Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைமலையடிகளின் தலித் விரோதம் - பெரியார் இயக்கத்தின் கடும் எதிர்ப்பு

Featured Replies

பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள்.

ஒருமுறை மறைமலையடிகள் - நந்தனாரைக் குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்;

"பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவினை (பசு மாட்டை) அச்சாதியர் கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர். இங்ஙனம் மிகக் கொடியதான புலையொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடையலாயிற்று." என்று எழுதியிருந்தார்.

இதைக் கடுமையாக கண்டித்தது பெரியார் இயக்கம். பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞரான சுயமரியாதைச் சுடர் 'கருவூர் ஈழத்து அடிகள்' மறைமலையடிகளைக் கண்டித்து இப்படி எழுதியிருந்தார்;

"இதில் பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போலல்லாமல், தேவர்கள் எல்லாரும் ஒருங்கே குடியிருக்கும் இடம் பசுவின் உடம்பு என்பதை, ........... எண்ணிப் பாராது அதனைக் கொன்று தின்னுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை அடிகளார் பறையர் மீது ஏற்றுகின்றார்.

தேவர் எனப்படுவார் யாவர் என்று அடிகளார் எடுத்துக் காட்டவில்லையாயினும், ஆரியர் வேதங்களிற் பேசப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களையே அடிகளார் குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்னறால், தமிழ்நாட்டில் தேவர்கள் என்ற ஒரு பிரிவினர் இருப்பதாகக் கொள்வதற்குக் கருவியாதுமில்லை.

தமிழ்நாட்டிலுள்ள கள்ளர்-மறவர்-அகம்படியார் என்ற பிரிவிருட் சிலர் தங்களை 'தேவர்' என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் எவரும் பசு மாட்டைத் தங்கள் குடியிருக்கும் வீடாகப் பயன்படுத்தாமல், மற்றை மக்களைப் போலவே அவர்களும் நிலத்தின் மீது வீடுகள் அமைத்து அவற்றிலேயே குடியிருக்கிறார்கள். ஆதலால், அடிகளார் கூறும் தேவர்கள் ஆரியர் நூல்களிற் காணப்படும் தேவர்களையே என்பது பெறப்படும்.

முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாரும் ஒரு பசுவின் உடம்பில் இடம்பெற்றுள்ளனரா? அல்லது பகுதி பகுதியாகப் பிரிந்து ஆசியா-அய்ரோப்பா-அமெரிக்கா முதல் இந்நிலவுலகிலுள்ள பசுக்கள் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளனாரா?

அன்றித் தனித்தனி ஒவ்வொரு பசுவிலும் இத்தனை இத்தனை தேவர் விழுக்காடு இடம்பெற்றுள்ளனர், என்று கணக்கிடப்பட்டுள்ளதா? இங்ஙனம் பசுவின் உடம்பில் குடியிருக்குந் தேவர்கள், எந்த முறையில் அதன் கண் வாழ்கின்றனர்? அவர்களுக்கு உணவு எப்படி கிடைக்கிறது? அவர்களின் படுக்கையறை முதலியன எந்த முறையில் பசுக்களின் உடம்பில் அமைந்துள்ளன? என்பன போன்ற அய்யப்பாடுகள் எம்மால் தெளிந்து அறியுமாறில்லை. இவற்றை அக்கதையை நம்பும் அடிகளார் போன்றோர் விளக்குதல் நலம்.

"பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் அய்ந்துஞ் சிவனுக்குப் பயன்டுவதாக ஆராய்ச்சி அறிவு நிரம்பிய அடிகளாரே ஒப்புக் கொள்கிறார் என்றால், அதைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. கோயில்களிற் காணப்படும் சிவ வடிவம், கல் செம்பு முதலியவற்றால் அமைக்கப்பெற்ற வடிவங்களேயாதலால், அவை, அவற்றை சாப்பிடுகின்றன எனறு சொல்லுதற்கில்லை.

ஒரு வேளை சிவனை வழிபடும் அடியவர்களின் அன்பு வலையிற் சிக்கிப் பால் முதலான பொருட்களைச் சாப்பிடும் வடிவத்தை உடையவராகி, அவற்றைச் சாப்பிட்டு அடியவர்களை மகிழ்விக்கிறார் சிவன் என்று வைத்துக் கொண்டாலும், பால், தயிர், நெய் என்னும் மூன்றையுஞ் சாப்படுவரேயன்றி சிறிநீரையுஞ் சாணியையும், அடியவர்கள் எவ்வளவு அன்பு காட்டிக் கொடுத்தாலும் அவற்றைச் சாப்பிடுவாரா? சாப்பிடத்தான் முடியுமா?"

"தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டுச் சேரிப்புறங்களிலும் மலைப்புறங்களிலும் வாழ்ந்துவரும் ஏழைத் தமிழ்மக்கள் எல்லாரும், இந்து மதக் கோட்பாட்டுக்கு மாறாகக் கல்வி கற்க முயன்றவர்களும்-வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் முயன்றவர்களும்- பார்ப்பனர்களை மதியாது நடந்தவர்களும்- இந்துமதக் கடவுளரை வழிபட மறுத்தவர்களும ஆன வீரத் தமிழ்ப் பெருமக்களே" என்று பதில் எழுதினார் கரூவூர் ஈழத்து அடிகள்.

* சைவசமயத்தை நோக்கி பெரியாரும், பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கற்று வெறும் அவதூறுகளையும் சவடால்களையுமே அள்ளி வீசினார்கள் சைவப் பழங்கள்.

'தாங்கள் உயர்ஜாதிக்காரர்கள்' என்று அவர்கள் எவ்வளவு முக்கினாலும், 'பார்ப்பனர்களுக்கு இவர்கள் சூத்திரர்கள்தான்' என்கிற உண்மையை அவர்களுக்கு உணர்த்தியவர் பெரியார். வயித்து வலி தாங்காமல் மதம் மாறுன, வயதுல மூத்த திருநாவுக்கரசரை விட சின்னப் பையன் ஞானசம்பந்தனை, 'பெரிய கில்லாடி' என்று அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளதே, அவர்களின் சூத்திர மனோபாவத்துக்கு சாட்சி, என்று நிறுவியது பெரியார் இயக்கம்.

காதலாகிக் கசிந்து கண்ணீர்

மல்கி ஓதுவார் தமை

நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்

பொருளாவது நாதன்

நாமம் நமச்சிவாய வே.

என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?

இதோ தந்தை பெரியார் சொல்கிறார்: “சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டேயெல்லாம் நான் படுக்கணும்’ என்று. கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று”

இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது. நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தைப் பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,

“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

* சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை. அதனால்தான், சிதம்பரம் கோயிலில் பெரியவர் ஆறுமுகசாமி தேவாரம் பாடப் போன போது, அவருக்கு ஆதரவு தராமல் அமைதிகாத்தார்கள் தேவாரம், திருவாசக்தை தன் உயிர் மூச்சாகக் கொண்ட ஆதினங்கள்.

ஆதினங்களின் இந்த பேரமைதிக்குப் பின் இருக்கிறது, பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். பகிரங்கமாக தெரிகிற அந்த ரகசிய அரசியல் இதுதான்.

ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகச்சாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவறைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள்.

அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்குக் காரணம்.

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.

* பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த, தமிழறிஞரான 'கருவூர் ஈழத்து அடிகள்' 1941ல் 'பெரிய புராண ஆராய்ச்சி' என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

'தேவாரம், திருவாசகம் பாடிய நால்வர் காலத்தில் ஒழிக்கப்பட்ட சமண சமயம், அநபாய சோழன் காலத்தில் மீண்டும் தலைதூக்கியது. சமண சமயத்தின் தாக்கத்தால் கவரப்பட்ட அநபாய சோழன், 'சீவக சிந்தாமணி' என்ற சமண மத நூலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கண்டு அஞ்சிய பார்ப்பனர்கள், சேக்கிழர் முதலியாரை தங்கள் கைகூலியாகப் பயன்படுத்தி, பெரியபுராணத்தை எழுத வைத்து பார்ப்பனியத்தையும் சைவசமயத்தையும் மீட்டுக் கொண்டார்கள் என்று நிறுவி இருக்கிறார், அந்த நூலில் கருவூர் ஈழத்து அடிகள்.

பெரியபுராணம் எப்படி பொய்யும், பார்ப்பனத் தன்மையுமாய் நிரம்பி இருக்கிறது என்பதை அதன் முரண்டுபாடுகளில் இருந்தே அம்பலப்படுத்தி இருக்கிறார். அவரின் கேள்விகளுக்கு இன்றுவரை எந்த சமய தமிழறிஞனும் பதில் சொல்லவில்லை.

* சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த தமிழறிஞர்களை ஒருபுறமும், தமிழை அதன் வராலாற்று போக்கில் புரிந்து கொண்ட பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த, தமிழறிஞர் கருவூர் ஈழத்து அடிகளை மறுபுறமும் நிறுத்தினால், அவரின் கால்தூசுக்குக் கூட பெறமாட்டார்கள் சமய சார்பு கொண்ட தமிழறிஞர்கள்.

பெரியாரின் இந்த மேடையில் இருந்து சைவ சமயத்தைச் சார்ந்த தமிழறிஞர்களைப் பார்த்து சவாலாகக் கேட்கிறேன், குறிப்பாக தன்னைத் தானே தமிழ்க்கடல் என்று சொல்லிக் கொள்கிற நெல்லை கண்ணனை பார்த்துக் கேட்கிறேன்,

பெரியபுராணம் குறித்த ஈழத்து அடிகளின் கேள்விகளுக்கு எதாவது ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு உன் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்.

* மதவாதிகள், வெறுமனே இலக்கியவாதிகள், முதலாளித்துவ கலைஞர்கள் - முற்போக்காளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் போய் ஒளிந்து கொள்கிற இடம் - கலை வடிவம், அழகியல்.

இந்த அழகியல் மதவாதிகளின் அல்லது முதலாளிகளின் கலைவடிவத்தை விட முற்போக்காளர்களின் கலைவடிவத்தில்தான் அதிகம் இருக்கு. உலகளவில், சோவியத் இயக்குனர் ஐஸன்ஸைடனிடம் இருந்து களவாடியதுதான் ஹாலிவுட் படங்களுக்கான இன்றைய நவீன வடிவம்.

80 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சியை விளக்கி அவர் எடுத்த, 'பொட்டம்கின், அக்டோபர்' போன்ற படங்கள் போட்ட பிச்சைதான் இன்று வரை ஹாலிவுட் படங்களுக்கான வடிவம்.

* முற்போக்காளர்கள் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவத்தைத் தீர்மானிக்கிறர்கள். பிற்போக்காளர்கள் மிக மட்டமான விஷயத்தைக் கூட நேர்த்தியான வடிவத்தில் தருகிறார்கள்.

தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா?

'தின்ன முடியும்' என்கிறார்கள், கம்பராமாயண அபிமானிகள். பெரியார் கம்பராமாயணத்தை எதிர்த்தற்குக் காரணம், 'மலத்தை தின்னாதீர்கள்' என்பதற்காகத்தான்.

(தொடரும்)

மூலம் - கீற்று இணையம்

http://www.keetru.com/literature/essays/madhimaran_7.php

  • தொடங்கியவர்

ஆரியர் குறித்து மறைமலை அடிகள் எழுதியவை. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை நூலில் இருந்து

http://www.infitt.org/pmadurai/mp053.html#Ch2

பௌத்த சமயத் தோற்றமும் பெருக்கமும்

இனி, இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்குதற்கு ஒரு பெருந் துணைக்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப், பௌத்தசமயம் ஆங்காங்கு விளக்க முற்றுப் பரவி வந்தமையேயா மென்பது புலப்படும்.

பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்திய நாடு முழுவதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்4. தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாங், குளிர் மிகுந்த ஆசியாக் கண்டத்தின் வடக்கேயுள்ள ஆரிய மக்களைப் போல் அத்துணை உடல் வலிமை யுடையராக இருந்திலர். உடம்பில் உரங்குன்றி யிருந்தமையால் தமிழர் தமக்குள்ளே கலாம் விளைவித்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுதலின்றிப் பெரும்பாலும் ஒருமைப்பாடு உடையராய் நாட்கழித்தனர். உடல் வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடையரா யிருந்தனர். உலக இயற்கையிலுள்ள அழகினைக் கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ்வியற்கையின் உள்ளே நுழைந்து அங்கெல்லாம் பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப் பொருளினிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ்வுலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ்வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல் வலிவின் குறைபாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுதற்கு ஒருப்படாராய்த் தனியே ஓர் இடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட் பொருளை மனத்தாற் பலகால் உறைத்து நினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்குவாராயினர்.

இவர் இவ்வாறு இருப்ப, ஆசியாவின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவுஞ் சுருசுருப்பும் உடையரா யிருந்தனர்; உடம்பு வலிவு மிகுதியும் உடைமையாலுங், குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப் பண்டங்கள் வேண்டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கப் பெறாமல், தொகுதி தொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்து போய் அங்கங்குள்ளாரொடு போர் புரிந்தும் அல்லாதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங்குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோருடன் போர் இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும் பொருட்டு அதனைப் பெறுவிக்கும் உயிர்த் துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னோரில் இறந்துபட்டவர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடும் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்று வந்த பலவகையான விலங்குகளைக் கொன்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்வி செய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர்.

(இருக்கு வேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள)

(-33-)

"இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட்

களஞ்சியங்களை ஒருங்கு சேர்த்துக் கொண்டு எம்முடன்

வாணிகஞ் செய்யாதே! (3)

செல்வத்தின் மிக்க தஸ்யுவை நீ தனியாகவே நின் குலிசப்

படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணைவருடன்

ஏகுகின்றாய்!

தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள்,

வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாகத் தப்பியோடி

அழிந்தனர். (4)

(-51-)

ஆரியர்களையுந் தஸ்யுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து

கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத்,

தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (8)

(-53-)

இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த

அந்நாளில், வங்கிரிதனுடைய நூறு கோட்டைகளையும்

நீ அழித்தன்றோ! (8)

துணைவ ரில்லாத சுசரவர்களுடன் போர்புரியும் பொருட்டு,

அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது காலாட்

களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான

இருபதின்மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய்,

நீ எல்லாவற்றையும் மேற்கடந்த தேர் உருளைகளால்

அழித்துளையன்றோ! (9)

(-103-)

இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை

ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப்படுத்துக!(9)

(-163)

தெய்வத்தை நோக்கி நினைந்த மனத்தினதாய், வலிய குதிரை

வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது.

அதற்கு உறவினதான வெள்ளாடும் அதற்கு முன் ஓட்டப்பட்டு

வந்திருக்கின்றது; இருடியரும் பாடகரும் அதன்பின் வருகின்றனர். (12)

அக்குதிரை மிகச்சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது. தன்

தாய் தன் தந்தையின் பால் வந்திருக்கின்றது.

நன்கு வரவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற்

செல்லும்: அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது

பல நன்கொடையினைத் தரும்." (13)

என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணிப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்த போது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாந் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல் போல ஆரியருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை "மிலேச்சர் ஆரியர்" என்னுந் திவாகர பிங்கலத்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட் புகுதலுந் தமிழரிற் சிலர் அவரொடு போர் புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலைகளிலுங் காடுகளிலும் போய் இருந்தனர்; சிலர் கடும் போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம்விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத் தாந் தழுவியுந், தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழத் தொடங்கினர். இவ் விருவகை இனத்தாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத்தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித்துப் பிறழ்த்தி விடாமல், அவை தம்மிற் பெரும்பான்மையவற்றை முன்னிருந்தபடியே வைத்துக் கைக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினார்.

இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ்வேள்விச் சடங்குகள் செய்ய வேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிராமணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலை செய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக் குருமார்களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்து வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றோர்கள் "இங்ஙனந் தீதற்ற உயிர்களின் உடம்பைச் சிதைத்து வேள்விகள் செய்தலாற் போதரும் பயன் என்னை?" என்று தம் ஆரிய நண்பருடன் நயமாய்க் கலந்து வழக்கிட்டு அவரிற் சிலரைத் தம்வழிப்படுத்திக் கொண்டனர்.

இங்ஙனந் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலே தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்துபோந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன5. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதுங் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமை யானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருத்தின மையானும் ஆரியர்க்குந் தமிழர்க்கும் இதன் பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ அரசகுலத்திற் கௌதமசாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத்தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுந் தூய நிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிர மாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலும் மேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தாதென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின.

மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சுதேயத்திற்6 றோன்றியதை யத்த ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்று வரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரியபெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டைநாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரிய முயற்சியில் தலைநின்றார். இங்ஙனந் திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமய விளக்கமே அக்காலத்திற் றமிழ் மொழியின்கண் அரும்பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரண மாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய அரியபெரிய திருக்குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க்குரிய அறிவாழ நுட்பப் பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

இனி, இப் பொருள்களெல்லாம் பௌத்த சமய நூல்களிலிருந்தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாருந், திருவள்ளுவநாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கௌதமர் என்னுந் தமிழ்ப் பெரியார் விளக்க வந்தமையால் அவ்வொழுக்க வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான்றோன்றோர், தமக்குந் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங் கருத்துக்களையே பௌத்த சமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம்பெற்றாராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கௌதம சாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாறே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்து போந்த மற்றை வினைச்சடங்குகளையும் மறுத்துக் கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.

இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக்கங்களுக்கும் அக்காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஐந்நூறாண்டின்கண் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேம். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கில மொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவிலியம் மிண்டோ7 என்னும் ஆராய்ச்சி உரைகாரர், "காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அ·து அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களிலுங், கொத்து வேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குந் தொழிற்களங்களிலும் எல்லாந் தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது * * * ஒரு புலவனும் ஒரு கால இயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனாவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந் தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக்காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையினியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாகும்"8 என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க.

இனி, இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூல்களெல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர்தோன்றி விளங்கப்பெறும் ஒரு தன்மையுடையவாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரிய மக்கள் செய்துபோந்த வீணான வெறுஞ்சடங்குகளிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்து நின்ற தமிழ்மக்கள், தம் பண்டையாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத் தன்மையாகுமென்றுணர்ந்து கொள்க.

இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுந் தொல்லாசிரியரால் வகுக்கப்பட்டன. இவற்றுள் 'அகப்பொருள்' என்பது ஆண்பெண் என்னும் இருபாலரையுஞ் செறியப் பொருத்துவதாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுந் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின் மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந் துன்பமுமெல்லாந் தோன்றுதற்குத் தான் நிலைக்களனாய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந் திரிபின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்9 என்பதனை அடிப்படையாகக் கொண்டு மக்களியற்கை முழுவதூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், 'புறப்பொருள்' என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமை யாதவன பல்வகை முயற்சிகளையும் முற்றுப் பெருவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப், பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கையினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்மகளையும் எடுத்து வைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவை தாம் எழுதப்படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந்திணையழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார்,

"மக்கள் நுதலிய அகன்ஐந் திணையுஞ்

சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்"10

என்று கிளந்து கூறினார்.

இனி, இதுபோற், பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலகநடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெளியே தோன்றிக் கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்புச் செயல்களைக் கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப் பண்பு செயல்கட்கு உரியார் பெயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இந்நெறி அறிவுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார்,

"புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது

அகத்திணை மருங்கின் அளவுத லிலவே"11

என்று கூறினார்.

இனி, அகம், புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச்செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகிவருமாயின் அவற்றுள்ளும் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஓர் அகவொழுக்கங் குறுகி வருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப் புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல்களிலெல்லாம் இனிது காணப்படும்.

  • தொடங்கியவர்

எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனை தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக் கொண்டு ஆராய்வோம். கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழை இருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியது தான். பெரியபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளது தான் என்று கூறினால், சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்பந்தமுண்டென்று கூறுவதைத் தவிர வேறென்ன சொல்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம். திருத்த வேண்டியது தான். சைவத்திலும் அப்படியே தான். - வ.உ.சி உதிர்த்த கருத்து.

சீர்திருத்தம் என்பது அதுதான். திருத்த முயலவேண்டும். அதைவிடுத்து எதிப்புணர்வை வளர்த்து பிரிவுகளை ஏற்படுத்தக் கூடாது.

சீர்திருத்தம் என்பது அதுதான். திருத்த முயலவேண்டும். அதைவிடுத்து எதிப்புணர்வை வளர்த்து பிரிவுகளை ஏற்படுத்தக் கூடாது.

சீர் திருத்தம் என்றால் என்ன? எதிர்ப்பு உணர்வு என்றால் என்ன?

எதைத் திருத்த முல என்ன செய்ய வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.