Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சோறு

---------------

large.OneGrainForOnePot.jpg

'இந்தியாவா ...................' என்றனர் அவர்கள். வீதியின் அடுத்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வயதான தம்பதிகள் போன்றே தெரிந்தார்கள்.

'இல்லை......... ஶ்ரீலங்கா..........' என்றேன்.

'சிங்கப்பூரா ................' என்று திருப்பிக் கேட்டார்கள்.

இதுவரை எவரும் கேட்டிராத கேள்வி அது. நான் யாரோ இருவருக்கு ஒரு சிங்கப்பூர் குடிமகன் போல தோன்றுவேன் என்ற நினைப்பு இதுவரையில் எனக்கு ஒரு கணமேனும் வந்தது கிடையாது. அவர்கள் வீதியைக் கடந்து என் பக்கம் வர முயன்றார்கள். நீங்கள் அங்கேயே இருங்கள், நானே வருகின்றேன் என்று சொல்லி விட்டு, கையில் இருந்த தும்புக்கட்டையை சுழற்றி புல்லுக்குள் எறிந்து விட்டு வீதியைக் கடந்து அவர்களிடம் போனேன்.

ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். அவருடைய பெயர் போல் என்றார் அந்த முதியவர். போல் என்னும் பெயர் எனக்கு மிகவும் பரிச்சயமானது, ஶ்ரீலங்காவில் இந்தப் பெயரில் பலர் இருக்கின்றார்கள் என்றேன். அவருடைய மனைவியின் பெயர் எஸ்தர் என்றார். சொல்லி விட்டு என்னையே பார்த்துக்கொண்டு நின்றார்.

எத்தனை எஸ்தர்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள். வண்ணநிலவன் அவர்கள் எழுதிய 'எஸ்தர்' என்னும் சிறுகதை தான் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதை என்று சில கவனிக்கத்தக்க பட்டியல்களில் உள்ளது. அந்தக் கதையில் வரும் எஸ்தர் என்னும் பாத்திரமும், அந்தக் கதையும் மனதை விட்டு அகல்வதேயில்லை. பின்னர் பல தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளின் பெயர்கள் எஸ்தர் என்று ஆகியிருக்கின்றது. அவற்றில் சில படங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். 'நீர்ப்பறவை' படத்தில் எஸ்தர் வருகின்றார். விஜய் ஆண்டனியின் ஒரு படத்திலும் எஸ்தர் வந்தார். அந்தப் படம் மறந்துவிட்டது, அதில் வந்த எஸ்தர் என்ற பெயர்  மட்டும் நினைவில் நிற்கின்றது. பல படங்களில் உதவி இயக்குனர்களில் ஒருவர் தான் கதாநாயகிக்கு இந்தப் பெயரை சிபாரிசு செய்திருப்பார் போல.

எஸ்தரையும் எனக்கு மிகவும் நல்லாகவே தெரியும் என்றேன். 'எஸ்தர் பைபிளில் வருகின்றாரே........... அதனால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.........' என்றார்கள் அவர்கள் இருவரும். இவர்கள் சொல்லும் எஸ்தரை எனக்குத் தெரியாது. முன்னால் நின்று கொண்டிருந்த வயதான எஸ்தர் அம்மாவின் முகத்தில் புன்னகை நீண்டு அழகாக தெரிய ஆரம்பித்தார். அந்தப் பக்கத்தில் இருக்கும் வீட்டில் குடியிருப்பவர் தங்களின் பெறாமகள் என்றனர். வேலையில் இருந்து அவர் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

'அவர்களைத் தெரியுமா................' 

'ஆ............... தெரியும். சமீபத்தில் தானே குடிவந்தார்கள். பேசியிருக்கின்றோம். அவர்கள் சாக்லேட் கூட கொடுத்தார்கள்..................'

'சாக்லேட்டா............... எதுக்கு சாக்லேட்........'

'எதற்கென்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்தார்கள், நான் வாங்கினேன்...............'

''

இந்த தெரு மிகவும் அமைதியாக இருக்கின்றது என்றனர். வீட்டுக்கு முன் இருக்கும் தெருவே இவ்வளவு அகலமாகவும், சுத்தமாகவும் இருக்கின்றதே என்றனர். சுழற்றி எறிந்து விட்டு வந்த தும்புக்கட்டையின் ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன். விழுந்த இடத்திலேயே அது அப்படியே மல்லாக்காகக் கிடந்தது. 

'இங்கு எவ்வளவு வருடங்களாக குடியிருக்கின்றீர்கள்............'

'25 வருடங்கள் ஆகிவிட்டது............' என்றேன்.

'என்னது 25 வருடங்களாகவா............ பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கின்றீர்களா.............'

இரண்டு வாரங்களிற்கு முன்னால் ஒரு நிகழ்விற்காக தலைக்கு கறுப்பு நிறம் அடித்திருந்தேன். இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்தப் பொடியை நீரில் கலந்தவுடன் அதில் இருந்து வரும் வாசனை ஒரு கெட்ட வாசனை போன்றே எனக்கு இருக்கின்றது. சில பொழுதுகளில், இருமல் மருந்தைக் குடிப்பது போல, இந்தப் பொடியை தலையில் பூச வேண்டியிருக்கின்றது. 'முண்டாசுப்பட்டி' படத்தில் வருவது போல கமராவின் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு ஊருக்கு குடிபெயர்ந்தால் நன்றாக இருக்கும். அது முடியா விட்டால், அதிபர் ட்ரம்பிடம் சொல்லி இந்தக் கலர் மாற்றும் பொருட்களுக்கு ஒரு 500 வீத வரி போடச் சொல்லவேண்டும். அவரே சிவப்புக் கலர் தலைமுடியுடன் இருப்பதால், சிவப்புக் கலருக்கு மட்டும் வரி விலக்கு கொடுத்துவிடலாம்.

மூலிகைப் பொடி போட்டு இரண்டு வாரங்களில் என்னுடைய தலைமுடி உடைந்த செங்கல் நிறத்தில் திட்டுத் திட்டுகளாக பல இடங்களில்  ஆகியிருந்தது. எனக்கே கண்ணாடியில் சகிக்க முடியவில்லை. கமரா தடைசெய்யப்பட்ட முண்டாசுப்பட்டி கதை போல, கண்ணாடி தடைசெய்யப்பட்ட ஒரு ஊர் பற்றியும் ஒரு சினிமா எடுக்கலாம். நல்ல சிரிப்பு படங்கள் என்று எதுவும் வருவதாகத் தெரியவில்லை. கமல், ரஜனி படங்களே இப்பவும் வருவதை நம்ப முடியாமல் இருக்கின்றது. 'காளி' மற்றும் 'குரு' படங்கள் புதிதாக வந்த போது, என்னுடைய காற்சட்டையில் ஒரு பொத்தான் குறைவாக இருந்த காலங்கள் அவை. மூன்று தலைமுறைகள் ஆகிவிட்டது............... எப்பொழுது நாங்கள் வல்லரசாவது...........  

போலும், எஸ்தரும் என்னை 25 வயதுகள் என்று மதிப்பிட்டது ஒரு பகிடியாக இருக்குமோ என்று இருவரையும் உற்றுப் பார்த்தேன். அவர்கள்  பகிடி விடுவதற்கு முயற்சி எதுவும் செய்ததற்கான அடையாளம் ஒன்றும் அவர்களின் முகங்களில் தெரியவில்லை. கண் பார்வை மங்கிப் போவதும் வயதுடனேயே வரும் ஒரு பொதுவான போக்குத்தான். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. 

நாற்பது வருடங்கள் சிகாகோவில் இருந்ததாகச் சொன்னார்கள். இனிமேல் வீட்டின் முன் விழும் பனியை அள்ளிக் கொட்ட உடம்பில் பலமில்லை. அதனால் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டதாகச் சொன்னார்கள். சிகாகோவிற்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்தீர்களா என்று கேட்டேன். தாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளம் ஒன்று அந்த நாட்டில் இருந்தது. அமெரிக்காவிற்கு வெளியே இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத்தளம் என்று அதை ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றார்கள். வியட்நாமியர்களும் இருக்கின்றார்கள். கம்போடியர்கள் இருக்கின்றார்கள். அமெரிக்கா ஒரு காலத்தில் சண்டைக்கு போன இடங்களில் இருந்து பல நாட்டவர்களை கூட்டி வந்து இங்கு குடியேற்றி இருக்கின்றார்கள். இப்பொழுது எவரும் உள்ளே வராதே, வராதே என்கின்றார்கள்.

'இந்த வீட்டின் விலை என்ன..............' என்று அவர்களின் பெறாமகளின் வீட்டைக் காட்டி என்னிடம் கேட்டார்கள்.

அவர்களை நன்றாகப் பார்த்தேன்.

'தெரியாது................ அவர்கள் எனக்கு சாக்லேட் கொடுக்கும் போது நான் எதையுமே கேட்கவில்லை............. நல்வரவு என்று மட்டுமே சொன்னேன்.....' என்றேன்.

போலும், எஸ்தரும் தெரிந்து கொள்ள விரும்பிய ஒரேயொரு விடயத்தை நான் கடைசிவரை சொல்லவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

போலும், எஸ்தரும் என்னை 25 வயதுகள் என்று மதிப்பிட்டது ஒரு பகிடியாக இருக்குமோ என்று இருவரையும் உற்றுப் பார்த்தேன். அவர்கள்  பகிடி விடுவதற்கு முயற்சி எதுவும் செய்ததற்கான அடையாளம் ஒன்றும் அவர்களின் முகங்களில் தெரியவில்லை. கண் பார்வை மங்கிப் போவதும் வயதுடனேயே வரும் ஒரு பொதுவான போக்குத்தான். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. 

உங்கள் வயதை மதிக்கும் போது

உங்கள் மனைவி பக்கத்தில் இல்லாதது ஏமாற்றமாக இருந்திருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்தர் பற்றி எழுதியது சற்று அதிகமாகி விட்டது போன்ற உணர்வு . எஸ்தர் ஒருசரித்திர வரலாற்று பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள்.

வரும்போதே சர்டிபிக்கட் கொடுத்தபடிதான் வருவியள்.....

இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள்.

அந்த 25 வயதுப் பொடியின் இரகசியத்தை ..இதிலை படம் போட்டு விளக்கலாமே...

1 hour ago, நிலாமதி said:

எஸ்தர் பற்றி எழுதியது சற்று அதிகமாகி விட்டது போன்ற உணர்வு . எஸ்தர் ஒருசரித்திர வரலாற்று பெயர்.

ரசனியின் கூலி படம் மாதிரி..

  • கருத்துக்கள உறவுகள்

கடசி பந்திக்கு மேலே உள்ள பெரிய பந்தியை சற்று கவனித்தால் நன்று ..👋

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

போலும், எஸ்தரும் தெரிந்து கொள்ள விரும்பிய ஒரேயொரு விடயத்தை நான் கடைசிவரை சொல்லவேயில்லை.

ஆக, உங்களுக்கு அந்த வீட்டின் விலை தெரிந்திருக்கிறது. சிறீலங்கன் என்றால் சும்மாவா?

புலம்பெயர் தமிழர்களிடம் இந்த விவகாரம் -அது அடுத்தவன் விவகாரத்தை அறிந்து கொள்ளும் சுபாவம் அதிகம் என நினைக்கிறேன்.

“எங்கை வேலை செய்யிறீங்கள்? என்ன சம்பளம்? கார் நல்ல விலை வரும் போலை. எவ்வளவுக்கு வாங்கினீங்கள்?……. “

13 hours ago, ரசோதரன் said:

போலும், எஸ்தரும் என்னை 25 வயதுகள் என்று மதிப்பிட்டது ஒரு பகிடியாக இருக்குமோ என்று இருவரையும் உற்றுப் பார்த்தேன். அவர்கள்  பகிடி விடுவதற்கு முயற்சி எதுவும் செய்ததற்கான அடையாளம் ஒன்றும் அவர்களின் முகங்களில் தெரியவில்லை. கண் பார்வை மங்கிப் போவதும் வயதுடனேயே வரும் ஒரு பொதுவான போக்குத்தான். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. 

ம்… வயது வந்தவர்கள், பார்வையில் குறைபாடு ஏதும் இருந்திருக்கலாம். அல்லது வீட்டின் விலையை அறிந்து கொள்ள சாயம் பூசிய தலையில் குளிராக இருக்கட்டும் என்றும் வைத்திருக்கலாம். எது எப்படியோ, “கூட்டச் சொல்லிவிட்டால் அங்கே என்ன கதை?” என்ற குரல் வருமுன் மல்லாக்காகப் படுத்திருக்கும் தும்புத்தடியை போய்  நிமிர்த்தி எடுத்து வேலையை ஆரம்பியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் வயதை மதிக்கும் போது

உங்கள் மனைவி பக்கத்தில் இல்லாதது ஏமாற்றமாக இருந்திருக்குமே?

இந்த நேரம் ..இன்னும் குறைவாகக் காட்டும் சார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் வயதை மதிக்கும் போது

உங்கள் மனைவி பக்கத்தில் இல்லாதது ஏமாற்றமாக இருந்திருக்குமே?

அவர் பக்கத்தில் நின்றிருந்தால், மூன்று பேரையும் பக்கத்தில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு ஏற்றிக் கொண்டு போய் இறக்கி விட்டிருப்பார், அண்ணா................🤣.

12 hours ago, நிலாமதி said:

எஸ்தர் பற்றி எழுதியது சற்று அதிகமாகி விட்டது போன்ற உணர்வு . எஸ்தர் ஒருசரித்திர வரலாற்று பெயர்.

நன்றி அக்கா. வரலாற்றில், பைபிளில் இருக்கும் எஸ்தரை நான் இதுவரை வாசிக்கவில்லை, அக்கா. வண்ணநிலவனின் எஸ்தரே எனக்கு தெரிந்த முதல் எஸ்தர். அதுவே மறக்க முடியாததும் ஆகிவிட்டது.

பைபிள் எஸ்தரை நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்...............👍.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள்.

வரும்போதே சர்டிபிக்கட் கொடுத்தபடிதான் வருவியள்.....

🤣...............

சமீபத்தில் கூட விடுமுறையைக் கழிக்க உலகில் மிகச் சிறந்த இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருந்தது.

உலகத்தின் தேவைகளும் தெரிவுகளும் வேறு, எங்களின் தேவைகளும் தெரிவுகளும் வேறு போல, அல்வாயன்.....................

11 hours ago, யாயினி said:

கடசி பந்திக்கு மேலே உள்ள பெரிய பந்தியை சற்று கவனித்தால் நன்று ..👋

நன்றி யாயினி. குறிப்பாக ஓரிரு சொற்களை குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இதை இன்னொரு முறை எழுதினால், அங்கிருக்கும் சில சொற்களையும், வசனங்களையும் மாற்றி விடுகின்றேன்......................👍.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

ஆக, உங்களுக்கு அந்த வீட்டின் விலை தெரிந்திருக்கிறது. சிறீலங்கன் என்றால் சும்மாவா?

புலம்பெயர் தமிழர்களிடம் இந்த விவகாரம் -அது அடுத்தவன் விவகாரத்தை அறிந்து கொள்ளும் சுபாவம் அதிகம் என நினைக்கிறேன்.

“எங்கை வேலை செய்யிறீங்கள்? என்ன சம்பளம்? கார் நல்ல விலை வரும் போலை. எவ்வளவுக்கு வாங்கினீங்கள்?……. “

ம்… வயது வந்தவர்கள், பார்வையில் குறைபாடு ஏதும் இருந்திருக்கலாம். அல்லது வீட்டின் விலையை அறிந்து கொள்ள சாயம் பூசிய தலையில் குளிராக இருக்கட்டும் என்றும் வைத்திருக்கலாம். எது எப்படியோ, “கூட்டச் சொல்லிவிட்டால் அங்கே என்ன கதை?” என்ற குரல் வருமுன் மல்லாக்காகப் படுத்திருக்கும் தும்புத்தடியை போய்  நிமிர்த்தி எடுத்து வேலையை ஆரம்பியுங்கள்

🤣...................

அவர்களும், பல பிற நாட்டவர்களும், எங்களைப் போலவே அடுத்தவர்கள் விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக ஆர்வமாக இருக்கின்றார்கள் என்ற பார்வையையே இந்தச் சம்பவம் எனக்கு கொடுத்தது..............👍.

'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு..............' என்பது போல அந்த ஒரு கேள்வி தான் அவர்கள் என்று தோன்றியது. நான் பிழையாகக் கூட இருக்கலாம்...............

அந்த வீட்டில் முன்னர் இருந்தவர்கள், அவர்களின் மறைவு, பின்னர் அந்த வீடு விலைக்கு வந்தது.......... இவற்றை ஒரு கதையாகவே எழுதலாம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல் உங்களின் பாணியில் கதை நன்றாகவே இருக்கின்றது . ........ !

வீட்டின் விலையை சொன்னாலும் பரவாயில்லை , உங்களின் வயதை மட்டும் ....ம்கூம் ......... ! 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.