Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மாணவன் அன்று எதற்காக அங்கு கொண்டுவரப்பட்டான் என்கிற காரணத்தை விளக்கிவிட்டு இப்பதிவினைத் தொடர்கிறேன்.

சிங்கள மாணவர்களின் இனவாதமும் காட்டிக்கொடுப்பும் தலைவிரித்தாடிய அன்றைய நாளுக்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் ஆனையிறவு இராணுவ முகாமை புலிகள் வெற்றிகொண்டிருந்தார்கள். இக்காலத்தில் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் ஆனையிறவிற்கான வெற்றிவிழா என்கிற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பல்கலைக்கழக மாணவர்களும் பெரும்பாலான சிங்கள விரிவுரையாளர்களும் பார்த்து வந்தார்கள். விரிவுரையாளர்களில் பி ஏ டி சில்வா எனப்படும் எந்திரவியல்த்துறைப் பேராசிரியர் குறிப்பிடும்படியானவர். புகழ்பெற்ற சிங்கள இனவாதியாக கருதப்பட்ட இவரது வகுப்புகளில் ஆனையிறவு தளத் தோல்வியைப் பற்றி இவர் அதிகம் பேசுவார். பொறியியல்த் துறையில் படிக்கும் தமிழ் மாணவர்களே பிரபாகரனுக்கு உதவுவதாகவும் அவர் வெளிப்படையாகவே சில வகுப்புகளில் கூறியிருந்தார். இவ்வாறு ஆனையிறவுப் படைத்தளத் தோல்வியின் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கெதிரான சிங்களவர்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டதுடன் எமது அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த சந்தேகத்துடன் அவர்களால் நோக்கப்பட்டன. இதனால் கூட்டமாக அமர்ந்து பேசுவதையோ, பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாடுவதையோ, பேரூந்துகளில் பயணிக்கும்போது தமிழில் உரையாடுவதையோ தவிர்க்கத் தொடங்கினோம். எம்மில் எவரது பிறந்த நாளின்போதும் மலிபன் சொக்கலேட் கிறீம் பிஸ்கெட்டும், ஐஸ் கீறீமும் கொண்டு பிறந்தநாளைச் சிறப்பிப்பது என்பது எமது வழக்கங்களில் ஒன்று. இவ்வாறான பிறந்தநாள் நிகழ்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழக மைதானத்தில் இரவுவேளைகளில் நடக்கும். சிலவேளை பியர்ப் போத்தல்களும் அங்கு பரிமாறப்படும். ஆனால் அவ்வாறான கொண்டாட்டங்கள் கூட அக்காலத்தில் முற்றாக நிறுத்தப்பட்டுப் போனது.

ஆனால், ஆனையிறவு போர் முடிந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சிங்களவர்கள் ஓரளவிற்கு ஆறுதலடைந்திருப்பார்கள், மனதைத் தேற்றிக்கொண்டிருப்பார்கள் என்கிற நப்பாசையில் அந்த முஸ்லீம் மாணவனும் இன்னும் சிலரும் அன்றிரவு பல்கலைக்கழக மைதானத்தில் தமது நண்பர்களில் ஒருவனின் பிறந்தநாளுக்காக‌ மதுபான கேளிக்கை ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். வழமைபோல தான் கொண்டுவந்திருந்த போதைப்பொருளை அம்மாணவன் அருந்தியிருக்கிறான். போதை தலைக்கேற, சத்தமாக தமிழில் சினிமாப் பாடல் ஒன்றினை அவனும் கூடவிருந்த சிலரும் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் பாடிய சத்தம் அப்பகுதியில் நின்றிருந்த சிங்கள மாணவர்களுக்குக் கேட்கவே, தமிழ் மாணவர்கள் ஆனையிறவு வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள். கூடவே அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடி அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமது மதிப்பிற்குரிய பிரபல இனவாதி சி வி குணரத்ண இறந்த துயரமும் சேர்ந்துவிட, கும்பலாகச் சேர்ந்து மைதானம் நோக்கி வெறியுடன் ஓடி வந்திருக்கிறது சிங்கள மாணவர் கூட்டம். பாரிய கூட்டமொன்று தம்மை நோக்கி கத்தியபடி, கைகளில் பொல்லுகளுடன் ஓடிவருவதைக் கண்ட முஸ்லீம் மாணவனும் ஏனைய தமிழ் மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடத் தொடங்கியிருக்கிறார்கள்.

தம்மைக் கண்டு ஓடுவது தமிழ் மாணவர்கள்தான் என்றும், அவர்கள் அங்கு ஈடுபட்டது ஆனையிறவு வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில்த்தான் என்றும் நம்பிய துரத்திவந்த சிங்கள மாணவர் கூட்டம், அவர்களை மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தாக்கியபடியே, "உங்களின் பல்கலைக்கழக அடையாள அட்டைகளைக் காட்டுங்கள்" என்று கேட்கவும், முஸ்லீம் மாணவனிடம் அதற்கான பதிவுகள் இருக்கவில்லை. ஏனென்றால் அவன் இரகசியமாகவே பல்கலைக் கழக விடுதியில் தரித்திருந்து படித்துவந்தான். சுமார் இரு வருடங்களுக்கு முன்னரே அவனது பல்கலைக்கழக அடையாள அட்டை முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று கருதிய சிங்கள மாணவர் கூட்டம், "நீ யார், ஏன் இங்கு வந்தாய்? எதற்காக களியாட்டம் நடத்துகிறாய்? சி வி குணரத்ணவைக் கொன்றது நீதானே?" என்று கேட்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அடியின் அகோரம் தாங்காது கதறிய முஸ்லீம் மாணவன், தப்பித்துக்கொள்வதற்காக, தாம் ஆனையிறவு வெற்றிக் கொண்டாட்டத்தையே நடத்தினோம் என்றும், சி வி குணரத்ணவைக் கொன்றது தாங்கள்தான் என்றும் கூறியிருக்கிறான்.

இதனையடுத்து உடனடியாக மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்ட சிங்கள மாணவர் கூட்டம், அமைச்சர் சி வி குணரதணவைக் கொலை செய்த புலிகளை, பல்கலைக்கழகத்தில் ஒளித்திருந்தவேளை பிடித்துவைத்திருக்கிறோம், உடனேயே வாருங்கள் என்று கூறியிருக்கிறது. அதற்குப் பின்னர் நடந்தவையே நான் மேலே விபரித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சற‌த்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள்.

சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உற‌ங்க ஆரம்பித்தார்கள்.

எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவ‌னுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன்.

அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.