Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Capture-5.jpg?resize=750%2C375&ssl=1

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

vijay-tvk-01-jpg-1729936855733_1729936859554-1200x675-1.webp?resize=600%2C338&ssl=1

இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும்  பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டு மேடையின் உச்சியில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது‘ என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்.இ விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில்,சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள்,2-வது அடுக்கில் பொலிஸார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

…….

இந்நிலையில் இன்று காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர்.

மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகன நிறுத்தும்  இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gy17tb8aUAAori4.jpg?resize=600%2C565&ssl=1

அத்துடன் தொண்டர்கள் அமர்வதற்கு 60 பகுதிகள்  அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும்  சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவுப் பொதிகள்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் பொலிஸார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

….

sssssssssssssssssssss.jpg?resize=600%2C305&ssl=1

இந்நிலையில் இந்த மாபெரும் மாநாட்டில் தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1443978

  • கருத்துக்கள உறவுகள்

த.வெ.க மாநாட்டில் எம்.ஜி.ஆர், அண்ணா படங்கள் - விஜய் சொல்ல வரும் அரசியல் செய்தி என்ன?

அண்ணா, எம்ஜிஆர் நடுவே விஜய் - 1967, 1977 தேர்தலில் என்ன நடந்தது, தமிழக வெற்றிக் கழகம், மதுரை மாநாடு, விஜய்

பட மூலாதாரம், TVK/X

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக. 21) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு மேடையின் உச்சியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்த கட்-அவுட்டில் 'வரலாறு' திரும்புகிறது என எழுதப்பட்டுள்ளது. 1967, 1977க்கு இடையே 2026 என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியது என, 1967, 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களை குறிப்பிடலாம். இந்த சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டின் இரு முக்கிய தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர் இருவரும் மாநிலத்தில் அதற்கு முன்பிருந்த அரசியல் களச்சூழலை மாற்றி வெற்றியை தனதாக்கிக்கொண்டனர். இதேபோன்று, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்பதே தவெகவின் எண்ணமாக இருக்கிறது.

கட்-அவுட்டில் அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன்? இதற்கு முன்பு, 1967, 1977ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது எப்படி, ஏன் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

அரசியல் பயணத்தில் அண்ணா தன் தலைவராக பின்தொடர்ந்த பெரியாருடன் 1949ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்திலிருந்து விலகினார். அதே ஆண்டிலேயே தன் ஆதரவாளர்கள் பலருடன் இணைந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறார். செப்டம்பர் 18, 1949 அன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழைக்கு நடுவே திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சி.என். அண்ணாதுரை

பட மூலாதாரம், TWITTER

1949ல் அண்ணா திமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, திராவிட இயக்க அரசியலில் மிக்க அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்தார். திராவிட இயக்க கொள்கைகளை பல மேடைகளில் நின்று எடுத்துரைத்திருக்கிறார்.

1930களில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றார்.

திமுகவை ஆரம்பித்த பிறகும், தேர்தல் அரசியலில் அண்ணா உடனேயே இறங்கிவிடவில்லை. ஆட்சி, அதிகாரத்தை நோக்கிய தன் பயணத்தை மிகுந்த கவனத்துடனேயே எடுத்துவைத்தார் எனலாம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டில் நடைபெற்றபோது, திமுக அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக, "அந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸ் அல்லாத நாணயமுள்ள திறமைசாலிகளான முற்போக்குக் கருத்தினரையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது." என திராவிட இயக்க வரலாறு எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார், எழுத்தாளர் ஆர். முத்துக்குமார்.

அடுத்ததாக, 1957ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் 15 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர், அக்கட்சி 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

அதன்பின், 1962 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு என பொதுமக்களை பாதிக்கும் பல விஷயங்களை முன்னிறுத்தி திமுக தேர்தலை சந்தித்தது.

1962 பொதுத் தேர்தலில் திமுக சார்பில் 142 பேரும் நாடாளுமன்ற தேர்தலில் 18 பேரும் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலுக்கு முன்பாகவே திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத் அக்கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

1962 தேர்தலில் திமுக 50 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அதாவது, கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான இடங்கள். அதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், அந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வியை தழுவினார். எனவே, அண்ணா மாநிலங்களவை உறுப்பினரானார்.

இவ்வாறாக, திமுகவின் 1967 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அதற்கு முந்தைய தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக அமைந்தன.

1967 தேர்தல் வெற்றி

1967 தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனை தேர்தலாக அமைந்தது. இந்த தேர்தலில் 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி அரிசி நிச்சயம்' என்ற முக்கிய வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் களம் கண்டார் அண்ணா.

முந்தைய தேர்தல்களில் படிப்படியாக வெற்றி பெற்றாலும், இத்தேர்தலில் கூட்டணி அமைத்தே திமுக களம் கண்டது. சுதந்திரா கட்சி (ராஜாஜி), ஃபார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் (மா.பொ.சி), நாம் தமிழர் (சி. பா. ஆதித்தனார்) உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து அந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டது.

காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியும் 49 இடங்களை மட்டுமே வென்றது. தனது சொந்தத் தொகுதியான விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் பெ. சீனிவாசனிடம் தோற்றார்.

திமுக அந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1967 மார்ச் மாதம் முதலமைச்சர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.

1949ல் திமுகவை தொடங்கிய பின் அண்ணா ஆட்சியில் அமர 18 ஆண்டுகள் ஆகின.

வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம், GNANAM

படக்குறிப்பு, வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு

அண்ணா அமைத்த கூட்டணி

1967ல் அண்ணா வெற்றி பெற்றது எப்படி என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் கேட்டோம்.

"1967 இருந்த அரசியல் களச்சூழல், தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. எளிய மக்களை அந்த சமயத்தில் காங்கிரஸ் சென்றடையவில்லை. திமுக கட்சியாக இருப்பதற்கு முன்பாகவே கொள்கைகளை மக்களிடத்தில் சேர்த்ததால், வெகுஜன மக்களின் ஆதரவு கிடைத்தது" என்றார்.

அண்ணா அமைத்த கூட்டணியும் வெற்றிக்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.

"அண்ணா ஓர் பரந்த கூட்டணியை அமைத்தார், மா.பொ.சி, ராஜாஜி என மாற்று கொள்கை கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்தார். ராஜாஜிக்கு காமராஜரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இப்படி காங்கிரஸுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டார்." என்றார் சாவித்திரி கண்ணன்.

"அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தெளிவான மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கமாக திமுக இருந்தது. தேசிய கட்சி அல்லாத ஒரு மாநில கட்சி பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது" என்கிறார், அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன்

எம்ஜிஆரின் அரசியல் பயணம்

இதேபோன்று, எம்.ஜி.ஆரின் பயணமும் நீண்டதாகவே உள்ளது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 1950களின் தொடக்கத்திலேயே திமுகவில் இணைந்தார்.

தன்னுடைய திரைப்படங்களில் திராவிட இயக்கம், திமுகவின் கொள்கைகளை பேசினார். திமுகவுக்காக அப்போதிலிருந்து தேர்தல்களில் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக 1967 தேர்தலில் மின்னல் வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் ஒரே நாளில் 30-40 பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கலந்துகொண்டதாகவும் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஆர். முத்துக்குமார்.

அதன் விளைவாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார் அண்ணா.

எம்ஜிஆர்

பட மூலாதாரம், MGR FAN CLUB

படக்குறிப்பு, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ம் ஆண்டில் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் எம்ஜிஆர். இதன்பின், கட்சியின் வரவு-செலவுகள் குறித்து எம்ஜிஆர் எழுப்பிய கேள்விகளால் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

அதன்பின், 1972ல் அதிமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு 1973ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் 2,60,930 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் முதல் வெற்றியாக அது அமைந்தது.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்த எம்ஜிஆர், 1977ல் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்.

20 தொகுதிகளில் அதிமுக, 16 தொகுதிகளில் காங்கிரஸ், 3 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டன. இந்த கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதிமுக 18, காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வெற்றியை பெற்றன.

அதன்பின் நடைபெற்ற 1977 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்தன. கடந்த முறை போன்று சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை.

தேர்தல் முடிவில், அ.தி.மு.க. மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம். 12 தொகுதிகளைப் பிடித்தது. கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகளிலேயே எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.

எம்ஜிஆர் வெற்றி பெற்றது எப்படி?

"கருணாநிதியின் தன்னிச்சையான முடிவுகள், திமுக ஆட்சி மீதான அதிருப்தி எம்ஜிஆர் முன்னெடுத்த திமுகவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை இந்த தேர்தலில் எடுபட்டன. அதிமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பு பல காலம் திமுகவில் பயணித்தார், பல பொறுப்புகளை வகித்தார் எம்ஜிஆர். அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தார். புதிதாக அவர் அரசியலுக்கு வரவில்லை. அதற்கான அங்கீகாரம் தான் 1977ல் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றி." என்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.

1977ல் எம்ஜிஆர் பெற்ற வெற்றி குறித்து பேசிய முனைவர் ராமு மணிவண்ணன், "திமுகவில் இருந்தபோது அக்கட்சிக்காக உழைத்த பிரதான அடையாளம் எம்ஜிஆர். திமுகவுடன் அவருக்கு ஏற்பட்ட பிளவு கொள்கை ரீதியானதாக மட்டுமல்லாமல், ஆளுமை ரீதியானதாகவும் இருந்ததால் அவருடை தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்பு இருந்தது. இதனால், தனிநபர் அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் சூழல் தமிழகத்தில் உருவானது." என குறிப்பிடுகிறார்.

விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், TVK

விஜய் சொல்ல வரும் செய்தி என்ன?

தற்போது 2026 தேர்தலுக்கு அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன் என கேட்டபோது, "விஜய் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வருகிறார். அதனால் 1967, 1977ல் இருந்த சூழலுடன் அவரை பொறுத்திப் பார்க்க முடியாது. எம்ஜி ஆரின் அரசியல் வாரிசாக தான் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது." என்றார் அவர்.

விஜயிடம் இதன் மூலம் எந்த அரசியல் செய்தியும் இல்லை என தான் கருதுவதாகக் கூறுகிறார் முனைவர் ராமு மணிவண்ணன்.

"1967, 1977-ஐ முன்னிறுத்துவதற்கு என்ன காரணம் என கேட்டால், அவரிடமிருந்து எந்த அரசியல் செய்தியும் இல்லை என்பதால்தான். வலிமையான, ஆழமான கருத்துகளோ, புதிய அரசியல் பார்வையோ அவரிடம் இல்லை. பழைய பிம்பத்தை தன் அடையாளமாகப் பயன்படுத்தி வருகிறார்.

புதிய சிந்தனைகளை சொல்லி அடையாளப்படுத்தும் ஆழமான அரசியல் நிலைப்பாடு அவரிடம் இல்லை. புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் முன்பே வெற்றி பெற்றவர்களைத்தான் கையில் எடுப்பார்கள். தன்னையும் அவர்களோடு சேர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அது மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவதற்கான விளம்பர உத்தியாக உள்ளது. ஆனால், அந்த விளம்பரத்துக்கான விலை என்ன என்பது தேர்தல் முடிவில் தெரியும். " - என்றார் முனைவர் ராமு மணிவண்ணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp3e23kwl52o

  • கருத்துக்கள உறவுகள்

தவெக மாநாடு: மோதி - ஸ்டாலினுக்கு விஜய் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள் என்ன?

தவெக மாநாட்டில் விஜய் உரை - முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், TVK

21 ஆகஸ்ட் 2025, 11:19 GMT

புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், '2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக.' என்றார்

'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது.

சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில், விஜய் நடந்து சென்றபோது, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் பலரும் அந்த பாதையிலேயே ஏறிவிட்டனர்.

மேடையில் அமந்திருந்த தனது தந்தை எஸ்.வி சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரை விஜய் கட்டியணைத்தார். தன்னை பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரையும் அமரும்படி விஜய் வற்புறுத்தினார். பின்னர் தவெகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

'234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்'

பட மூலாதாரம், TVK

'எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை'

தொடர்ந்து மாநாட்டில் பேசிய விஜய், ''ஒரு சிங்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது, சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டருக்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் உயிருடன் உள்ள, பெரிய விலங்குகளையே தாக்கும், ஜெயிக்கும். உயியிரில்லாததை, கெட்டுப் போனதை தொடாது. அப்படிப்பட்ட சிங்கம் எதையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் காட்டின் எல்லையை தானே வகுக்கும். கூட்டத்துடனும் இருக்கும், அஞ்சாமல் தனியே வரும். தனியாக இருந்தாலும் அது காட்டின் அரசாக இருக்கும். '' என்றார்.

''எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எம்ஜிஆரை மாதிரியே குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரும் மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது.

1967, 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது.'' என்றார் விஜய்.

தவெக மாநாட்டில் விஜய் உரை

பட மூலாதாரம், TVK

'2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி'

உரையை தொடர்ந்த விஜய், ''ஷூட்டிங்கில் இருந்து வந்துவிட்டு எப்படி ஆட்சியைப் பிடிப்பார் என தற்போது கேட்கின்றனர். இந்த விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தில் மட்டும் இருக்கிறார் என நினைக்காதீர்கள். இது வெறும் ஓட்டாக அல்ல, மக்கள் விரோத ஆட்சிக்கு 'வேட்டாக' இருக்கும். என்னுடைய பிணைப்பு மக்களுடன் மட்டும்தான்.''

''எங்களின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை. ஒரே கொள்கை எதிரி பாஜக தான், அரசியல் எதிரி திமுக தான்.

ஒட்டுமொத்த மக்களின் சக்தி எங்களுடன் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் உறவுகள் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜகவுடன் ஏன் மறைமுக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்? நாங்கள் என்ன மகா ஊழல் கட்சியா?

2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று டிவிகே, மற்றொன்று திமுக.'' என்றார்

ஷார்ட் வீடியோ

Play video, "காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்", கால அளவு 0,24

00:24

p0ly6ctc.jpg.webp

காணொளிக் குறிப்பு, காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்

பாடல் பாடிய விஜய்

'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை பாடிய விஜய், "மக்கள் அரசியல்' எனும் சவுக்கை கையில் எடுக்கலாமா? பாசிச பாஜக, 'பாய்சன்' திமுகவுக்கு எதிராக கையில் எடுக்கலாமா?'' என்றார்.

''மோதி மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக நல்லது செய்ய வந்தீர்களா? அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா?

மக்களின் பிரதிநிதியாக உங்களிடம் (மோதி) சில கேள்விகள் கேட்க வேண்டும். தமிழக மீனவர்கள் 800 பேருக்கு மேல் தாக்கப்பட்டிருக்கின்றனர். இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடத்தப்படும் நீட் தேர்வால், பல அநியாயங்கள் நடக்கின்றன. அதை சொல்வதற்கே மனம் வலிக்கிறது. நீட் தேவையில்லை, என அறிவியுங்கள் போதும். இதைச் செய்வீர்களா?'' என்றார்.

'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை  விஜய் பாடினர்

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, 'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை விஜய் பாடினர்

''நேரடி பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒருபக்கம், மறுபுறம் மறைமுக பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத ஊழல் கட்சிகளை அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் செல்லலாம் என திட்டம் வைத்துள்ளீர்களா?'' என சாடினார் விஜய்.

''நேரடி - மறைமுக கூட்டணி வைத்தாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? ஒரு எம்.பி. சீட் கூட தரவில்லையென்பதால் பாஜக ஓரவஞ்சனை செய்கிறது. கீழடி நாகரிகத்தை மறைத்து பாஜக 'உள்ளடி' வேலை செய்கிறது.'' என்றார்

ஷார்ட் வீடியோ

Play video, "தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர்", கால அளவு 2,05

02:05

p0ly63r5.jpg.webp

காணொளிக் குறிப்பு, தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர் - மாநாடு பற்றி தவெக தொண்டர்கள் கூறுவது என்ன?

'டெல்லி சென்று ரகசிய கூட்டம்'

''எம்ஜிஆரின் மாஸ் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அவர் உயிருடன் இருக்கும்வரை ஒருவராலும் முதலமைச்சர் சீட் பற்றி கனவு கூட காணமுடியவில்லை. 'எப்படியாவது சி.எம். சீட்டை எனக்கு தாருங்கள், என் நண்பர் வந்தவுடன் திரும்பித் தருகிறேன்," என தன் எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர்.

ஆனால், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அப்பாவி தொண்டர்களே அதை சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு 2026ல் யாருக்கு ஓட்டு செலுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி.

திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஒரு ரெய்டு நடந்தால், டெல்லி சென்று ரகசிய கூட்டம் நடத்துகின்றனர் திமுகவினர். அந்த சந்திப்புக்குப் பிறகு அந்த பிரச்னை அப்படியே காணாமல் போயிருக்கும்.'' என்றார் விஜய்

''இந்த ஆட்சியை பார்த்து நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் (ஸ்டாலின்) நடத்தும் ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து 'வாயே இல்லாத வயிறு கூட சிரிக்கிறது'. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? வெளியே செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுகின்றனர். அந்த கதறல் உங்களுக்குக் கேட்கிறதா? ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.'' என்றார்

விஜய்

'234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்'

''தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர்தான் வேட்பாளராக நிற்பார்கள். அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை. நீங்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், எனக்கு வாக்கு செலுத்தியது போன்று.

என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் 'மார்க்கெட்' போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.'' என்றார் விஜய்

தவெக மாநாட்டில் விஜய் உரை

பட மூலாதாரம், TVK

'எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது'

''என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் 'மார்க்கெட்' போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன்'' என்றார் விஜய்

''எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மக்கள் செலுத்திய அன்புக்காக ஆதரவுக்காக வந்திருக்கிறேன். எல்லா அரசியல்வாதியும் நல்லவர் கிடையாது, எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது'' என்று கூறினார்

விஜய் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி  பதில்

விஜய் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

"எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது?" என விஜய், விமர்சித்திருந்தார்.

இதற்கு விஜய் பெயர் குறிப்பிடாமல் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறதென சிலர் கேட்கிறார்கள். அறியாமையின் காரணமாக பேசுவதாக பார்க்கிறேன்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgn0nzg2kko

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் பலமற்ற தலைவர் என்று இலகுவாக அப்புறப்படுத்தி ஆளலாம் என்று விஜய் கணக்கு போடுகிறார். ஆனால் ஸ்டாலின் மிகவும் சுயநலமான நரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா அரசியல் தலைவிரித்தாடும் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட வாழ்க்கை வாழ விரும்பும் தமிழ்நாட்டு மக்களை வைத்து எந்த அரசியல் கணிப்பும் செய்யமுடியாது. அதை விட பணவாக்கு இன்னும் கொடுமையானது...

விஜய் தனது தொகுதிகளில் வெல்வாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் விஜய் சொன்ன சொல் தவறாமல் தேர்தலில் நிற்பாராக இருந்தால் வழமையான வாக்கு வீதங்கள் சிதறடிக்கப்பட வாய்ப்புளது.

சென்னை மாநாட்டில் விஜய் தனது ஆதரவாளார்கள் ம்லுன்னிலையில் தனது கட்சியின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்று முழங்கியது ஆறுதலான செய்தி. இனிமேல் விஜய் பாஜக வுடன் கூட்டுச் சேர மாட்டார் என்பது உறுதியாகிறது.

திமுக தமிழகத்தில் ஆலமரம் போல் வேரூன்றியுள்ளது. அதனைத் தாங்கி நிற்பவர்கள் அரசியல், கல்வி, நிதி, நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு போன்ற பல துறைகளிலும் அனுபவமுடைய பல தலைவர்கள். விஜய் அதிமுக விலிருந்து தலைவர்களைத் தனது கட்சிக்கு வரவைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று அரை வருடங்களுக்கு முன்பு தான் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டு மக்களை இலகுவாக ஏமாற்றி தான் முதலமைச்சராக தான் வந்துவிடலாம் என்று ஆசைபடுகின்றாரே இந்த விஜய் இவர் தான் பேராசை கொண்ட சுயநலமானவர்

  • கருத்துக்கள உறவுகள்

த.வெ.க. மாநாட்டில் தூக்கி வீசப்பட்டது யார்? - போட்டி போடும் 2 இளைஞர்கள்

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.

பட மூலாதாரம், X/@TVKITWingOfficial

படக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார்.

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில், தற்போது வேறு ஒரு இளைஞர் தான்தான் தூக்கியெறியப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த நடைபாதையில் விஜய் நடந்துசெல்லும்போது பாதுகாப்பிற்காக சில பவுன்சர்கள் வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த நடைபாதையை நெருங்கிவிடாதபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதையும் மீறி சில இளைஞர்கள் அந்த நடைபாதையில் ஏறினர். அப்போது விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் அவர்களைத் தூக்கி கீழே வீசினர். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகவே ஒளிபரப்பாயின.

இதற்குப் பிறகு, 'அவ்வாறு தூக்கி வீசப்படும் நபர் என்னுடைய மகன் தான்' எனக் கூறி, குன்னம் தாலுகாவில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ஆனால், இதனை சந்தோஷத்தின் மகன் சரத்குமார் மறுத்தார்.

திடீர் திருப்பமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பெரம்பலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷமும் அவரது மகன் சரத்குமாரும் புகார் ஒன்றை அளித்தனர்.

அந்தப் புகாரில், பவுன்சர்கள் தன்னைத் தூக்கியெறிந்ததால் தனது "மார்பு மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். தனக்கு யாருமே உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

குன்னம் காவல்நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார்.

படக்குறிப்பு, குன்னம் காவல்நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார்.

முதலில் கூறியதை மாற்றிப் பேசியது ஏன் என ஊடகங்கள் கேட்டபோது, "கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்" எனக் கூறினார்.

சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் த.வெ.க. தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு அந்த வழக்கு மதுரை மாவட்டம் கூடகோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, "சரத்குமார் என்பவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் ஒரு வீடியோவில் மாநாட்டிற்கு 9 மணிக்கு வந்ததாகச் சொல்கிறார். அவர் ரயிலில் சென்றிருக்கிறார். அரியலூரில் இருந்து அந்த ரயிலே காலை 9 மணிக்குத்தான் வரும். இதிலிருந்தே அவர் சொல்வது பொய் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அவருடைய தாயார் வீடியோவில் பேசியதும் நான் இவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றுதான் கூறினார். இப்போது மாற்றிச் சொல்கிறார்" என்கிறார் சிவகுமார்.

இந்த நிலையில், மேலும் ஒரு திருப்பமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது இன்ஸ்டாகிராாம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "தூக்கிவீசப்பட்ட இளைஞர் நான் தான், பவுன்சர்கள் தூக்கி வீசியவுடன் கம்பியைப் பிடித்து கொள்வேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை" எனக் கூறியிருந்தார்.

அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான் என்கிறார் அஜய்.

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான் என்கிறார் அஜய்

இது குறித்து அஜய்யிடம் பிபிசி கேட்டபோது, "மதுரை மாநாட்டில் ராம்ப்பில் ஏறியதும் பவுன்சர்கள் என்னைத்தான் தூக்கிப் போட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தேவையில்லாமல் விஜய் மீது புகார் கொடுத்தார்கள். யார் வேண்டுமானாலும் நேரில் வந்தால் அது நான்தான் என நிரூபிப்பேன். அந்த நபர் சொல்வது பொய்" என்று தெரிவித்தார்.

ஆனால், ராம்பில் ஏற முயன்ற பலர் இதுபோல தூக்கிவீசப்பட்ட நிலையில், அப்படி தூக்கிவீசப்பட்ட நபர்களில் சரத்குமாரும் ஒருவராக இருக்கலாம் அல்லவா என அஜய்யிடம் கேட்டபோது, அப்படியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். "அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான். வீடியோவில் இருப்பதும் நான்தான். வேறொருவர் இருந்ததாகச் சொல்வது பொய்" என்கிறார் அஜய்.

இப்போது சரத்குமார் அளித்த புகார் மதுரைக்கு மாற்றப்பட்டிருப்பதால் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் சரத்குமார் சந்தித்திருக்கிறார். இது குறித்துப் பேசுவதற்காக சரத்குமாரைத் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை.

அவருடன் அங்கே சென்ற இந்தியத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனிடம் இது குறித்துக் கேட்டபோது சரத்குமார் ஊடகங்களிடம் பேச தயங்குவதாகத் தெரிவித்தார். "நாங்கள் தொழிலாளர்களுக்காக கட்சி நடத்துகிறோம். சரத்குமாரின் தாயார் கட்டடத் தொழிலாளர் என்பதால் அவர் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

சரத்குமார் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். அவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இதுபோல வீடியோ வெளியானதும், அவருடைய தாயார் இது குறித்து வீடியோவில் பேசினார். ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். இதையடுத்து நான் சரத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

கட்சியில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய தாயாரும் பாட்டியும் அழுதுகொண்டேயிருந்தார்கள். பிறகு அவரே முன்வந்து தான்தான் தூக்கிவீசப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். பிறகு பெரம்பலூரில் புகார் கொடுத்தோம். வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டு, எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. இதனால், மதுரைக்கும் சென்று எஸ்பியைச் சந்தித்தோம்" என்றார் ஈஸ்வரன்.

ஆனால், தற்போது அஜய் என்பவர் தான்தான் தூக்கிவீசப்பட்டதாகத் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, "சரத்குமாரிடம் கேட்டபோது, ராம்ப்பில் ஓடியது தான் அல்ல என்றாலும் தூக்கி வீசியது தன்னைத்தான் என்கிறார். அஜய் என்பவர் நிறைய நண்பர்களோடு சென்றதால் அவரிடம் நிறைய வீடியோக்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. சரத்குமாரிடம் இல்லை. அப்படியே அஜய் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், அவரைத் தூக்கி வீசியதும் தவறுதானே?" என்கிறார் ஈஸ்வரன்.

இது தொடர்பாக போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் கேட்டபோது, "முதலில் புகார் சொன்ன அந்த இளைஞர் தகவல்களை மாற்றி மாற்றிச் சொல்கிறார். அவரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தும் எவ்வித முகாந்திரமும் இன்றி காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. இப்போது வேறு ஒரு இளைஞர் அது தான்தான் எனக் கூறியிருக்கிறார். வழக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பாகவே, இதுகுறித்து முழுமையாக விசாரித்திருக்க வேண்டும்" என்கிறார் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

இது தொடர்பாக பேசுவதற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy5p63r2y66o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.