Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமேஸ்வரம் - திரை விமர்சனம்

Featured Replies

ராமேஸ்வரம்

திரை விமர்சனம்

81024x7682kq7.jpg

உலகமே கவனிக்கிறது ஈழத்தமிழர் பிரச்சனையை! அவர்களில் ஒருவருக்கு நடக்கிற காதல் பிரச்சனையை கவனித்திருக்கிறார் இயக்குனர் செல்வம்.

கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை. யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் டைரக்டர், 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று டைட்டில் கார்டு போடுகிறாரே, அங்கேதான் புதைந்து கிடக்கிறது எண்ணிலடங்கா அர்த்தங்களும், வெளிப்படுத்த முடியாத ஏக்கங்களும்! அதை கடைசிவரை வெளிப்படுத்த முடியாமலே தவி(ர்)த்திருக்கிறார் இயக்குனர்.

தன் ஒரே சொந்தமான தாத்தாவுடன் ராமேஸ்வரத்திற்கு வரும் ஜீவாவிற்கு, மறுபடியும் இலங்கைக்கே போய்விட வேண்டும் என்ற தவிப்பு. இங்கே முதல் பார்வையிலேயே இவர் மேல் காதல் வயப்படும் பாவனாவுக்கோ ஜீவனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. ராமேஸ்வரத்திற்கு வந்திறங்கும் எல்லா ஈழத்தமிழர்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் பணக்கார லால், தன் மகளை ஈழத்திலிருந்து வந்த ஒருவனுக்கு தர சம்மதிப்பாரா? ஆரம்பிக்கிறது காதல் யுத்தம்! ஒரு பைசாவுக்கு வழியில்லாத அகதி நீ என்று இவரும், ஒரு பைசாவுக்கு வழியில்லாத அகதிதான் நான். என்ன வேணாலும் செய்வேன் என்று ஜீவாவும் முட்டிக் கொள்ள, தவியாய் தவிக்கிறது பாவனாவின் காதல். இடையில் பாவனாவின் முறைமாமன் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டும் சேர்ந்து கொள்ள, திரையில் கலவர சுனாமி. பாவனா காதல் என்னாச்சு என்பது விறுவிறுப்பான கடைசி ரீல்!

கண்களில் ஏக்கமும் கோபமும் தெறிக்க, மூடி வைத்த கங்கு போல் கொதித்திருக்கிறார் ஜீவன். திரும்ப திரும்ப தொல்லை தரும் பாவனாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டு யதார்த்தத்தை எடுத்துச் சொல்கிறாரே... ஒவ்வொரு வார்த்தைகளும் கன்னத்தில் அறையும் நிஜங்கள். குழந்தைகளுக்கு சட்டை துணிகள் வாங்கிவரும் லால், அதை தன் கையால் கொடுக்க நினைக்க, வேண்டாம் என்று மறுத்துவிடும் ஜீவன், அதற்கு சொல்லும் காரணம் நெகிழ்வு. நீ அகதிதானே என்று கேட்கும் பாவனாவிடம், ஆமாம்... அகதிதான் என்று எரிந்து விழுந்துவிட்டு, முகாமிற்கு வந்து அகதிகள் முகாம் என்பதை, புலம் பெயர்ந்த தமிழர்கள் முகாம் என்று மாற்றி எழுதும்போது தமிழனுக்கான சுயமரியாதை தலை நிமிர்ந்து நிற்கிறது. படம் முழுக்க யுத்தபூமியிலிருந்து எழுந்து வந்தவர்போல் நிஜத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.

ஏன் காதலிக்கிறார் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லையென்றாலும், பாவனாவின் துரத்தல்கள் கவிதை. யுத்தத்திற்கு பிறகு உங்க ஊரிலே காதலே நடக்கலையா? குழந்தையே பிறக்கலையா? என்று ஜீவனை மடக்குவது அழகு. வழக்கமான சினிமா காதலிகள் போல, முறைமாமன் அடிவாங்குவதை ரசிப்பது கொடுமை. கன்றுகுட்டிக்கு தன் புடவை தலைப்பால் ஈரம் துடைத்துவிட்டு, விலகிய மாராப்பை ஜீவா பார்த்திருப்பாரோ என்று பதறி தவிப்பது சுவாரஸ்யம்.

'வசந்தியை நான் உனக்கு கொடுக்கலை, நீ எனக்கு கொடுத்திட்டே' என்று சரண்டர் ஆகும் லால், வழக்கம்போல் கம்பீரம்! சின்ன சின்ன பாத்திரங்கள் கூட கவிதையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நாம என்ன பிக்னிக்கா வந்திருக்கோம், காதலிக்க? என்று காதலில் விழுந்த ஜீவனின் மனசை ஷேக் பண்ணும் சாந்தி, ஒரு காலை இழந்த சம்பத், தன் ஊரில் வசிக்கும் குருவிக்காக கவலைப்படும் அந்த சிறுமி என்று எல்லா பாத்திரங்களும் மனசுக்குள் ஒரு கீறலையாவது ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வளவு பெரிய தழும்பா? என்று கலவரப்படும் அதிகாரியிடம், இதுதான் எங்க ஊர்ல சின்ன தழும்பு என்று அலட்சியம் காட்டும் மணிவண்ணன் சில காட்சிகளே வந்தாலும் தழும்பாக அல்ல, அடையாளமாக பதிகிறார்.

இசையை கருவியிலிருந்து உருவாக்காமல், உணர்வின் கருவறைக்குள்ளிருந்து உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் நிரு. 'எல்லாரையும் ஏத்திப்போக கப்பல் வருமா...' இசையும், வரிகளும் மனசை பிசைந்திருக்கிறது. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ஓவியம்!

கலையா? கமர்ஷியலா? தடுமாறியிருக்கிறார் இயக்குனர். இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் வரமாக வந்திருக்கும் இந்த ராமேஸ்வரம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW...rameshwaram.asp

இணைத்தவர்: சோழன்

ராமேஸ்வரம் -யாழ்பணத்திலிருந்து 36 மைல்

போஸ்டரில் பாவனா..தலைப்பில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனையைக் குறிக்கும் வாசகம். பெரும்பான்மையான மக்கள் திரையரங்குக்கு வரக் காரணம் இது தான்.

இலங்கை விட்டு தமிழகம் அகதியாய் வரும் ஒரு இளைஞன் இங்கிருக்கும் ஒரு பெரும் பணக்காரரின் மகளின் காதலில் சிக்குகிறான்(!!!???) காதல் வெல்கிறதா என்பது தான் கதை...

இயக்குனர் செல்வா புதுசு... இசையமைப்பாளர் நிருவும் புதுசு..பாடல்கள் நல்லாயிருக்கு...கேக்கலாம்.. எல்லாரையும் ஏற்றி போக கப்பல் வருமா... எதோ சொன்ன புள்ள..பாடல்கள்..ரசிக்கலாம்.

ஜீவா நாயகன். பாவனா நாயகி. மலையாள லால் ஜோஸ் பணக்கார அப்பா. இது தவிர நாயகனின் தாத்தாவாக மணிவண்ணன், நாயகியின் பாட்டியாக வெண்ணிற ஆடை நிர்மலா, நாயகியின் முறை மாமனாக போலீஸ் வேடத்தில் மெட்டி ஒலி போஸ்...இது தவிர நாயகனின் நண்பர்களாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வேடத்தில் வரும் நடிகர்கள்..அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஸ்னேக் சாந்தி மற்றும் கால் இழந்தவராக வரும் நடிகர் ஒருவர்.

அகதி வாழ்க்கையில் சிக்கி காதலுக்கும் இன உணர்வுக்கும் தாத்தா மீது கொண்ட பாச உணர்வுக்கும் இடையில் உழலும் கதாபாத்திரத்தில் ஜீவா... இயக்குனரின் குழப்பமானத் திரைக்கதை அமைப்பில் இந்த நடிகர் காணாமல் போகிறார்.

பாவனா தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அபத்தமான கதாநாயகி வேடம்.. என்ன பாவடைத் தாவணி, சுடிதார், சேலை என பராம்பரிய உடைகளில் வந்து போகிறார். அழகாய் இருக்கிறார். ஜீவாவைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார்.

லால் ஜோஸ் மலையாள மனிதரை படம் நெடுக வேட்டித் தூக்கி வசனம் பேசும் பெரிய மனிதராக நடமாட விட்டிருக்கிறார்கள். தமிழ் படங்களில் வரும் நாயகியின் தந்தை கம் வில்லன் வேட. இன்னொரு நல்ல நடிகர் அதிகம் வேலை இல்லாத வேடத்தில்

மணிவண்ணன் பாசமானத் தாத்தாவாக சென்டி மெண்ட் பொழிந்து செத்துப் போகிறார். வெண்ணிற ஆடை நிர்மலா கிட்டத் தட்ட சந்திரமுகியில் வரும் பிரபுவின் என்னக் கொடுமை இது சரவணன் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார்.

காதலுக்கு துணையாகவும் குறுக்காகவும் மாறி மாறி அணிவகுக்கும் நண்பர்கள்.. புரியல்லயா...சத்யமாப் படம் பார்த்தப்போ எனக்கும் புரியல்ல...கிட்டத்தட்ட நம்மைப் போலக் குழப்பத்தில் நாயகனும் ஒரு கட்டத்தில் நான் காதலிக்கலாமா என வாய் விட்டு அவர் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிறார்...அப்படி ஒரு குழப்பம்.

என்ன சாமி கதை... ஒரு பணக்கார பொண்ணு வலியப் போய் தன்னை விட வசதி குறைந்த ஒரு பையனைக் காதலிக்குது.. இது நாங்கப் பாக்காதக் கதையான்னு கேக்குறீங்களா?

அதுக்குத் தான் படத்துல்ல விக்குற மேட்டர் ஒண்ணு வச்சிருக்கோம்ல்லன்னு இயக்குனர் சொல்லுறார்....என்னக் கேக்குறீங்களா?

புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரச்சனை....

ஒரு கற்கால தமிழ் சினிமா பார்முலாக் காதல் கதைக்கு ஒரு இனத்தின் பல்லாண்டு கால அழுத்தமான வாழ்க்கைப் பிரச்சனை ஊறுகாயாக பயன்படுத்துள்ளது மிகவும் வருத்தமான விசயம்.

நாயகி நாயகன் மீது காதல் கொள்ள எந்த விதமான அழுத்தமானக் காரணமும் காட்டப் பட வில்லை...என்பதில் துவங்கி...திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள்...

RAMESWARSAM - YET ANOTHER ATTEMPT BY TAMIL CINEMA TO AIMLESSLY EXPLOIT THE SRILANKAN TAMIL ISSUE

http://keethukottai.blogspot.com/2007/12/36.html

  • தொடங்கியவர்

தணிக்கையின் கத்தரிக் கோலும்

தற்சமய நிலவரமும் கதையை சிதைத்து விட்டதாக அறிகிறேன்.

பாடல்கள் பேசப்படுகின்றன.

அவ்வகையில்

நம்வர் நிரூ தடம் பதித்திருக்கிறார்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

போராடுங்கள் நிரூ வெல்லும் வரை................

எமது வாழ்த்துகள் என்றும்..........

சிந்தும் இரத்தம் செழிக்கும் வரை போராடுங்கள்.

ஒரு சகோதரனாக - நண்பனாக

அஜீவன்

இராமே'ஸ்வரம்' திரைக்காவியம் பற்றி...

தூரிகை வரையும் ஓவியங்கள்

பேசினால் அவன் தான் ஓவியன் !

திரையில் கூட பாத்திரங்கள்

நம்மோடு கலந்துவிட்டால் அது காவியமாகிறது, சேதுபடத்திற்கு பிறகு ஒரு நேர்த்தியாக, இயல்பை எடுத்தப்படம் இராமேஸ்வரம்.

இராமேஸ்வரம் படத்தை திரைப்படம் என்ற அளவு, இலக்கணத்தில் என்னால் விமர்சிக்க முடியாது, படம் தொடங்கிய நொடியில் இருந்து முடியும் வரை இராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர்களின் முகாம்களில் நடப்பதை நேரடியாக பார்த்தது போன்று உணர்வு.

அகதிகளுக்கு காதல் உணர்வு வரலாமா ? ஏற்படும் காதலினால் வந்து தங்கி இருக்கும் இடத்தில் வலியையும் வேதனையும் மறந்துவிடலாமா ? அப்படி இந்திய மண்ணில், இங்குள்ள தமிழ் பெண்ணின் மேல் காதல் வந்தால் அதனை ஏற்பதற்கு எந்தவகையான தியாகங்களெல்லாம் தேவைப்படுகிறது என்பது தான் கதை.

ஜீவன் என்ற பெயரில் அகதியாக இராமேஸ்வரம் வந்திறங்கும் ஜீவா, கடைசிவரை ஜீவாவாக இல்லாமல் ஜீவனாகவே கதைக்கும் ஜீவனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரை துறத்தி துறத்தி காதலிக்கும் அழகிய பட்டாம் பூச்சியாகவும், நகைச்சுவைக்காவும் பாவனா கலக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சி பாவனா அழகு பதுமையாகவே செய்திருக்கிறார். மலர் புகைப்பட போட்டிக்கும் பாவனாவின் பூவுனுடன் சேர்ந்த பட்டாம் பூச்சிபோலவே இருக்கிறார், அவரின் ஸ்டில் ஒன்றை கொடுக்கலாம் ( இங்கு எழுதியதில் இது மட்டுமே என் காமடி, அமீரகம் நண்பர்கள் படம் பார்க்க கிளம்பிடுவாங்க)

ஈழத்திலிருந்து வந்த ஒரு ஜோடி ஏழுவருடம் தங்களுக்குள் இருந்த காதலை மறந்து ஈழத்தை நினைத்தப்படி எரியும் ஈழத்தின் நினைவு தீயில் காதலை எரித்துக் கொண்டு திரும்பும் நாள் நோக்கி எண்ணிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகள் ஆகியவற்றை உணர்வாக வடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஈழத்தமிழர்கள் பாத்திரம் மேற்றிருப்பவர்கள் அனைவரும் உணர்வை தோய்த்துப் பேசி உணர்ச்சி காவியம் ஆக்கி இருக்கிறார்கள். மணிவண்ணன் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து உணர்வுக்குள் மறைந்து போகிறார்.

தமிழ்நாட்டுக்காரராக பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான குணச்சித்ர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முன்பு பலபடங்களில் வில்லனாகவே நடித்தவர். சண்டைக் கோழி படத்தில் வில்லனாக வந்து இறுதி காட்சியில் விசாலுடன் மோதுவாரே அவர்தான்.

போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பாவனா ஜீவாவை காதலிப்பதை ஏற்கமுடியாம்ல் வில்லனாக மாறுகிறார். அவர் நடிப்பில் உச்சத்தில் அவரை பலரும் சபிக்கும் படி இயல்பாக, பார்வையாளர்களின் வில்லன் மீதான வெறுப்பை வரவழைக்கும் படி நன்றாகவே செய்திருக்கிறார்.

அகதி என்ற ஒரு சொல் தரும் வேதனையும், ஆதரவு கிடைக்கும் மண்ணில் நிகழும் ஒருசிலரின் துவேசங்களும் எப்படி உணர்வுகளைக் கொல்கிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம் பேசும் போது ஜீவனாக தெரியாமல் நடிகர் ஜீவாக ஈழத்தமிழரின் நலனில் அவரது பங்களிப்பு என்பதை படம் பார்பவர்களும் புரிந்து கொள்வர்.

கொடுப்பவரின் மகிழ்வை விட ஏற்பவர்களின் வலி எத்தகையது என்பதை நன்றாக சொல்லி இருக்கிறார்கள். இசை என்.நிரு, அவர் ஈழமைந்தர் என்பதால் பாடல்களின் உணர்வையை சேர்த்து இசை அமைத்திருக்கிறார். 'எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா ? ' என்ற ஏக்கப்பாடல் மகிழ்ச்சியின் பின்னனியில் பாடப்பட்டாலும் அதிலுள்ள சோகம் மட்டுமே உணரமுடிகிறது. இயக்கம், கதை வசனம் எஸ் செல்வம், ஒவ்வொரு வசனமும் பேசுவது தத்துவமா ? உணர்வா ? இயல்பா ? சொல்லத் தெரியவில்லை. எல்லாம் ஒருங்கே சேர்ந்த உணர்வுவரிகள்.

ஜீவினின் (ஜீவா) ஒரு நிமிட நினைவில் ஈழத்தில் விமானங்கள் குண்டு மழைபொழியும் ஒரே ஒரு காட்சியே நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது, அதே சூழலில் இருப்பவர்களின் நிலை சொல்லவும் வேண்டுமா ?

ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் மற்றொரு திரைப்படம் போல் தான் தெரியும்.

இறுதி காட்சியில் ஜீவாவின் நடிப்பிற்கும், சண்டைக்காட்சிகளுக்கும் அவரை பலமுறை பாராட்டலாம், ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும், நடிகர்கள், அரசியல்வாதிகள், குறிப்பாக 'சோ' த்தனமானவர்கள் போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா ஆகியோர் இந்தப்படத்தில் தயக்கமின்றி நடித்தது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவை. அமையப்போகும் தமீழத்தில் தனக்கென ஒரு பெயரை ஜீவா பதித்துக் கொண்டார். வாழ்க வளர்க !

இராமே'ஸ்வரம்' படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் !

http://govikannan.blogspot.com/2007/12/blog-post_3686.html

இங்கே மூன்று வகையான விமர்சனங்கள். அவை மூன்றும் தமிழக தமிழர்களால் எழுதப்பட்டவை. மூன்று விமர்சனங்களும் வித்தியாசமாக படத்தை அணுகி இருக்கிறன.

படத்தை பார்க்காமல் படம் எத்தகைய உணர்வை எமக்கு தருகிறது என விமர்சிக்க முடியாது. எமது பிரச்சனை எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, என்பதை பார்த்தால் தான் தெரியும்.

பாடல்கள் நன்றாக இருக்கிறன. அந்தவகையில் நிரு தனது முயற்சியில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும்.

புலம் பெயரும் தமிழர்களின் நிலையை சொல்லவேன்டும் என்று முனைந்த இயக்குனர், தடம் மாறியும் தடுமாறியும் போயிருக்கும் இடமே இந்த 'ராமேஸ்வரம்'.

அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடும் நாயகனை (ஜீவா) மோப்ப நாய்களுடன் துரத்துகின்றனர் வனஅதிகாரிகள். நாயகனின் உயிருக்கு சேதம் விளைவிக்காமல் சர்வ ஜாக்கிரதையுடன் அவ்வப்போது துப்பாக்கி குண்டுகளும் பாய்கிறது.

ஒரு கட்டத்தில் குண்டடிபடும் நாயகன் குப்புற விழ, மணிரத்னம் பட பாணியில் மூன்று மாதங்களுக்கு முன் என்னும் டைட்டிலுடன் ப்ளாஷ்பேக் விரிகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வரும் இலங்கை தமிழர்களில், பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட இளைஞராக நாயகன் ஜீவா அடையாளம் காட்டப்படுகிறார்.

பணக்கார லாலிற்கு சொந்தமான இடத்தில் தங்கவைக்கப்படுகின்றனர் அவர்கள். லாலின் மகளான பாவனா ஜீவாவை காதல் கொள்ள, ஏகப்பட்ட மறுதலிப்பிற்கு பிறகு ஏற்றுக்கொள்கிறார் நாயகன்.

கதையை நகர்த்த இது போதாதா? வெகுண்டெழும் லாலும், பாவனாவின் முறைமாப்பிள்ளையும் காதலுக்கு எதிராக வில்லங்கம் செய்கின்றனர். காதல் ஜெயிக்கிறதா என்பதை 'பொருத்திருந்துதான்' பார்க்கவேண்டும்.

கண்ணீரும், கவலை ரேகையுமாக அகதிகளாக இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வந்திறங்கும் முதல் காட்சியிலேயே இயக்குனர் ஏதோ சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்தால் அடுத்தடுத்த காட்சிகளில் காகிதப்பூவாகியிருக்கிறார் நம் எதிர்பார்ப்பை.

இன்னலுறும் தமிழர்களின் நிலைகண்டு கொதிக்கும் ஜீவா திடீரென்று காதலில் விழுந்து கட்சிமாறுவது ஏன் என்றே தெரியவில்லை. பாவனாவிற்கும் வேறுவேலையே இல்லை. திடீர் திடீரென்று ஜீவாமுன் வந்து நின்று காதலை முன்வைக்கிறார்.

கட்டுமரம் ஏறிப் போய் இலங்கை ராணுவத்திறாகு எதிராக நெஞ்சு நிமிர்த்த வேண்டும் என்று நினைக்கும் ஜீவா திடீரென்று பாவனாவுடன் காதல் கப்பலில் ஏற அவரது கொள்கையெல்லாம் குடைசாய்கிறது.

ஏன் அகதி என்றால் காதலிக்கக்கூடாதா? ஒரு காட்சியில் நாயகியின் அப்பாவுக்கு நாயகன் வைக்கும் கேள்வி இது. வரலாம் சார் தவறில்லை, ஆனால் இந்தக் கேளிவிகேட்கும் நாயகன் சராசரி இளைஞராக தெரியவில்லையே அதான் படம் பார்ப்பவர்களுக்கு அவரின் காதலை ஒப்புக்கொள்ளமுடியவில்லை.

'முகம் தெரியாத ஆட்கள் கொடுப்பதை வாங்கும்போது பிச்சைனு எடுக்கும் உணர்வு வந்துவிடும்' என்று ஜீவா உணர்த்தும் இடத்தில் இயக்குனருக்கும் வசனகர்த்தாவிற்கும் சலாம் போடலாம்.

அகதிகளாக வந்தவர்கள் இலங்கைத்தமிழில் பேசும்போது நாயகனான ஜீவா மட்டும் அவ்வப்போது ஸ்லாங் மாறிக்கொள்வது கதையின் ஜீவனை குறைக்கும் நெருடல்.

ஜீவாவிற்கும், பாவனாவின் முறைமாப்பிள்ளையான போஸ்வெங்கட்டுக்கும் இடையே நடக்கும் மோதலில் அழுத்தம் காட்டியிருக்கும் இடத்தில் இயக்குனர் தென்படுகிறார்.

இசையமைப்பாளர் நிருவும் இலங்கைத்தமிழர் என்பதால் உணர்ந்து உருகியிருக்கிறார். 'எல்லோரையும் ஏத்திப்போக கப்பல் வருமா...' பாடலில் எட்டிப்பார்க்கிறது ஈரம். 'காதலின்...' பாடல் சுகம்.

குடையில் மழைநீர் பட்டுத்தெறிக்கும் இடத்தில் நுணுக்கமான பின்னணி இசையை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் R.B.குருதேவ் மற்றும் வெற்றியின் பங்கும் சிறப்பு.

நல்ல நோக்கத்தில் கதை சொல்ல முற்பட்டிருக்கும் இயக்குனர் செல்லாவை பாராட்டலாம். ஆனால் பாதைமாறி போனதால் நமக்கும் மனசு மாறுகிறது.

ராமேஸ்வரம் - தொலைதூரம்தான்.

+வசனம்

+இசை

+ஒளிப்பதிவு

-திசைமாறும் திரைக்கதை

Amalan cinesouth.

திரை இசைப் பாடல் விமர்சனம்

ஐரிஏ எஸ்.என்.ராஐர் வழங்கும் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது இராமேஸ்வரம். யீவா-பாவனா இணைந்து உணர்வுருக நடித்திருக்கும் இத்திரைப்படம் உலகத் தமிழருக்கெல்லாம் ஓர் அழகிய மார்கழிப் பூவாக மலர்ந்திருக்கின்றது.

இயக்குனர் செல்வம் அவர்களின் முதல் திரைப்படக் கனவு இது. இதயம் உருக உருக உன்னதமாக இசைத்துளிகளை ஓர் அழகிய மாலையாக

கோர்த்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஈழத்தமிழன் நிரு. மிகவும் அற்புதமான முறையில் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் செல்வம். திரைத் துளிகள் கண்முன் விரியும் போதே அதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.

தமிழத் திரை உலகில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் எம்மவர்களால் தயாரிக்கப்படுகின்ற அல்லது முன்னெடுக்கப்படுகின்ற படம் என்றால் முதலில் மனது வண்ணாத்திப்பூச்சி போல் இசைப்பாடல் தேடிப் பறக்கும். அந்தப் படத்தை அல்லது திரையிசைப் பாடலை உன்னிப்பாக பார்க்கவும், கேட்கவும் தோன்றும். அந்த வகையில் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தற்பொழுது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் இராமேஸ்வரம்.

இத்திரைப் படத்தின் இறுவட்டு உரிமையை வாங்கி, இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்திருக்கும் ரமி நிறுவனர் காந்தன் அவர்களுக்கு முதற்கண் பெரிய வணக்கமும் நன்றிகளும். அவர் கொடுத்திருக்கின்ற ஆதரவு ஒவ்வொரு தமிழ் மகனையும் இறுவட்டை வாங்கி கேட்க வேண்டும் எண்ணம் எழும் வகையில் உள்ளது.

ஏற்கனவே மூங்கிலா இசைத்தொகுப்பு, கலாபக் காதலன் திரைப்படம், நீலம் குறும்படம் என தனது இசைவண்ணங்களை உயிரோட்டமாக வழங்கிய இசையமைப்பாளர் நிரு அவர்களே மிகவும் மிகவும் திறம்பட

இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். இது உலகமெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் பெருமைப்பட வேண்டி விடயமாகும்.

படத்தில் மொத்தமாக ஐந்து பாடல்களும் இக் கதையின் உள்ளோட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் பின்னணி இசைச்சரமும் வெளியாகி எங்கள் நாடித் துடிப்பை இசையால் நனைக்கின்றது. திறமைகள் எங்கு இருந்தாலும் என்றோ ஒரு நாள் திரைக்கு வரும் என்பது உறுதி. இந்த இளைஞனின் கடின உழைப்பை பார்க்கும் போது மிகவும் தெளிவாகப் புரிகின்றது.

அழகிய தமிழ் வார்த்தைகளை மட்டுமே கவிஞர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளும்; இயக்குனர் மத்தியில் செல்வம் இன்னுமோர் படி மேலே சென்றிருக்கின்றார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. எத்தனை காலம்தான் கவிதைக்கு பொய்யழகு என்று கவிஞர்களால் பாடமுடியும். இதோ கவிதைக்கு என்றுமே மெய்யழகு என மெய்ப்பித்திருக்கின்றார்கள. ஈழத்தமிழ் உறவுகளின் உணர்வுகளை, ஏக்கங்களை வலிகளை வைர வரிகளில் நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி அனைவரும் எம்மவரில் ஒருவராகவே நின்று எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள். அவர்களை இதயபூர்வமாகப் என்றுமே பாராட்டலாம்.

எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?

கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?

அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?

யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?

எங்கள் பூமி தீயின் வசமே

எம்மைச் சுற்றி அலைகள் எழுமே

உண்மைத் தோளில் மாலை விழுமே

நம்பிக்கை நாளை உரமாகும்!

நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்

ஊதிடும் நாள் வருமா?

கும்பிடு சந்தையில் புகையிலை

வாங்கிட நாள் வருமா?

கல கலனென்னு பாடசாலைக்குள்ள

படிக்கிற நாள் வருமா?

என்று முதலில் சிறுமியின் குரல் ஒலிக்க கண்களில் நீர் வழிகிறது. பேசாமல் ஊருக்கு போயிடலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. பதினேழு வருடங்களுக்கு முன் இதே போன்று ராமேஸ்வரம் வந்து மூன்று மாதங்கள் நான் கூட அகதியாய் வாழ்ந்தவன். அங்கே பட்ட கஸ்டங்கள், வேதனைகள் இப்பவும் நெஞ்சில் பதிந்து இருக்கின்றது. இராமேஸ்வரத்திலிருந்து 36 மைல்களுக்கு அப்பால் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது என்பதை மனத்திரைகளில் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பாடல் போதும் எம் தமிழக உறவுகளுக்கு.! கபிலனின் வரிகள் அவர் இதயம் போலவே எங்கள் மனதையும் பிசைகிறது. இந்தப் பாடலுக்கான இசைக் கோர்வை உயிர் தொட்டு முத்தம் வைக்க, மறுபுறம் மனதில் ஓர்; எழுச்சிமிக்க உணர்வு தோன்றிப் பின் நாளைய நம்பிக்கை உருவாகின்றது.

தோல் வாத்தியங்களின் இனிமை என்றும் மாறதது. எத்தனை எத்தனை அதி நவீன இசை;கருவிகள் இசையுலகில் நுழைந்தாலும் எங்கள் புல்லாங்குழல், நாதஸ்வரம்(நாயனம்) தவில்களில் இருந்து எழுகின்ற சுரங்களின் இனிமையில் ஓர் அலாதி பிரியம் ஏற்படும். நிருவின் திறமையைப் பறை சாற்ற இந்த ஒரு பாடலே போதும். ஆனால் அவரோ ஐந்து சுவைமிக்க இசைப் பாடல்களை வழங்கி எங்களை அசத்தியிருக்கின்றார்.

மாணிக்கவிநாயகம், கரிச்சரன், சிரேயா, ரேஷ்மி குரல்களில் மனது அங்கே தொலைகிறது.

"நான் தரை நிலா தாவி நடக்கையில் நான் திருவிழா" பாவனாவின் காதல் ஈழத்தமிழ் அகதியாக வாழ்ந்திருக்கும் யீவாவின் மீது செல்ல மின்சாரமாகப் பாய்கிறது. சுவேதாவின் குரலில் இனிமையிலும் இனிமையாக ஒலிக்கின்றது. வரிகளுக்குச் சொந்தக்காரன் யுகபாரதி. கொஞ்ச நேரம் அவரோடும் பேசிப் பார்கத் தோன்றுகின்றது.

போர் மேகங்கள் உங்கள் மீது சுற்றினாலும் காதல் நடக்கவில்லையஹ?, குழந்தை பிறக்கவில்லையா?, வாழ்க்கை தொடரவில்லையா? என்னும் நியாயமான கேள்விகளின் பின் மலரும் காதல் பாடலாக

அலைகளின் ஓசைகள் தானடடி

அகதியின் தாய்மொழ ஆனதே

எனக்கென யாரோ..?

என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் தானடா

அகதியாய் ஏங்குவனேடா..

உனக்கென நானே ஒற்றைப்

பெண் என வாழ்கிறேன்

தன்னைத் தொலைத்தவன் நானே

மண்ணைப் பெறும்வரை காத்திருப்பேன்

உன்னைத் தொலைத்து விட்டாலே

இங்கோர் அகதியாய் நானிருப்பேன்! எனக்குப் பிடித்த வரிகள்.

ஒர் அகதியின் வாழ்விலும் காதல் பூப்பது இயல்பாக இருக்கும் என்று சொல்கின்றது இந்தப் பாடல். கரிச்சரனும் கல்யாணியும் இணைந்து குரல் கொடுத்திருக்கின்றார்கள். கபிலன் கானாப் பாடலுக்கு மட்டுமில்லை உணர்ச்சிப் பாடலுக்கும் புதியவரில்லை என்பதைப புரிய வைத்திருக்கின்றார்.

முன்பு வரும் பெரும்பாலான படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதிப் பிரமிக்க வைப்பார். இப்போது வரும் திரைப்படங்களில் நா.முத்துக்குமார் அண்ணனின் வரிகள்தான் ஆட்சி செய்கிறது. எந்தத் திரைப் படத்தைப் பார்த்தாலும் இவர் பெயரும் கூடவே இருக்கும். அந்த வகையில் இன்று முன்னணியில் எழுதிக்கொண்டிருக்கும் நா.முத்துக்குமாரின் வரிகள் இராமேஸ்வரத்திலும் ஒலிக்கின்றது.

அந்த ஒலிப்பில் எங்களுக்கும் வலிக்கின்றது. ஓ.எஸ்.அருண் நீலம் குறும் படத்தின் பின் நிருவோடு மீண்டும் இணைந்திருக்கின்றார். தன் உருக்கமான குரலால் மீண்டும் கண்ணீர் சிந்த வைக்கின்றார்.

நேற்றிருந்தோம் எங்கள் வீட்டினிலே

நிலவெறியும் எங்கள் காட்டினிலே

யார் தந்த சாபம் இது?

யார் செய்த பாவம் இது?

கண்ணீர்த் துளியும் வலியும்

சேர்ந்த கூடாய்க் கிடக்கின்றோம்.

உயிரை அங்கே வைத்தோம்

அதனால் உயிரைச் சுமக்கின்றோம்

எத்தனை உறவுகள் தொலைத்தோம்

எதற்கு நாங்கள் பிழைத்தோம்!

நா.முத்துக்குமார் நெஞ்சாங் கூட்டில் நிற்கிறார். என்றும் நிற்பார் என்பதுக்கு இந்தப் பாடல் போதும். இப்படி வரிகள் வந்தால் எந்த இசையமைப்பாளன் சும்மாய் விடுவார்.

தமிழ் ஈழத்தில் அளவெட்டியில் பிறந்து, பிரன்சு நாட்டில் வாழ்ந்த இசையமைப்பாளர் நிரு தமிழகத்தின் கடைக்கோடித் தமிழர்களின் இதயங்களில் மிக விரைவில் இடம்பிடிப்பார்.

ஏதோ செஞ்சேன் பிள்ளை

என்னை வந்து தானா கொஞ்சு பிள்ளை.

என யுகபாரதி எழுது நிருவின் இசையில் களை கட்டுகிறது குதூகலப் பாடல்.

ரஞ்சித்தும் சின்மயி இணைந்து உங்களை செவியோடு அணைக்க. இத்திரைப் படத்தை

தமிழ் உறவுகள் அனைவரும் உங்கள் அன்பு சுமந்து திரைக்கு வந்து பார்க்குமாறு, தங்கள் உழைப்பின் பயன் அடைய அழைக்கின்றார்கள்.

வசீகரன்

ஒஸ்லோ, நோர்வே

ஆஆஆ அவ்வ்........ தாங்கமுடியல :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் -- பாடலும் காட்சிகள் சிலவும்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இராமேஸ்வரம் தொடர்பாக ஒரு காத்திரமான விமர்சன பகுதியை திறந்து, பலதரப்பட்ட விமர்சனங்களை இணைத்துள்ள அயீவன் அண்ணாவிற்கு நன்றி கலந்த. வணக்கங்கள். உங்களுடைய பலதரப்பட்ட கருத்துப் பகிர்வினை உள்வாங்கிய போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இளைய படைப்பாளிகளை உண்மையாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பண்புள்ளவர் என்பதை என்னால் அறிய முடிகிறது. நிஐமான முகத்தோடு இந்த யாழ்களத்தில் விமர்சனங்களை பதிவு செய்யும் உறவுகள் குறைவு இது கவலை தருகின்றது. எத்தனை நாளைக்குத்தான் புனைப்பெயரோடு இங்கு ஆக்கங்களைப் பதிவு செய்யப் போகின்றோம். நான் கூட ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை தமிழ்வானம் என்ற பெயரோடு பல ஆக்கங்களை பதிவு செய்கின்றேன். ஆனால் நிஐமுகத்தோடு கருத்துப் பகிர்வு செய்தால் தான் அந்தக் கருத்துக்கூட அழகாகும். என்னைப் பெரும்பாலானவர்கள் அறிவர் என்பதாலும் புனைப்பெயரோடு தொடர்கின்றேன்.

இந்த களத்தில் வந்து கருத்துப் பகிர்வு செய்கின்ற அனைத்து உள்ளங்களையும் நிஐ முகங்களோடு சந்தித்து நட்புப் பாராட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்த வகையில் இராமேஸ்வரம் திரைப்படம் பார்த்த அன்று தான் யாழ்கள உறவு பரணியோடு அறிமுகமானது பெரு மகிழ்வைத் தந்தது. நிஐ முகத்தோடு கருத்தாட வருங்கள் உறவுகளே. இராமேஸ்வரம் திரைப்படத்தை திரைக்குச் சென்று பாருங்குள் என் அன்பான வேண்டுகோள். நாட்டுப் பற்று என்பது பலவழிகளில் வளரவேண்டும். எமக்கான திரைத்துறை வளரவேண்டும். அதற்கான முயற்சிகளுக்காக தேவையற்ற விமர்சனங்கள் தவிர்த்து ஒன்றினைவோம்.

இந்தத்துறையை வளர்த்து எடுப்பதற்காக தார்மீக மனதோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அதற்கான அறிகுறிகளை மிக விரைவில் அறிவீர்கள். இயக்குனர் செல்வம், இசையமைப்பாளர் நிருவிற்கும் இராமேஸ்வரம் தயாரிப்பாளரையும் வரவேற்போம். ஆணிவேர், இராமேஸ்வரம், காதல் கடிதம் வெளிவர இருக்கின்றது, இளம் புயல்(டென்மார்க்) மீண்டும்(நோர்வே) மற்றும் பெயர் குறிப்பிடப்படாத திரைப்பட முயற்சிகள் ஏனைய நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறவுகள்

இராமேஸ்வரம் திரைப்படம் பார்த்தேன். வழமையாக தமிழ் நாட்டுத்திரைப்படங்களில் பணக்கார நாயகியை, ஏழை நாயகன் காதலிப்பான் அல்லது ரவுடியின் மகளை நாயகன் காதலிப்பான் அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்ணை இந்து மதத்தைச் சேர்ந்தவன் காதலிப்பான். காதலுக்கு இடையூறுகள் வரும். அதில் எப்படி வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் நாட்டு தமிழ்த்திரைப்படங்களில் காணலாம். இப்படத்தில் அதே போல ஈழத்து அகதி ஒருவரை தமிழ் நாட்டு பெண் ஒருத்தி காதலிக்கிறார்.

வழமையாக கதையில்வரும் கதாபத்திரம் ஈழத்தவராக இருந்தால் அவர் பேசும் மொழி என்று ஈழத்து பெருமாலும் யாழ்ப்பாண மொழியைப் பேசுவதாக நினைத்து கொலை செய்வார்கள். தென்னாலி படத்தில் கமலாகாசன் கொலை செய்கிறார்.( சில நாடகங்களில் பேசுவது போல பேசி இருக்கிறார்). ஆனால் இப்படத்தில் ஈழத்து பேச்சுவழக்கில் நாயகன் பேசவில்லை. இதற்கு பாராட்டவேண்டும். பேசிக் கொலை செய்வதை விட பேசாமல் இருக்கலாம். நடிகர் மணிவண்ணன் ஒரளவு ஈழத்து மொழியில் பேச முயற்சித்து இருக்கிறார். கமலை விட நன்றாகப் பேசியிருக்கிறார். படத்தில் சில பாத்திரங்கள் யாழ்ப்பாண மொழியில் நன்றாகப் பேசி இருக்கிறார்கள்.

சில யாழ்ப்பாண இடங்களை பேச்சு வழக்கில் சொல்லி இருக்கிறார்கள். நல்லூர், புங்குடுதீவு , தெல்லிப்பளை யூனியன் கல்லூரி..... .

நாயகனின் நினைவுகளின் போது குண்டுவீச்சின் போது ஓடும் ஈழத்து மக்களைக் காட்டி இருக்கிறார்கள். செயற்கைக் காலை உடைய ஒருவர்' ஈழத்தில் இதைவிட பல அங்கங்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் தன்னமிக்கையினை இழக்கவில்லை 'என்று சொல்வது ஈழத்தமிழர்கள் எத்தனை சோகங்கள் வந்தாலும் மன வுறுதியுடன் இருப்பதைக் காட்டுகிறது. ஆமி குண்டு போடுகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சொல்லப்படுகிறது. அகதி என்று அழைக்க வேண்டாம், புலம் பெயர்ந்த தமிழன் என்று அழையுங்கள் என்று நாயகன் சொல்லி இருக்கிறார்.

இப்படத்திற்கு உதவியவர்களில் சிலரில் காசி ஆனந்தனும், தர்மசீலன் செந்தூரனும்(ரி.ரி.என், தரிசனம், சிகரம் தொலைக்காட்சி பார்த்தவர்கள் இவருடைய பெயரைப் பார்த்திருப்பீர்கள்) ஆவார்கள். காசி ஆனந்தனின் கவிதைகளில் சிலவும் இங்கு சொல்லப்படுகிறது.

இப்படத்தில் தணிக்கைக்குழுவினால் எத்தனை எமக்குசார்பான விடயங்கள் தணிக்கைக்கு உட்பட்டு இருக்குமோ ?.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்க சொல்வதை பார்த்தா படத்தை இன்றைக்கே பார்க்கவேண்டும் போல இருக்கு நேரம் போயிட்டு அது சரி இந்த படத்தில் நடித்த நாயகனும் நாயகியும் பணம் வாங்காம நடித்ததாக கதை அடிபடுகிறது இப்படி தெரிந்திருந்தா நான் கொஞ்ச காசை கொடுத்தாவது நான் நடித்திருப்பேன். :)

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

''எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?''

இராமேஸ்வரம்.. இந்தப் படம் தமிழகத்தில் பிறந்த நமக்கு இன்னும் ஒரு நல்ல படம், அவ்வளவே. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு வெறும் படம் மாத்திரமல்ல, இது வலி, கண்ணீர், தேடல்... என பல உணர்வுகளின் கலவை.

இந்தப் படத்தின் பாடல்களின் இசையும், வார்த்தைகளும் நம்மை ரசிக்கவும், சிந்திக்கவும் மட்டுமே வைக்கும். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தப் பாடல்கள், வாழ்க்கை.

இந்தப் பாடல்களின் அர்த்தங்களை முழுமையாய் அறிய, அகதிகளாகிவிட்ட நம் உறவுகளின் நிழலில் கொஞ்ச நேரம் நாம் ஒதுங்க வேண்டியது அவசியம்.

அதற்கு ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தின் பாடல்களுக்கு விமர்சனத்தை தட்ஸ்தமிழுக்கு எழுதியுள்ளார், வசீகரன். இலங்கையில் பிறந்து இப்போது நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வசிக்கும் வசீகரனின் விமர்சனமே நம்மை கலங்கடிப்பது நிஜம்.

http://thatstamil.oneindia.in/art-culture/...gee-031207.html

  • தொடங்கியவர்

வழமையாக கதையில்வரும் கதாபத்திரம் ஈழத்தவராக இருந்தால் அவர் பேசும் மொழி என்று ஈழத்து பெருமாலும் யாழ்ப்பாண மொழியைப் பேசுவதாக நினைத்து கொலை செய்வார்கள். தென்னாலி படத்தில் கமலாகாசன் கொலை செய்கிறார்.( சில நாடகங்களில் பேசுவது போல பேசி இருக்கிறார்). ஆனால் இப்படத்தில் ஈழத்து பேச்சுவழக்கில் நாயகன் பேசவில்லை. இதற்கு பாராட்டவேண்டும். பேசிக் கொலை செய்வதை விட பேசாமல் இருக்கலாம். நடிகர் மணிவண்ணன் ஒரளவு ஈழத்து மொழியில் பேச முயற்சித்து இருக்கிறார். கமலை விட நன்றாகப் பேசியிருக்கிறார். படத்தில் சில பாத்திரங்கள் யாழ்ப்பாண மொழியில் நன்றாகப் பேசி இருக்கிறார்கள்.

நன்றி கந்தப்பூ

நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என் நண்பர்கள் என்பதால் பேசியிருக்கிறேன்.

இது அரசியல் சார்ந்த படமல்ல.

காதல் கதைதான்.

பல வேளைகளில் இப்படியாவது

சில கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைக்கலாம்.

கமல் குறித்த தவறான கருத்துக்கு கமல் மட்டுமே பாத்திரவாளியல்ல கந்தப்பூ

இலங்கை தமிழ் பேசுவதற்கு கமல் அனுகியது

அறிவிப்பாளர் பீஎச் அப்துல்கமீதை

அவர் கொண்டு சென்று கொடுத்தது

எமது கலைஞரான கே.எஸ்.பாலச்சந்திரனின்

அன்றைய இலங்கை வானோலி நாடகங்களில் வந்த

சில ஒலி நாடாக்களை கொடுத்து

அப்துல்கமீத் அவர்களே அதற்கு உடந்தையானார்.

(கோமாளிகள் வானோலி நாடகம் திரைப்படமான போதும்

அதன் பேச்சு வழக்குகளும் இதை புரிய வைக்கும்)

அதை பேசப் போனதில் கமல் நாறிப் போனர் என்பதுதான் உண்மை.

http://balachand.homestead.com/withkamal.html

பாலச்சந்திரன் பேசிய ஒரு பகுதி இங்கே இடம் பெறுகிறது

கேட்டால் புரியும்.

http://www.radio.ajeevan.com/2007/11/11november-2007.html

நாம் செய்தால் அது தவறல்ல.

நம்மைப் போல் இன்னொருவர் செய்தால் அது தவறு.

இதை நாம் வாழ்வில் பார்க்கிறோம்.

ஜீவா படத்தில் இந்திய தமிழில் பேசியிருப்பதை

நீங்கள் வரவேற்று இருக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்த வரை அது பெரும் தவறு.

இது தொடரப் போவது வருத்தமான உண்மை.

இனி இதுவே தொடர் கதையாகிவிடும்.

எமது தமிழ் இனி எங்கே தொடர்வது?

எமது பேச்சு வழக்கும்

இந்திய பேச்சு வழக்கும் வேறு வேறு..........?

தமிழகத்தில் கூட

தஞ்சை தமிழுக்கும்

தூத்துக்குடி தமிழுக்கும்

திருநெல்வேலித் தமிழுக்கும்

காரைக்குடி தமிழுக்கும்

சென்னைத் தமிழுக்கும் என்று

அனைத்து மாநில தமிழ் பேச்சு வழக்கும் வித்தியாசமானவை.

அது போல யாழ் - மட்டக்களப்பு -மன்னார் - கொழும்பு - மலையகம்

என பேச்சு வழக்குகள் மாறுபடுகின்றன.

இங்கு ஜேர்மன் மொழி பேசுவோர் கூட

அதே நிலைதான்.

ஜேர்மன் - சுவிஸ் - ஒஸ்ரியா?

ஏன் ஆங்கிலத்தில்

அமெரிக்கருக்கும் : இங்கிலாந்துகாரருக்கும் - அவுஸ்ரேலியா மக்களுக்குமான

பேச்சு வழக்கு குறித்து உங்களுக்கு தெரியும்?

எனவே இந்த தவறு தொடர வாய்ப்பாகிவிடும்

ஜீவா பேசுவதை நாம் ஏற்றுக் கொள்வது?

இது தொடர வாய்ப்பாகி மட்டுமல்ல அடித்தாளமாகிவிடும்.

இது என் தாழ்மையான கருத்து.

நமக்கு ஒரு சினிமா வேண்டும் என்பதிலும்

நம்மவர் குறித்த படங்கள் வர வேண்டும் என்பதிலும்

எந்த அளவு விருப்பம் உள்ளதோ

அதே அளவு

எமது கருத்துகள் அல்லது நடைமுறை சிதறுவதையும்

நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டது

எனது கலை உணர்வு.

கமல் பேசியது குறித்து அப்துல்கமீத் அவர்களை

தீபம் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்த போது

சுட்டிக் காட்டினேன்.

அவர் அது சரி என்றே வாதிட்டார்.

எனது நிழல் யுத்தம் குறும்படத்தை பார்த்த பின்னர்

அவர் அமைதியானார்.

அவர் சிறந்த ஒலிபரப்பாளர்

ஆனால் சினிமா கலைஞர் அல்ல!

ஒரு இலங்கை தமிழரை வைத்து பேச வைத்திருக்கலாம்.

டபிங் ஆர்டிஸ்ட்களை வைத்துதானே

பெரும்பாலான நடிக நடிகையர் பேசுகிறார்கள்?

இவை தொடர

வழி செய்வதும் - செய்யாமல் இருப்பதும்

நம் கையில் இருக்கிறது?

இது குறித்த கலந்துரையாடல்கள் சிலவற்றை இங்கே இணைக்கிறேன்.

http://www.yarl.com/forum/index.php?showto...w=&st=&

http://www.blog.ajeevan.com/2004/07/blog-post_14.html

நன்றி!

Edited by AJeevan

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்க முடிந்தது. உண்மையில் தயாரிப்பாளர் ஈழப்போரட்டத்தில் மக்களின் கஸ்டங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம், தமிழக மக்களின் மனங்களில் அது பற்றிய சிந்தனைக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றார் என்றே நம்புகின்றேன். அவருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.

கதையின் இறுதியில் எனக்கு ஒரு விடயம் சொல்ல வேண்டும் போலத் தோன்றுகின்றது.

தமிழகத்தில் ஒரு பெண் திருமணம் முடித்தால், ஆணின் வீட்டில் சென்று வசிப்பது தான் வழமை. ஆனால் யாழ்பாணத்து(படத்தில் யாழ்பாணம் பற்றிக் கதைப்பதால் அதை மட்டும் சொல்கின்றேன்) வழக்கம் என்பது, ஆண்கள் தான் பெண்களின் வீட்டில் சென்று வசிப்பார்கள். எனவே காதாநாயகியின் தந்தை, மகள் யாழ்பாணம் சென்று விடுவாள் என்பது குறித்து அஞ்சத் தேவையில்லை :lol::D

Edited by தூயவன்

கதாநாயகியின் அப்பா ஒரு இடத்தில் உங்க ஊர் இராவணன் தான் கெட்டவன் என்று நினத்தோம் ஆனால் நீங்கள் எல்லாரும் அப்படி போல தான் என்று ஒரு இடத்தில் பேசுவதும்.

இன்னொரு இடத்தில் கதாநாயகனும் இராவணன் இராமன் பற்றி பேசுவதும் படத்தையே கொச்சை படுத்தி விட்டது.

மற்றும்படி பொதுவான காதல் படம் கதை உண்மையான சூழழை சொல்கிறது. ஆனால் தமிழக தியேட்டர் குஞ்சுகளுக்கு என்ன சொல்லி இருக்கிறாரென்று குழம்பி இருப்பாங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.