Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

09 APR, 2025 | 10:41 AM

image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.

கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி அனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.

ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்.

குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/211566

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . .........!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறை யாவது தமிழர்கள் சார்பாக பேசக் கூடியவர்களாக வரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, விசுகு said:

அடுத்த தலைமுறை யாவது தமிழர்கள் சார்பாக பேசக் கூடியவர்களாக வரட்டும்.

எனது விருப்பமும் அதுவே. இந்த உலகம் முழுவதும் தன்னினம் தன்னலம் என சிந்திக்கும் போது தமிழினத்திற்கும் தமிழ் என சொல்லி ஒரு தலைவன் வரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள்

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP

படக்குறிப்பு,காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் காலமானார்.

44 நிமிடங்களுக்கு முன்னர்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். காந்தியவாதியாகவும், காமராஜரின் சீடராகவும் இருந்த குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் பதவி வகித்துள்ளார். அவரது மகளான தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது தமிழ் இலக்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணியை தான் தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,TN GOVT

குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதால் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், வயது மூப்பு காரணமாக சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்கிழமை இரவு அவர் காலமானார்.

அவர் உடல் நலன் குன்றியிருந்ததன் காரணமாகவே சமீபத்தில் பிரதமர் மோதி ராமேஸ்வரம் வந்திருந்த போது, தமிழிசை சவுந்தரராஜன் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,X/@NAINARBJP

படக்குறிப்பு,பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக குமரி அனந்தன் பொறுப்பு வகித்தார்

குமரி அனந்தன், தொழிலதிபராகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹெச். வசந்த குமாரின் அண்ணன் ஆவார். வசந்த குமாரின் மறைவுக்கு பிறகு வசந்த குமாரின் மகன் தற்போது அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்சு 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு தலை மகனாக பிறந்தார்.

1977-ம் ஆண்டு குமரி அனந்தன் நாகர்கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் பயணத்தில் அவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தொடங்கினார். பிறகு அவை இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைக்கப்பட்டது.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP

படக்குறிப்பு,"எனது தந்தை இன்று என் அம்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்டார்" என குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்

தனது தந்தையின் இழப்பு குறித்து தமிழிசை சவுந்தரராஜன், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை, இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்தார். நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP

படக்குறிப்பு,தமிழ் மீது பற்று கொண்ட அவர் 'இலக்கியச் செல்வர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்

காந்தியவாதியாக இருந்த குமரி அனந்தன், காங்கிரஸ் கொள்கைகள் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர். காமராஜரின் சீடராக விளங்கி, பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

காந்தியவாதியான அவர் கதர் வேட்டி அணிந்து, நெற்றியில் விபூதியுடன் எளிய தோற்றமளிப்பவராக இருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பனை மர பணியாளர்கள் நல வாரிய தலைவராக 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார், 2011-ம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

அப்போது அவர் எழுதிய கடிதத்தில், "நான், சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற காரணத்தினால் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பனைச் செல்வம் பெருஞ்செல்வம், உடல் நலம் தரும் செல்வம். ஊதியம் இல்லாத வேலையினாலும், எளியோர்க்கும் நாட்டுக்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 17 முறை தமிழத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2016-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை பூரண மதுவிலக்குக் கோரி அவர் மேற்கொண்ட நடைபயணம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 2017-ம் ஆண்டு அவர் சென்னையிலிருந்து தருமபுரிக்கு நடைபயணம் மேற்கொண்டார்.

சென்னை மெரினா கடற்கரையிலிருந்து அந்த நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசியிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், "தமிழக மக்களின் நலனுக்காக தனது 86வது வயதில் 16வது முறையாக நடை பயணம் மேற்கொள்கிறார். சுப்ரமணிய சிவாவால் தேர்வு செய்யப்பட்ட இடமான தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோவில் அமைக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு, நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபயணம் மேற்கொள்கிறார் " என்று கூறினார்.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,TN GOVT

இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்ட குமரி அனந்தன், நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர்.

அவரது மேடைப்பேச்சுகள் பலரையும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன.

செம்பனை நாடு-மலேசிய அனுபவம், உலகம் சுற்றும் குமரி-பயண அனுபவங்கள், கடலில் மிதக்கும் காடுகள்- அந்தமான் பயணம், பாரதிரப் பாடிய பாரதி, தேசமும், நேசமும், விடுதலை வீரர்களின் வீரரும் தியாகமும், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், தமிழ் தரும் காட்சிகள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளின் காலடி தேடி, பேச்சுக் கலைப் பயிற்சி என பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.

குமரி அனந்தன், காங்கிரஸ் , தமிழ்நாடு, பனைமர தொழிலாளர் நலவாரியம், தமிழிசை சவுந்தர ராஜன்

பட மூலாதாரம்,TN GOVT

படக்குறிப்பு,தமிழக அரசு குமரி அனந்தனுக்கு மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, தகைசால் தமிழர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது

தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் குமரி அனந்தன். அவருக்கு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதை வழங்கியது. கடந்த 2022-ம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

அவரது மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ygg45jz8lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.