக இறைச்சியினுள் மறைத்து வைத்துக் கொடுக்கும் றேபிஸ் தடுப்பு மருந்து பல ஆண்டுகளாக இங்கே பயன்பாட்டில் இருக்கின்றது, நன்கு பயன் தருகிறது. இதை ஏன் இலங்கையில் கட்டாக்காலி நாய்களில் பயன்படுத்துவதில்லையெனத் தெரியவில்லை.

3. வளர்ப்பு நாய்களில் றேபிஸ் தடுப்பூசியை முழுமையாகப் பயன்படுத்துவதும் மனிதர்களுக்கு றேபிஸ் தொற்றாமல் பெருமளவு காக்கும். எனவே, கட்டாக்காலி நாய்களுக்கு எதுவும் செய்ய முடியா விட்டாலும், இதை வீட்டு நாய்களில் தொடர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டாக்காலி நாய்கள் தொடர்பாக எனக்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. 

1988 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன். கோண்டாவில் டிப்போவடி வீடு இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டு, தெல்லிப்பழையில் அப்பம்மா வீட்டில் தங்கிருந்தோம். பாடசாலைகள் ஆரம்பித்திருந்த காலம். சித்திரை முதலாம் தவணை பரீட்சைகள் நடக்கத் தொடங்கியிருந்தன. தெல்லிப்பழை, வீமன்காமத்திலிருந்து  நானும் தம்பியும் ஒரு சைக்கிளில் யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்குப் போய்வருவது நடந்தது. கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் ஒரு வழிப்பயணம். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியாலேயே எமது பயணம் நடக்கும்.

ஒருநாள் காலை பாடசாலை நோக்கி நானும் தம்பியும் போய்க்கொண்டிருக்கும்போது, சுன்னாகம் சந்தியை அடைவதற்குச் சற்று முன், வீதியின் வலது பக்கத்தில் இருந்த வெதுப்பகம் ஒன்றில் பணிபுரிபவர் பழைய பாண்கள் சிலவற்றை வீதியில் நின்ற நாய்களுக்குப் போட்டுக்கொண்டு நின்றார். நாய்களுக்குள் பழைய பாணுக்கு கடிபாடு தொடங்கியது. பாணை முதலில் கவ்விக்கொண்ட நாய், எதுவுமே யோசிக்காது திடீரென்று வீதியின் மற்றைய பக்கத்திற்கு பாய்ந்து ஓடத் தொடங்கியது. நாம் சைக்கிளில் வேகமாக போய்க்கொண்டிருந்த கணம் அது. அந்த நாயும் சரியாக எமது சைக்கிளின் முன்சில்லுக்குள் வந்து விழ, தம்பி சைக்கிளில் இருந்து எகிறி சில மீட்டர்கள் வீதியின் நடுவில் சென்று விழ, எனது கால் சைக்கிள் குறுக்குச் சட்டத்தில் மாட்டுப்பட, சைக்கிளோடு சேர்ந்து நானும் வீதியில் இழுபட்டுக்கொண்டு சில மீட்டர்கள் சென்றேன். தெய்வாதீனமாக வீதியில் வந்த ஏதோவொரு வாகனம் சட்டென்று நின்றுவிட்டதால், நாம் இருவரும் தப்பித்தோம். 

அதே வெதுப்பகத்திலிருந்த வயோதிபர் ஒருவர் இரத்தம் வழிந்துகொண்டிருந்த எனது இரு முழங்கால்களையும் சுத்தம் செய்து மண்ணெய்யினால் கழுவிவிட்டார். கையில் காசில்லை, வேறு வழியின்றி அந்த வலியுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தோம். பாடசாலையில் கண்டவர்கள் எமது குருதியும், சேறும் தோய்ந்த மேற்சட்டைகளையும், இரத்தம் வழிந்துகொண்டிருந்த கால்களையும் கண்ணுற்றபோது பயந்துவிட்டார்கள். 

இதன்பின்னர் நடந்தவை எனது வாழ்க்கையை திருப்பிப் போட்டுவிட்ட சில நிகழ்வுகள். அவை வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு சம்பவம். அதுகூட நாய் ஒன்றினால் ஏற்பட்டது. சுவாரசியமில்லை, மிகவும் வேதனையானது.

யாழில் எத்தனை பேருக்கு கோண்டாவில் பலாலி வீதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் திசையில், டிப்போச் சந்திக்கு சற்று முன்னர் அமைந்திருந்த முருகேசுவின் தேத்தண்ணிக்கடை தெரியும்? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தேநீர்க்கடை அது. கடையின் பின்னால் சமையல்க் கூடமும், விறகுகள் கொத்தும் இடமும் அமைக்கப்பட்டிருந்தது. கடையின் பின்பக்க வாயில் எப்போதுமே திறந்திருக்கும். அந்தக் கடைக்காரர்கள் இரு நாய்களை வளர்த்தார்கள். அவை குரைப்பது மிகவும் குறைவு. இராசரத்திணம் ஒழுங்கையால் நடந்துப்போகும் எவரையும் சத்தமின்றி பின்னால் வந்து கடித்துவிடும். அதிலும், பெண் நாய் மிகவும் ஆக்ரோஷமானது. பலமுறை சைக்கிளில் செல்லும்போது எம்மைத் துரத்தியிருக்கின்றன. இந்த நாய்களால் கடிபட்ட பலர் முறையிட்டும் கடைக்காரர் கண்டுகொள்ளவில்லை. 

எனதுட் தாயார் கோண்டாவில் டிப்போவில் தொடர்பாடல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர். வீட்டிலிருந்து வேலைக்கு நடந்தே போவார். 1985 ஆம் ஆண்டு, கார்த்திகை இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மாலை, வேலை முடிந்து வந்துகொண்டிருந்தார். கடையின் பின்புற வாயிற்கதவு திறந்திருக்க, சத்தமின்றி எனது தாயாரின் பின்னால் வந்த நாய்களில் ஒன்று அவரின் முழங்காலிற்கும், பாதத்திற்கும் இடையே ஒரு பகுதியை மிகவும் ஆளமாகக் கவ்விக் கொண்டது. கீழே விழுந்து உதவிகேட்டு எனது தாயார் அழுத சத்தம்கேட்டு கடையிலிருந்தவர்கள் ஓடிவந்து நாயைக் கலைத்துவிட்டு, அவரைத் தூக்கிவிட்டிருக்கிறார்கள். 

காயத்திற்குக் கட்டுப்போடுக்கொண்டே அவர் டிப்போ வைத்திய அதிகாரியிடம் சென்றிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த அவைத்திய அதிகாரி நாய்க்கடி ஊசியைப் போட மறுத்துவிட்டார். இது நடந்து சரியாக இரு வாரங்களில் எனது தாயார் காலமானார். இடையே பஸ்ஸில் இருந்து தவறி கீழே விழுந்து பஸ்ஸின் படித் தகடு வெட்டிய சம்பவமும் நடந்தது. இன்றுவரை அவர் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. அவர் இரு நாட்கள் காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகவிருந்தது மட்டுமே ஞாபகமிருக்கிறது. 
 

Edited by ரஞ்சித்
பலாலி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரஞ்சித் said:

காயத்திற்குக் கட்டுப்போடுக்கொண்டே அவர் டிப்போ வைத்திய அதிகாரியிடம் சென்றிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த அவைத்திய அதிகாரி நாய்க்கடி ஊசியைப் போட மறுத்துவிட்டார். இது நடந்து சரியாக இரு வாரங்களில் எனது தாயார் காலமானார். இடையே பஸ்ஸில் இருந்து தவறி கீழே விழுந்து பஸ்ஸின் படித் தகடு வெட்டிய சம்பவமும் நடந்தது. இன்றுவரை அவர் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. அவர் இரு நாட்கள் காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகவிருந்தது மட்டுமே ஞாபகமிருக்கிறது. 
 

துயரமான சம்பவம்.
எமது இடங்களில் தேநீர்கள கடைகளின் பின் புறம் சாப்பிட்ட இலையை கொண்டு போய் போடுமிடத்தில் 

அதிலிருந்து ஏதாவது கிடைக்குமா என்று பல நாய்கள் காவலிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.