Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலிக்கடவுச்சீட்டுடன் கைதான சீனப் பயணி - இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் தலையீட்டில் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

22 MAY, 2023 | 11:09 AM
image

போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.

18ம் திகதி கொழும்பு விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த சீன பயணிகள் வேறு நாட்டொன்றின் கடவுச்சீட்டை கையளித்துள்ளனர் அவை போலியான கடவுச்சீட்டுகள் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்.

https://www.virakesari.lk/article/155815

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

 

இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்.

இது தான்... ஸ்ரீலங்கா.
போலி கடவுச் சீட்டுடன் வந்தவர்களை ஒரு அமைச்சர் தலையிட்டு 
விடுதலை செய்யும் அளவுக்கு, சட்டம் கெட்டுப் போய் உள்ளது.

ஒரு முதலீட்டாளர் என்றால்... போலி கடவுச் சீட்டுடன் வரலாமா?
அவர் போலியை பாவிக்க வேண்டிய அவசியம் என்ன?
அவர்... நாட்டில், நேர்மையான முறையில் தமது முதலீடுகளை செய்வாரா..?
என்றெல்லாம்  சிங்களவனுக்கு சிந்திக்க தெரியவில்லையே...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது தான்... ஸ்ரீலங்கா.
போலி கடவுச் சீட்டுடன் வந்தவர்களை ஒரு அமைச்சர் தலையிட்டு 
விடுதலை செய்யும் அளவுக்கு, சட்டம் கெட்டுப் போய் உள்ளது.

ஒரு முதலீட்டாளர் என்றால்... போலி கடவுச் சீட்டுடன் வரலாமா?
அவர் போலியை பாவிக்க வேண்டிய அவசியம் என்ன?
அவர்... நாட்டில், நேர்மையான முறையில் தமது முதலீடுகளை செய்வாரா..?
என்றெல்லாம்  சிங்களவனுக்கு சிந்திக்க தெரியவில்லையே...

இந்த விசயத்தை கேள்விப்பட்ட சீனத்தூதரகம், இதனை ஏற்கமுடியாது என்று விபரம் கோரியுளள்ளதால், இலங்கையரசு வேட்டியுரிந்த நிலையில் விசாரணைக்கு உத்தரவிடடுள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சீனாக்காரன் எண்டு சப்பான்காரனும் வந்து நிக்கலாம். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இது தான்... ஸ்ரீலங்கா.
போலி கடவுச் சீட்டுடன் வந்தவர்களை ஒரு அமைச்சர் தலையிட்டு 
விடுதலை செய்யும் அளவுக்கு, சட்டம் கெட்டுப் போய் உள்ளது.

ஒரு முதலீட்டாளர் என்றால்... போலி கடவுச் சீட்டுடன் வரலாமா?
அவர் போலியை பாவிக்க வேண்டிய அவசியம் என்ன?
அவர்... நாட்டில், நேர்மையான முறையில் தமது முதலீடுகளை செய்வாரா..?
என்றெல்லாம்  சிங்களவனுக்கு சிந்திக்க தெரியவில்லையே...

புத்தரின் போதனையும் தெரியவில்லை பிக்குகளுக்கு தங்கள் சுய அடாவடிகளை போதிக்கிறார்கள்,நாட்டின் சட்டமும் தெரியவில்லை  அமைச்சர்களுக்கு சீர்கெடுக்கிறார்கள் நாட்டை.  நாடு சீரழிவதற்கும், சுரண்டுவதற்கும் இதைவிட வேறென்ன வேண்டும்? இனவாத, மதவாத போதை தலைக்கேறி என்ன பேசுகிறோம், செய்கிறோம் என்று தெரியாமல் கடன் மட்டும் வாங்கி வீராப்பு பேச, சண்டித்தனம் காட்ட தெரிகிறது.   இதுகளின் முட்டாள்தனத்தை பாவித்து வந்தவன் போனவன் எல்லாம் நாட்டை பங்கு போட நினைக்கிறான்.

சிந்திக்க தெரிந்த ஒரு அமைச்சர் நாட்டில் இருந்திருந்தால் நாடு இவ்வளவு பேரழிவைச் சந்தித்திருக்காது. இருவருக்கும் இடையில் தவறான கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கலாம், அதனாலேயே அவர்கள் இவரை தொடர்பு கொண்டு தம்மை விடுவித்துக்கொண்டுள்ளனர். விசாரணையில் தனக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிக்கை விடுவார். எல்லா முறைகேடான  விசாரணைகளும் நிலுவையில் உள்ளன. யாரை யார் தண்டிப்பது? நாடே ஊழலிலும் சுரண்டலிலும் மிதக்குது. அதை மறைக்க, இனவாத திருடர்களிடம் புத்தர் மாட்டுப்பட்டு தப்பிக்க வழிதெரியாமல் முழிக்கிறார்!     

 

  • கருத்துக்கள உறவுகள்

சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகாரிகளிடம் வாக்குமூலம்!

சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகாரிகளிடம் வாக்குமூலம்!

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீன பிரஜை ஒருவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சி செய்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1332521

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை டீபோட் பண்ணஉத்தரவு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஆளை டீபோட் பண்ணஉத்தரவு

இராஜங்க  அமைச்சரின் செல்வாக்கு அம்புட்டுத்தானா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இராஜங்க  அமைச்சரின் செல்வாக்கு அம்புட்டுத்தானா.

ஏர்போட்டீல இருந்து போனைப் போட்டு, மாட்டீட்டன் பொஸ், சோட் அவுட் பண்ணு. வரேக்க ஒரு ஜொனி வாக்கரோடை வர்றன். நைற் ஒரு பார்ட்டியை போடலாம்...

மகிந்தவின் ஆட்கள் எப்படி இருப்பினமாம்??

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

போலி கடவுசீட்டில் இந்த பிச்சைகார நாட்டுக்குள் வருகிறார்கள் என்றால் அவர்கள் யார் என்பது புரிகிறது 😀

  • கருத்துக்கள உறவுகள்

nitrous oxide இங்கு கிட்டதட்ட தடை அதாங்க சிரிப்பு வாயு  ************************************ சில முறைகளில்  இருக்கும் போதை களை விட அதிக போதை கொடுப்பது  இந்தவாயுவின்  முக்கிய உற்பத்தி சைனாவில் இருந்துதான்  அமேசனில் விற்பனை ஆகினது சைனா அரசு மறைமுக போதை  உற்பத்திகளை தமது முகவர்கள் மூலம் உலகெங்கும் ஊக்குவிக்கிறது . வளர்ந்த பிள்ளைகள் பலூனுடன் விளையாடினல் எச்சரிக்கையாகவும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

போலி கடவுசீட்டில் இந்த பிச்சைகார நாட்டுக்குள் வருகிறார்கள் என்றால் அவர்கள் யார் என்பது புரிகிறது 😀

 இலங்கை ஒரு ஒழுங்கு, நீதி, நிஞாயம், சட்டம் இல்லாத, திறமையற்ற ஊழல் நிறைந்த நாடு என்பது உலகமே அறிந்ததே! ஒவ்வொரு அமைச்சர் ஒவ்வொரு சட்டம், தன் அமைச்சையும் அதன் பிரச்சனைகளையும் பார்க்க, தீர்க்கத் தெரியாதவர் மற்ற அமைச்சு பிரச்சனைகளில் தலையிட்டு அறிக்கை விடுவார். இதெல்லாம் தெரியாததா? உலகமே நாள்தோறும் பாத்து மகிழுதோ சிரிக்குதோ,  இந்த சீனப்பிரஜைக்கு தெரியாமலா இருக்கும்? போலிகடவுச்சீட்டுடன் எத்தனை நாட்டுக்காரர் அண்மையில் வந்து சென்றுள்ளார்கள்? ஏன் அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இராஜங்க  அமைச்சரின் செல்வாக்கு அம்புட்டுத்தானா.

அதிகாரிகள் அமைச்சரின் தவறான முடிவுக்கு கட்டுப்படடவர்கள் அல்ல. அப்போதே அவர்கள் தடுத்து வைத்திருக்கலாம். இப்போதும் கூட விசாரணை அதிகாரிகள் பக்கம்தான் திரும்பி இருக்கிறது. அவர்கள்தான் இதட்கு பதில் கூற வேண்டும். எனவே அமைச்சரின் செல்வாக்கு என்று கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இதுதான் நிலைமை. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்-சீன தூதரகம்!

இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்-சீன தூதரகம்!

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் சீன பிரஜை ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வர்த்தகம் .தொழில், கல்வி மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக இலங்கைக்கு வரும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு வருகை தரும் சீனப் பிரஜைகள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் மத மற்றும் கலாசார பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும் என்றும் தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இரண்டு கடவுச்சீட்களுடன் இலங்கை வந்த சீனர் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1332652

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கைக்காக சீனரை பாராட்டலாம்.........!  👆

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இந்த அறிக்கைக்காக சீனரை பாராட்டலாம்.........!  👆

இச்செயல் அவர்களையும் பாதிப்பதால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலி கடவுச்சீட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சீன நபர் சீனாவினால் தேடப்படுகிறார்

 

போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீன நபர் சீனாவில் தேடப்படும் நபர் என இலங்கையின் சட்டமா அதிபர் அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அவரை கைது செய்வதற்கான பிடியாணை சீன அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், தலையீட்டைத் தொடர்ந்து அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. .

2023ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி டுபாயிலிருந்து இரண்டு சீனப் பிரஜைகளும் ஒரு எகிப்தியரும் இலங்கைக்கு வந்திருந்தனர், மேலும் சீன ஆண்களில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கினியா கடவுச்சீட்டை காட்டியுள்ளார்.

BIA இன் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவர் தயாரித்த கடவுச்சீட்டு போலியானது என முடிவு செய்ததன் பேரில், சீனப் பிரஜைக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

அப்போது இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ இந்தச் சம்பவத்தில் தலையிட்டார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் கடிதமொன்றை அனுப்பி, தனது அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீனப் பிரஜை இலங்கை வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சீன கடவுச்சீட்டை பரிசீலித்து சீன நபரை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

“இலங்கையில் உள்ள சீன நிறுவனம், அவர் உண்மையான நபர் என்றும், அவர் சீன கடவுச்சீட்டை வைத்துள்ளார் என்றும், அவருக்கு விதிக்கப்படும் எந்த தண்டனைக்கும், அல்லது அவரை நாடு கடத்தும் முடிவுக்கும் தாங்களே பொறுப்பு என கூறியுள்ளனர். எனவே, நான் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் பேசினேன். சீன கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவரை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க முடியுமா என கேட்டேன். அவரது ஆலோசனையின் பேரில் கடிதத்தை அனுப்பினேன், நான் அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை” என இராஜாங்க அமைச்சர் விளக்கினார். .

சீன பிரஜை ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, சீனப் பிரஜையின் வசம் இருந்த கினியா கடவுச்சீட்டு போலியானது என்பதை INTERPOL உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

சீன கடவுச்சீட்டு உண்மையான ஆவணம் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கை வந்த சீனப் பிரஜை கடந்த செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.

சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சீன தூதரகம் மற்றும் இன்டர்போல் ஆகியவற்றின் உதவியுடன் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/255965

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

போலி கடவுச்சீட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சீன நபர் சீனாவினால் தேடப்படுகிறார்

இவரைத்தான்...  இராஜாங்க அமைச்சர்  அருந்திக பெர்ணாண்டோ,
வெளிநாட்டு தொழிலதிபர் என்று சொல்லி,  பிணை எடுத்தவர்.  😂 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

இவரைத்தான்...  இராஜாங்க அமைச்சர்  அருந்திக பெர்ணாண்டோ,
வெளிநாட்டு தொழிலதிபர் என்று சொல்லி,  பிணை எடுத்தவர்.  😂 🤣 

சீனாக்காரர் தூள் கடத்தல் தொடர்பில் சீனாவில் தேடப்படுகிறார். போனால், தலைல வெடி விழும். 

தன்னை சீனாவுக்கு அனுப்பக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குப்போட்டு, சீன தூதரகம் தன்னையும் ஈடுபடுத்தும் என்றவுடன் வாபஸ் வாங்கீட்டார்.

இவர் பாடு சிக்கல்தான். அதேவேளை இந்த அமைச்சரை நீக்காமல் வைத்திருக்கும் ரணிலை என்னென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீனாக்காரர் தூள் கடத்தல் தொடர்பில் சீனாவில் தேடப்படுகிறார். போனால், தலைல வெடி விழும். 

தன்னை சீனாவுக்கு அனுப்பக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குப்போட்டு, சீன தூதரகம் தன்னையும் ஈடுபடுத்தும் என்றவுடன் வாபஸ் வாங்கீட்டார்.

இவர் பாடு சிக்கல்தான். அதேவேளை இந்த அமைச்சரை நீக்காமல் வைத்திருக்கும் ரணிலை என்னென்பது?

ஒற்றை ஆளாக வந்த ரணிலுக்கு... ஒவ்வொரு எம்.பி., அமைச்சர்மாரின் ஆதரவும் தேவை.
இவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வெளிக்கிட்டால்... ரணில் வீட்டிற்கு போக வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

 

 அதேவேளை இந்த அமைச்சரை நீக்காமல் வைத்திருக்கும் ரணிலை என்னென்பது?

அரசியலில் இதெல்லாம் சகஜம். அப்படி நடவடிக்கை எடுக்க வெளிகிடடால் ரணில் ஐயாவுக்கு பிரச்சினையாகி விடும். இப்போதுஅவர் தனது கட்சியை வளர்ப்பதிலும், ஜனாதிபதி தேர்தல் பற்றியுமே சிந்தனை. இவை வெற்றியளிக்குமானால் சில வேளைகளில் நல்ல முடிவுகளை எடுக்கலாம்.  ஜெயவர்த்தனாவின் மருமகன் அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்கு வந்த சீனப் பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை : பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியாம் !

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2023 | 10:55 AM
image
 

இரு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்கு வந்த சீனப் பிரஜையை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

குறித்த நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் குறித்த சீன பிரஜையை கைது செய்ய அந்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த சீனப் பிரஜை கினி இராச்சிய கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது அது போலியானது என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்து கைது செய்தனர்.

இதேவேளை, கைதான மறுநாளான 19 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பில் தலையீடு செய்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி, குறித்த சீனப் பிரஜை தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.

அவரிடமுள்ள சீனக் கடவுச்சீட்டை கவனத்திற்கொண்டு அவரை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் பின்னர் விடுவிக்கப்பட்ட குறித்த சீனப் பிரஜை  மீண்டும் கடந்த 22 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/156490

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டுப் பிரஜை வெகுவிரைவில் நாடு கடத்தப்படுவார் - குடிவரவு குடியகல்வு திணைக்களம்

Published By: NANTHINI

03 JUN, 2023 | 10:50 AM
image
 

(இராஜதுரை ஹஷான்)

டவுச்சீட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் சீன நாட்டு பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்த சீன நாட்டுப் பிரஜை கடவுச்சீட்டு மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள சீன தூதரகத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நேரடியாக தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த சீன பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவரை நாட்டுக்குள் அனுமதித்தமை தொடர்பில் திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் திணைக்களத்தினால் எவருக்கும் பயணத் தடை விதிக்க முடியாது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர் வெளிநாடு செல்வதற்கு விமானச் சீட்டு பெற்றுக்கொள்ளும்போது அதனை திணைக்களம் அறிந்துகொள்ளும் தொழில்நுட்ப வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/156825

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2023 at 15:30, ஏராளன் said:

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் குறித்த சீன பிரஜையை கைது செய்ய அந்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

On 30/5/2023 at 15:30, ஏராளன் said:

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பில் தலையீடு செய்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி, குறித்த சீனப் பிரஜை தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.

அருந்திக்க பெர்னாண்டோவையும் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும். அவரது அமைச்சின்  கீழ் என்ன திட்டம் செயற்படுகிறது என வெளிப்படுத்தவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்பட்டார் சீனப்பிரஜை

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கினி இராஜ்ஜியத்தின் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் அண்மையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, அவர் சீன வெளிநாட்டு கடவுச்சீட்டை காண்பித்துள்ளார்.

இதன்பின்னர், அவருக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விடயம் சர்சைக்குரியதாக மாறியதை அடுத்து குறித்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். கைதான சீன பிரஜை, தம்மை சொந்த நாட்டிற்கு நாடு கடத்தாது, டுபாய்க்கு நாடு கடத்துமாறு கோரி நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்காக சீன நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த சீனப் பிரஜை மீண்டும் அந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/257521

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.