Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

January 26, 2026

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

(இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம், தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி, மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அதிகாரம், ஆட்சிலிருக்கும் தேசியமக்கள் சக்தியின் செயற்பாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல விடயங்களையும் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ. சுமந்திரனுடன் உரையாடினோம். இலங்கை அரசியற்பரப்பிலும் தமிழர்களின் அரசியலிலும் சுமந்திரனின் அடையாளமும் குரலும் முதன்மையானது. என்பதால் அனைத்துத் தரப்பினரோடும் உரையாடக்கூடியவராகவும் அனைத்துத்தரப்பினரும் உரையாடும் ஒருவராகவும் சுமந்திரன் காணப்படுகிறார். இது அவரைக் குறித்த கவனத்தையும் அதேவேளை சில சர்ச்சைகளையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணல் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.)

   — கருணாகரன் —

1.  இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினைகளாகத் தொடரும் இனப்பிரச்சினை,  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குத் தீர்வைக் காண்பது எப்படி? இதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஆட்சியாளர்களால் முடியாதிருப்பது ஏன்?

எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், இந்தத் தீவில் சிங்கள பெளத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் உலகிலும், ஏன் இந்தப்பிராந்தியத்திலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். எனவே அவர்களுக்கு இயல்பாகவே ஒரு பீதி – உளவியல் ரீதியான அச்சம் – இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் பௌத்தத்திற்கும் சிங்களத்திற்கும் முதலிடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பொருளாதார விடயங்களிலும் தங்களை மற்றவர்கள் விழுங்கி விடுவார்கள் என்ற பயம் உள்ளது, இது சுயாதீனமாக முடிவுகள் எடுப்பதைத் தடுக்கிறது. ஆட்சியாளர்கள், மக்களுக்கு அவர்களது பயம் நீங்கும்படியான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றமும் தீர்வும் முன்னேற்றமும் நிகழும். 

2.  மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது எதற்காக? 

⁠முழுமையாக அப்படிப் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்ல முடியாது. ஒரு சில தருணங்களில் அதிகாரப் போதை காரணமாக மக்களது உணர்வுகளையும் தேவைகளையும் ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள். 

3.  அப்படிச் சொல்ல முடியாதே! மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டதால்தானே நாட்டில் பிரச்சினைகள் மேலும் மேலும்  கூடிச் சென்றிருக்கின்றன. புதிய பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது உலக வழமை. பழைய – பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதற்குக் காரணம், மக்களுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டதனால்தானே? 

மக்களுடைய உணர்வுகள் மதிக்கப்படுவதால் மாத்திரம் பிரச்சனைகள் தீராது. பல சந்தர்ப்பங்களில் இவை இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மாறாக சில சமயங்களில் மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க நினைப்பதனாலேயே பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருக்கும். 

4.  பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமிழந்த ஒன்றாக மாறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதற்கும் காரணம் மக்கள்தான். அவர்கள் பொறுப்போடும் தூர நோக்கோடும் தங்களது தெரிவுகளை மேற்கொண்டால் பாராளுமன்றத்தில் ஜனநாயகம் மேலோங்குவதைக் காணலாம். குறுகிய நோக்கங்களுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்தால் பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்றதாக மாறி விடும்.

5.  மாற்றத்துக்கான ஆட்சி, System Change என்றெல்லாம் சொல்லி அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மெய்யாகவே மாற்றத்திற்கான வழியில்தான் பயணிக்கிறதா? 

ஓரளவு மாற்றம் தெரிகிறது. இது ஆரம்பம் மட்டும்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களது பல செயற்பாடுகள் மாற்றத்தை நோக்கினதாகவே தென்படவில்லை. இதுவும் பழைய குருடி கதவைத் திறடி என்றுதான் முடியும்.

6.  அவ்வாறில்லை என்றால், அதைச் சரியான திசையில் செலுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? இதில் எதிர்க்கட்சிகளின் திறனும் அர்ப்பணிப்பும் எப்படி உள்ளது? எப்படி அமைய வேண்டும்?

எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான திறனோ அர்ப்பணிப்போ பிரதான எதிர்க் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

7.  நாட்டின் தேவை, மக்களின் எதிர்பார்ப்பு, சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ் பேசும் சமூகங்களின் நியாயமான உரிமைகளில் எல்லாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடும் செயற்பாடும் (நடைமுறைகள்) எப்படி உள்ளது?

தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களை இந்த அரசு நியாயமான முறையில் அணுகுவதாக தெரியவில்லை. அப்படி ஒரு தேசிய இனப்பிரச்சனை இருப்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் எந்தச் செயற்பாடும் அதை ஒட்டியதாக இல்லை.

8.  முன்னைய ஆட்சியாளர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன? ஒன்றுமைகள் என்ன? 

⁠தீர்க்கப்படாத இனப்பிரச்சனை ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாடு முன்னைய ஆட்சியாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. ஊழல் விவகாரங்கள் மிக குறைவாக காணப்படுவதுதான் வேற்றுமை.

9.  ஒப்பீட்டளவில் ‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பரவாயில்லை. முன்னேற்றகரமானது’ என்ற அபிப்பிராயம் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் உண்டு. இப்படியான சூழலில் இந்த அரசாங்கத்தோடு பல விடயங்களில் சேர்ந்து செயற்படும் வாய்ப்புள்ளது அல்லவா!

ஆம். ஆனால் எவரையும் சேர்த்து செயற்படும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு அறவே கிடையாது.

10.அப்படியென்றால், இது கதவைச் சாத்திக் கொண்டு மூடப்பட்ட அறைக்குள் குடித்தனம் நடத்துவதைப்போன்ற ஒரு ஆட்சியா? அரசியல் சொல்லாடலில் இதை ஏகத்துவத்தின் சர்வாதிகார இயல்பு (The authoritarian nature of monotheism) என்று சொல்லலாமா? 

ஆம். நிச்சயமாக அப்படித்தான்.

11.          தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி எத்தகைய அணுமுறையைப் பேண விரும்புகிறது? ஏனென்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேசிய மக்கள் சக்தியுடன் சிநேகபூர்வமானதொரு உறவு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்தது. அந்த உறவை ஆட்சியிலிருக்கும்போது மேலும் வளர்த்தெடுக்க முடியாமலிருப்பது ஏன்?

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களோடு தனிப்பட்ட சிநேகிதம் இருந்தது. ஆனால் ஆட்சியாளர்களான பின்பு அவர்களது அரசியல் நகர்வுகள் பலவற்றை நாம் பகிரங்கமாக எதிர்க்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. அதை நாம் செய்கிறபோது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம் உள்ளவர்களாகத் தெரியவில்லை. அந்தச் சூழலில் முன்னர் இருந்த சிநேகிதத்தைப் பேண முடியாதுள்ளது.

12.          தமிழ் அரசியற் தரப்பினர் கோருகின்ற – எதிர்பார்க்கின்ற – வலியுறுத்துகின்ற அரசியல் அதிகாரத்தை(சமஸ்டி உள்ளடங்கலான தீர்வை) வழங்குவதற்கான அரசியல் உளநிலை ஆட்சியாளர்களிடத்திலும் இல்லை. ஆட்சிக்கு வெளியே உள்ள சிங்கள அரசியலாளர்களிடத்திலும் சிங்களச் சமூகத்திடமும் இல்லை. அரசியலமைப்பு மாற்றம், அரசியற் தீர்வு ஆகியவற்றை எட்டுவதாக இருந்தால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறான ஒரு சூழலில் எப்படித் தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வைப் பெறுவது?

எந்த அரசியல் தீர்விற்கும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அது இல்லாமல் எந்த தீர்வும் நீடித்து நிலைக்காது. அது முடியாத காரியமல்ல. ஆட்சியிலிருக்கும் கட்சியும் நாமும் கூட்டாக மக்கள் முன் சென்று தீர்வை விளக்கினால் இது இலகுவாக சாத்தியப்படும்.

13.          ‘தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்‘ என்ற கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியமென்ன?தற்போது இந்த விடயத்தில் ஒரு இணக்க மனநிலை– ஐக்கியத்துக்கான சூழல் – தென்படுகிறது. அதேவேளை ‘இது நேர்மையான உறவாக இருக்கப்போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டு’ என்ற பேச்சுகளும் சமாந்தரமாக உள்ளது. மெய்யாகவே தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை உருவாக்குவதற்கு உங்களுடைய உளப்பூர்வமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் என்ன?

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு அணியில் சேர்ந்து இயங்குவது சாத்தியமான ஒரு விடயமே. தங்கள் கட்சிகளின் தனித்துவத்தை இழந்து விடாமல் அரசியல் தீர்வு விடயத்தில் இணங்கிச் செயற்படலாம். தேர்தல் கூட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீர்வு விடயத்தில் இணைந்து செயல்படுவது அத்தியாவசியமானதும் கூட.

14.          தமிழரசுக் கட்சி, கட்சிக்கு உள்ளே (ஒழுக்காற்று நடவடிக்கைகளில்) இறுக்கமாகவும் வெளியே ஏனைய அரசியற் தரப்புகளோடு இணக்கமாகவும் செயற்படுகிறது. புதிய தலைமையில் ஒரு பண்பு மாற்றத்தை உணர முடிகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் குறித்து நிதானமாகச் சிந்திப்போரிடத்திலும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலைப் பற்றி அக்கறைப்படுவோரிடத்திலும் இதற்கு எத்தகைய வரவேற்புண்டு? 

இதற்கு பாரிய வரவேற்பு உண்டு. இப்போதுதான் கட்சி கட்டுப்பாட்டோடு செயற்படுகிறது என்பது அனைவருடைய கருத்தாக உள்ளது. ஒற்றுமையில் பலம் உண்டு என்பதனால் மற்றைய கட்சிகளோடு இணக்கமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதையும் அனேகமானோர் புரிந்து வைத்துள்ளார்கள்.

15.         பாராளுமன்றத்தினால் செய்ய முடியாத ஆட்சி மாற்றச் சூழல் ஒன்றை மக்கள் தமது ‘அரகலய’ (2022 Sri Lankan protests)  போராட்டத்தின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் . இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட முக்கியமான வேலைகளையும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதைத்தானே பிந்திய நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.  அப்படியென்றால் மக்கள் போராட்டத்தோடு நீங்களும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமல்லவா?

அரகலயவில் நாமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அந்த வேளைகளில் நான் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆனால் அரசியலமைப்பு மாற்றம் இறுதியில் ஒரு சட்ட முறைமையினூடாகத் தான் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மக்களோடு சேர்ந்து அறகல போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஒன்று. ஆனால் மற்றைய எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்பது வித்தியாசமானது. யாரோடு எதற்காக இணைவது என்பது முக்கியமானது.

16.          தமிழ்த் தேசியவாத அரசியலில் புத்துணர்வற்ற – புதிய சிந்தனைகளற்ற சம்பிரதாயத்தன்மையே மேலோங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலக மாற்றங்களையும் பிராந்திய – உள்நாட்டு நிலவரங்களையும் உய்த்துணர்ந்து செயற்படக் கூடிய தன்மை போதாதென்றும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன?

தமிழ்த் தேசியவாத அரசியல் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த போது ஜனநாயகப் போராட்டம் எப்படி இருந்ததோ, அதே பாணியில் போருக்குப் பின்னரான அரசியலையும் நகர்த்தியதே இதற்குக் காரணம். அதே பாணியில் பயணிப்பதற்கு வலுவான காரணங்கள் இருந்த போதும் 3 தசாப்த இடைவெளியை அனுசரித்து சில அணுகுமுறை மாற்றங்களை செய்திருக்க வேண்டும். 

17.          பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள், பிரதானிகளோடு பேசிவரும் உங்களுடைய அனுபவத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றுக்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றனவா?

ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு நிச்சியமாக அவர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதை அடைவதற்கு போர்க்குற்ற விசாரணையை உபயோகிப்பார்கள்.

18.           பௌத்த விரிவாக்கம், சிங்கள மேலாதிக்கம் போன்றவற்றை நடைமுறையிலும்(ஆட்சிமுறையிலும்) அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தியும் வைத்திருப்பது பன்மைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் அல்லவா!இதைக்குறித்துத்தானே வெளியுலகச் சமூத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டும். அப்படித் தமிழ்த்தரப்பு எங்கேனும் செயலாற்றியுள்ளதா? 

ஆம். எல்லாத் தருணங்களிலும் இதை உதாரணமாக எடுத்துக் காட்டியிருக்கிறோம். 

19.         இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் அரசியமைப்பு மாற்றத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் புத்திஜீவிகள், பல்கலைக்கழத்தின் அரசியல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் துறையினரின் பரிந்துரைகள் எதையும் முன்வைப்பதில் அக்கறையற்றிருப்பது ஏன்?

போர்ச் சூழலில் அப்படியானவர்கள் ஒதுங்கி இருக்கவே விரும்பினார்கள். இப்போதும் சமூக வலைத்தளங்களினூடாக செய்யப்படும் அவதூறுகள் காரணமாக பலர் இப்படியான பொது விடயங்களில் ஈடுபட விரும்புவதில்லை. 

20.           இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? 

இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. 

21.          தமிழரசுக் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கிறது. ஆனாலும் அது முன்வைத்த அரசியல் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இடையில் பல தலைவர்களின் காலம் கடந்து விட்டது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வும் தமிழ்ப் பிரதேசங்களின் மேம்பாடும் உங்களுடைய தலைமைத்துவத்தில் எட்டப்படுமா? அதற்கான புதிய பொறிமுறைகளை வகுத்துள்ளீர்களா? 

ஆம். எமது கட்சியின் இலக்கு விரைவில் எட்டப்பட வேண்டும். அது இலங்கை மக்களின் பெரும்பான்மையவரின் இணக்கத்தோடு மட்டுமே அடையப்படலாம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த வருடத்தோடு SWRD பண்டாரநாயகா இலங்கைக்கு சமஷ்டி என்ற எண்ணக் கருவை அறிமுகம் செய்து 100 ஆண்டுகள் நிறைவாகின்றது. அதை மையமாக வைத்து இந்தவேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அது சிங்கள மக்கள் பலரது ஆதரவையும் பெற உதவும் என்பது எனது நம்பிக்கை.

20. ஆட்சியிலிருக்கும் தரப்பின் ஒத்துழைப்போடு தீர்வுக்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டாலும் எதிர்த்தரப்பிலுள்ள கட்சிகளின் ஆதரவின்றி இது சாத்தியமாகுமா? சமஸ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளக்கூடிய உளநிலை சிங்களத் தரப்பிடமுண்டா?

சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில் மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பகிர்வு முறையை அடைய வேண்டும். அதற்கு நிச்சயமாக எதிர்த் தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும். 

21. அரசியற் தீர்வில் முஸ்லிம்களின் பங்கேற்பும் ஆதரவும் வேண்டுமே?

அதிகாரப் பகிர்வுக்குமுஸ்லிம்களின் ஆதரவுஎப்போதுமே இருந்திருக்கிறது. அலகு விடயத்தில் அவர்களுடன்ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தாகவேண்டும். 

22. மாகாணசபைத் தேர்தல், மாகாணசபைகளின் இயங்குமுறை, அதற்கான அதிகாரம் என்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு என்ன? அதை எவ்வாறு எட்டுவது?

தற்போது அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை இழந்துவிடாமல் அவற்றையாவது நிறைவேற்றச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையிலிருந்துதான் அடுத்த நிலைக்குச் செல்லலாம். அதற்கு முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அது நடந்தால் மாகாண சபைகளை உபயோகித்து அரசியலமைப்பிலுள்ள முழு அதிகாரத்தையும் பெற வேண்டும்.

https://arangamnews.com/?p=12632

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

17.          பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள், பிரதானிகளோடு பேசிவரும் உங்களுடைய அனுபவத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றுக்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றனவா?

ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு நிச்சியமாக அவர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதை அடைவதற்கு போர்க்குற்ற விசாரணையை உபயோகிப்பார்கள்.

புலிகளை ஒழித்ததும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவோம் என்று

உலகநாடுகள் தன்னிடம் சொன்னதாக

ஐயா சம்பந்தன் சொன்னாரே?

  • கருத்துக்கள உறவுகள்

சீவகன் அவர்களின் "அரங்கம்" தளத்தில் எழுதுவோரில், கருணாகரன் சுமந்திரன் சார்பாகவும், அழகு குணசீலன் சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பாகவும் எழுதுவர்.ஆனால், இருவரும் இந்த வாரம் எழுதியிருக்கும் ஆக்கங்களில், சுமந்திரனைத் தவிர நிர்வாக ஆளுமையும், தொடர்பாடல் இயலுமையும் உடைய இன்னொருவர் கட்சிக்குள் இல்லையென்ற அவதானிப்பைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த தகுதிகளுக்காக சுமந்திரன் செய்யும் எல்லாவற்றையும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் சுமந்திரனை ஒரேயடியாக தமிழ் அரசியலில் இருந்து அகற்றும் எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 2020 தேர்தல் காலத்தில், சுமந்திரனுக்கு எதிராக புலம் பெயர் முகநூல் "போராளிகளும்", யோதிலிங்கம் போன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களும் முன்னெடுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போதே இதைச் சிலர் சுட்டிக் காட்டினார்கள். அந்த ஆண்டில் மகிந்த கட்சியின் அங்கஜன் யாழ்ப்பாணத்தில் பாரிய வெற்றி பெற்றார். இப்படியான நிலை 2024 இலும் தொடர்ந்தது. சிங்களக் கட்சியின் சார்பில் இன்று பல தமிழ் பா.உக்கள் உருவாகி விட்டார்கள்!

"நமக்குத் தலை போனாலும் பரவாயில்லை, நாம் எதிர்க்கும் சுமந்திரன், சாணக்கியன் போன்ற தீவிர தேசியம் பேசாதோருக்கு மூக்குப் போக வேண்டுமென்ற" மன நிலை இருக்கும் வரை, சிங்களக் கட்சியிடம் மாகாணசபை கூடப் போகலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

புலிகளை ஒழித்ததும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவோம் என்று

உலகநாடுகள் தன்னிடம் சொன்னதாக

ஐயா சம்பந்தன் சொன்னாரே?

இந்தக் கூத்து எப்ப நடந்தது? எப்ப சொன்னவர்? யாரிடம் சொன்னவர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…!

January 27, 2026

தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…!         (மூன்றாவது கண்: IV)

— அழகு குணசீலன் —

இலங்கை தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலை இரா .சம்பந்தர் – மாவை சேனாதிராஜா காலத்து விளைவு. இந்த வலை தமிழரசுக்கட்சி தன்னைச் சுற்றி தானாகவே பின்னிக்கொண்ட ஒன்று.

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சுமந்திரனை எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயப்படுத்தி வந்த தமிழரசுக்கட்சியின் சிலந்திகளும் சேர்ந்து பின்னிய வீடுதான் இந்த சிலந்திவலை. இப்போது அனைவரும் அதில் சிக்கிக்கொண்டுள்ளனர். 

பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா, சி.யோகேஸ்வரன்,…….. என்ற வரிசையில் தற்போது சிக்கி இருப்பவர் சி.சிறிதரன். ஞா.சிறிநேசனும் விரைவில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறிதரன் விவகாரத்தில் அவரின் முடிவே அதைத் தீர்க்மானிக்கும்.

சிலந்திகள் பற்றி பேசும் போது வலை ஒன்றை பின்னுவதற்கு பல தடவைகள் முயன்று தோற்றுப்போன ஒரு சிலந்தி,  முயற்சியை கைவிடாது தொடர்ச்சியாக முயற்சி செய்து ஆறாவது தடவை அதை சாதித்தது என்ற ஆரம்பப்பள்ளிபாடம் நினைவுக்கு வருகிறது. அந்த சிலந்திதான் சுமந்திரன்.

தமிழரசு கட்சியில் ஒரு தலைமைத்துவமாக, நிர்வாக ஆளுமையாக, அரசியல் விவகாரங்களை விரைவாக விளங்கிக்கொண்டு செயற்படுபவராக, உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புகளுடன் தொடர்புகளை பேணக்கூடிய ஒருவராகவும் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவராகவும் சுமந்திரனே இருக்கிறார். இதற்கு அவரது சட்டத்துறை நிபுணத்துவமும், மொழிவளமும், பூகோள அரசியல் அறிவும் பக்க பலமாக இருக்கிறது.

 இந்த குணாம்சங்களுடன் ஒப்பிடும்போது தமிழரசின் மற்றைய எம்.பி.க்களும், முக்கியஸ்த்தர்களும் பெயரளவில் தான் உள்ளனர். அரசியல் விவகாரங்களை தர்க்கரீதியாக விவாதிப்பதில், நியாயப்படுத்துவதில், பொய்யையும் பொருந்த சொல்வதில் சுமந்திரனுக்கு நிகர் தமிழரசில் சுமந்திரன் தான். 

தமிழரசு வண்டியை இரண்டு சக்கரங்களாக சுமந்திரனும், சாணக்கியனும் சேர்ந்து ‘உருட்டுகிறார்கள்’ சிவஞானம் பின்னால் நின்று தள்ளிக்கொடுக்கிறார். 

இங்கு பேசப்படுகின்ற வலைப்பின்னல், உருட்டுதல் என்ற வார்த்தைகளில் சுமந்திரனின் அரசியலின் மறுபக்கம் மறைந்து இருக்கிறது. அதற்குள் அவரின் அரசியல் குறித்த நேர்மை, நீதி, நியாயம், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம்…. என்ற கேள்விகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், அனைத்து சுத்துமாத்துக்களுக்கு மத்தியிலும் சுமந்திரனே வெற்றி பெறுகிறார். தன்னோடு ‘ஒத்து ஓடாதவர்களை ஓரங்கட்டுதல்’ என்பது சுமந்திரனின் கைவந்த கலை.

தமிழரசுக்கட்சியின் சம்பந்தருக்கு பின்னரான காலத்தை திரும்பி பார்த்தால் இது புரியும்.

திருகோணமலை பொதுச்சபைக்கூட்டமும், தலைவர்தேர்வும், கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியதும்,

உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரன் பேசிய பொறிமுறையும் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடைவும்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரித்தமையும், தீவிர தமிழ்த்தேசியவாதத்தை எதிர்த்து சஜீத் பிரேமதாசவை ஆதரித்தமை,

பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்னரும் பாராளுமன்றத்திற்கு வெளியில் மட்டும் அன்றி உள்ளும் சத்தியலிங்கம், சாணக்கியன் ஊடாக சுமந்திரனே தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளார்,

தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை, மத்திய குழு, அரசியல் குழுக்களை கட்டுப்படுத்தும் திட்டமிட்ட செயற்பாடுகளால் சுமந்திரன் அணியே இவற்றை கட்டுப்படுத்துதல்,

சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமித்து பாராளுமன்றத்திற்கு உள்ளே சாணக்கியனுக்கும், வெளியே தனக்கும் பலத்தை அதிகரித்தமை,

பாராளுமன்றத்தில் சத்தியலிங்கத்தை பிரதம கொறடாவாகவும், சாணக்கியனை பாராளுமன்ற செயற்பாடுகள் பொறுப்பாளராகவும் நியமித்தமை,

சிறிதரனுக்கு எதிராக சாராயத்தவறணைகளுக்கு சிபாரிசு செய்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தொடர்ந்தும் அரசாங்கத்தை கோருதல், 

அரசியல் அமைப்பு சபையில் கணக்காய்வாளர் நாயக தேர்வில் சிறிதரனின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தியமை, 

ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரையும் காத்திருந்த கொக்காக கிடைத்த  சந்தர்ப்பங்களில் படிப்படியாக காய்களை நகர்த்தி, இன்று கணக்காய்வாளர் நியமனத்தில் சிறிதரனுக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டு தமிழரசுக்கட்சியிடம் இருந்து மட்டும் அல்ல எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் எழும்போது சாட்டையை கையில் எடுத்திருக்கிறார் சுமந்திரன்.

அரசியல் குழு சிறிதரனை அரசியல் அமைப்பு குழுவில் இருந்து விலகுமாறு கோரியது. அது இன்னும் நிகழவில்லை அது சுமந்திரனால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். 

அடுத்து தயாராக வைத்திருந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை விட்டு விலகுமாறு முன்னையதற்கு சமாந்தரமாக அடுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பறிப்பது  தமிழரசுக்கட்சியின் சுய தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. இதை செய்யாமல் இருப்பதாயின் சிறிதரன் பாராளுமன்ற குழுவிலும், அரசியல், மத்திய குழுக்களிலும், ஏன் பொதுச்சபையிலும் கூட தனது பெரும்பான்மையை காட்ட வேண்டி வரலாம். ஆனால் அதற்கான – சிறிதரனுக்கு சாதகமான சூழல் இன்றில்லை என்றே கூறப்படுகிறது.

நீதி மன்றத்தை நாடினால் சுமந்திரனை எதிர்த்து வாதிடவேண்டி இருக்கும். 

சிறிதரன் கிளிநொச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளார். கிளி நொச்சியில் சிறிதரனுக்கு எதிரான சந்திரகுமார் அணி சரியான நேரத்தில் சுமந்திரனுக்கு சார்பாக காய்களை நகர்த்துகிறது. பதிவுகளை பார்த்திருப்பீர்கள்.

இப்போது கிழக்கு எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை தக்க வைக்க சிறிதரனின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்க தீர்மானித்து விட்டனர்.

அமரர் இராசமாணிக்கத்தின் 113 வது ஜனனதின விழாவில் சிவஞானமும், சுமந்திரனும் வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிட்டவர்களே , அழைப்பின்றி ஓடிப்போய் நிகழ்வில் கலந்து. கொண்டிருக்கிறார்கள்.

யார் என்னத்தை சொன்னாலும்,  தமிழரசை காப்பாற்ற  மட்டும் அல்ல சிறிதரனையும் காப்பாற்ற  சுத்துமாத்துக்களை செய்தாவது சுமந்திரனால் மட்டுமே முடியும்.

https://arangamnews.com/?p=12635

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாலி said:

புலிகளை ஒழித்ததும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவோம் என்று

உலகநாடுகள் தன்னிடம் சொன்னதாக

ஐயா சம்பந்தன் சொன்னாரே?

இந்தக் கூத்து எப்ப நடந்தது? எப்ப சொன்னவர்? யாரிடம் சொன்னவர்?

@goshan_che வணக்கம் கோசான் மேலே சம்பந்தன் சொன்னதை என் காதார கேட்டிருக்கிறேன்.

ஆனாலும் தேடி எடுக்க முடியவில்லை.

உங்களால் முடிந்தால் தேடித்தர முடியுமா?

வாலி நல்ல கேள்வி.

தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

@goshan_che வணக்கம் கோசான் மேலே சம்பந்தன் சொன்னதை என் காதார கேட்டிருக்கிறேன்.

ஆனாலும் தேடி எடுக்க முடியவில்லை.

உங்களால் முடிந்தால் தேடித்தர முடியுமா?

வாலி நல்ல கேள்வி.

தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோசான்.

இதைவிட யுத்தம் தொடங்க முதலே அமெரிக்கா சம்பந்தரிடம் புலிகளை அழிக்கப் போகிறோம் அமைதியாக இருங்கள்.அதன் பின்னர் உங்களுக்கு தீர்வு பெற்றுத் தருகிறோம் என்ற தொனியில் சொல்லியதாகவே ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

யுத்தம் தொடங்க முதலே அமெரிக்கா சம்பந்தரிடம் புலிகளை அழிக்கப் போகிறோம் அமைதியாக இருங்கள்.அதன் பின்னர் உங்களுக்கு தீர்வு பெற்றுத் தருகிறோம் என்ற தொனியில் சொல்லியதாகவே ஞாபகம்.

இப்படி நடந்தே இருந்தாலும் அதை தமிழ் மக்களிடம் வாக்கரசியல் செய்து கொண்டே, இப்படி பட்டவர்தனமாக பொதுவெளியில் சொல்லும் அளவுக்கு சம்பந்தருக்கு மேல் வீடு பழுதாகி இருந்தது என நான் நினைக்கவில்லை.

நான் அறிந்தவரை மேலே சொன்னது போலத்தான் சம்பந்தர் சொன்னார்…

ஆனால் அதற்கு கை, கால் எல்லாம் வைத்து, அமெரிக்கா, மகிந்தவோடு சேர்ந்து சம்பந்தரும் புலிகளை, மக்களை அழித்தார் என்ற ரீதியில் புலம்பெயர் டிக்டொக் புஸ்வாணங்கள் கதை கட்டி விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படி நடந்தே இருந்தாலும் அதை தமிழ் மக்களிடம் வாக்கரசியல் செய்து கொண்டே, இப்படி பட்டவர்தனமாக பொதுவெளியில் சொல்லும் அளவுக்கு சம்பந்தருக்கு மேல் வீடு பழுதாகி இருந்தது என நான் நினைக்கவில்லை.

தமிழ்மக்களிடம் வாக்கரசியல் செய்து கொண்டே பாராளுமன்றத்தில் புலிகளை அழித்ததற்காக மகிந் அரசுக்கு நன்றி சொன்னவர் சம்பந்தர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.