Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்ததில் பிடித்தது: சொல்லின்றி அமையா உலகு: எஸ்.ராமகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லின்றி அமையா உலகு: எஸ்.ராமகிருஷ்ணன்

புது வருடம் பிறந்திருக்கிறது. புத்தாண்டின் இரவில் எங்கு பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் சொல்கிறார்கள்... கை அசைக்கிறார்கள். உற்சாகத்தில் ஒருவன் சாலை நடுவே நின்று பலூனைப் பறக்கவிடுகிறான். மகிழ்ச்சி நகர் எங்கும் நடனம் ஆடுகிறது. காரில் செல்பவர்கள் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கத்துகிறார்கள். இந்த வாழ்த்தொலிகள், தன்னுடைய சந்தோஷத்தை முன்பின் அறியாத ஒருவரோடு பகிர்ந்துªகாள்வது என்ற பழக்கம் ஏன் மற்ற எந்த நாளிலும் இருப்பதே இல்லை என்று ஆதங்கமாக இருந்தது.

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும்போது ஒன்றைக் கவனித்தேன். யாருக்கும் சுயமாக வாழ்த்துச் சொல்லத் தெரியவில்லை. 'ஹேப்பி நியூ இயர்' என்ற ஒரே ஒரு சொல்லை மட்டுமே அத்தனை பேரும் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். சந்தோஷங்களை வெளிப்படுத்த ஏன் வார்த்தைகள் இல்லாமல்போனது? கிளிப்பிள்ளைபோல யாரோ சொல்லிக்கொடுத்ததை மட்டுமே நாம் ஏன் திரும்பத் திரும்பப் பேசுகிறோம்?

முன்பு புத்தாண்டு, தைப்பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகள் தபாலில் வந்து சேரும். அதுவும் நமக்குப் பிடித்தமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை மறுபடி மறுபடி படித்துக்கொண்டே இருப்போம். இப்போது மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மட்டுமே! அதுவும் ஒரே வாழ்த்துச் செய்தியை நகல் எடுத்து நூறு பேருக்கு அனுப்பிவிடுகிறோம். நம்மை வெளிப்படுத்திக்கொள்ள நம்மிடம் சொற்கள் இல்லையா? ஒரு ஆளைத் திட்டுவதற்கு நம்மிடம் நூறு சொற்களுக்கும் மேலாக இருக்கின்றன; ஆனால், பாராட்டுவதற்கு நான்கைந்து சொற்களுக்கு மேல் இல்லை. ஏன் இந்த முரண்?

உண்மையில் சந்தோஷத்தைக் கொண்டாட நமக்குத் தெரியவில்லை. சேர்ந்து குடிப்பதைத் தவிர, வேறு வழிகளை நாம் அறிந்துவைத்திருக்கவில்லை. புத்தாண்டு நாளின் காலையில் போதை கலையாத முகத்துடன், அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு எக்கி எக்கி வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறான் ஒருவன். பலர் மதியம் வரை தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள் சேர்ந்து விளையாட ஆள் இன்றி தொலைக்காட்சியின் முன் அமர்ந்து தனியே பேசிக்கொண்டு இருக்கின்றன.

நடுத்தரவர்க்கக் குடும்பங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கடவுளிடம் ஆண்டுக்கான மொத்தக் கோரிக்கைகளையும் பட்டியலிடுகின்றன. கைவிடப்பட்ட முதியவர்கள் யாரோ கொண்டுவந்து தந்த இனிப்புகளைச் சாப்பிட மனதின்றி வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சாலையோரப் பிச்சைக்காரச் சிறுமி, காரின் மூடிய கண்ணாடிக் கதவுகளைத் தட்டி, என்றைக்கும்போலவே பிச்சை எடுக்கிறாள். புத்தாண்டு மிகச் சந்தோஷமாகத் துவங்கியிருக்கிறது.

இணையத்தில் The story of a sign என்ற குறும்படத்தைப் பார்த்தேன். மெக்ஸிகோவைச் சேர்ந்த அலான்சோ அல்வெரஸ் பரேதா இயக்கியது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசுபெற்றது.

சாலை ஓரம் பார்வையற்ற ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் முன்னால் 'எனக்குக் கண் தெரியாது. உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்' என்ற அறிவிப்புப்பலகை உள்ளது. அவரைக் கடந்து செல்பவர்கள் அதைக் காண்கிறார்கள். ஆனால், எவருமே உதவி செய்யவில்லை. பார்வையற்றவர், ஆதங்கத்துடன் யாராவது காசு போட மாட்டார்களா என்று காத்திருக்கிறார். சாலையைப் பல நூறு கால்கள் கடந்துபோகின்றன. ஆனால், எவரும் பார்வையற்றவரைப் பொருட்படுத்தவே இல்லை.

அப்போது கறுப்பு நிறக் காலணிகள் அணிந்த இளைஞன் ஒருவன் அந்தப் பக்கமாக வருகிறான். அவன் பார்வையற்றவரைக் கவனிக்கிறான். அருகில் சென்று அந்த அடையாளப் பலகையைக் கையில் எடுத்து, அதன் பின்பக்கத்தில் தன்னிடம் உள்ள பேனாவால் வேறு ஏதோ எழுதி, அவர் அருகில் வைத்துவிட்டுப் போய்விடுகிறான். இளைஞன் என்ன செய்தான் என்று அவருக்குப் புரியவில்லை.

சில நிமிடங்களில், அந்தப் பக்கம் போகிற வருகிற ஒவ்வொருவரும் அந்த அடையாளப் பலகையைப் பார்க்கிறார்கள். தங்களிடம் உள்ள காசை எடுத்து குவளையில் போட்டுவிட்டுப் போகிறார்கள்.

காசு விழும் சத்தம் கேட்டு, பார்வையற்றவர் சந்தோஷம்கொள்கிறார். மாலைக்குள் அந்தக் குவளை நிரம்பிவிடுகிறது. தரையிலும் நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. கை நிறைய அதை அள்ளிச் சந்தோஷம்கொள்கிறார்.

காலையில் வந்த அதே இளைஞர் இப்போதும் வருகிறான். அவன் பார்வையற்றவர் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்த்தபடியே நிற்கிறான். அவர் இளைஞனின் கால்களைத் தொட்டு அடையாளம் கண்டுகொண்டவர், 'அப்படி என்ன எழுதிவைத்திருக்கிறாய்?' என்று கேட்கிறார்.

''இன்று மிக அழகான நாள். ஆனால், அதை என்னால்தான் பார்க்க இயலாது' என்று எழுதிஇருக்கிறேன். உங்களிடம் உள்ள குறையைச் சொல்வதற்குக்கூடச் சரியான வார்த்தைகள் வேண்டும். உண்மையில் சரியான வார்த்தைகள் நம்மை மாற்றிவிடும். நம்மை வெளிப்படுத்திக்கொள்ளத் தேவையான வார்த்தைகள் நம்மிடம் இல்லை. அதை அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மாறிவிடும்!' என்று சொல்லிக் கடந்து போகிறான். ஆறு நிமிடக் குறும்படத்தில் ஆயிரம் வருட உண்மையைச் சொல்லியது போல் இருந்தது.

நம்மை மாற்றிக்கொள்வதற்கு முக்கியத் தேவை சொற்களே! எதை, எப்படிப் பேச வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் சொற்களை நாம் கற்றுக்கொள்ளவில்லை. சொற்கள் வெறும் சத்தங்கள் இல்லை. அவை விதைகள். அதை இடம் அறிந்து விதைத்தால், அதில் இருந்து நமக்குக் கிடைக்கும் பலன் மிகப் பெரியது.

சொற்கள் தரும் நம்பிக்கை அலாதியானது. மருத்துவர் தன் முன்னே உள்ள நோயாளியிடம், 'உனக்கு ஒன்றும் இல்லை. நீ நலமாக இருக்கிறாய்!' என்று சொல்லும் சொற்கள், எந்த மருந்தையும்விட வலிமையானது. 'உன்னால் நன்றாகப் படிக்க முடியும்' என்று ஆசிரியர் சொன்ன சொற்கள் எத்தனையோ பேரைப் படிக்கவைத்திருக்கிறது. 'உனக்கு நல்ல திறமை இருக்கிறது. ஒருநாள் நீ பெரிய ஆளாக வருவாய்!' என்று முதுகில் தட்டி உற்சாகம் தந்த சொற்கள்தான் பலரைச் சாதிக்கவைத்திருக்கிறது. ஒவ் வொருவரும் ஏதோ சில சொற்கள் தந்த நம்பிக்கையால்தான் மேலே வந்திருக்கிறோம். அதுபோலவே, கடுஞ்சொற்கள் தந்த அவமதிப்பால், புறக்கணிப்பால் தோற்றுப்போய் இருக்கிறோம்.

சொல்லை அறிவதும், பயன்படுத்துவதும் ஒரு கலை. மகாபாரதத்தில் வரும் விதுரன், சொற்களின் தூய்மைபற்றிப் பேசுகிறான். நம் மனதின் கசடுகளும், கசப்பும், அருவருப்பும், அடுத்தவர் மீதான பொறாமையும் நமது சொற்களின் மீது படிந்துவிடுகின்றன. சொற்களை அஸ்திரம்போலவே பயன்படுத்துகிறோம். அது தவறு. சொற்கள் நமது ஊன்றுகோல்கள். அதைக்கொண்டே நாம் வாழ்க்கையைக் கடந்துபோகிறோம். நல்ல சொல் ஒன்றுக்காகக் காத்திருப்பதும் பெறுவதும் மனிதனின் முக்கியமான கடமை என்கிறார் விதுரன்.

நாட்டைவிட்டு வெளியேறி, கானகத்தில் துறவியாக அலையும்போது விதுரன் தன்னுடைய நாக்கில் தன்னை அறியாமல் சொற்கள் புரண்டு வந்துவிடக் கூடாது என்று கூழாங்கற்களை இடுக்கிக்கொண்டு மௌனமாகவே இருந்தான். அந்த மகா மௌனம், பூமியில் புதையுண்ட கரித்துண்டு கால வெள்ளத்தில் ஒளிவீசும் வைரமாக மாறிவிடுவது போன்று விதுரனின் உடலை ஒளிகொள்ளவைத்தது என்கிறது மகாபாரதம்.

டால்ஸ்டாயின் கதை ஒன்றில், செய்யாத குற்றம் ஒன்றுக்காக ஒரு வணிகன் சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுகிறான். தான் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்று அழுது புலம்புகிறான். ஆனால், அதை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளிடம் மன்றாடுகிறான். சிறைச் சுவர்களில் மோதி மோதி, நான் அப்பாவி என்று சொல்கிறான். அந்தக் குரல் எவரது மனதையும் மாற்றவே இல்லை.

இனி, தன் வாழ்க்கை இந்தச் சுவர்களுக்குள்தான் என்று உணர்ந்து, மிச்சம் இருக்கும் வாழ்க்கையைச் சேவை செய்வது என்று முடிவுசெய்து, செருப்பு தைக்கப் பழகுகிறான். பிறகு, சிறையில் உள்ள கைதிகளுக்கு செருப்புத் தைத்து இலவசமாகத் தருகிறான். யாரோடும் ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. அவனை மற்ற கைதிகள் அன்பாக நடத்துகிறார்கள். காலம் கடந்து போகிறது. குளிரும், பனியும், கோடையுமாகப் பகலிரவுகள் மாறுகின்றன.

சிறைக்குப் புதிய கைதி ஒருவன் வந்து சேர்கிறான். அவன், வயதான இந்த வணிகனிடம் நெருக்கமாகிவிடுகிறான். ஒருநாள் இரவு, வணிகன் செய்ததாக இவ்வளவு நாள் நம்பப்பட்டு வந்த கொலையைச் செய்தது தானே என்று சொல்கிறான். அதைக் கேட்டதும் கிழவனுக்கு உடம்பு நடுங்குகிறது. இந்த உண்மையை உல குக்கு எப்படித் தெரியவைப்பது என்று தடுமாறுகிறான். இரவெல்லாம் அழுது புலம்புகிறான்.

அடுத்த நாள் புதிய கைதி சிறையில் இருந்து தப்பிப்போக முயற்சிக்கிறான். அதைக் கிழவன் பார்க்கிறான். அவனைத் தடுக்கவில்லை. ஆனால், தப்பிப்போன கைதி சிறைக் காவலர்களால் கைது செய்யப்படுகிறான். விசாரணை நடக்கிறது. கிழவனைச் சாட்சியாக அழைக்கிறார்கள். இப்போது கிழவன் நினைத்தால், அந்தப் புதிய கைதியைக் காட்டிக்கொடுத்துவிடலாம். சிறையைவிட்டுத் தப்பியதற்காக உடனே மரண தண்டனை வழங்கப்பட்டுவிடும்.

ஆனால் கிழவன், அவனை தான்தான் வேலையாக அனுப்பியதாகப் பொய் சொல்கிறான். தண்டனையில் இருந்து புதிய கைதி தப்பிக்கிறான். ஆனால், தான் செய்த குற்றம் ஒன்றுக்காக இத்தனை வருடங்கள் கிழவன் சிறையில் இருக்கிறானே என்ற குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல், 'இவர் நிரபராதி. நான்தான் அந்தக் கொலையைச் செய்தேன்' என்றி கதறி அழுகிறான் புதிய கைதி. கிழவன் இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை நாட்களாகக் காத்திருந்தேன் என்று கண்ணீர் மல்கச் சொல்லி, நிம்மதியாக இறந்துவிடுகிறான். வார்த்தைகள் உலகைக் காப்பாற்றி இருக்கின்றன... மாற்றியிருக்கின்றன... வரலாறு கற்றுத்தரும் பாடம் அதுதான்.

10 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்நாட்டுக் கலவரம் பற்றி ஒரு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதற்காகக் கைது செய்யப்பட்ட பலர் கொண்டுவரப்பட்டனர். அதில் வயதான ஆதிவாசி ஒருவர் இருந்தார். கோர்ட் துவங்கியது முதலே அவர் சாட்சிக் கூண்டைப் பார்த்தபடியே இருந்தார். திடீரென எழுந்துபோய், தானே சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டார். நீதிபதிகள் அவரிடம், 'தாங்கள் அழைக்கும்போது வந்து சொன்னால்போதும், இப்போது போங்கள்' என்று சொன்னார்கள்.

அதற்கு அந்த ஆதிவாசி, 'நீங்கள் அழைக்கும்போது என் மனதில் சொற்கள் தோன்றாது. மனதில் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது மிகப் பெரிய வேதனை. அந்த சொற்கள் பாம்பின் விஷம்போல என் உடலை வருத்துகின்றன. எங்களால் சொற்களைச் சேகரித்துவைத்து நினைத்தபோது பயன்படுத்தத் தெரியாது. மனதில் எப்போதாவதுதான் சொற்கள் முளைக்கின்றன. அதை உடனே வெளிப்படுத்திவிடுவோம்' என்று சொல்லி நீதிமன்ற உத்தரவை மீறி தன் மனதில் உள்ள உண்மைகளைக் கொட்டிவிடுகிறார்.

உண்மையில் நம்மில் பலரும் அந்த ஆப்பிரிக்க மனிதரைப் போலவே மனதில் வலி நிரம்பிய சொற்களைச் சுமந்துகொண்டே அலைகிறோம். அதைப் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லை. நமது குழந்தைகள், மனைவி, நண்பர்கள், பெற்றவர்களிடம் பேசுவதற்கான சொற்களை இழந்துபோயிருக்கிறோம். நமது சொல்லற்ற தனிமையைத்தான் தொலைக்காட்சியும் கேளிக்கை ஊடகங்களும் கைப்பற்றிக்கொண்டுவிட்டன. நம்மை அடையாளம்கொள்ளவைப்பவை நமது சொற்களே! அதைக் கண்டடைவதும், கவனமாகப் பிரயோகம் செய்வதும், வளர்த்துக்கொள்வதும் நமது அவசியமான செயல்கள் ஆகும்.

நன்றி: ஆனந்த விகடன்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் "தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்று திருவள்ளுவர் சரியாகத் தான் சொல்லி உள்ளார்...நல்லதொரு பதிவு...இனைப்புக்கு நன்றி.

  • 2 months later...

சோபா சக்தியின் "எம்.ஜீ.ஆர் கொலை வழக்கை" வாசிக்க விரும்பியவர்கள் அவரின் வலைத்தளத்தில் போய் வாசிக்கலாம்.சிறந்த கதைகான பரிசை தமிழ்நாட்டில் பெற்றிருக்கின்றது.அவரது முடியில் இன்னொரு வைரம் இந்த படைப்பு.

கடைசி வசனம் மாத்திரம் கொஞ்சம் ஓவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.