Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடால்ஃப் ஹிட்லரின் ரத்தத்தில் செய்யப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர்

கட்டுரை தகவல்

  • டிஃப்பனி வெர்தைமர்‎

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்ததா என்பன போன்ற பரபரப்பூட்டும் தலைப்புகளில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால், ஹிட்லரின் டிஎன்ஏ-வில் ஆட்டிசம், ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை மரபணு மூலம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக உயர்ந்த அளவில் இருந்தது என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு.

அப்படியென்றால் அவருக்கு இந்த நரம்பியல் பிரச்னைகள் இருந்ததாகக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை, அவருக்கு இந்த நோய்கள் இருந்தன என்று அர்த்தமல்ல என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

அதே நேரம், இந்த ஆராய்ச்சி எதிர்மறையான பார்வைக்கு வழிவகுக்குமா, அது நெறிமுறை ரீதியாக சரியானதா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், இதுகுறித்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

"இந்த ஆய்வை செய்ய வேண்டுமா என்று நிறைய யோசித்தேன்"என சேனல் 4இன் 'ஹிட்லரின் டிஎன்ஏ: ஒரு சர்வாதிகாரியின் ப்ளூபிரின்ட் (Hitler's DNA: Blueprint of a Dictator)' என்னும் ஆவணப்படத்தின் தொடக்கத்தில் பேராசிரியர் துரி கிங் கூறுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் பங்கேற்க அவரை அணுகியபோது, ஹிட்லர் போன்ற சர்ச்சைக்குரிய நபரை ஆய்வு செய்வதில் ஏற்படும் விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். "பரபரப்பை உருவாக்குவதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், இந்த ஆய்வு ஒருநாள் யாராவது ஒரு நபரால் செய்யப்படும். குறைந்தது தனது கண்காணிப்பின் கீழ் நடந்தால், அறிவியல் தரநிலைகளுடனும், "முழு எச்சரிக்கைகளுடனும்" நடைபெறும் என்பதை உறுதிசெய்ய முடியும் என்பதால் இதைச் செய்ய விரும்பினேன் என்கிறார்.

பேராசிரியர் கிங் இத்தகைய முக்கியமான மற்றும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளில் அனுபவம் வாய்ந்தவர். இவர் 2012இல் லெஸ்டரில் கார் நிறுத்துமிடத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது ரிச்சர்டின் எலும்புக்கூட்டினுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திய மரபணு ஆய்வை வழிநடத்தியவர்.

ஹிட்லரின் பதுங்கு குழியிலிருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி .

பட மூலாதாரம், Gettysburg Museum of History

படக்குறிப்பு, ஹிட்லரின் பதுங்கும் இடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி. ரத்தக் கறையை கீழ்-இடது புறத்தில் தெளிவாகக் காணலாம்.

ஹிட்லரின் ரத்தக் கறை படிந்த துணி

ரத்தக் கறை படிந்த அந்தத் துணி, 80 ஆண்டுகள் பழமையானது.

அது இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகள் பெர்லினை நோக்கி முன்னேறியபோது, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட அவரது நிலத்தடி மறைவிடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.

அந்தப் மறைவிடத்தை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ கர்னல் ரோஸ்வெல் பி. ரோஸென்கிரென், இந்தத் துணியை ஓர் அபூர்வமான போர் நினைவுச் சின்னமாகக் கருதி எடுத்துச் சென்றார். இப்போது அந்தத் துணி அமெரிக்காவின் கெட்டிஸ்பர்க் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் துணியில் உள்ள ரத்தம் உண்மையாகவே ஹிட்லருடையதுதான் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கருதுகிறார்கள்.

ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிட்லரின் ஆண் உறவினரிடம் இருந்து எடுத்த டிஎன்ஏ மாதிரியுடன் Y-குரோமோசோம் சரியாகப் பொருந்தியதால், இது ஹிட்லரின் ரத்தம் என்பதை விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.

தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. வரலாற்றில் முதல் முறையாக ஹிட்லரின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆய்வில், மிக மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவருடைய மரபணு அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில், ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு முடிவு முக்கியமானது. ஏனென்றால், 1920களில் இருந்து அவர் யூத மரபுகளின் வேர்களைக் கொண்டிருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவியிருந்தது.

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை வைத்து நடந்த மரபணு ஆய்வு

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

மேலும், அவருக்கு கால்மன் சிண்ட்ரோம் (Kallmann syndrome) எனப்படும் மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. இதனால் பருவமடைதல் மற்றும் பாலியல் உறுப்புகள் உருவாகும் முறை பாதிக்கப்படலாம். குறிப்பாக, சிறிய ஆணுறுப்பு மற்றும் விதைப்பை இறங்காமல் இருப்பது போன்ற நிலைகளுக்கு இது காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போர்க்கால பிரிட்டிஷ் பாடல்களில் கூறப்பட்ட வதந்திகளும் இருந்தன.

கால்மன் சிண்ட்ரோம் பாலியல் உணர்வையும் பாதிக்கக்கூடும். இது மிகவும் சுவாரஸ்யமான கோணமாக இருப்பதாக, ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியரும் போட்ஸ்டாம் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அலெக்ஸ் கே குறிப்பிடுகிறார்.

"இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்கிறது. சரியாகச் சொன்னால், அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையென்பதை வெளிப்படுத்துகிறது," என்று அவர் விளக்குகிறார்.

ஹிட்லர் வாழ்நாள் முழுவதும் அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தது ஏன் என்பது குறித்தும், "அவருக்கு ஏன் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை" என்பது குறித்தும் வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறார்கள். மரபணு சார்ந்த இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கான விளக்கத்தை வழங்கக்கூடும்.

இத்தகைய கண்டுபிடிப்புகளே இந்த ஆய்வை சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் துரி கிங் சொல்வது போல, இது "வரலாற்றையும் மரபியலையும் பிணைக்கும்" முயற்சி.

பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே

பட மூலாதாரம், Tom Barnes/Channel 4

படக்குறிப்பு, மரபியல் நிபுணர் பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே

கவலை தெரிவிக்கும் மரபணு நிபுணர்கள்

ஹிட்லருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பியல் அல்லது மனநலக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று கூறும் முடிவுகள் மேலும் சிக்கலானவையாக, சர்ச்சைக்குரியவையாக உள்ளன.

அவருடைய மரபணுவைப் பரிசோதித்து, பாலிஜெனிக் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டபோது, ஹிட்லருக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி, ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை இருப்பதற்கான சாத்தியம் அதிகம் இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இங்குதான் அறிவியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது.

பாலிஜெனிக் மதிப்பெண் என்பது ஒருவரின் டிஎன்ஏ-வை ஆராய்ந்து, அவருக்கு ஒரு நோய் உருவாகும் சாத்தியம் என்ன என்பதை மதிப்பிடும் முறை. இதய நோய் அல்லது பொதுவான புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான முன்கணிப்பை அறிய இது உதவுகிறது.

ஆனால் இது ஒரு பெரிய மக்கள் தொகையின் தரவுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்படுவதால், ஒரு தனிநபருக்கான முடிவுகளை வழங்கும்போது அது எப்போதும் துல்லியமானதாக இருக்காது.

பிபிசி பார்த்த இந்த ஆவணப்படம் முழுக்க தொடர்ச்சியாக, இந்த டிஎன்ஏ ஆய்வு ஒரு நோயறிதல் அல்ல, மாறாக முன்கூட்டியே இருந்த சாத்தியத்தை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி மட்டுமே என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதாவது, ஹிட்லருக்கு இந்தப் பிரச்னைகள் அனைத்தும் இருந்தன என்று அர்த்தமில்லை, இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே ஆய்வு முடிவு காட்டியுள்ளது.

ஆனால் சில மரபணு நிபுணர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர்

பட மூலாதாரம், Haacker/Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர்

கடந்த 2018இல் இதே ரத்த மாதிரியை ஆய்வு செய்த லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தடயவியல் மரபியல் பேராசிரியர் டெனிஸ் சின்டர்கோம்ப் கோர்ட், இந்த முடிவுகள் "மிகைப்படுத்தப்பட்டவை" என்று கருதுகிறார்.

"ஒருவரின் குணநலன்கள் அல்லது நடத்தையை இதன் மூலம் தீர்மானிப்பது பயனற்றது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"மரபணுவில் சாத்தியம் இருந்தாலும், அது எல்லோரிடமும் நோயாக வெளிப்படாது (incomplete penetrance). அதனால், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து ஒருவருக்கு நோய் இருக்கிறதா என்று நான் கணிக்க விரும்பவில்லை" என்று அவர் விளக்கினார்.

இதையே மரபணு விஞ்ஞானி சுந்தியா ராமன் எளிமையாகச் சொல்கிறார். அதாவது, "உங்கள் டிஎன்ஏவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே, அது உங்கள் உடலில் வெளிப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை."

ஆவணப் படத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆட்டிசம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சைமன் பாரன்-கோஹனும் இதே கருத்தை முன்வைக்கிறார்.

"உடலியல் (மரபணு) தகவல்களில் இருந்து ஒருவரின் நடத்தை பற்றிய நேரடி முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது" என்கிறார் அவர்.

"இவ்வாறான மரபணு முடிவுகளை வெளியிடும்போது எதிர்மறை கருத்து உருவாக வாய்ப்புண்டு. 'எனக்கு இருக்கும் மருத்துவ நிலை, இத்தகைய கொடூர செயல்களைச் செய்த ஒருவருடன் இணைக்கப்படுகிறதா?' என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்" என்று குறிப்பிடுகிறார்.

அதேபோல்,"எல்லாவற்றையும் மரபணுவோடு மட்டும் சுருக்கிப் பார்க்கும் மனப்பான்மை இதிலுள்ள ஒரு பெரிய ஆபத்து" எனக் கூறும் அவர், ஏனென்றால் பரிசீலிக்க வேண்டிய பல்வேறு காரணிகள் இன்னும் உள்ளன என்றார்.

கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம்

'இதுவொரு மலிவான செயல்'

இந்தக் கண்டுபிடிப்புகளை "ஒரு மலிவான செயல்" என்று கூறி, பிரிட்டனின் தேசிய ஆட்டிசம் சங்கம் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

"மேலும், தரமற்ற அறிவியல் ஆய்வைவிட, இந்த ஆவணப்படம் ஆட்டிசம் உள்ளவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத விதம்தான் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது," என்று ஆராய்ச்சி உதவி இயக்குநர் டிம் நிக்கல்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், "ஆட்டிசம் உள்ளவர்கள் இதைவிடச் சிறந்த அணுகுமுறைக்குத் தகுதியானவர்கள்," என்றும் அவர் வலியுறுத்தினார். பிபிசி இந்த விமர்சனங்களை சேனல் 4 மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ப்ளிங்க் பிலிம்ஸ் நிறுவனத்திடம் முன்வைத்தது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் சைமன் பாரன்-கோஹன் உள்ளிட்ட நிபுணர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"ஒருவரின் நடத்தை பல காரணிகளின் விளைவாக உருவாகிறது. அது மரபணுவால் மட்டுமே உருவாவதில்லை. மாறாக, குழந்தைப் பருவம், வாழ்க்கை அனுபவங்கள், வளர்ப்பு, கல்வி, கிடைக்கும் வாய்ப்புகள், சமூகம், கலாசாரம் உள்ளிட்ட பல அம்சங்களால் உருவாகிறது."

"இந்த ஆவணப்படம் ஹிட்லரை பற்றி சில மரபணு சார்ந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்வது 'முன்பே உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்டது' என்று சொல்லவில்லை."

பேராசிரியர் தாமஸ் வெபர்

பட மூலாதாரம், Stephanie Bonnas

படக்குறிப்பு, "ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்தபோது, நான் ஒரே நேரத்தில் உற்சாகத்துடனும் கவலையுடனும் இருந்தேன்," என்று பேராசிரியர் தாமஸ் வெபர் கூறினார்.

ஆவணப்படத்தின் பெயரே, குறிப்பாக "Blueprint of a Dictator" என்ற இரண்டாம் பகுதி பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

இந்தப் பெயரை "நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்" என்று பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள வரலாற்றாசிரியர் பேராசிரியர் தாமஸ் வெபர், "சர்வாதிகாரி மரபணு என்ற ஒன்றே இல்லை" என்று தாங்கள் வலியுறுத்தி இருந்தபோது, இப்படிப்பட்ட தலைப்பு பயன்படுத்தப்பட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசுவதற்கு முன்பு வரை, அந்த ஆவணப்படத்தைப் பார்க்காத பேராசிரியர், டிஎன்ஏ பகுப்பாய்வு உற்சாகமூட்டுவதாகவும் கவலையளிப்பதாகவும் இருப்பதாகக் கூறினார்.

"ஹிட்லரை பற்றி நான் முன்பே சந்தேகித்த பல விஷயங்களை இந்த மரபணு ஆய்வு உறுதிப்படுத்தியதால், உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒருவரை தவறான பண்பு கொண்டவராக மாற்றும் ஒரு 'தீய மரபணு' இருப்பதாக நினைத்து, மக்கள் மரபியலை தவறாக அல்லது மிகையாகப் புரிந்துகொள்வார்களோ" என்று அவர் கவலை தெரிவித்தார்.

குறிப்பாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டிசம் மற்றும் பிற சிக்கல்களுடன் வாழும் நபர்களால் இது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பொது மக்களுக்கு சிக்கலான அறிவியலை விளக்கும் ஒரு துல்லியமான ஆவணப்படத்தை உருவாக்குவதில் பல சிரமங்களும் ஆபத்துகளும் உள்ளன.

"இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால், சில நேரங்களில் விஷயங்களை எளிமைப்படுத்த வேண்டியிருக்கும்," என்று பேராசிரியர் கிங் கூறுகிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனது பொறுப்புகளையும் ஊடக உலகின் எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவதில் அவர் அனுபவம் வாய்ந்தவர்.

"ஆவணப்படத்தை தயாரிப்பவர்கள் வேறொரு வழியில் எடுத்திருந்தால், இது மிகப் பரபரப்பானதாக மாறியிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சில நுணுக்கங்களைப் பாதுகாக்க முயன்றுள்ளனர். மேலும் நாங்களும் தேவையான பாதுகாப்பு வரம்புகளைச் சேர்த்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

சேனல் 4, இந்த ஆவணப் படத்தின் பெயரைப் பாதுகாத்து, "டிஎன்ஏ-வை பொதுவாக 'வாழ்க்கையின் வரைபடம்' (blueprint of life) என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்" என விளக்கியது.

மேலும், தங்களின் பணி "பெரிய பார்வையாளர் வட்டத்தைச் சென்றடையும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதுதான். இந்த ஆவணப்படம் சிக்கலான அறிவியல் கருத்துகளையும் வரலாற்று ஆய்வுகளையும் அனைவருக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முயல்கிறது" எனவும் தெரிவித்தது.

1945-ல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கு குழியிலுள்ள சோபாவை ஆய்வு செய்கிறார்கள்.

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, கடந்த 1945இல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கும் மறைவிடத்தில் சோபாவை ஆய்வு செய்கிறார்கள். நாற்காலியின் கைப்பிடியில் காணப்படும் கறை ரத்தக்கறை என்று கூறப்படுகிறது.

நெறிமுறைகள் குறித்து எழும் கேள்விகள்

இந்தத் திட்டத்தின் நெறிமுறைகள் குறித்தும் பல கேள்விகள் உள்ளன.

'ஹிட்லரின் அனுமதியையோ அல்லது அவரது நேரடி வாரிசின் அனுமதியையோ பெற முடியாத நிலையில், அவரது டிஎன்ஏ-வை ஆய்வு செய்ய வேண்டுமா? அவர் வரலாற்றின் மிகக் கொடூரமான குற்றங்களுக்குக் காரணமானவர் என்பதால், அது அவருக்கு தனியுரிமை என்ற ஒன்று இல்லாமல் போகிறதா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

"இவர் ஹிட்லர். யாராலும் அணுக முடியாத மாய மனிதர் அல்ல. அவரின் டிஎன்ஏ-வை ஆய்வு செய்யக்கூடாது என்று யார் முடிவெடுக்கிறார்கள்?" என்று பேராசிரியர் கிங் கேட்கிறார்.

"விஞ்ஞானிகள் இதைத்தான் செய்கிறார்கள். இறந்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொல்பொருள் துறையில் இது சாதாரண நடைமுறைதான். அதை நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதில்தான் சிக்கல் உருவாகிறது" என்று வரலாற்றாசிரியர் சுபத்ரா தாஸ் குறிப்பிடுகிறார்.

"உண்மைகள் சரியாக இருக்க வேண்டும், அனைத்தும் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும்" என்றும் நெறிமுறை கோணத்தைப் பற்றித் தனக்கு கவலை இல்லை என்றும் கூறுகிறார் வரலாற்றாசிரியர் முனைவர் கே (Kay).

ஹிட்லரின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஹிட்லர் இறந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு நேரடி வாரிசுகளும், குழந்தைகளும் இல்லை. அவர் அளித்த துன்பம் அளவிட முடியாதது. அதை, அவரது டிஎன்ஏ ஆய்வில் உள்ள நெறிமுறை சிக்கலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார்.

சுவாரஸ்யமான விஷயமாக, ஐரோப்பாவின் பல ஆய்வகங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வகம்தான் சோதனையை மேற்கொண்டது.

இந்த ஆய்வு "கல்வித்துறையில் தேவையான அனைத்து நெறிமுறை மதிப்பாய்வு செயல்முறைகளையும் கடந்து முடிக்கப்பட்டது. மேலும் இது இரண்டு நாடுகளில் நடந்த மதிப்பாய்வுகளையும் உள்ளடக்கியது" என்று ஆவணப்பட தயாரிப்பாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஹிட்லர்

பட மூலாதாரம், General Photographic Agency/Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, 1933ஆம் ஆண்டில் ஹிட்லர்...

இந்த ஆய்வு அவசியமா?

இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஒரே மாதிரியான பதில் இல்லை.

பிபிசி பல மரபணு விஞ்ஞானிகளிடமும் வரலாற்றாளர்களிடமும் பேசியது. இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதையே சார்ந்துள்ளது.

ஆவணப் படத்தில் இடம்பெற்ற நிபுணர்கள், ஆம், இந்த ஆய்வு அவசியம் என்று சொல்வார்கள்.

"இந்த ஆய்வு ஹிட்லரின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, அவர் இன்னமும் நம்மை ஈர்ப்பவராகவும், பயமுறுத்தும் ஒரு நபராகவும் உள்ளார்" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

"கடந்த காலத்தின் பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ள நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்," என்கிறார் பேராசிரியர் வெபர்.

ஹிட்லர்- ஈவா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹிட்லர், பதுங்குமிடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு ஈவா பிரௌனை மணந்தார்.

"நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விவாதங்கள் புதியவை அல்ல. நாம் திடீரென்று இந்தக் கருத்தை மக்களின் மனதில் விதைக்கவில்லை. ஹிட்லருக்கு சில மனநலக் கோளாறுகள் இருந்ததா என்பது குறித்து மக்கள் பல தசாப்தங்களாகப் பேசி வந்துள்ளனர்"என்கிறார் முனைவர் கே.

ஆனால் எல்லா வரலாற்றாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

"ஹிட்லரின் செயல்களைத் தூண்டியது எது என்பதை விளக்க இதுவொரு சந்தேகத்திற்குரிய வழி என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் உட்ரெக்ட் பல்கலைக்கழக சர்வதேச வரலாற்று உதவிப் பேராசிரியர் இவா வுகுசிக்.

வெகுஜன வன்முறை எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் வுகுசிக், மக்கள் ஏன் இதில் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் "நாம் தேடும் பதில்கள் டிஎன்ஏ சோதனையிலிருந்து கிடைக்கப் போவதில்லை"என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந்த ஆய்வு சுவாரஸ்யமானது என்றாலும், இது வரலாற்றின் உண்மையான பாடங்களை மறைக்கும் அபாயம் இருப்பதாக வரலாற்றாசிரியர் ஆன் வான் மௌரிக் குறிப்பிடுகிறார்.

அதாவது, "சில சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்களே கொடூரமான வன்முறைகளில் ஈடுபடலாம், அதைத் தூண்டலாம் அல்லது அதைப் பொறுத்துக் கொள்ளலாம்" என்பதுதான் அந்தப் பாடம்.

ஹிட்லரின் (சாத்தியமுள்ள) சிறிய ஆணுறுப்பு போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவது, இனப்படுகொலை, வெகுஜன வன்முறை எப்படி செயல்படுகிறது, ஏன் நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தப் புரிதலையும் நமக்குக் கொடுக்காது என அவர் கூறுகிறார்.

இந்த ஆய்வு முடிந்து, தற்போது சக நிபுணர்கள் மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்புகள் முழுமையாக வெளியே வரும்.

பேராசிரியர் வெபர் கூறுகையில், இந்த முடிவுகளை "மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும்" பயன்படுத்த வேண்டும். ஆனால், இவை ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்புகிறார்.

"ஆராய்ச்சி முடிவுகளின் சிறப்பு அதுதான். அதன் மதிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ, 150 ஆண்டுகளுக்குப் பிறகோ, 500 ஆண்டுகளுக்குப் பிறகோ தெரியலாம். இந்த ஆய்வு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

"அறிவியலைப் பின்பற்ற வேண்டும். நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று முனைவர் கே கூறுகிறார்.

இது ஊடகங்களுக்கும் பொருந்தும். இந்த ஆய்வு எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் அதில் அடங்கும்.

"இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பவர்கள் துல்லியமாக எழுத வேண்டும். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாவதற்கோ அல்லது எதிர்மறை கருத்து உருவாவதற்கோ பங்களிக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"இதுபோன்ற ஆவணப்படங்கள் சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை. மக்களையும் நிகழ்வுகளையும் பாதிக்கக் கூடியது" என்று முனைவர் கே வலியுறுத்துகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dn7zm733vo

  • கருத்துக்கள உறவுகள்

போலாந்து நாட்டில், வட்டமான மேசை ஒன்றில் சில யேர்மானியர்களை நிறுத்தி, அவர்கள் நாக்கை இழுத்து மேசையில்வைத்து ஆணியடித்து யூதர்கள் கொடுமை செய்ததை கிட்லர் கண்டாராம்.

தெருவைக் கடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு உதவிபுரியாமல் அங்கு காணப்படும் இளைஞர்களைக் கைதுசெய்து கிட்லர் பெரும் தண்டனை கொடுப்பாராம்.

மேற்கூறிவற்றை யேர்மன் முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டுள்ளேன்.🤔

  • கருத்துக்கள உறவுகள்

DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, vanangaamudi said:

DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.

இது முற்றிலும் சரியான தகவல் அல்ல.

"யூதம்" ஒரு மதம் என்பது சரி. ஆனால் யூத மக்களின் வாழ்க்கை முறை, மணம் முடிக்கும் முறைகள் காரணமாக jewishness என்பது அவர்களது தாய்வழியின் (matrilineal) ஊடாகப் பேணப் பட்டு வரும் ancestry உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக மத்திய, கிழக்கு ஐரோப்பிய யூதர்களை அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்கள் என்பார்கள். இவர்களின் சிறுமணி டி.என்.ஏ (mitochondrial DNA) யில் அவர்களின் தாய்வழி அஷ்கெனாசி டி.என்.ஏ பண்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் முன்னர், இந்தியாவின் கிழக்கு மாநிலத்தில் இருந்து "நாம் கிழக்கு நோக்கி குடிபெயர்ந்த போது தொலைந்து போன யூத கோத்திரங்களில் (tribe) இருந்து வந்தவர்கள்" என்று ஒரு இந்திய யூதர்கள் சமூகம் இஸ்ரேலுக்குச் சென்று டி.என்.ஏ பரிசோதனையை கோர்ட்டில் சமர்ப்பித்து இஸ்ரேல் குடியுரிமையைப் பெற்றார்கள்.

"யூத ஜீன்" என்ற ஒன்று இல்லை, ஆனால் ancestry இன் வழியாக யூதப் பின்னணியைக் கண்டறியலாம், நிரூபிக்கலாம்.

Edited by Justin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/11/2025 at 12:01, Paanch said:

போலாந்து நாட்டில், வட்டமான மேசை ஒன்றில் சில யேர்மானியர்களை நிறுத்தி, அவர்கள் நாக்கை இழுத்து மேசையில்வைத்து ஆணியடித்து யூதர்கள் கொடுமை செய்ததை கிட்லர் கண்டாராம்.

தெருவைக் கடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு உதவிபுரியாமல் அங்கு காணப்படும் இளைஞர்களைக் கைதுசெய்து கிட்லர் பெரும் தண்டனை கொடுப்பாராம்.

மேற்கூறிவற்றை யேர்மன் முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டுள்ளேன்.🤔

இது பொய்யான செய்தியாக இருக்கும். யூதர்கள் அந்தளவிற்கு மோசமானவர்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இது பொய்யான செய்தியாக இருக்கும். யூதர்கள் அந்தளவிற்கு மோசமானவர்கள் இல்லை.

நான் கேட்டது உண்மை. சொன்னவர் பொய்யனா? மெய்யனா?? எனக்குத் தெரியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.