Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப்

August 23, 2025

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு  அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை  வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில்  97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். 

தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில்  நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். 

ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தமைக்காகவும்  பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதற்காகவும் 1906 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ற்றுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக அமைந்த நாடுகள் கழகத்தை (League of  Nation) அமைத்தமைக்காக 1919 ஆம் ஆண்டில் வூட்ரோ வில்சனுக்கும் சமாதானப் பரிசு  வழங்கப்பட்டது. சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக ஒபாமாவுக்கு அவர் பதவிக்கு வந்த 2009 ஆம் ஆண்டிலேயே அந்த பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கும்  சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. 

1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கு சமாதானத் தீர்வுகளைக் காண்பதற்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் அயராத முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக 2002 ஆம் ஆண்டில் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. பில் கிளின்டனின் இரு பதவிக்காலங்களிலும் (1993 — 2001)  துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோருக்கு காலநிலை மாற்றம் குறித்து செய்த ஆய்வுகளுக்காகவும் அவை தொடர்பிலான  தகவல்களை மக்கள் மத்தியில்  பரப்பியமைக்காகவும்  2007 ஆம் ஆண்டில் அந்த பரிசு கிடைத்தது. அது தவிர, ஹென்றி கீசிங்கர் உட்பட நான்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர்களும் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றனர். 

ஆனால், அவர்களில் எவருமே தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று நோபல் சமாதானப் பரிசைப் பெறுவதற்காக தாங்களாகவே ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதாக நாம் இதுவரையில் அறியவில்லை. உலகின் பல்வேறு பாகங்களிலும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்று அவரே கூறிவருகிறார். கடந்த 

ஜனவரியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வந்த பிறகு ஐந்து மாதங்களில் ஐந்து சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தியதாக கடந்த வாரம் கூறிய ட்ரம்ப் உக்ரெயினில் தொடரும் போருக்கு  முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மீது குற்றம் சுமத்தினார்.

உலக நாடுகள் மீது அடாவடித்தனமாக வரிகளை விதித்து வருவதால் சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய ஒரு பிரபல்யத்தை பெற்றிருக்கும் ட்ரம்ப் கடந்த மாதம் நோர்வேயின் நிதியமைச்சர் ஜெனஸ் ஸ்ரொல்ரன்பேர்க்குடன் வரிவிதிப்புகள் குறித்து தொலைபேசியில் பேசியபோது நோபல் சமாதானப் பரிசை பெறுவதற்கு தான் விரும்புவதாக கூறியதாக நோர்வே பத்திரிகைகள் கடந்த வாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அமெரிக்க நிதியமைச்சர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி  உட்பட வெள்ளை மாளிகையின் பல்வேறு அதிகாரிகளும் தன்னுடன் பேசியதாக ஸரொல்ரன்பேர்க் ஊடகங்களுக்கு கூறினார். 

இந்திய —  பாகிஸ்தான், இஸ்ரேல் — ஈரான், தாய்லாந்து — கம்போடியா, ருவாண்டா — கொங்கோ ஜனநாயக குடியரசு, சேர்பியா — கொசோவா, எகிப்து —  எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆறு மோதல்களை ஜனாதிபதி ட்ரம்ப் முடிவுக்கு கொண்டுவந்ததாக வெள்ளைமாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிற் சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.  மாதத்துக்கு ஒரு சமாதான உடன்படிக்கையும் போர்நிறுத்தமும் செய்யப்படுவதற்கான வெற்றிகரமான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு  நோபல் சமாதானப் பரிசை வழங்குவதற்கு காலம் தாமதித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மூண்டமோதலுக்கு முடிவைக்கட்டியதாக ட்ரம்ப் உரிமை கோருகின்ற போதிலும், இந்தியா அதை நிராகரிக்கின்றது. தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் தனது கோரிக்கையை அடுத்தே மோதலை நிறுத்தியதாக அவர் இதுவரையில் பல தடவைகள் கூறியிருக்கிறார். தனது தலையீடு இல்லாதிருந்திருந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணுவாயுதப் போராக மாறியிருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை கூட ட்ரம்ப் கூறினார். 

இரு நாடுகளினதும் இராணுவ உயர் மட்டங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பாடல்களை தொடர்ந்தே நான்கு நாள் மோதல்கள் நிறுத்தப்பட்டதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறுகின்ற போதிலும்,  பாகிஸ்தான் ட்ரம்பின் கூற்றை இதுவரையில் மறுதலிக்கவில்லை. பதிலாக,  “மோதல்களின்போது தீர்க்கமான இராஜந்திர தலையீட்டைச் செய்து முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கியதற்காக” நோபல் சமாதானப் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியின்  பெயரை பிரேரிக்கப் போவதாக  ஜூன்  மாதம் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. இராணுவத் தளபதி அசீம் முனீருக்கும் ட்ரம்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கு பின்னரே அந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக, ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு நோபல் சமாதானப் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பிரேரித்து நோபல் கமிட்டிக்கு தான்  அனுப்பிய கடிதத்தை அவரிடம் கையளித்தார். எல்லைத் தகராறு காரணமாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் ஜூலையில் மூண்ட ஐந்து நாள் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்த போர்நிறுத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமித்திருப்பதாக கம்போடிய பிரதமர் ஹுன் மனெற் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்தார். 

முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் மூன்று  தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக  நீடித்துவந்த  மோதல்ளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 8  வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஏற்பாடு செய்த “சமாதான உச்சிமகாநாட்டில்” இரு நாடுகளின் தலைவர்களும் நோபல் சமாதானப் பரிசுக்காக அவரின் பெயரை கூட்டாக நியமிப்பதாக உறுதியளித்தனர். தனது நாட்டுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்பை தவிர வேறு எந்த தலைவரினாலும் முடிந்திருக்காது என்று கூறிய ஆர்மேனிய பிரதமர்  நிக்கோல் பாஷின்யான், நோபல் சமாதானப் பரிசுக்காக பிரேரிப்பதற்கு கடிதவரைவு ஏதாவது கைவசம் இருந்தால் உடனடியாகவே அதில்  கையெழுத்திடுவதாக ட்ரம்பிடம் நகைச்சுவையாக கூறியதாக ஊடகங்கள் கூறின.

ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களை  முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி வகித்த பாத்திரத்துக்காக அவரின் பெயரை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்யும் யோசனைக்கு அந்த இரு நாடுகளின் தலைவர்களும் ஆதரவைத்  தெரிவித்திருக்கிறார்கள்.  இதுவரையில் ஐந்து நாடுகளின் தலைவர்கள் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

சமாதானப் பரிசுக்காக செய்யப்பட்ட உண்மையான உத்தியோகபூர்வ நியமனங்கள் அந்தரங்கமாகவே வைக்கப்பட்டிருக்கும் என்பதால்  நோர்வே நோபல் கமிட்டியின் காலக்கெடுவுக்கு (2025 ஜனவரி 31)  முன்னதாக ட்ரம்பின் பெயர் நியமிக்கப்பட்டதா  என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வருடத்துக்கான பரிசுகள் குறித்து ஆராய்வதற்காக நோபல் கமிட்டி  பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்திய முதலாவது கூட்டத்தின் போது அதன் உறுப்பினர்கள் மேலதிக பெயர்களை பட்டியலில் சேர்த்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

காலக்கெடுவுக்கு முன்னதாகவே ட்ரம்பின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக சில அமெரிக்க ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியிருந்தன. நோபல் சமாதானப் பரிசை பெறுபவர்களின் (ஒருவர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள்) பெயர்கள் அக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும். அந்த பரிசை வழங்கும் நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும். 

அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்திருக்கும் நாடுகளின் குறிப்பாக ருவாண்டா, இஸ்ரேல், கபோன், அசெர்பைஜான் மற்றும் கம்போடியா ஆகியவற்றின் தலைவர்கள் எதேச்சாதிகார ஆட்சியாளர்களாக, இராணுவ ஆட்சியாளர்களாக அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய ஆதரவு நோபல் கமிட்டியின் தெரிவில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்தும் எனலாம்.

மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court ) பிடியாணை பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமரை வெள்ளைமாளிகை வரவேற்று விருந்தோம்புகிறது. காசாவில் தொடருகின்ற பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (Internatiinal Court of Justice ) வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.  பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்துவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திப்பதற்கான சகல வல்லமையும் இருக்கின்ற போதிலும், எதையும் செய்யாமல்  நெதான்யாகுவை ட்ரம்ப் மேலும்  உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக அணுவாயுத எச்சரிக்கையை செய்வதற்கு ட்ரம்ப் அனுமதிப்பதை நோபல் கமிட்டி கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அவதானிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேஷாத்ரி  ஷாரி நேற்றைய தினம் ‘த பிறின்ற்’ இணையத் தளத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார் ; 

“சிந்து நதியில் இந்தியா அணையொன்றை கட்டுவதற்கு துணிச்சல் கொள்ளுமானால், அணுவாயுத தாக்குதலை நடத்தப்போவதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் எச்சரிக்கை செய்திருக்கிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.” பாகிஸ்தான் ஒரு அணுவாயுத நாடு. நாம் அழிந்துகொண்டு போகின்றோம் என்று நினைப்போமேயானால், புதுடில்லியிடமிருந்து எமது இருப்புக்கு அச்சுறுத்தல்  வருமானால் உலகின் அரைவாசியை எம்முடன் கொண்டு போவோம்”  என்று முனீர் கூறியிருக்கிறார்.

“இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு வெளிநாட்டு இராணுவ தளபதியொருவர்  அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அத்தகைய பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டபோது ட்ரம்ப் நிருவாகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. நோபல் சமாதானப் பரிசை வழங்கும்  நோர்வேயின் நோபல் கமிட்டி இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் உரிமை கோருவதை முனீரின் அச்சுறுத்தலும் பொய்யாக்கியிருக்கிறது.” 

முதலாவது பதவிக் காலத்தில் இருந்து ட்ரம்ப் தன்னை சமாதானத்துக்கான ஒரு மனிதராக வர்ணித்து வந்திருக்கிறார். ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு எந்தவொரு அமெரிக்கப் படைவீரரையும் வெளிநாட்டு மோதலுக்கு அனுப்பிவைக்காத முதல் ஜனாதிபதி தானே என்றும் அவர் பெருமை பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7  ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் ஒருபோதும் இடம் பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார்.

ஆனால், கடந்த ஜனவரியில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன்  டென்மார்க்கிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய தீவான கிறீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை நிராகராகரிக்க முடியாது என்று ட்ரம்ப் கூறினார். அத்துடன் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப்  போவதாக கூறிய அவர் அயல்நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்கும் யோசனை குறித்தும் பேசினார். 

எல்லாவற்றுக்கும் மேலாக, இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் உல்லாசக் கடற்கரையாக்கப் போவதாகவும் அவர் கூறினார். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலமாக உக்ரெயின் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற தவறான நம்பிக்கையில் ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மிரட்டினார். அதேவேளை, ஐம்பது நாட்களில் போர் நிறுத்தத்துக்கு புட்டின் இணங்கவில்லையானால்,  ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். 

ஆனால்,  இறுதியில் தற்போது புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர ட்ரம்புக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. உக்ரெயினில் பிராந்தியங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ரஷ்யாவின் விருப்பத்துக்கு அவர் இணங்கிவிடுவார் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. புவிசார் அரசியல் நிலைவரம் பற்றிய சரியான தெளிவு இல்லாதவராக,  உக்ரெயின் போருக்கு தனது நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவைக் காண்பதில் நாட்டம் கொண்டிருக்கும் ட்ரம்ப்,  செலன்ஸ்கியை தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றமுறையில் கையாளலாம் என்று நம்புகிறார். 

இது இவ்வாறிருக்க,  உலகளாவிய ரீதியில் ட்ரம்ப் தொடுத்திருக்கும் வரிப்போர் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்தங்கிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் வேறு வழியின்றி அவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற முறையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வரிவிதிப்பை அவர் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான புவிசார் அரசியல் அதிகாரமாக பயன்படுத்துகிறார். 

இலங்கை மீதான வரி தொடர்பாக அமெரிக்கா எடுத்த தீர்மானம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மாத்திரமல்ல, முழுமையான இருதரப்பு உறவுகளுடனும் சம்பந்தப்பட்டது என்று  அண்மையில்  ஜனாதிபதி அநுரா குமார திசாநாக்கவுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார வல்லமை கொண்ட  இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளையும் வரிவிதிப்பைக் காட்டி பயமுறுத்த அவர் முயற்சிக்கின்றார். 

தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி கடைப்பிடித்த அணுகுமுறைகள் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஈரானுடன் அணுத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த நாட்டின் அணு மையங்கள் மீது குண்டுவீச்சுக்களை நடந்துவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். 

ஒபாமாவுக்கு பதினாறு வருடங்களுக்கு முன்னர் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டபோது “எதற்காக அவர் அந்த பரிசைப் பெற்றார் என்று எனக்கு தெரியவில்லை” என்று ட்ரம்ப் கேலி செய்தார். எதைச் சாதித்துவிட்டதற்காக ட்ரம்ப் தனக்கு சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி  இருப்பதாக நம்புகிறார்  என்று முழு உலகமுமே  இப்போது கேட்கிறது.

 தனது மத்தியஸ்த முயற்சிகளின் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ட்ரம்ப் பெருமையாக உரிமை கோரும் எந்தவொரு மோதலுமே மீண்டும் வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. முழு உலகினதும் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் காசா அவலத்துக்கு முடிவுகட்ட    இஸ்ரேலை வழிக்கு கொண்டுவருவதற்கு உருப்படியாக ட்ரம்ப்  எதையாவது செய்தால், அவரின் நோபல் சமாதான பரிசு ஆசையில் ஒரளவு  அர்த்தம்  இருக்க முடியும். 

பட்டினி கிடக்கும் பாலஸ்தீனர்கள் உணவைப் பெறுவதற்கு  நிவாரண நிலையங்களுக்கு வருகின்றபோது குழந்தைகள், பெண்கள், வயோதிபர்  என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இஸ்ரேலியப் படைகளினால் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிய சியோனிச அரசின் காவலனாக நிற்கும் ட்ரம்ப் சமாதான பரிசுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லாதவர். இப்போது மாத்திரமல்ல , ஏற்கெனவேயும் பல தடவைகள் அவர் அந்த பரிசக்கு தனக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டிருந்தார். ஆனால், அது தனக்கு கிடைக்காது என்பதும் ட்ரம்புக்கு தெரியும். தான் எதைச் செய்தாலும் தனக்கு சமாதானப் பரிசை தரமாட்டார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் அவரே ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார்.

வெள்ளைமாளிகையில் இஸ்ரேலிய பிரதமருடன் பெப்ரவரியில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது “சமாதானப் பரிசைப் பெறுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால், அவர்கள் எனக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்”  என்று கூறினார். 

நோபல் பரிசுகளை தெரிவு செய்யும் ஐவர் கொண்ட கமிட்டியை நோர்வே பாராளுமன்றமே தெரிவு செய்கிறது. தனக்கு அந்த கமிட்டி பரிசைத் தராவிட்டால் ட்ரம்ப் நோர்வே மீது கடுமையான வரிகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

https://arangamnews.com/?p=12269

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரிசை கொடுக்கும் நாட்டுக்கு / அரசுக்கு, நோர்வேக்கு, எதாவது தகுதி இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இந்த பரிசை கொடுக்கும் நாட்டுக்கு / அரசுக்கு, நோர்வேக்கு, எதாவது தகுதி இருக்கிறதா?

தற்போது இருக்கும் 190 வரையான தேசங்கள் நாடுகளுடன் ஒப்பிடும் போது நோர்வே தான் இதற்குத் தகுதியான நாடாகத் தெரிகிறது.

கடலோடிகளாக கி.பி 1000 ஆண்டு வரை பெரும் கொடுமைகளைச் செய்த நோர்வேயின் பூர்வ குடிகள், பின்னர் பெரிதாக மனித குலத்திற்கெதிரான செயல்களைச் செய்யவில்லை. நேட்டோவில் உறுப்பினராக இருந்து, அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தான், ஈராக் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய போதும், நோர்வே படையினர் மனித உரிமை மீறல்களில் பங்கு பற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை.

நோர்வே இதற்குத் தகுதியுடையதாக இல்லா விடின், உங்கள் அபிப்பிராயத்தில் எந்த நாடு தகுதியுடையது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கிருபன் said:

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப்

trump-frieden.webp

பெரு மதிப்புக்குரிய டொனால்ட் அவர்கள் ஆர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்குமிடையில சமாதான ஒப்பந்தம் செய்ததையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேணும். 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.