Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

----------------------------------------------------------------

கவிதை:தீபச்செல்வன்

_______________________________

01

போராளிகள் மடுவைவிட்டு

பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை

தின்ற

குழந்தைகளின் கனவில்

நிரம்பியிருந்த

இராணுவ நடவடிக்கைகளிலிருந்து

போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்

நிகழ்ந்து

வருகிற

எண்ணிக்கையற்ற

இடப்பெயர்வுகளில்

கைதவறிய

உடுப்புப்பெட்டிகளை விட்டு

மரங்களுடன்

ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02

போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு

பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை

துரத்திக்கொண்டு வருகிறது

அரச யுத்தம்.

மரத்தின் கீழ்

தடிக்கூரைகளில்

வழிந்த

மழையின் இரவுடன்

சில பிள்ளைகள்

போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை

பிள்ளைகள்

அறிந்தபோது

பரீட்சைத்தாள்கள்

கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை

மரத்தடியிலும்

காய்ந்த

உணவுக்கோப்பைகளையும்

சுற்றிக்கட்டியிருந்த

சீலைகளையும்

இழந்த போது

ஜனாதிபதியின்

வெற்றி அறிக்கை

வெளியிடப்பட்டிருந்தது.

03

போராளிகள் விடத்தல்தீவை விட்டு

பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து

துண்டுப்பிரசுரங்கள்

வீசப்பட்ட பொழுது

வறுத்த

கச்சான்களை தின்கிற

கனவிலிருந்த சிறுவர்கள்

திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி

அறியவேண்டி இருந்தது.

04

போராளிகள் முழங்காவிலை விட்டு

பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை

சிதைத்து எடுத்த

புகைப்பபடங்களை

வெளியிடும்

அரச பாதுகாப்பு இணையதளத்தில்

சிதைந்த

தென்னைமரங்களைக் கண்டோம்

உடைந்த

சமையல் பாத்திரங்களைக் கண்டோம்

தனியே கிடக்கும்

கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்

துரத்தியும்

எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05

மல்லாவியையும்

துணுக்காயையும் விட்டு

சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற

யுத்தம் தொடங்கியபோது

வணங்குவதற்கு

கைகளையும்

பிரார்த்தனைகளையும்

இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி

மழைபெய்யத்தொடங்க

தடிகளின் கீழே

நனையக் காத்திருக்கிறோம்

தடிகளும் நாங்களும்

வெள்ளத்தில்

மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்

சிதைந்து போனது.

கிளிநொச்சி

அகதி நகரமாகிறது

இனி

பாலியாறு

பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை

தின்ற

குழந்தைகளின் கனவில்

நிரம்பியிருந்த

இராணுவ நடவடிக்கைகளிலிருந்து

போர் தொடங்குகிறது.

---------------------------------------------------------------

20.08.2008

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தின் குரூரத்தை வெளிப்படுத்தும் வரிகள்..

மலட்டுத்தன்மையை அறிந்துகொள்ளவும், தேங்காயின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் நமக்கு நேரம் போதாமல் உள்ளபோது, எவ்வாறு போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகளைப் பற்றி அக்கறை காட்டமுடியும்?

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்

edam2jq7.jpg

கவிதை:தீபச்செல்வன்

தானியங்கள் வீடுகளில்

நிரம்பிக்கிடக்கின்றன

வீடுகள் நிரம்பிய

கிராமங்களைவிட்டு

நாங்கள்

வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

துயரத்தின் பாதைகள்

பிரிந்து நீள்கின்றன

எல்லா பாதைகளும்

தலையில்

பொதிகளை சுமந்திருக்கின்றன.

எல்லோரும் ஒருமுறை

நமது கிராமங்களை

திரும்பிப்பாருங்கள்

இப்பொழுதே

தின்னைகள் சிதைந்துவிட்டன

வீடுகள்

வேரோடு அழிந்து விட்டன.

ஒரு துண்டு நிலவுதானே

வானத்தில் எஞ்சியிருக்கிறது

அடர்ந்த மரங்களுக்கிடையில்

காடுகள் வரைந்த வீதிகளில்

நாங்கள் எங்கு போகிறோம்.

எனது அம்மாவும்

ஏதோ ஒரு வழியில்

போய்க்கொண்டிருக்கிறாள்.

நான் எங்காவது

அம்மாவை சந்திக்கலாம்.

எனது வயதிற்கும்

எனது உருவத்திற்கும் ஏற்ற

பொதி ஒன்றை

நான் சுமந்திருக்கிறேன்

எனது அம்மாவும்

தனக்கேற்ற

பொதி ஒன்றை சுமந்தே

போய்க்கொண்டிருக்கிறாள்.

இந்த பொதிகளை

வைத்து

நாம் ஒரு வாழ்வை

தொடங்கப்போகிறோம்

எங்கள் வானம்

பறிக்கப்பட்டு விட்டது

எங்கள் நட்சத்திரங்கள்

பறிக்கப்பட்டு விட்டன.

செல்கள் முற்றங்களை

மேய்கின்றன

முற்றங்கள் சிதைந்து

மணக்கின்றன

விமானங்கள் வானங்களை

பிய்க்கின்றன

கிராமங்களை தின்னுகின்றன

வீதிகளை இராணுவம்

சூறையாடுகிறது.

எங்ள் கிராமங்களை

விடுவித்துக்கொண்டதாக

அரச வானொலி அறிவிக்கிறது.

சாம்பல் நாகரிகத்திற்கு

கிராமங்களை

பறிகொடுத்து விட்டு

போவதைப் போலிருக்கிறது

நதிகள் வற்றிவிட்டன

நமது பறவைகளின்

முட்டைகள்

கரைந்து விட்டன.

வேர் சிதைந்துகொண்டிருக்கிறது

இனி நாங்கள்

ஒரு துண்டு தரப்பாலுக்கு

திரியப்போகிறோம்

ஒரு மரத்தை தேடி

அலையப்போகிறோம்.

உற்றுப்பாருங்கள்….

இங்கு இரவாயிருக்கிறது.

நாங்கள் கறுப்பு மனிதர்கள்

கறுப்பு பொதிகளை

சுமந்தபடி

நிழல் வீடுகளை

பறிகொடுத்து விட்டு

சிறுதுண்டு நிழலுக்காக

எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.

http://deebam.blogspot.com/2008/08/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்

முகம் பார்த்தறியா இக்கவிஞனின் எழுதுகோல் போர் தின்னும் ஓர் இனத்தின் வேதனையை உலக அரங்கிற்குச் சொல்லும் தகைமையை தன்னதாக்கி நிமிர்கிறது. இந்தப் 'போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்" மொழி மாற்றம் செய்யப்படவேண்டியது. எங்கள் இனத்தின் வேதனையை சொல்லி உலகை உலுக்கக்கூடிய ஆளுமை பரவிக்கிடக்கிறது.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

கவிதை:தீபச்செல்வன்

01

வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு

திரும்பிக்கொண்டிருந்த

அம்மாவை அக்கராயனில்

நான் தேடிக்கொண்டிருந்தேன்

ஷெல்களுக்குள்

அம்மா ஐயனார் கோயிலை

விழுந்து கும்பிட்டாள்

ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்

சிதைந்த கிராமத்தில்

கிடந்தன படைகளின் உடல்கள்

கைப்பற்றப்பட்ட

படைகளின் உடல்களை

கணக்கிட்டு பார்த்தபடி

சிதைந்த உடல்கள்

கிடக்கும் மைதானத்தில்

பதுங்குகுழியிலிருந்து

வெளியில் வந்த

சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்

போராளியின் மரணத்தில்

எழுகிற அழுகையுடன்

இன்றைக்கு நாலாவது தடவையாக

திடுக்கிட்டு எழும்பிய அம்மா

முறிகண்டி பிள்ளையாரை

கும்பபிட்டபடி ஓடுகிறாள்

பூக்களும் மண்ணும்

கைகளில் பெருகுகிறது.

02

போன கிழமை விட்டு வந்த

கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது

குசினிக்குப் பக்கத்தில்

கிடந்த பதுங்குகுழியில்

படைகளின் ஏழு சடலங்கள்

மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய

ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த

கிளைமோர்களைக் கண்டும்

எறிகனைகளைக்கண்டும்

சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது

கிராமங்கள் போர்க்களமாகின

அக்கராயன்குளம் காடுகளில்

ஒளிந்திருக்கும் படைகளிடம்

நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03

அகதிகள் வீடாயிருந்த

ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன

அகதிக்குடியிருப்புகள் நிறைந்த

மணியங்குளம் கிராமம்

எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது

வெளியில் வந்து விடுகிறேன்

தலைகளில் விழும் எறிகனைகளை

ஏந்தும் பிள்ளைகளை

நினைத்து துடிக்கிற

தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்

கொண்டு வந்த போராளியின் உடல்

மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்

துடித்தழுகிறாள்

ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்

துடித்தழுகிறாள்

சிதைந்த கிராமங்களில்

பரவிக்கிடந்தன

படைகளின் உடல்கள்

மதவாச்சியை கடந்து

படைகள் வரத்தொடங்கியபொழுது

வவுனியாவைக்கடந்து

போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்

கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த

ஏறிகனைகளில் இறந்த

குழந்தைகள்

வரிச்சீருடைகளை அணிந்த

காட்சிகளை

ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கி சுடுகிற

போராளிகளின் மனங்களில் இருந்தன

பசுமையான கிராமங்களும்

அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.

-------------------------------------------------------

http://deebam.blogspot.com/2008/09/blog-post.html

பெரிய நகரை தின்கிற படைகள்

கவிதை:தீபச்செல்வன்

மீண்டும் பொதி சுமக்கும்

நாட்கள் வந்துவிட்டன

பெரிய நகரத்தினை

சூழ்க்கிற படைகள்

பிணங்களோடு வருகின்றனர்

எனது

பழைய சைக்களில்

எந்தப் பொதியை

ஏற்றிச் செல்கிறாய்

படையெடுக்கும் இரவில்

நான்

உன்னை கைவிட்டு வந்தேன்

எனது பொதிகளையும்

நீ சுமந்து செல்லுகிறாய்.

முதுகில் வழிகிறது உனது சுமை.

வேப்பமரங்களை

பாம்புகள் சூழ்ந்த நாளில்

மாமரத்திலிருந்து

தோட்டாக்கள் உதிர்ந்த நாளில்

முற்றங்களில் குழிகள் விழுந்தன.

கொய்யாமரத்தின் கீழிருக்கும்

கிடங்கில்

பதுங்கியிருக்கிறது

ஷெல்லில் தாயை இழந்த

ஆட்டுக்குட்டி.

நீ மண் சுமந்த நகரத்தை

நேற்று முதல் நாளிலிருந்து

படைகள் கடிக்கத் தொடங்கி விட்டன.

அந்தச் சைக்கிளில்

நான் திரிந்த நகரம்

எல்லோருடைய கால்களையும்

இழந்து விடுகிறது

அலைவதற்கு இடங்கள் இல்லாத பொழுது

வழிகள்

முற்றுகையிடப்பட்டபொழுது

காடுகளில் மிதக்கின்றன

பொதிகள்

இணைக்கப்பட்ட தலைகள்.

நமது வீட்டிற்குச் செல்லும்

ஒழுங்கையில்

மாடுகள் செத்துக்கிடக்கின்றன.

கிணறுகள் மூடுண்டு கிடக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு

கட்ட முடித்த நகரத்தின்

கடைத் தெருக்களையும்

தண்ணீர்க் குழாய்களையும்

மின்சாரக் கம்பிகளையும்

அறுத்துக்கொண்டு வருகிறது ட்ராங்கி.

சூரியனுக்குப் பதிலாக டெலிகப்ரர் தெரிகிற

குண்டுகளின் புகையில்

விடிகிற காலையில்

குடிப்பதற்கு தண்ணீருக்கும்

அதை நிரப்ப

ஒரு கோப்பைக்கும்

நீ அலைவதைக்கூட

நான் அறியமுடியாதிருக்கிறது.

------------------------------------------------

http://deebam.blogspot.com/2008/09/blog-post_18.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன்

மலட்டுத்தன்மை, சட்னி செய்வது ஆகிய இரண்டு குறிப்புக்களும் என்னால் தரப்பட்டவையே. மலட்டுத்தன்மையைப்பற்றியது மருத்துவக்குறிப்பு அல்லவே தவிர பாலியல் குறிப்பு அல்ல. அந்தக்குறிப்பு எங்கள் சமூகத்துக்க்கு எந்த வழியில் உதவுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளேன்.

மேலும் இந்த நாட்டில் பல சுமைகளாலும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் சாப்பிடும் ஒரு நேர சாப்பாடையாவது வாய்க்கு ருசியாகச் சாப்பிட எனக்குத்தெரிந்த சமையல் குறிப்பை கொடுத்தது நான் தப்பென்ன்று நினைக்கவில்லை.

இப்படியான குறிப்புக்களைக் கொடுப்பதனால் தாய் நாட்டில் மக்கள் படும் கஸ்ரங்களை நானோ என்னைப் போன்றோரோ நினைப்பது இல்லை என்று அர்த்தமில்லை, காரணம் தாய் நாட்டில் கஸ்ரப்படும் மக்களில் அவரவர் சொந்த உறவுகளும் உள்ளடங்கியுள்ளன என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இரண்டாம் கட்ட ஈழப்போரின் காலகட்டத்தில் சிறுவனாக போரின் பலவடுக்களையும் சுமந்து இந்த நாட்டுக்கு வந்தவன் நான், என் படைப்புக்களில் இருந்து தமிழ் மொழியிலும், தாய் நாட்டிலும் இருக்கும் பற்றை நீங்கள் அறியவேண்டும் என விரும்புகிறேன். மனம் பல வழிகளால் களைப்படைந்து இருப்பவர்களுக்கு என் கவிதைகளால் இதமாக வருடுவதற்காகவும் நான் சில ஆக்கங்களை தந்துள்ளேன்.

இப்படியான பொழுதுபோக்கு, மருத்துவம், சமையல் போன்ற ஆக்கங்களைத் தருபவர்களை நாட்டுப்பற்ரு அற்றவர்கள் என்று மட்டும் சொல்ல வேண்டாம். உங்கள் கருத்து என் போன்றோரை காயப்படுத்தியது போல என் கருத்து உங்களை காயப்படுத்தியிருக்காது என நம்புகிறேன்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்

மலட்டுத்தன்மை, சட்னி செய்வது ஆகிய இரண்டு குறிப்புக்களும் என்னால் தரப்பட்டவையே. மலட்டுத்தன்மையைப்பற்றியது மருத்துவக்குறிப்பு அல்லவே தவிர பாலியல் குறிப்பு அல்ல. அந்தக்குறிப்பு எங்கள் சமூகத்துக்க்கு எந்த வழியில் உதவுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளேன்.

உங்கள் கருத்து என் போன்றோரை காயப்படுத்தியது போல என் கருத்து உங்களை காயப்படுத்தியிருக்காது என நம்புகிறேன்.

இளங்கவி

உங்கள் பயனுள்ள மருத்துவக் குறிப்பிலும், சமையற் குறிப்பிலும் வந்த கருத்துக்களைப் பார்த்ததன் விளைவினால்தான் மேற்குறித்த கருத்து எழுதப்பட்டது. அதற்காக உங்களைத் தாக்கி எழுதியதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. உங்களின் நோக்கம் சரியாக இருந்தால் நீங்கள் காயப்பட வேண்டிய அவசியமில்லை. :icon_idea:

மேலும் மேலும் பயனுள்ள குறிப்புக்களையும் ஆக்கங்களையும் தாருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kirubans

நான் நல்ல நோக்கத்தில் கொடுத்த குறிப்புகளுக்கு வாசகர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியுமே தவிர வாசகர்கள் என் குறிப்பை வைத்துக்கொண்டு தங்களுக்கிடையில் பரிமாறும் கருத்துக்களுக்கு நான் எப்படிப் பொறுப்பாளியாக முடியும் அது என் கட்டுப்பாட்டில் இல்லையே. இதற்காக குறிப்பு கொடுத்தவரைப் பார்த்து நீ கொடுத்த கருத்தால் தான் இப்படி நடக்கிறது என்று சொல்வது....?. எப்படியோ உங்கள் கருத்துக்கு நன்றி

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.

கவிதை:தீபச்செல்வன்

ஆள்களற்ற நகரத்திலிருந்த

ஒரே ஒரு தொலைபேசியில்

இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்

கூரை கழற்றப்பட்ட

மண்சுவரிலிருந்த

நாட்காட்டியும் கடிகாரமும்

புதைந்து கிடக்கிறது.

பூவரச மரத்தின் கீழ்

உனது கடைசி நம்பிக்கை

தீர்ந்து கொண்டிருக்கிறது.

எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்

கைவிடப்பட்ட படலைகளிலும்

மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.

உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்

கேட்க முடியவில்லை

ஐநாவில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்

உனது மொழி

நசிபட்டுக்கொண்டிருந்தது

அழுகையின் பல ஒலிகளும்

அலைச்சலின் பல நடைபாதைகளும்

சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட

தலைகள் அசைந்து கொண்டிருந்தன.

கைவிட்டுச்சென்ற

கோழியும் குஞ்சுகளும் இறந்துகிடக்க

வெறும் தடிகளில்

தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்

அழுதபடியிருந்தன.

நேற்றோடு எல்லோரும்

நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஐநாவின் உணவு வண்டியை

துரத்திச் சென்ற சிறுவனின் பசி

ஓமந்தை சோதனைச்சாவடியில்

தடுத்து வைக்கப்படுகையில

குண்டைபதுக்கிய அமெரிக்கன்மாப்பையில்

உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.

வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல

பார்த்துக்கொண்டிருக்கிறாய்

இன்று நள்ளிரவோடு

வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்

அறிவிக்கப்படுகையில்

மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு

நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.

http://deebam.blogspot.com/2008/10/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்

கவிதை:தீபச்செல்வன்

01

வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது

பூக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.

இந்த நகரத்தின் பெருஞ்சுவர்களை

அழித்த பிறகு

வீடுகளை புதைக்கிற

நிகழ்வு அறிவிக்கப்படுகிறது

பூக்கள் பற்றிய கனவு உதிர

வரிசையாய் போடப்பட்ட கதிரைகளை

உடைத்துதெறிக்கும் தீர்வு வருகிறது.

பூக்களை உற்பத்தி செய்யும்

நகரத்தை அழிப்பதற்கு பிரகடனத்தை

அறிவித்தபொழுது

புரதான பெருஞ்சுவர்கள் அதிர்ந்து போயின.

விமானங்களுக்கு பலிகொடுக்கப்பட்ட

மேசைகள் உடைந்து கிடக்கும்

வெடித்துச் சிதறிய கண்ணாடி மாளிகைகளில்

அருந்திவிட்டுப்போன

தேனீரின் மிச்சம் காயாமாலிருக்கிறது.

எல்லோரும் வந்திருந்து பேசிய

கதிரைகளை உடைத்துவிட்டுப்போகையில்

அருகிலிருந்த மாமரங்கள் முறிந்து விழ்ந்தன.

யுத்தத்தின் விதி புதியதாய் இயற்றப்பட்டு

மாறிக்கொண்டிருந்தது.

மூன்றாவது போர் முடிந்தபொழுது

எழுப்பப்பட்ட மாளிகைகள்

மீண்டும் தகர்ப்பதற்கான

நாலாவது போர் ஒளிந்திருந்தது.

02

ஷெல்கள் வந்து விழும்

நகரத்தின் மையத்திலிருக்கும்

மருத்துவமனையில்

காயமடைந்து வந்து சேர்ந்த

நோயாளியின் அதிருகிற தெருவின்

அழும் குரலில்

ஒரு பெரிய சனக்கூட்டத்தின்

ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தது.

பூக்கள் பற்றிய கனவிலிருந்து

வெளியேறும் தருணம் வருகிறது.

இந்த நகரத்தோடும்

சனங்களின் மரணத்தோடும்

துப்பாக்கி அணிந்து வீழ்ந்த போராளிகளோடும்

பூக்களின் நகரம் பற்றிய கனவு

முடிந்துபோய்வடுவதாய் கருதப்படுகையில்

அரசுகளின் யுத்தக்கனவில்

இனநிலவெறி நாடு ஆடுகிறது.

எல்லோரும் பயங்கரவாதிகள் என்று

அறிவிக்கப்படுகையில்

எஞ்சியிருந்த பூக்கள் உதிர

நகரத்தை அழிப்பதற்கான பிரகடனம் கேட்கையில்

உடைந்த கதிரைகள் மேலும் உடைய

அதன் கைகளிலும் துப்பாக்கிகள் முளைத்தன.

வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது

பூக்களின் நகரம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.

http://deebam.blogspot.com/2008/10/blog-post_06.html

  • கருத்துக்கள உறவுகள்

The war begins from the Childen’s dreams

by deebachelvan

01.

The militants

withdrew from Madhu.

The war begins

from the dreams

of children

who ate poisoned food

In the numberless evacuations

which make

movement difficult

thier kit bags lost

people crowd under trees.

The war hasn’t broken out.

02

The militans have withdrawn

from Iluppaikadavai.

The State’s war

comes

chasing the terrorists

Some children

drenched the whole night

under the trees

have gone to the front

When the children felt

the thrust of war

the exam papers

slipped from their hands

and fluttered away

By the time

the dry plates

and the clothes

had slipped

from the people under the trees

The President’ statement

gloating over his victory

was released

03

The militant’s withdrew

From Vidathalthivu.

The pamphlets

she aircrafts dropped

startled the children

who were dreaming of

roast peanuts.

All should know

about war.

04

The militants withdrew

from Mulankavil

In the security web

appeared pictures

of captured villages

all ravaged.

We saw

beheaded coconut trees

broken cooking pots

abandoned graves

The war had chased everyone

It had entered every nook

05

People were chased away

from Mallavi and Thunukkai

When the war began

to capture a temple

We lost our very hands

that would rise in prayer

nay, we lost our prayers

The state opened refugee camps

The monsoon will come

We wait under the trees

to get drenched

to be washed away

The bunds

of Vavunikkulam

are damaged

Kilinochchi is now

a city of refugees

Pali will rise to inundate the fields.

The war begins

from the dreams

of children

who ate poisoned food.

http://edeebam.blogspot.com/2008/10/war-be...ens-dreams.html

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு நின்றுவிடாமல் உங்கள் கவிதைகளைத் தொடர்ந்தும் மொழிமாற்றம் செய்யுங்கள் தீபச்செல்வன். இவை காலத்தின் தேவை.

கிருபன் யார் இந்த தீபச்செல்வன் நீங்களா? அல்லது உங்களுக்குத் தெரிந்த நண்பரா? தீபச்செல்வனின் படைப்புகளுக்குத் தலை வணங்குகிறேன். நன்றி

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் யார் இந்த தீபச்செல்வன் நீங்களா? அல்லது உங்களுக்குத் தெரிந்த நண்பரா?

தீபச்செல்வன் கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் படித்து வருகின்றார் என்றும் அவரின் பேட்டி மூலம் தெரியவந்தது. அவரின் வலைப்பதிவில் கவிதையாக வரும் தற்போதைய மக்களின் அவல நிலைமைகளை வெட்டி இங்கு ஒட்டுவதைத் தவிர அவருக்கும் நமக்கும் எதுவித தொடர்பும் இல்லை. சிறந்த சமூக உணர்வுள்ள கவிஞர்களின் கவிதைகள் எதிர்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் பேசப்படும். அவர்களில் தீபச்செல்வனும் ஒருவராக நிச்சயம் இருப்பார்.

அவருடைய பேட்டியையும் இணைத்துள்ளேன்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=45199

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்

கவிதை:தீபச்செல்வன்

குழந்தையை படுக்கையில் வைத்து

தின்று முடித்த பாம்பு மெல்ல நகர்ந்து செல்கிறது

பாம்புகள் காடுகளை நிறைத்துவிட

காடுகள் மழையை நிறைத்துவிட

மழை இரவை நிறைத்துவிடுகிது.

உன்னைப்பிரிந்த சூரியன் எழும்பியிராத

கறுப்புக் காலையின் நாள்

மீண்டும் வருகிறது

கடைசியாய் அருந்திய தேனீர்

நீ ஊட்டிய கேக்

தீர்ந்து பசியெக்க தொடங்கிய நாள் வருகிறது

நீ என்னைப் பெற்றதும்

நான் உன்னைப் பிரிந்ததுமான நாள்

மெல்ல மெல்ல வந்துவிடுகிறது.

நீ எனது புத்தகங்களை விட்டுச்சென்றிருக்கையில்

நனைந்தழிந்த புகைப்படங்களின் குறையில்

எனது முகம் தேடுகிறாய்.

முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தன

குளங்கள் வற்றிவிட

ட்ராங்கிகள் நீந்துகின்றன

ஒவ்வொரு ஊரும் நகரும் வீழ்கிற பொழுது

உன்னைப்பிரிந்த வலியெடுக்கிறது.

குளங்களை படைகள்

குடித்து விட்டு எறிகிற எறிகனைகள் விழும்

மரங்களின் கீழே

உன்னை தின்பதற்காய்

அலையும் பாம்புகளை கண்டேன்.

தூக்கமும் கண்களும்

மழையில் தொலைந்து விடுகிறது

குழந்தைகளை பாம்புகள் இழுத்துச்செல்வதாய்

இறுக அணைத்துக்கொள்கையில்

மழை தாய்மாரை இழுத்துச் செல்கிறது.

மரங்களின் வேர்களினிடையே

உன்னோடு பொறுத்துவிடுகிற

எனது புகைப்படங்களில் பாம்புகள் அசைகின்றன

சமையல் பாத்திரங்களில் பசி நிரம்பியிருந்தது.

முதலைகள் மாமரத்தை தின்றுவிட

மழை வீட்டை தின்றுவிடுகிறது

படைகள் கிராமத்தை தின்று விடுகின்றனர்

முழுக் குழந்தைகளையும் தின்பதற்காய்

சருகுகளினிடையே பாம்புகள் காத்திருக்கின்றன.

உன்னைப்பிரிந்து வந்த எனது பிறந்தநாள்

தாங்கமுடியாத

தோல்வியையும் அவலத்தையும் நிறைத்து

மழையில் நனைந்த

அடுப்புக்கற்களினிடையில் கிடக்கிறது.

---------------------------------------------------------------------------

24.10.2008 அம்மாவை பிரிந்த எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து

---------------------------------------------------------------

http://deebam.blogspot.com/2008/10/blog-post_22.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நம்மைத் தொடருகிற போர்

கவிதை:தீபச்செல்வன்

01

போரே தீர்வென்று கோடுகளின் கீழாய்

எழுதிச் செல்கிறேன்

எல்லாம் மாறி உடைத்த பொழுதும்

போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை

யுத்தம் உன்னையும் என்னையும்

தின்பதற்காய் காத்திருக்கிறது

காலம் நம்மிடம் துப்பாக்கியை

வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது.

கருத்தப்பூனையைப்போல

கருணாநிதி

மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்

நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து

பூனைகள் வெளியேறுகின்றன

வாய் கட்டப்பட்டவர்களின்

பேரணிகளிலும்

பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.

புல்லரித்து முடிந்த நிமிடங்களில்

வாய்களை மூடும் தீர்வு போரைப்போல வருகிறது

முப்பது வருடங்களை இழுபடுகிற

போரை உணவுப்பைகளில்

கறுத்தப்பூனைகள் அடைக்கின்றன.

02

போர் தீர்வென்று வருகையில்

நமக்கு போராட்டம் தீர்வென்று மிக கடினமாக

ஏற்றுக்கொள்ளப்பட்டோம்

விமானங்களை நம்பியிருக்கும்வரை

குண்டுகளை நம்பியிருக்கும்வரை

துப்பாக்கிகளை நம்பியிருக்கும்வரை

நாமது கைகளிலும் துப்பாக்கிகள் வந்தன

நமது பதுங்குகுழி விமானமாய் பறக்கிறது.

போர்க்களங்களில் தீர்வுகள்

இலகுவாகிவிட்டன

நீயும் நானும் பெற்றெடுக்கும் குழந்தை

உயிர் துறக்கப்போகும் இந்தப்போர்க்களம்

நம்மோடு முடிந்துபோகட்டும்

விமானங்கள் மனங்களை தீர்மானித்து விட்டன

மிகக்கொடுரமான அனுபவத்திலிருந்து

நமது விமானங்கள் எழும்புகின்றன

எனது காயத்திலருந்து வெளியேறுகிற

குருதி காவலரணை கழுவுகிறது

03

ஓவ்வொரு செய்தியின் கீழாயும்

மறைக்கப்பட்ட குறிப்புக்களை நீ கண்டாய்

அதன் மேலொரு கோடு கீறினேன்

பயங்கரவாதிகளை அழித்துச் சென்ற

விமானங்களின் கீழாய்

பள்ளிச்சிறுவனின் முகம் பதிவுசெய்யப்பட்ட

புகைப்படத்தை நீ கண்டாய்

விமானங்களும் அதன் இரைச்சல்களும்

நம்மை மிரட்டிக்கொண்டிருந்தன

ஒரு விமானத்தைப்போல ஜனாதிபதி பேசுகிறார்

ஒரு எறிகனையைப்போல

இராணுவத்தளபதி வருகிறார்.

கருணாநிதி ஒரு கிளைமோரை

பதுங்கியபடி வைத்துச்செல்கிறார்

04

அழுகை வருகிறது

தோல்வியிடம் கல்லறைகள்தானே இருக்கின்றன

எனினும் இந்த மரணம் ஆறுதலானது

அதில் விடுதலை நிரம்பியிருந்தது

இரண்டு வாரங்களில்

எடுத்துப்பேச முடியாத போரை

நாம் முப்பது வருடங்களாக சுமந்து வருகிறோம்

நம்மிடமே நம்மை தீர்மானிக்கும்

சக்தி இருக்கிறது

மரணங்கள் பதிலளிக்கும்பொழுது

குருதியில் மிதக்கிற கதிரைகளை பிடித்துவிடுகிற

அரசியல்வாதிகளிடம்

நாம் முப்பது வருடங்களாக ஏமாறுகிறோம்.

அழகான வாழ்வுக்காய் பிரயாசப்படுகையில்

உலகம் மாதிரியான

குண்டுகள் அறிமுகமாகிவிட்டன

மிகவும் கொடூரமாக மேற்க்கொள்ளப்படுகிற

போரை எதிர்க்கும் பொழுது

துப்பாக்கிகள் வாழ்வில் ஏறிவிட்டன

நீ போரின் நுட்பங்களில் கவனம் செலுத்துகிறாய்.

05

பிரித்து ஒதுக்கி ஒடுக்கப்படகிறபொழுதுதான்

இனம் குறித்து யோசிக்கத்தோன்றுகிறது

எனக்கு இந்தக் கல்லறைகளை

எண்ணி முடிக்க இயலாதிருக்கிறது.

படைகள் புகுந்துநிற்பதாய்

கனவு காண்கையில்

தூக்கம் வராத நாட்களாகின்றன

வீட்டுச்சுவர்கள் தகர்ந்துவிட

பேய்கள் குடிவாழ்கின்ற கிராமங்களில்

திண்ணைகள் கொலை செய்யப்பட்டிருக்க

எப்படி தூக்கம் வருகிறது

அதுவே தீர்வாகையில்

கை துப்பாக்கிளை இறுகப்பிடிக்கிறது.

தீர்க்கமுடியாத பிரச்சினைகள்

போர்க்களத்தில் சுடப்பட்டுக்கொண்டிருந்தன

நம்மை துரத்துகிறபோர் மிகவும் கொடூரமானது

அதன் பின்னால்

அழிகிற இனத்தின் நகரங்கள்

புரதானங்கள் குறித்து

சன்னம் துளைத்துச் செல்கிற சுவர்களைத்தவிர

எதனால் பேசமுடிகிறது?

06

நீ போர் அழகானது என்றாய்

உன்னால் போரில் நசியமுடியாதிருந்தது

அம்மா பின்னால் நிற்க

நான் சுட்டுக்கொண்டிருந்தேன்

நான் போரை சமாளிக்க வேண்டியிருந்தது.

நம்மால் சட்டென பேசமுடிகிறது

துப்பாக்கிகளைத்தான் இறக்க முடியவில்லை

மிகவும் விரைவாக சுட்டுவிட முடிந்தது

மரணங்களின் பிறகு போர்க்களம்

அடங்கிக்கிடக்கிறது

நேற்று நம்மைப்பற்றி பேசியவர்கள்

மேடைகளைவிட்டிறங்கி

கதிரைகளில் மாறிக்கொண்டிருந்தார்கள்.

படைகளும் நகரத் தொடங்க

நாம் மீண்டுமொரு சமருக்கு

எதிராக தயாராகினோம்

சிறுவர்கள் இழுத்துச் செல்லுகிற

தண்ணீர்க் குடங்களை போர் தொடருகிறது.

http://deebam.blogspot.com/2008/11/blog-post.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு

கவிதை:தீபச்செல்வன்

சவப்பபெட்டியின் முகத்தோடிருக்கிற

சுவர் முட்டிய

அறைகளின் மூலையில்

எங்கோ இருப்பவர்களுக்காய்

தூவிய பூக்கள்

காய்ந்து குவிந்து கிடக்கின்றன.

நாளுக்கு ஒரு மாதிரியாய்

போர் வகுக்கிற வியூகங்களில்

சிக்கிக் கொண்டிருக்கிறது

நீ பிடித்துச் செல்லுகிற தெரு.

பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்

வாங்க முடியாத போன

கடைசி மாத சம்பளத்துடன்

மீண்டுமொரு மரத்திற்கு நகர்ந்தாய்

நம்மீது விழ்த்தப்போகும் குண்டுகளுக்கான

செலவு விபரங்களை

ஜனாதிபதி நமது மொழியில் வாசித்தபொழுது

மூட்டையின் அடியிலிருக்கும்

ஒரு ரூபாய் காசிலிருந்து

கர்ஜிக்கும் மிருகம் குண்டாக வெடிக்கிறது.

நம்மை போர்

துரத்திக்கொண்டேயிருக்கிறது

அதன் நீண்ட நகங்கள்

ஒடுங்கிய இரவினை கிழித்தெறிய

நீ மீண்டுமொரு கோயிலின்

தாழ்வாரத்தில் பதுங்குகிறாய்.

மிகவும் பச்சைக்காடுகள்

முழுவதுமாய் அழிய

தெருக்கள் புதைந்த மண்மேட்டினை

உடைத்து

வந்த படைகள் அக்கராயன் குளத்தை

குடித்தபொழுது

எனது கைகளும் கூடவே ஈரமாகின.

ஒரு முறை நாம்முடன் பலர் ஒதுங்கிய

பள்ளிக்கூடத்தின் கூரைகளை

கைப்பற்றிய பிறகும்

அம்பலப்பெருமாள் சந்தியிலிருந்து

மிகவும் நிலத்துக்கான

பசியோடு பற்கள் முளைத்த கொடி பறக்கிறது.

இரண்டு போராளிகளின்

சேறு ஊறிய உடல்களுடன்

கைப்பற்றப்பட்ட பதுங்குகுழியில்

இடம்பெயர மனதின்றி

இன்னும் யாரோ தங்கியிருக்கிறார்கள்.

நம்மைப் போர் விடுவதாயில்லை

உன்னையும் என்னையும்

பிரித்து வைத்திருக்கிறது

எனது கனவுகளையும் தெருக்களையும்

தின்றுவிட்டு

உன்னை மரங்களின் கீழாய்

பின் வாங்க வைக்கிறது

நிலங்களை துண்டாடிவிட்டு

பசிக்கேற்ற முகங்களை அணிந்திருக்கிறது.

மீண்டும் இரவிரவாக வரப்போகும்

விமானங்களிடமிருந்து

தப்புவதங்காய் துடிக்கிற நாய்க்குட்டியைப்போல

மரம் உனக்கு மேலாய் பதறுகிறது.

நாளை நீ பேசப்போகும்

சொற்களை தேடியலைகிற கனவில்

இன்னும் நிறைய மரங்களுக்கு கீழாய்

அதனுடன் நீ பின்வாங்குவதைக் கண்டென்.

-0-------0-------0----------0---------0---------0------0------

08.11.2008 அம்மாவின் அழைப்பிற்காய்காத்திருந்த நாள்.

http://deebam.blogspot.com/2008/11/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மிதிபடுகிற கடல்

கவிதை:தீபச்செல்வன்

seasidebj9.jpg

மடுமாதாவின் பெருமூச்சு

அடிபடுகிற

பூநகரி கடல் வெளியில்

உப்புக்காற்று

சுழன்று அவதிப்பட்டு திரிகிறது.

நொருங்குண்ட

முடியை அணிந்த மாதா

பரந்தனையும் தாண்டிப்போகிறாள்.

மிக அண்மையில்

வந்து உறுமுகிற ட்ராங்கியில்

எனது கடல் மிதிபடக் கண்டேன்.

வலைகளில்

வந்து மாட்டித்துடிக்கிற

மீன்களின் குருதியில்

டோறாக்கள் பயணிக்கத் தொடங்குகின்றன.

மெல்லிய இரவும்

மிகவும் பெரிய கடலும்

அடர்ந்த காடுகளும்

சனங்களை இழக்க வைத்த

இராணுவ நகர்வுகளிடம்

சிக்கித் தவிப்பதை நான் கண்டேன்.

மேற்குக் கடல் கரைகளை

இழக்க காயப்பட்டு துடிக்கிறது

கடற்கரைத் தெரு.

இரண்டு பெரும் தெருவின்

நடுவில்

மாட்டிப்புரள்கிற கடல்

திரும்பமுடியாத

திசைக்கு சென்றுவிடுகிறது.

மீன்பிடிக்கிற படகுகளை இழந்த

கரையிலிருந்து

கடல் எட்டிச்செல்கிறது.

தென்னை மரங்கள்

மணல் வெளியில் புதைய

ஆயுதங்கள் கொண்டு வருகிற தெரு

வீழ்ந்து நெளிகிறது.

கிராஞ்சியில் விமானத்தின் குண்டுகளில்

சிதறுண்ட குழந்தைகளின்

கைகளை படைகள் மீட்டெடுத்தனர்.

இராணுவ வண்டிகள்

மிதித்துத் திரிகிற கடலின்

மிகவும் பிரியமான கரையை

படைகள் தின்று மகிழ்ந்தாட

அதன் சனங்கள்

வெயிலில் விழுந்து துடித்தனர்.

பின் நகர்ந்த சனங்களின்

வீடுகள்

சங்குப்பிட்டிக் கடலில் கரைக்கப்பட

கைவிடப்பட்ட தனிமையுடன்

கிடக்கிறது மிகப்பெரிய கடல்.

இரண்டு இராணுவத்தளபதிகள்

மிதித்து

கைகுலுக்க முன்பாகவே

ஜனாதிபதியின் வெறிச்சொற்கள்

ஓலிக்கத் தொடங்கிய நாளில்

இறந்து போக

எனது கடல் வீழ்ந்த தெருவில்

காய்ந்து மிதிபடுவதை

நான் கண்டு துடித்தேன்.

----------------------------------------------------------------------------

14.11.2008 பூநகரி, புலிகள், பின்நகர்வு, ஆக்கிரமிப்பு

http://deebam.blogspot.com/2008/11/blog-post_17.html

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை

கவிதை:தீபச்செல்வன்

இழக்க முடியாத நிலத்தில்

ஓட்டிக்கொண்டிருக்கிற

நமது முகங்களும்

விட்டு வந்த ஊரில்

தங்கியிருக்கின்ற நம்பிக்கைளும்

நீ கூற முடியாதிருக்கிற

கதையின் பின் நெருப்பாய் கொட்டுகிறது.

உன்னை விழித்து

விசாரிக்கிற நள்ளிரவில்

சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தில்

உனக்காக

தலைவலிக்கிற பொதிகளை

நான் கனவில் சுமந்தேன்.

போர் குறித்து

நீ பேசிய கதைகளிலிருந்து

யாருமில்லாத கிராமத்தின் மௌனத்தில்

பெருந்துயர் வடிகிறது.

அண்மையில் இருக்கிற

கிராமம் ஒன்றையும்

பெரும் வீதி ஒன்றையும்

கைப்பற்றிவிட்டாதாய்

அறிவித்து விட்டு படைகள் மீள நகர்கிற

பின்னிரவில்

தடிகளில் பெய்கிற அடைமழையைப்போல

செய்திகள் வருகின்றன.

போரில் எழுதப்படுகிற கோட்பாடுகள்

முகங்களை அறுத்தெரிகிறது

மனிதாபிமானத்தின்

நடவடிக்கையில் நீ இழந்திருக்கிற ஊரை

போர் மூடி படர்ந்திருக்கிறது.

போரில் மிகவும் பிரியம்

கொண்டு வருகிற படைகளிடம்

மாட்டிவிடுகிற

உனது பதுங்குகுழிக்குள்

சண்டை நிகழ்கிறது.

நீ விலத்தியிருக்கிற போர்

உனது பழைய சைக்கிளின்

பின்னால் ஏறியிருக்கிறது

நீ போரை மேற் கொள்கிறாய்.

என்னிடம் சொல்லப்போகிற

கதைகளில் இருந்து

எஞ்சியிருக்கிற நிலத்தின்

மற்றொரு திசையில்

மூள்கிற சண்டையில் அப்பால்

ஒரு திசையில் அலைந்துகொண்டிருக்கிறாய்.

குருதி வடிகிற நினைவுக்கற்களில்

எழுதிய சொற்களின் மீது

கொடியைப் பறக்க விடுகிற

வெற்றிக்களிப்பில்

கோயில்கள் உடைய

கடைத் தெரு சந்திகளை இழந்தோம்.

முன்னரங்குகளில் மோதுகிற

ஜனாதிபதி கொண்டாடுகிற

செயின்பிளக்குகள் களங்களை திறக்க

தவிர்க்கமுடியாத போரிற்கு

சென்றிருக்கிற பிள்ளையின்

உனது நினைவுகள்

காடுகளின்

ஆற்றம் கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன.

ஏக்கம் வடிகிற இரவில்

நீ திட்டிக் கொண்டிருக்கிற போர்

உன்னை வலிந்திழுக்கிறது

நீ போரை அனுபவிக்கிறாய்.

மனிதாபிமானத்தின்

படை நடவடிக்கையில்

வயல்களிலிருந்து வயிறு வரை

தீப்பற்றி எரிகிறது.

உன்னை குறித்து

விழித்திருக்கிற அதிகாலையில்

எறிகனை பட்டு துடிக்கிற

சூரியன் ஊர் எரிகிற

புகையில் தாண்டு விடுகிறது.

அழகிய நகரங்களை

தின்று விடுகிற

படை நடவடிக்கையின்

மிகப்பெரிய வெற்றிவிழாவில்

எனது சந்தி நசிகிறது

உன்னை படைகள் நெருங்குகின்றன.

போர் எல்லாரையும் நெருங்குகிறது.

நீ எழுதாதிருக்கிற கவிதைகளிலிருந்து

உனது போர் பற்றிய

கதை தெளிவாய் கேட்கத்தொடங்குகிறது.

விட்டு வர முடியாத நமதூரில்

படைகள் கைப்பற்றிய பாலத்தின் கீழாய்

நான் உன்னுடன் மறைந்திருக்கிறேன்.

----------------------------------------------------------------------------

20.11.2008-போர், கொண்டாட்டம், நிலம், இழப்பு.

http://deebam.blogspot.com/2008/11/blog-post_23.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி

கவிதை:தீபச்செல்வன்

இப்பொழுது மிஞ்சியிருக்கிற

பதுங்குகுழியில்

பெருமழை பெய்கிறது.

அறிவிக்கப்பட்டிருக்கிற வெற்றிக்கும்

தோல்விக்கும் இடையில்

எனது நகரத்தை

நான் பிரியத்தகாத சமரில்

நகரத்தின் முகம் காயமுற்றுக் கிடக்கிறது.

நாளை அது வீழப்போவதாய்

இராணுவத்தளபதிகள் சூளுரைக்கிற

இரவில்

பதுங்குகுழியின் ஒரு சுவர் கரைகிறது.

வெற்றி இலக்கில் அகப்பட்டிருக்கிற

எனது சந்தையில்

இறைச்சிக் கடைகளை

திறக்க காத்திருக்கிற

படைகள் மண்மேடுகளில் மோத

சுவர்கள் அசைகின்றன.

நான் நேசிக்கிற நகரத்தின்

நான் குறித்திருக்கிற

பதுங்குகுழியில்

முற்றுகையிடப்பட்ட

நகரக் கடைகள் ஒளிந்திருக்கின்றன.

கால்களுக்குள் அலைகிற

வெற்றிச் சொற்கள்

போதாத இடத்தில் வந்து

ஒடுங்கியிருக்கிற

வீடுகளின் கூரைகளை

உலுப்பி களிப்படைகின்றன.

தூரத்தில் ஒரு சிறிய

நகரத்தில் நடக்கிற சண்டையில்

உடைகிற பள்ளிக்கூடத்தை

கைபற்றி

அதன் முகப்பில் நின்று

செய்தி வாசிக்கிற

படைச் செய்தியாளனின்

வெறித்தனமான வாசிப்பில்

பள்ளிக்கூட கிணறு மூடுப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட பதுங்குகுழியில்

எரியமறுக்கிற விளக்கை

சூழ்கிற ஈசல்களை

பாம்புகள் தின்று நகர்கின்றன.

சனங்கள் வெளியேறிய பெருவீதிக்கு அருகே

கிடங்குகள் விழுந்த

மைதானத்தில் காற்று முட்டிய

பந்து கிடந்து உருளுகிறது

உலகம் விளையாடத் தெடாங்கியது.

மேலுமொரு சுவர் கரைகிறது.

படைகள் வளைத்து

முற்றுகையிடும் பொழுது

மழை சூழ்கிறது

கொண்டைகளை அறுத்தெரிகிற

சேவல்கள் கூவ மறுக்கிற

அதிகாலையில்

படைகள் மேலும் நுழைய முனைகின்றன.

எல்லாச் சுவர்களும் அசைகின்றன

முன்னேற்றம் தடுக்கப்பட்ட

நகரத்தில்

மூளப்போகிற சண்டைக்கு

காத்திருக்கிற படைகளை

சனங்கள் கொதித்து ஏசுகிறபோது

வயல்களில்

கைப்பற்றப்பட்ட தெருக்கள் புதைந்தன.

படைகளிடம் வீழ்ந்திட முடியாத

எனது நகரத்தின் முகப்புக்காக

இராணுவக் கமராக்கள் அலைகின்றன.

-----------------------------------------------------------------

27.11.2008, கிளிநொச்சி, முன்னேற்றம், முற்றுகை.

http://deebam.blogspot.com/2008/11/blog-post_29.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய்களை தின்று அசைகிற கொடி

கவிதை:தீபச்செல்வன்

mrukady2wm8.jpg

உனது அப்பாவை தின்ற அதேகொடி

இன்று உனது நகர்

தேங்காய்களை தின்று அசைகிறது.

கொடூரத்தின் வெற்றிச் செய்தியில்

முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை

அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை

எந்த தேங்காய்களுமில்லை.

கற்கள் நொருங்கிய வீதியில்

கச்சான் கடைகள் கைப்பற்றப்பட

உடைந்த அடுப்புக்கள்

நெருப்பாய் எரிய

தெருமுறிகண்டி வீழ்ந்ததென

கோயில் மணிகள் துடிக்கின்றன.

தும்பிக்கையற்ற பிள்ளையாரின்

கோயில் மணியை

படைகள் அசைக்க

நான் கிடந்து எழும்பிய

மடங்கள் பின்னால் நொருங்குகின்றன.

கழற்றி விட்டிச்சென்றிருந்த செருப்புகள்

கால்களை தேடுகின்;றன.

மீண்டும் முறிகிற வேப்ப மரங்களின் கீழே

எனது சைக்கிளை விட்டு வந்தேன்.

உனது சிறுநகரம்

வீழ்ந்ததெனக் கூறுகையில்

நமதாயிருந்த வீடு இழந்தோம்.

கண்டிப்படைகள் புகுந்து

கொடி பறக்கவிடுகையில்

நமது சனத்தின் தேங்காய்

உடைத்த கைகள் கழன்றே போயின

படைகள் நீ அணியும்

திருநீற்றை பூசுகின்றன.

சந்தனத்தை உரசி பூசுகின்றன.

நாம் நெற்றிகளை இழக்க

சனத்தின் முகம் சுருங்குகிறது.

உனது அப்பா மீட்ட

தெருவில் படைகள் மிதந்து நிற்க

மீண்டும் உன் வீடு சிதைந்துகொண்டிருக்கிறது.

பிள்ளையாரையும் கைவிட்டு வந்தோம்.

புத்தரின் பிள்ளைகள்

வெறிபிடித்தலைகிற

காடுகளில் இழக்கப்பட்ட

உனது அப்பாவின்

கோயிலை புத்தரே கைப்பற்றினார்.

கொக்காவில்

காடுகளின் கீழாய் இறங்குகிறது.

வெல்ல முடியாத யுத்தம்

மற்றொரு கோயிலை பிடித்துவி;ட்டு

மீள நகரக் காத்திருக்கிறது.

இந்தக் கொடி மீளமீள அசைந்து

வலியினை கிழிறிக்கொண்டேயிருக்கிறது.

உடைந்த தேங்காய்களை நம்பிக்கை

பொறுக்கி எடுக்கிறது.

சிரட்டை சில்லுகள் கூர்மையடைகின்றன.

அடுப்புக்கள் எரிந்து கொண்டேயிருக்கின்றன.

படைகள் அசைத்து குதிக்கிற

இந்தக் கோயில்மணி

இரணைமடுக் காட்டின் மரங்கள்

கொதித்தசைய

ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.

----------------------------------------------------------------------

11.12.2008.முறிகண்டி,கைப்பற்றல்.

http://deebam.blogspot.com/2008/12/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை!உண்மை!!உண்மை!!!உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. நிச்சயம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய வரலாற்று(கவிதை) ஆவணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்

தீபச்செல்வன்

dangerkanavuni4.jpg

01.

பேய் ஓட்டிவருகிற

மோட்டார் சைக்கிள் என்னை மோதுவதை

முதலில் கனவில் கண்டேன்.

தூக்கம் குழம்பிய காலையில்

துப்பாக்கியால்

எழுதப்பட்ட சுவரொட்டி

அறையின் கதவினை

தட்டிக்கொண்டிருந்தது.

அச்சுறுத்தல் பட்ட காலையில்

தேனீரில் குருதி கலந்திருக்க

குளியலறையில்

பேய்கள் விலகிச் செல்கின்றன.

பெயர் குறிப்பிடப்பட்ட

பதினான்கு பேரும்

செல்லுகிற தெருவில்

நிறையப்பேர்களிடையில்

தனிமை எதிர் வந்தது

எல்லோரையும் தேடி

துவக்கு வெறி பிடித்தலைகிறது.

யாரும் பக்கத்தில்லாத நேரத்தில்

பின்னால் ஒருவன்

நின்று கரைய

முன்னால் நிறையப்பேர்

குதிக்கிறார்கள்

கண்கள் பெருத்தலைகின்றன.

தெரு குறித்து நிறைய

ஆசையிருக்கிறது

சுருங்கிய பகலில்

கத்திகள் கூர்மையுடன்

பசித்திருக்கிற கரைகளிலிருந்து

சைக்கிள் வெட்டுப்படுகின்றன.

பேய்கள் ஒட்டுகிற

மோட்டார் சைக்கிள் என்னை

பின் தொடருகிற

மாலைக்கும் இரவுக்கும்

இடையில்

நான் மறுநாட் கலையை இழந்தேன்.

இன்று அச்சுறுத்தப்பட்ட காலையாகி

இருளத்தொடங்கியது.

தூக்கம் கலைத்து

கொலை செய்த சுவரொட்டி

என்னை தின்றபடி

நகரமெங்கும் திரிகிறது.

02.

உன்னையும் தங்கச்சியையும்

எல்லாவற்றையும்

உருவி எடுத்த வெள்ளம்

அதே காலையில் என்னையும்

மூழ்கடிக்க காத்திருந்தது.

நெத்தலி ஆறு தருமபுரம் ஆறாகி

உனது தடிகளான வீட்டை

பறித்துச் செல்கிறது.

எல்லோருடைய கண்ணீரும் குருதியும்

கரைந்து கொண்டிருக்கிற

கனவுகள்

ஆறுகளை மீறி எழுந்தன.

நீ வெள்ளத்தின் துயரங்களை

கூறிக்கொண்டே இருக்கிறாய்.

என்னை விழுங்க காத்திருக்கிற

வெள்ளம் குறித்து நான் எதைப்பேசுவது?

அகதிகளை மேலும் அகதிகளாக்கும்

மழையில் நான் அலைந்தேன்

எனது நகரத் தெருவின் இடைகளில்

உன்னையும் தங்கச்சியையும்

கொட்டும் அடைமழையில் கண்டேன்.

பெருமழையில் மோதுகிற

போராளிகள் உன்னை மீட்க

வெள்ளத்தினிடையில்

எனது முகம் கண்டாய்

உனது கண்ணீரும் அழுகையும்

வெள்ளமாகி

படிகளால் ஏறி

எனது அறையில் நுழைந்தது.

போர் அலைக்கிற தெருவில்

பெய்த மழையும் சூழ்ந்த வெள்ளமும்

உன்னை அச்சுறுத்த

'இறுதி' என மிரட்டுகிற

மரணப் பட்டியலில் நான் தெரிவு செய்யப்பட்டிருப்பதை

எப்படி நான் உன்னிடம் சொல்லுவேன்?

நமக்கிடையில்

வற்றாத வெள்ளம் அடித்துப்பாந்து சூழந்திருக்க

பெருமழை தொடர்ந்து பெய்கிறது

அடிமைப்படுத்த முனைகிற

அதிகாரம் மற்றும் அதன் வியூகங்கள் போல.

24.11.2008 "இறுதி எச்சரிக்கை" என்கிறது மரண அச்சுறுத்தல் நோட்டீஸ்

http://www.keetru.com/literature/poems/deebachelvan_9.php

  • கருத்துக்கள உறவுகள்

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்

கவிதை:தீபச்செல்வன்

kilanthaiqv0.jpg

வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்

மறைந்திருக்கிற தரையில்

சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க

யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொழுவங்கள்

எம்மிடம் இல்லை.

வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை

நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்

இல்லாமல் தடிகளில் உறங்குகிற

குழந்தைகளை

வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன

ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்

குழந்தைகளை நாம் கட்டுக்குள்

கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது

தூக்கத்தில் பறி எடுத்த

குழந்தையை விமானம் தின்று

வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை

இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத

வலிகளான தொழுவங்களில்

போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன

நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்

இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்

நம்முடன் எங்கு வரப் போகிறீர்?

வெட்டுப்பட்ட சொற்களுடன்

நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்

நீர் சுமந்திராத

சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு

இரை தேடுகிற நாட்களில்

இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்

தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.

--------------------------------------------------------------

20.12.2008. வன்னி. குழந்தைகள். யேசுபிறப்பு.

http://deebam.blogspot.com/2008/12/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தொடருகிற மேலுமொரு இரவு

தீபச்செல்வன்

குற்றம் சாட்டப்பட்டிருக்கிற இரவு

என்னை வெளியில் விடுகிறது.

பாதியில் திரும்பி விடுகிற தெருவில்

என்னை யாரோ தேடிவர

குறையில் கீழே போட்டு நசித்த

சிகரட்டை மீட்டுச் செல்கிறார்கள்.

பயங்கரம் மிகுந்த இரவில்

நான் போர்த்தியிருக்கிற

போர்வையின் வெளியில்

யாரோ உலவித்திரிகிறார்கள்.

அறைக்கு மேலாய் பறக்கிற

ஹெலிகாப்டர்

கனவில் புகுந்து

ஒரு குடியிருப்பை தாக்குகிறது

தூக்கம் போராகிவிட

பகலை துவக்கு தேடித்திரிகிறது.

தடைசெய்யப்பட்ட சொற்களை

எழுத தொடங்கிய மேசையில் அதனுடன்

பேனையும் தாளும்

என்னை விட்டு விலகுகிறது.

இரவு ஒரு முகமூடியை அணிந்து

மிரட்ட அதனிடையில்

கறுத்தத் துணியால் மூடிய மோட்டார் சைக்கிள்கள்;

சுற்றிக் கொண்டிருக்கின்றன.

தெருக்கள் சுருங்கிப்போயின.

குறைச் சிகரட்டோடு வருகிற

கடித்தில் சவப்பெட்டி வரையப்பட்டிருந்தது

புத்தக மேசை கடலில் குதித்துவிடுகிறது

மரணம் பற்றி வழங்கப்பட்ட

தீர்வை குறித்து

என்னால் எதையும் கூறமுடியவில்லை.

கதவு பயத்துடனிருந்தது

பயம் விளைவித்த சொற்களை

துவக்கு பயமுறுத்தியது.

சொற்களால் எல்லாவற்றையும்

கடக்க முடிகிறது.

இலக்கங்கள் அச்சுறுத்துகிற

தொலைபேசியில்

நான் தொடர்ந்து பேசுகிறேன்.

துவக்கின் அதிகாரம் சிரிக்கிற சத்தத்தில்

வழமையாக

விலகிச் செல்கிற தெருவில்

தவறவிடப்பட்டவனைப் போலிருக்க

இந்தக் சொற்களுடன்

மேலுமொரு பகல் முடிந்து போகிறது.

தெருவில் சொற்கள் தனித்திருக்கின்றன

இறந்த பகலை மேலுமொரு இரவு தொடருகிறது

http://www.keetru.com/vizhippunarvu/dec08/deepaselvan.php

  • கருத்துக்கள உறவுகள்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

கவிதை:தீபச்செல்வன்

IMG321-1230461976.jpg

சிலவேளை மாடுகள்

பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.

மேய்ச்சல் தரைகளில்

குண்டுகள் காத்திருந்தன.

மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.

மிஞ்சியிருக்கும் இரண்டு

மாடுகளின்

சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.

மாதாவின் தலை

அவளது கைகளுக்கு

எட்டாமல் விழுந்திருக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.

தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்

வாழுகிற மாடுகளாயிருந்தன.

தடைசெய்யப்பட்ட

குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.

ஒரு குழந்தை

வாய்க்காலில் மறைந்து

தப்பியிருக்க

மாட்டுக்கன்றுகள்

பால் காயு முன்பாகவே

இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்

எந்தத்துவக்குகளும் இல்லை.

இராணுவ உடைகளையும்

அணிந்திருக்கவில்லை.

வெடித்துச் சிதறிய குண்டு

மாடுகளை அள்ளி எடுத்த

பட்டியில்

துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.

சிதறிய சதைகளை

தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்

நாய் ஊழையிடுகிறது.

பாலுக்கு அழுகிற குழந்தை

தலை துண்டிக்கப்பட்டிருக்கிற

மாதாவை தேடுகிறது

இறந்த பசுவை

தேடுகிற கன்றினைபோல.

காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்

பட்டியிலிருந்தும்

மேய்ச்சலுக்காய் திரிந்த

தரைகளிலிருந்தும்

குருதிதான் பெருக்கெடுக்கிறது.

மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?

பசுக்கள் குழந்தைகளுக்கு

பாலினை கொடுத்தது

பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.

வாய்களை மீறி

மாடுகளிடம் அழுகை வருகிறது.

அவைகள் எதையும் பேசப்போவதில்லை?

குண்டுகளோடும்

கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்

அதிகாரத்தோடும்?

மாதாவிடமும் எந்த

திருச்சொற்களும் இல்லை.

மாதாவும் மாடுகளும்

வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க

மேய்ச்சல் தரைகளில்

மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.

---------------------------------------------------------------------------

24.10.2008. குஞ்சுப்பரந்தன், மதாகோவில், 85 மாடுகள்.

http://deebam.blogspot.com/2008/12/blog-post_26.html

மிக மிக வீச்சு கொண்ட கவிதைகள்.... துயரத்தின் மொழியில் போரின் வலியை பகிரும் அருமையான கவிதைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.