Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் - சிறுகதை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

``சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். ``தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான்.

சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை.

``தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவரது உச்சரிப்பு தமிழ்த் தொலைக்காட்சிப் பெண்களின்/ ஆண்களின் தமிழை விட இலகுவாக சீலனுக்குப் புரிந்தது.

``ஒரு வருசம்´´

``ஒரு வருசம்.. இருக்கிறது.. சிங்களம் தெரியாது?´´ என மீளவும் கேட்ட அவர் முகத்தில் சிரிப்பு உதிர்ந்தது. அது நட்பானதா, ஏளனம் சுமந்ததா என்பதை ஆராயும் மனநிலையில் சீலன் இருக்கவில்லை. அவன் முகம் சிரிப்பற்று கடுமையாயிருந்தது. மீண்டும் தெரியாது எனத் தலையை ஆட்டினான். அவர் இப்போது ஒவ்வொரு பேப்பர்களாக எடுத்து கவனிக்கத்தொடங்கினார். அவ்வப்போது அருகிலிருந்த பெண்மணியிடம் சிங்களத்தில் உரத்தும் சிரித்தும் கதைத்தார்.

``ம்.. எல்லாம் சரி.. ஈவினிங் வந்து எடுங்க ´´

கடந்த சில நாட்களாக உணர்ந்த, அதுவும் கடைசி நிமிடங்களில் அதிகரித்துக் கிடந்த ஒரு வித அந்தரித்த நிலையிலிருந்து விடுபட்டான் சீலன். ஒரு பெரும் அலைச்சலுக்குப் பிறகு பாஸ்போட் கையில் கிடைக்கப் போகிறது. ஊரிலிருந்து கொழும்பு வருவதற்கான (கொழும்பும் அவனது ஊரும் ஒரே நாடெனச் சொல்லப்படும் இலங்கையில் இருந்தன) அனுமதியைப் பெறுவதற்காக விதானையூடாக அரசாங்க அதிபர், அவரூடாக ஆமிச் சின்னவர், அவரூடாக ஆமிப்பெரியவர் என ஆரம்பித்தது அந்த அலைச்சல்.

வெளியே இன்னும் நிறையப் பேர் வரிசையில் நின்றார்கள். ``அண்ணை உள்ளை நிறையச் சனமோ?´´ என்று இளைஞன் ஒருவன் கேட்டான். இல்லையெனத் தலையாட்டி ச் செல்ல எத்தனித்தவன் நின்று நிதானித்துச் சொன்னான். ``இல்லை எல்லாரையும் உள்ளை எடுப்பாங்கள்´´

சற்றுத் தூரத்தில் கடலைக் குறுக்கிட்டு மறைப்பது போல புகைவண்டியொன்று பார்வைச் சட்டத்தில் நுழைந்து பின் விலகிப் போனது. மதியம் எங்காவது சாப்பிட்டுவிட்டு, கடலோரம் அமர்ந்தும், காலாற நடந்தும் மாலை வரை நேரத்தைப் போக்கலாம் என்றெழுந்த எண்ணம் கொஞ்சம் தள்ளி துப்பாக்கி ஏந்தி விறைத்து நின்ற பச்சை சீருடைக்காரனைக் கண்டதும் தானாகவே அடங்கிப் போனது.

பஸ் தரிப்பிடத்திற்கு நடந்து வந்தான். வீதியின் அருகெங்கும் கண்ணாடிச் சுவர்க் கடைகள் விரிந்திருந்தன. இரண்டு, மூன்று அடுக்குக் கட்டடங்கள். உள்ளேயும் வெளியேயும் தனித்தனியாக, சோடி சோடியாக ஆட்கள் சிங்களத்திலும் அவ்வப்போது தமிழிலும் கதைத்தபடி திரிந்தார்கள்.

சனம் நிறைந்து பிதுங்கித் தள்ளியபடி வந்து நின்றது பஸ். ஒருவாறு உள்நுழைந்து ஏறிக்கொண்டான். ``இசரட்ட இசரட்ட ´´ (முன்னுக்கு) என கொண்டக்டர் கத்தினான். ஒவ்வொரு முறையும் அவன் கத்தும்போதெல்லாம் தன்னைத்தான் சொல்கிறானோ என்ற பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி ட்றைவருக்கு அருகில் வந்து நின்று கொண்டான். அதற்குப் பிறகும் கொண்டக்டர் கத்திக்கொண்டிருந்தான்.

வீதி முழுக்க வாகனங்கள் நிறைந்திருந்தன. கிடைக்கும் இடைவெளிகளுக்குள் பஸ்ஸை நுழைத்து அநாயாசமாக ஓடும் ட்ரைவரை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. அதை விட பஸ் தரும் அங்குல இடைவெளிகளுக்குள் எல்லாம் நுழைந்து ஓடும் ஓட்டோக்கள் (ஆட்டோ) மேலும் கவனத்தை ஈர்த்தன.

சீலனுக்கு அவனது பார்வதி ஓட்டோ நினைவில் வந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சும்மா இருந்தவனுக்கு அம்மா பார்வதிதான் ஓட்டோ வாங்கி தொழில் செய்யும் படி சொன்னாள். அவளே அங்கிங்கென்று கடனும் புரட்டிக் கொடுத்தாள். ஏற்கனவே ஒருவர் பாவித்த ஓட்டோ தான். ஆயினும் பார்வைக்கு புதியதாகத் தான் தோன்றியது. அவனும் கொஞ்சம் காசு போட்டு ஓடியோ பிளேயர், பேஸ் சவுண்ட் சிஸ்ரம், சொகுசான இருக்கைகள் என மேலும் விருத்தி செய்திருந்தான்.

ஊருக்குள் இவனொருவனே ஓட்டோ வைத்திருந்தபடியால் அதுவே நிறைய வாய்ப்புக்களுக்கு காரணமாகியது. தவிர பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கான ஓட்டம் என்றெல்லாம் தனித்தனியே வருமானம் கிடைத்தது. அப்பா இருபது வருடங்களிற்கு முதல் இயக்கத்துக்குச் சாப்பாடு கொடுத்ததற்காக சவமாகிப் போன பிறகு இப்போது தான் நினைத்தவற்றை, விரும்பியவற்றை அடைய முடிந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களிற்கெல்லாம் ஓட்டம் வரும். ஒரு தடவை வவுனியா வரை கூட போய் வந்திருக்கிறான்.

திடீரென ஒரு நாள் பாதையை மூடிவிட்டதாக சொன்னார்கள். பரவாயில்லை உள் ஓட்டமே போதும் என்றுதான் அப்போது நினைத்தான்.

அடுத்தடுத்து ஓட்டோக் காரர்கள் கொலை செய்யபடுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. தொடக்கத்தில் என்னவோ, கொலை செய்யப்பட்டவர்கள் எதேச்சையாக ஓட்டோக் காரர்களாக இருந்திருக்கலாம் என சீலன் நினைத்திருந்தான். பின் வந்த ஒரு நாள் ஓட்டோகாரர் சங்கத்தில் அறிமுகமான பிரபு என்ற இருபத்தொரு வயசுப் பொடியன் பிணமாகக் கிடந்தான். பிரபுவைத் தொடர்ந்து துரையண்ணையும்..

வீதியில் முழத்திற்கு ஒன்றென இருக்கும் ஆமிச் செக் பொயின்ற்றுகளை (Army check point) கடந்து வந்து சுடும் இனந்தெரியாதவர்களை இன்னமும் ஆமிக்காரர் பிடித்த பாடில்லை. ஆனால் சந்தைக்கு கிழங்கு விற்கப் போகும் பூரணத்தையும், பள்ளிக்கூடம் போகும் பன்னிரண்டு வயசுப் பொடியனையும் மறித்து வைத்து ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள்.

சீலனின் அம்மா ஓட்டோ ஓட்டம் ஒன்றிற்கும் போக வேண்டாமெனத் தடுத்தா. ஊருக்குள் ஓடவே அவனுக்குப் பயமாயிருந்தது. வீட்டுக்குள் அடைந்தான். யாழ்ப்பாணத்து ஓட்டோக்காரர் இயக்கத்திடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவையாம். அதனால தானாம் ஒவ்வொருவராக சுடுறாங்கள் என்று கதை பரவியது. ஆயுதப் பயிற்சி எடுக்காதவர்களைச் சுட மாட்டார்கள் என சீலனால் சந்தோசப்பட முடியவில்லை. ஏனெனில் பிரபுவும் துரையண்ணையும் ஆயுதப் பயிற்சி எடுத்ததில்லையே..

அம்மா வெளிநாட்டில் இருக்கும் யார் யாரோவுக்கெல்லாம் தொலை பேசினாள். தூரத்து உறவினர் ஒருவர் அதற்கான ஒழுங்குகளைச் செய்வதாக கூறினார்.

சீலன் கொழும்பிற்கு வெளிக்கிடுவதற்கு முன்னால் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட ஓட்டோவைத் தேடிச்சென்று ஒரு தடவை ஓடிப்பார்த்தான் வீட்டு வளவிற்குள்ளேயே..

பஸ் நின்றது. சனங்கள் ஒட்டுமொத்தமாக இறங்கினார்கள். சீலன் வெளியே பார்த்தான். செக் பொயின்ற்! ஆயுதம் தரித்த ஒரு இராணுவத்தான். மிகுதி இரண்டு பேரும் பொலிசார்.

அடையாள அட்டையையும், பொலிஸ் பதிவு துண்டையும் எடுத்து வரிசையில் நின்றான். முன்னால் நின்ற பயணி சிங்களத்தில் ஏதோ சினந்தார். அநேகமாக அவர் தமிழர்களையோ அல்லது புலிகளையோ அல்லது இருவரையும் சேர்த்தோ திட்டியிருக்கலாம். அபூர்வமாக அரசாங்கத்தை அல்லது ஆமியை கூட திட்டியிருக்கலாம்.

வரிசை ஒரு கட்டத்தில் நகராது நின்றது. இலங்கைச் சனநாயகக் குடியரசு கொடுத்த அடையாள அட்டை வைத்திருந்தும், கொழும்பில் தங்குவதற்கான பொலிசின் அனுமதிப் பதிவு வைத்திராத ஒருவரை பொலிசாரில் ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

``ஐயா நேற்றுத்தான் வந்தனான். இண்டைக்குப் பின்னேரம் தான் எடுக்க வரச்சொன்னவை ´´

``ஏன் கொழும்புக்கு வந்தது..´´

``பாஸ்போட் எடுக்க வந்தனான். இண்டைக்கு எப்பிடியும் பொலிசில பதிஞ்சிடுவன் ´´ அவர் ஒரு ஓரமாய் நிற்கப் பணிக்கப்பட்டு மற்றவர்கள் அழைக்கப்பட்டார்கள். வரிசை நகர்ந்தது.

சீலனின் அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அடையாள அட்டையின் பின்னால் பிறந்த இடம் யாழ்ப்பாணம் என்று இருப்பதால் ஒருபோதும் கேள்வியின்றி விடுவிக்க மாட்டான் என சீலனுக்கு நன்றாகவே தெரியும்.

``எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ காலை பாஸ்போட் ஒபிசில் கேட்ட அதே கேள்வி. இந்த பஸ் பயணத்தில் இன்னொரு தடவையும் இப்படிக் கேட்கப்படலாம். தனியே யாழ்ப்பாணத்தைப் பிறந்த இடமாய்க் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல இக்கேள்விகள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை என பட்டியல் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக நீளும்.

பஸ் புறப்பட்டது. இரண்டு பேர் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டுக்கொண்டிருப்பது கண்களிலிருந்து மறைந்தது.

இப்போதும் என்னைக் கைது செய்திருந்தால் அது மூன்றாந் தடவையாக இருந்திருக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான். முதல் தடவை அவனைக் கைது செய்த காலங்கள் நினைவில் வந்தன.

வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள சீலன் கொழும்பில் வாழைப் பழக் கடையொன்றில் தங்க வைக்கப்பட்டான். கீழே கடை. மேலே 3 பேர் தங்கக் கூடியவாறான ஒரு அறை. இன்னுமொருவனும் இவனைப் போலவே ஏற்கனவே அங்கு தங்கியிருந்தான்.

சிறுவயதில் அப்பாவுடன் ஒருமுறை வந்துபோன கொழும்பின் காட்சிகள் நினைவுகளில் மங்கிப் போய்விட, சீலனுக்கு இதுதான் முதற் தடவை கொழும்பு. ஆங்காங்கே கைதுகள், இரவுத் தேடுதல்களென பத்திரிகைச் செய்திகள் வந்தாலும் ஓட்டோக் காரனைச் சுடவோ, கைது செய்யவோ மாட்டார்கள் என நம்பியிருந்தான், நான்கு மாதங்களுக்கு முன்னான ஒரு மாலை வரை.

ஏதோ ஒரு புதிய படம் பார்த்து வரலாம் எனக் கிளம்பியவனை துறைமுக வீதியில் வைத்து வழி மறித்தனர் இரண்டு நாட்டைக் காப்பவர்கள். அந்தக் கணத்திலேயே சீலன் நிலைகுலைந்து போனான். நாவரண்டு போனது. அவர்கள் ஆரம்பத்தில் சிங்களத்தில் கேட்ட கேள்விகளுக்கு சிங்களமா, தமிழா என்று அடையாளம் காண முடியாதவாறு பதில்கள் திக்கித் திணறி உடைந்தன. கண்களில் நீர் திரண்டது.

துறை முகத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்துவதற்காக உளவில் ஈடுபட்ட எல் ரி ரி ஈ பயங்கர வாதியை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தார்கள்.

நான்கரை மாதங்கள். பொலிசில் ஆரம்ப கட்ட உடல் உளச் சித்திரவதைகள், விசாரணைகள், கோட், கேஸ் என இழுபட்டு அவன் வெளியே வந்தான். அதிஸ்ரம் என ஒன்று இருந்தால் அது அவன் பக்கம் இருந்திருக்க வேண்டும். என்னதான் திட்டித் திட்டி வேலை வாங்கினாலும் கடை முதலாளியும் அவனுக்காக அலைந்தார். வெளிநாட்டிலிருந்தும் உதவி கிடைத்தது. தொலைபேசிய அம்மா பறாளாய் முருகன் தான் விடுதலைக்கு காரணம் என்றா.

அப்போதிருந்தே சீலன், கடை கடை விட்டால் அறையென முடங்கிப் போனான். ஒரு தடவை பிடித்தால் மறுமுறை பிடிக்க மாட்டார்கள் என கடைக்கு வந்த சிலர் சொன்னார்கள். ஒருவேளை அது உண்மையாயிருக்குமோ என எண்ணத் தலைபட்ட நேரத்தில்த் தான் ஒரு ஐந்தாறு மாதம் கழித்து குண்டொன்று வெடித்தது. வெடித்ததென்னவோ சத்தம் கூட கேட்காத அளவு தூரத்தில்த் தான். அன்று இரவு அதை செய்தியில் பார்த்துக் கொண்டிருந்த போது வந்து கதவைத் தட்டினார்கள். பாய் தலயணை, பை, வாழைக் குலையென ஒன்றும் விடாமல் குண்டுகளைத் தேடினார்கள். கிடைக்கவில்லையென்ற ஏமாற்றமோ, கோபமோ, என்னவோ போகும் போது சீலனையும் கூட இருந்த பொடியனையும் கூட்டிச் சென்றார்கள்.

அன்று இரவு முழுதும் பொலிஸ் நிலையத்தில் தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு இடமில்லை. வெடித்த குண்டுகளைக் கண்டிருப்போர் என்ற சந்தேகத்தில் நிறையச் சீலன்களையும் சீலிகளையும் அழைத்து வந்திருந்தார்கள். காலை முதல், விசாரணை நடந்தது. மிரட்டலின் பயத்தில் வார்த்தைகள் குழறிப் பதில் சொன்னவர்கள் கூட சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர். சீலன் இரண்டாவது தடவையாகவும் விடுவிக்கப்பட்டான். இம்முறையும் கடை முதலாளி சென்ற முறை விடுதலையான ஆவணங்களோடு காலையே வந்திருந்தார்.

கைது செய்யப் பட்டவர்கள் விடுதலைக்காக காத்திருக்க விடுதலை செய்யப்பட்டவர்கள் அடுத்த கைதினை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

பிறகொரு நாள்த் தொலைபேசி அழைப்பில் பாஸ்போட்டினை உடனடியாக எடுக்கும் படி சீலன் அறிவுறுத்தப் பட்டான்.

000

விமான நிலையத்தில் மனதும் உடம்பும் இலேசாய்ப் படபடத்தது. ``தம்பி ரென்சனாய் இருக்கப்பிடாது. நோர்மலாய் இருக்க வேணும் சரியே.. ´´ காலையிலிருந்து இங்கே கொண்டு வந்து விடும்வரை ஏஜென்சிக்காரர் சொன்னதை அசைபோட்டான் சீலன்.

``ஒண்டுக்கும் யோசியாதையும். எல்லாம் அரேஞ் பண்ணிக் கிடக்கு. றூட்டால போறதெண்டால்த்தான் பயப்பிட வேணும். இது த்றூ பிளைற். ஏறுறதும் இறங்கிறதும் தான். .... மற்றது அவசரப் படாமல் லான்ட் ஆகிறதுக்கு முதல் நான் சொன்னதைச் செய்யும். ´´

விமானம் மேலெழும்பியது. வயிற்றுக்குள் இருந்து அமிலம் மேலெழுகின்றது போல இருந்தது. காது அடைத்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. முன்னே பொருத்தப்பட்டிருந்த வீடியோவை நோண்டிப்பார்த்து அதில் தமிழ்ப்பட சனலைப் பிடித்துக் கொண்டான்.

அது அவன் முதற் தடவை கைது செய்யப் பட்டபோது பார்க்கப் போன படம். எரிச்சல் கிளம்பியது. வீடியோவை நிறுத்தி விட்டு பாஸ்போட்டை கொண்டெழுந்தான். ஏஜென்சிக் காரர் லான்ட் ஆவதற்கு சில மணிநேரம் முன்னால் செய்தால் போதுமென்றிருந்தார். இன்னும் நேரமிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை.

ரொய்லெற்றைத் (Toilet, டாய்லெட் ) திறந்து உட்சென்று கதவை முடினான். பாஸ்போட்டை எடுத்து விரித்தான்.

இக்கடவுச் சீட்டை வைத்திருக்கும் நபர் தங்கு தடையின்றி பயணம் செய்ய ஆவன செய்யுமாறு சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்

சீலனின் வாயில் ஒன்றிரண்டு கெட்டவார்த்தைகள் வந்து போயின. பாஸ்போட்டை ஒவ்வொரு தாளாக கிழிக்கத் தொடங்கினான். பிறகு ஒவ்வொரு தாளையும் இரண்டாய் நான்காய் என பேப்பர் குவியலாக்கி வீசியெறிந்து தண்ணீரை அழுத்தினான்.

மீதமிருந்து மிதந்த ஒன்றிரண்டு தாள்களில், முதற் கைதின் போது அவனை நிர்வாணமாக்கி குரூரமாயச் சிரித்த பொலீஸ்காரனின் முகம் தெரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான் சீலன்.

``தூ....... ´´

மீண்டுமொருதடவை தண்ணீர். இப்போது எந்த தடயமும் இல்லை. வெளியே வந்தமர்ந்து போர்வையால் இழுத்து முடியவன் தூங்கிப் போனான்.

---இருக்கிறம்-- சஞ்சிகையில் பிரசுரமானது - கொழும்பு இலங்கை

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பாஸ்போட்டை கிழித்து Toilet, க்குள் போட்டு தண்ணீர் அடித்து விட்ட கதை கேள்விப்பட்டிருக்கேன்.

சஞ்சிகை பெயர் தான் குழப்பமாய் இருக்கு.

இருக்கிறம் என்ற பெயரா? இது தமிழா சிங்களமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இது என்ன கதை.. அண்மையில ஒரு கதை. வெளிநாட்டில உள்ள ஒரு பையனுக்கு ஊரில பொண்ணு பார்த்தாங்கலாம். பொண்ணும் படத்தைப் பார்த்திட்டு பையனப் பிடிச்சிட்டு எண்டிச்சுதாம். அடுத்த நாள் கோல் எடுத்து அன்பாக் கதைக்கிறாப் போல கதைச்சு.. பொடியனட்ட என்ன பாஸ்போட் என்று கேட்டிச்சாம் பெட்டை. பொடியன் சிறீலங்கா பாஸ்போட் என்றானாம். உடன போன் கட்டாகிட்டுது. அப்புறம் என்ன.. கலியாணம் அம்போ தான். இப்ப பொடியன் வெள்ளைக்காரியோட குடும்பம் நடத்திட்டு.. கப்பியா இருக்கிறான்..! :lol::lol:

//இருக்கிறம் என்ற பெயரா? இது தமிழா சிங்களமா?//

என்னங்க..கப்பி அக்கா ...இருக்கிறம் ,படுக்கிறம் எழும்பிறம் திரும்பறம் சாப்பிடுறம் சிரிக்கிறம்....இந்த அரபு மொழி சொற்களை தெரியாது என்று சொல்லுறியளே வெறி பாட் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவனமப்பா, சிறிலங்கா பாஸ்போட் கிடைத்தற்கரிய ஒரு பொக்கிஷம் எண்டு நம்பும் தேசபக்தர்கள் களத்தில இருக்கினம். அவையிட நன்றி விசுவாசத்த நோகடிச்சுப் போடாதையுங்கோ! :lol:

சயந்தன் அண்ணா கதை அந்த மாதிரி இருக்கு.. :) (என்ன சொந்த கதையோ :lol: )..நானும் இப்படி பல கதை கேள்விபட்டிருக்கிறேன் :lol: ..நன்றாக எழுது இருக்கிறீங்க வாழ்த்துக்கள் சயந்தன் அண்ணா :lol: ..அது சரி போர்வையால மூடி தூங்கின பிறகு என்ன ஆச்சு சொல்லவே இல்லை.. :lol: (அது தான் இம்போட்டன் மாட்டரே :) )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறம் என்ற சஞ்சிகை முன்னாள் வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவின் பத்திரிகையென நினைக்கின்றேன். சமீப காலமாகத் தான் வருகின்றது போல.

இருக்கிறம் என்ற சஞ்சிகை முன்னாள் வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவின் பத்திரிகையென நினைக்கின்றேன். சமீப காலமாகத் தான் வருகின்றது போல.

http://thasanonline.blogspot.com/2008/01/blog-post_17.html

ஒரு தமிழன் அனுபவிச்ச கதை போல இருக்குது. .

அது சரி இப்ப பாஸ்போர்டை கிழிச்சிட்டு படுத்து தூங்கியவன் பின்னர் எபப்டி வெளியில் போவான். சொல்லவே இல்லையே.அல்லது அங்கேயும் கைது செய்யபப்ட்டுவிட்டானா?

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இப்ப பாஸ்போர்டை கிழிச்சிட்டு படுத்து தூங்கியவன் பின்னர் எபப்டி வெளியில் போவான். சொல்லவே இல்லையே.அல்லது அங்கேயும் கைது செய்யபப்ட்டுவிட்டானா?

வெண்ணிலா நீங்கள் லோயருக்கு படிக்கிறீங்களா - அல்லது நீங்கள் இல்லையோ தெரியாது.

பாஸ்போட் இருந்தாத்தான் கைது செய்து திருப்பி

(இலங்கைக்கு) அனுப்பிவினம் வெண்ணிலா......

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை விட்டு அண்மைக்காலங்களில் புலம் பெயர்ந்து சென்றவர்கள் பலரின் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சீலனுக்கும் அகதி தஞ்சம் கிடைக்காவிட்டால் மீண்டும் சிறிலங்காவின் கடவுட்சீட்டுடன் தான் வாழ வேண்டிய துற்பாக்கிய நிலமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

யாழ் களத்தில் கனபேர் ஸ்பொன்சறிலும் படிப்பதற்கான விசாவிலும் வந்தவர்கள் போலிருக்கு.நல்ல கதை செயந்தன்.கள்ள பாஸ்போட்டில் பயணம் செய்தால் தான் தெரியும் அதன் அருமை.அதுவும் இலங்கை போன்ற ஒரு மூன்றாம் தர பாஸ்போட்டின் மதிப்பு.நான் இந்தியாவில் இருந்து இந்தியப் பாஸ்போட்டில் கள்ளமாக லண்டன் வந்தேன். டுபாயில் ரான்சிற் கழிந்ததும் பாஸ்போட்டை தண்ணியில் போட்டு ஊறவைத்து பின்னர்

சுக்கு நூறாகக் கிழித்து ரொய்லெற்றில் போட்டு ஃப்லெஷ் பண்ணினேன்.கறுப்பு மட்டையில் ஒரு துண்டு உள்ளுக்குள் போக கொஞ்சம் பஞ்சி பட்டுது அதை எடுத்து டஸ்பினில் போட்டு மேலுக்கு கனக்க ரொய்ல‌ற் பேப்பரும் போட்டுட்டு வந்தேன்.இறங்கி விசாரணையில் முழுப் பொய் சொல்லி வெளிவ‌ரும் நேரம் அந்த கறுப்பு துண்டைக் கொண்டு வந்து போட்டான்,திரும்ப நான் முழு உண்மை சொல்லியும் அவன் சம்மதிக்கவில்லை.பின் இரண்டு கிழமை உள்ளுக்கிருந்து பெயிலில் வெளி வந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.