Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்க: One Man Government

ரணில் விக்கிரமசிங்க: One Man Government

— கருணாகரன் —

இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை.

இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு  செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. 

நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்து, சிதறிச் சிறுத்து விட்டன. ஐ.தே.க உடைந்து ஒரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்குகிறது. மற்றப்பகுதி ரணில் விக்கிரமசிங்கவோடு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு ஒரு அணி பொதுஜன பெரமுன என ராஜபக்ஸக்களின் செல்வாக்கோடு செயற்படுகிறது. மற்றது மைத்திரிபால சிறிசேனவின் கீழ். அதிலும் ஒரு துண்டு தனியாகச் செயற்படவுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆயுதப்போராட்ட அரசியல், தேசிய நீரோட்ட அரசியல் என்ற பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஆகிய இரண்டு வழி அனுபவங்களையும் கொண்ட ஜே.வி.பி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் குழந்தையாகத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. 

தமிழ்த்தரப்பின் அரசியற் குரலைக் காணவே இல்லை. அது ஆழக்கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல யாருக்குமே பெரிதாகக் கேட்பதில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவினைகள். ஒரு காலம் ஈழ விடுதலை இயக்கங்கள் பெருகிக் கிடந்ததைப்போல இப்பொழுது தமிழ்த்தேசியக் கட்சிகள் பெருகிக் கிடக்கின்றன. 

ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம்.

பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். 

உயர் பதவியிலுள்ளவர்கள் கூட பதவியாவது மண்ணாவது என  அரசு வழங்கியிருக்கும் ஐந்தாண்டுகள் ஊதியமற்ற விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே பறக்கிறார்கள். 

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியோரின் தொகையை விட இப்பொழுது வெளியேறுவோரின் தொகை அதிகம் என்று சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

உண்மையும் அதுதான். கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகமும் வெளிநாட்டுத் தூதுவரகங்களும் சனங்களால் நிரம்பி வழிகின்றன. 

எஞ்சியிருப்போரில் பலரும் இனியும் காலத்தைக் கடத்த முடியாது என்று இலங்கைத் தேசிய அரசியலில் கலந்தும் கரைந்தும் போகிறார்கள். இதனால்தான் அங்கயன் ராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா போன்றோர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகிறார்கள். 

நாடு யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் காரணம் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றான இனவாதம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை விட்டுத் தொலைப்பதற்கு யாரும் தயாரில்லை. 

அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், மத பீடங்கள், புத்திஜீவிகள், அறிவு மையங்கள், விளிம்புகள் என எல்லா இடங்களிலும் எல்லாத்  தரப்புகளிலும் இனவாதம் தாராளமாக ஊறிப்போய்க் கிடக்கிறது.

மூன்றுவேளை சாப்பாட்டைப் போல இனவாதம் பலருக்கும் அவசியமான – பழக்கமான ஒன்றாகி விட்டது. 

அதை விட்டால் உயிரே போய் விடும் என்று எண்ணுகிறார்கள். 

சமாதானத்தை விட, அமைதியை விட, சுபீட்சமான எதிர்காலத்தை விட, அந்நிய தலையீடுகள், ஆக்கிரமிப்புகளை விட, பிற சக்திகளிடம் முழந்தாழில் நின்று கையேந்துவதை விட, நாடு கடனில் மூழ்குவதை விட, அரை வயிறு பட்டினி கிடப்பதை விட இனவாதம் ருசிக்கிறது எல்லோருக்கும்.

இந்த மாதிரி மூடத்தனம் வேறில்லை. என்னதான் சொல்லுங்கள். நாங்கள் மூடர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்து விட்டுப் போகிறோம். நம்முடைய முயலுக்கு ஒன்றரைக் கால்தான் என்பதிலிருந்து எவரும் முன்னகரத் தயாரில்லை.

இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு எந்த வைத்தியமுமில்லை. 

இந்தச் சூழலில்தான் தான் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தகர். இனவாதத்துக்கு எதிரான பேர்வழி. அமைதியின் நேசன். மூழ்கும் நாட்டை மீட்க வந்த ஒரேயொரு மாலுமி என்று தோற்றம் காட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் இன்று சர்வ வல்லமை பொருந்திய பெருந்தலைவர். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாராளமாகக் கை கொடுக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவு ஒரு பக்கம் அவருக்குக் கிடைக்கிறது என்றால், சர்வதேச நாடுகளை லாவகமாகக் கையாளும் அவருடைய கலை இன்னொரு பக்கமாகக் கைகொடுக்கிறது. 

இதனால் ரணில் விக்கிரசிங்கவை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பலருக்கும் அவர் மீது பொருமல்கள் உண்டு. ஆனால், அடுப்படிக்குள் புகைவதைப்போல அடிவயிற்றில் புகைவதோடு எல்லாம் அடங்கிப் போகின்றன. 

அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்களின் ‘பொது ஜன பெரமுன’ கூட ரணிலை எதுவும் செய்ய முடியாதுள்ளது. மட்டுமல்ல, ரணிலுக்குச் சவால் விட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, ஒரு பெரும் அணியாகத் திரண்டிருக்கும் சஜித்தின் கூட்டணியினாலும் ரணிலை ஆட்ட முடியவில்லை.

இவ்வளவுக்கும் இந்தச் சீமான் ஒரு வாக்கைக் கூட, தான் இப்பொழுது வகிக்கும் பதவிக்காகப் பெற்றவரில்லை. ஏன், இதற்காக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலேயே போட்டியிட்டதுமில்லை. ஆனால், அவரே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி – நாட்டின் அதிபராகி ஆட்டுவிக்கிறார். 

இலங்கை அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கே உச்ச அதிகாரமுண்டு. அமைச்சரவையும் பாராளுமன்றமும் முப்படைகளும் என முழு நாடுமே ஜனாதிபதிக்குக் கீழேதான். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு எதிரான திசையிலிருந்தவர்களை வைத்தே வெற்றிகரமாக ஆட்சியை நடத்துகிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் எதிரணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் ரணிலுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளாகவே இருக்கின்றனர். 

இதற்கெல்லாம் காரணம், இவர்கள் அனைவரும் பலவீனமான நிலையில், கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தவர்களாக இருப்பதேயாகும்.

இந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் ரணிலை ஆதரித்தே ஆக வேண்டும். அவருடைய கால்களைப் பிடித்தே ஆக வேண்டும். ராஜபக்ஸக்களைக் காப்பாற்றி வைத்திருப்பதே ரணில்தான். 

இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதென்றால், பல காரியங்கள் நடக்க வேண்டும். முதலில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டும். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதற்கு மக்களின் மனதிலும் அரசியற் கட்சிகள் – அரசியல்வாதிகளின் மனதிலும் மதவாதிகளின் தலைக்குள்ளும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு ஏற்றமாதிரிப் பல தரப்பிலும் வேலைகள் நடக்க வேண்டும். சமாதானத்தின் மீதும் தீர்வின் மீதும் விருப்பமும் உறுதிப்பாடும் வேண்டும். ஜனநாயக ரீதியான – மாண்புடைய தேர்தல் நடக்க வேண்டும். இப்படிப் பலவும் நடப்பது அவசியம்.  

பொருளாதார நெருக்கடியை வைத்தே ரணில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 

ரணிலை விட்டால் பொருளாதார நெருக்கயைக் கையாளக் கூடிய வேறு ஆட்களில்லை என்றமாதிரியே நாட்டின் பெரும்பான்மையான சனங்கள் எண்ணுகிறார்கள். ஏன் அரசியற் கட்சிகள், பிற தலைவர்களுக்கும் கூட அப்படியான எண்ணம்தான். 

ஆனாலும் ரணில் விக்கிரசிங்கவை வீழ்த்தி விட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பயணிப்பதைப்போல தேர்தலை எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிந்திக்கிறார்கள். இதுதான் சிரிப்புக்கிடமான சங்கதி. ஒரு தேர்தல் அல்ல ஒன்பது தேர்தல் நடந்தாலும் பிரச்சினைகள் தீராது. 

ஏனென்றால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தேர்தல் மூலமாகத் தீர்வைக் காணவே முடியாது. தீர்வு காண வேண்டிய வேலைகளில் தேர்தல் மூலமான அதிகார மாற்றமும் ஒன்றாக இருக்கலாமே தவிர, அதுதான் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை.

இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல விதமான வாக்குறுதிகளின் மத்தியில்தான் அந்தத் தேர்தல்களும் அவற்றின் வெற்றியும் அமைந்தது.

மக்களும் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாக்களித்திருக்கிறார்கள். 

ஆட்சி பீடம் ஏறியவர்கள் மாபெரும் பிரகடனங்களோடு கதிரையில் அமர்ந்தனர். 

இரண்டு மாதம் சென்றதும் பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறிய கதையே நிகழ்ந்தது.

அதிகம் ஏன், யுத்தம் முடிந்தபோது நாட்டிலுள்ள பெரும்பான்மையோரிடம் இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

ஆனால் நடந்தது என்ன? 

அதற்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியும் அந்நியத் தலையீடுகளின் அதிகரிப்பும்.

இன்று நாடு இருக்கின்ற நிலை?

தேர்தலினால் சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கலாம்.  நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நடக்கும் என்றில்லை. அதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல பல காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான திடசங்கற்பம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு பண்பு உருவாக வேண்டும். அரசியல் வணிகத்திலிருந்து கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் விடுபட வேண்டும். தனி நலனை விட பொது நலன் என்ற சிந்தனை எழ வேண்டும். தேசப்பற்றும் மக்களின் மீதான மதிப்பும் ஒரு அலைபோல மேற்திரள வேண்டும். இதை முன்னெடுக்கும் ஒரு அணி அல்லது தலைமை உருத்திரள வேண்டும்.

இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை. இதை நான் சொல்லவில்லை. சனங்கள் சொல்கிறார்கள். 

00

 

https://arangamnews.com/?p=10600

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2024 at 20:41, கிருபன் said:

ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம்.

பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். 

யாரோ ஒரு யாழ் கள சிங்கள அனுதாபி ஊருக்கு போய்ட்டு வந்து எழுதிய பேய் கதை போலவே இந்தாளும் எழுதியுள்ளார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

யாரோ ஒரு யாழ் கள சிங்கள அனுதாபி ஊருக்கு போய்ட்டு வந்து எழுதிய பேய் கதை போலவே இந்தாளும் எழுதியுள்ளார்🤣.

இருக்கலாம்,....அரைத்த  மாவை தான் மீண்டும் மீண்டும்  அரைத்து உள்ளார்   எனக்கு ஒன்றும் விளங்கவில்லை   இது அரசியலா??.  இல்லை  சமயமா ??  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.