Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குநர் ஸ்ரீதர் மரணம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் மரணமடைந்தார்.

தமிழ்த திரையுலகில் மிக பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவரது படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை என அவர் தந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக நீளமானவை.

பல காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் இன்று மரணடைந்தார்.

நன்றி தற்ஸ் தமிழ்

அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் , தமிழ் திரையுலகினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து கொள்கின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார்.

கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

மிகச் சிறந்த படைப்பாளி:

ரத்தப்பாசம் (சிவாஜி நடித்தது அல்ல... இது ஸ்ரீதர் எழுதிய நாடகம், பின்னாளில் திரைப்படமானது) என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புது ரத்தம் பாய்ச்சியவர்.

அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.

ஸ்ரீதரின் படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும்.

நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் விலை போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.

1961ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக ரஜினியும் கமலும் உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்தது.

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர்.

சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்க முடியுமா?

திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 78வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.

தமிழ்ல் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.

கலையுலகம் கண்ணீர்:!

இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் திரையுலகிற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மிகச்சிறந்த ஒரு இயக்குனரை திரையுலகம் இழந்துவிட்டது :) அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!!!

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்போல் ஸ்ரீதரின் படங்கள் மனதுக்கு இதத்தைத் தந்து ரசிக்க வைக்கும். நான் பார்த்த வரையில் அவரது படங்களின் கதைகள் சாதாரன நடுத்தர வர்க்கத்துக்கும் சிறிது மேலான மேல்தட்டு மக்களைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும். மறைந்த எழுத்தாளர் இதயம் பேசுகிறது மணியன் அவர்களின் கதைகளும் இப்படியே. எனக்கு இருவரையும் மிகவும் பிடிக்கும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

மிக இளம் வயதினிலேயே கதை வசனகர்த்தாவாக ஆரம்பித்து பின் இயக்குனராகி தமிழ்த் திரையுலகின் போக்கில், முதன் முதலில் மாற்றத்தை ஏற்படுத்தி வித்தியாசமான படங்களைத் தந்தவர். முதன் முதலில் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்களை நடாத்தி எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் "சிவந்மண்*ணின் இயக்குனர். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையை தனது பொறுப்பில் எடுத்து, தனது நிர்வாகத் திறைமையினால் இலாபத்தில் இயங்க வைத்துக் காட்டியவர்.

இப்படி பல்வேறு துறைகளிலும் தனது திறைமைகளினால் உயர்ந்த ஸ்ரீதர் அவர்களின் இழப்பு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகிற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்புத் தான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் ஸ்ரீதர் அவர்கலின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குனர் ஸ்ரீதர் அவர்கலின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

வண்ணத்திரை உலகுக்கு

திருவை தர்மித்த ஸ்ரீமான்.

அன்னார் நிழல்கள்

நம்முடன் படங்களாக இருக்க

அன்னாரும் படமானாரோ!

அஞ்சலிகள் ஆத்மா சாந்திக்கு!

ஆறுதல்கள் ஆத்மாக் குடும்பதுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

தேன் நிலவு, காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு போன்ற நகைச்சுவைப் (காமெடி)படங்களையும், கலியாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, வெண்ணிற ஆடை, ஆடிப்பெருக்கு போன்ற சீரியஸான (ட்ராஜெடி) படங்களையும் தந்து ஒரு புதிய சகாப்தத்தைத் தமிழ்த்திரையுலகில் தோற்றுவித்த ஒரு சிறந்த சிருஷ்டிகர்த்தாவை இன்று தமிழுலகம் இழந்துவிட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்

இவரின் சினிமா மீதும், பெண் அடிமைத்தன கருத்துக்கள் மீதும் எனக்கு கடும் மாற்றுக் கருத்துகள் இருப்பினும், தமிழ் சினிமாவை வர்த்தக சினிமா சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரியவர்களின் ஒருவராக இவர் இருப்பினும் அன்னாரின் பங்களிப்பு தமிழ் திரையுலகில் இவரை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே இனம் காட்டியது.

அன்னாருக்கு என் அஞ்சலிகள்

இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் திரையுலகிற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மிகச்சிறந்த ஒரு இயக்குனரை திரையுலகம் இழந்துவிட்டது :unsure: அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

ஒ..சித்தப்புவே கவலைபடுறதை பார்த்தா..தா சித்தப்பு அவரின்ட ரசிகர் போல..ல.. :) சரி கவலைபடாதையுங்கோ சித்தப்பு நீங்களே..ளே கவலைபட்டா..டா.. :D

பெறகு நான் என்ன செய்யிறது..து இன்னைக்கு இருக்கிறோம் நாளைக்கு இருக்கிறோமோ யாருக்கு தெரியும் ஆனபடியா அவன் போயிட்டானே எண்டு நாம கவலைபட கூடாது என்ன..ன.. :( மற்றது சித்தப்பு..பு உவர் பழையபடங்கள் எடுத்தவரோ நான் இவரின்ட பேரை இன்னைக்கு தான் கேள்விபடுறன் பாருங்கோ..கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

200801qf8.png

200802sa7.png200803tw7.png

எம்.ஜி.ஆர்., சிவாஜி என நட்சத்திரங்களின் கைகளில் ஜொலித்துக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட உலகை இயக்குநர்களின் பக்கம் திருப்பியவர், இயக்குநர் சகாப்தம் கலைமாமணி சி.வி.ஸ்ரீதர். முதன்முதலில் புதுமுகங்களை மட்டுமே வைத்து `வெண்ணிற ஆடை', பத்து நாட்களில் ஒரே செட்டில் படமாக்கப்பட்ட `நெஞ்சில் ஓர் ஆலயம்', நடிகர்களுக்கு மேக்கப் போடாமல் `நெஞ்சிருக்கும் வரை', முதன்முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட `சிவந்த மண்', முதல் ஈஸ்ட்மென் கலர் படமான `காதலிக்க நேரமில்லை' என தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பல சாதனைகளைத் தொடங்கி வைத்தவர் இவர்தான்.

இருபதாண்டுகளுக்கு மேலாக உடல்நலக் கோளாறினால் அவதிப்பட்டு வந்த இந்த சகாப்தம், தனது 76-வது வயதில் திங்களன்று அடையாறு மலர் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது. நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் கண்ணீரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல், இயக்குநரை வழியனுப்ப வந்திருந்த திரைப்பட ஆய்வாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தழுதழுத்த குரலில் ஸ்ரீதர் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

``மதுராந்தகம் அருகே ஒரு குக்கிராமத்தில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீதர். `ரத்தபாசம்' என்ற நாடகத்தை எழுதி, அதை டி.கே.எஸ். பிரதர்ஸிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்து அசந்து போன அவர்கள், அதை நாடகமாக்கினர். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அந்த நாடகம், ஸ்ரீதரின் கதை, வசனத்தில் திரைப்படமானது. பின்னர், தெலுங்கிலும் இந்தியிலும் ரிமேக் செய்யப்பட்டு மூன்று மொழிகளிலும் ஹிட்டானது அந்தப் படம். இது நடந்தது 1954-ல். அதற்குப் பின், `எதிர்பாராதது', `உத்தமபுத்திரன்' என பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருந்தாலும் படம் இயக்குவதில் தனக்கு இருந்த காதலை யாரிடமும் அவர் வெளிப்படுத்தவில்லை. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், தமிழில் வெற்றிகரமான கதை வசனகர்த்தா ஆனதுதான்.

அதன்பின்பு, நண்பர்களுடன் சேர்ந்து `வீனஸ் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்கள் எடுக்க முடிவெடுத்தார். அதில் தனது கதை, வசனத்தில் உருவான `கல்யாணப் பரிசு' படத்தை தானே இயக்கப் போவதாக நண்பர்களிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஸ்ரீதரின் பிடிவாதத்தால், ஏனோ தானோ என்று சம்மதம் தெரிவித்தனர். இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத அவர் இயக்கிய அந்தப் படம், மிகப் பெரிய வெற்றியடைந்தது.

அந்தக் காலகட்டத்தில் (1956) தமிழ் சினிமாவில் ஹீரோக்களை வைத்தே, ஒரு படத்தின் வியாபாரம் தீர்மானிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தனர். ஸ்ரீதரின் வருகையால் அந்த நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இயக்குநர்களுக்கென்று தனி மரியாதை உருவாகத் தொடங்கியது. `சித்திராலயா' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீதர், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து பல படங்களை இயக்கினார். அவரது படங்கள் ரிலீஸாகும் போது பெரிய நடிகர்களே தங்கள் படங்களை ரிலீஸ் செய்யத் தயக்கம் காட்டினர். அந்தளவுக்கு தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டவர் ஸ்ரீதர். ஜெயலலிதா, ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த், காஞ்சனா என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்களின் லிஸ்ட் மிக நீளம்.

ஐம்பத்தேழு படங்களை இயக்கியவர், முப்பத்து மூன்று படங்களைத் தயாரித்தார். இவரது படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. இவர் இயக்கிய `தேன்நிலவு' படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க காஷ்மீரில் நடந்தது. அந்தப் படத்தின் ஸ்டில்களை பப்ளிசிட்டிக்காக இங்குள்ள பத்திரிகைகளுக்குக் கொடுக்க மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ) ஒருவரை நியமிக்க விரும்பினார்.

படங்களுக்கு மட்டுமே பி.ஆர்.ஓ.க்கள் பணியாற்றிய காலம் அது. முதன்முதலில் தனக்கென தனி பி.ஆர்.ஓ.வை வைத்துக் கொண்டு, காஷ்மீரில் நடந்த அந்தப் படத்தின் ஸ்டில்களை இங்குள்ள பத்திரிகைகளில் வெளிவரச் செய்தார். அவரது பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றிய அந்த முதல் நபர் வேறு யாருமல்ல நான்தான்'' என்று பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டார் ஆனந்தன்.

அருகில் இருந்த இயக்குநர் சந்தான பாரதி, ``ஸ்ரீதர் சாரிடம் உதவி இயக்குநராக ஐந்தாண்டுகள் (1975-80) பணியாற்றினேன். என்னை சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டார். அப்போதெல்லாம் யாரை அழைத்தாலும் என் பெயரைச் சொல்லியே அழைப்பார். அந்தளவுக்கு என் மீது பாசம் வைத்திருந்தார். எங்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடுவார். கார்ட்ஸ் விளையாடுவார். நானும், அவரது மற்றொரு உதவியாளருமான பி.வாசுவும் இணைந்து, `பன்னீர் புஷ்பங்கள்' படத்தை இயக்கினோம். அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர், எங்களை கட்டித் தழுவி `என்னோட சிஷ்யன்னு நிரூபிச்சிட்டீங்கடா' என்று உணர்ச்சிவசப்பட்டார்!'' என்று அழுதே விட்டார் சந்தானபாரதி.

மீண்டும் தொடர்ந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், ``இருபது ஆண்டுகளுக்கு முன் கமலை வைத்து இவர் இயக்கிய `நானும் ஒரு தொழிலாளி' படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்பதால் மிகுந்த வேதனையில் இருந்தார். விக்ரம் நடித்த முதல் படமான `தந்துவிட்டேன் என்னை' என்ற இவரது படமும் சரியாகப் போகவில்லை. இரும்புக் கம்பி குத்தியதில் இவரது பார்வை பறிபோனது. பக்கவாதமும் சேர்ந்து இந்த சகாப்தத்தை சாய்த்தே விட்டது.

அண்மையில் நான் எழுதிய `சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்கிற புத்தகத்தை ஸ்ரீதரிடம் காண்பிக்க வந்தேன். அந்தப் புத்தகத்தில் வெளியாகியிருந்த `வெண்ணிற ஆடை' படத்தின் ஸ்டில்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே கதறியழுத ஸ்ரீதர், `அம்மு (ஜெயலலிதா) இப்போ எப்படி இருக்கா?' என்று கேட்டார். தன்னைச் சந்திக்க வருபவர்கள் அனைவரிடமும் அவர் மறக்காமல் கேட்கும் கேள்வியும் இதுதான்.

சாவதற்குள் ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அப்பாஸின் கால்ஷீட் என்னிடம் இருப்பதைத் தெரிந்து கொண்டு என் வீட்டுக்கு வந்த ஷ்ரீதர், அவரை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்று கேட்டார். அந்தச் சமயத்தில், காரில் இருந்து இறங்கி நடந்து வரமுடியாத நிலையில் அவர் இருந்தார்'' என்று கண்கலங்கினார், ஆனந்தன்.

அருகில் இருந்த இயக்குநர் பார்த்திபன், ``என்னுடைய `ஹவுஸ்ஃபுல்' படத்தைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்துப் பாராட்டினார். தள்ளாத வயதிலும், படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், என்னை வைத்துப் படம் எடுக்க முயன்றார். கடைசி வரை அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இயக்குநர்களுக்கு முதல் மரியாதையை ஏற்படுத்திய இவர் தான், தமிழ் சினிமாவில் நடமாடிய நிஜ ஹீரோ!'' என்று வேதனையுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

வே. வெற்றிவேல்

படங்கள் : ஞானமணி

நன்றி குமுதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ..சித்தப்புவே கவலைபடுறதை பார்த்தா..தா சித்தப்பு அவரின்ட ரசிகர் போல..ல.. :rolleyes: சரி கவலைபடாதையுங்கோ சித்தப்பு நீங்களே..ளே கவலைபட்டா..டா.. :o

பெறகு நான் என்ன செய்யிறது..து இன்னைக்கு இருக்கிறோம் நாளைக்கு இருக்கிறோமோ யாருக்கு தெரியும் ஆனபடியா அவன் போயிட்டானே எண்டு நாம கவலைபட கூடாது என்ன..ன.. :icon_mrgreen: மற்றது சித்தப்பு..பு உவர் பழையபடங்கள் எடுத்தவரோ நான் இவரின்ட பேரை இன்னைக்கு தான் கேள்விபடுறன் பாருங்கோ..கோ.. :o

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் மகனே இவர் அந்த காலத்தில பிரபல்யமான ஒரு இயக்குனர் இவற்ற படங்கள் பார்த்திருக்கிறேன்.பலருக்கு சந்தோசத்தை வழங்கிய ஒரு கலைஞன் இன்று இவ் உலகில் இல்லை.

sridharkumudamxd6.png

யக்குநர் ஸ்ரீதரின் படங்களுக்கு மறக்கமுடியாத பாடல்களைத் தந்தவர் எம்.எஸ்.வி. இயக்குநர் ஸ்ரீதர் பற்றிய தன் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

"போலீஸ்காரன் மகள்' படம் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் சுற்றி உடைக்கிற நேரம். டைரக்டர் ஸ்ரீதருக்கு என்ன தோணிச்சோ தெரியல. `பூசணிக்காய் உடைக்கவேண்டாம். இன்னும் ஒரு பாட்டு எடுத்தால் நல்லா இருக்கும்'னு சொல்லிவிட்டார். இருக்குற ஒரு நாள்ல எப்படி இது சாத்தியம்னு எல்லோருக்கும் குழப்பம். ஆனால் `என்ன செய்வீங்களோ தெரியாது கதாநாயகி இறந்த பிறகு சோகப்பாட்டு ஒன்று எடுக்கப் போகிறேன். விஸ்நாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் மூவரையும் தகவல் சொல்லி கூட்டிட்டு வாங்க'ன்னு சித்ராலயா கோபுகிட்ட சொல்லிட்டார். நாங்க உடனே போய் உட்கார்ந்து கம்போஸ் பண்ண, கவிஞர் `பூமறந்து போகிறாள்... பொட்டெடுத்துப்போகின்றாள் புன்னகையை சேர்த்தெடுத்து கன்னி மயில் போகின்றாள்'னு வேகமா எழுதி முடிச்சிட்டார். அருமையான பாட்டு. 20 நிமிஷத்துல ரெக்கார்டிங் முடிஞ்சது. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கணீர்னு ஒலிச்சது. அதே வேகத்தில் இரண்டு மணி நேரத்துல பாட்டு படப்பிடிப்பை முடிச்சார் ஸ்ரீதர். அந்த வேகம் யாருக்கு வரும்? அதேபோல, நினைச்ச ட்யூன் வரலன்னா விடமாட்டார். இசைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அவர் படங்களில் தெரியும்.

மாசத்துல நாலு தடவை அவரைப் போய் பார்த்து பேசிட்டு வருவேன். போனவாரம்தான் பார்த்துட்டு வந்தேன். அதுதான் கடைசினு தெரியாமல் போச்சு'' என்று கலங்குகிறார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.

நெஞ்சம் மறப்பதில்லை!.

- தேனி.கண்ணன்

படங்கள் : சித்ராமணி

நன்றி குமுதம்

நெஞ்சம் மறப்பதில்லை!

sridharvikatanmdo2.png

ன்னும் ஒரு படத்தை இயக்கிப் பார்க்கணும். என்னோட படைப்பு, சினிமா உலகத்தையே திருப்பிப் போடணும். சினிமாவில் செய்ய வேண்டிய வித்தியாசங்கள் நிறைய இருக்கு. மனுஷ வாழ்க் கையோட கூறுகளை நாம சொல்லவே இல்லை. அதை அழுத்தமாச் சொல்ற மாதிரியான ஸ்க்ரிப்ட் என்கிட்ட இருக்கு. எழுந்து நடமாடுற அளவுக்கு இந்த உடம்பு சரியாகிறப்ப நான் 'ஷாட் ரெடி'ன்னு கிளம்பிடுவேன். அடுத்த வருஷம் இளைய தலைமுறை இயக்குநர் களுக்கு நான்தான் போட்டியா இருப்பேன்!'' - விகடன் தீபாவளி மலருக்காக தன்னை சந்திக்க வந்த டைரக்டர் அமீரிடம் இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

sridharvikatanm01bmpzv3.png

ஆனால், அந்த வார்த்தைகளில் மிளிர்ந்த நம்பிக்கை ஒளி அடுத்த சில வாரங்களிலேயே அணைந்ததுதான் சோகம். பக்கவாதத்தால் 10 வருடங்களுக்கும் மேலாக படுக்கையில் இருந்த டைரக்டர் ஸ்ரீதரின் உடல்நிலை சமீப காலமாக, ரொம்பவே கவலைக்கிடமானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதர் கடந்த 20-ம் தேதி காலையில்மரணமடைந்தார்.

தமிழ்த் திரையுலகை தன் திரைக்கதை வித்தை களால் வித்தியாசப்படுத்திய அந்த ஜாம்பவான் முடங்கி விழுந்தபோது, அவருக்கு யாதுமாகி நின்றவர் அவருடைய மனைவி தேவசேனா.

sridharvikatanm02bmpko2.png

''விகடனுக்கு கொடுக்கிற பேட்டிதான் கடைசி பேட்டின்னு நினைச்சாரோ என்னவோ... உடல் நலமில்லாததைக்கூட பொருட்படுத்தாம அஞ்சு மணி நேரம் பேசினார். நிறைய மனசுவிட்டுப் பேசினார். ஆனா, அவரோட கடைசிப் பேட்டி பிரசுரமானதை அவர் பார்க்காமலேயே போயிட் டார்!'' குரல் உடைந்து அழுகிறார் தேவசேனா.

''அவருக்கு எப்பவும் எதுவும் சுத்தமா இருக்க ணும். ஒரு நாளைக்கு மூணு தடவை டிரெஸ் மாத்துவார். ஹீரோவுக்குப் போட்டியா வொயிட் அண்ட் வொயிட்டில் பளிச்னு செட்டில் உலவுவார். ஒரு கதை மனசில உருவாகிடுச்சுன்னா, அது முழுமையடைகிற வரைக்கும் சரியாப் பேச மாட்டார். சாப்பாடு, தூக்கம்னு எது பத்தியும் கவலைப்படமாட்டார். அந்தக் கதை மனசுல முழுமையடைஞ்ச பிறகு பேப்பரும் பேனாவுமா உட்கார்ந்திடுவார். வசனங்களை ரொம்ப யதார்த்தமா எழுதுவார். எந்த வேலையையும் தள்ளிப்போடக் கூடாதுங்கிறதில ரொம்ப உறுதியா இருப்பார். பக்கவாதத்தால் அவரோட மொத்த ஓட்டமும் தடையாகி படுக்கையில் விழுந்தப்ப, 'ரெண்டு மாசத்தில் சரியாகிடும்!'னு சொல்லிட்டே இருந்தார். சாகப் போற ரெண்டு மாசத்துக்கு முன்னாலகூட இதே வார்த்தை களைத்தான் சொன்னார்!'' - தலைமாட்டில்இருக் கும் ஸ்ரீதரின் கம்பீரப் புகைப்படத்தைப்பார்த்துக் கொண்டே பேசுகிறார் தேவசேனா.

sridharvikatanm03bmpnp8.png

''ஷ¨ட்டிங் சமயத்தில யார்கிட்டயும் பேச மாட்டார்.பார்வையாலேயே எல்லா விஷயத் தையும் சம்பந்தப்பட்டவங்களுக்கு உணர்த் துவார். வெளியூர் ஷ¨ட்டிங் போறப்ப, முக்கியமான டெக்னீஷியன்களை குடும்பத்தோட வரச் சொல்வார். அந்த மாதிரி நேரங்கள்ல ரொம்ப சந்தோஷமா இருப்போம். ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பார். அப்பவே 'இந்த மாதிரித் தரத்தில் நாம எப்பதான் படம் எடுக்கப் போறோமோ?'ன்னு ஆதங்கப்பட்டுப் பேசுவார். 'நமக்காக ஒரு நிமிஷம்கூட ஒதுக்காம இப்படி பம்பரமா சுத்துறாரே'ன்னு நான் வருத்தப்பட்டதுதான் தப்போ என்னவோ... படுத்த படுக்கையா அவர் விழுந்து பல வருஷம் என் பக்கத்திலேயே இருந்தார்.

சில நாட்களுக்கு முன்னால அவர் உடம்புக்கு ரொம்ப முடியாமப் போச்சு. 'நான் உன்னை ரொம்பச் சிரமப்படுத் துறேன்தானே?'ன்னு கேட்டார். 'நீங்க நல்லபடியாக இருந்து உங்க பக்கத்திலேயே இருக்கிற பாக்கியத்தைத் தவிர, வேற எதுவும் எனக்கு வேணாம்'னு சொன்னேன். அவருக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. 'ஒரே ஒரு படத்தைப் பிரமாதமாப் பண்ணிட்டு, அதுக்கப்புறம் செத்தாக்கூட எனக்குக் கவலை இல்லை!'ன்னு சொன்னார். அவர் குணமடைவது சுலபமில்லைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அவரோட அசாத்திய நம்பிக்கை எப்படியும் அவரை மறுபடியும் நடக்கவைச்சிடும்னு நினைச்சேன்... அவரோட நம்பிக்கையைத்தான் நான் நம்பிட்டு இருந்தேன். ஆனா, எல்லாமே பொய்யாகிப் போச்சே!'' - கண்ணீரில் கரைகிறார் தேவசேனா.

இரா.சரவணன்

படங்கள் உதவி - ஜெயபாபு

நன்றி விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.