Jump to content

காய்ச்சல் - T. கோபிசங்கர்


Recommended Posts

காய்ச்சல் 

உடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது , lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸுக்கு வந்தா உடம்பு சுடுற மாதிரி இருந்திச்சுது. காயுதா காயேல்லையா எண்டு தொட்டுப் பாக்க வடிவாத் தெரியேல்லை. ஓடிப்போய் முந்தி ஒரு டொக்டரிட்டை காட்டி தந்த prescription ஐக் காட்டி pharmacy யில மருந்தை எடுத்துப் போட்டு வீட்டை வந்தன். வீட்டை வந்து சாப்பாடுக்கு எந்தக் கடை menu விலயாவது முருங்கைக்காய் கறி , மீன் தீயல் , துவரம்பருப்பு ரசம் இருக்கா எண்டு தேடீக் களைச்சுப் போய் , Uber- eats இல soup ஐ ஓடர் பண்ணீட்டு இப்போதைக்கு பிளேன்ரீயும் பிஸ்கட்டாலேம் வயித்தை நிரப்பீட்டு இருந்தன். 

வாங்கின Antibiotics , vitamin எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு இருக்க நித்திரை தூக்கி அடிக்க போத்திப் படுத்தன்.

“பேசாம மூடிக்கொண்டு படு..வேர்த்தாத்தான் காயச்சல் விடும்” எண்டு சொல்லீட்டு அம்மா Vicks ஐ நெஞ்சிலேம் தொண்டையிலேம் பூசீட்டு மூக்கில டப்பியை மணக்கப் பிடிக்க ஆழமா மூச்சை எடுத்திட்டு அப்பிடியே போத்துப் படுத்தன். அரை நித்திரையில அனுங்கி முழிக்க அம்மா நெத்தீல ஓடிக்கலோன் நனைச்ச துணியை வைச்ச படி கட்டிலுக்குப் பக்கத்திலயே இருந்தா. இந்தா பனடோலைக்குடி எண்டு தந்திட்டு அடுத்தது விடிய நாலு மணிக்குத்தான் இப்ப படு எண்டு சொல்லீட்டு தேவாரம் பாடத் தொடங்கினா. 

விடிஞ்சது தெரியாம பிந்தி எழும்பி வர “ அப்பவும் சொன்னான் மழைக்க நனையாத எண்டு , இப்ப பார் கசக்காரன் மாதிரி இரவிரவா இருமிறாய்” இந்தா இதைக்குடி எண்டு அப்பாச்சி பாலுக்க உழுத்தம்மாவை கரைச்சுக் கொண்டு வந்தா. குடிச்சு முடிய நெத்தீலேம் நெஞ்சிலேம் கையை வைச்சிட்டு மேல் சுடூது சட்டையைப் போடு எண்டு அதட்டீட்டு , இவனை இண்டைக்கு பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டாம் எண்டு சொல்ல அண்ணா தான் மட்டும் போகப் போறன் இவன் வீட்டை நிக்கப் போறான் எண்ட பொறமையோடையும் எனக்கும் காய்ச்சல் வரேல்லையே எண்ட ஏக்கத்தோடையும் போனார். 

சும்மா நாளில பள்ளிக்கூடம் போகாம நிண்டா ஒண்டு படிக்கோணும் இல்லாட்டி ஏதாவது வேலை செய்யோணும் , ஆனால் காய்ச்சல், பள்ளிக்கூடம் cut, மழை இப்பிடி ஒரு combination கிடைச்சா ராஐயோகம் தான். காலமை இஞ்சியைச் சுட்டு வைக்கிற சம்பல் , இடியப்பம் சொதியோட “வேண்டாம் வேண்டாம்” எண்ட அம்மா தீத்தினா. 

பத்து மணிக்கு மல்லித்தண்ணியோட தோசைக்கல்லில வாட்டின பாண்துண்டு, பிறகு தேசிக்காய்த் தண்ணி. மத்தியானத்துக்கு முட்டைப் பொரியலும் , விளைமீன் தீயலும், நாலு மணிக்கு இருக்கிற முழு மிச்சப் பாலும் எனக்கு மட்டும் தேத்தண்ணி் ஆகிச்சுது. அதோட கடிக்க பணிஸ், கிறீம் கிரக்கர் எண்டு ஏதாவது மாறி மாறி வந்திச்சுது . அடிக்கடி வந்து எல்லாரும் தொட்டுப் பாத்து காயுதா காயேல்லையா எண்டு கண்டு பிடிச்சு பனடோல் தந்திச்சினம். அதோட போத்தில் திருப்பித் தாறம் தம்பிக்கு காய்ச்சல் எண்டு சந்திக் கடையில அண்ணா வாங்கின orange barley ரெண்டு பேருக்கும் கிடைச்சுது. மரத்து முருங்கைக்காயோட வந்த பக்கத்து வீட்டு அன்ரி வேற ஏதும் வேணுமே எண்டு கேட்டிட்டுப் போனா.

காய்ச்சல் வந்தா வீட்டை ராசா தான், எல்லாரும் விழுந்து விழுந்து கவனிப்பினம். அதோட எல்லாரையும் அதை எடுத்துத் தா இதைத் தா எண்டு வேலையும் வாங்கலாம். ஆனா ஒண்டு வீட்டை ஆருக்காவது வருத்தம் வந்தா எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். “ அவன் காய்ச்சல் காரன் பாத்துக்கொண்டிருக்க நீ சாப்பிடிறதே” எண்ட அறிக்கையோட எல்லாரும் அடங்கீடுவினம். 

மூண்டாம் நாள் இருமல் கூடி சளியா மாற தூதுவளையும் மல்லியும் போட்டுக் காச்சின கசாயம் பத்து மணிக்கு தந்திட்டு , இந்தா இந்த கற்பூரவள்ளியை சப்பு எண்டு ஆச்சி சொல்லீட்டுப் போனா. பேய் கலைக்கிற குறூப் வந்து சூடா இருந்த புட்டுப் பானைக்கை தேயிலைச்சக்கை, தேசிக்காயத் தோல் , eucalyptus இலையையும் எண்டு எல்லாத்தையும் போட்டு கலைச்ச ஆவியை முகத்தை துவாயால மூடி முழுசா மூக்கால இழுத்துப் பிடிச்சன். 

கடைசீல ஐஞ்சு நாளில காய்ச்சல் மாறிச்சுது. காய்ச்சல் மாறி ரெண்டாம் நாள் சுடுதண்ணி வைச்சுத் தோய வாத்து , மீனுக்குப் பதிலா இறைச்சி காய்ச்சித்தந்து கொஞ்சம் வீட்டுக்க விளையாட விட்டிச்சினம். மூண்டாம் நாள் பச்சைத் தண்ணீல குளிக்க விட்டுப் பாத்து ஒண்டும் இல்லை எண்ட பிறகு தான் பள்ளிக்கூடம் போக விட்டிச்சினம். அடுத்த ஒரு கிழமைக்கு நேரடிக் கண்காணிப்பில இருக்க வேணும் ரியூசனும் இல்லை விளையாட்டும் இல்லை. 

எப்ப இருமினாலும் தும்மினாலும் ஏதோ ஒரு கைமருந்து வீட்டை இருக்கும் .

காய்ச்சல் மாறியும் இருமல் மாறாமல் இருக்க, இது சத்துக்குறைபாடு தான் எண்டு முடிவெடுத்து , ஒரு ஊட்டச்சத்துப் programme வீட்டை தொடங்கிச்சுது.  

“கோழி ஒரு மாதிரி கொக்கரிக்குது போய்ப்பார்” எண்டு ஆச்சி சொல்ல போய்ப் பாத்தன். உமிச் சட்டிக்கு மேல இருந்த கோழியை தூக்கி எறிஞ்சிட்டு முட்டையைத் தூக்க அது சூடா இருந்திச்சுது . கொண்டு வந்து கவனமா தவிட்டுச் சட்டிக்குள்ள வைச்சிட்டு போனன். இருமல் மாறாதால வந்த வினை இது , காலமை வெள்ளன வெறும் வயித்தில பச்சை முட்டை குடு இவனுக்கு எண்டு ஆரோ அம்மாக்கும் கோழிக்கும் சொன்னதால காலமை முட்டையோட தான் நாள் தொடங்கும். 

முட்டை நுனியை கரண்டியால தட்டி உடைச்சு எடுத்து எறிஞ்சிட்டு , மேல இருக்கிற வெடுக்கை முன் தென்னை மரத்தில புடுங்கின ஈக்கிலால எடுத்து எறிஞ்சிட்டு, ரெண்டு விரலால எடுத்துப் போட்ட மிளகையும் உப்பையும் ஈக்கிலால கலக்கீட்டு இப்பிடியே குடி எண்டு தந்தா அம்மம்மா. குடிக்க முதலே நான் ஓங்காளிக்க “அப்பிடியே தொண்டைக்குள்ள விடிறன் விழுங்கு” எண்டு சொல்லக் கண்ணை மூடிக்கொண்டு குடிச்சிட்டுப் போனன். பின்னேரத் தேத்தண்ணி போய் வேர்க்கொம்பு கோப்பி வந்திச்சுது. 

பத்தாத்துக்கு ஆட்டுப்பால் தான் நல்லம் எண்டு ஒரு ஊர்ப் பரியாரி சொல்ல அடுத்த நாளே ஆட்டுக்குட்டி வீட்டுப் பத்தீல நிண்டிச்சுது. 

“ஆசுபத்திரி வாசலும் பொலிஸ் ஸ்டேசன் வாசலும் ஒரு நாளும் ஏறக்கூடாது” எண்டு ஆச்சி சொல்லிறதால எப்பிடியாவது கை வைத்தியத்தால இருமலை மாத்திற முயற்சீல இலை, குழை, தழை எண்டு சாப்பிடத் தந்திச்சினம். எங்கடை சந்தீல இருந்த சிவராமலிங்கம் apothecary பாவம் ஒரு நாளும் எங்களால வருமானம் இல்லை. அவரே ரெண்டு பாணி மருந்தும் பனடோலும் தான் வைச்சிருந்தவர், இருந்தாலும் அதைக் கூட வாங்க போறாக்கள் கொஞ்சப்பேர் தான் , மற்றவை எல்லாம் வீட்டு வைத்தியம் தான். 

காய்ச்சல் மாறி , குளிச்சு, தோஞ்சு, இறைச்சி சாப்பிட்டு கடைசீல, “ please excuse my absence as I was suffering from fever” எண்ட கடிதத்தோட பள்ளிக்கூடம் போக வாற கிழமை term test எண்டு சொல்ல இப்ப exam காய்ச்சல் தொடங்கிச்சுது. இவ்வளவு நாளும் இருந்து கொண்டு வேலை வாங்கின என்னை மேசையில இருத்தி வைச்சு வாங்கிச்சினம் எல்லாரும். 

திடீரெண்டு calling bell அடிக்கிற சத்தம் கேட்டு அட பள்ளிக்கூடம் போக alarm அடிக்குது எண்டு எழும்பிப் போய் பாத்தா Uber காரன் நிண்டான்.

கனவு போய் காய்ச்சல் மட்டும் நிண்டிச்சுது.

 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம் .

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அம்மம்மாவின்  கவனிப்பில் தேவையறிந்து உதவும் குணத்தோடு கைமருந்தில்  நோய் தீர்க்கும் ஒரு காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமைபட்டுக் கொள்ளத்தான் முடியும் .தற்போது இயந்திரமயமான வாழ்வு  , இராசயனம் கலந்த உணவு , நோய் தீர்க்க மருந்து மாத்திரை என வேறுபடட உலகில் வாழ்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு கட் அடிக்க காச்சல் வரவேணும், காச்சலை வரவழைக்க கக்கத்துக்குள் வெங்காயத்தை வைத்துக் கொண்டு படுத்திருந்ததெல்லாம் நினைவில் வந்து போகுது.......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாட்களாக கோபிசங்கரை காணவில்லை என்று யோசித்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது டொக்டருக்கு காய்ச்சல் என்று.

இதை வாசிக்கும் போது, பழைய நினைவுகள் வந்து போகிறது. காய்ச்சல் என்றவுடன், பாலில் சீனி கலந்து அதற்குள் பாணை ஊறவைத்து,அதை தோசைச்சட்டியில் வாட்டி எடுத்துத் தரும் அம்மா முன்னால் வந்து நிற்கிறார்.  நன்றி Dr.கோபிசங்கர்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.