Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னியின் செல்வன் 2 Review: காதல் களத்துடன் ஈர்க்கும் மணிரத்னத்தின் ‘புனைவு’!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
982666.jpg  
 

கடல் சீற்றத்தில் சிக்கிய அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) உயிரிழந்துவிட்டதாக சோழர்களுக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், எப்போதும்போல அருண்மொழி வர்மனை ஊமைராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றிவிடுகிறார். உயிர்பிழைத்தாலும் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளவரசனை வந்தியத்தேவனும் (கார்த்தி) பூங்குழலியும் (ஐஸ்வர்யா லக்ஷ்மி) மீட்டு நாகப்பட்டினத்தில் உள்ள புத்த மடத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுக்கின்றனர். அருண்மொழி வர்மன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்ட பாண்டிய ஆபத்துதவிகள் சுந்தரச் சோழரையும் (பிரகாஷ்ராஜ்), அவரது மகன்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்து நந்தினியின் வழிகாட்டுதலில் சதித்திட்டம் தீட்ட, இறுதியில் சோழர்கள் மூவரும் கொல்லப்பட்டனரா? பட்டத்து இளவரசனாக அருண்மொழி வர்மன் முடிசூடப்பட்டாரா? - இதுதான் திரைக்கதை.

பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகள், துரோகங்கள், சதிவலைகளையெல்லாவற்றையும் கடந்து படம் முடிந்து நமக்குள் தேங்கிவிடுகிறது ஆதித்த கரிகாலன் - நந்தினியின் அந்தக் காதல். உண்மையில் காதல் காட்சிகளில் மணிரத்னத்தின் அழகியல் தனித்துவமானது. பிரமாண்ட கடம்பூர் மாளிகையின் ஒளிவிளக்குகள் சூழ்ந்த அந்த அறையில் வாளுடன் நிற்கும் நந்தினியிடம் தன் உயிரை துச்சமென எண்ணி கரிகாலன் பேசும் காட்சியும், அதற்காக ரவிவர்மன் கேமரா தூரிகையால் தீட்டியிருக்கும் ரம்மியமான ஃப்ரேமும், பின்னணியில் ‘சின்னஞ் சிறு நிலவே’ பாடலின் கோரஸும் அற்புதமானவை.

16826751103078.jpeg

கடந்த பாகத்தில் இளவரசன் அருண்மொழி வர்மன் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்தப் பாகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல் நிரம்பியிருக்கிறது. புதினத்தில் இடம்பெற்றிருப்பதைப் போல ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை ஒருவித சஸ்பென்ஸுடனே பதிவு செய்திருக்கிறார் மணிரத்னம்.

படத்தின் தொடக்கமே இளவரசனுக்கும் (ஆதித்த கரிகாலன்) கைவிடப்பட்ட பெண்ணுக்கும் (நந்தினி) இடையேயான காதல் அதீத வசனமில்லாமல் பின்னணி இசையுடன் காட்சிமொழியில் விவரிக்கப்படும் விதமும், அந்தக் காதலின் பிரிவை காட்சிப்படுத்தியிருந்த விதம் ஈர்ப்பு. இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் மற்ற கதாபாத்திரங்களை எளிதில் மறக்கடித்துவிடுகிறது.

படத்தின் முதல் பாதி அதீத உரையாடல்களுடன் நீள, விக்ரம் - ஐஸ்வர்யா ராய், கார்த்தி - த்ரிஷாவுக்கான காதல் போர்ஷன், கார்த்தி - ஜெய்ராம் இடையிலான காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் சுவாரஸ்யமில்லாமல் நகர்கிறது. அழுத்தமான காதலும், எமோஷனலும் இரண்டாம் பாதிக்கு பலம். நந்தினியின் பின்புலக்கதை, சோழர்களை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சிகள், ஊமைராணியின் விவரிப்பு, வீரபாண்டியனுக்கும் (நாசர்) நந்தினிக்குமான உறவு உள்ளிட்டவை ஆர்வமூட்டினாலும், முழுமையில்லாமல் அடுத்தடுத்து ‘ஜம்ப்’ஆகும் காட்சிகள், நினைவில் நிற்க போராடும் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் சிக்கல். நாவலில் கொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தில் உயிரோடு வருவதும், புனையப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்கான மணிரத்னத்தின் புனைவுகள்.

16826751193078.jpeg

ஆதித்த கரிகாலனாக ஆற்றாமை, கோபம், இழந்த காதலின் வலி, ஆக்ரோஷம் என விக்ரமும், பழிவாங்கும் வெறி, துரோகம், தவிப்பு என நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிப்பில் தனித்து தெரிகின்றனர். ஜாலியான கதாபாத்திரமாக இருந்தாலும், தன் இளவரசனை காக்க தவறிய குற்ற உணர்ச்சியில் கலங்கும் இடத்தில் வந்தியதேவனாக ஸ்கோர் செய்கிறார் கார்த்தி.

பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும் வெளிப்படுத்தாத காதல், சோழ சாம்ராஜியத்தையும், சகோதரர்களையும் காக்க வேண்டிய பொறுப்பில் குந்தவையாக த்ரிஷா கவனம் பெறுகிறார். முந்தைய பாகத்தில் அருண்மொழி வர்மனாக ஈர்த்த ஜெயம் ரவி போர்க் காட்சிகளிலும், க்ளைமாக்ஸிலும் முத்திரைப் பதிக்கிறார். ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை தேடும் ரசிகர்கள் கண்களுக்கு இந்தப் பாகத்தில் ஏமாற்றம். மற்ற நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திர தேவையை உணர்த்து உழைப்பை கொட்டியுள்ளனர்.

‘அக நக’, ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல் தேவையான அளவில் தூவி, பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் தடம் பதிக்கிறார். ரவிவர்மன் தன்னுடைய லென்ஸ் எனும் தூரிகையால் திரையில் வண்ணம் தீட்ட அதனை ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் சரிவிகித கலவையாக்கியிருக்கிறார்.

முதல் பாகத்திலிருந்து சிகை அலங்காரம், பிரமாண்ட செட் அமைப்புகள், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அப்படியே இதிலும் தொடர்கின்றன. மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆதித்த கரிகாலனுக்கும் - நந்தினிக்குமானது!

பொன்னியின் செல்வன் 2 Review: காதல் களத்துடன் ஈர்க்கும் மணிரத்னத்தின் ‘புனைவு’! | Mani ratnam directorial vikram lead Ponniyin Selvan 2 movie Review - hindutamil.in

முக்கிய குறிப்பு 

இந்தி திரியை பற்றி வேறு எந்த திரியுடனும் இணைக்காதீர்கள். விமர்சனம் எப்பவும் புதிய திரியில் இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் 2: விமர்சனம்!

SelvamApr 28, 2023 18:38PM
ஷேர் செய்ய : 
Screenshot-2023-04-28-184059.jpg

ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போதே, அது முதல் பாகம் அளவுக்கு இருக்குமா என்ற கேள்வி பெரிதாகும். காரணம், முதல் முயற்சியின்போது படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இருக்காது. அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்போது, ஏற்கனவே பெற்ற வெற்றிகள் முட்கிரீடங்களாக மாறி உறுத்தும்.

ஆனால், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அந்த வகையில் அடங்காது. ஏனென்றால், இது முன் தயாரிப்பு பணிகளும் படப்பிடிப்பும் நடத்தப்பட்டபோதே இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டவை. முழுமையான பொருளொன்றை சரிபாதியாகப் பகுப்பதைப் போல, தொடக்கத்திலேயே இரு பாகங்களாக ஆக்கப்பட்டவை. உள்ளதைப் போலவே, அவை சரிபாதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

என்னவானார் பொன்னியின் செல்வன்?

பாண்டிய ஆபத்துதவிகளைத் தேடிச் சென்ற அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன்புயல் சீற்றத்தில் சிக்கியபிறகு என்னவானார்? அந்த இடத்தில் இருந்துதான், இரண்டாம் பாகம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், சிறு வயது நந்தினியும் ஆதித்த கரிகாலனும் காதலில் விழுந்த கணங்களைக் காண்பிப்பதில் தொடங்குகிறது ‘பொ.செ.2’. அதன்பிறகு, பொன்னியின் செல்வன் கதையைப் பேசுகிறது.

ponniyin selvan 2 review

புயலில் சிக்கிக் கடலுக்குள் மூழ்கிய அருள்மொழி வர்மனைக் காப்பாற்றுகிறார் ஊமையரசி. வந்தியத்தேவன் அவரை மீட்டு, பூங்குழலியின் உதவியுடன் நாகை கடற்கரை பகுதிக்கு அழைத்து வருகிறார். அருள்மொழி இறந்துவிட்டதாகக் கருதும் பாண்டிய ஆபத்துதவிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அவருக்கு புத்த மடாலயத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். அதற்குள், அவர் இறந்துவிட்டதாகக் கருதி சோழ நாட்டில் குழப்பம் ஏற்படுகிறது. ஆதித்த கரிகாலன் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார்; அனைத்துக்கும் நந்தினியே காரணம் என்கிறார்.

ஒருகட்டத்தில், அருள்மொழி உயிரோடிருக்கும் விஷயம் பழையாறையில் இருக்கும் அவரது தந்தைக்குச் சொல்லப்படுகிறது. சோழ அரச குடும்பத்தினருக்கும் மெல்லத் தெரிய வருகிறது. அப்போது, ஆதித்த கரிகாலனால் போரில் தோற்கடிக்கப்பட்ட ராஷ்டிரகூட அரசர் பழிவாங்கும் சந்தர்ப்பம் இதுதான் என்று கறுவுகிறார். பராந்தக சோழனுக்குப் பெண் கொடுத்து சோழ நாட்டின் அரசியலில் மாற்றம் உருவாக்க முயல்கிறார். அதேநேரத்தில், நந்தினியின் திட்டமிடலின் கீழ் சுந்தர சோழர், அவரது மகன்கள் ஆதித்த கரிகாலன், அருள்மொழி மூவரையும் ஒரேநேரத்தில் கொல்ல முயற்சிக்கின்றனர் பாண்டிய ஆபத்துதவிகள்.

அந்த ஆபத்துகளை சோழ அரச குடும்பத்தினர் கடந்து வந்தார்களா? எதிரிகளை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியில் திரண்டார்களா என்று சொல்கிறது பொன்னியின் செல்வன் 2.

கல்கியின் வரலாற்றுப் புனைவை வாசிக்காதவர்களும் திரைப்படம் பார்க்க வந்ததாலேயே, முதல் பாகம் பெருவெற்றி பெற்றது. அப்படிப் பார்த்தால், அவர்களனைவரையும் பிரமிக்க வைத்திருக்க வேண்டும் இரண்டாம் பாகம். ஆனால், நாடக பாணியிலான காட்சியாக்கம் அதற்கு இடம் தரவில்லை.

மணிரத்னம் முத்திரை!

குறைவான வசனங்கள், அதிகமும் திரை மொழிக்கு முக்கியத்துவம், பிரமிப்பூட்டும் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றோடு நடிகர்களை வேறோரு பரிமாணத்தில் காட்டி கதை சொல்லலைப் புதிதாக உணர வைத்திருப்பார் மணிரத்னம். 2000களுக்கு பிறகு, அடுத்த தலைமுறை இயக்குனர்களோடு போட்டியிடும் வகையில் தனது தனித்துவ முத்திரைகளையே மாற்றிக்கொண்டார். ‘பொன்னியின் செல்வனை’ப் பொறுத்தவரை, ஒரு பாட்டி இளைய தலைமுறையினருக்கு அரச கதைகளைச் சொல்வதைப் போன்றதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

ponniyin selvan 2 review

கல்கியின் புனைவைப் படித்தவர்களுக்கு ஊமை ராணி, வீரபாண்டியன், சுந்தர சோழர் மூவரிடையே முக்கோணக்காதல் இருந்ததா என்ற சந்தேகம் எழும். ஆதித்த கரிகாலன் கொலை குறித்தோ, அருள்மொழி வர்மனுக்குப் பதிலாக அரச பீடத்தில் ஏறியவர் பற்றியோ, வந்தியத்தேவன் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டது பற்றியோ தெளிவான பதில்கள் கிடைக்கப் பெறாது. அந்த நாவலின் தொடர்ச்சியாக இன்னொரு புனைவைப் படைப்பதற்காக கல்கி எடுத்துக்கொண்ட சுதந்திரமாகவே அது பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அந்த புனைவை எழுதவில்லை. அந்த குழப்பங்கள் இந்த படத்தில் இல்லை என்பது ஒரு சிறப்பான அம்சம்.

காட்சிகள் அனைத்தும் நாடகத்தனமாகவே இருக்கும் என்ற எண்ணமிருந்தாலும், பாடல் காட்சிகளில் மணிரத்னம் அழகியலை வாரியிறைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், இதில் ஒன்றரை நிமிடங்களுக்கு மேலாக எந்த பாடலும் நீடிக்கவில்லை. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் கைங்கர்யத்தால் அது நிகழ்ந்திருக்கிறது. தவிர, பல காட்சிகளில் மௌனத்திற்குத் துளியும் இடமில்லை.

திரையில் மனித முகங்களே அதிகமும் தென்படுகின்றன; என்றபோதிலும், அவற்றை அழகுறக் காட்டுவதில் மெனக்கெட்டிருக்கிறது ரவி வர்மனின் ஒளிப்பதிவு. ஒரு ‘போட்டோ பிரேம்’ போல அவற்றை வடித்திருக்கிறார் என்று சொல்வதே சரி; அந்த அழகான ரசனைக்கு தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு உதவியிருக்கிறது. மற்றபடி, அவற்றில் தமிழ் கலாசாரத்திற்கான கூறுகளைத் தேடுவது தேவையற்ற வேலை.

ரஹ்மானின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கின்றன. ‘இளையோர் சூடார்’ போன்ற பாடலும் கூட தியேட்டரில் கேட்கையில் ‘ஆஹா’ என்றிருக்கிறது. காட்சிகளில் நிறைந்திராத பரபரப்பைத் தனது பின்னணி இசையால் ஊட்ட முயன்றிருக்கிறார்; அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனால், தனித்துக் கேட்கும்போது நிச்சயம் அது ஏழாம் நூற்றாண்டு தமிழ் கூறுகளையோ, ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட வாழ்வியலை உணர்த்தும் காலப் பயணமாகவோ இருக்காது.

பல நட்சத்திரங்களை ஒரே திரைக்கதையில் ஒன்றிணைக்கலாம் என்று காட்டிய வகையில் ’பொ.செ.’ இரு பாகங்களும் சிறப்பைப் பெறுகின்றன. நிச்சயமாக, மணிரத்னத்தின் படம் என்ற அடையாளமே அதற்குக் காரணம். எதிர்காலத்தில் பல அரச புனைவுகளோ, பெரும் நட்சத்திரங்கள் ஒன்றிணைவோ அமைவதற்கு அது வழியமைத்துத் தரும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அது நிச்சயம் மணிரத்னத்தின் முத்திரை அல்ல.

ponniyin selvan 2 review

முந்தைய பாகத்தைக் காட்டிலும் இதில் விக்ரம், ஜெயம்ரவிக்கான முக்கியத்துவம் அதிகம். அதற்காக, கார்த்திக்குப் பெரிதாக காட்சிகள் இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், மூவரில் விக்ரமே நம் மனம் கவர்வார் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

போலவே த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் இருவரும் நம் கண்களில் நிறைவது உறுதி. என்ன, இருவரும் அதீத மேக்கப்போடு வலம் வருவது கொஞ்சம் உறுத்தலாகத் தெரியும். சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி இருவரது திரை இருப்பும் அதில் பாதி கூட இருக்காது. பெரும்பட்டாளமே நடித்த திரைப்படங்களில் ஒவ்வொருவரும் ‘ஸ்கோர்’ செய்ய வாய்ப்பு அமைவது கடினம்.

மேற்சொன்னவர்களுக்கே இந்த கதி என்பதால் பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா போன்ற மூத்த கலைஞர்கள் மிகக்குறைந்த நேரமே திரையில் தோன்றுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், பாண்டிய ஆபத்துதவிகளாக வரும் கிஷோர், ரியாஸ் போன்றோருக்குச் சிறியளவில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனைவரையும் தாண்டி, தொடக்க காட்சியில் வரும் சாரா நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்.

ஜெயமோகன், குமரவேல், மணிரத்னம் மூவரது திரைக்கதை பெரும் நீர்பரப்பினைச் சிறு குடுவைக்குள் அடைக்க முயன்றிருக்கிறது. அதேநேரத்தில், மொத்த திரைக்கதையும் பொன்னியின் செல்வன் பார்வையில் இருந்தே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எங்கே போயிற்று பிரமிப்பு?

’அலைபாயுதே’வில் வரும் ‘எங்கோ ஒருவன் வாசிக்கிறான்’, ‘ஆயுத எழுத்து’வில் வரும் ‘யாக்கை திரி’, ‘குரு’வில் இடம்பெற்ற ’நன்னாரே’, ’ராவணன்’ படத்தில் வரும் ‘உசுரே போகுதே’ போன்ற மனதைக் கலைத்துப் போடும் காட்சியமைப்பைக் கொண்ட பாடல் இதில் இல்லை.

ponniyin selvan 2 review

பாடல்களைத் தாண்டி காட்சிரீதியாகவும் பல நேரங்களில் நம்மைப் பிரமிக்க வைப்பார் மணிரத்னம். ‘பம்பாய்’, ‘இருவர்’ உள்ளிட்ட பல படங்கள், 2018இல் வெளியான ’செக்கச்சிவந்த வானம்’ கூட அப்படிப்பட்ட கணங்களைக் கொண்டிருக்கின்றன; அதற்காகவே கொண்டாடப்படுகின்றன. காரணம், அவை ஒவ்வொன்றும் மணிரத்னத்தின் மனதில் விளைந்த உலகங்கள். அப்படியொன்றாக ‘பொன்னியின் செல்வன்’ அமையவில்லை.

இந்த படத்தில் கல்கி வார்த்த பாத்திரங்களை, அவற்றுக்கு இடையிலான முரண்களை, மோதல்களைக் கொண்டு சுவாரஸ்யமான ஒரு கதையை இன்றைய தலைமுறைக்குச் சொல்ல முயன்றிருக்கிறார். வாசிப்பு பழக்கமே இல்லாத ரசிகர்களுக்கு அது அரிதாகவோ, புதிதாகவோ அமைய வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். அதேநேரத்தில், கல்கியின் எழுத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறாரா என்று ஒப்பிட விரும்பியவர்களையும் தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறார். முதல் பாகத்தில் நிகழ்ந்த அந்த மாயாஜாலம் இரண்டாம் பாகத்திற்கும் வாய்த்தால் மகிழ்ச்சி!
 

 

https://minnambalam.com/cinema/ponniyin-selvan-2-review/

  • கருத்துக்கள உறவுகள்

கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வனில் இத்தனை மாற்றங்கள் செய்துள்ளாரா மணிரத்னம்? முழு விவரம்

IMG-20230430-112745.jpg

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வெற்றிகண்டுள்ள மணிரத்னம், அதில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

மக்கள் விரும்பி படித்த நாவல்களில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனும் ஒன்று. கல்கியின் இந்த வரலாற்று புனைவு நாவலை சினிமாவாக எடுக்க பல்வேறு ஜாம்பவான்கள் முயன்றார்கள். ஆனால் இறுதியில் மணிரத்னத்தால் மட்டுமே அது சாத்தியமானது. அவரும் அவ்வளவு எளிதாக இந்த படத்தை எடுத்துவிடவில்லை. இரண்டு முறை முயன்று கைகூடாமல் போனாலும், இந்த கதையின் மீதுள்ள காதலால் மூன்றாவது முறை முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார் மணிரத்னம்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகங்களைக் கொண்டிருக்கும். ஆனால் அதனை மணிரத்னம் இரண்டு பாகங்களில் படமாக எடுத்துள்ளார். கல்கியின் இந்த படைப்பை எப்படி மணிரத்னம் இரண்டு பாகங்களில் படமாக்கினார் என்பதே ஆச்சர்யம் தான். அப்படி அவர் இரண்டு பாகங்களில் வெற்றிகரமாக ரசிகர்களைக் கவரும் விதமாக படமாக்க, பல்வேறு மாற்றங்களையும் செய்திருக்கிறார். அவை என்னென்ன

 

மணிமேகலையை காணோம்

பொன்னியின் செல்வனின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இருக்கும். ஆனால் அவை ஒவ்வொன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் கல்கி. அப்படி அந்த நாவலில் இடம்பெற்று இருந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் மணிமேகலை. சம்புவரையரின் மகளான மணிமேகலை, கதைப்படி வந்தியத்தேவனை காதலிப்பால், இந்த ஒருதலைக் காதல் கைகூடாமல் போக, புத்தி பேதலித்து இறந்துவிடுவாள்.

இந்த முக்கியமான கேரக்டரை முதல் பாகத்தில் காட்டாமல் இருந்த மணிரத்னம், இரண்டாம் பாகத்திலாவது காட்டுவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அதிலும் காட்டாமல் அந்த கேரக்டரையே மொத்தமாக கத்திரி போட்டு தூக்கி இருக்கிறார்கள். 

 

ஆதித்த கரிகாலன் - அருண்மொழிவர்மன் சந்திப்பு 

கல்கி எழுதிய நாவலின்படி அருண்மொழி வர்மனும், ஆதித்த கரிகாலனும் சகோதரர்களாக இருந்தாலும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் மணிரத்னம் கொடுத்த டுவிஸ்ட்டில் நாகப்பட்டினம் சூடாமணி புத்த விஹாரத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் படியான காட்சியை புகுத்தி உள்ளார். நாவலை படித்தவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அண்ணன் தம்பி உறவை அந்தக் காட்சியில் மிக அழகாக காட்டியிருப்பார் மணிரத்னம்.

ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார்?

பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி வைத்த மிகப்பெரிய டுவிஸ்ட்டே ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்பதை ஒரு புதிராக வைத்திருப்பார். அவர் கடம்பூர் மாளிகையில், இறக்கும் போது நந்தினி அருகில் இருப்பார், அதேபோல் அந்த இடத்தில் ஆபத்துதவிகளும் இருப்பார்கள், இதுதவிர வந்தியத்தேவனும், பெரிய பழுவேட்டரையரும் இருப்பார்கள். இவர்கள் நால்வர் மீதும் சந்தேகத்தை எழுப்பும் வகையிலே நாவலில் டுவிஸ்ட் கொடுத்திருப்பார் கல்கி. ஆனால் படத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை ஓப்பனாகவே சொல்லிவிடுகிறார் மணிரத்னம்.

 

நந்தினியின் அப்பா யார்?

ஆதித்த கரிகாலனின் கொலையை போல், நந்தினியின் தந்தை யார் என்பதும் நாவலில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்காது. வீர பாண்டியன், சுந்தரச் சோழன், கருத்திருமன் ஆகிய கதாபாத்திரங்கள் நந்தினியின் தந்தையாக இருக்கலாம் என யூகிக்கும் வகையில் கதையின் போக்கை கொண்டு சென்றிருப்பார் கல்கி. ஆனால் படத்தில் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் என்று உறுதியா சொல்லிவிடுகிறார்கள்.

 

பெரிய பழுவேட்டரையர் மரணம்

நந்தினியின் மீதான மோகத்தால் அவரின் பின்புலம் தெரியாமல் அவரை திருமணம் செய்துகொள்ளும் பெரிய பழுவேட்டரையர், கடைசியில் கடம்பூர் மாளிகையில் நடக்கும் சம்பவத்தின் போது தான் தன் மனைவியின் சுயரூபத்தை அறிவார். பின்னர் தன்னுடைய பேரன் ஆதித்த கரிகாலனின் இறப்புக்கு தானும் ஒரு காரணம் எனக் கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறப்பார். நாவலில் அப்படி இருந்தாலும், படத்தில் பெரிய பழுவேட்டரையர் இறுதிவரை உயிருடனே இருப்பார்.

உண்மையான மதுராந்தகன் எங்கே?

கல்கி எழுதிய நாவலின்படி மதுராந்தகன் கேரக்டர் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும். உண்மையில் வீர பாண்டியனின் மகனான மதுராந்தகன், சிறு வயதில் செய்யப்பட்ட ஆள்மாறாட்டம் காரணமாக சோழ அரண்மனையில் மதுராந்தகனாக மாறி இருப்பார். பின்னர் சேந்தன் அமுதன் தான் உண்மையான மதுராந்தகன் என்பது தெரிந்ததும், அவருக்கு மணிமகுடம் சூட்டி அரசனாக்குவார்கள். ஆனால் படத்தில் இதையெல்லாம் தவிர்த்து இருக்கும் மணிரத்னம், ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட கதையெல்லாம் சொல்லாமல் அந்த கேரக்டரை சிம்பிளாக கடந்து சென்றிருக்கிறார்.

 

சேந்தன் அமுதன் - பூங்குழலி கல்யாணம்

நாவலின்படி சமுத்திரக்குமாரி பூங்குழலி, முதலில் அருண்மொழி வர்மன் மீது காதல் வயப்படுவார். அவரை திருமணம் செய்துகொண்டால் அரச வாழ்க்கை கிடைக்கும் என ஆசைப்படும் அவர், பின்னர் மனம்மாறி சேந்தன் அமுதனை கரம்பிடித்துக் கொள்வார். பின் சேந்தன் அமுதன் தான் உண்மையான மதுராந்தகன் என தெரிந்ததும் அவர் விரும்பிய அரச வாழ்க்கையும் கிடைக்கும். ஆனால் படத்தில் சேந்தன் அமுதனை பூங்குழலி நிராகரிக்கும் படி காட்டி உள்ளனர்.

இப்படி எக்கச்சக்கமான மாற்றங்களை செய்து தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களில் முடித்திருக்கிறார் மணிரத்னம். 

https://tamil.asianetnews.com/gallery/cinema/what-are-the-changes-done-by-maniratnam-in-ps-movie-compare-to-kalki-s-ponniyin-selvan-novel-rtwqkc#image8 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று IMAX அரங்கில் பார்த்தேன். முதல் பாகத்தை அமேசன் வழியாகப் பார்த்ததால் இரண்டாம் பாகம் சிறப்பானதாக எனக்குத் தெரிந்தது. ஆனால், முதல் பாகத்தையும் IMAX அரங்கில் பார்த்த வீட்டினர் இரண்டு பாகங்களுமே சிறப்பெனச் சொல்கின்றனர்.

இரண்டாம் பாகம் கொஞ்சம் முதலாவதை விட கதை விளங்கக் கூடியதாக இருக்கிறது (நான் கல்கியின் நாவல் வாசிக்கவில்லை).

"லைகா ப்றொடக்ஷன்", தயாரிப்பு சுபாஸ்கரன் ஆகிய எழுத்தோட்டங்கள் வந்த போது பெருமையுணர்வு மன ஓரத்தில் சற்று எட்டிப் பார்த்தது.

பல சிறப்பம்சங்கள், சாதாரண தமிழ் சினிமாக்களிலிருந்து பொ.செ 2 ஐ வேறுபடுத்திக் காட்டுகிறது: முதலாவது, அழகிய நதி போல நகரும் கதை: சமகால சம்பவங்கள், பின் கதை, முன் கதையெல்லாம் பல  துண்டுகள் கொண்ட புதிரைப் பின்னுவது போல பின்னியிருக்கின்றனர்.

ரவி வர்மாவின் ஒளிப்பதிவு: வேற லெவல்!

இசை : சமயங்களில் பிளிறலோடும் , சில சமயங்களில் மயிலிறகின் வருடலோடும், திரைக்கதை, ஒளிப்பதிவுக்கு அடுத்த படியாக மூன்றாவது பரிமாணமாக இசை என்று சொல்லலாம்.

மிகப்பெறுமதியான தயாரிப்பு👍!

  • கருத்துக்கள உறவுகள்

PS 2 படம் பார்த்தவர்கள் எழுப்பும் சர்ச்சை; உண்மையில் புத்தகத்தில் இருந்து என்னென்ன மாற்றப்பட்டுள்ளன?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூலக்கதை மாற்றப் பட்டது சர்ச்சையாக ஏன் பார்க்கப் படுகிறதென விளங்கவில்லை. திரைக்கதை எழுதும் போது, அனேகமான நூல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் மாற்றங்கள் செய்வது சாதாரணமான விடயம். அதுவும் ஒரு நீண்ட கதையை 6 மணி நேரங்களுள் சுருக்கி விடும் போது பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் -2 PS-2 -Review

Posted by : கவிதா | Kavitha on 11:27

 

படம் சாதாரணமாக இருக்கு. ஏன் ஆஹா ஒஹோ ன்னு எழுதறாங்கன்னு தெரியல. அதிலும் சிலர் பாகுபலி யை மிஞ்சிவிட்டதாக எழுதுவது சத்தியமா ஏன்னு புரியல. பாகுபலி பிரம்மாண்டம். இதில் அப்படி ஒன்றும் பிரம்மாண்டமில்லை.

நடிகர் கார்த்தியை தவிர எல்லா நடிகர்களின் முகத்திலும் மணிரத்னத்தின் முகத்தை ஒட்டிவிட்டு படத்தைப் பார்த்தால் தெரியும், ஒரே மாதிரியான வசன உச்சரிப்புகள், எந்த உணர்ச்சியானாலும் அதே முகபாவனை.. பாவனைன்னு க்கூட சொல்லமுடியாது.

2F3A4749%20(1).jpeg
ஐஸ்வர்யாராய் விக்ரம் வரும் கடைசி காட்சிகளை அதிகமாக பாராட்டுகிறார்கள். அந்தம்மா என்னவோ எங்கேயோ பார்த்தபடி/முழித்தபடி/வெறித்தபடி முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வசனம் பேசுகிறார். விக்ரம் பதிலுக்கு அதே மாதிரியான முழித்த பார்வையோடு அல்லது அதற்கான முயற்சியோடு கொஞ்சம் நெற்றியை சுருக்கி பேசுகிறார். என்னத்த சூப்பரான நடிப்பு இதில் இருக்குன்னு தெரியல.. Over hyped scene by public.

 

சுந்தரசோழர் எங்கேயுமே சுந்தரசோழராக தெரியாமல் ' ஹாய் செல்லம்' னே சொல்றமாதிரி இருந்தது எனக்கு. தலையை எப்பவும் போல ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

வானதி , பூங்குழலி & மணிமேகலை கதாப்பாத்திரங்கள் புத்தங்கத்தில் வேற லெவலில் இருக்கும். படத்தில் அவர்களும் மணிரத்னத்தின் முகத்தை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், btw மணிமேகலை படத்தில் இல்லவே இல்லை. 

சின்ன வயது நந்தினி, கரிகாலன் நடிப்பும் அதே. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் வசனத்தை பேசுவது, நடப்பது, ஓடுவது.. தளபதி'யில் ஆரம்பித்து துக்கம்/கோவம் னு வந்தால்.. ஆஆ..... ஓ ன்னு ஆகாயத்தைப் பார்த்து தொண்டக்கிழிய கத்துவது தான் மணிரத்னத்தின் ஸ்டைல். இதை விக்ரம் பிரபு 2-3 இடங்களில் செய்யும் போது கடுப்பாகிறது. ஏன் கத்தறாரு.. அழத்தானே செய்யனும்னு தோணிச்சி. 

Untitled.jpg

குந்தவை வந்தியத்தேவன் காதல் காட்சியும் Over hyped scene by public.ரொம்ப சாதாரணமா இருக்கு. படகை ஓட்டிவந்த படகோட்டிகள் நட்ட நடு ஏரியில் எங்கே காணாப்போனார்கள் என்று தெரியவில்லை. குந்தவையின் குரலை வந்தியத்தேவனால் கண்டுபிடிக்க முடியலங்கறதே இந்த காட்சியின் உட்சக்கட்ட தவறு/தோல்வி. திரிஷாவின் வயது முகத்திலும் உடலிலும்.தெரிகிறது,

விக்ரம்பிரபு விக்ரமை சந்தித்து பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கி இறந்துபோனார் என்று சொல்லும் காட்சியில் விக்ரம் தலைமுடி காதை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்து விக்ரம் வரும் காட்சிகளில் எல்லாம் தலைமுடி தோளைத்தாண்டி வளர்ந்து தொங்குகிறது. 

சோழ சாம்ராஞ்சியத்தில் நாட்டின் உள் கட்டமைப்பு, கோட்டை, அதன் பாதுகாப்பு, கட்டிட அமைப்பு, பாதாள வழிகள் எல்லாம் எத்தனை பாதுகாப்போடு அமைக்கப்பட்டவை என்பதும்,  சோழர்களின் நிர்வாகத்திறமை வாய்பிளக்க வைத்த வரலாற்று சான்றுகளாக இன்னும் இருக்கின்றன.. இதில் பாதாள வழியில் உள்ள ஒரு சின்ன ஓட்டை வழியாக சுந்தர சோழரின் அறை தெரிய, அங்கிருந்து அவரை தாக்கி கொல்ல பாண்டியர்கள் முயற்சி செய்கிறார்கள். நம்ப முடியல. அதே சமயம், சுந்தர சோழர் அறையிலிருந்து அந்த துவாரம் தெரியவில்லை. எப்படி இது சாத்தியம். ஒரு அரசரின் அறைக்கு இவ்வளவு தான் பாதுகாப்பா? இதைக்கூடவா இத்தனைப்பெரிய படத்திற்கு home work செய்யல?. 

ஊமைஅரசி - இந்தம்மா தான் பொன்னியின் செல்வனின் hidden queen. இவரை பின்பக்கத்திலிருந்து சில காட்சிகளில் காட்டிவிட்டு, முகத்தை காட்டும் போது கொன்றுவிடுகிறார்கள்.

ஜெயம்ரவி தான் கதாநாயகன், ஆனால் பொம்மை போல எப்பவும் ஒரு புன்முறுவலோடு, மணிரத்னத்தின் நாயகனாக வளம் வருகிறார்.

ஜெயசித்ரா - பாவமா இருக்காங்க. அதே மணிரத்னத்தின் முகமூடி. பிரபு ஒரு காட்சியில் நன்றாக நடித்துள்ளார், முகமூடியில்லை. சரத்குமார், பார்த்திபன் எல்லாம் சுமார். ஒரு வேளை நன்றாக நடிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், மணிரத்னம் அவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்க வாய்பில்லை.

character-posters-from-ponniyin-selvan-239.webp

 

நாகை புத்தபீடம்  பிரம்மாண்டம், இதனை கடல் அடித்துசெல்லும் காட்சி ஒன்று புத்தகத்தில் இருக்கும், அது படத்திலில்லை. ஏமாற்றம்.  

கடைசியில் போர் தேவையில்லாத ஆணி. 

இசைப்புயலின் இசை படத்திற்கு +. BGM ரொம்பவே நல்லாயிருக்கு.

மூலக்கதை" பொன்னியின் செல்வன்" னு டைட்டிலில் வருகிறது. அதனால்.. அதிலிருந்து இது எடுக்கப்பட்டதுன்னு நினைச்சிக்கிலாம். யாரும் எடுக்கவே முடியாதுன்னு விட்டுவிட்டுதை, மணிரத்னம் எடுத்து இயக்கி வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுகள். A Manirathnam movie. Historical movie in his view & stand. 

எல்லாவற்றையும் விட இன்ட்டலெக்சுவல் சுஹாசினியை படத்திலும் எழுத்திலும் பேச்சிலும் எங்கும் கொண்டுவராமல் இருந்ததற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி & பாராட்டுகள். 

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம். 

 Pictures courtesy : Thankyou google.

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2023/05/2-ps-2-review.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறு, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் என்று பார்க்காமல் மணிரத்னம் வர்த்தக சினிமா என்ற விதத்தில் தான் படத்தை அணுக வேண்டி உள்ளது.   யாவும் கற்பனை !!

முதலாம் பாகம் பொன்னியின் செல்வன் 
2ஆம் பாகம் நந்தினியின் காதலர்கள்  (ஆதித்த கரிகாலன், பெரிய பழுவேட்டரையர், வந்திய தேவன், பார்த்தீப சோழன்..) இப்படி நீண்ட வரிசையில் வருவோர் போவோர் எல்லாம் அவள் அழகில் மயங்கி சூழ்ச்சி வலையில் வீழ்கிறார்கள். (வந்திய தேவன் தவிர)
வீராதி வீரனாக போற்றப்படும் ஆதித்ய கரிகாலன் வெறும் காதல் விரக்தியில் மாண்டு போவதை போல (அதுவும் தற்கொலை பாணியில்)  காட்சி அமைக்கப்பட்டிருப்பது,  
அவரின் மறைவு வந்திய தேவனும், தாத்தாவாக இருக்கும் படை தளபதி இருவரை தவிர வெறு எவருமே பதறாமல் சோகத்தை காட்டாமல் போவதை போல் துரித காட்சி அமைப்பு அபத்தமாக இருந்தது. 
படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகலும் இருக்கின்றது:
உதாரணம், பொன்னியின் செல்வர் நோயுற்று விகாரையில் வைத்து சிகிச்சை அளித்து குணமாகி மேல் மாடத்தில் இருந்து மக்களிடம் பேசும் காட்சியில் பாண்டிய ஆபத்து படை ஒருவனும் மன்னருக்கு பக்கத்தில் வந்திய தேவன், ஆழ்வார்க்கடியான் ஆகியோரோடு சேர்ந்தே நிற்பார்!!

அவ்வளவு பெரிய பாதுகாப்பான தஞ்சை அரண்மனையில் சர்வ சாதாரணமாக  கண்டவன் நின்றவனும் உள்ளே ஆயுதங்களோடு புகுவது,

தவிர நிறைய கதாபாத்திரங்களை கொண்ட படம் என்கிற வகையில் சில முகங்கள் supporting actors  and actress பிழையான கூட்டத்தில் பிழையான இடங்களில் நிட்கிறார்கள்.  

56 இட்கு மேற்பட்ட போர்க்கள வீரத்தழும்புகளை தாங்கிய பெரிய பழுவேட்டரையர், கடைசி காட்சியில் சண்டை  செய்யாமலேயே அடி வாங்கி, அரண்மனையை விட்டே குண்டுகட்டாக தூக்காப்பட்டு கடத்தப்பட்டு எங்கோ அனாதையாய் கிடப்பது.

சைவ மக்களை ஏதோ சூடு காட்டு அகோரிகள் போல சடாமுடி, விபூதி, பட்டை, கொட்டை என காட்டி இருப்பது..
இலங்கை பௌத்தர்களை, துறவிகளை நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்கள் போல் காட்சி அமைத்தது. 
இப்படி பலவற்றை உணரக்கூடிய மாதிரி இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Sasi_varnam said:

சைவ மக்களை ஏதோ சூடு காட்டு அகோரிகள் போல சடாமுடி, விபூதி, பட்டை, கொட்டை என காட்டி இருப்பது..
இலங்கை பௌத்தர்களை, துறவிகளை நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்கள் போல் காட்சி அமைத்தது. 
இப்படி பலவற்றை உணரக்கூடிய மாதிரி இருந்தது.

உங்கள் திரைவிமர்சனத்திற்கு நன்றி சசி.


உங்களிடம் கேட்கின்றேன்? மணிரத்தினம் எந்த திரைப்படத்திலாவது தமிழரை அல்லது தமிழர் சார்ந்த கலை,கொள்கை,மதம் என்பவற்றை கொச்சைப்படுத்தாமல் விட்டது உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sasi_varnam said:

தமிழர் வரலாறு, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் என்று பார்க்காமல் மணிரத்னம் வர்த்தக சினிமா என்ற விதத்தில் தான் படத்தை அணுக வேண்டி உள்ளது.   யாவும் கற்பனை !!

 

நன்றி சசி, 

சோழர்கள் இருந்தார்கள், சிறப்பாக ஆண்டார்கள், பல்வேறு சமகால இராச்சியங்கள், சிற்றரசுகளோடு போரிட்டார்கள் - இவை யாவும்  வரலாற்று உண்மைகள். இந்த உண்மைகளை வைத்து கல்கி படைத்த வரலாற்றுப் புனைவு தான் பொ.செ நாவல். கல்கியின் கற்பனையோடு தனது கற்பனையையும் வைத்துப் படைத்தது தான் பொ.செ திரைப்படங்கள். இதை "யாவும் கற்பனை" என்பதை "நியூஸ் பிளாஷாக" நீங்கள் அடையாளம் காட்டியிருப்பது ஆச்சரியம் தருகிறது. கல்கியின் நாவல் உண்மை வரலாறென நம்பியதால் இந்த நிலையா? 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வெளியே இருப்பவர்களால்  இவை தமிழர் வரலாறு குறித்தும்  பேசும் நாவல் / திரைப்படமாக பொ.செ  னை  பார்க்கும் பார்வை இருக்கிறது. காரணம் ராஜ ராஜ சோழன் எனும் தமிழ் மன்னனின் மேல் இருக்கும் விம்பம். நானும் கூட அந்த ரகமாக இருந்திருக்கிறேன். 

16 hours ago, குமாரசாமி said:

உங்கள் திரைவிமர்சனத்திற்கு நன்றி சசி.


உங்களிடம் கேட்கின்றேன்? மணிரத்தினம் எந்த திரைப்படத்திலாவது தமிழரை அல்லது தமிழர் சார்ந்த கலை,கொள்கை,மதம் என்பவற்றை கொச்சைப்படுத்தாமல் விட்டது உண்டா?

மணியின் பார்ப்பன அரசியல் புரிகிறது. அவரின் எல்லா படங்களும் அந்த கருத்தியலை பேசியதா என்று சரியாக தெரியவில்லை. இருக்கலாம். 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.