Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு.

ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை.

கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன்.

எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. 

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது.

மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன்,

இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன்.

காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன்.

ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை.

அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன்  செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன்.

நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார்.

இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன்.

அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா.

வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார்.

அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன்.

பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன்.

2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன்  வருகிறது.

என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன்.

அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம்.

“நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா?

“நான் யாழில்தான் நிக்கிறன்”

“அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்”

“சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி”

ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி  என்றுவிட்டு உடனேயே அறைக்குச்  சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன்.

போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன்.

போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை  ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார்.

இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார்.

அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது.

ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன்.

3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார்.

வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். 

வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன்.

இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது.

அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது.

இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன்.

நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா  என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர்,

சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது.

அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார்.

கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என்  விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார்.

நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்.

மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன்.

நேரம் 12  என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. 

நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர்.

நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள்.

நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார்.

நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன்.

நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார்.

என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆன்ரிக்கு பயணக் கதை எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

சுமே ஆன்ரிக்கு பயணக் கதை எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி🤣

விகடன் மணியன் போல...அருமை அப்பப்பா...எவ்வளவு வேகமான எழுத்துநடை...தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாள் நிம்மதியாக இருப்போம் என்று அத்தார் தனியே அனுப்பினாலும் போனுக்கு மேல போன் போட்டு ஒரே குடைச்சல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சுமே ஆன்ரிக்கு பயணக் கதை எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி

அவருக்கென்ன? இரண்டு மூன்று தரங்கள் சாப்பிட்டுவிடுவார். நாங்கள் தேத்தண்ணி குடிக்காமல் வாசிக்கிறோம்.

ஐந்தாறு மாதங்கள் பிரிந்திருந்தாலும், “இஞ்சை ஒரு அசுமாத்தமும் இல்லை, ஆறுதலா வா” என்று அவர் சொல்வதைப் பார்த்தால், மனுசன் happy போலே😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.