Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும்

osamamonkqd4.jpg

1. தோற்றம்:

பூமியில் வாழும் லட்சக்கணக்கான ஜீவராசிகளுக்குள் மனிதன் மட்டும் தனித்துவமான ஒரு உயிரினம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இதற்குக்காரணமாக மனிதனின் பகுத்தறிவு சாட்டப்படுகிறது. மனிதன் தோன்றிய காலந்தொட்டு ஏதோ ஒரு வகையில் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையை இலகுவாக்க முற்பட்டுள்ளான். இன்றைய ஆய்வுகளின் படி மனிதனின் முதலாவது பகுத்தறிவு சார்ந்த நடவடிக்கையாக கற்களினை ஆயுதமாகப் பாவித்தமை கூறப்படுகிறது. இதன்பின்னர், மனிதனின் படிப்படியான வளர்ச்சியானது கலை, கலாச்சாரம், சமயம், விஞ்ஞானம் என பல கிளைகளில் பரந்து விரிந்துள்ளது.

மனிதனின் இந்த வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்வை வளப்படுத்தி வருகின்ற அதேவேளை மனிதனின் இந்த கண்டுபிடிப்புக்கள் மற்றும் வளர்ச்சிகளால் மனிதனும் சில சமயம் பூமியை மனிதனுடன் பங்கிட்டுக்கொள்ளும் ஏனைய விலங்குகளும் அசௌகரியங்களுக்கு ஆளாகிவருவதும் மறுக்கமுடியாத உண்மை. உதாரணமாக, மனிதனின் தொழில் நுட்ப வளர்ச்சியை எடுத்துக்கொள்வோம். பூமியிலுள்ள ஏனைய சில விலங்குகள் போல மனிதனும் அடிக்கடி சண்டை பிடிக்கும் வழக்கம் கொண்டவன். ஆனால், ஏனைய விலங்குகள் சண்டையிடும்போது அவை இறப்பது வெகு அரிதாகவே நடக்கின்றது. ஆனால், மனிதன் சண்டையிடும் போது அதுபெரும் யுத்தமாக மாறி மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் இறந்த வரலாறுகள் உண்டு. இது தவிர இந்த சண்டைகளால் இந்தப் பூமியை ஒரு நொடியில் அழிக்கும் வல்லமையை மனிதனின் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதே போல ஒவ்வொரு துறையிலு மனிதன், தன் வளர்ச்சிக்கென உருவாக்கியவைகளின் பக்க விளைவுகளால் அடிக்கடி துன்பப்படும் காட்சிகள் நாளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. சில விடயங்களில் இந்த துன்பங்கள் வெறும் annoyance ஆக இருக்கிற அதேவேளை, சில விடயங்களில் அவை பெரும் அழிவுகளாக இருக்கின்றன.

மனிதன் தோன்றிய காலந்தொட்டு அவன் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு சமயத்தை பின்பற்றுபவனாகவும் இருந்து வருகின்றான். கடவுள் என்ற ஒரு கருப்பொருளை கொண்டிராத நாகரீகங்கள் இல்லை என்றே சொல்லலாம். எனவே, சமயங்களை பின்பற்றுவதால் மனிதன் பல நன்மைகளை அடைந்துள்ள அதே வேளை, மேலே விபரிக்கப்பட்டது போன்ற பக்க விளைவுகளினால் side effects அவன் துன்பப்படுவதும் மறுக்க முடியாதது. அந்தவகையில் இவ்வாறான சமயம் சார்ந்த பக்க விளைவுகளினால், இன்றைய உலக ஒழுங்கில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மாற்றம் மற்றும் தமிழீழத் தமிழரின் எதிர்கால இருப்பை தீர்மானிக்கும் ஒரு காரணியாக அவை மாறிவருதல் தொடர்பாக அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

2. சிக்கலான தொடர்புகள்:

மனிதனின் மேற்சொன்ன வளர்ச்சிகளின் பாதகமான பக்கவிளைவுகள் ஒருபோதும் தனித்தனியாக நிகழ்வதில்லை. அதாவது, மதம் சம்பந்தமான ஒரு பாதகமான விளைவு ஏற்படும்போது அது மனிதனின் மதம் சம்பந்தமான வாழ்வை மட்டும் பாதிப்பதில்லை. அது மனிதனை பல வகையாக பாதிக்கிறது. ஒவ்வொரு துறையும் ஒன்றிலொன்று சார்ந்திருப்பதனாலேயே இது நிகழ்கிறது. உதாரணமாக, மதம் சம்பந்தமான ஒரு கோயில் கட்டுவதற்கு, கட்டட தொழில்நுட்பம் பாவிக்கப்படுவதை உதாரணமாக கூறலாம். அது போல, அண்மையில் அமெரிக்காவில் நடந்த செப் 11 தாக்குதலின் போது, மதம் சார்ந்த அடிப்படைவாதிகள் தமது தாக்குதலுக்கு அதிநவீன விமானத்தை (aviation) பாவித்தனர், அதேவேளை தாக்குதல் நடந்தது ஒரு அதிஉயரமான கட்டடத்திற்கு என்பதனால் (civil engineering) அழிவுகளும் அதி உச்சமாக இருந்தது (அவ்வாறு ஒரு உயரமான கட்டடம் இல்லாதிருந்தால் அல்லது தரையில் உள்ள ஒரு இலக்கு தாக்கப்பட்டிருந்தால் இவ்வாறான அழிவு ஏற்பட்டிருக்காது!) இன்றைய நிகழ்வுகள் (அது நன்மையாயினும் சரி தீமையாயினும் சரி) எவ்வாறு மனிதனின் ஒவ்வொரு துறையிலான வளர்ச்சியுடனும் மிகச் சிக்கலான உறவைக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

3. மத அடிப்படைவாதம்:

மனிதனை ஒரு சமூக விலங்கு என்று கூறுவார்கள். இந்தவகையில் மனிதன் ஒரு சமூகமாக உருவாகும் போது அந்த சமூகத்திற்குரிய பல வழமைகள் உருவாகுகின்றன. அந்த வகையில் பல ஆயிரக்கணக்கான வருடமான வழமைகளை கொண்டுள்ள ஒரு சமூக கட்டமைப்பாக சமயம் காணப்படுகிறது. சமயம் என்ற சமூகம் ஒரு நிறுவனமயப் பட்டமையும் அதற்கான விதிகள் உருவானமையும் கண்கூடு. இன்றய நவீன உலகில் ஒருவர் பல சமூகங்களில் அங்கத்தவராக இருப்பது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக சமயம் என்ற சமூகத்தில் அங்கத்தவராக இருப்பவர் விஞ்ஞானம் என்ற (வேறொரு) சமூகத்திலும், கலாச்சாரம் என்ற (இன்னொரு) சமூகத்திலும் அங்கத்தவராயிருக்கிறார். அதாவது முன்பு சமயத்துடன் கூட இருந்த பிரிவுகள் (departments) இன்று தனித்தனியாக பிரிந்து தனிச் சமூகமாகி விட்ட நிலையில் சமயம் என்ற பிரிவு தனது விதிமுறைகளில் மாற்றம் செய்வது அவசியமாகின்றது. ஒரு தொழில்சார் நிறுவனத்தைப் போலல்லாது சமயமானது அநேகமாக ஒரு அணுகமுடியாத ஒரு நிறைவேற்று இயக்குனரை (un approachable CEO) கொண்டிருக்கின்றது. எனவே ஒரு சமயத்தில் உருவாக்கப்படும் ஒரு விதி (அநேகமாக இந்த விதி நூற்றுக்கணக்கான வருட வழக்கத்தில் தானாக உருவாகிறது) காலத்திற்கேற்ப மாற்றம்பெறுவது முடியாததாகின்றது. நிறைவேற்று இயக்குனர் இல்லாத நிலையில் அல்லது அவரின் கருத்தை அறிய முடியாத நிலையில் உப நிர்வாகிகள் பெரும்பாலும் தேவைப்படும் மாற்றங்களை எடுக்கத் விரும்புவதில்லை (இது ஏன் என்று அலசுவது இங்கு நோக்கமல்ல.) அவ்வாறு மாற்றங்களை அனுமதிப்பவர்கள் சிலசமயம் அவர்களது பொறுப்புக்களிலிருந்து துரத்தியடிக்கப்படுவதும் உண்டு. எனவே சமயங்கள் பொதுவாக அடிப்படைவாதக் கருத்துக்களைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன.

எம் ஒவ்வொருவரினது மனமும் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதிலும் புதிய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதிலும் வெவ்வேறு வேகத்தில் செயல்படுகின்றது. இருவேறு வகையான மனங்கள் ஒத்திசைய முற்படும் போது (resonance) அங்கு ஒரு குழப்பம் (conflict) ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனாலும் காலப்போக்கில் அவ்விரு மனங்களும் தக்குள் சமரசம் செய்துகொண்டு இயல்பாக வாழப்பழகிவிடுவதும் உண்டு. பல மனங்கள் ஒன்று சேர்ந்து உருவாவதே சமூகம். சமூகங்கள் தமக்குள் வழமைகளை உருவாக்குவதும் பின்னர் படிப்படியாக அவற்றை மாற்றுவதும் காலம்காலமாக நடந்து வருகின்றது. சமூகங்கள் மத ரீதியாக, இன ரீதியாக, தொழில் ரீதியாக என பல விதமான சமூகங்கள் இன்று எம்முள் நிலவி வருகின்றன. அவற்றுக்கிடையில் ஒத்திசைவும் முரண்பாடும் ஏற்படுவது நாளும் நிகழ்ந்து வருகின்றது.

பல சமூகங்கள் வெற்றிகரமாக ஒத்திசைவதும் அது கைகூடாமல் போய் முரண்பாடும் அழிவும் ஏற்படுவது இன்றும் கண்கூடு. உதாரணமாக, இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் மாட்சை இருவேறு சமூகமாக இருந்து பார்க்கும் மக்கட் கூட்டம் மாகாணரீதியிலான மாட்சை பார்க்க ஒன்றுபட்டு ஒரு சமூகமாகிறது. சிலசமயம் மக்களிடை முரண்பாடுகள் ஏற்பட்டு ஆட்டம் நிறுத்தப்படுகிறது. ஒத்து வாழ முடியாத மக்கள் கூட்டங்கள் பிரிந்து தனி சமூகங்கள்/மாகாணங்கள்/நாடுகளாகின்றன.

இந்த வகையில் இஸ்லாம் என்ற சமய ரீதியிலான சமூகமும் மேற்கு என்ற ஒரு கலாசார ரீதியிலான சமூகமும் ஒத்திசைய முற்படுகையில் அங்கும் குழப்பங்கள் ஏற்படுகிறது. இந்தக் குழப்பங்கள் அரசியல்/ பொருளாதாரம் போன்ற பல சிக்கலான முனைகளில் விரிவடையும் போது அங்கு குழப்பங்கள் அதிகரிக்கின்றன. இவ்வாறு இஸ்லாமிற்கும் மேற்கிற்கும் ஏற்பட இருந்த ஒத்திசைவு கைகூடாமல் போய் (அது எவ்வாறு ஏன் கைகூடமல் போனது என்று ஆராய்வது இங்கு நோக்கமல்ல) அது ஒரு போட்டியாக மாறி போராக நடந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே, பொருளாதார, ஆயுத ரீதியில் பன்மடங்கு பலத்தைக் கொண்ட மேற்குடன் மோதுவதற்கும் (மனித)வளங்கள் தேவைப்படுகிறது. எனவே இஸ்லாம் என்ற மதத்தின் பேரால் மக்களை திரட்டுவதே பலவழிகளிலும் உகந்தது என்று கண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத ரீதியாக மக்களை திரட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் மேற்கிற்கெதிரான போரில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற கோசம் முக்கிய இடம் பெறுகின்றது.

4. இஸ்லாமிய மற்றும் பௌத்த மத அடிப்படைவாதம்: அதிர்ச்சிகரமான ஒற்றுமைகள்

ஒருவகையில் பார்க்கும்போது, ஈராக்கில் மிகக் குறுகிய காலத்தில் அரங்கேறிய விடயங்கள் இலங்கைத் தீவில் மிக நீண்ட கால வீச்சில் (span) நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதாவது, ஈராக்கில் ஒரு சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரான சதாம்குசேன் ஆட்சிசெய்கிறார். பிறகு அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றுகிறது. பின் அமெரிக்கா ஈராக்கின் அதிகாரத்தை பெரும்பான்மையினரின் கைகளில் ஒப்படைக்கிறது. அதன் பின்னர், பல ஆண்டுகாலமாக இருந்த தமது வெறியை சிறுபான்மையினரை துன்பப்படுத்துவதன்மூலம் தீர்த்துக்கொள்ள பெரும்பான்மையினத்தை சேர்ந்த தீவிர சக்திகள் முற்படுகின்றன. இதனால் பெரும் அழிவுகள் ஏற்படுகின்றன. இலங்கையிலும் கூட, முழு இலங்கையும் பல முறை தமிழ் மன்னர்களால் ஆழப்படுகிறது. பிரித்தானியர் முழு இலங்கையையும் கைப்பற்றுகின்றனர். பின்னர் அவர்கள் ஆட்சியை பெரும்பான்மையினரிடம் ஒப்படைக்கின்றனர். சிங்களவர்கள் இப்போது அந்த அதிகாரத்தைக் கொண்டு சிறுபான்மையினரை துன்புறுத்துகின்றனர். தமிழர்களை விட்டால் மீண்டும் முழு இலங்கையையும் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் ஒருகாரணமாகக் கூட இருக்கலாம். ஈராக்குடன் ஒவ்வொரு விடயத்தையும் ஒப்பிடுவது பொருத்தமில்லாத அதேவேளை ஒரு பெரிய அளவில் பார்க்கும் போது பல பொருத்தபாடுகள் தெரிவது மறுக்கமுடியாதது.

இந்த வகையில், இலங்கையில் தமிழருக்கு எதிராக மக்களை அணிதிரட்டவேண்டிய தேவை இயல்பாக வருகின்றது. பெரும்பாலான சிங்களவர்கள் பௌத்தர்களாக இருந்த படியாலும் மதம் போன்ற விடயங்கள் மிக இலகுவில் மக்களை போதை போன்று அடிமையாக்கக் கூடியவை என்பதாலும் பௌத்தமதத்தை முன்னிலைப்படுத்தி தமிழர் எதிர்ப்புக்கு மக்கள் அணிதிரட்டப்பட்டனர். பேரினவாதிகள், அவ்வப்போது சிங்களம் என்ற மொழியையும் பாவித்து மக்களை அணிதிரட்டத் தவறவில்லை. உதாரணமாக தனிச்சிங்கள சட்டத்தைக் கூறலாம். தேவைக்கேற்ப சிங்கள பௌத்தம் என்ற பதமும் பாவிக்கப்பட்டு தமிழருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தமிழரை அழிக்கும் திட்டம் ஆரம்ப காலத்தில் மிக நாகரீகமாக முன்னெடுக்கப்படுகிறது. அதாவது தமிழ் மொழியை அழித்துவிட்டால் தமிழரும் “அழிந்து”விடுவர் என்ற கணிப்பில் தனிச்சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தமிழை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. பின்நாளில் தனிச்சிங்களச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் நடைமுறையில் தனிச் சிங்களமே இருந்தது. அகிம்சை முறையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முயன்ற தமிழர் குழுக்கள் அதிகாரத்தை பாவித்து வன்முறையால் அடக்கப்பட்டன. ஆனால் பின்நாளில், தமிழர் ஒருங்கிணைக்கப்பட்ட தமது எதிர்ப்பை ஆயுத ரீதியாக நிறுவியபோது பேரினவாதத்தின் “நாகரீக” முகமூடி வேறுவழியின்றி உதிர்ந்து போக, இறுதி ஆயுதமாக / அடித்தள (crude) எதிர்ப்பாக கலப்படமற்ற பேரினவாதத்தை கக்கவேண்டிய நிலைக்கு ஆட்சியிலுள்ளவர்கள் தள்ளப்பட்டனர். அமெரிக்கர்களையும் அமெரிக்காவையும் அழிப்பதே தமது குறிக்கோள் என எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கூச்சலிடுகின்றனரோ, அதே போல, வேறுவழியின்றி, தமிழரை அழிப்பதே தமது குறிக்கோள் என சிங்கள பேரினவாதிகளும் மதத் தலைவர்களும் நேரடியாகவே கூச்சலிடத்தொடங்கினர். இதன் பல கட்டங்கள் இன்றைய நிதர்சனமாக நாளும் அரங்கேறுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இனி, இன்று மேற்குலகை உலுக்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குக்கும் பௌத்த மத அடிப்படைவாதிகளுக்கும் இடையில் உள்ள சில அதிர்ச்சிகரமான ஒற்றுமைகளை உற்று நோக்குவோம்:

  • அடிப்படைவாதிகளின் பிடியில் அரசு:
    மத அடிப்படைவாதம் வேகமாக வளர்வதற்கு இன்றியமையாத ஒரு காரணி ஆட்சி அதிகாரமாகும். வேறொருவகையில் சொன்னால், ஆட்சி அதிகாரம் உறுதியாக வேறுதிசையில் இருக்குமிடத்து மத அடிப்படைவதிகளால் வெற்றிகரமாக செயற்பட முடியாதுபோகும். எனவே, ஆட்சி எங்கு மத அடிப்படடவாதிகளின் செல்வாக்கு அல்லது பிடியில் இருக்கிறதோ அங்கு மத அடிப்ப்டைவாதமும் செழித்து வளருவதை காணலாம்.

    இதற்கு உதரணமாக இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்து மதம் சார்ந்த பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியிலிருந்தமை, தலிபான்கள் ஆட்சியிலிருந்த போது வரலாற்றுப் பழமைவாய்ந்த பமியன் புத்தர் சிலை உடைத்து அழிக்கப்பட்டமை மற்றும் காலம் காலமாக பௌத்த மதத் தலைவர்களின் பிடியில் அரசு இருக்கையில் நடக்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றை கூறலாம். தற்போது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் சொர்க்கபுரியாக உள்ள பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் ஆட்சியில் மதத் தலைவர்களின் செல்வாக்கு கணிசமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல இலங்கையிலும் புத்த துறவிகளின் கைகளிலேயெ ஆட்சி உள்ளது. அதாவதுதலதாமாளிகையிலுள்ள புத்தரின் பல்லை பிக்குகள் எடுத்துவிட்டால் அரசு தானாக பதவிவிலக வேண்டுமென்ற நிலை உள்ளதும் இதை இன்னும் மக்கள் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
    politicsnh3.jpg


  • சிறுவர் ஆட்சேர்ப்பு (Child recruitment):
    சமயரீதியான அடிப்படைவாதக் கருத்துக்களை போதிப்பதற்கு ஏதுவானவர்களாக இவற்றின் போசகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளவர் பெரும்பாலும் சிறுவர்களே. சுயமாக சிந்திக்க முடியாத 5-10 வயதுகளிலேயே இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு (recruiting) போதிக்கப்படுகிறார்கள்.
    இதற்கு உதாரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கற்றுத்தரும் பள்ளியான மடராஸா வையும் விகாரைகளில் காணப்படும் பன்சலாக்களையும் குரிப்பிடலாம். ஐந்து வயதிற்கும் குறைந்த பாலகத்துறவிகள் இங்கு சர்வசாதாரணம்.
    childmonklt9.jpg


  • இனவாதக் கோஷங்கள்:
    அடிப்படைவாதிகளின் இருப்புக்கு மிக முக்கியமாக அமைவது மக்கள் மனன்களில் திட்டமிட்டு விதைக்கப்படும் காழ்ப்புணர்ச்சியாகும். இந்த வகையில் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வரலாற்றுரீதியாக இருக்கும் பகையுணர்ச்சியைக் குறிப்பிடலாம். மக்களை தம்பால் ஈர்ப்பதற்கு, காலத்திற்கு ஒவ்வாத வகையில் இந்த பகையுணர்ச்சியை கிளறுவது இந்த அடிப்படிவாதிகளின் வாடிக்கையாகவும் தமது இருப்பிற்கான ஒரு தேவையாகவும் இருப்பதை காணலாம். இதற்கு உதாரணமாக, ஈரானிய அதிபர் மகமுடினேஜாட் அடிக்கடி ஜூதர்கள் மில்லியன் கணக்கில் கொல்லப்பட்ட கோலோகாஸ்ட் என்பது ஒரு புனைகதை என்று கூறிவருவதை கூறலாம். இதே போல, சிங்கள துறவிகள் மற்றும் அவர்கள் ஆதரவு தேவைப்பட்ட அரசியல்வாதிகள் அடிக்கடி தமிழ் எதிர்ப்புக் கருத்துக்களை கூறுவது மட்டுமல்லாது காலம் காலமாக செயலிலும் காட்டி வந்துள்ளனர்.
    rheteorze3.jpg

5. மத அடிப்படை வாதத்துக்கெதிரான போரின் எதிர்காலம்:

மதங்கள் பொதுவாக அடிப்படைவாதக் கருத்துக்களை கொண்டிருப்பதால் தேவைப்படும்போது அவற்றை ஆயுதமாக்க விஷமிகள் தவறுவதில்லை. அந்த வகையில் தான் இன்றைய அல்குவேடா வையும் இலங்கையின் சிங்கள பேரின வாதிகளையும் நோக்கவேண்டியுள்ளது. அதாவது மதத்தின் உப தலைவர்களான பொறுப்பு (மதத் தலைவர்கள் மூலம்) அவர்களிடம் ஏற்கனவே உள்ளது. எனவே, மாற்று வழிகள் எதுவும் கைகூடாத நிலையில் வேறுவழி இன்றி அவர்களின் இறுதி மார்க்கமாக இவை அமைந்துள்ளன.

ஒப்பிட முடியாத ஆயுத, பொருளாதார வளங்களை கொண்ட மேற்கிற்கு எதிரான போரிற்கான ஆட்திரட்டலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் நன்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போல, தமிழருக்கெதிரான போரில், சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கோஷம் வாக்குகளை சிங்களத் தலமைகளுக்கு அள்ளி வழங்குவது கண்கூடு.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கெதிராக மேற்கின் செயல்முறை வடிவங்களாக பலவிடயங்களை கருத முடியும். அவற்றில் முக்கியமானது மத அடிப்படைவாதிகள் என்ற சொற்பிரயோகமும் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டது போல எல்லாச் சமயங்களிலும் அடிப்படைவாதக் கருத்துக்கள் இருந்தபோதும், மத அடிப்படைவாதம் என்ற சொல் இன்று மிகப்பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கின்ற அதே வேளை அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மட்டுமே குறிக்கின்றது. “மத அடிப்படைவாதிகளை” ஒடுக்குவதற்கான நேரடி மற்றும் திரைமறைவு வேலைகள் என மேற்கின் சகல அரசுகளும் தமது அத்தனை படைகளையும் இந்தவேலையில் முடுக்கிவிட்டுள்ளன.

இலங்கையில் கருக்கொண்டு வளர்ந்துவரும் பௌத்தமத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் தனித்தரப்பாக தமிழர் தரப்பு மட்டும் இருக்கிறது. மேலும், உலகில் வேறுநாடுகளிலுள் பௌத்தமத துறவிகள் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் “துறவிகளாக” மட்டும் இருக்கிறார்கள். எனவே, பௌத்த மத அடிப்படைவாதம் என்ற சொல் பிரபல்யம் பெற முடியாமல் இலங்கைத் தமிழரினதும் இலங்கையின் பௌத்தமத அடிப்படைவாதத்தினதும் எதிர்காலம் survival of the fittest என்ற தத்துவத்திற்கமைய முடிவை நோக்கி காத்திருக்கின்றன.

எனவே, சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கெதிரான போரில் புலம்பெயர் மற்றும் புலத்திலுள்ள தமிழரும் வெற்றியை உறுதி செய்வதிலும் பின்னர் மீண்டும் உறுதி செய்வதிலும் ஈடுபடாமல் உலகநாடுகள் வந்து சுதந்திரம் வாங்கித் தரும் என்றோ அல்லது புலிகள் எல்லாம் செய்துமுடிப்பார்கள் என்றோ வாளாவிருப்பின் இப்போது தெரிவது தான் முடிவிலும் முடிவாகும்.

உலகில் போர் மூளும்போது இலபம் அடையும் ஒரு தரப்பாக இருப்பவர்கள் ஆயுத உற்பத்தியாளரும் அது சம்பந்தமான ஆரய்ச்சியாளரும். இன்றய மேற்குலகின் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கெதிரான போரில் ஆராய்ச்சித் துறையில் மத அடிப்படைவாதம் சம்பந்தமான ஆராய்ச்சியும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இஸ்லாம் தொடர்பான பல புத்தகங்கள் best seller களாக வந்தன. அத்துடன் இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் இன்றும் கூட மிக விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்த வகையில், தமிழர் தரப்பை பயங்கரவாதிகளாக காட்டி “பயங்கர வாதத்திற்கெதிரான” மேற்கின் போரில் தானும் இணைந்து கொள்ள இலங்கை காட்டிய ஆர்வத்தை இலங்கையில் மையங்கொண்டு வீறுகொண்டு வளர்ந்து வரும் பௌத்த மத அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துவதில் தமிழ் கல்விச்சமூகம் காட்டவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்த வகையில், மத அடிப்படைவாதம் என்ற விடயத்தில் இலங்கையின் பௌத்த மத அடிப்படைவாதிகளை அம்பலப்படுத்தவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு ஆராய்ச்சிமூலமாக பலவகையான நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

1) இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள நீண்டகாலத்தில் முன்னெடுக்க எடுக்கப்படும்/விவாதிக்கப்படும் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து அவ்வாறான நடவடிக்கைகளை நாமும் எமக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்துவது என அறிதல்

2) இலங்கையின் பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான ஆதாரபூர்வமான விடயங்களை இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு விளக்குவதன் மூலம் அவர்களையும் பௌத்தமத அடிப்படைவாதிகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்யத் தூண்டுதல்

3) சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகும் பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான கட்டுரைகள் எமது பிரச்சாரத்துக்கு வலுச்சேர்க்கும்.

போன்றன அவற்றுள் சில.

இது தொடர்பான ஆராய்ச்சிக் கல்வியை தொடர பல்வேறுவகைகளில் ஊக்குவிப்பு வழங்குவது அவசியம். உதாரணமாக, பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான ஆராய்ச்சிக்கல்வியை தொடர முன்வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம்.

இலங்கைத் தீவில் தங்களின் வரலாற்றை மகாவம்சத்தில் பின்னிணைப்பாக (Appendix) பிக்குமார் எழுதப்போகிறார்களா, அல்லது வேலை வெட்டியில்லாத மேலைத்தேய ஆய்வாளர் பொழுது போக்கிற்காக எழுதப் போகிறார்களா அல்லது தாங்களே எழுதப்போகிறார்களா என்று தீர்மானிக்கவேண்டிய கட்டத்தில் தமிழீழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.

Edited by பண்டிதர்

பெளத்த மத அடிப்படைவாதம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் அதற்கிருக்கும் ஒற்றுமைகளையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். நல்லதொரு முயற்சி.

தலையங்கத்தில் சிறு மாற்றம் தேவை இலங்கையும் என்று வராது சிறீலாங்கவும் என்று வருவது பொருத்தம்.

மற்றது பொதுவாக பொளத்தம் என்றில்லாது சிறீலங்காவில் பின்பற்றப்படும் தேரவாத பொளத்தத்தை குறிப்பிட்டு சொல்லவது நல்லது. இது ஏனைய நாடுகளில் உள்ள பொளத்த மதத்தவரை சீண்டாது இருக்க உதவும்.

மற்றும் படி நல்லதொரு அலசல். இதே கண்ணோட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக பல பிரச்சாரங்களை சர்வதேச மொழியில் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த பேரினவாதம்.. மத அடிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் ஒருங்கே கொண்டது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளில் இருந்து சிங்கள பெளத்த பேரினவாதிகள் சில விடயங்களில் மாறுபடுகின்றனர்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இஸ்லாத்துக்கு எதிராக செயற்படும் அமைப்புக்கள், நாடுகள், (குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி மேற்குநாடுகள்), மக்கள் என்பவற்றுக்கு எதிராகவே செயற்பட முனைப்புக் காட்டுகின்றனர்.

ஆனால் சிங்கள பெளத்த பேரினவாதிகள்.. தமிழர்களுக்கு எதிராக மட்டுமன்றி.. கிறீஸ்தவர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்று இலங்கை என்ற எல்லைக்குள் எல்லோரையும் எதிர்க்கின்றனர்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளோடு பெளத்த பேரினவாதிகளை ஒருமித்து இனங்காட்டுவது.. தமிழர்களின் பால் இஸ்லாமிய சகோதரர்களுக்கு உள்ள இணைக்கப்பாடுகளைக் கேள்விக் குறியாக்கும். இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தமிழர்களின் பிரதேச இருப்பை.. தமிழினத்தின் இருப்பை தகர்க்க முழு மூச்சில் சிங்களப் பேரினவாதிகள் போல செயற்படுகின்றது என்று கூற முடியாது. ஜிகாத் போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களுக்கு எதிராக இருப்பினும்.. அது சிங்கள பெளத்த பேரினவாதத்தினதும் முஸ்லீம் அரசியல்வாதிகளினதும் தேவைகளுக்கான தூண்டுதலின் பேரில் நிகழ்பவை. அவை இஸ்லாமித மத அடிப்படைவாதத்தை தமது செயலுக்காக உச்சரித்துக்கொள்கின்றவே தவிர அவர்களின் செயலுக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் கீழ் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

சர்வதேச அளவில் தமிழர்களுக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் பிரச்சனைகள் எழுந்ததாக தெரியவில்லை. எதிர்காலத்தில் எழவும் வாய்ப்புக்கள் குறைவே. அந்த வகையில் சிங்களப் பேரினவாதிகளோடு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு நெருக்கம் காட்டுவது போன்ற தமிழர் தரப்பு ஆய்வுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்பான தமிழர்களின் பார்வை என்பது தவறானதாக உலகில் இனங்காட்டப்படவும்.. இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தமிழர்களுக்கும் எதிராக திசை திருப்பவும் சந்தர்ப்பவாத முஸ்லீம்களாலும், சிங்கள பெளத்த பேரினவாதிகளாலும், சர்வதேச அரங்கில் தமது வல்லாதிக்கத்தை நிறுவ போட்டிபோடும் சக்திகளாலும் பாவிக்க இடமளிக்கப்படலாம் என்பதால் இவ்வகை அலசல்கள் குறித்து தமிழர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகிறது.

எமது போராட்டத்துக்கு அமெரிக்க வல்லாதிக்கத்தின் ஆதரவுக்கரமோ.. இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் ஆதரவுக் கரமோ அல்லது உலகில் பிற வல்லாதிக்க சக்திகளின் ஆதரவுக் கரமோ நேரடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அவை சிங்களப் பேரினவாதத்துக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. சிங்களப் பேரினவாதத்துக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் முடிச்சுப்போட்டுக் காட்டி.. இஸ்லாமிய மத அடிப்படைவாத முஸ்லீம்களையும் தமிழர்களுக்கு எதிராக செயற்படத் தூண்டுவது.. பேரினவாதிகளுக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கும் எம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்த வாய்ப்பளிக்குமே தவிர.. இஸ்லாமிய சகோதரர்களினுடனான மத அடிப்படையிலான பகைமையற்ற தமிழர்களின் பக்கச்சார்பற்ற போக்கை சந்தேகிக்கவும் வைக்கும்.

எனவே இது தொடர்பான பிரச்சாரங்களின் பின்னணிகள்.. சிங்களப் பேரினவாததுக்கு அனுகூலமாகவும் எமக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் கருத்திற் கொண்டு தமிழர்கள் செயற்பட வேண்டும்.

இராக்கில் ஈழத்தமிழர் ஒருவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது அவர்கள் அவரை மேற்குலக மற்றும் மேற்குலக கூட்டாளி நாடுகளின் பிரஜைகளைப் போல நடத்தாமல் மென்போக்கோடு நடத்தினர் என்பதையும் இதற்கு தமிழர்களின் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான பக்கச்சார்ப்பற்ற நிலையே காரணம் என்பதும் குறிப்பிடக் கூடியது.

எனவே இவ்வகைப் பிரச்சாரங்களை சர்வதேச அரங்குக் கொண்டு வரும் போது தமிழர்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். சிங்களப் பேரினவாதத்துக்குள் மத அடிப்படைவாதத்தை இனங்காட்டுதல் என்பது வேறு.. அதற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்துக்கும் முடிச்சுப் போட்டு பிரச்சாரம் செய்வது என்பது தமிழர்கள் வலிந்து இன்னொரு முனையில் எதிர்ப்பை எதிர்கொள்ள துணிவதாகவே நோக்க வேண்டும். அது தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்க விரும்பும் சர்வதேச மற்றும் பிராந்திய மற்றும் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு உதவி செய்வதாகவும் தமிழர்களை சர்வதேச அரங்களில் மேலும் மேலும் தனிமைப்படுத்தும் செயலைச் செய்யத் தூண்டுவதாகவும் அமையலாம். எனவே இவை தொடர்பில் தமிழர்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். கவர்சிகரமான பிரச்சார வடிவமென்று முன் பின் சிந்திக்காது, மாறுபட்ட வடிவில் இருக்கிறது என்பதற்காக பிரச்சார வடிவங்களின் நன்மை தீமைகளை ஆராயாது வரவேற்கும் நிலை தமிழர்களுக்கு ஆரோக்கியமானதல்ல.அவை தமிழர்களின் நிலையை சர்வதேச அரங்கில் மிகப் பலவீனப்படுத்திவிடக் கூடியதும்.. தமிழர்கள் இருப்பைக் கேள்விக் குறியாக்க கூடியதுமாகலாம். சர்வதேச அரங்கில் இவற்றை முன்னிறுத்த முனைவோர்.. முதலில் இவை குறித்து ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இவ்வாறு முன்னிறுத முனையும் சக்திகள் வல்லாதிக்கத்துக்கு அல்லது பேரினவாத சக்திகளுக்குக் கூட மறைமுகமாக ஒத்துழைக்கும் சக்திகளாகக் கூட இருக்கலாம் என்ற வகையிலும் தமிழர்கள் சிந்திக்க வேண்டியது இவ்விக்கட்டான சூழலில் அவசியமானதாகும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால போவான் உங்கள் வித்தியாசமான பார்வை மற்றும் கருத்துக்கள் இற்கு நன்றி.

முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தமிழருக்கு ஆபத்து என்று எங்கும் குறிப்பிடவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதிகள் எவ்வாறு மேற்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்களோ அதே போல சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் இலங்கைத்தமிழரின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதே கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளைப் பற்றி அவர்கள் எழுதினால் முஸ்லிம்கள் எல்லாரும் எங்களுடன் கோச்சுக்கொண்டு விடுவார்கள் என்பது தவறான கருத்து. புலிகளை அவதூறு பேசினால் தமிழர்கள் எல்லாருமே அதை பேசனலாக எடுத்துக்கொள்வார்கள் என்ற மனநிலைய extrapolate பண்ணியதன் விளைவாக மேற்சொன்ன கருத்தை நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம்கள் எல்லாரும் அல்குவேடாவுடன் அப்படிஒரு மனநிலையில் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள்!

மேலும், பயங்கரவாதத்தெற்கெதிரான போரில் பங்காளியாக தானும் இணைய எவ்வாறு சிங்கள அரசு முயன்றது தெரியும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் உங்கள் வித்தியாசமான பார்வை மற்றும் கருத்துக்கள் இற்கு நன்றி.

முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தமிழருக்கு ஆபத்து என்று எங்கும் குறிப்பிடவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதிகள் எவ்வாறு மேற்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்களோ அதே போல சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் இலங்கைத்தமிழரின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதே கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளைப் பற்றி அவர்கள் எழுதினால் முஸ்லிம்கள் எல்லாரும் எங்களுடன் கோச்சுக்கொண்டு விடுவார்கள் என்பது தவறான கருத்து. புலிகளை அவதூறு பேசினால் தமிழர்கள் எல்லாருமே அதை பேசனலாக எடுத்துக்கொள்வார்கள் என்ற மனநிலைய extrapolate பண்ணியதன் விளைவாக மேற்சொன்ன கருத்தை நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம்கள் எல்லாரும் அல்குவேடாவுடன் அப்படிஒரு மனநிலையில் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள்!

மேலும், பயங்கரவாதத்தெற்கெதிரான போரில் பங்காளியாக தானும் இணைய எவ்வாறு சிங்கள அரசு முயன்றது தெரியும் தானே?

இலங்கை முஸ்லீம்களுக்கு அமெரிக்க வல்லாதிக்கத்தின் மீதும் அதன் கூட்டணி நாடுகள் மீதும் ஏன் சிங்களப் பேரினவாதிகள் மீதும் உள்ள நம்பிக்கையைவிட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதான நம்பிக்கை ஆதரவு என்பது அதிகம். உலகில் அனைத்து முஸ்லீம்களின் உள்ளுணர்விலும் இது இருக்கிறது. பலர் வெளிக்காட்ட முடியாத சூழலில் வாழ வைக்கப்பட்டுள்ளனர்.

சோவியத் காலத்திலேயே அமெரிக்கா.. இஸ்லாமிய உலகை குறித்து வைத்துச் செயற்படலாகிற்று. அதன் தொடர்ச்சிதான் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை பயங்கரவாதிகள் என்று வரையறுத்துக் கொண்டு அமெரிக்கா இஸ்லாமிய உலகில் தன் ஆதிக்கத்தை நிறுவச் செய்யும் யுத்தம். இவ்வேளையில் தமிழர்களாகிய நாம்.. சிங்கள பெளத்த பேரினவாதிகளின் மத அடிப்படை வாதத்தை இனங்காட்ட என்று இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் செயற்பாட்டை விமர்சித்து அமெரிக்கா பக்கம் நியாயம் இருப்பது போல காட்ட முனைவோம் என்றால் அது நிச்சயம் முஸ்லீம்களின் எதிர்ப்பை எம்மிடையே அதிகரிக்கும். அதேவேளை அது அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எம்மை நோக்கி நெருங்கிவர ஒரு போதும் உதவாது. ஆக அமெரிக்க வல்லாதிக்கத்தின் தேவையை நாம் நியாயப்படுத்தி இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளினதும் அதன் விசுவாச முஸ்லீம்களினதும் எதிர்ப்பை சந்தித்துக் கொள்வதால்.. அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி எழுமே தவிர அவர்கள் எம்மை அரவணைக்க முயல்வர் என்பது மிகவும் மோசமான சிந்தனை. தமிழர்களுக்கு ஆபத்தை தேடித்தரவல்ல ஒரு நிலை என்பதைத்தான் நான் இதில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இந்தியாவும் சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கொடுமைகளை நங்கு அறிந்திருந்தும்.. அதனைக் கட்டுப்படுத்த முயலவில்லை. மாறாக ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை தலிபான்கள் உடைத்த போது.. அதை பெளத்தத்துக்கு எதிரான இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் செயலாக அமெரிக்க மற்றும் மேற்குலக மற்றும் இந்திய ஊடகங்கள் உச்சரித்தன. சிங்கள பெளத்த பேரினவாதிகள் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் (இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும்) இந்த பெளத்த சிலை உடைப்பை மையமாகக் கொண்டு தொடர்பைச் சுட்டிக்காட்டினர்.

இப்போ நீங்களும் அதையே செய்கின்றீர்கள். இந்த இணைப்புக் காட்டல் தமிழர் தரப்புக்கு அநாவசிய சிக்கலை உண்டு பண்ணித்தருமே தவிர வல்லாதிக்க சக்திகளோ அல்லது பேரினவாத சக்திகளோ தமிழர்கள் மீது.. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை தமிழர்கள் விமர்சிக்கின்றனர் எதிர்க்கின்றனர் என்பதற்காக அனுதாபப்படப் தூண்டப் போவதில்லை. அதை விட தமிழர்கள் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மத அடிப்படைவாதத்தையும் அதன் இஸ்லாமிய கிறீஸ்தவ இந்து எதிர்ப்புணர்வையும் இனங்காட்டுதல் தமிழர்கள் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் அடையும் துன்பங்களை அதிகம் உலகம் உணரவும் அதன்பால் கவனம் செலுத்தவும் உதவும். இங்கும் கூட நாம் வல்லாதிக்க சக்திகள் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு எதிராக செயற்படத் தூண்டப்படுவர் என்பதை எதிர்பார்க்கக் கூடாது.

தமிழர்களையும் தமிழர் போராட்ட சக்திகளையும் தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தலாம் என்பதுதான் வல்லாதிக்க சக்திகளின் நோக்கம். இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு பலமான பின்புலம் இருப்பதால் அவர்களை ஒடுக்க அவர்கள் மீது அனுதாபமுள்ள இஸ்லாமிய உலகு மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்தி தனது வல்லாதிக்கத்தை நிறுவும் அதே சமயம் வளங்களையும் சுரண்டி வருகிறது. தமிழர்களின் போராட்டத்தை நசுக்க அதற்கு போர் தொடுக்க வேண்டிய அணுகுமுறை இன்னும் எழவில்லை. தற்போது அதற்கு மாற்றாகத்தான் தமிழர் தரப்பை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் போரை வல்லாதிக்க சக்திகள் பெளத்த பேரினவாதத்துடன் ஒத்துழைத்துச் செய்கின்றனர்.

வெளிப்பார்வைக்கு தமிழர்களின் போராட்ட சக்தி மீது அமெரிக்க பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடக்கவில்லை என்பது போலத் தோன்றினும்.. உண்மையில் அது வேறொரு வடிவில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்கப் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் குண்டுகளால் பாதிக்கப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் என்றால்.. அதன் கோட்பாட்டு அமுலாக்கத்தால் நசுக்கப்படுபவர்கள் தமிழர்கள். ஆக நாம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை அமெரிக்காவின் பார்வைக்கு ஏற்ப நோக்கி அவர்கள் மீது குற்றம் சாட்டுதலை நிறுத்திக் கொள்வதும்.. பக்கச்சார்பற்ற நிலையைக் கையாள்வதுமே எமக்கு முன்னுள்ள சிறந்த வழி.

நாம் இஸ்லாமிய சகோதரர்களோடு பகைக்க முடியாது. அவர்களின் எண்ணத்தில் நாம் அமெரிக்க சார்ப்பாளர்கள் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. அப்படி உருவாக்கி நாம் அமெரிக்காவிடமும் அதன் கூட்டாளிகளிடமும் எதையும் பெறப்போறதில்லை. மாறாக அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் சிங்கள பெளத்த பேரினவாதத்துடனான நெருக்கத்தை அதிகரிக்கவே செய்வோம். எம்மை நாமே பலவீனப்படுத்தி அழிந்து கொள்வோம். எனவே.. இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதம் சார்ந்து இஸ்லாமிய உலகு மீது அமெரிக்க வல்லாதிக்கம் செய்து வரும் ஆக்கிரமிப்பை நாம் நியாயப்படுத்த வேண்டிய தேவைக்கு அப்பால் உள்ளோம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

எனவே உலகின் வல்லாதிக்க சக்திகளின் செல்லப்பிள்ளையாக உள்ள சிங்கள பெளத்த பேரினவாத்துள் உள்ள மதவாதத்தை இனவாதத்தை இனங்காட்டுவதோடு நாம் நிறுத்திக் கொள்வதே வல்லாதிக்க சக்திகளின் இரட்டை அணுகுமுறையை உலகுக்கு அம்பலப்படுத்துவதோடு.. அமெரிக்க வல்லாதிக்க சக்தியினால் பாதிப்புற்று வரும் மக்களின் ஆதரவை எம் பக்கமும் எதிர்ப்புணர்வை சிங்கள பெளத்த பேரினவாத சக்திகள் மீதும் கொண்டு வர உதவும் வகையில் நாம் செயற்பட சிந்தித்தல் வேண்டும். அமெரிக்க சார்ப்பு அல்லது எதிர்ப்பு நிலையை எடுக்காதது போல இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை அமெரிக்கா கையாளும் முறை குறித்தும்.. முஸ்லீம்கள் குறித்தும் நாம் பக்கச்சார்பற்ற நிலையில் இருக்க முனைதல் நன்று.

அதைவிடுத்து... இஸ்லாமிய மத அடிப்படைவாதத்துக்கும், சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இஸ்லாமிய இந்து கிறீஸ்தவ எதிர்ப்பு மத அடிப்படை வாதத்துக்கும் ஒற்றுமை காட்டி.. நாம் இம்மதங்கள் மீதான எமது பக்கச்சார்பற்ற பகைமையற்ற நிலைக்குரிய தன்மையை தகர்த்து, அமெரிக்க வல்லாதிக்கத்தின் அணுகுமுறைக்கு ஆலவட்டம் பிடிக்கப் போய்.. அதன் பொறிக்குள் நாமே வீழ்ந்து மடிவது அவசியமா...??! சிந்தியுங்கள்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு ஆலவட்டம்பிடிக்கும் தொனி மேலேஉள்ள கட்டுரையில் இருக்கிறதா? மேற்கு என்ற சொல்லாடல் தானே பயன்படுத்தப்பட்டிருக்கிரது. தெரிந்தோ தெரியாமலோ, இன்று முழு மேற்கின் எதிர்ப்பையுமே முஸ்லிம் அடிப்படைவாதிகள் சம்பாதித்து வைத்திருப்பது உண்மைதானே?

"If you are not there for you, who else will" என்று ஒரு கேப்றூ பழமொழி இருக்கிறது. அதுபோல, இன்று மேற்கு முழுவதும் மத அடிப்படைவாதிகளால் தமக்கும் ஏன் கியூமானிற்றிக்குமே ஆபத்து என்று கூறி கவனத்தை தம் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார்கள். அது தொடர்பாக பல தியறிகளை உருவாக்கி மத அடிப்படைவாடதம் என்ராலே அது இஸ்லாமிய மதம் தான் என்ற கணக்கில் கதையை நகர்த்துகிரார்கள்.இச்லாமிய மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட மேற்கினர் எவ்வளவு பேர்வரும் ? ஒரு 10000? ஆனால் ஒன்றரை லட்சம் மக்களை இழந்தும் நாம் இன்னும் எமது கதையை சரியாக சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறோம். எனவே தான், மேற்கின் பார்வையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் எமது அனுபவத்தில் பௌத்த அடிப்படைவாதிகளையும் ஒப்பிட்டு இங்கு நோக்கப்பட்டது. அமெரிக்க வல்லாதிலக்கம் இதை வாசித்து எம்மை தூக்கி உச்சிமுகர்ந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை.

ஒருவகையில் பார்த்தால் இவ்வாறு இன்னொரு மத அடிப்படைவாதிகள் வெளிக்கொணரப்படுவதால் முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்மையே அன்றி தீமை எதுவுமுல்லை. அதாவது மத அடிப்படைத் தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லிம்கள் மட்டுமல்ல அது சிங்கள துறவிகளாகக் கூட இருக்கலாம் என்ற கருத்துருவாக்கத்தால் அவர்களுக்கும் நன்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு ஆலவட்டம்பிடிக்கும் தொனி மேலேஉள்ள கட்டுரையில் இருக்கிறதா? மேற்கு என்ற சொல்லாடல் தானே பயன்படுத்தப்பட்டிருக்கிரது. தெரிந்தோ தெரியாமலோ, இன்று முழு மேற்கின் எதிர்ப்பையுமே முஸ்லிம் அடிப்படைவாதிகள் சம்பாதித்து வைத்திருப்பது உண்மைதானே?

"If you are not there for you, who else will" என்று ஒரு கேப்றூ பழமொழி இருக்கிறது. அதுபோல, இன்று மேற்கு முழுவதும் மத அடிப்படைவாதிகளால் தமக்கும் ஏன் கியூமானிற்றிக்குமே ஆபத்து என்று கூறி கவனத்தை தம் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார்கள். அது தொடர்பாக பல தியறிகளை உருவாக்கி மத அடிப்படைவாடதம் என்ராலே அது இஸ்லாமிய மதம் தான் என்ற கணக்கில் கதையை நகர்த்துகிரார்கள்.இச்லாமிய மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட மேற்கினர் எவ்வளவு பேர்வரும் ? ஒரு 10000? ஆனால் ஒன்றரை லட்சம் மக்களை இழந்தும் நாம் இன்னும் எமது கதையை சரியாக சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறோம். எனவே தான், மேற்கின் பார்வையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் எமது அனுபவத்தில் பௌத்த அடிப்படைவாதிகளையும் ஒப்பிட்டு இங்கு நோக்கப்பட்டது. அமெரிக்க வல்லாதிலக்கம் இதை வாசித்து எம்மை தூக்கி உச்சிமுகர்ந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை.

ஒருவகையில் பார்த்தால் இவ்வாறு இன்னொரு மத அடிப்படைவாதிகள் வெளிக்கொணரப்படுவதால் முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்மையே அன்றி தீமை எதுவுமுல்லை. அதாவது மத அடிப்படைத் தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லிம்கள் மட்டுமல்ல அது சிங்கள துறவிகளாகக் கூட இருக்கலாம் என்ற கருத்துருவாக்கத்தால் அவர்களுக்கும் நன்மையே.

முஸ்லீம்கள் மத உணர்வாளர்களாகவே அதிகமாக உலகில் உள்ளனர். இந்த உண்மையை இலகுவாக எமது வாதத்துக்காகப் புறக்கணித்துக் கொண்டு நாம் செயற்திட்டங்களை வகுப்பது மிகவும் ஆபத்தானது. முஸ்லீம்களுக்கு இஸ்ரேல் மூலமாக அமெரிக்கா செய்துவரும் மத அடிப்படைவாத அராஜகம் குறித்து தெளிவான நிலை உள்ளது என்றே நினைகிறேன்.

தமிழர்கள் எமக்கு இஸ்லாமிய மத அடிப்படை வாதத்தை ஒப்பீடு செய்துதான் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மத அடிப்படைவாதத்தை விளக்க வேண்டும் என்ற நிலை இன்றில்லை. சில விடயங்களில் நாம் பாராமுகமாக இருப்பதே மேற்குலகு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நல்ல பெயர் எடுப்பது போல.. நாமும் செய்ய முயலலாம். அருகில் பாகிஸ்தானுக்குத் தெரியும் இந்திய இந்துமத அடிப்படைவாதிகளின் தீவிரத்தன்மை. ஆக தமிழர்கள், முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை பற்றித் தெளிவுறுத்த சிங்கள பெளத்த பேரிவாதத்துள் அடங்கியுள்ள மத அடிப்படைவாதத்தை வைத்துத்தான் விளக்கம் செய்ய வேண்டும் என்ற தேவை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த தொடர்புபடுத்தல்.. அமெரிக்க வல்லாதிக்கத்தினதும் உலகின் பிற வல்லாதிக்க சக்திகளினதும் இஸ்லாமிய உலகுக்கு எதிரான அணுகுமுறையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அணுகப்படும் முறையில் உள்ள தவறுகளால் எழுந்துள்ள...இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாட்டில் நீதி கற்பிக்கும் முஸ்லீம்களை நாம் பகைக்கவே வகை செய்யும். இது பேரினவாதிகளுக்கு அனுகூலமான ஒன்று. எதிராகப் பயன்படுத்துவதாக எண்ணிக் கொண்டு செயற்படுதல் பாதகமான விளைவுகளையே அதிகம் உண்டு பண்ணும்.

அதுமட்டுமன்றி சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இது மறைக்கவும் செய்வதுடன்.. ஏலவே குறிப்பிட்டது போல தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்களை மத அடிப்படையில் தூண்டி விடவும் எதிரிகளுக்கு வாய்ப்பளிக்கும். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதைதான் மிஞ்சும். தமிழர் பிரச்சனையில் சிறிதளவேணும் அனுதாபம் கொண்டுள்ள.. முஸ்லீம் உலகை சிங்கள பெளத்த பேரினவாதத்திற்காக முற்று முழுதாக இழக்கச் செய்யவே இப்படியான அநாவசிய இணைப்பூட்டல்கள் செய்யும். தமிழர்களின் போராட்ட சக்திகள் கூட இவ்வகை அணுகுமுறைகளை விரும்புவரா என்பது கேள்விக்குறியதே..??! :D

முஸ்லீம் மத அடிப்படைவாதத்தின் இன்றைய நிலை என்பது.. இன ஒடுக்குமுறையல்ல. இஸ்லாமிய மத விரோத சக்திகளை.. இஸ்லாமிய உலகை வல்லாதிக்கத்துள் அடக்க முயலும் சக்திகளை எதிர்ப்பதானது. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மத அடிப்படைவாதம் என்பது.. தமிழர்களின் முஸ்லீம்களின்ன் அடையாளங்களை அழித்து அவர்களின் இருப்பை.. இலங்கையில் அருகச் செய்தல்..! இவ்விரண்டுக்கும் இடையில் செயற்பாட்டுத்தளத்திலும் வேறுபாடுண்டு. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கொள்கை வகுப்பராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகும் இந்தியா சீனா பாகிஸ்தான் போன்ற பிராந்திய மேலாண்மை விரும்பிகளும் உள்ளனர். ஆனால் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்தின் பின்னால் விரும்பியோ விரும்பாமலோ.. மொத்த இஸ்லாமிய உலகும் இருக்கிறது. அதன் மத அடிப்படைவாதம் இன்றைய நிலையில் இஸ்லாத்தை பாதுகாப்பதும் அதன் மீதான வல்லாதிக்கத் திணிப்பை எதிர்ப்பதும் தான். அந்த வகையில் எமக்கு உடனடி எதிரி.. சிங்களப் பெளத்த பேரினவாதமே அன்றி வேறல்ல. எனவே இவர்களுக்காக நாம் இன்னொன்றை தவறான விளக்கங்களூடு இனங்காட்டப் போய்.. எப்படி தமிழர்களின் பிரச்சனையை சிறீலங்கா உலகுக் காட்டி வருகிறதோ அதே போல்தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை தான் அணுகுவதையும் அமெரிக்கா காட்டி வருகிறது.. எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொள்வது இன்றைய சூழலில் உசிதமான செயலும் அல்ல.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செப் 11 இற்கு பின் உடனடியான "பயங்கரவாதத்திற்கெதிரான" போரில் புஸ்சின் கோசம் "you are either with us or with them" எனறு இருந்தது. இன்று அது படுதோல்வியடைந்து ஈராக்கில் பல மத தலைவர்கள் அமெரிக்க படையுடன் கூட்டாக இயங்குவதைக் காண்கிறோம். அதே நிலை தான் பொதுவாக இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தொடர்பாக மேற்கிலும் காணப்படுகிறது. அதாவது, இஸ்லாம் வேறு, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் வேறு என்பதை பிரித்துணர்ந்து கொள்ளவேண்டிய நிலைக்கு முழுமேற்குமே தள்ளப்பட்டுள்ளது. இந்த புரிதலை அவர்கள் செயலிலும் காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.

மறுகரையில் பார்த்தால், ஹிஸ்புல்லா மற்றும் கமாஸ் போன்றவை கூட அல்குவேடா விலிருந்து தம்மை வேறுபடுத்திக்காட்ட முனைவனவாகவே இருக்கின்றன. பாலஸ்தீனத்தில் அமெக்காவின் கைப்பொம்மையான அரசு மக்கள் ஆதரவுடன் ஆட்சியிலிருக்கின்றது.

இவ்வாறான ஒரு கால கட்டத்தில், அமெரிக்காவின் ஆசீர்வாதம் இல்லாமல் தமிழீழ்ம் கைகூடாது என்ற ஒரு உலக நியதியில், பௌத்த மத அடிப்படைவாதிகளை வேறு எவ்வாறு அம்பலப்படுத்துவது?

மீண்டும் நான் இங்கு வலியுறுத்த விரும்புவது, இலங்கையின் பௌத்தம் ஒரு மத அடிப்படைவாதமாகி தமிழர்களை மட்டும் நசுக்குகிறது என்று் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை (கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களை எவ்வாறு அது நசுக்கமுயல்கிறது என்று குறிப்பிடாதது எனது தவறுதான்), மாறாக, எவ்வாறு ஆப்கானிஸ்தானில் அது மற்ற மதங்களை துடைத்து ஒரு தனிமதத்தை மட்டும் அங்கு நிறுவ முற்பட்டதோ அதே போல இலங்கையிலும் பௌத்தமதத்தை நிலைநிருத்தி மற்ற மதங்களை வேரோடு அழிக்க்க முற்படுகிறது என்று சொல்லுவதே நோக்கம்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னவோ.. அமெரிக்காவுக்கே தெரியாத சிங்கள பெளத்த பேரினவாதத்தை.. இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்டு.. இனங்காட்டுகின்றோம் என்பது போல இருக்கிறது.

நாங்கள் தெளிவாகக் குறிப்பிடுவது இதைத்தான்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மத அடிப்படைவாதத்தை இனங்காட்டுதல் அவசியம். ஆனால் அதற்காக மூன்றாம் தரப்பொன்றின் நியாயங்களை சரி வரப் புரிந்து கொள்ளாது எம்மோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத தரப்பொன்றை நாம் இவர்களுடன் இணைத்துக் கொண்டு தவறான அணுகுமுறையின் கீழ் வழிநடப்பின் அது எமக்கான இஸ்லாமிய உலகின் ஆதரவை இழக்கச் செய்யின் அது சர்வதேச அரங்கில் மிகவும் தனிமைப்பட்ட சூழலில் எம்மை தள்ளிட நினைக்கும் எதிரிகளுக்கும் அதன் அருவரிடிகளுக்கும் நாமே ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது போலாகும்.

இன்றும் கூட எமது போராட்ட நிஜாயங்களை சொல்வதற்கு அல்ஜஜீரா போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்குலக, இந்திய நிறுவனங்களைக் காட்டிலும் கூடிய அனுதாபத்தைக் கொண்டிருக்கின்றன. அவர்கள்.. அடக்குமுறைகளின் வலிகளை அனுபவிக்கின்றவர்கள் என்ற வகையில். இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்பதை அதற்கு எதிரான அமெரிக்க வல்லாதிக்கத்தின் பயங்கரவாதத்துடன் ஒப்பிடும் போது தவறான அணுகுமுறை என்று கூறிட முடியாது. அதேபோல் இஸ்ரேலின் இஸ்லாமிய உலகுக்கு எதிரான அணுகுமுறைகளோடு ஒப்பிடும் போது அல்குய்டா ஒன்றும் மோசமானதாக இல்லை என்றே கூறலாம்.

அல்குடைடாவின் செயற்பாடுகள் இஸ்லாமிய உலகுக்குள் வல்லாதிக்க திணிப்பை எதிர்ப்பது என்பதாகத்தான் இருக்கிறது. அதில் நியாயமும் இருக்கிறது. இஸ்லாமிய உலகை விட்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வெளியேறும் பட்சத்தில்.. இந்த ஆபத்து நீங்கும். அமெரிக்காவை எந்த நாடாவது அல்லது அமைப்பாவது ஆக்கிரமித்து நின்று அங்குள்ள.. கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்டு யுத்தம் செய்ய முடியுமா...???!

எந்த இஸ்லாமிய அமைப்பென்றாலும்.. நேரடியாகக் காட்டிக் கொள்ளாவிடினும்.. அமெரிக்காவின் வல்லாதிக்கம் இஸ்லாமிய உலகின் மீது திணிக்கப்படுவதை எதிர்க்கும் அல்குடைடா என்று அமெரிக்கா பெயரிட்டுள்ள... இஸ்லாமிய மத அடிப்படையில் செயற்படும் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவே செய்யும். எப்படி தமிழர்களின் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் சக்திகளுக்கு அவர்களின் இந்திய இராணுவ எதிர்ப்பின் பின்னரும் தமிழகத்தில் ஒரு ஆதரவுத்தளம் இருக்கிறதோ அதே போல்.. இஸ்லாமிய உலகிலும் நீறுபூத்த நெருப்பாக ஒரு தளம் உண்டு. அது இல்லாமல் ஈராக்கிலும் சரி ஆப்கானிலும் சரி பாகிஸ்தானிலும் சரி செச்னியாவிலும் சரி.. வல்லாதிக்க சக்திகளின் மிகப் பலம் மிக்க இராணுவ இயந்திரத்தை எதிர்த்துப் போரிட முடியாது.

சிங்கள பெளத்த பேரினவாதிகளின் மத அடிப்படைவாதத்துக்கும் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்துக்கும் ஒற்றுமை காணும் போக்கை நாம் கடைப்பிடிப்பதானது.. எமது விடுதலைப் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்கம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்துவதற்கு காட்டும் காரணங்கள் போல அமைகிறது. எமக்கு இஸ்லாமிய உலகின் மீதான வல்லாதிக்க ஆக்கிரமிப்புக்களின் பரிமானம் புரியவில்லை என்பதைத்தான் இந்த தவறான ஆபத்தான எமக்கு எந்த வகையிலும் நன்மையளிக்காத இணைப்பு விளக்கி நிற்கிறது. :D

Edited by nedukkalapoovan

பண்டிதர் அண்ணை, ஏன் இவ்வளவு எழுதி கஸ்டப்பட்டனீங்கள்? உந்த நாலு படமுமே போதும் விசயத்தை சொல்ல... படங்கள் அந்தமாதிரி செமக்கடியா இருக்கு... ஹாஹா... :D:( :P நல்ல கற்பனை.. இந்த படங்களை பார்த்தால் சிங்களவனுகளூக்கு காற்சட்டையோட ஒண்டுக்கு போகும்.. :D

நல்ல கட்டுரை அண்ணா இதே கருபொருளுடன் வீடியோ செய்திருந்தோம் நான் தரவேற்றி இருந்தேன் ஆனால் என்னை பான்ட் பண்ணி போட்டாங்கள் யூரியுபில் என்ன காரணம் என தெரியவில்லை அந்த வீடியோ திரும்ப செய்யவேன்டும் என்னை பான்ட் பண்ண்டியதால் அதுவும் பான் பண்னப்பட்டு விட்டது

பேரினவாதத்திற்கு

மதவாதம் மிகப்பெரும் கவசம்

அதைக் கட்டிக்காக்கவே கெலஉறுமய.

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும் என்ற தலைப்பில் ஆன அலசல் - தோற்றம், சிக்கலான தொடர்புகள்:

மத அடிப்படைவாதம்:இஸ்லாமிய மற்றும் பௌத்த மத அடிப்படைவாதம்: மத அடிப்படை வாதத்துக்கெதிரான போரின் எதிர்காலம் என்பதை தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

சிங்கள பெளத்த பேரினவாதம் - பெளத்த மத அடிப்படைவாதம் பற்றிய விளக்கம் அழகு.

பலவற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தேடுதல், அதற்கேற்ற படங்கள் ஆகியவற்றை இணைத்து, அலசலை அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். நல்லதொரு அலசல்

வாழ்த்துகள்

சிங்கள பௌத்த பேரினவாதத்தை இஸ்லாமிய மதவாதத்துடன் ஒப்பிடுவதில் சில நெருடல்கள் இருக்கின்றன.

பெரும்பாலான தமிழீழ இஸ்லாமிய மக்கள் ஏதோ ஒரு வகையில் பின்லேடனின் சகாசத்தில் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் இயல்பாகவே அமெரிக்க எதிர்ப்புணர்வு அவர்களிடம் குடி கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய தீவிரவாதத்தை விட அமெரிக்க பயங்கரவாதம் எந்த வகையிலும் குறைந்தது அல்ல.

தமிழீழ மக்களிற்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கும் போது, நாம் இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டித்துக் கொண்டிருப்பது முரண்பாடாகப் போய்விடலாம்.

அமெரிக்காவை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புதைத்து வைத்திருக்கின்ற இஸ்லாமிய தீவிரவாதம், அது அறிந்தோ அறியாமலோ பல போராடும் இனங்களுக்கும் பல நாடுகளுக்கும் நன்மை புரிந்திருக்கிறது.

இப்படிச் சில காரணங்கள் இருக்கின்றன. ஆகவே எங்களின் பரப்புரை யுக்திகள் குறித்து நாம் கவனமாக இருப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.